தென்
அமெரிக்கா
Violent clashes in Buenos Aires on eve of election
Argentine police attack workers protest
தேர்தலுக்கு முன் புவனோஸ் அயர்ஸில் கடுமையான மோதல்
தொழிலாளர்களின் கண்டனக் கூட்டத்தில் ஆர்ஜென்டினா போலீசார் தாக்குதல்
By Bill Vann
23 April 2003
Back
to screen version
ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும்போது புவனோஸ் அயர்ஸ்
நகரம் வன்முறையில் கொந்தளிக்கிறது. திங்களன்று பாரியளவில் ஆயுதமேந்திய போலீசார், ஆடைத் தொழிற்சாலையில்
பணிபுரியும் பெண் தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தாக்கினர். 2001 டிசம்பர் மாதத்திலிருந்து
இத் தொழிற்சாலையை கைப்பற்றி இயக்கிக் கொண்டிருந்த இப் பெண்கள், தங்கள் வேலைகளை மீண்டும் உறுதிப்படுத்திக்
கொள்ள முயற்சித்தனர். இதன்போது, 125 பேர் கைது செய்யப்பட்டதுடன், அதிகமானோர் போலீசாரின் தாக்குதலால்
காயமடைந்தனர். ஐந்து முறை கண்ணீர்ப்புகைப் பிரயோகமும், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் நிஜ குண்டுகளாலான
துப்பாக்கிச் சூடும் அவர்கள்மீது நடாத்தப்பட்டன.
இச்சம்பவமானது ஆர்ஜென்டினா தலைநகரில் போலீசாரின் கலகம் போல் தோன்றியது.
போலிசார் 30 தடைகளை ஏற்படுத்தி இரவுவரை ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தியடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஒரு தடையரணில்
இருந்த போலிசார், குழந்தைகள் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த காயம்பட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் மீது வீசிய கானிஸ்டர்
கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் மருத்துவமனையிலிருந்த நோயாளிகளும் ஊழியர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்தே இம்மோதலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன.
போலீசார் புருக்மன் ஆலையிலிருந்து தொழிலாளர்களை வலுக்கட்டாயமாகவும் வன்முறையிலும் வெளியேற்றினர். தொழிலாளர்கள்
16 மாதங்கள் முன்பு இந்த ஆலையைக் கைப்பற்றி நடாத்தத் தொடங்கியதிலிருந்து போலீசார் அவர்களை வெளியேற்றும்
முயற்சியில் மூன்றாவது முறையாக ஈடுபட்டனர். இம்முறை 200 க்கும் மேற்பட்ட போலீசார் கட்டிடத்தில் நுழைந்து
தொழிலாளர்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டிருந்தனர்.
1976 லிருந்து 1983 வரை ஆர்ஜென்டினாவில் நிலவிய இராணுவ சர்வாதிகார ஆட்சியில்
இருந்த இரு நீதிபதிகளின் உத்தரவின்படி வெளியான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தப் போலீசார் இத் தொழிற்சாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கோர்ட் உத்தரவின்படி தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடக்கூடாதெனவும் ஆலை உரிமையாளரிடம்
மீண்டும் ஆலையை ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இவ் உத்திரவில் ''உயிர் அல்லது உடலின் மீதான
உத்தரவாதம் பொருளாதார நலன்களைவிட உயர்ந்தவை அல்ல'' என்ற சிந்தனையை உறைய வைக்கும்
சொற்றொடர்களும் இருந்தன. போலீசாரைப் பொறுத்தவரை இது கொலை செய்வதற்கு அவர்களுக்கு கிடைத்த உரிமையாகும்.
இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் மறியல்கள் இவற்றிற்குப்பின் திங்களன்று, தொழிலாளர்கள்
7.000 ஆதரவாளர்களுடன் தொழிற்சாலையை நோக்கி முன்னேறினர். 500 க்கு மேற்பட்ட கலகப் பிரிவுப் போலீசார்
கவச வாகனங்களின் பாதுகாப்போடு அவர்களை வழி மறித்ததுடன், தொழிற்சாலைச் சுற்றிலும் தடுப்பு அரண்களையும் ஏற்படுத்தியிருந்தனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப் போலீஸ்
கமான்டர்கள் மறுத்துவிட்டதோடு, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதாக ஆலைக்குள் ஒருவரையும் அனுமதிக்க இயலாது
என்றும் கூறினர். மாலை 5.30 அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு தடுப்பரணை சாய்த்தவிட்டு, இளநீல தொழிலுடையணிந்திருந்த
நான்கு புருக்மன் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் ஆலையை நோக்கி ஓடினர்.
இந்த நடவடிக்கையின் பின்பு போலீசார் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடங்கும் நடவடிக்கையில்
இறங்கினர். கூட்டத்தினர் தெருக்களில் திணறிப்போகும் அளவிற்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதோடு அவர்களை
நோக்கி துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். அதிகாரிகள், போலீசார் ரப்பர் தோட்டாக்களைத்தான் பயன்படுத்தினர்
என்று கூறினாலும் புருக்மன் தொழிலாளிகள் உண்மையான ரவைக் குண்டுகளின் எஞ்சிய பகுதிகளை செய்தியாளர்களுக்கு காட்டினர்.
முதல் அரணைத் தகர்த்த நான்கு தொழிலாளர்களும் போலீஸ் தாக்குதலின் முதல் இலக்காக
அமைந்தனர். ஆனால் போலீஸ் பகுதியிலிருந்த புகைப்பட செய்தியாளர் ஒருவர் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததோடு
அவர்கள் தப்புவதற்கும் உதவி செய்தார்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் களத்திலிருந்து கலைந்த போதிலும் பலர் போலீசாருடன்
சண்டையில் இறங்கினர். அவர்கள் போலிசார் மீது கற்களை வீசியதுடன், சில இடங்களில் கைகலப்பிலும் குதித்தனர். ஆலையிலிருந்து
சிறிது தூரத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பிரிவினர், ஒரு காரில் சீருடை அணியாத காவலரை இனம் கண்டு
அவரை காரிலிருந்து பலவந்தமாகத் தள்ளியதுடன் அவரது காரையும் எரித்தனர்.
கலைந்து ஓடிக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் ஆலைப் பகுதியிலிருந்து
தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டனர். கைகலப்புக்களில் ஈடுபட்ட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரினால்
தரையில் தள்ளப்பட்டு கடும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
புருக்மன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நியுக்வென் மாநிலத்திலிருந்து வந்திருந்த, ஆக்கிரமிப்பிற்குட்பட்ட
ஜானன் மட்பாண்ட ஆலை ஒன்றைச் சார்ந்த நான்கு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்ட பட்டியலில் அடங்குவர். இப்
பேரணியில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இடதுசாரிப் பத்திரிகையான
பேஜினா 12 க்கு (Pagina 12)
கட்டுரைகள் எழுதும் மிகுவால் பொனாசோவும், இஸ்க்குரிடா யூனிடா கூட்டணியின்
துணை ஜனாதிபதி வேட்பாளரான மார்ஸிலோ பாரிலியும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்கள் சிலரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மீண்டும் கூடி, ஆர்ஜென்டினா காங்கிரஸ்
கட்டிடத்தில் நுழைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க முனைந்தபோது போலீசார் அவர்களை இடை மறித்தனர்.
இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
கட்டிடத்திற்கு வெளியே தொழிலாளர்கள் செய்தியாளரைச் சந்தித்தபோது ''நாங்கள்
ஆலையை இயங்க வைத்து, நாட்டையும் வழிநடத்திச் செல்வோம் என்பதை நிரூபித்துவிட்டதால் அவர்கள் எங்களைக் கண்டு
பயப்படுகிறார்கள்'' என முழங்கினர். புருக்மன் தொழிற்சாலையை வழிநடத்தியவருள் ஒருவரான செலியா மார்டினெஸ்
பின்வருமாறு பத்திரிகையாளர்களுக்கு கூறினார்: ''எங்களுடைய உடல்களையும், உயிரையும் ஆலையை நடத்த நாங்கள்
அளித்தள்ளோம். எனவே ஆலையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதற்காக மீண்டும் வருவோம்'' என்றார்.
பல அரசாங்க அதிகாரிகள் பொது அறிக்கைகளில் வன்முறையிலான இந்த அடக்குமுறையைக்
கண்டித்தபோதிலும் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஆர்ஜென்டினா பொருளாதாரச் சரிவிற்குப்பின் புருக்மன் தொழிற்சாலை உரிமையாளர்கள்
ஊதியம் கொடுக்க முடியவில்லை, கடன்களையும் அடைக்க முடியவில்லை என்று காரணம்காட்டி ஆலையை மூடிய பின்னர்
தொழிலாளர்கள் இத் தொழிற்சாலையைக் கைப்பற்றியிருந்தனர். ஆர்ஜென்டினாவில் பரவலாக மூடப்பட்ட ஆலைகளில்
இதுவும் ஒன்று. அதேபோல் ஆலைகள், வணிக நிறுவனங்கள் தொழிலாள சக்தியினால் மீண்டும் திறக்கப்பட்ட 100 ஆலைகளில்
இதுவும் ஒன்றாகும். அரசாங்கத் தகவல்கள்படி ஆர்ஜென்டினாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 20 வீதத்திற்கும் அதிகமாக
உள்ளது.
ஏப்ரல் 27 ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் இடையே புருக்மன்
தொழிலாளர்கள் மீதான போலீஸ் வன்முறை வெடிப்பு நடைபெற்றுள்ளது. வலதுசாரிகள், அரசாங்கத்தைக் கைப்பற்றும்
பாகமாக மக்கள் சக்தியை ஒடுக்கி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோரின் ஆதரவுடன்
பொது அமைதியைக் குலைக்கும் முயற்சியின் ஓர் அங்கமாகத்தான் இந்த போலீஸ் நடவடிக்கை இருக்குமோ என்ற எண்ணம்
மக்ளிடையே தோன்றியுள்ளது.
ஞாயிறன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் அறுதிப்
பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனெனில் வாக்காளர்கள், அனைத்து வேட்பாளர்களின் தன்மையைப்
பற்றி நல்ல கருத்தைக் கொண்டிராது அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். தேர்தலில் முன்னணியில் உள்ளதாகக் காணப்பிக்கப்படும்
வேட்பாளரில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி கார்லோஸ் மெனம் உள்ளார். இவருடைய தீவிரமான நாணயமாற்று
முறையும் நாட்டைப் பீடித்திருக்கும் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது
ஏறத்தாழ 60 வீதமான மக்கள் (கடந்த ஆண்டைவிட இரு மடங்குகள்) வறுமைக் கோட்டிற்குக் கீழே மாதமொன்றுக்கு
250 டொலர்களுக்கும் குறைவான ஊதியத்திலே வாழ்ந்து வருகின்றனர்.
கார்லோஸ் ''இரும்புக் கரங்களோடு'' ஆட்சி நடத்துவதாகத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தையும் பயன்படுத்துவேன் எனக் கூறுகிறார். தன்னால் மட்டுமே ஆர்ஜென்டினாவை
சமூக குழப்பத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார். இவரும், இவருடைய ஆதரவாளர்களும் தெரு வன்முறையைத்
தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். சூறையாடல் போன்றவற்றைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதாகப்
புகார்களும் இவர்கள் மீது எழுந்துள்ளன.
கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான பெர்னாண்டோ டிலாருவா நாட்டின்
பொருளாதார நெருக்கடிக்கிடையே தோன்றிய மக்கள் எழுச்சியின்போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம்
காப்பாற்றப்பட்டு வெளிக்கொண்டு வரப்பட்டார். இதன்பின்பு, இரு வாரத்தில் பாராளுமன்றத்தால் பொறுக்கியெடுக்கப்பட
நால்வர் ஒருவர் பின் ஒருவராக இந்தப் பதவியை வகித்தனர். அவர்களுள் கடைசியாக இருந்தவர்தான் தற்போதைய
இடைக்கால ஜனாதிபதியான எடுவரடோ டுஹல்டே (Eduardo
Duhalde) ஆவார்.
கார்லோஸ் மற்றும் மேலும் நான்கு வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியின் இறுதியில் இரு
வேட்பாளர்கள் மே 18 ம் திகதி தேர்தலில் போட்டியிடுவர். இந்த நால்வரில் இரண்டு பெரோனிஸ்டுகளும் அடங்குவர்.
அவர்கள், டுகல்டேயின் ஆதரவு பெற்ற சாந்தாக் ருஸ் மாநில கவர்னர் நெஸ்டர் கிர்ஷ்னர் (Néstor
Kirchner), மற்றும் 2001 நெருக்கடியின்போது ஒரு வாரம் ஜனாதிபதியாக
இருந்த சான்லூயி மாகான ஆளுனர் அடால்போ ரொட்ரிகஸ் சா (ஸிஷீபீக்ஷீணரீuமீக்ஷ்
ஷிணீஊ) ஆகியோர்கள் ஆவர்.
ஆர்ஜென்டினாவின் வாக்காளர்கள் சட்ட விதிகளின்படி கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்;
ஆனால் 2001 இடைக்காலத் தேர்தலில் 40 வீத வாக்காளர்கள் வெறும் வாக்குச்சீட்டு அல்லது செல்லாத வாக்கை
அளித்தனர். மக்களிடையே முழு அரசியல் நிறுவனத்திற்கும் எதிரான கோபம் தணியவில்லை. சில அரசியல் ஆய்வாளர்களின்
கருத்துப்படி, இதேபோன்ற வாக்குகள்தாம் வரும் ஞாயிறன்றும் அளிக்கப்படும் எனக் கூறுகின்றனர். |