World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

"Supporting the troops": a crisis of perspective

''துருப்புகளுக்கு ஆதரவு'': முன்னோக்கின் நெருக்கடி
By Noah Page
18 April 2003

Back to screen version

எந்த தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியாகயிருந்தாலும், அதை கவனிப்பதற்கு சில நிமிடங்களே போதும் அல்லது எந்த செய்திப் பத்திரிகையில் தலையங்க பக்கத்தையும் மிக வேகமாக புரட்டிப் பார்த்தாலே போதும் அமெரிக்காவின் அரசியல் விவாதங்கள் எந்த அளவிற்கு தரந்தாழ்ந்து போய்விட்டன என்பதை புரிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில், அறிவு முதிர்ச்சியும் தொலைநோக்கு பார்வையும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை சுவற்றில் எழுதப்பட்டுள்ள கேலிச் சித்திரம் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது.

மிகவும் குழப்பம் உண்டாக்குகின்ற மற்றும் ஆராயப்படாத அம்சங்கள் என ஈராக் போர் தொடர்பாக நடைபெற்றுவரும் விவாதங்களை கூறலாம். இது ஒரு கலாச்சார பரிணாமம், இதை ஆராய்வதுடன் எதிர்கொள்வதும் அவசியமாகும். எல்லா அமெரிக்கர்களுக்கும் தமது அரசியலை பொருட்படுத்தாமல் போர் ஆரம்பித்ததும், மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நடைபெறும்போதும் இராணுவத்தின் சார்பில் துருப்புக்களை ஆதரிக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

விவகாரங்களை சிக்கலாக்குவது என்னவென்றால், ''துருப்புக்களுக்கு ஆதரவு தருவது'' என்ற சொற்றொடர் பல்வேறு தரப்பு மக்களுக்கு பல்வேறு அர்த்தத்தை தரவல்லது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது பெற்றோரை, குழந்தையை அல்லது கணவன் மற்றும் மனைவியை போருக்கு அனுப்பியிருக்கலாம். ''துருப்புக்களை ஆதரிக்கவேண்டும்'' என்பது அவர்களை பொறுத்தவரையில் தங்களது அன்பிற்குரியவர்கள் போர்களத்திலிருந்து உயிரோடும் மற்றும் காயம் எதுவுமில்லாமல் திரும்பி வரவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது முற்றிலும் நியாயமான கருத்துத்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இரக்க உணர்வு கொண்ட, மற்றும் நிச்சயமாக அரசியல் விழிப்புணர்வு கொண்ட தொழிலாள வர்க்க கண்ணோட்டம் உள்ள எவரும் இத்தகைய குடும்பங்கள் மீது அனுதாபம் கொள்ளவோ அல்லது பெரும்பாலான போர் வீரர்களோடு தங்களது ஐக்கிய உணர்வை காட்ட மாட்டார்கள். இறுதியாக பார்த்தால் தொழிலாள வர்க்கமான அவர்கள் அசாதாரணமான துன்பங்களையும் தனிப்பட்ட ஆபத்துக்களையும் சந்திக்கிறார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகக்குறைவு. அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை தாங்களே தேர்ந்தெடுக்கவில்லை. இராணுவ வாழ்க்கையின் வழமையான தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது; தங்களது சாதாரண மக்களைவிட அவர்களுக்கு தங்களது கமாண்டர்கள் புரிகின்ற அநீதிகளை கண்டிக்கின்ற உரிமையும் வாய்ப்பும் குறைவு.

துருப்புகளுக்கு ஆதரவு என்ற கூப்பாடு தீவிரமாக ஆராய்வதற்கு ஏற்புடைய அரசியல் மற்றும் சமுதாய அடிப்படைகளைக் கொண்டது. அதில் மிக விரிவான கேள்வி ஒன்று அடங்கியிருக்கிறது: துருப்புக்கள் யார்? இவர்கள் இந்த இராணுவ வீரர்களும், மற்றும் வீராங்கணைகளும் சமுதாயத்தின் எந்தத்தரப்பை சேர்ந்தவர்கள்? இராணுவ சீருடையில் இருப்பவர்கள் யார்? அவர்கள் ஏன் இராணுவத்தை தேர்ந்தெடுத்தார்கள்? சீருடையில் இல்லாதவர்கள் யார்? ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?

துருப்புகளுக்கு ஆதரவு

ஆளும் வர்க்கத்திற்குள்ளேயும், அரசுத் தரப்பிலும் மற்றும் ஊடக பிரமுகர்களும் ''துருப்புகளுக்கு ஆதரவு தரவேண்டும்'' என்ற அழைப்பை விடுப்பதில் அடங்கியுள்ள அர்த்தத்தில், போர் வீரர்களின் உண்மையான நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள எவருக்கும் அரசியல் அறிவியல் பட்டம் தேவையில்லை. அதை அப்பட்டமாக சொல்வதென்றால், முதலாவதாக ஈராக்கிற்கு படைகளை அனுப்புகின்ற ''கொள்கையை ஆதரிக்க'' அழைப்புவிடுவதாகும்.

இந்த தத்துவத்தில் பல வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதுடன், அவை எல்லாமே ஜனாதிபதி ஜோர்ஜ். w புஷ்ஷின் பிரதானமாக அரசியல் நலன்களான ''ஜனாதிபதியை ஆதரி'', ''ஜனாதிபதிக்கு பின்னால் அணிவகுத்து நிற்போம்'' அல்லது போர் மற்றும் ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ''பின் பலமாக திரண்டு நிற்கவேண்டும்'' என்பதற்கு சேவை செய்வதாகும்.

கடந்த வாரங்களில் அரசியல்வாதிகளாலும் மற்றும் பல டசின் கணக்கான பத்திரிகை ஆசிரிய தலையங்கங்களிலும் திரும்ப திரும்ப கூறப்பட்ட இராணுவ சீருடையில் உள்ள ஆண்களினதும் பெண்களினதும் நலன்கள் தொடர்புபட்டவையல்ல. மாறாக தற்போது எமது படையினரை ஆதரிப்பதற்கான நேரம் இது என கூறுகின்றனர்.

இந்த அழைப்பில் அடங்கியுள்ள நிபந்தனையை மேலும் அதிகமாக வலியுறுத்தி கூற இயலாது. காலத்தின் கருவியாக, இரண்டு தனித்தனி ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத சாளரங்களாக அமைந்துள்ளன. அந்த சாளரங்கள் அரசியல் உரைகளுக்கு உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்று விவாதம் நடத்த விரும்புகிறது. மற்றொன்று போர் ஆரம்பமாகியதும் விவாதம் நடத்தக்கூடாது என்று கூறுகின்றது. இதை இப்படியும் கூறலாம், இப்போது விவாதம் முடிந்துவிட்டது. எந்தக் கொள்கையை நாம் விவாதித்து கொண்டிருக்கிறோமோ, அந்தக் கொள்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் போர் வீரர்களது வாழ்விற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்தக் கொள்கையை ஆதரிக்க வேண்டிய நேரம் இது.

இங்கு மிகவும் வேதனை தரும், முரண்பாடு ஒன்று இயங்கிவருகிறது. சில போருக்கு ஆதரவாக வக்காலத்துவாங்குபவர்கள் சிவிலியன் தளபதிகள் உருவாக்கிய கொள்கைகளுக்கு போர் வீரர்கள் மீது பழிபோட்டுவிடக்கூடாது என்று, இது ஆதரிக்கும் நேரம் என்று கூறி உண்மையான அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியாமல் சிதைத்துவிடுவதுடன், அதே நேரத்தில் அதற்கு எந்தவகையிலும் துருப்புகள் பொறுப்பு அல்ல என்று சமாதானமும் கூறிவருகிறார்கள்.

அரசாங்கத்தின் மிக உயர்ந்த நிலைகளில், தேசிய ஊடகங்களில், மற்றும் இராணுவத்தில் அத்தகைய எச்சரிக்கை போர் எதிர்ப்பாளர்களையும் கண்டிப்பவர்களையும் பழிதூற்றும் திட்டமிட்ட முயற்சியுடன் எதிர்ப்பை ஒழித்துக்கட்டும் செயலாகும். அந்த எதிர்ப்பு எவ்வளவு சாதாரணமாகயிருந்தாலும், அதை ஒழித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டு முயலுகிறார்கள். அரசாங்கத்தின் போர்க்கொள்கைகளை ஆதரிக்காவிட்டால், அது துருப்புகளை ஆதரிக்கவில்லை என்பதற்கு சமமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அல்லது இந்தக் கருத்தை அப்படியே விமர்சிப்பது என்றால், துருப்புகளை எதிர்ப்பது என்பது வியட்நாம் போர் பூதத்தை கிளப்புவது, போர் வீரர்களை இழிவுபடுத்தும் கற்பனையான பூதாகரமான வடிவமாக கொச்சைபடுத்தும் பிழையானது என எச்சரிக்கைவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சிந்தனையை அதனுடைய முடிவுவரை கொண்டு செல்வோமானால், தர்க்கரீதியில் பின்வரும் நிலைக்கு வருவோம். போரையும் அதை வடிவமைத்துக் கொடுத்தவர்களையும் எதிர்ப்பது யுத்தமுனையின் விளைவுகளின் புறநிலையை ஒத்த இராணுவ தோல்வியும் மற்றும் துருப்புக்களின் (இறந்த) உடல்களை திரும்ப அனுப்பவதுமாகும்.

எடுத்துக்காட்டாக, இந்த முட்டாள்தனம் அண்மையில் நடைபெற்ற ஒரு மோதலில் வெளிப்படுகிறது. முன்னாள் ரீகனின் அதிகாரியான டேல் பெட்ரோஸ்க்கி (Dale Petroskey) Baseball Hall இன் நிர்வாக அதிகாரியாவார். வெளிப்படையாக போர் எதிர்ப்பாளர்களான ரிம் ரொபின்ஸ் மற்றும் சூசன் சரண்டோன் (Tim Robbins, Susan Sarandon) ஆகியோர் புஷ் நிர்வாகத்தை கண்டிப்பவர்கள். இந்த இருவரும், நடித்த baseball தொடர்பான "Bull Durham" திரைப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர்கள் தோன்றுவதாகயிருந்தது. பெட்ரோஸ்க்கி, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். நியூயார்க்கில், ஏப்ரல்-26-27-ல் அந்த நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அந்த இரண்டு நடிகர்களுக்கும் கீழ்கண்ட கடிதத்தை பெட்ரோஸ்க்கி எழுதியிருந்தார்.

''நீங்கள் இருவரும் பொது மேடைகளில் பகிரங்கமாக ஜனாதிபதி புஷ்ஷிற்கு கண்டனம் தெரிவித்து பேசுவது, இந்த முக்கியமான நெருக்கடியான நமது நாட்டு வரலாற்றில் நெருக்கடியான கட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சீர்குலைந்துவிடும். அது இறுதியாக, நமது படைகளை மேலும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். (அழுத்தம் சேர்க்கப்பட்டது நோவாபேஜ்). ஒரு அமைப்பு என்ற முறையில் நாம் நமது ஜனாதிபதி மற்றும் நமது படைகளுக்கு பின்னால், இந்த போரில் நிற்கிறோம்.''

இது, ஒரு புதிய பரிணாமம் அல்ல, இருபதாம் நூற்றாண்டில், மிக மோசமான ஆக்கிரமிப்பு நாடுகளைச் சேர்ந்த பிற்போக்கு சக்திகள் இந்தக் கருத்தை பிடித்துக்கொண்டு செயல்பட்டிருக்கின்றன. நாஜி ஜேர்மனியில் இறுதியாக முன்னணி அமைப்பாக விளங்கிய Free Corps movement என்பது இதில் அடங்கும். ஒரு அரசியல் ஆயுதம் என்ற முறையில் இத்தகைய படைகளை தொடர்ந்துவந்த அமெரிக்க ஜனாதிபதிகள், வியட்நாம் போரிலும் முதலாம் வளைகுடாப் போரிலும் மற்றும் தற்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அவர்களது கொள்கை: 'செயல் திட்டத்தை துருப்புகளோடு சமநிலைபடுத்துவது, செயல் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் துருப்புகளுக்கு ''எதிரானவர்கள்'', தேச பக்தியில்லாதவர்கள் அல்லது மிக மோசமாக துரோகிகள்' என்பதாகும்.

முதுகில் குத்துபவர்கள்

முதலாம் உலகப்போருக்குப் பின்னர் இதுபோன்ற அறிவுஜீவிகளின் மோசடியை குறிப்பாக ஜேர்மனியில் காணமுடிந்தது. 1920களில் இணை பாசிச Free Corps படைகள் இளைஞர்களில் சில பிரிவினரிடையே செல்வாக்கு பெற்றிருந்தது. சில இராணவ வீரர்களும் அந்தப் படைகளை ஆதரித்தனர். போர்க்களத்தில் தோல்வி ஏற்படவில்லை உள்நாட்டில்தான் தோல்வியைக் கண்டோம் என்று அந்தப் படை வீரர்கள் கருதினார்கள். அந்த பாசிச படைகளை கோழைத்தனமான அரசு காட்டிக்கொடுத்துவிட்டது. மற்றும் மார்க்சிஸ்ட்டுகளும் அறிவாளிகளும் உள்ளடங்கலான உள்நாட்டு எதிரிகளும் அழிவு வேலை செய்தனர் என அவர்கள் கருதினர். வியட்நாமில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகளை மேலெழுந்தவாரியாக அறிந்திருப்வர்களுக்குகூட இத்தகைய மோசடியான வாதங்களை புரிந்துகொள்ள முடியும்.

வில்லியம் சிரார் எழுதியுள்ள மிகப்பெரிய ஜேர்மன் நாட்டு வரலாற்று நூலான மூன்றாவது ரைஸ் எழுச்சியும், வீழ்ச்சியும் (The Rise and Fall of the Third Reich) இதில் ஒரு பகுதி இந்த கற்பனை எந்த அளவிற்கு உள்ளிணைக்கப்பட்டு மற்றும் ஒரு இளம் ஜேர்மனி போர்வீரர் கோப்ரல் அடொல்ப் ஹிட்லரை வர்ணித்ததன் மூலம் வெளிப்பட்டது என்பது விளக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால சர்வாதிகாரி அவரது பிரிவைச் சார்ந்த ஒரு போர் வீரரால் எப்படி வர்ணிக்கப்பட்டார் என்பதை வில்லியம் சிரார் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

''ஹிட்லர், எங்களது சமையல் கூடத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து தனது இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையையில் ஈடுபட்டிருப்பார். திடீரென்று அவர் எழுந்து தாவிக்குதித்து பரபரப்போடு இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருப்பார். அவர் நமது பெரிய துப்பாக்கிகள் இருந்தும் நமக்கு வெற்றி மறுக்கப்பட்டுவிட்டது, நமது கண்ணுக்கு தெரியாமல் ஜேர்மனியில் இருக்கும் மக்களிடையே எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எதிரியின் மிகப்பெரிய பீரங்கியைவிட மிகவும் ஆபத்தானவர்கள்'' என்று கூறுவார் என்று அந்தப் போர் வீரர் விளக்கினார். சிராரின் ஹிட்லர் பின்வரும் முடிவிற்கு வந்ததாக குறிப்பிட்டார், ''ஜேர்மனி இராணுவம் போர்களத்தில் தோல்வியடையவில்லை, மாறாக சொந்த நாட்டில் துரோகிகள் முதுகில் குத்திவிட்டார்கள்''.

வியட்நாமில் துருப்புகள்

போர் வீரர்கள் முதுகில் குத்திவிட்டார்கள் என்ற கட்டுக்கதையும், மற்றும் அதோடு சேர்ந்து வருகின்ற மிக சக்திவாய்ந்த கற்பனையும் ஒரு உறுதியற்ற ஒரு அறிவுபூர்வமான அடித்தளத்தை கொண்ட ஒரு நப்பாசையை முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய தலைவர்கள் போருக்கு மக்களது ஆதரவை திரட்டுவதற்கு அவசியமாக பயன்படுத்திக்கொண்டாக வேண்டும். நாட்டின் இராணுவ குறிக்கோள்கள் தனிப்பட்ட இராணுவ வீரர்களின் நலன்களுக்கு சமமானது என்ற நப்பாசையை உருவாக்க முனைகின்றனர். உண்மையிலேயே இவை இரண்டும் ஒன்றுதான்.

இந்த நடைமுறையில், 1960 களின் இறுதிகாற்பகுதியில் பயன்படுத்தினார்கள். தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய போரையும், அத்துடன் அதற்கான பொதுமக்கள் ஆதரவையும் இழந்து வருகிறது என்று தெளிவாக தெரிந்ததும் இந்த தந்திரம் கையாளப்பட்டது. ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் நிர்வாகத்திற்குள்ளேயே பொதுமக்களிடையே போருக்கு எதிராக வளர்ந்துவரும் எதிர்ப்பை அடக்குவதற்கு திட்டமிட்ட முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது கொள்கைகளை போர் வீரர்களது நலனோடு இணைத்து சமமாக மதிப்பீடு செய்தார்கள்.

வியட்நாம் முன்னாள் போர் வீரரான ஜெர்ரி லெம்ப்பேக் (Jerry Lembcke) தற்போது ஹோலி கிராஸ் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வியட்நாம் போர் தொடர்பாக அவர் எழுதிய கலாச்சார வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 1998ம் ஆண்டு அந்த நூல் வெளியிடப்பட்டது. (The Spitting Image: Myth, Memory, and the Legacy of Vietnam -வியட்நாமின் கட்டுக்கதை, ஞாபகங்கள், பலம்-நியூயார்க் யூனிவர்சிட்டி பிரஸ், 1998).

வியட்நாம் போர் பற்றி அவர் கூறியிருப்பதாவது: ''1969 இளவேனில் காலத்திலிருந்து, போர் முதலும் முடிவும் ஆக போர் புரிய அனுப்பப்படுபவர்களை பற்றியதாகவே அமைந்திருந்தது. அவர்களை போருக்கு அனுப்பிய அரசியல்வாதிகளைப் பற்றி கருதிப்பார்க்கவில்லை.

இந்த முயற்சி, 1969 மே 19ம் திகதி பாதுகாப்புத்துறை அமைச்சர் மெல்வின் லார்ட் (Melvin Laird) ஆல் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியில் வெளிப்பாடானது. அப்போது, பொதுமக்களுக்கு 21வது நூற்றாண்டு காட்சியான 24 மணிநேர ஊடகச் செய்திகள் கிடைக்கவில்லை. லாரிட் எடுத்துவைத்த தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க போர்க்கைதிகள் பற்றிய திட்டவட்டமான ஒரு பிரச்சனைக்கு, ஊடகங்கள் பரப்பிய விசர்த்தனமான அந்த இயக்கத்தால் விரும்பிய விளைவு கிடைத்தது.

உற்சாகமாக ஊடகங்களால் வளர்க்கப்பட்ட போர்க்கைதிகள் பிரச்சனை செய்திகளில் இது எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியது என்றால், எழுத்தாளர் ஜோனாதன் செல் குறிப்பிட்டிருப்பதைப்போல் பல மக்கள் (அமெரிக்க மக்கள்) அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபட்டிருப்பதே போர் கைதிகளை திரும்ப அழைத்து வருவதற்குத்தான் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது.

ஒரு அச்சம் மிக்கசூழ்நிலை

தற்போது, புஷ் ஆட்சியில் குறிப்பாக செப்டம்பர் 11 பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் அரசியல் பிற்போக்குத்தனம் பொதுமக்களது உணர்மையின் மீது ஏற்படுத்தியுள்ள மிகவும் வலுவான தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. நிர்வாக தரப்பு தலைவர்கள், அவர்களது ஊடக ஊதுகுழல்கள் மற்றும் அவர்கள் தழுவிக்கொண்டுள்ள பிற்போக்குக் கொள்கைகள் ஆகியவற்றை பார்க்கும்போது, எவருக்கும் புஷ்ஷின் மிக மதிப்பற்ற வார்த்தைகளின் உண்மையான பொருளை எவரும் உணர முடியும். ''ஒன்று நீங்கள் எங்களோடு இருக்கவேண்டும், அல்லது, நீங்கள் பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்'' என்று புஷ் அன்று சொன்ன வார்த்தைகள் ஓரளவிற்கு மக்களது உள் உணர்மையில் இணைந்துவிட்டது.

புஷ் நிர்வாகத்தை எதிர்ப்பவர்கள் சிலவேளை அதில் சம்மந்தப்பட்ட அரசியல் பிரச்சனைகளை நன்கு ஆராயாதவர்கள் அல்லது, போர் செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்காதவர்கள், கடமை தவறாத குணத்தோடு, ''ஆனால், நான் துருப்புகளை ஆதரிக்கிறேன்'' என்ற நிபந்தனையோடு புஷ் நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார்கள். புஷ் நிர்வாகம் கோரும் ஒருமனதான அரசியல் முடிவிற்கு காதுகொடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவில் அது விளங்கப்பட்டுமுள்ளது.

எப்படி எவரும் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியும்? ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செய்தியில் குறுகிய முதலாளித்துவ அரசியல் கொள்கை கண்ணோட்டத்திற்கு இடையிலும் ஒரு குடிமகன் துணிவோடு புஷ் நிர்வாகத்தின் பைத்தியக்காரத்தனத்திற்கும், மற்றும் அவர் ஈராக்கில் பார்க்கும் கண்மண் தெரியாத முறையில் நடைபெறும் கொலைகளையும் எதிர்த்து அறிக்கைவிடுகிறார். இப்படி அறிக்கைவிடுபவர்களின் அறிவாற்றல், நேர்மை ஏன் அவர்கள் நிதானத்தைகூட கேள்விக்குரியதாக்கின்றனர்.

இரண்டு அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் இந்த கருத்தை நன்றாக விளக்குகின்றன.

இந்த மாத ஆரம்பத்தில், 33 வயது அலுவலக ஊழியரும், மேற்கு வெர்ஜீனியாவைச் சேர்ந்த சமாதான ஆர்வலருமான ஆன்ஜேலிக்கா அமாயா அமெரிக்காவிற்கான ஊர்வலத்தில் ("Valley Rally for America") கலந்துகொண்டார். அந்தப் பேரணியில், சில நூறுபேர் பங்கெடுத்துக் கொண்டனர். அமாயா ஒரு பதாகையை கொண்டுவந்தார், அதில் ''நான் அமெரிக்காவை நேசிக்கிறேன், ஆனால்,......'' என்று அந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

அமாயாவிற்கு அருகில் சில அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த முன்னாள் போர் வீரர் கோபமாக கூறிய வார்த்தைகளை குளோப் அன்ட் மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தரப்பட்டுள்ளது. ''அவள், நோய்வாய்ப்பட்டவளைப்போல், தெரிகிறது, நிதானம் தவறிவிட்டாள்'' என்பதாகும். அத்தகைய வார்த்தைகள் மிக பிற்போக்குத்தனமான கருத்தை பிரபலிப்பதாகும். இத்தகைய கருத்துக்கள் தொழிலாள வர்க்கத்தின் பரவலான பிரிவினைரிடையேகூட காணப்படலாம். இதனுடைய முட்டாள்தனமான உள்ளார்ந்த பொருள் என்ன? நிதானமும், பகுத்தறிவும் உள்ள எவரும், போர் காலத்தில் ஆளும் குழுவை கண்டிக்கக்கூடாது என்பது தானே!

இது, மிக அசாதாணமான எடுத்துக்காட்டு, தொலைக்காட்சி பத்திரிகையாளர் பீட்டர் ஆர்நெட் (Peter Arnett) ஈராக் அரசாங்க தொலைக்காட்சியில் போர் பற்றி நேர்மையாக கருத்தை தெரிவித்த ''குற்றத்திற்காக'' அவரை நாட்டு துரோகி என்று அமெரிக்க கென்டகியைச் சார்ந்த குடியரசுக்கட்சி செனட்டர் ஜின் பன்னிங் (Jim Bunning -Republican of Kentucky). அவர், ஆர்நெட்டை திரும்ப அழைத்துவந்து அமெரிக்காவில் தேச துரோகி என்று குற்றம்சாட்டி, போரின்போது ஈராக் அரசிற்கு உடந்தையாகவும் உதவுகிற வகையிலும் செயல்பட்டதாக விசாரிக்கவேண்டும் என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, அந்த வேகத்தில் அவசர உணர்வு வெளிப்பாடாக அந்தக் கருத்து இருக்கலாம் என்று கருதிவிட முடியாது, ஏனென்றால், பின்னர் அமெரிக்க செனட் சபையிலேயே இவர் அதே கருத்தை தெரிவித்தார்.

துருப்புகள்

ஒரு வகையில் மிகவும் பின்தங்கிய மற்றும் அரசியலில் குழப்பம் அடைந்துள்ள மக்கள் பிரிவுகள் ''துருப்புகளுக்கு ஆதரவு'' என்ற சொற்றோடரை தழுவிக்கொண்டிருப்பது ஒரு கருத்தை பிரதிபலிக்கின்றது. இராணவ வீரர்கள் வெளிநாட்டுக் கொள்கையின் கருவிகள் மட்டுமே. அந்த கருவியை வடிவமைத்து பயன்படுத்துகிற சிவிலியன் கமாண்டர்களிலிருந்து அவர்களை தனிமைப்படுத்திக்காட்டவேண்டும் என்ற ஒரு மங்கலான அங்கீகாரம் தான் அது என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படியிருந்தாலும், அத்தகைய விழிப்புணர்வு சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி ஆகவேண்டும்.

எப்படிப்பட்ட கேள்விகளை என்றால்:- நாம் ஆதரித்து ஆகவேண்டும் என்று சொல்லப்படுகிற துருப்புகள் யார்? எந்த சமுதாய பிரிவில் இருந்து இந்த ஆண்களும் மற்றும் பெண்களும் பிரதிநிதித்துவபடுத்துப்படுகிறார்கள்? யார் சீருடையில் இருக்கிறார்? ஏன் அவர் சீருடையில் இருக்கிறார். போரில் கலந்துகொண்டு உயிர் தப்பி வருகிறவர்களுக்கு ஏற்படுகிற விளைவுகள் என்ன? எவரும் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் ஏற்படுகின்ற விளைவு என்ன?

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் சமுதாயத்தன்மை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. வியட்நாம் போர் வீரர்களின் பெற்றோர் தலைமுறை NBC-பத்திரிகையாளர், டாம்-ப்ரோக்கா வர்ணித்ததைப்போல் மிகப்பெரிய தலைமுறையைச் சார்ந்தவர்கள். அவர்கள் இளைஞர்களாகயிருந்தபோது, அமெரிக்க வரலாற்றில் இராணுவ சேவை மிகப்பரவலாகயிருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்கர்கள் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். ஏறத்தாழ இராணுவத்தில் பணியாற்றும் பருவம் உள்ள உடல் வலிமையுள்ள அனைவரும் இராணுவ சேவையில் ஈடுபட்டனர்.

வியட்நாமில் பெரும்பாலும் தொழிலாளவர்க்க இராணுவம் உருவாகியதுடன் இது மாறிவிட்டது. வியட்நாம் தலைமுறையை சார்ந்தவர்களது மக்கள் இன விகிதாசாரம் கவனம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் இனப் பிரச்சனை தொடர்பான விவகாரங்களில் திரும்பியிருந்தது. கறுப்பினத்தவர்கள் அதிகமாக இராணுவத்தில் இடம்பெற்றிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. யார் போரிட்டார்கள், யார் போரில் கலந்துகொள்ளவில்லை என்பதை தீர்மானிப்பதில் வர்க்கமே அடிப்படை காரணியாக இருந்தது.

அண்மையில் ஒரு ஆய்வு நடாத்தப்பட்டது. கிறிஸ்டியன் நி.ஆப்பி (Christian G. Appy) அந்த ஆய்வு சம்மந்தமாக எழுதியுள்ள தொழிலாளவர்க்கப் போர் என்ற நூலில் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டிருக்கிறார். அதில் அமெரிக்க இாணுவத்தில், இடம்பெற்றுள்ள 2.5 மில்லியன் இராணுவ வீரர்களில் சுமார் 80 சதவிகிதமானோர் ஏழை, மற்றும் தொழிலாளவர்க்க குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சில அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல், இது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல.

வியட்நாம் யுகத்தின் கட்டாய இராணுவ சேவைமுறை என்பது மாணவர்கள் கல்வி கற்பதை தள்ளிவைத்துவிட்டு இராணுவ சேவையில் ஈடுபடுவதாகும். இந்த திட்டத்தில், சமுதாயத்தில் குறைந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இராணுவத்தில் அதிகமாக ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; என்பதை ஆப்பி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க மக்கள்தொகை, கணக்கெடுப்பு பதிவேடுகளின்படி, 5,000 டொலர், அதற்கும் குறைவாக சம்பாதிக்கிற குடும்ப இளைஞர்களைவிட சராசரியாக 7,500 முதல் 10,000 டொலர் வரை சம்பாதிக்கிற குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களின் கல்லூரிக்குச் செல்லும் அளவு

2 1/2 மடங்கு அதிகமாகும்.

இப்படி வர்க்க அடிப்படையிலான பாரபட்ச போக்கு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட சுமார் 4,000 இராணுவ சேவைக்க ஆள் சேர்க்கும் குழுக்களிடம் காணப்பட்டன. 1966ம் ஆண்டு இத்தகைய இராணுவ ஆள் சேர்ப்பு குழுக்களில் பணியாற்றிய 16,000 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த உறுப்பினர்களில் 70% இற்கு மேற்பட்டவர்களில் 50 வயதுக்கு மேற்பட்ட உயர் உத்தியோகத்தில் உள்ளவர்கள் (white-collar professionals) 9% பேர் மட்டுமே. இது தேசிய மனிதவள சேகரிப்பு அமைப்பில் உள்ள வர்க்க சமத்துவமின்னமையை பலப்படுத்துவதாக ஆப்பி வாதிட்டுள்ளார். மற்றொரு திட்டமான ''புராஜக்ட் 1,00000'' ("Project 100,000") என்று அழைக்கப்பட்டது. அதைப் பற்றி அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொபேர்ட் மக்நமாரா விளக்கும்போது, இந்தத் திட்டம் மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் தருவது என்று கூறினார்.

இத்தகைய, கட்டாய இராணுவ சேவை முறை ஒரு பாரபட்சமான சமூக கொள்கையாகும். இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டது. இது நடுத்தர வர்க்கத்தினரை அமைதியாக வைத்திருந்தது. நாட்டின் பொருளாதார மற்றும் சமுதாய பிரிவுகளில் மிக தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் பெருமளவில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ரிசேர்வ் இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறையையும், தேசிய பாதுகாப்புபடை முறையையும் (reserves and the National Guard) செயல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதி ஜோன்சனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப் பற்றி ஆப்பி கீழ்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்:-

''ரிசேர்வ் படை வீரர்களும், மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரும் வழமையான இராணுவ துருப்புக்களைவிட வயதானவர்கள் என்பதை ஜோன்சன் உணர்ந்திருந்தார். இந்த தரப்பினரை ஒரு குழுவாக பார்க்கும்போது சமுதாய அடிப்படையிலும், மற்றும் பொருளாதார அடிப்படையிலும் அதிக அளவில் முன்னணியில் இருந்தனர். கட்டாய இராணுவச் சேவையும் தீவிர இராணுவ பணியாளர்கள் போர் புரிவதற்கு அனுப்புவதன் மூலம் போரில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியாவோர் எண்ணிக்கையை பரவலாக்கி அதில் இளைஞர்கள் மற்றும் எந்தவிதமான அதிகாரமும் இல்லாத தனி நபர்கள் பாதிக்கப்படும் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஜோன்சன் நம்பினார். டேவிட் ஹால்பெர்ஸ்ட்ராம் கூறியுள்ளபடி ''அமைதியான, அரசியல் ரீதியில் கண்ணுக்குத் தெரியாத போரை நடத்தவே ஜோன்சன் விரும்பினார்.

தொழிலாள வர்க்க இராணுவம்

தற்போது இராணுவம் பெரும்பாலும் தொண்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வியட்நாம் காலத்து துருப்புக்களில் இருந்து இன்றைய இராணுவம் சமூக தன்மையில் வேறுபட்டமை அதன் தன்மையை மாற்றவில்லை. இன்றைய தினம் இராணுவத்தின் 1.2 மில்லியன் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் அல்ல. ஆனால் இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினை பொருத்தமற்ற விகிதாசாரத்தில் பிரதிபலிக்கின்றது. அவர்களை போருக்கு அனுப்பும் பிற்போக்கு குழுக்களை சேர்ந்த 1960 களில் தாங்களே இராணுவ சேவையிலிருந்து தவிர்த்து தப்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 1960களில் கடைபிடிக்கப்பட்ட வர்க்க குரோத கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டவர்களான அந்தக் காலத்தில் இராணுவ சேவையை தவிர்த்தவர்களில் ஜோர்ஜ்.புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் சென்னி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மார்ச் 30 அன்று, நியூயோர்க் டைம்ஸ் ஒரு நீண்ட கட்டுரையை பிரசுரித்திருந்தது. அதில், இன்றைய தொண்டர் இராணுவத்தில் ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் ஆகிய இரு தரப்பினருமே இடம்பெறவில்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளது. குடியேற்றவாசிகளின் பகுதிகளில் உள்ள Boston பல்கலைக்கழகத்தில் 4வருடங்கள் கற்று வருபவர்களைவிட, Birmingham or Biloxi உள்ள இன்றைய இராணுவத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 வருடம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையை (நடுத்தர வர்க்க) அதிகமாக உள்ளது என்பதை அந்தக் கட்டுரை விளக்கியிருக்கிறது.

உதாரணமாக, 19 வயதான அமெரிக்க இராணுவ பிரைவேட் ஜசிக்கா லின்ஞ்ச் (Jessica Lynch) இன்றைய நிலவரத்தை விளக்கிக்காட்டும் உதாரணமாகும். அவரது வாழ்க்கைக் குறிப்பு அசாதாரணமானது. அவர் போர் கைதியாக இருந்து பின்னர் காப்பாற்றப்பட்டு அமெரிக்காவில் தற்போது அலங்கரிக்கப்பட்டு வலம் வருகிறார். அவரது பின்னணி ஒரு பொதுவான உதாரணம் ஆகும்.

லின்ஞ்ச் பாலஸ்தீனத்திலிருந்து வந்தவர், மேற்கு வேர்ஜினியாவில் வாழ்ந்தவர். அவரது ''வாழ்க்கை சூழ்நிலையிலிருந்து'' வெளியேறுவதற்கு ஒரு வழியாக இராணுவச் சேவையை தேர்ந்தெடுத்ததாக ஏப்ரல் 5 ஆம் திகதி குளோப் அன்ட் மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. லின்ஞ்ச் சந்தித்த அதே சூழ்நிலைகள்தான் வாழ்வதற்கு வழி தேடி கோடிக்கணக்கான தொழிலாளவர்க்கத்தைச் சேர்ந்த அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர். வறுமை, கல்வி வாய்ப்புக்கள் மிகக்குறைவு மற்றும் குறைந்துவரும் வேலை வாய்ப்புக்கள் இவை எல்லா நடுத்தர வர்க்கத்தினரையும் பாதிக்கின்றன.

மேற்கு வேர்ஜீனியா 1.8 மில்லியன் மக்கள்தொகையை கொண்டது. அங்கு, பொருளாதார மற்றும் சமுதாய சீரழிவுகள் மிகமோசமாக உள்ளன. அமெரிக்க மக்கட்தொகை கணக்கெடுப்பு குழு புள்ளி விபரங்களின்படி 1994 இற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தப்படி மேற்கு வேர்ஜீனியாவில் 14,458 பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். லிஞ்ச் வளர்ந்துவந்த வியர்ட் கவுண்டி (Wirt County) பகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவிகிதமாகயிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவிலேயே மிக அதிகமான அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ந்திருக்கும் பகுதி மேற்கு வேர்ஜீனியா என்று ஏப்ரல் 2002 இல் பொருளாதார கொள்கைக் கழகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், மேற்கு வேர்ஜீனியாவில் 5 இல் ஒரு பகுதி மத்திய குடும்பங்களின் சராசரி வருமானம் 5% அதிகரித்துள்ளது. அது 1,640 டொலராகும். மேற்கு வேர்ஜீனியாவில் மிகப்பெரும் பணக்காரக் குடும்பங்களில் 5ல் ஒரு பகுதியினரின் சராசரி வருமானம் 37% ஆல் அல்லது 27,870 டொலராக அதிகரித்துள்ளது.

''இங்கு வேலைகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் வியட்நாம் போர் வீரர் ஒருவர் குளோப் மெயிலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். வேலை வாய்ப்பு எதுவும் இல்லாததால் மிகப்பெரும்பாலோர் இராணுவச் சேவையில் ஈடுபடுகிறார்கள். ஏனெனில் அரசு அவர்களுக்கு நல்ல ஊதியம் தரும் என்று தெரியும். மற்றும், போர் முடிந்துவரும்போது ஓரளவிற்கு பயிற்சி பெற்றவர்களாக வெளியே வருவார்கள் என்பதாக அவர் அந்த பேட்டியில் விளக்கியிருக்கிறார்.

அண்மை வாரங்களில் ஊடகங்களில் இதுபோன்ற விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. லின்ஞ்சின் சமூக மற்றும் பொருளாதார பின்னணிகளைப் போன்று அனைவரும் ஒரே வகையான சமூக மற்றும் பொருளாதார பின்னணியினால்தான் இராணுவ சேவையை நாடியிருக்கின்றனர்.

பத்தொன்பது வயதான Oregon நகரவாசியான முதல்தர பிரைவேட் (Private First Class) பிரான்டன் டேப்லர் (Brandon Tobler) இராணுவ ரிசர்வ் பணியில் சேர்ந்ததற்கு காரணம், அவருக்கு பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சியாலும் மற்றும் எதிர்காலத்தில் பள்ளியில் படிக்கலாம் என்ற நம்பிக்கையாலும் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

லான்ஸ் கோப்ரல் ஜோஸ் கிளட்டரிஸ் (Jose Gutierrez) குவார்த்தமாலாவின் தெருவோரத்தில் ஏழையாக வளர்ந்து அங்குள்ள ஒரு கடையில் பணியாற்றி வந்தார். ஈராக்கில் மடிந்த முதல் இரண்டு இராணுவ வீரர்களில் அவரும் ஒருவர்.

18 வயதுதான மைக்கேல் பில்பர்ட் (Michael Philbert) இராணுவத்தில் முதல்தர பிரைவேட்டாக பணியாற்றி வருகிறார். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு இராணுவத்தின் சமூக உள்ளடக்கம் தொடர்பாக வழங்கிய பேட்டியில், அவர் தனது இராணுவ சீருடை மற்றும் ஜோர்ஜியாவில் உள்ள போர்ட் பென்னி இராணுவதளவாட கடையை பார்த்துக்கொண்டே கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

''சில ஏழை இளைஞர்கள் வேறு வழியேயில்லாமல் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் என்பதற்காக இராணுவத்தில் சேருகின்றனர். அவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அல்லது அவர்களுக்கு குடும்ப பிரச்சனையால் சிறப்பாக வாழ முடியவில்லை. எனவே, அவர்கள் இராணுவத்தில் சேருகிறார்கள். அவர்கள்தான் நமது நாட்டிற்காக மடிகிறார்கள். அதே நேரத்தில் பணக்காரக் குழந்தைகளால் இராணுவ சேவையை தவிர்த்துவிட முடிகிறது.'' என குறிப்பிட்டார்.

இராணுவத்தில் இரத்தத்தோடும் சதையோடும் நடமாடுகிற மனிதர்கள் இராணுவக் கட்டுப்பாடு காரணமாக தங்களது அடிப்படை தார்மீக உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு அமெரிக்க வெளியுறவுக்கொள்கை என்கிற மிக ஆழமான பிற்போக்கான மற்றும் ஆபத்தான ஆயுதத்திற்காக எந்தவிதமான தயக்கமோ அல்லது ஆட்சேபனையோ சொல்லாமல் பயங்கரமான குற்றங்களை புரிந்து வருகிறார்கள்.

இப்படிச் சொல்வதால் இராணுவ சீருடையில் உள்ள ஒவ்வொருவரும் அவரது பயிற்சியால் இரத்த வெறிகொண்ட தானியங்கி இயந்திரமாக தனிப்பட்ட முறையில் சிந்தனையோ அல்லது கட்டுப்பாடோ இல்லாமல் மற்றும் தார்மீக கட்டுக்கோப்புகள் சிதைந்துவிட்டவர்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இராணுவத்தில் அத்தகைய சிறிய பிரிவு ஒன்று செயல்படுகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. ஆனால், ஏனையோர் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்கிற சன்னிதானத்தின் முன் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பாரிய தியாகத்தை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

துருப்புகளுக்கு ஆதரவா? அல்லது அவர்களை தனிமைப்படுத்துவதா?

போருக்கு எதிரான கண்டனங்களை கட்டுப்படுத்த அல்லது போர் ஆதரவு கூப்பாட்டில் அந்தக் கண்டனம் மறைந்துவிடச் செய்வதுபோன்ற எந்தவிதமான கவனமும் செலுத்தாத சிந்தனையற்ற கொடிபிடிக்கும் செயலுக்கும் அப்பாற்பட்டு மிகத்தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மிகப்பெரும்பாலும், தொழிலாள வர்க்கத்தை சார்ந்த இராணுவ வீரர்களையும் புஷ் நிர்வாகத்தையும், போர் தொடர்பான கண்டனங்களில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு திட்டமிட்ட முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன. இவை ஏனென்றால், அவர்கள் கேட்கவிரும்புவது போருக்கு ஆதரவான பொதுமக்களது உணர்வுகள் மட்டும் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கே.

போர் வீரர்களுக்கு இந்தக் கருத்துக்கள் ஏன் தெரியக்கூடாது? இன்னும் அவர்கள் ''நமது சுதந்திரத்தை காப்பாற்றுகின்றார்கள்'' என பலர் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கண்டனங்களை கேட்பதற்கு ஏன் அனுமதிக்கக்கூடாது. உண்மையான கவலை என்ன? போரின் முன்னணியில் உள்ள படை வீரர்கள் போருக்கு எதிரான உரையைக் கேட்டால் அவர்களது உணர்வு எப்படி பாதிக்கப்படும்? அல்லது ஒரு இராணுவ வீரர் விழிப்புணர்வு கொண்டு இந்த ஏகாதிபத்திய போரின் பிற்போக்கு தனத்தை புரிந்துகொண்ட இத்தகைய ஒரு போரில் நாம் ஈடுபட்டிருக்கிறோமே என்ற கண்திறக்கப்பட்டு அடுத்த ரொன் கோவிக்காக (Ron Kovic- வியட்நாம் போராளியான இவர் போரில் காயமடைந்து நாடு திரும்பிய பின்னர் யுத்த எதிர்ப்பாளரானார்) மாறிவிடுவார் என்ற பயத்தினால் இப்படிச் செய்கிறார்களா?

''படைகளுக்கு ஆதரவானவர்கள்'' முக்கியமாக மறைத்துக்கொள்ள விரும்புவது புஷ் நிர்வாகத்திற்கு எதிரான விமர்சனத்தை அனுமதிப்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் எதிர்ப்பு இயக்கத்தின் அறிவுபூர்வமான கொள்கை அடிப்படையில் அமைந்த எதிர்ப்பு உணர்வு என்பது பொதுமக்கள் மத்தியில் பரவிவிடும் என்ற அச்சத்தின் காரணத்திலாகும்.

''துருப்புகளுக்கு ஆதரவு இயக்கம்'' என்பது மிக சாதுர்யமாக நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அந்த இயக்கம் நடத்தப்படுவது இராணுவத்தில் பணியாற்றுபவர்களையே இழிவுபடுத்துகின்ற காரியமாகும் என்பதை இந்த உள்ளனக்கத்தில் விளங்கிக்கொள்ளலாம். பென்டகன் ஒரே கருத்துதான் நிலவவேண்டும் என்று கருதுவதுடன் எதிர்பார்க்கிறது. ஆனால், இராணுவ சேவையில் சேர்ந்துவிடுவதால் பகுத்தறிவுள்ள மனிதர்கள் தங்களது நடுநிலை சிந்தனையை கைவிட்டுவிட மாட்டாததுடன், தங்களது அரசியல் உணர்மையையும் இழந்துவிடமாட்டார்கள். இறுதியாக பீரங்கி குண்டுகளாக பயன்படுத்தப்படபோகும் அவர்களுக்கு, தங்களை போர் முனைக்கு அனுப்பி போர் ஆரம்பிப்பதற்கு திரியையும் ஏற்றிவைப்பவர்களது அரசியல் மற்றும் சமூக தன்மையை விளங்கிக்கொள்ளுகிற தெரிந்துகொள்ளுகிற உரிமையும் பொறுப்பும் நிச்சயம் உண்டு.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved