WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
WSWS international conference: Resolutions call for
political independence of working class, oppose attacks on democratic
rights
உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தொழிலாள வர்க்கத்தின் அரசியல்
சுயாதீனம் கோரும் தீர்மானங்கள், ஜனநாயக உரிமைளை பறிப்பதற்கு எதிர்ப்பு
3 April 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் இணைந்து மிச்சிகனில்
உள்ள ஆன் ஆர்பரில் மார்ச் 29, 30 ஆகிய நாட்களில் நடத்திய சர்வதேச மாநாட்டில், "சோசலிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தியம்
மற்றும் போருக்கு எதிரான போராட்டம்: புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான வேலைத்
திட்டங்களும் மூலோபாயமும்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. ஏப்ரல் 1தேதி உலக சோசலிச
வலைத் தளமானது மாநாட்டின் சுருக்கத்தை பிரசுரித்தது.
[காண்க:
சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச
மாநாடு] மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச
ஆசிரியர் குழு தலைவரும் மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தின்
தொடக்க உரை பிரசுரிக்கப்பட்டது.
[காண்க:
கட்டுக்கடங்கா குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்]
ஏப்ரல் 2ல் மாநாட்டு பிரதிநிதிகளால் ஒருமனதாக ஏற்கப்பட்ட 6 தீர்மானங்களில் 2
தீர்மானங்கள் ஏப்ரல் 2ம் தேதி பிரசுரிக்கப்பட்டன.
[காண்க:
உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின்
சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு] இன்றைய தினம் மூன்றாவது மற்றும் நான்காவது தீர்மானங்ளை பிரசுரிக்கிறோம். அடுத்து
இறுதியாக இரண்டு தீர்மானங்களை பிரசுரிப்போம்.
மாநாட்டு தீர்மானம்: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக
ஏகாதிபத்தியத்திற்கு மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களை நடத்த
வேண்டுமென்றால் அதற்கு பெரிய வர்த்தக அமைப்புக்களோடு இறுக்கமான உறவுகளை வைத்திக்கின்ற மற்றும் இலாப
அமைப்பை பேணுவதை தமக்கு அடிப்படையாகக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்திற்கு
சுயாதீனம் வேண்டும். ஏகாதிபத்திய போர் தீர்வு காணமுடியாத முதலாளித்துவ முரண்பாடுகளால் உருவாகிறது மற்றும்
நிதி ஆதிக்க குழுவின் நலன்களுக்காக போர் நடத்தப்படுகிறது. எனவேதான் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து முதலாளித்துவ
ஆளும் மேல்தட்டின் அரசியல் பிரதிநிதிகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படிந்து இருப்பதால் ஏகாதித்தியம் மற்றும் போருக்கு
எதிராக, சக்தியுள்ள போராட்டம் எதையும் நடத்த முடியாதிருக்கிறது.
ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பில் புஷ் நிர்வாகத்தின் உடந்தையாக செயல்படும் ஜனநாயக
கட்சியை இந்த மாநாடு கண்டிக்கிறது. சென்ற அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் ஈராக் மீது ஆக்கிரமிப்பையும்
படையெடுப்பையும் அங்கீகரிக்கும் தீர்மானம் வந்தபோது அந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு தேவையான வாக்குகளை
ஜனநாயக கட்சி புஷ்ஷிற்கு வழங்கியது. அந்த கட்சியின் முன்னனி தலைவர்கள் எவரும் போரை தீவிரமாக எதிர்க்கவில்லை.
2004 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அதன் பெரிய தலைவர்கள் அனைவரும் போரை முழுமையாக
ஆதரிக்கின்றனர். போர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவதற்கு வலியுறுத்துவதற்கு கூட ஜனநாயக
கட்சி மறுத்துவிட்டது. எனவே அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் அமெரிக்க மக்களை பொறுப்பு ஏற்க செய்யும் சதிச்
செயலில் ஜனநாயக கட்சியினர் உதவியிருக்கிறார்கள் மற்றும் உடந்தையாக செயல்பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக கட்சியின் ஆதரவு இல்லாமல் புஷ் நிர்வாகம் இந்த போரில் இறங்கியிருக்கமுடியாது.
போர் தொடங்கியவுடன் நாடாளுமன்றத்தின் 2 சபைகளிலும் இடம்பெற்றிருக்கும் ஜனநாயக கட்சிக்காரர்கள் போர்
ஆதரவு தீர்மானங்களுக்கு மிகப்பெரும் அளவில் வாக்களித்தனர் மற்றும் அவர்களது முண்ணணி காங்கிரஸ் உறுப்பினர்கள் "நமது
தலைமை தளபதிக்கு முழு ஆதரவு" என அறிவித்தனர்.
வெள்ளை மாளிகையில் புஷ்க்கு பதிலாக அல் கோர் பதவி ஏற்றிருந்தால் ஈராக்கிற்கு
எதிரான போரை தவிர்த்திருக்கமுடியும் என்று கருதுவது அரசியல் ரீதியில் அப்பாவித்தனமான விஷயம். கிளின்டன்-கோர்
நிர்வாகம் கடைப்பிடித்து வந்த இராணுவமய கொள்கைகளின் தீவிரமான வெளிப்பாடுதான் புஷ் மேற்கொண்டுள்ள போர்
வெறி கொள்கைப்போக்கு. சோமாலியா மீது படையெடுக்கப்பட்டபோது, ஹைத்தி பகுதியை அமெரிக்க இராணுவம்
ஆக்கிரமித்தபோது, பொஸ்னியாவில் அமெரிக்க இராணுவம் தலையிட்டபோது, 1998 டிசம்பரில் ஈராக்கில் குண்டுவீச்சு
தாக்குதல் நடந்தபோது, சூடானில் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தபோது மற்றும் சேர்பியாவிற்கு
எதிராக போர் நடந்தபோது கிளின்டன்தான் தலைமை வகித்தார். ஈராக் விடுதலை சட்டத்தில் கையெழுத்திட்டவர்
கிளின்டன். பாக்தாத்தில் ஆட்சி மாற்றம் அமெரிக்காவின் அதிகாரபூர்வமான கொள்கையாக அந்த சட்டத்தின் மூலம்
அறிவிக்கப்பட்டது மற்றும் இந்த பின்னணியோடு அதற்கு பின்னர் புஷ் போர் முயற்சிக்கு ஜனநாயக கட்சிக்காரர்கள் உடந்தையாக
செயல்பட்டு இருந்தமையை பார்க்கும்போது, கோர் நிர்வாகமாக இருந்தால் பாரசீக வளைகுடா கொள்கையில்
அடிப்படையிலேயே மாறுபட்ட நிலை எடுக்கும் என்று நம்புவதற்கு எந்த விதமான அடிப்படையும் இல்லை.
புஷ் நிர்வாகத்தின் தொழிலாள வர்க்க விரோத உள்நாட்டு வேலைத்திட்டங்களில் ஜனநாயக
கட்சி உடந்தையாக செயல்பட்டு வருகிறது. புஷ் நிர்வாகம் தொடங்கிய ஆரம்ப வாரங்களில் பணக்காரர்களுக்கு
பெருமளவில் வரிக்குறைப்பு செய்வதற்கான தீர்மானம் நிறைவேறுவதற்கு தேவையான வாக்குகளை ஜனநாயக கட்சியினர்
தந்தார்கள். செப்டம்பர் 11க்கு பின்னர் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத அளவிற்கு ஜனநாயக
உரிமைகளையும் மற்றும் அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள உரிமைகளையும் கடுமையாக மீறுகின்ற வகையில் புஷ் நிர்வாகம்
மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளை ஜனநாயக கட்சியினர் ஆதரிக்கின்றனர். நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும்
2001 செப்டம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அதற்கு பின்னர் நடைபெற்ற ஆந்தராக்ஸ் தாக்குதல்கள்
ஆகியவை தொடர்பாக எந்த விதமான விசாரணையும் நடைபெறாமல் தடுப்பதற்கு குடியரசு கட்சியுடன் ஜனநாயக கட்சியினர்
ஓத்துழைத்தார்கள், அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த இடங்களில் கவனக்குறைவாகவோ அல்லது உடந்தையாகவோ செயல்பட்டதை
மூடிமறைப்பதற்காக இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
ஜனநாயகக் கட்சியின் அரசியல் சீர்குலைவு நீண்ட காலமான நிகழ்வுப் போக்குகளின் வெஎளிப்பாடாகும்.
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் புதிய பொருளாதார ஒப்பந்தம், கென்னடியின் புதிய எல்லைத்திட்டம் மற்றும் ஜோன்ஸனின்
மகத்தான சமூகதிட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சாதாரணமான சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,
இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல தலைமுறைகள் ஜனநாயக கட்சியை ஆதரித்தனர். இது போன்ற சமூக சீர்திருத்த
நடவடிக்கைகள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை நிரந்தரமாக முன்னேற்றிவிட முடியும், செல்வம்
மற்றும் வருவாய் ஏற்றத்தாழ்வுகளை கனிசமாக குறைத்துவிட முடியும் என்று கூறப்பட்டது. கடந்த 30 ஆண்டுகள் அனுபவத்தை
கருத்தில் கொண்டு பார்த்தால் அத்தகைய அனைத்துக் கூற்றுக்களும் சிதைந்துவிட்டன. தொழிலாளர் ஏற்கனவே
பெற்றிருந்த நன்மைகளும் குறைக்கப்பட்டு, 1920களுக்கு பின்னர், முன்பு எப்போதும் கண்டிராத அளவிற்கு சமூக சமத்துவமின்மை
அதிகரித்துவிட்டன. இந்த காலத்தில் ஆளும் மேல்தட்டின் அரசியல் குறிக்கோள்களையும் பொருளாதார தேவைகளையும்
கருத்தில் கொண்டு, ஜனநாயக கட்சியினர் வலதுசாரி பக்கம் திரும்பிவிட்டனர்.
கிளின்டனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் கொண்டுவர முயன்ற கண்டனத் தீர்மானத்தின்
அடிப்படையாக அமைந்திருக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான சதியை அம்பலப்படுத்த ஜனநாயக கட்சியினர் மறுத்துவிட்டனர்.
2000ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு முறையையே மோசடி செய்யும் வகையில் நடைபெற்ற காரியங்களை ஜனநாயக
கட்சி ஏற்றுக்கொண்டது. இவை ஜனநாயக உரிமைகளை காத்து நிற்பதில் அக்கட்சிக்கு உறுதிப்பாடு இல்லை என்பதை
காட்டுகிறது.
இந்த பரிணாமம் தற்செயலாக நடந்து விட்ட ஒன்றல்ல. ஜனநாயக கட்சியின் முதலாளித்துவ
தன்மையின் பதிலாகத்தான் அமைந்துவிட்டது. குடியரசு கட்சியுடன் ஜனநாயக கட்சிக்கு உள்ள வேறுபாடுகள்
வெறும் அரசியல் தந்திரம் சம்பந்தபட்டது. உள்நாட்டில் பொருளாதார வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்ற நிதி ஆதிக்க
குழுவின் அடிப்படைகள் மற்றும் வெளிநாட்டில் மூலோபாய நலன்கள் ஆகிய பிரச்சனைகளில் இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டு
செயல்படுகின்றன.
அமெரிக்க தொழிலாளர்கள் ஜனநாயக கட்சிக்கு அரசியல் அடிப்படையில் கீழ்ப்படிந்து
நடப்பது தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியில் மைய வரலாற்று பிரச்சினையாகும். இந்த பிரச்சினையை நாம்
தவிர்த்துவிட முடியாது.
நீண்ட வரலாற்று அனுபவம், ஜனநாயகக் கட்சியிலிருந்து தொழிலாளர்கள் விலகி வரவேண்டும்
என்பதை வலியுறுத்துகின்றது. மீண்டும் மீண்டும் முற்போக்கான சமுதாய இயக்கங்கள்--தொழிற்சங்கங்கள் நடத்திய
போராட்டம் முதல், சிவில் உரிமைகளுக்கான இயக்கம், வியட்நாம் போருக்கெதிரான இயக்கம் வரை-- ஆளும் வர்க்கத்தின்
தேவைகளுக்கு இந்த கட்சிக்கு கீழ்ப்படிந்து நடந்துகொண்டு வந்ததால் தொழிலாளர்களை முட்டுச்சந்தில் கொண்டு வந்து
விட்டது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த சுதந்திரமான கட்சியை அபிவிருத்தி செய்வதில் ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ.
எதிர்ப்பு தெரிவித்ததுடன் பிற்போக்குப் பங்கை ஆற்றின. அந்த தொழிற்சங்கங்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால்
அந்த தொழிற்சங்கங்களின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. தற்போது தொழிற்சங்கங்கள் கம்பெனி
நிர்வாகத்தின் அதிகாரத்துவ ஏஜெண்ட்டுகளாக மாறிவிட்டன.
ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்போர்கள் அனைவரும் ஜனநாயக உரிமைகளை
பறிப்பதை மற்றும் உழைக்கும் மக்களது உரிமைகளை பறிப்பதை கண்டிக்கும் அனைவரும் ஜனநாயக கட்சியை புறக்கணிக்க
வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்த கட்சியை "சீர்திருத்த" முன்மொழிபவர்கள் பாசாங்கு செய்னவர்களாக
இருக்கின்றனர் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்களாக இருக்கின்றனர்.
ஆயினும், தற்போது தேவைப்படுவது பசுமைக் கட்சி மற்றும் இதர சீர்திருத்த கட்சிகள்
போன்ற புதிய அல்லது மூன்றாவது முதலாளித்துவ கட்சிகள் அல்ல. முதலாளித்துவ முறையின் பொருளாதார
அடிப்படையை -உற்பத்திச் சாதனங்களில் தனிச்சொத்துடைமையை மற்றும் இலாபத்திற்கான உற்பத்தியை தாக்குகின்ற
கட்சியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடைய முடியும். சமுதாயத்தின்
செல்வத்தை மேல்தட்டு ஏகபோகமாக தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பதை எதிர்க்கும், பொருளாதார வாழ்வின் மீது
உழைக்கும் மக்களது ஜனநாயக கட்டுப்பாட்டிற்கான ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சமூக சமத்துவத்தை
சாதிக்கும் அதாவது சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கட்சியாக அது கட்டாயம் இருக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்குப் போராட இந்த மாநாடு உறுதியளிக்கிறது.
முதலாளித்துவ முகாமில் தங்களது இரண்டு கால்களை அல்லது ஒரு காலை மட்டுமே ஊன்றிக்கொண்டு நிற்கின்ற ஜனநாயக
கட்சி மற்றும் எல்லா கட்சிகளிலிருந்தும் முறித்துக் கொள்ளுமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது. சர்வதேச மற்றும்
சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியல் அதிகாரம் பெற போராடும். சோசலிச சமத்துவக் கட்சியை
தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் கட்சியாக உருவாக்கும் பணியை மேற்கொள்ள நாங்கள் உறுதியளிக்கிறோம்.
மாநாட்டுத் தீர்மானம் : ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு
புஷ் நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் மீதாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி
வருகின்றது. செப்டம்பர் 11 பயங்கரவாதிகளின் தாக்குதலை சாக்காக பயன்படுத்தி, அமெரிக்காவின் தேசப்பக்தி
சட்டம், உள்நாட்டு பாதுகாப்புச்சட்டம் மற்றும் இதர பிற்போக்கு நடவடிக்கைகள் மூலம் புஷ் நிர்வாகம் ஒரு போலீஸ்
அரசுக்கான கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதன் ஒரு அத்தியாவசியமான பகுதி அமெரிக்க
அரசியல் சட்டத்தின் மீதான போர் என்று நிரூபித்திருக்கிறது. புஷ் அரசு நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உடந்தையாக
இருந்து ஒத்துழைப்பதுடன் அமெரிக்க ஊடகங்களின் ஆதரவோடு உள்நாட்டில் வேவு பார்ப்பது, சோதனைகள் மற்றும்
பறிமுதல்கள், விசாரணையில்லாமல் எவரையும் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளை மிகப்பெரும்
அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு
அமெரிக்க அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள ஆட்கொணர்வு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. குற்றச்சாட்டுக்கள் எதுவும்
கூறப்படாமல் காலவரையின்றி எந்த ஒரு தனி மனிதரையும் சிறையில் வைத்திருக்கக்கூடாது என்ற அரசியல் சட்ட
உத்திரவாதம் பொருந்தாது. செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்கு பின்னர் வெளிநாட்டு மக்களையும் உள்நாட்டு மக்களையும்
அவர்கள் தேசிய பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்படுகிறார்கள் என அரசாங்கம் கருதுமானால் அவர்களை தனிமைச்சிறையில்
வைத்திருக்க அரசாங்கத்துக்கு உரிமை உண்டு என்று இப்போது உறுதியாய் கூறி வருகிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளை சார்ந்த மக்களை பயங்கரவாதம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் எவர் மீதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றம் புரிந்ததற்கான
குற்றச்சாட்டு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இவர்களில் மிகப்பெரும்பாலோர் எந்த விதமான விசாரணையும்
இல்லாமல் நாடு கடத்தப்பட்டனர்.
ஈராக்கிற்கு எதிரான போர் தொடங்கியதும் எஃப். பி. ஐ அமெரிக்காவில் வாழ்ந்து
கொண்டிருக்கும் 11,000 ஈராக்கிய மக்களை விசாரனை செய்வதற்கான திட்டங்களை அறிவித்திருக்கிறது. விரைவில்
ஈராக்கிய அல்லது மற்றவர்களுக்கான விசாரனை முகாம் நிறுவப்படலாம்.
இரண்டு அமெரிக்க குடிமக்களான ஜோஸ் படில்லா
(Jose Padilla) மற்றும் யாசர் எசாம் ஹம்தி
(Yaser Esam Hamdi) இருவரும் எதிரி போராளிகள்
என்று காலவரையின்றி காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். தெற்கு கரோலினா கடற்படை முகாம் பகுதியில் 10 மாதங்களாக
தனிமை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் பாடில்லா தனது வக்கீலை சந்திப்பதற்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். இது
தவறென மத்திய அரசு, நீதிமன்றத்தில் அப்பில் செய்யும் என்று அறிவித்திருக்கிறது.
பாலஸ்தீன போராளி பேராசிரியர் சமி அமீன் அல் அரியன் மற்றும் பிற மூன்று பேர்
"பயங்கரவாத சதி குற்றச்சாட்டின்" கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலும் கைது செய்யபட்டவர்களின்
அரசியல் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு
நாடான இஸ்ரேல் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை கிரிமினல் குற்றமாக்கும் நடவடிக்கை இது.
தேசபக்தி சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள ஏனைய மிகவும் கேடான விதிமுறைகள்
மத்தியில், எப்.பி.ஐ பயங்கிரவாதி என்று சந்தேகிப்பவர் தொடர்பான பள்ளிக்கூட பதிவேடுகள், நூலக பதிவேடுகள்
ஆகியவற்றை தாக்கல் செய்துவிட வேண்டும். அது மட்டும் அல்ல செய்தி பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்திய
விவரங்கள், புத்தக கடை ரசீதுகள், பத்திரிக்கையாளர்களின் பிரசுரிக்கப்படாத குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள்
உள்ளடங்கலான "வர்த்தக பதிவேடுகளையும்" அதிகாரிகள் கோரிப் பெறலாம்.
உள்நாட்டு பாதுகாப்பு மசோதாவின் அடிப்படையில் அமெரிக்க கூட்டாட்சிக்கான மத்திய
பாதுகாப்பு ஏஜென்ஸி உருவாக்கப்பட்டது. இதில் 22 கூட்டாட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. மற்றும்
1,70,000 ஊழியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். தற்போது தனித்தனி பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதை
ஒருங்கினைத்து ஒரே மத்திய அமைப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். "முழு தகவல் விழிப்புணர்வு" என்று தன்மையாய்
பெயரிடப்பட்ட, மசோதாவின் ஒரு விதியின் கீழ், மத்திய அரசாங்கம் தனி மனிதர்களின் கிரடிட் கார்டு கொள்முதல்கள்,
மருத்துவ சிகிச்சை விவரங்கள், சுற்றுபயண விவரங்கள், பத்திரிக்கை சந்தாக்கள், நுலகத்தை பயன்படுத்திய விதம்,
இணைய தளம் மற்றும் ஈ மெயில் விவரங்களை திரட்டுவதற்கு அனுமதிக்கப்படும்.
கியூபாவில் உள்ள குவாண்டானமோ குடா முகாமில் 660 கைதிகள் சட்டவிரோதமாக
காவலில் வைக்கப்பட்டிருப்பதன் மூலம் போர் கைதிகளை நடத்துவது தொடர்பானதில், அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும்
ஜெனிவா ஒப்பந்தங்களை மீறுவதை எடுத்துக்காட்டி இருக்கின்றன. ஆப்கனிஸ்தானில் பிடிபட்ட கைதிகளை சித்ரவதை செய்தார்கள்,
அதன் விளைவாய் சிலர் இறந்துவிட்டார்கள். மற்றவர்களை மிகக் கொடுரமான புலனாய்வு முறைகளை மேற்கொள்ளும்
மூன்றாவது தரப்பு நாடுகளிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது. அமெரிக்க பிரஜைகள் அல்லாதவர்கள் பயங்கிரவாதிகளோடு
தொடர்பு உள்ளவர்கள் என்ற குற்றம் சாட்டி அவர்கள் மீது விசாரணை நடத்துவதற்காக நிர்வாக அதிகாரத்தை
பயன்படுத்தி புஷ் இராணுவ நீதிமன்றங்களை அமைத்திருக்கிறார். அதில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு அடிப்படை சட்டப்
பாதுகாப்பு இல்லை.
ஈராக் போருக்கு எதிராக கண்டனங்கள் எழுவது உள்நாட்டில் ஒடுக்குமுறை முன்னெடுக்கப்படுவதை
அர்த்தப்படுத்தும். 1960களின் கடைசியில் வியட்நாம் போருக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தவர்களை எதிரிகளாக
கருதி நிக்ஸனது வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுத்தது இகழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. அவரை விட மிகவும்
பிற்போக்குவாதியாகவும் வன்முறையில் நாட்டம் உடையவராகவும் காணப்படுகிற புஷ் வெள்ளை மாளிகை என்ன நடவடிக்கை
எடுத்துக் கொள்ளப் போகிறது. புஷ் நிர்வாகத்தில் சிலர் அவர்களின் (Kent
State massacre) கொடுரமான படுகொலை நடவடிக்கைகளில் நாட்டம் உடையவர்கள் என்பதில்
சந்தேகம் இல்லை. விரைவில் அத்தகைய நடவடிக்கைகள் தொடரலாம்.
உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் டொம் ரிட்ஜ்
(Tom Ridge) "பயங்கரவாத எச்சரிக்கை முன்னறிவிப்பு"
கொடுத்திருக்கிறார். அமெரிக்க மக்களை பாதுகாப்பது அதன் நோக்கம் அல்ல. மக்களுக்கு திசைவிலகச் செய்து
ஊடகங்கள் மற்றும் ஜனநாயக கட்சிக்காரர்களை புஷ் இன் கொள்கைகளுக்கு எந்த விதமான எதிர்ப்பையும் சகித்து
கொள்ள மாட்டோம் என்று எச்சரிப்பதுதான் அதன் நோக்கம். பொது மக்கள் எதிர்ப்பு உருவாகும்போது அதை முறியடிப்பதற்கு
ஒரு சாக்காக இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே ஒரிகன் மாநில குடியரசு கட்சி
கீழ்சபை உறுப்பினர், "வன்முறை ஆர்பாட்டக்காரர்களை" பயங்கரவாதிகள் என்று வரையறை செய்யும் "அவர்களை
ஆயுள் தண்டனைக்கு" உள்ளாக்க வகைசெய்யும் ஒரு சட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்.
2001 செப்டம்பர் 11 க்கு பின்னர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு
பயங்கரவாத நடவடிக்கை ஜனநாயக கட்சி தலைமை மீது நடத்தப்பட்ட ஆந்த்ராக்ஸ் தாக்குதல். அமெரிக்காவின் தேசிய
பாதுகாப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள சிலரால் இந்த தாக்குதல் நடத்திருக்ககூடும்.
செப்டம்பர் 11 தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தீவிரமான விசாரணை
எதையும் எப்போதும் நடத்தியதில்லை. அந்த துயர நிகழ்ச்சிக்கு, ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது கூட்டாளிகளை
அமெரிக்கா மிகப் பெரும் அளவில் கண்காணிப்பு செய்து கொண்டிருந்த நேரத்தில் தாக்குதல் எஇபபடி நடந்தது என்பதற்கு
எவரும் நம்பகத் தன்மையுள்ள விளக்கத்தை தரவில்லை. அத்தகைய விபரங்கள் இல்லாமை மூடிமறைப்பு மற்றும் சதி
பற்றி நாற்றம் எழுப்புகிறது. அமெரிக்க மக்களது பாதுகாப்பு பற்றி அரசாங்கம் கவலை கொண்டிருப்பதாகக் கூறுவது
தற்போது மக்களிடையே எள்ளி நகையாடப்படுகிறது.
ஜனநாயக உரிமைகள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மரணதண்டனை
நீடிக்கிறது. கருச்சிதைவு உரிமை மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் அமெரிக்க சமுதாயத்தில்
நடந்து வரும் அடிப்படை மாற்றமாகும். இறுதி ஆய்வில் பார்த்தால் அது சமூக சமத்துவமின்மையின் கடுமையான அதிகரிப்பு
மற்றும் அமெரிக்க அரசியல் அமைப்பு சிதைந்து கொண்டு வருவதன் விளைவாகும். ஏழை பணக்காரர்களுக்கு இடையே
மிகப் பெரும் அளவிற்கு சமூக இடைவெளி வளர்ந்து கொண்டே போவதால் அரசியல் அமைப்பிற்குள்ளே ஜனநாயக உரிமை
பற்றி கடுமையாக விவாதிக்கப் படுவதில்லை.
போர் மற்றும் சமூகவேலைத் திட்டங்களை அழித்தல் உள்பட மக்கள் விரோதக் கொள்கைகளைப்
பின்பற்றுவதற்கு, பொதுமக்களது அடிப்படை உரிமைகளை ஆளும் மேல்தட்டினர் தங்களுக்கு தடைக்கல்லாகக் கருதுகின்றனர்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்விக்கு அடையாள சின்னங்களாக கருதப்படுவது ஆளும் வட்டாரங்களில் வளர்ந்து
கொண்டு வரும் சர்வாதிகாரப் போக்குகள் ஆகும். அதன் மக்களது சமுதாய பிரச்சனைகளுக்கு இவ்வமைப்பு முறையில்
தீர்வுகள் இல்லை, சிறைச்சாலை போலிஸ் மற்றும் போர்தான் உண்டு.
செப்டம்பர் 11க்கு பின்னர் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குகின்ற நடவடிக்கை ஒரு சர்வதேச
இயல்நிகழ்ச்சியாய் ஆனது. மக்களது அடிப்படை உரிமைகளை உலக முதலாளித்துவம் சகித்துக் கொள்ளாது என்பதை
விளக்கிக்காட்டியது. ஜனநாயக கட்சி, புஷ் நிர்வாகம் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உடந்தையாக இருக்கிறது,
இது தொழிலாள வர்க்கம் தனது அடிப்படை உரிமைகளை தற்காத்துக் கொள்ள சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்றை
உருவாக்கியாக வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்காவில் குடியேறி உள்ள மக்கள் மீது செப்டம்பர் 11க்கு பின்னர் நடாத்தப்பட்ட
தாக்குதல்களை இந்த மாநாடு கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறது.
சமி அமீன் அல் அரியன் (Sami Amin Al-Arian) மீது
போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற மாநாடு கோருகிறது.
தேசபக்தி சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை உருவாக்கப்
பட்டதையும் மாநாடு மேலும் கண்டிக்கிறது.
அமெரிக்கா, ஜெனிவா ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று கோருகிறது. போர்க்
கைதிகளுக்கு எல்லா சட்ட உரிமைகளும் வழங்க வேண்டும் என்று மாநாடு கோருகிறது.
செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் குறித்து நியாயமான நடுநிலை விசாரணை நடத்த மாநாடு
கோருகிறது.
அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களது ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றவும் அவர்களுக்கு
பாதுகாப்பு அளிக்கவும் சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று மாநாடு மேலும் அழைக்கிறது.
See Also :
சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய
சர்வதேச மாநாடு
கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்
ஈராக்கிற்கு
எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்
Top of page
|