World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush administration puts Syria in its gunsights

புஷ் நிர்வாகத்தின் அடுத்த இலக்கு சிரியா

By the Editorial Board
16 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கினுடைய பெரும்பகுதியில் அழிவையும் குழப்பத்தையும் உண்டாக்கி, பாக்தாத்தை ஆக்கிரமித்துக்கொண்ட ஆரம்ப வெற்றிக்களிப்பில் இருக்கும் புஷ் நிர்வாகம் தனது இலக்குகளை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறது. உடனடியாக அமெரிக்க டாங்கிகள் டமாஸ்கஸ்ஸை நோக்கி புறப்படாது என்றாலும் அண்மையில் புஷ் மற்றும் அவரது மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகள் மிரட்டலை விடுக்கும் வகையில் அமைந்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. அந்த மிரட்டல் என்னவென்றால் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு நிபந்தனையற்று சிரியா அடிபணியவேண்டும். அல்லது ஈராக்கிற்கு ஏற்பட்ட கதிதான் அதற்கும் உருவாகும் என்பதாகும்.

திங்களன்று வாஷிங்டனில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல், சிரியாவினுடைய ஆட்சிக்கு எதிராக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பட்டியலை மீண்டும் வலியுறுத்திக் கூறினார். ஆனால் அவர் எந்தக் குற்றச்சாட்டிற்கும் ஒரு சிறு ஆதாரம்கூட காட்டவில்லை. ''புதிய சூழ்நிலையில் அதன் நடத்தையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று நாம் நம்புகிறோம். சிரியாவில் யார் தஞ்சம் அடைகிறார்கள் என்பது தொடர்பாகவும், மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் தொடர்பாகவும் மட்டுமல்ல குறிப்பாக, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது தொடர்பான நடவடிக்கையையும் சிரியா மறு பரிசீலனை செய்யவேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னணி ஈராக் தலைவர்கள் அந்நாட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அமெரிக்கா கூறிவருவது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அந்தக் கேள்விக்கு பவல் எந்தவிதமான விபரங்களையும் தர முடியவில்லை. ''எவ்வளவு பேர் ஈராக் எல்லையிலிருந்து தப்பி சென்றிருக்கக்கூடும் என்பதை நான் துல்லியமாக கணக்கிட்டு சொல்ல முடியாது'' என்று குறிப்பிட்ட பவல், இராஜாங்கத்துறையில் நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படும் என்றும், பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இராணுவ நடவடிக்கைக்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதை கோடிட்டு காட்டிய பவல், ''சிரியாவை பொறுத்தவரை நாங்கள் இராஜங்கத்துறை, பொருளாதார அல்லது இதர வகையான நடவடிக்கைகள் குறித்து முன்னேறும்போது அதுபற்றி ஆராய்வோம்'' என்று குறிப்பிட்டார்.

ஞாயிறன்று ஜனாதிபதி புஷ் தனது ஆதரவை பிரகடனப்படுத்தி ''சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று அறிவித்ததோடு, சிரியா அமெரிக்காவோடு ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் எச்சரித்தார். அடுத்த நாள் வெள்ளை மாளிகை அதிகாரி அரி பிளைசர் சிரியாவின் மறுப்புக்களை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்துவிட்டு, சிரியாவிடம் இரசாயன ஆயுத திட்டத்தை உறுதிப்படுத்துகின்ற சான்றுகள் இருப்பதாக மட்டுமே கூறினார். மேலும் சிரியாவை ''போக்கிரி அரசு'' என்று முத்திரை குத்தியதுடன், அதன் நடவடிக்கைகளின் விளைவு குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என்றும் எச்சரித்தார்.

சிரியாவிற்கு இராணுவ மிரட்டலை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட்டும் இதில் இணைந்துகொண்டு கருத்து தெரிவித்தார். ''சில ஈராக்கியர்கள் சிரியாவிற்குள் புகுந்து கொண்டு அங்கு தங்கியிருப்பதற்கும் மற்றும் சிலர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக'' மீண்டும் ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். ''சிரியாவில் இரசாயன சோதனைகள் நடப்பதை கடந்த 12, 15 மாதங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம்'' என்று கூறிய அவர் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்தவிதமான விபரத்தையும் தரவில்லை.

சென்ற மாதம் சிரியாவிற்கு எதிரான சொற்போரை ரம்ஸ்பீல்ட் தொடக்கி வைத்தார். இரவில் தெளிவாக பார்க்க உதவும் மூக்குக் கண்ணாடிகள் உட்பட ஈராக்கிற்கு மிகவும் நுட்பமான இராணுவ தொழில்நுட்பத்தை டமாஸ்கஸ் வழங்கிவருவதாக கூறிய அவர், ''இத்தகைய இராணுவ சாதனங்கள் வழங்கப்படுவது பகை நடவடிக்கைகள் என்று நாங்கள் கருதி, சிரிய அரசாங்கமே அதற்கு பொறுப்பு என்று எடுத்துக்கொள்வோம்'' என்றார். CBS தொலைக்காட்சி நிகழ்ச்சியான நாட்டை சந்திப்போம் (Face the Nation) என்ற ஞாயிறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்ஸ்பீல்ட் ''சிரியா அரசாங்கம் ஏராளமான தவறுகளை செய்துகொண்டிருக்கிறது. எமது பார்வையில் ஏராளமான தவறான முடிவுகளை அது எடுத்திருக்கிறது'' என்று அறிவித்தார்.

ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்க் குழாய் இணைப்பை அமெரிக்க இராணுவ பொறியாளர்கள் ஒருதலைப்பட்சமாக மூடிவிட்டனர் என்று செவ்வாய் அன்று ரம்ஸ்பீல்ட் அறிவித்தார். இந்த நடவடிக்கையானது சிரியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரிடியாக அமைந்துள்ளது. ஈராக்கிற்கு பொருட்களை விற்பனை செய்து அவற்றிற்கு பதிலாக எண்ணெயை ஈராக்கிடமிருந்து பெற்று ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர் வரை சிரியா லாபம் சம்பாதித்து வந்தது.

டமாஸ்கஸிற்கு எதிராக நேரடி இராணுவ மிரட்டல் விடுவதை அமெரிக்க அதிகாரிகள் தவிர்த்து வந்தாலும் போர் தொடுப்பதற்கான சாக்குப்போக்குகளை உருவாக்கி வருகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் பட்டியல் வளர்ந்துகொண்டு செல்கிறது. ஈராக் மீது வாஷிங்டன் ஆக்கிரமிப்பதற்கு உருவாக்கிய சாக்குபோக்குகளுக்கு இணையான சாக்குப்போக்குகளை சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா கூறி வருகின்றது. அதன் உடனடி நோக்கம் சிரியாவை மிரட்டிப் பணிய வைக்கவேண்டும் என்பதாக இருந்தாலும், அதில் இத்தகைய மிரட்டல்களில் தவிர்க்க முடியாத அரசியல் அடிப்படை அமைந்திருக்கிறது.

புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மிகத்தீவிரமான நவீன கன்சர்வேடிவ்கள் (Neo-Conservatives) என அழைக்கப்படும் இராணுவவாத சக்திகள் வெளிப்படையாக சிரியாவிற்கு மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு எதிரான போரின் பிரதான கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான ரிச்சார்ட் பேர்ள் ஞாயிறன்று இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூன் என்ற பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார். ஈராக்கின் ''மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை'' சிரியா தனது கையில் எடுத்துக் கொள்ளுமானால் அது ''ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாக'' அமையும் என்று அவர் அறிவித்தார். சிரியா இந்த மிரட்டலை ஒழித்துக்கட்ட தவறுமானால் ''எமது முழு வலிமையான வீச்சை பயன்படுத்துவதை எவரும் நிராகரிக்க முடியும் என்று நான் கருதவில்லை'' என்பதாக அவர் கூறினார்.

அத்துடன், சிரியாவை மட்டுமே இலக்காக கொண்டிருக்கவில்லை என்று பேர்ள் தெளிவுபடுத்தினார். ''அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டிய அளவிற்கு மிரட்டலாக அமைந்திருப்பது எந்த நாடுகள் என்றால், அந்தப் பட்டியல் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அது ஈரான், வடகொரியா, சிரியா, லிபியா மற்றும் இப்படியே நாம் கூறிக்கொண்டே செல்ல முடியும்'' என்று அவர் குறிப்பிட்டார். சமாதான வழிகளை விரும்புவதாக அறிவித்த அவர், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் எந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தப்படும் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தெரிவித்தார்.

வாஷிங்டனின் சிக்கலில் இருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதற்காக சிரியாவின் அதிகாரிகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதுடன் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் மறுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் ''ஆதாரமற்றவை'' என்று சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பாரூக் அல்-சாரா வர்ணித்ததோடு, ஈராக்கில் அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். ''ஏதாவது ஒரு வகை ஆதாரத்தை நீங்கள் தரமுடியும் என்றால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்களிடம் இருக்கின்ற ஆதாரங்கள் என்ன? நீங்கள் எந்த ஆதாரத்தையும் கொண்டு வரவில்லை'' என்று அவர் அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுக்கின்ற முறையில் கூறினார். வாஷிங்டனில், சிரியாவின் துணைத் தூதர் இமாத் முஸ்தபா தமது நாட்டில் சர்வதேச அளவில் ஆயுத சோதனைகளுக்கு அனுமதி வழங்க தயாராகயிருப்பதாக குறிப்பிட்டார்.

சிரியாவிற்கு எதிராக வாஷிங்டன் விடுத்துவரும் மிரட்டல்கள் ஐரோப்பிய நாடுகளின் தலை நகர்களில் குறிப்பாக லண்டனில் பெரிய நெருக்கடியை தோற்றுவித்திருக்கின்றது. சிரியா மீது எந்தவிதமான இராணுவ நடவடிக்கைக்கும் திட்டமிடவில்லை என்று லண்டனில் பிளேயர் அரசாங்கம் மிகவும் கடுமையாக வலியுறுத்திக் கூறிவருகிறது. திங்களன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிளேயர் சிரியா மீது படையெடுப்பு நடத்தப்படலாம் என்ற கவலைகள் ''சதித்திட்ட தத்துவம்'' என்று குறிப்பிட்டார். ''நான் அடிக்கடி அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிரியா மீது ஆக்கிரமிப்பதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன். எந்தத் தரப்பிலிருந்தும் சிரியாவிற்கு எதிரான திட்டமில்லை என்பதுதான் எனக்குத் தெரிந்தவரை உண்மையாகும்'' என்று பிளேயர் குறிப்பிட்டார்.

ஆனால் நேற்றைய கார்டியன் பத்திரிகை, டமாஸ்கஸ் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சங்கள் ஆதாரம் இல்லாதவையாகத் தோன்றவில்லை எனத் தெரிவித்தது. சிரியா தொடர்பாக கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், அண்மை வாரங்களில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்ட் சிரியாவில் போர் நடத்துவதற்கான அவசரத் திட்டங்களை ஆராயுமாறு கட்டளையிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாஷிங்டனிலிருந்து பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கின்றன. இதை சிரியா மீது போர் தொடுப்பதற்கு தேவையான அடிப்படைகளை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு வருகின்ற அறிக்கைகள் என்று அந்தக் கட்டுரை விளக்குகிறது.

''ரம்ஸ்பீல்டின் கொள்கை தொடர்பான துணை அமைச்சர் டாக் பெய்த் (Doug Feith) மற்றும் பென்டகன் சிறப்பு அலுவலக பிரிவுத் தலைவர் வில்லியம் லூட்டி ஆகிய இருவரும் சிரியா மீது போர் தொடுப்பதற்கான அடிப்படையை உருவாக்கும் அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சதாம் ஹூசேனுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் சிரியாவின் பங்கு, மத்திய கிழக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் அதன் தொடர்புகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதில் சிரியா மிகவும் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது ஆகியவை பற்றிய விபரங்கள் அந்த அறிக்கையில் அடங்கியிருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அத்துடன், ஈராக்குடன் போர் தொடுக்கவேண்டும் என்பதை வெள்ளை மாளிகையை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு பெய்த் மற்றும் லூட்டி ஆகிய இருவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள்'' என்றும் இந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

போருக்கான நிர்பந்தம்

''சிரியா பற்றிய பேச்சு எந்தவிதமான முடிவும் இல்லாமல் எங்கோ சென்று கொண்டிருக்கிறது'' என்று கார்டீயன் பத்திரிகை வட்டாரம் கூறியிருக்கிறது. டமாஸ்கஸ்ஸிற்கு எதிராக அமெரிக்கா போருக்குச் செல்லவேண்டும் என்று அதனை நிர்பந்திக்கும் அம்சங்களும், மற்றும் புஷ் நிர்வாகம் சிரியாவிற்கு எதிராக நடத்திவரும் இயக்கமும் வெளிப்படையாக அமைந்திருக்கின்றது என்பதை புறக்கணித்துவிட முடியாது. வாஷிங்டனில் இருந்து வெளியிடப்படும் பொது அறிக்கைகள் கடுமையான எச்சரிக்கை விடுப்பதாக அமைந்திருக்கின்றன. மிக விரைவில் ஈராக்கிற்கு பக்கத்து நாடான சிரியா மீது ஆக்கிரமிப்பு நீடிக்கபடலாம் என்பதற்கு உண்மையான சாத்தியக்கூறு உள்ளது என்பதை இந்த கடுமையான எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.

பென்டகனில் உள்ள திட்டமிடுபவர்களைப் பொறுத்தவரை சிரியா மீது ஆக்கிரமிப்பது இராணுவ அடிப்படையில் பொருத்தமானது என்ற வாதம் வைக்கப்படுகின்றது. ஏனெனில் அமெரிக்க துருப்புகளும், ஏராளமான இராணுவத் தளவாடங்களும் ஏற்கனவே அப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளன. ஈராக்கில் மிகப்பெரும் அளவில் நிச்சயமற்ற தன்மையிருப்பதுடன், அந்தநாட்டு மக்களது கடுமையான எதிர்ப்பையும் அமெரிக்கா சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நீண்டகால அடிப்படையில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி இராணுவ அதிகாரிகளினது ஒரு பிரிவினரைப் பொறுத்தவரை, டமாஸ்கஸ்ஸில் உள்ள பாத் ஆட்சிக்கு பதிலாக அமெரிக்காவின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்துவருகிற ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.

இத்தகைய நோக்கமானது குடியரசுக்கட்சியின் மிகத் தீவிரமான வலதுசாரிப் பிரிவுகளிலேயே நீண்ட காலமாக நிலவும் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அதாவது மத்திய கிழக்கை மறு ஒழுங்கு செய்வது என்பது அவர்களின் நீண்ட காலத் திட்டமாகும். இந்த திட்டத்தை நவீன கன்சர்வேடிவ்கள் மிகவும் வெளிப்படையாக விளக்கியுள்ளனர். 1996ம் ஆண்டிலேயே பேர்ள், பெய்த் ஆகியோர்கள் உயர் அரசியல் மற்றும் கேந்திர ஆய்வுகள் அமைப்பின் சார்பில் தயாரித்த அறிக்கையில், இஸ்ரேலில் புதிதாக பதவிக்கு வரும் நேட்டான்யாகு அரசாங்கத்துடன் மேற்கொள்ள வேண்டிய பிராந்திய ஆக்கிரமிப்பு மூலோபாயம் விளக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ''சதாம் ஹூசேனை ஆட்சியிலிருந்து நீக்குவது''. மற்றொன்று ''சிரியாவை பலவீனப்படுத்தி, கட்டுப்படுத்தி ஆக்கிரமித்துக்கொள்வதாகும்''.

நியூயோர்க்கில் செப்டம்பர் 11 ந் தேதி நடைபெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் உடனடியாக தீவிர வலதுசாரி அணியினர் தங்களது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ''புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டக்குழு'' என்ற அமைப்பு புஷ்ஷிற்கு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியது. அந்தக் கடிதத்தில் ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகியவை பயங்கரவாதத்தை ஊக்குவித்து அதனை ஆதரிப்பவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிரியாவும், ஈரானும் உடனடியாக ஹிஸ்புல்லா இராணுவத்தினருக்கு உதவிகள் அனைத்தையும் நிறுத்திவிடவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கோரவேண்டும் என இந்தக்குழு கோரிக்கை விடுத்தது. ஈரானும், சிரியாவும் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டால், அமெரிக்க நிர்வாகம் தகுந்த எதிர் நடவடிக்கைகள் குறித்து ஆராயவேண்டும் என்றும் இந்தக்குழு கேட்டுக்கொண்டது.

மிக அண்மைக் காலத்தில் இந்த பாசிஸ்ட் பிரிவுகளின் செயல் திட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. C.I.A முன்னாள் டைரக்டர் ஜேம்ஸ் வூல்சி என்பவர் பாக்தாத் தகவல்துறை தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாக கூறப்பட்டவர். அவர், ஏப்ரல் 2 ந் தேதியன்று லொஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக (UCLA) மாணவர்களிடையே உரையாற்றும்போது தனது தத்துவத்தை விளக்கினார். அவர், கெடுபிடிப்போரை (Cold War) மூன்றாம் உலகப்போர் என எடுத்துக்கொண்டு, அமெரிக்கா ஏற்கனவே நான்காம் உலகப்போரில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

''நான்காம் உலகப்போரானது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களைவிட நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று நான் நினைக்கிறேன். கெடுபிடிப்போர் 40 ஆண்டுகள் நீடித்தது. இதற்கு அவ்வளவு காலம் நீடிக்காது என்ற நம்புகிறேன்'' என வூல்சி அறிவித்தார். இந்தப் போரில் உடனடி எதிரிகள் என்று அவர் குறிப்பிட்ட பட்டியலில் ஈரானின் மதத் தலைவர்கள் ''பாசிச ஆட்சிகளான'' ஈராக், சிரியா மற்றும் அல் கொய்தா போன்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆகியவை இடம்பெற்றன. அவரது உரையில் எகிப்து ஜனாதிபதி முபாரக் மற்றும் சவூதி அரேபியா தலைவர்களும் இலக்குகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

வூல்சியை பொறுத்தவரை சிரியா மீது போர் தொடுப்பது மற்றும் அதை அமெரிக்காவின் ஒரு பகுதி காலனியாக மாற்றுவது ஆகிய நடவடிக்கைகள் ஒரு விரிவான திட்டத்தின் நடவடிக்கைதான். இஸ்ரேலை இளைய பங்காளியாக சேர்த்துக் கொண்டு மத்திய கிழக்கையும், மற்றும் அதன் பரவலான எண்ணெய் வளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் இந்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. டமாஸ்கஸ்சில் அமெரிக்க பொம்மை ஆட்சியை கொண்டு வருவதற்கு ஏற்கனவே முன் உதாரணம் உள்ளது. லெபனான் ஏற்கனவே இஸ்ரேலின் சிற்றரசாக மாறிவிட்டது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சால் மோபாஸ் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே தனது விருப்பத்தை தெரிவித்துவிட்டார். ''சிரியா சம்பந்தமாக எங்களிடம் நீண்ட கோரிக்கை பட்டியல் ஒன்று இருக்கின்றது. எனவே அந்தக் கோரிக்கைகளை அமெரிக்கர்கள் மூலம் பெறுவதுதான் முறையான நடவடிக்கையாக அமையும்'' என அவர் குறிப்பிட்டார்.

புஷ்ஷிற்கு பெருமளவில் தனிப்பட்ட முறையிலும், பொது மேடைகளிலும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது குடியரசுக் கட்சியிலுள்ள மிகத்தீவிரமான வலதுசாரிப் பிரிவுகள் டமாஸ்கஸ் மீது போர் புரிவதற்கு புஷ் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையிலிருந்து ஏதாவது பின்வாங்கும் சூழ்நிலை உருவாகுமானால், அது அப்பட்டமான துரோகமாக இல்லாவிட்டாலும் அனுமதிக்க முடியாத பலவீனத்தின் அடையாளம் என்று இந்தக் குழுவினர் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த தீவிரவாதிகள் மறைமுகமாக ஒரு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். 1990-91 வளைகுடாப் போரில் பாக்தாத் மீது படையெடுத்துச் செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை சீனியர் புஷ் தவறவிட்டதைப் போல், சிரியா மீதான ஆக்கிரமிப்பிலிருந்து புஷ் எந்தவகையிலும் பின்வாங்கிவிடக்கூடாது என்று உள்ளார்ந்த இயக்கத்தை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

சிரியா மீதான போரை எதிர்ப்பதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகள் புஷ் நிர்வாகத்தையும் முந்துகின்ற அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாப்-கிரஹாம் (Bob Graham) ஆர்லென்டோ சென்டினல் பத்திரிகைக்கு வாரக் கடைசியில் அளித்துள்ள பேட்டியில் ''ஆப்கானிஸ்தானிலிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்குள் நாம் ஒரு சில தொலைதூர இலக்கு ராக்கெட்டுகளை வீசினோம்.... அதே நடவடிக்கையைத்தான் நாம் சிரியாவுடன் செய்யவேண்டியிருக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோன்று இதர அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் மிகுந்த மிதவாத அணுகுமுறையைக் கொண்டவர்கள். ஆனால், ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை ஈராக் விஷயத்தில் அது நடந்து கொண்டதைப்போல் சிரியா விவகாரத்துடன் புஷ் நிர்வாகம் ஏதாவது தாக்குதல் நடத்துமானால், அதை வேகமாக ஜனநாயகக்கட்சி ஆதரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உறுதியாகப் பார்த்தால், சிரியா மீதான ஆக்கிரமிப்பிற்கு உந்து சக்தியாக விளங்குவது என்னவென்றால், அமெரிக்காவிற்குள்ளேயே நிலவுகின்ற மிகத் தீவிரமான சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உள்நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை சமாளித்து விடமுடியும் என்ற அற்பத்தனமான நம்பிக்கையுடன் புஷ் நிர்வாகம் ஈராக் போரில் மூழ்கியுள்ளது. உள்நாட்டு கொள்கைகளின் சூறையாடல் தன்மையிலிருந்து பொதுமக்கள் கவனத்தை திசைதிருப்பவும், உள்நாட்டில் பெருகிவரும் வறுமை மற்றும் ஏற்றத் தாழ்வுகளால் எழுந்துள்ள சமூக கொந்தளிப்புகளை வெளிநாடு நோக்கி திசை திருப்பவும் ஈராக் போரில் புஷ் நிர்வாகம் இறங்கியது. ஆனால், அவர்களால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியவில்லை. வாஷிங்டனுக்கு இதைவிட மாற்று வழிகள் இல்லாததால், அது மேலும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

இதுதான் தவிர்க்க முடியாத இரக்கமற்ற இராணுவவாதத்தின் தர்க்கவியல் ஆகும். பதவியில் நீடித்திருக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியின் காரணமாக புஷ் நிர்வாகம் ஒன்றில் போரில் ஈடுபடுகிறது அல்லது அடுத்த போருக்கு திட்டமிடுகிறது.

Top of page