ஈராக்கினுடைய அருங்காட்சியகங்கள் சூறை: பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் எதிராக அமெரிக்கா
போர் புரிகிறது
By Patrick Martin
16 April 2003
Back
to screen version
ஈராக்கினுடைய அருங்காட்சியகங்களும் மற்றும் தேசிய நூலகங்களும் சூறையாடப்பட்டதன்
மூலம் அதனுடைய பெரும்பான்மையான கலாச்சார பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. புஷ் நிர்வாகம்தான் இந்த வரலாற்று
குற்றத்திற்கு பொறுப்பாகும்.
ஈடுசெய்ய முடியாத கலைச் சின்னங்கள் அமெரிக்க குண்டு வீச்சுக்கள் மற்றும் ஏவுகனைத்
தாக்குதல்களால் சேதம் அடையக்கூடும் அல்லது ஈராக் அரசாங்கம் நீக்கப்பட்ட பின்னர் உருவாகின்ற குழப்பத்தில் பாதிக்கப்படலாம்
என்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அதை தடுப்பதற்காக
அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்காமல்விட்டது, 1954 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
ஹேக் (Hague)
உடன்படிக்கையை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். இரண்டாவது உலகப்போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய
நாடுகளில் நாஜிப் படைகள் நடத்திய சூறையாடல்களைத் தொடர்ந்து, போர்க் காலத்தில் கலைப் பொக்கிஷங்களை
பாதுகாப்பதற்காக இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.
பாக்தாத்தில் இராணுவம் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டிருந்த பலவகையான தொல்பொருட்களின் எண்ணிக்கை 170.000 ஆகும். அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து
நடைபெற்ற சூறையாடல்களினால் 80 வீதமான தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. சுமேரியா,
அக்காடியா, பாபிலோனியா, அசிரியா மற்றும் சால்டியா தொண்மை நாகரீகங்கள் உட்பட பண்டைக் கால மெசப்பட்டோமியா
நாகரீகங்களின் சின்னங்கள் அனைத்தும் அடங்கிய ஒரே காட்சியரங்காக அந்த அருங்காட்சியகம் விளங்கியது. அந்த
அருங்காட்சியகத்தில் பாரசீகம் மற்றும் பண்டைக்கால கிரேக்க, ரோமானிய சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் பல்வேறு அரபு
அரச பரம்பரை வரலாற்று நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றிருந்தன.
ஹமூராபி (Hammurabi)
சட்ட விதிகள் இந்த அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்களாக
இடம்பெற்றிருந்தன. உலகில் முதலாவது சட்டங்கள் இவை. உலகிலேயே முதலாவது எழுத்து வடிவக் கவிதைகள், கணித நூல்கள்,
வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தன. ஒரு நூலகம் முழுவதும் களிமண்
கல்வெட்டுக்களாக நிறைந்திருந்தன. அவற்றை இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை. அல்லது அவற்றின் வரிவடிவங்களை
கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனென்றால் ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதற்கு அறிஞர்களுக்கு அமெரிக்கா
கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் இந்தக் கல்வெட்டுக்களை அவர்களால் முழுமையாக ஆராய முடியவில்லை.
5.000 ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அலபாஸ்டர்
உருக்வாஸ் (alabaster
Uruk Vase) அங்கு இருந்தது. அது மனித இனத்தில் நடைபெற்ற முதலாவது
மதச் சடங்கை சித்தரிப்பதாக அமைந்திருந்தது. 5.500 ம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணின் முகம் கல்லில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இதுதான் சிற்பக் கலையின் முதலாவது சான்று என்று கருதப்படுகிறது. உலகின் மிகவும் பழமையான செப்பிலான படத்தில்
அக்காடியன் மன்னரின் மார்பு அளவு சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது கி.மு.2300 ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க இழப்பானது அருகாமையில் உள்ள தேசிய நூலகம் எரிக்கப்பட்ட
சம்பவம் ஆகும். அந்த நூலகம் தீயில் எரிந்து போனதால் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள், பதிவேடுகள்,
புத்தகங்கள், ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய காலத்திலிருந்து இன்றுவரை வெளிவரும் பத்திரிகைகளின் தொகுப்பு ஆகியவை அழிந்துவிட்டன.
நூலகத்தின் வாசக அறைகள் மற்றும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குப் பலகைகள் ஆகியவைகளும் தீயினால் எரிந்து
அழிந்து போயின.
இதில் மிகவும் வேடிக்கையான ஓர் அம்சம் என்னவென்றால் போர் தொடங்குவதற்கு முன்னர்
அருங்காட்சியகத்திலிருந்த சில தொல்பொருள் பொக்கிஷங்கள் சதாம் ஹூசேன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின்
இல்லங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது ஒன்றுதான் ஒரே ஒரு நம்பிக்கை. தங்கத்தால்
வடிவமைக்கப்பட்ட பழைய கலைச் சின்னங்களின் பெரும்பகுதி ஈராக் மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில்
பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும்கூட சூறையாடிய பின்பு தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கையை புறக்கணித்தனர்
பாக்தாத், மாசூல் மற்றும் இதர நகரங்களிலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் சூறையாடப்பட்டது
அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியதாக கூறிக்கொள்வதை நம்ப முடியாது. அத்தகைய துயர நிகழ்ச்சி நடக்கக்கூடும் என்று
எதிர்பார்த்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜனவரி
கடைசியில் அறிஞர்கள், அருங்காட்சியக இயக்குநர்கள் மற்றும் வரலாற்று அரும் பொருட்களை சேகரிப்பவர்கள் ஆகியோர்கள்
தூதுக்குழுவாக பென்டகனுக்குச் சென்று ஈராக் தேசிய அருங்காட்சியகம் மற்றும் இதர கலாச்சார பகுதிகளின் சிறப்புக் குறித்து
விளக்கியிருக்கின்றனர். அப்போது இந்த தூதுக்குழுவில் கலந்துகொண்ட ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு
பேட்டியளித்த போது கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: ''சூறையாடல் மிகப்பெரிய ஆபத்து என்பதை நாங்கள் அவர்களிடம்
தெரிவித்தோம். ஈராக் முழுவதிலும் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் நினைவுச் சின்னம் தேசிய
அருங்காட்சியகம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று நான் உணர்ந்தேன். ஈராக்கில் உள்ள கலாச்சார
நினைவுச் சின்னங்களின் ஒவ்வொரு பகுதியும் இந்த தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கிறது''.
அமெரிக்காவின் தொல்பொருள் ஆய்வுக்கழகம் ''எல்லா அரசாங்கங்களும்'' கலாச்சார
சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை அடுத்து அமெரிக்கா
அல்லது பிரிட்டன் அரசாங்கங்களைவிட மிகவும் கடுமையான நடவடிக்கைகளை ஈராக்கிய அரசாங்கம் எடுத்தது. 1991 ல்
முதலாவது பாரசீக வளைகுடாப் போரின் பின்பு நடைபெற்ற கலவரங்களின்போது நடைபெற்ற சூறையாடல்களைத் தொடர்ந்து
ஈராக்கிய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியது.
ஈராக்கில் வரலாறு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை பேணிக்காக்கின்ற நீண்ட
பாரம்பரியம் உண்டு. 1920 களில் பெயரளவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டவுடன் ஈராக்கிய அரசாங்கம் எல்லா வகையான
தொல்பொருள் அகழ்வாராய்ச்சி ஆய்வுகள் பற்றிய விபரங்களையும், தொல் பொருட்களையும், அறிக்கைகளையும்
அருங்காட்சியகத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டது. மிக அண்மைக் காலம்வரை தொல்பொருள் ஆய்வில்
கிடைத்த எல்லா பொருட்களும் அருங்காட்சியகங்களில் பட்டியல் இடுவதற்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென்றும்,
தொல்பொருள் ஆய்வு தொடர்பான நாட்டின் மத்திய புள்ளிவிவர கேந்திரமாக அருங்காட்சியகங்கள் இருக்குமென்றும் ஈராக்
அரசாங்கம் அறிவித்தது.
பாக்தாத் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போகிறது என்ற சூழ்நிலையில் தேசிய
அருங்காட்சியக அதிகாரிகள் தங்களது விலை மதிக்க முடியாத காட்சிப் பொருட்களை பாதுகாப்பதற்கு முன்னேற்பாடுகளைச்
செய்தனர். சில பொருட்களை இரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றனர். பெரும்பாலான கலைப் பொருட்களை அந்தக்
கட்டிடத்தில் பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட பகுதிக்கு அப்புறப்படுத்தினர். பல்வேறு அடுக்குகளாக சிமெண்ட் மற்றும் செங்கற்களால்
அந்த அறைகள் கட்டப்பட்டன. குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்படாத வகையில், அரங்குகளில் இருந்து அப்புறப்படுத்த
முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக உள்ள கலைப்பொருட்கள் பாதுகாப்பாக சுற்றி வைக்கப்பட்டன.
சூறையாடியவர்கள் அரங்குகளில் இடம்பெற்றிருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்
கொண்டனர். அல்லது அழித்துவிட்டனர். அதற்குப் பின்னர் பாதாள அறைகளுக்குள் புகுந்து அவற்றில் இருந்தவற்றையும்
கொள்ளையடித்தனர். அருங்காட்சியக பட்டியல் விபரங்களையும் அழித்து அங்கிருந்த கம்ப்யூட்டரையும் அடித்து நொறுக்கினர்.
ஈராக்கின் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஆபத்து வரக்கூடும் என்ற மிரட்டல் குறித்து பென்டகன்
முன்கூட்டியே அறிந்திருந்தது. சூறையாடல் தொடங்கியதும் தேசிய அருங்காட்சியகத்தை காப்பாற்றுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு
நேரடியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. ஈராக்கின் தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரான ராயிட் அப்துல்ரிதார்
முகம்மது என்பவர் நியூயார்க் டைம்ஸ் நிருபரிடம் தந்துள்ள தகவலின்படி, அருங்காட்சியக சதுக்கத்தில்
இருந்த ஆப்ரகாம் டாங்கிப் பிரிவுக்கு நேரடியாகச் சென்று சூறையாடலை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்று இராணுவத்தினர் முதல் அணியாக உள்ளே நுழைந்த சூறையாடல்
பேர்வழிகளை விரட்டியடித்தனர். அதற்குப் பின்னர் 30 நிமிடம் கழித்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ''அவர்களது
டாங்கிகளை அருங்காட்சியாக மைதானத்திற்குள் கொண்டு வருமாறு நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டு
அங்கிருந்து சென்றுவிட்டனர். அரை மணி நேரத்திற்குப் பின்னர் சூறையாடல் பேர்வழிகள் மீண்டும் அங்கு வந்தனர். அவர்கள்
என்னைக் கொன்று விடுவதாகவும் அல்லது நான் சதாம் ஹூசேனது புலனாய்வு அமைப்பின் ஒற்றன் என்று அமெரிக்கர்களுக்கு
சொல்லி அதன் மூலம் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் மிரட்டினர். எனவே நான் உயிருக்கு
பயந்துகொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன்'' என்று முகம்மது நியூயார்க் டைம்ஸ் நிருபரிடம் தெரிவித்தார்.
''ஒரு நாட்டின் அடையாளச் சின்னம் அதனுடைய மதிப்பு, அந்த நாட்டின் நயத்தக்க
நாகரீகம் ஆகியவை, அந்த நாட்டு வரலாற்றில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் நாகரீகம் இவ்வாறு
சூறையாடப்படுமானால், அந்த நாட்டின் வரலாறு முற்றுப்புள்ளியாகிவிடும். இதை தயவு செய்து நீங்கள் ஜனாதிபதி புஷ்ஷிற்கு
சொல்லுங்கள். அவர் ஈராக் மக்களை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். இது ஈராக்கை விடுவிக்கும் செயல் அல்ல
என்றும், இது வரலாற்றையும் அதன் மக்களையும் இழிவுபடுத்தும் செயல் என்றும் அவருக்கு ஞாபகப்படுத்துங்கள்'' என்று
அவர் மேலும் தெரிவித்தார்.
கலாச்சார அழிவில் அரசியல்
ஈராக்கின் கலாச்சார பொக்கிஷங்களை சூறையாட புஷ் நிர்வாகம் அனுமதித்ததற்கு நேரடியான
வர்த்தக காரணங்கள் உண்டு. போர் தொடங்குவதற்கு முன்னர் பென்டகனில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளை சந்தித்த
பிரதிநிதிகளில் அமெரிக்க கலாச்சார கொள்கைக்குழு பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
(American Council for Cultural Policy - ACCP)
இந்த பணக்காரக் குழுவினர் அரும்பொருள் சேகரிப்பாளர்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனையாளர்கள் ஆவர். கலாச்சார
கலைப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கண்டிப்பான தடையை ஈராக் அரசாங்கம் விதித்திருந்த சட்டத்தை தளர்த்துமாறு
பென்டகன் அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர் என்று ஏப்ரல் 6 ந் தேதி சன்டே
ஹெரால்ட் என்ற ஸ்காட்லாந்து செய்திப் பத்திரிகையில் ஒரு தகவல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவின் பொருளாளர் வில்லியம் பெர்ல்ஸ்டீன் ஈராக்கின் இந்தக் கொள்கையை கண்டித்தார்.
உள்நாட்டுக்குள்ளேயே எல்லா கலைப்பொருட்களையும் வைத்துக்கொள்ளும் ஈராக்கினுடைய கொள்கையை தளர்த்தி
போருக்குப்பின்னர் அமையும் ஈராக்கிய அரசாங்கம், ஈராக் கலைப்பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை
எளிதாக்கவேண்டும் என்றும் முறையிட்டார். அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள கலாச்சார சொத்து அமல் சட்டத்தை
திருத்துமாறு இந்தக் குழு கேட்டுக்கொண்டது. இந்தச் சட்டமானது கலைப் பொக்கிஷங்கள் மற்றும் கலைப்பொருட்களின்
சர்வதேச வர்த்தகத்தை நெறிமுறைபடுத்துகிறது. ''இந்தக் குழு அரசு தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தியதானது
அறிவியலாளரையும், அகழ்வாராய்ச்சியாளர்களையும் மிகவும் பீதியடையச் செய்துவிட்டது. ஈராக்கில் கூட்டணிப் படைகள் வெற்றிபெற்ற
பின்னர், ஈராக்கின் கலைப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு அமெரிக்க அதிகாரிகளோடு
இணைந்து மறைமுக செயல்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்களோ என்ற பயம் வந்துவிட்டது'' என்பதாக ஒரு பத்திரிகை
தகவல் தந்திருக்கிறது.
செவ்வாய்க் கிழமையன்று லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை ஒரு செய்தி
வெளியிட்டிருந்தது. வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஈராக்கினுடைய கலைப்பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர் ''இரகசியமாக
போருக்கு முன்னர் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், ஈராக்கின் தொண்மையான கலைப்பொருட்கள் விரைவில் கிடைக்கும்
என்று அவருக்கு கூறப்பட்டதாகவும், சூறையாடல் பேர்வழிகள் அந்தத் திட்டப்படி செயல்பட்டதாகவும், ஆனால் அத்தகைய
திட்டம் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லையென்று அவர் அனுமானிப்பதாகவும்'' இந்தப் பத்திரிகை தகவல்
தந்தது.
கீழை நாடுகளின் அரும்பொருட்களைப் பற்றிய சுவையை கோடீஸ்வரர்கள் குழுவிற்கு தெரிவித்து
அவர்களை சமாதானப்படுத்த முயல்வது புஷ் நிர்வாகத்தின் இயல்புதான். ஆனால் மிகவும் அடிப்படையாக, அமெரிக்காவின்
ஆளும் தட்டுக்கள் ஈராக்கினுடைய வரலாறு மற்றும் பண்பாட்டு பெட்டகங்களை அழிப்பதற்கு அனுமதிப்பதானது அவர்களின்
அரசியல் மதிப்பு பற்றிய நடவடிக்கையை தெளிவாக காட்டுகின்றது.
ஈராக்கில் காலனி ஆதிக்க பாணியிலான ஒரு ஆட்சியை விரைவில் உருவாக்கி, அந்நாட்டின்
அபரிதமான எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதுதான் அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டதன்
குறிக்கோளாகும். அத்துடன், ஈராக்கிய மக்களை இழிவுபடுத்தி அமெரிக்காவிற்கும் அதன் எடுபிடியாக இருக்கப்போகும்
பாக்தாத் ஆட்சிக்கும் மக்களை அடிபணிந்து நடக்கச் செய்வதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுபோன்ற இழிவுபடுத்தும்
நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஈராக் மக்களினுடைய 7.000 ம் ஆண்டுகள் வரலாற்றோடு தொடர்புபடுத்தும் கலாச்சார
ஆதாரங்களை திட்டமிட்டு அழிப்பதானது, அந்த நாட்டின் தேசிய அடையாளத்தையே அழிக்கும் செயலாகும்.
இதில் துயரமிக்க முடிவு என்னவென்றால், பாக்தாத் நகரத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த
13 ம் நூற்றாண்டு மங்கோலிய கோணிப்பைகள் 21 ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தையும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தையும்
எதிர்த்து தாக்குப்பிடித்து நீடித்து நிற்கமுடியவில்லை என்பதாகும். புஷ் மற்றும் ரம்ஸ்பீல்ட் கம்பெனியினர் புதிய காட்டுமிராண்டிகள்
வடிவமாகவே உள்ளனர். அரைகுறை அறிவாளியான ''ஒரு தலைவர்'' மதவாத பின்தங்கிய மந்தநிலையில் உழன்று
கொண்டிருக்கிறார். ஒரு நிர்வாகம், முன்னாள் காப்ரேட் (CEO)
தலைமை நிர்வாகிகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு பண்டைக்
கால சுமேரிய கலைச்சின்னம் என்பது ஏதோ வரிச்சலுகை பெறுகின்ற ஒரு பொருளாகத் தெரியுமே தவிர, அந்த சுமேரிய
பண்பாட்டு பொக்கிஷம் மனித இனத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான திறவுகோல் என்பது தெரியாது. |