:
ஐரோப்பா
:
ஜேர்மனி
The German government and the Iraq war
A reply to Günter Grass
ஜேர்மன் அரசாங்கமும் ஈராக் போரும்
குந்தர் கிராஸிற்கு பதில்
By Ulrich Rippert
17 April 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
அன்புள்ள குந்தர் கிராஸ்!
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், ஏப்ரல்-7-ந்தேதி, நீங்கள் எழுதியிருந்த,
விமர்சனத்தை படிப்பதில் நான், அக்கறையோடு இருந்தேன். அதே நேரத்தில் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.
ஆம், ஈராக்கிற்கு எதிரான போர் நீண்ட நாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது.
அது, ஒரு ஆக்கிரமிப்பு போர், சர்வதேச சட்டத்தை மீறுவது, பலாத்காரத்தை பயன்படுத்துவதை சர்வதேச சட்ட
வழிமுறைக்கு உயர்த்துவதாக அமைந்திருக்கிறது. ஜேர்மனியின் ARD
தொலைக்காட்சி நிகழ்ச்சியான மொனிட்டரில், சோஞ்சா மிக்கிஷ் குறிப்பிட்டிருப்பதைப்போல்,
"மத்திய காலத்திற்கு நல்வரவு"!
"மற்றொரு அமெரிக்கா"- பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நான் படிப்பதில் பெரிதும்
மகிழ்ச்சியடைகிறேன். பல அமெரிக்கர்கள், எந்த ஜனநாயக உரிமைகளையும், கொள்கைகளையும் தற்காத்து நிற்பதற்காக,
திட்டவட்டமாக தங்களது, உயிரை தியாகம் செய்தார்களோ, அந்த அடிப்படையை போருக்கு எதிரான, அமெரிக்க
எதிர்ப்பாளருடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற அந்த மகத்தான
கிளர்ச்சிகள், அதற்குப் பின்னர், உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு உத்வேகம் ஊட்டிக்கொண்டிருக்கிறது.
அதன் விளைவாக, ஜேர்மனியில் அதே கண்ணோட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ள, தவறியிருப்பது
கண்டு, நான் பெருமளவில் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். மாறாக இந்த நாட்டில் நடைபெற்ற போருக்கு எதிரான,
கண்டனப் பேரணிகளை நீங்கள் ஏதோ ஒரு வகையில் இந்தக் கூட்டாட்சி அரசின் நிலைப்பாட்டோடு, சமப்படுத்தி
பார்க்கிறீர்கள் என்ற கருத்து எனக்கு ஏற்படுகிறது.
நான் குறிப்பாக, உங்களது கீழ்கண்ட வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவிக்க தூண்டப்படுகிறேன்.
"அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரும், மற்றும், வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஸ்ஸரும் மிகுந்த உறுதியோடு நிற்கின்றனர்.
உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் எல்லாவிதமான பகை உணர்வுகளும், அவதூறுகளும் கிளப்பப்பட்டாலும் அவர்கள்
இருவரும் நம்பகத்தன்மையுடன் உறுதியாக நின்றனர். அவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்."
"இந்தப் போரின் அவசியத்தை, தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என ஷ்ரோடரும்,
பிஸ்ஸரும், கூறுவது அதை நடுநிலையோடு ஆராய்ந்தால் முற்றிலும் மாறுபட்ட பொருள் கொடுக்கும். நேரடியாகப் பார்த்தால்,
ஏதோ மிக உயர்ந்த தார்மீக நெறிபோல் தோன்றும். உலகம் அறிந்த, சர்வதேச சட்ட நிபுணர்கள், வாஷிங்டன்
ஈராக் மீது நடத்திய தாக்குதலை, சர்வதேச சட்டத்திற்கு முரணானது என தெளிவாக விளக்கம் தந்திருக்கின்றனர். ஜெனிவாவில்
உள்ள சர்வதேச சட்ட நிபுணர்கள் கமிஷன் (International
Commission of Jurists -ICJ) அறிக்கையில், பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள
தடையை, பகிரங்கமாக மீறும் செயல் என வர்ணித்துள்ளது. அப்படியிருந்தும் இந்த கூட்டாட்சி அரசு, அமெரிக்கர்கள்
ஜேர்மனியின் விமான பாதைகளை, மற்றும் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை எந்தவித கட்டுப்பாடும்
இன்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது, உத்தரவாதம் தந்திருக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம், ஜேர்மன் அரசாங்கம் தானே, ஜேர்மன் மற்றும் சர்வதேச
சட்டத்தை மீறி நடந்துகொள்கிறது, மற்றும் ஐ.நா. சாசனம் ஆக்கிரமிப்பு போருக்கான ஆயத்தம் செய்வதை, நடத்துவதை
மற்றும் ஆதரிப்பதை தடுக்கிறது. அந்தத் தடையையும் மீறி ஜேர்மன் அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது. இந்தப் போர்
ஈராக் மக்களை படுகொலை செய்யும் போர் என்றுதான் வர்ணிக்க முடியும். இதில் பெரும்பகுதி, ஜேர்மனியின் எல்லையில்
இருந்து நடாத்தப்படுகிறது. அண்மை நாட்களில், அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள, மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத்
தளமான ராம்ஸ்ரைனிலிருந்து, மற்றும் ரைன்-மெய்ன் விமான தளத்திலிருந்து பெரிய அமெரிக்க போக்குவரத்து விமானங்கள்
ஒவ்வொரு மணி நேரமும் புறப்பட்டுக்கொண்டும் மற்றும் இறங்கிக்கொண்டும் உள்ளன. அவை, ஈராக் போர் மண்டலங்களுக்கு
ஆயுதங்களை கொண்டு செல்லுகின்றன. அங்கிருந்து காயம் அடைந்த அமெரிக்க போர் வீரர்களை ஜேர்மனிக்கு கொண்டு
வருகின்றன.
ஐரோப்பிய படை நடைமாட்ட கட்டுப்பாட்டு மையம், ஸ்ருட்காட்டில் உள்ளது. அங்கிருந்து
துருப்புகளும், தளவாடங்களும் அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. கணினிகள் மூலம் போர்
ஒத்திகை நடாத்தப்பட்டு போருக்கான நேரடி தயாரிப்புகள் அங்கிருந்து நடத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் இந்த
ஆண்டு தொடக்கத்தில் பென்டகன் மிகப்பெரிய இராணுவ பயிற்சியை கிராஃபென்வோர் என்ற இடத்தில் நடத்தியது.
இவை அத்தனையும் எதை காட்டுகின்றன. இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஜேர்மனி உடந்தை என்பதை காட்டவில்லையா?
ஜேர்மனியில் ஆளும் கட்சிகள் எப்படி இந்த சர்வதேச சட்ட மீறலை ஆதரிக்கின்றன
என்பதை ஆராய்வது மிகவும் பயனுள்ளது. சென்ற மாதம் போர் தொடங்கிய தினத்தில் பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற
குழு, அமெரிக்க மற்றும் பிரிட்டன் போர் விமானங்கள் தளங்களை பயன்படுத்திக்கொள்ளவும் வானில் பறப்பதற்கும்
அனுமதிக்கும் தீர்மானத்தை ஆதரித்தன. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள வாசகத்தை பார்த்தால், "சர்வதேச
சட்டம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனது செயல்பாடு தொடர்பாக மதிப்பீடுகள் எப்படியிருந்தாலும்,
ஒரு அரசியல் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. ஜேர்மனியின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கை தொடர்பான
தவிர்க்க முடியாத அம்சங்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என விளக்குகிறது.
இதை வேறுவார்த்தைகளில் விளக்குவது என்றால், சர்வதேச சட்டத்தைவிட தனது
சொந்த வெளியுறவுக்கொள்கை நலன்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூட்டாட்சி அரசாங்கம் கருதுகிறது.
சரியாக இதே நிலைப்பாட்டைத்தான் புஷ் நிர்வாகமும் எடுத்திருக்கிறது. ஈராக்கைத் தாக்கி அங்கு ஒரு அமெரிக்க
காபந்து அரசை உருவாக்குவதே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பந்தோபஸ்து நலன்களுக்கு உகந்தது என்பதுதான் புஷ்
நிர்வாகத்தின் வாதம். எனவே, பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நடைபெறுகின்ற மோதல்கள், சர்வதேச
சட்டம் சம்மந்தப்பட்டது அல்ல, ஆனால் வெளியுறவுக்கொள்கை நலன்கள் சம்மந்தப்பட்டது. அடிக்கடி இது சம்மந்தமாக
மோதல்கள் ஏற்படுகின்றன. இதற்கிடையில் ட்ரான்ஸ்-அட்லாண்டிக் நட்புறவு பற்றி அடிக்கடி பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இவை அத்தனையும் எங்கே இட்டுச் செல்கின்றன?
கடந்த நூற்றாண்டில், மிகப்பெரும், துயர நிகழ்ச்சிகளை நேரடியாக நெருக்கமாக அனுபவித்து
விமர்சித்த ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. திட்டவட்டமாக இதனால்தான்,
கீழ்கண்ட கேள்வியை பகிரங்கமாகவும் தெளிவாகவும் உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க அரசாங்கம், நடப்பு
ஐரோப்பிய கொள்கையை இவ்வளவு அப்பட்டமாக குறைத்து மதிப்பிடுவது ஏன்? வாஷிங்டனில், தற்போது பதவியை கைப்பற்றியுள்ள
கிரிமினல் கும்பல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், உலகையே சுட்டுப்பொசுக்கிவிடும் என்பதை புரிந்துகொண்டு ஏன் தடுப்பு
நடவடிக்கை எடுக்கவில்லை.
பாக்தாத் நகரை, கைப்பற்றியது பென்டகனில் உள்ள போர் வெறியர்களின் பசியை தணிக்கவில்லை.
ஆனால், அது, போர் வெறியை வளர்த்திருக்கிறது, வெற்றி கொள்ள வேண்டிய, அடுத்த இலக்குகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டன.
புஷ் நிர்வாகம் ஐ.நா. கட்டுக்கோப்பின் கீழ் வந்துவிடும் என்பது, மிகவும் ஆபத்தான கருத்தாகும்.
65 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம், இதே காட்சியை கண்டது. சேம்பர்லன்- ஹிட்லரை
சமாதானப்படுத்துவதற்கு "சலுகை காட்டும் கொள்கையை" கடைபிடித்தது பற்றிய செய்திகளை படிக்கும்போது, தலை
சுற்றத்தான் செய்கிறது.
முதலாவது கூட்டத்தில், பெரிய ஐரோப்பிய அரசுகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு,
ஆஸ்திரியாவில், ஹிட்லரின் நோக்கங்களுக்கு, இணக்கம் தெரிவித்தன. ஆனால், இரண்டாவது கூட்ட நிகழ்ச்சி நிரலில் கூட,
அது இடம்பெற்றிருக்கவில்லை. ஜேர்மனி, ஆஸ்திரியாவை, கொடூரமான முறையில் தன்னோடு இணைத்துக்கொண்டது.
மூன்றாவது கூட்டத்தில் பிரிட்டனும் பிரான்சும், சுட்டென்லாண்டை ஜேர்மனி இணைத்துக் கொண்டதை மன்னித்தன. ஓராண்டிற்குப்
பின்னர், போலாந்து மீது ஜேர்மனி படையெடுத்ததோடு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
இன்று? ஐரோப்பிய அரசுகள், குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய
படையெடுப்பை எதிர்க்கும் வல்லமை அற்றவையாக உள்ளன. ஜனநாயக மற்றும் சட்ட அடிப்படையில் எதிர்க்கின்ற திராணியற்றுள்ளன,
பேர்லினில் மிகப்பெரும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ள வங்கிகள் மற்றும் பெரு வர்த்தக நிறுவனங்களின்
பொருளாதார நலன்கள், அமெரிக்காவின் பெரு வர்த்தக மற்றம் அரசியல் நலன்களோடு, பிரிக்க முடியாத அளவில்
இணைந்துள்ளன. சமூக ஜனநாயக-பசுமை அரசாங்கங்கள் எடுத்துள்ள கோழைத்தனமான நிலை பல்வேறு அரைகுறை
உண்மைகளையும் விட்டுக்கொடுக்கும் போக்குகளையும் கொண்டது. இதனால், அமெரிக்காவில் மிகத் தீவிரமான, வலதுசாரி
அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இத்தகைய வலதுசாரி கட்சிகள், ஐரோப்பாவில் ஆயுதக்குவிப்பு போட்டியை
உருவாக்க முயன்று வருகின்றன. ஆக, ஆயுதக்குவிப்பு போட்டி மிக ஆபத்தான பிளவுகளை தருவது தொடங்கிவிட்டது.
ஷ்ரோடர்-பிஸ்ஸர் அரசாங்கம், நமது நன்றி உணர்விற்கு உரியது என்று கருதுவது தவறு
என நான் உறுதியாக கருதுகிறேன்.
இரண்டாவது அம்சம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இரண்டு தனித்தனி
அம்சங்களில், இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டை, வெளிநாட்டுக் கொள்கையில் சிறப்பாக செயல்படுவதாகவும்,
சமுதாயக் கொள்கையில் தவறு செய்வதாக நாம் மதிப்பீடு செய்துவிடக்கூடாது. 1930-களுக்குப் பின், முன்பு எப்போதும்
இல்லாத அளவிற்கு இந்த அரசு, சமுதாயத்தில் மிக பலவீனமான ஏழை மக்களை பாதிக்கின்ற வகையில் மிக பயங்கரமாகவும்
பகிரங்கமாகவும் நடவடிக்கை எடுத்ததில்லை. அரசாங்கம் சென்ற மாதம் அறிவித்த சிக்கன நடவடிக்கைகளால் சமூக
நல உதவிகள் வெட்டப்பட்டுள்ளன. நீண்ட கால வேலை வாய்ப்பு நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஓய்வூதியம்
பெறுவோர் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நலன்கள் தொடர்ந்து அடிக்கடி குறைக்கப்பட்டு வருவதால், ஒரு
தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் முழுவதும் பொருளாதார ரீதியில் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளனர். சமுதாயத்தில்
மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது சமூக விரோதச் செயல், அது ஒரு அரசியல்
குற்றமும்கூட, இப்படி ஒட்டுமொத்தச் சமுதாயமே, சிதைவிற்கு உள்ளாகின்ற ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் படிப்பினை என்னவென்றால், சமுக நெருக்கடிகளும் போரும்,
நெருக்கமாக பின்னிபிணைந்துள்ளது என்பதுதான். சமுக கொந்தளிப்புகளும் மோதல்களும் பெருகி வருவதால் போர்
ஆபத்து வளர்ந்துவருகிறது. எனவேதான், சமாதான இயக்கத்திற்கு அரசாங்கம் வழிகாட்ட அதை அனுமதிக்கக்கூடாது.
அது ஒரு விரிவான சமுக இயக்கமாக உருவாகவேண்டும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரந்துபட்ட உழைக்கும்
மக்கள் ஒன்றுபட்டு, இந்த சமாதான இயக்கத்தை நடத்தவேண்டும்.
இதில், நீங்கள் இறுதியாக சுட்டிக்காட்டியுள்ள சிசிபஸ்
(Sisyphus) சரியான உதாரணம் அல்ல ஆரம்பத்திலிருந்து
பணிகளை மேற்கொண்ட பெரிய மனிதாபிமானிகள், சோசலிஸ்ட்டுகள் கேட்டுக்கொண்டதைப்போல், போருக்கு எதிரான
எதிர்ப்பை திட்டவட்டமான அரசியல் இயக்கமாக மாற்றியமைக்கவேண்டும். அந்த இயக்கம், கம்பெனிகளின் லாப
நோக்குகளை கருத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த மக்களது நலன்களையும் பேணிக்காக்கின்ற ஒரு சமூக அமைப்பை
உருவாக்க பாடுபடவேண்டும்.
உங்கள் நன்றியுள்ள,
உல்ரிச் ரிப்பேர்ட் தலைவர், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி
* குந்தர்கிராஸ், நோபல்
பரிசுபெற்ற, எழுத்தாளர், த ரின் டிரம் என்ற அவரது நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அண்மையில்
கிராப்வோக் என்ற நூலையும் எழுதியுள்ளார். லொஸ்-ஏஞ்சல் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கும்
கட்டுரையானது, கிழக்கு ஜேர்மனியில் ஒரு பரிசளிப்பு விழாவில் அவர் ஆற்றிய ஏற்புரையில் இருந்து தயாரிக்கப்பட்டது.
Top of page
|