: மத்திய
கிழக்கு :
ஈராக்
US barbarism in Iraq
The way forward in the struggle against
imperialist war
ஈராக்கில் அமெரிக்க காட்டுமிராண்டித்தனம்:
ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தின் முன்னேற்றப் பாதை
Statement of the World Socialist Web Site Editorial
Board and the Socialist Equality Party
11 April 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
இந்த வாரக் கடைசியில் வாஷிங்டன், சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ்
நகரங்களில் நடைபெறவிருக்கும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் விநியோகிப்பதற்காக
கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தில்
PDF கோப்பாக வெளியிடப்படுகிறது. எமது வாசகர்கள் அனைவரையும் நாம் வலியுறுத்தி கேட்டுக்கொள்வது
என்னவென்றால், உங்களது கணினிகளில் இருந்து இந்த
அறிக்கையை
இறக்கம் செய்து, அதன் பிரதிகளை போருக்கு எதிரான பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள், தொழிற்கூடங்கள்
மற்றும் இதர பொது இடங்களில் விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஈராக் படைகளும் மற்றும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்தை பார்த்துக்
கொண்டிருந்த உலக முழுவதிலும் உள்ள மக்கள் அமெரிக்க-பிரிட்டன் ஆக்கிரமிப்பு போர் தொடர்பாக தங்களது வெறுப்புணர்வை
வெளிப்படுத்தும் வகையில் இந்த வாரக் கடைசியில் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். வாஷிங்டன், சான்பிரான்ஸிஸ்கோ
மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களிலும் ஏராளமான மக்கள் ஏப்ரல் 12 - 13 ஆகிய நாட்களில் போர் எதிர்ப்பு
பேரணி நடத்துகின்றனர். புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள கொலைவெறிக் கொள்கைகளில் இருந்து தங்களை விலக்கிக்
கொள்வதற்காகவும், மற்றும் ஈராக் மக்கள் மீது தங்களது நேசமனப்பான்மையை காட்டுவதற்காகவும் இந்த ஆர்பாட்டத்தை
நடத்துகின்றனர்.
இன்றைய தினம் பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும். இந்த
ஆண்டு தொடக்கத்தில் உலக வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரும் போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகள்
நடைபெற்றபோதும், அவை அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த தவறிவிட்டன என்பதாகும். தற்போது நடைபெற்றுள்ள
மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை எதிர்கொள்வதில்
உறுதியான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தை வகுக்கவேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது.
போருக்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றால், தார்மீக வெறுப்பு
உணர்வு மட்டுமே அதற்கு போதுமானதல்ல. அதற்கு அப்பாலும் உறுதியான அரசியல் அடிப்படை கொண்டதாக அது அமையவேண்டும்.
இராணுவமயத்திற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானதுடன், மற்றும் போரை
உருவாக்குகின்ற முறையையும், போரையும் முற்றுப்புள்ளி வைக்கின்ற வல்லமை படைத்த சமூக சக்திகளை அணிதிரட்டுகின்ற
வேலைத்திட்டம் ஒன்றையும் உருவாக்கவேண்டும்.
அமெரிக்க - பிரிட்டன் ஆகியவை ஈராக்கை முறியடிப்பது உலக வரலாற்று அடிப்படையில்
மிகக்கொடூரமான செயலாகும். உறுதிப்படுத்தப்பட்டுள்ள, பலியான பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்கனவே பல்லாயிரக்கணக்கில்
சென்று கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஒரு மணி நேரத்திற்கு 100 பேர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். டாங்கிகள்
நடத்திய தாக்குதல்கள், கிளாஸ்டர் குண்டுகளின் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் காரணமாக குழந்தைகளின்
இரத்தம் மருத்துவமனைகளில் உறைந்து கிடக்கிறது. அதிக நேரம் பணியாற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் மயக்கமருந்து
கொடுக்காமல் காயமடைந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுகிறார்கள். மற்றும் காயங்களை கழுவுவதற்கு தூய்மையான
தண்ணீர்கூட கிடைக்கவில்லை. மனித உடல்கள் தீக்குச்சிகளைப்போல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்படுகின்றன.
பாக்தாத் செல்லும் வீதிகளில் எரிந்துவிட்ட பொதுமக்களின் வாகனங்கள் பரவிக்கிடக்கின்றன.
அந்த வாகனங்களுக்கு அருகில் அதில் பயணம் செய்தவர்களது உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் கொலைகள் மிகவும்
திட்டமிட்டு செய்யப்பட்டவை. ஆக்கிரமிப்பின் தொடக்க நாட்களில் ஈராக் படையினர்கள் மற்றும் சிவிலியன்கள் தரப்பிலிருந்து
எதிர்பாராத எதிர்ப்பை அமெரிக்கப் படைகள் சந்திக்கவேண்டி வந்ததால், மக்களை ஒட்டுமொத்தமாக கொன்று
குவிக்கும் கொள்கையை நிறைவேற்றுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
சில இடங்களில் ''கிடைப்பதைக் கொண்டு எதிர்ப்புகள்'' நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள்தான். அவற்றிற்கு பதிலாக
விமானங்களிலிருந்து குண்டு வீசியும் மற்றும் பேரழிவை உருவாக்கும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினார்கள். வியட்நாம்
போர் யுகத்தில் தற்காப்பிற்கு கிராமங்களையே அடியோடு அழித்து மேற்கொள்ளப்பட்ட இழிவான அதே கொள்கை தற்போது
பெருமளவில் மக்கள் வாழுகின்ற ஈராக் நகரங்களில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அது ''கிராமத்தை காப்பாற்றுவதற்காக
அந்தக் கிராமத்தையே அழிக்கவேண்டியதாயிருக்கிறது'' என்ற கொள்கையாகும்.
கொல்லப்பட்ட ஈராக் படைகளின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியாத நிலை நீடிக்கிறது.
அவர்களில் மிகப்பெரும்பாலோர் போர்ப்பணி ஆற்றுவதற்காக அழைக்கப்பட்ட 17 வயது இளைஞர்கள். இந்த இளைஞர்கள்
அடங்கிய ஈராக் துருப்புக்கள் B-52 போர் விமானங்களினால்
வீசப்பட்ட தரைவிரிப்புக் (Carpet Bombing) குண்டுகளினாலும்
மற்றும் ஹெலிகாப்டர்கள், பீரங்கிகளினால் சரமாரியாக வீசப்பட்ட குண்டுகளினாலும் அழித்து எரிக்கப்பட்டன. இந்த
தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில்
வீரம் செறிந்த போர் புரிந்தனர். அவர்களை டாங்கிகளும், கவச வாகனங்களும் தாக்கி தகர்த்தன. ஈராக் தலைநகர
தெருக்களில் அமெரிக்க கூட்டணிப் படைகள் நடத்திய முதல் முயற்சிகளில் 3.000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
பதிலாக ஒரே ஒரு அமெரிக்கர் தான் பலியானார்.
ஈராக்கின் ஒரு தலைமுறை இளைஞர்கள் முழுவதுமாக தற்போது அழிக்கப்பட்டு வருகின்றனர்:
ஆபிரிக்க நாடுகளில், ஐரோப்பிய நாடுகள் நடத்திய காலனி ஆதிக்க தாக்குதல் அல்லது அமெரிக்க பூர்வ குடி இந்தியர்களை
ஒழித்துக்கட்ட காலனி ஆதிக்கவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய வலிமையுள்ள
ஒரு நாடு, சிறிய நாட்டோடு மோதியிருக்கிறது. ஈராக்கைவிட அமெரிக்காவில் 10 மடங்கு அதிகமான மக்கள்
தொகை உண்டு. ஈராக்கைவிட 3.000 மடங்கிற்கு மேலாக இராணுவத்திற்கு செலவு செய்கின்ற நாடு அமெரிக்கா
ஆகும். இந்த மத்திய கிழக்கு நாட்டின் மீது வாஷிங்டன் தனது கோழைத்தனமான தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர்,
அந்த நாட்டின் மீது தொடர்ந்து 10 ஆண்டுகளாக குண்டு வீசி தாக்குதல்களை நடத்தியது. மற்றும் பொருளாதார
தடை நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய ஆதாரங்கள் அனைத்தையும் கிடைக்காமல் செய்யப்பட்டன.
''சுதந்திரம்'' மற்றும் ''ஜனநாயகத்தின்'' பெயரால் இந்தப் போரை நடத்திக்
கொண்டிருப்பவர்கள், பென்டகனில் உள்ள முன்தணிக்கை அதிகாரிகளின் கட்டளைப்படி செயல்பட தவறிய மற்றும் இந்த
நாசவேலைகள் பற்றிய செய்திகளை அனுப்ப துணிந்த பத்திரிகையாளர்கள் மீது குறி வைத்து திட்டமிட்டு தாக்குதல்
நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்க ஊடகங்களின் இந்த தரக்குறைவான போக்கை மிக தெளிவாக படம் பிடித்துக்காட்டுவதற்கு
ஒரேயொரு நிகழ்ச்சி போதும். அது அல்-ஜசீரா தொலைக்காட்சி நிலையத்தின் மீதும் மற்றும் பத்திரிகையாளர்
தங்கியிருந்த ஹோட்டலின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை காட்டுகின்றது. இத் தாக்குதலை பல அமெரிக்க
விமர்சகர்கள் நியாயப்படுத்த முயன்றுள்ளனர்.
தொடரும் படுகொலை
பாக்தாத் நகரை அமெரிக்க இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
இதைப் பற்றி எவருக்கும் எந்தவிதமான பிரமையும் இருக்கத் தேவையில்லை. நாசவேலைகள் தொடர்ந்தும் நீடித்துக்
கொண்டிருக்கின்றது. ஐம்பது லட்சம் மக்களைக்கொண்ட ஒரு நகரத்தை கண்காணிப்பதற்கு தேவையான துருப்புக்கள்
இல்லை. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் முழுவதிலும் இருக்கின்ற கூட்டணிப் படைகள் தங்களது மிதமிஞ்சிய ஆயுத பலத்தால்
மக்களிடையே பயங்கர உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கப் படைகள் பாக்தாத்தை ஆக்கிரமித்துக்கொண்ட நேரத்தில் வறுமையில் வாடிக்
கொண்டிருக்கும் மக்கள் ஆரவாரத்தோடு சூறையாடிக் கொண்டிருந்ததை அமெரிக்க ஊடகங்களும் மற்றும் போருக்கான
வலதுசாரி ஆதாரவாளர்களும் அருவருக்கத்தக்க முறையில் வெற்றிக்களிப்போடு சித்தரித்துக் காட்டினார்கள். ஆனால்
அமெரிக்க துருப்புக்கள் அதே மக்கள் மீது சுட்டுத் தள்ளுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்படும் நாள் வெகுதொலைவில்
இல்லை.
ஈராக்கில் போர் நடந்துகொண்டிருக்கும்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர்
விமானங்கள் ஒரு வீட்டின்மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் பெண்களும், குழந்தைகளும் அடங்கிய 11 பொதுமக்கள்
மாண்டனர் என்று ஒரு செய்தி வந்தது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆக்கிரமித்துச் சென்று 18 மாதங்களுக்குப்
பின்னரும் 8.000 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் அங்கு நிலைகொண்டுள்ளன.
புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள போர் வெறியர்கள் ஈராக் மீதான அமெரிக்கப் ஆக்கிரமிப்பின்போது
ஈரானும், சிரியாவும் ''தலையிட்டதாக'' குற்றம்சாட்டி, இந்த நாடுகள் இதற்கான ''பொறுப்பு ஏற்கவேண்டிவரும்''
என்று ஏற்கனவே மிரட்டியுள்ளனர். ஈராக்கிலிருந்து வெளியேறிய ரஷ்ய தூதராக அதிகாரிகளது வாகனங்கள் தெளிவாக
தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட பின்னரும் அமெரிக்கப் படைகள் அந்த வாகனங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஏகாதிபத்திய வெற்றியின் தர்க்கவியல் என்னவென்றால், அடுத்தகட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை திட்டமிடும் கட்டத்தை
தாண்டி செயல்படும் நிலைக்கு வந்துவிட்டன என்பதுதான்.
மனித இனத்தை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் மிரட்டல், அமெரிக்க இராணுவமயம்
சர்வதேச அளவில் வெடித்துச் சிதறியுள்ளது என்பதை உலக முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்து
வருகின்றனர்.
திட்டமிட்ட ஏகாதிபத்திய கொள்ளையடிப்புக்கான போர்
அமெரிக்க அரசாங்கம் -புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சியினர்
மற்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றள்ள ஜனநாயகக் கட்சியினர்- புதிய கார்ப்பரேஷன்கள் மற்றும் வங்கிகள்,
ஊடகங்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் ஒவ்வொரு அமைப்பின் கரத்திலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது. ஏகாதிபத்திய
சூறையாடல்களுக்காக ஈராக்கில் இந்தப் போர் நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்ற
நடவடிக்கை இது. ஈராக்கின் மிகப்பரவலான எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி அந்நாட்டை காலனி காபந்து அரசாக
மாற்றுவது தான் இந்தப் போரின் நோக்கமாக இருக்கின்றது.
பக்தாத்தில் ''மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள்'' மற்றும் பயங்கரவாதிகளோடு
தொடர்பு மற்றும் சதாம் ஹூசேனின் கொடுங்கோன்மை என்பது போன்ற பொய்களுடன், மிகுந்த அகந்தை மனப்பான்மையோடு
கண்டனம் செய்த வெள்ளை மாளிகையின் குண்டர் கும்பல், ஒரு நாடு முழுவதையும் தாங்கள் கொள்ளையடித்துவிட முடியும்
யாரும் தங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று முடிவு செய்தார்கள். அவர்கள், போர்க் குற்றங்களை புரிந்த குற்றவாளிகள்.
போர் குற்றங்களிலேயே மிகவும் கடுமையானது என்று நூரம்பேர்க் விசாரணையின்போது நிர்ணயம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு
போரை திட்டமிட்டு அதை செயல்படுத்திய குற்றவாளிகள் ஆவர்.
இந்தக் கொடுங்கோன்மையில் அமெரிக்க மக்கள் அனைவரையும் உடைந்தையாக்க வாஷிங்டனில்
உள்ள போர் வெறியர்கள் முயன்று வருகின்றனர். இந்தப் போர் அமெரிக்க நிதியாதிக்க சிறு தட்டினரின் நலன்களைக்
கொண்டிருக்கின்றது. இவர்கள், படைகளைப் பயன்படுத்தி ஈராக் மக்களை அடிபணியச் செய்து அவர்களை காலனி ஆதிக்கத்தை
ஏற்குமாறு செய்வது அமெரிக்க உழைக்கும் மக்களின் நலன்களை எந்தவகையிலும் பிரதிபலிப்பதாக இல்லை. அதற்கு
மாறாக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு மிகக்கடுமையாக பகைமை
பாராட்டுகின்ற சக்திகளை வலுப்படுத்தும் வகையில்தான் இந்தப் போர்க் குற்றம் அமைந்திருக்கிறது.
இளம் அமெரிக்க இராணுவத்தினர்கள் கொல்லுவதற்கு அல்லது கொல்லப்படுவதற்கு ஈராக்கிற்கு
அனுப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து தங்கள் நாட்டை பார்க்கும்போது வேலை வாய்ப்புக்கள்,
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முன்னாள் படையினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டிருப்பதை காண்பார்கள்.
அதேநேரத்தில், இந்தப் போருக்கான ஏற்பாட்டை செய்தவர்கள் (எண்ணெய்க் கம்பெனிகள், ஆயுத ஒப்பந்தக்காரர்கள்,
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவர்களது அரசியல் அடிவருடிகள்) ஈராக்கில் சிதைந்துவிட்ட பொருளாதாரத்திலிருந்து
தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதை பார்ப்பார்கள்.
''நமது படைகளுக்கு ஆதரவு'' என்பது தொடர்பாக விடுக்கப்படும் அழைப்புகள்
வெறும் போர்வெறி சிடுமூஞ்சிக் குரல்கள்தான். அமெரிக்க சமூகத்திற்குள் நிலவுகின்ற மகத்தான சமூக
நெருக்கடியால்தான் இந்தப் போர் ஜுரம் கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் வரலாறு காணாத
அளவிற்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கும், மற்றும் அரசாங்கம்,
ஊடகங்கள் மற்றும் பென்டகனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கின்ற மிகவும் குறுகிய கோடீஸ்வரர்களின்
வட்டாரம் ஆகியவற்றிற்கிடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது.
அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி
வாஷிங்டன் கோஷ்டியின் திரிபு அரசியலின் ஒரு பகுதியாக மட்டும் வெளியுறவுக் கொள்கையில்
குண்டர் போக்கு அமைந்திருக்கவில்லை. அத்துடன் எப்படி கம்பெனி நிர்வாகக் குழுக்கள் மற்றும் நிதி நிறுவனங்களில்
குற்றச்செயல்கள் நடைபெறுகின்றனவோ அதே அடிப்படையில் அரசியலிலும் ஒரு குழு நடவடிக்கையில் இறங்கியிருப்பதால்
மட்டும் இது நடக்கவில்லை. மாறாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமாக முற்றிக்கொண்டு வருகிற
சூழ்நிலையில், அமெரிக்க ஆளும் தட்டு தனது பொருளாதார நலன்களை தற்காத்து கொள்வதற்காக மேற்கொண்டுள்ள
தீவிர முயற்சிதான் அவர்களது போர்க் கொள்கைகளில் இருந்து வெளிப்படுகிறது.
வெளிநாடுகளில் போர் நடந்துகொண்டிருக்கின்ற நேரத்திலேயே உள்நாட்டில் ஜனநாயக
உரிமைகளை அழிக்கின்ற நடவடிக்கைகளில் நிர்வாகம் இறங்கி இருக்கிறது. ஆளும் தட்டின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற
எல்லா அரசியல் எதிரிகளையும் அச்சுறுத்தி மிரட்டுகின்ற சூழ்நிலையை உருவாக்குவதுதான் நிர்வாகத்தின் நோக்கமாக
இருக்கின்றது. அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு
வழங்கப்பட்ட அரசியல் சட்ட உரிமைகள் சுத்தமாக தூக்கியெறியப்பட்டன. தற்போது, போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
மீது வன்முறை அடிப்படையில் அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
மரத்துண்டுகளால் மற்றும் இரப்பரால் செய்யப்பட்ட குண்டுகள், உள்காயப்படுத்தும்
வெடிகுண்டுகள் மற்றும் இதர இணை இராணுவ ஆயுதங்கள் ஏப்ரல் 7 ந் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஆக்லண்ட்
துறைமுக ஊழியர்களின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தினர். மற்றும் அன்றைய தினம் நியூயோர்க்
நகரில் சட்டப்பூர்வமாக கண்டனம் தெரிவித்த 100 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகள்
மிகப் பயங்கரமான எச்சரிக்கைகளாக அமைந்திருக்கின்றன. வாஷிங்டனில் உள்ள நிர்வாகம் தனது சொந்த கென்ட்
ஸ்டேட் (Kent State) பாணி படுகொலைகளை வரவேற்கும்
என்று இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கம்பெனிகள் நடத்தும் செய்தி ஊடகங்களது ஆதரவோடு போலீசிலும், பொதுமக்களிலும்
மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்கு சிந்தனையுள்ள ''தாழ்ந்த'' பிரிவுகளை திரட்டும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளுக்கு உள்ளே பாசிச இயக்கத்தின் வித்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அரசாங்கத்தின் மிரட்டல் நடவடிக்கைகள் மற்றும் ஊடகங்கள் வாந்தி எடுத்துவரும் பிரச்சாரம்
ஆகியவற்றிற்கு அப்பாலும், அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் அரசாங்கத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்கள் கருத்துக் கணிப்பாளர்கள் தருகின்ற வெறும் மாயை தகவல்களைக் கண்டு எவரும் ஏமாறமாட்டார்கள். போர்
தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், படைகளோடு ''இணைந்து பணியாற்றிய'' பத்திரிகையாளர்களின்
உணர்வற்ற நிலையைக் கண்டு செயல் இழந்தனர். அப்படியிருந்தும், உழைக்கும் மக்களில் மிகப் பரவலான பிரிவுகளை சேர்ந்தவர்கள்
தங்களது பெயரால் நடத்தப்படும் படுகொலைகளைக் கண்டு வெறுப்புற்று ஆழமாக கவலையடைந்துள்ளனர்.
ஈராக் மக்களுக்கு ''விடுதலை'' என்றும், அந்த மக்களுக்கு சுதந்திர வாழ்வும் செழிப்பும்
கிடைக்கும் என்றும், மிகுந்த ஆணவப்போக்கோடு உறுதியளித்துக்கொண்டு வருகின்ற அதே அமெரிக்க நிர்வாகம், அமெரிக்க
உழைக்கும் மக்களில் பலரை வறுமை நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. புஷ் பதவிக்கு வந்தபின்னர் 2 மில்லியனுக்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்களில் அரை மில்லியன் பேர்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்
வேலையை இழந்திருக்கின்றனர்.
ஈராக்கில் மிக விரைவாக போர் முடிந்துவிட்டாலும், அது அமெரிக்காவின்
பொருளாதார சரிவை தடுத்து நிறுத்தவோ அல்லது மாற்றிவிடவோ முடியாது. அமெரிக்கப் பொருளாதார சரிவு முதலாளித்துவ
பொருளாதாரத்திற்குள் நிலவும் அடிப்படை நெருக்கடியின் ஒரு விளைவாகும். பொருட்களை உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலைகளில்
லாப வீதங்கள் தொடர்ந்து கடுமையாக குறைந்துகொண்டே வருகின்றன.
ஜனநாயகக் கட்சியின் உடந்தை
ஈராக்கில் போர் நடத்துவதற்கு ஆதரவு தந்ததைப்போல் ஜனநாயகக்கட்சி, உள்நாட்டில்
ஒடுக்குமுறை சமூகக் கொள்கையை கடைபிடிப்பதற்கு நிர்வாகத்திற்குத் தேவைப்படும் ஆதரவை தந்து வருகிறது. அமெரிக்க
நிதியாதிக்க குழுவின் லாபம் மற்றும் உரிமைகளை தற்காத்து நிற்பதில், அனைத்து அவசிய நடவடிக்கைகளிலும் குடியரசுக்
கட்சியுடன் இணைந்து ஜனநாயகக்கட்சி செயல்பட்டு வருகின்றது.
கண்டனம் தெரிவிப்பதன் மூலம் பெரு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த இந்த ஜனநாயகக்
கட்சி, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் என்று கூறுவதோ, மற்றும் 2004 தேர்தலில் ஜனநாயகக்
கட்சிக்காரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதினாலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வதேச வன்முறை மாற்றப்படும்
என்று கருதுபவர்கள் அரசியலில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களாக இருப்பர். அல்லது அரசியலில்
கற்றுக் குட்டிகளாக இருப்பர் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கைக்கு தாங்கள் பெறும் ஊதியத்தையே
நம்பியிருக்கிறார்கள். அவர்களது நலன்கள் இந்த இரண்டு கட்சி முறையால் பாதுகாக்கப்பட முடியாது.
அதேபோன்று, ஐ.நா அல்லது ஐரோப்பிய வல்லரசுகள் போருக்கு எதிரான அரண்களாக
செயல்படும் என்ற பிரமை முற்றிலும் கலைந்துவிட்டது. அவர்கள் அனைவருமே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சரிகட்டி
போகவே முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் போரை நியாயப்படுத்தவும், அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டது
சரிதான் என்று கூறவும் அவர்கள் முயன்று வருகிறார்கள். போரில் கிடைத்ததில் தங்களுக்கு பங்குவேண்டும் என்ற
நோக்கில் அனைவரும் செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.
போருக்கு எதிரான கிளர்ச்சி, அமெரிக்க உழைக்கும் மக்களில் மிகப்பெரும்பாலோர்
அடங்கிய சுயாதீனமான அரசியல் சக்தியாக உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும். நிதி ஆதிக்க குழுவின் நலன்களுக்கு
எதிராக, தமது நலன்களுக்காக இவர்கள் போராட வேண்டும். இத்தகைய உழைக்கும் மக்கள், சர்வதேச அளவில்
உழைக்கும் மக்களுடன் இணைந்து போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கவேண்டும். அத்தகைய இயக்கம் இன்றைய ஆளும்
வர்க்கத்தின் துல்லியமான குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைவிட அதிக வலிமையுள்ளதாக அமையும்.
இராணுவமயம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை தொழிலாள
வர்க்கத்தை திரட்டித்தான் முன்னேடுத்துச் செல்ல முடியும். இந்த இயக்கம் ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சிக்கு
அப்பாற்பட்ட சுயாதீனமான இயக்கமாக இருக்க வேண்டும். வர்க்க அடிப்படையில், ஒடுக்குமுறைகள் அடங்கிய
ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான இயக்கமாக அமையவேண்டும்.
அத்தகைய இயக்கம் சர்வதேசிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். ஒவ்வொரு
நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களும் பொதுவான நலன்களையும் பொதுவான ஒடுக்குமுறையாளரையுமே கொண்டுள்ளார்கள்.
எனவே, மனித இனம் முழுவதன் நலன்களுக்கும் பயன்படும் வகையில் உலகப் பொருளாதாரம் ஒழுங்குபடுத்தப் வேண்டும்
என்பதில் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் போருக்கு எதிரான கிளர்ச்சி வெடித்திருக்கிறது.
இது சர்வதேச அளவில் தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் இயக்கம் தோன்றுவதற்கான அறிகுறி
தென்படுகின்றது. சமாதானம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, சமூக சமத்துவம் ஆகியவற்றைக் கொண்ட பொது
முன்னோக்கின் அடிப்படையிலான சுயாதீனமான சர்வதேச அரசியல் இயக்கம் விரிவாக்கப்பட வேண்டும்.
அத்தகைய நனவான சர்வதேச இயக்கத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் உலக
சோசலிச வலைத் தளத்தின் அரசியல் குறிக்கோளாகும். மேலும், மேலும் பெரிய அளவில் கண்டனப் பேரணிகளை
கண்டனத்திற்காக மட்டுமே நடத்துவது அதன் நோக்கமல்ல மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கமும் அல்ல.
மாறாக, உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள தயார்படுத்தவும்,
மற்றும் சோசலிச சமுதாயத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் போராடுகின்றது. இதன் மூலமே போருக்கு முற்றுப்புள்ளி
வைக்க முடியும்.
இந்த கிரிமினல் போருக்கு எதிராக போராடுவதற்குரிய கருவியை தேடுகின்ற அனைவரும்,
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் உலக சோசலிச வலைத் தளத்துடன் தீவிரமாக பங்கெடுத்துக்கொள்ள
கேட்டுக்கொள்கிறோம். WSWS வாசகர்களை பெருக்கவும்,
கட்டுரைகளை வழங்கவும் நிதிஉதவி ஆதரவு தரவும் நாம் அழைப்புவிடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சியின்
வரலாற்றையும் அதன் வேலைத்திட்டத்தையும் படிப்பதுடன் அதில் இணைந்து அதனை வளர்த்தெடுக்கவும் தீர்மானம் எடுக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
Top of page
|