WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Japan's involvement in the Sri Lankan peace process
இலங்கையின் சமாதான முன்னெடுப்பில் ஜப்பானின் தலையீடு
By K. Ratnayake
26 February 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஜப்பான் கடந்த ஆறு மாதங்களாக, இலங்கையின் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில்
ஓரு குறிப்பிடத்தக்களவு பாத்திரம் வகிப்பதற்கு அமைதியாக, ஆனால் விடாப்பிடியாக முயற்சித்து வருகின்றது.
கொழும்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை மார்ச் மாத நடப்பகுதியிலும்,
இலங்கைக்கு கடனுதவி வழங்கும் பிரதான மகாநாட்டை ஜூனிலும் டோக்கியோவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதன் தலையீடானது, குறிப்பாக பிராந்திய முரண்பாடுகளிலான தனது தலையீடுகளின் ஊடாக, ஜப்பானின்
செல்வாக்கை அதிகரிக்கும் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
இலங்கை பேச்சுவார்த்தைகளில் டோக்கியோவுக்கு உள்ள முக்கியத்துவம், கடந்த
செப்டம்பரில் உயர்மட்ட ஜப்பானிய இராஜதந்திரியான யசூசி அகாஷியை
(Yasushi Akashi) சமாதான முன்னெடுப்புகளின் விசேட தூதுவராக நியமித்ததன் மூலம் வலியுறுத்தப்பட்டது.
அகாஷி, பிரதான அமைச்சரவை செயலாளரான, யசூவோ ஃபுகுடாவுக்கு
(Yasuo Fukuda) நேரடியாக விவரம் அளிக்கும், சமாதானத்துக்கான
சர்வதேச கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவின், 16 உயர் மட்ட அங்கத்தவர்களுக்கு தலைவராவார்.
செப்டம்பர் மாதம் அவரது நியமனத்திலிருந்து அகாஷி மூன்று தடவைகள் இலங்கைக்கு
விஜயம் செய்துள்ளார். அவர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித்
தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட சிரேஷ்ட அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அவர் விடுதலைப் புலிகளின்
அரசியல் தலைவரான தமிழ்ச் செல்வனை சந்திப்பதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில்
உள்ள கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார்.
அகாஷி தலைமையிலான ஒரு பிரதிநிதிகள் குழுவும், சமாதான முன்னெடுப்புகளின் ஒரு
அம்சமாக அமைக்கப்பட்டுள்ள உடனடி மனிதாபிமான, மற்றும் புணர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அகாஷி மார்ச் மாத முற்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலவைர் வே. பிரபாகரனையும், பிரதான பேச்சுவார்த்தையாளர்
அன்டன் பாலசிங்கத்தையும் சந்திப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜப்பானின் தலையீட்டுக்கு மேலதிக பலம் சேர்க்கும் முகமாக, ஜனவரியில் இலங்கைக்கு
விஜயம் செய்த வெளியுறவு அமைச்சர் யூரிகோ கவாகுசி (Yuriko
Kawaguchi), அரசாங்கத் தலைவர்களை சந்தித்ததுடன் யுத்தத்தால் சீரழிந்த வடபகுதி நகரமான
யாழ்ப்பாணத்துக்கும் சுற்றுலா சென்றார். அவர் புதுடில்லியில் இந்திய தலைவர்களுடனும் மேலதிக பேச்சுவார்த்தைகளை
நடத்தினார்.
இலங்கையில், டோக்கியோவின் ஒப்பீட்டளவிலான வெளிப்படையற்ற (low-key)
தலையீடானது, அகாஷி "ஜப்பானிய ராஜதந்திரத்தின் ஒரு புதிய உருவம்" என, டிசம்பரில் டோக்கியோ பத்திரிகையாளர்
சங்கத்தில் சுட்டிக்காட்டியதன் ஒரு அம்சமாகும். ஜப்பான், இலங்கையைப் போலவே ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்குத்
தீமோர், அதே போல் இந்தோனேசியாவின் யுத்தத்தால் உருக்குலைந்த அஸே பிராந்தியங்களிலும் மற்றும்
பிலிப்பைன்சில் தென் மின்டானோவிலும் நேரடியாக தலையிட்டு வருகின்றது.
ஜப்பானின் புதிய இராஜதந்திரத்தில் உதவியானது ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
கடந்த ஆண்டு ஜப்பான் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்கானிஸ்தானுக்கான சர்வதேச உதவியின் ஒரு பாகமாக
வழங்கியுள்ளது. ஜனவரியில், சுதந்திர அஸே இயக்கத்துக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை
கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, டிசம்பரில் இந்தோனேஷியாவுக்கான நிதி வழங்கும் மகாநாட்டை
டோக்கியோவில் கூட்டியது.
பெப்பிரவரி 13, அகாஷி வட இலங்கையில் புனரமைப்புக்காக சுமார் 270 மில்லியன்
அமெரிக்க டாலர்களை கொண்ட ஒரு உதவி பொதிக்கான திட்டங்களை அறிவித்தார். அவர் தீவுக்கு ஜப்பானிய சிவில்
பொலிசாரையும் மற்றும் ஏனைய விசேட நிபுணர்களையும் விரைந்தனுப்புவதற்கும் முயற்சிக்கின்றார்.
முரண்பாடுகளுக்கான தீர்மானங்களின் முன்தோற்றம் மற்றும் நிதி உதவியின் பின்னணியில்,
டோக்கியோ இப்பிராந்தியத்துக்குள் ஜப்பானுக்கு ஒரு பெரும் பாத்திரத்தை செதுக்க முனைகிறது. 2001ல் பதவிக்கு
வந்தது முதல், பிரதமர் யுனிஷிரோ கொய்சுமி ஜப்பானின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை மிக உக்கிரமாக
வலியுறுத்த முனைந்தார். அவர் ஆசிய கரைகளிலும் அதற்கு அப்பாலும் இராணுவ நிலைநாட்டல் மீதான கட்டுப்பாடுகளை
முடிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பாக நெருக்குவாரத்தில் உள்ளார்.
ஜப்பானிய அரசியலமைப்பின் பெயரளவிலான போரொழிப்புக் கோட்பாட்டு விதியின்
கீழ், அரசாங்கம் தற்காப்பு தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக தனது இராணுவத்தை பயன்படுத்துவதில் இருந்து
தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு வரையறைகளை தளர்த்துவதற்காக, டோக்கியோ ஏற்கனவே ஐ.நா.
அமைதி காக்கும் நடவடிக்கைகளை வசதியான சாக்குப் போக்காக பற்றிக் கொண்டுள்ளது. 1990ல், ஜப்பான் ஐ.நா.
அனுமதியுடனான சமாதான கொடுக்கல் வாங்கல்களை கண்காணிக்கும் ஒரு சர்வதேச படையில் பங்குகொள்ள
கம்போடியாவுக்கு போரிடாத துருப்புக்களை அனுப்பிவைத்தது. தற்போது கிழக்கு தீமோரில் ஐ.நா. அமைதிப் படையின்
பாகமாக 700 இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் அலுவலர்களும் நிலை கொண்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், டோக்கியோவின் சமாதானத்துக்கான சர்வதேச கூட்டமைப்பின்
ஆலோசனைக் குழு, கடந்த டிசம்பரில், ஐ.நா. தீர்மானங்களுக்கு சார்பான பல்முனை நடவடிக்கைகளில் மிகவும் தயார்
செய்யப்பட்டுள்ள ஜப்பானிய துருப்புக்களை பயன்படுத்த அனுமதிப்பதன் பேரில், அரசாங்கம் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த
சிபாரிசு செய்தது. அதன் தலைவர், இவ்வாறான மாற்றமானது ஈராக் மீதான ஐ.நா. அனுமதியுடனான
தாக்குதலுக்கு ஆதரவளிக்க ஜப்பானை அனுமதிக்கும் என்ற ஆலோசனைகளை மறுக்கும்போது, அவர் உத்தியோகபூர்வமான
யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் அமைதிப்படையின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால், இராணுவத்தின் பாத்திரத்தை
விரிவுபடுத்த முனைகின்றார் என்பது தெளிவானதாகும்.
இலங்கையிலும் ஏனைய பகுதிகளிலும், சமாதானத்துக்கான டோக்கியோ அலுவலர்களின்
அக்கைறையானது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஜப்பானிய இராணுவத்தை நிலைகொள்ளச் செய்வதிலுள்ள தடைகளில்
இருந்து மேலெழும்புவதற்கான பயனுள்ள கருவியுமாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவத்தினால்
திணிக்கப்பட்ட துண்பங்கள் மற்றும் சீனா, கொரியா, இந்தோனேசியா மற்றும் தென்கிழக்காசியாவிலும் அதன் காலனித்துவ
ஆட்சியின் கொடூரங்களின் கசப்பான ஞாபகங்கள் இன்னமும் ஆசியா எங்கிலும் காணப்படுகின்றன.
மூலோபாய அக்கறை
கொயுசுமியின் ஜப்பானிய இராணுவத்தின் மீதான கட்டுப்பாடுளை தளர்த்தும் நடவடிக்கைகள்,
பிரதான வல்லரசுகளின் மத்தியில் கூர்மையடைந்துவரும் பதட்டத்தைப் பற்றி ஆளும் வட்டாரத்தில் காணப்படும்
அக்கறையுடன் சம்பந்தப்பட்டுள்ளது. புஷ் நிர்வாகத்தின் "பயங்ரவாதத்துக்கு எதிரான பூகோளப் போருடன்" ஒத்துப்போவதோடு
ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கையுடன் ஆதரவு வழங்கும் அதே வேளை, டோக்கியோவால்
முடியாதுள்ளதுடன், ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் உள்ள பிரதான எண்ணெய் இருப்புகள் மீதான
கட்டுப்பாட்டை கைப்பற்றும் வாஷங்டனின் குறிக்கோள்களால் பீதிகொண்டுள்ளது.
"கியோடோ நியூஸ்" பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியரான கெய்சோ
லபேஷிமா, ஈராக் மீதான எந்தவொரு அமெரிக்க தாக்குதலிலும் ஜப்பானை பெரும் பாத்திரம் வகிக்கத் தூண்டும் ஒரு
கருத்துரையில், பந்தயத்தின் மூலோபாய விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். "இந்த பிராந்தியங்கள் ஜப்பானுக்கு
இன்றியமையாத புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாடு கொள்வனவு செய்யும் எண்ணெயில் 80
வீதத்துக்காக மத்திய கிழக்கில் தங்கியுள்ளது. ஜப்பானிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு தென்கிழக்காசியா ஒரு
பிரதான சந்தையாகும்," என அவர் எழுதுகிறார்.
"இந்தப் பிராந்தியங்கள் தனது வெளியுறவு கொள்கைகளை நிர்வகிப்பதில் ஜப்பானுக்கு
இன்றியமையாதவையாகும். மத்திய கிழக்கிலிருந்து மலாக்கா நீரிணையூடாக ஜப்பானுக்கு செல்லும் கடல் வழிகள், ஜப்பானிய
பொருளாதாரத்துக்கு குருதி வழங்கும் பிரதான நாடியாக விளங்குகின்றன. ஜப்பானின் செழுமைக்கு இந்த கடல் வழிகளில்
அடங்கியுள்ள இப்பரந்த பிராந்தியங்கள் மிகவும் இன்றியமையாதவையாகும்."
ஜப்பானிய கடற்படை, ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடும் அல் குவேடா அங்கத்தவர்களைத்
தடுக்கும் அமெரிக்க முயற்சிகளின் ஒரு பாகமாக, இந்து சமுத்திரத்தில் ரோந்தில் ஈடுபட்டுவருகின்ற அமெரிக்க மற்றும்
பிரித்தானிய போர் கப்பல்களுக்கு ஒத்துழைப்பதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. ஜனவரியில், இந்தியாவில் பேசிய ஜப்பானிய
வெளியுறவு அமைச்சர் கவாகுஷி, "இந்து சமுத்திரம் மற்றும் மலாக்கா நீரிணை ஊடாக செல்லும் கடல் மார்க்கங்களில்
கடல் சார்ந்த போக்குவரத்தை பாதுகாப்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் கடற்படை கூட்டுறவுகளில்
அதிகரித்த கவனம் தேவை" என சுட்டிக் காட்டினார்.
டோக்கியோவும், தனது சமாதான ஆரம்பிப்புகளை இந்த பரந்த மூலோபாய நலன்களோடு
கவனமாகப் பொருத்துவதற்காக தெளிவாக முன்வந்துள்ளது. ஆஸேயில் நடந்த உதவி வழங்கும் கூட்டத்தின் போது
ஜப்பான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கருத்துரைத்திருந்தது. "ஆஷி மாகாணம் ஒரு
மூலோபாய விடயத்தை வகிக்கின்றது... (அத்துடன் அது) பிராந்தியத்திலான ஸ்திரப்பாடாகும்... ஜப்பானின் தேசிய
நலன்களுடன் நெருங்கிய தொடர்புடையது." ஆஸே, மலாக்கா நீரிணையின் வட முனையில் அமைந்துள்ளதுடன், ஆசிரியர்
தலையங்கம் குறிப்பிட்டபடி ஜப்பானின் மிகப் பெரும் இயற்கை வாயு வழங்கும் இடமாகும்.
அஷி ஷிம்புன் இன் ஒரு ஆசிரியர் தலையங்கம் இலங்கையைப் பற்றி இதே குறிப்பை
வழங்கியது. "சிறு தீவான இலங்கை நாடு மிகப்பெரிய மூலோபாய முக்கியத்துவமுடையது, ஏனெனில் அது பெரும் எண்ணெய்க்
கப்பல்களின் அடிப்படையான இந்து சமுத்திர கடல் மார்க்கங்களில் அமைந்துள்ளது. ஜப்பானுடனான அதன் உறவுகள் மரபுரீதியாக
சிநேகபூர்வமானவை" என அது தனது வாசகர்களுக்கு அறிவித்தது.
இந்நிலைமையில், ஜப்பான் இலங்கையுடன் நெருங்கிய இராணுவ கூட்டுறவினை நாடுவதாக
கருத்து வெளியிடவில்லை. எவ்வாறாயினும், இத்தீவு பிராந்தியத்தில் டோக்கியோவின் கடற்படை நடவடிக்கை விஸ்தரிப்பை
மட்டுமல்லாமல், தெற்காசியாவில் அதன் பொருளாதார நலன்களை தக்கவைத்துக்கொள்ளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
உள்ளது.
ஜப்பான் ஏற்கனவே தென் ஆசியாவின் ஏழு கடனுதவி வழங்கும் நாடுகளில் பெரிய
நாடாகும். இலங்கைக்கான வெளிநாட்டு உதவியில் 45 சதவீதம் ஜப்பானிடமிருந்து கிடைக்கிறது. இப்பகுதி ஜப்பானிய
ஏற்றுமதிகளுக்கு வளர்ச்சியடைந்து வரும் ஒரு சந்தையாக உள்ளதுடன் அதன் நேரடி முதலீடுகளும் உயர்ந்துள்ளன.
2001-2002 காலப் பகுதியில் ஜப்பான் 576 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பொருட்களை பாகிஸ்தானுக்கும்,
2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பொருட்களை இந்தியாவுக்கும் விற்றது. சீனாவுடன் ஒப்பிடும் போது
இன்னமும் சிறிதாக இருக்கும் அதே வேளை, இந்தியாவிலான ஜப்பானின் நேரடி முதலீடுகள் 2002 ல் 14.5 பில்லியன்
அமெரிக்க டாலர்களாகும்.
இலங்கையிலும் ஏனைய பிரதேசங்களிலும் சமாதான முன்னெடுப்புகளில் ஜப்பானின் தலையீட்டை
தூண்டிவிடுவது இத்தகைய சடநலன்களேயாகும்.
Top of page
|