World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

SEP public meeting in Sydney

The fight against imperialist war: the socialist perspective

சிட்னியில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக்கூட்டம்

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம்: சோசலிச முன்னோக்கு

By Nick Beams
17 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல்-13-அன்று, அவுஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சி, ''ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம்: சோசலிச முன்னோக்கு`'' என்ற தலைப்பில் சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில், பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தியது. அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடாத்தப்பட்ட படையெடுப்பினால் உருவான அரசியல் படிப்பினைகளை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடாத்தப்பட்டது. அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினருமான நிக் பீம்ஸ் பிரதான உரையை வழங்கினார். அந்தக் கூட்டத்தில், நிறைய பேர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் விரிவான கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. அவரது உரை கீழே தரப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான பிரிட்டன், மற்றும் அவுஸ்திரேலியா ஈராக் மீது தங்களது போரை தொடுத்து நான்கு வாரங்கள் கூடமுடியவில்லை. ஆனால், இந்த குறுகிய காலத்தில், உலக வரலாறானது இனி திருப்ப முடியாத அளவிற்கு போக்கை மாற்றி இருக்கிறது.

அமெரிக்க மக்கள் உட்பட, மிக பரந்த சாதாரண மனித சமுதாயம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனை, தங்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக, எதிர்காலம் பாதுகாப்பாக அமையவேண்டும் என்பதற்காக, தங்களது அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் எதிர்நோக்கியுள்ள ஒரே கேள்வி இதுதான்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பு தொடர்பாக என்ன செய்வது? ஒரு புதிய வரலாற்று சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது மற்றும் அதன்விளைவுகள் வரவிருக்கும் தசாப்தங்களில் மனித இனத்தின் தலைவிதியையே தீர்மானம் செய்யும்.

இது, ஏதோ ஒருவகையான ''இடதுசாரி'' வலியுறுத்தலல்ல. இது அரசியல் அறிவுள்ள எவருக்கும் தெளிவாக தெரியும் உண்மையாகும். ஏப்ரல் 6ம் திகதி பிரிட்டனின் ஒப்சேர்வர் பத்திரிகையில், பிரசுரிக்கப்பட்டுள்ள விமர்சனம் விவரித்திருப்பதைபோல், ஈராக்கில் வெற்றி என்பதன் பொருள் அமெரிக்க வெளியுறவு கொள்கையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அதிகாரத்தில் உறுதியாக அமர்த்தப்படுகின்றார்கள் என்பதாகும். ''வெகுவிரைவில் முன்கூட்டிய திடீர் தாக்குதல் திட்டத்தை அவர்கள் 'விரோதமாக வரக்கூடிய அரசுகள்' மீது முன்னேடுத்துச் செல்வார்கள். மற்றும் வேறுநாட்டின் மீது தாக்குதல் நடக்கும். இது நடக்குமானால், வன்முறை மற்றும் எதிர்பாராத எதிர்வன்முறைகள் ஆகியவை நடைபெறுகின்ற ஒரு நூற்றாண்டில் நாம் அடி எடுத்துவைப்போம்'' (நீல் ஆஸ்சர்சன் (Neal Ascherson), ''நினைவில் கொள்ளவேண்டிய ஒரு பயமுறுத்தும் போர்'' -A fearful war to remember- ஒப்சேர்வர்).

இந்த விமர்சனத்தின் எழுத்தாளருக்கு பிரச்சனையாக தோன்றுபவர்கள் புஷ் நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற புதிய பழமைவாதிகள் (neo-conservatives) அல்லது ''neocons'' குறிப்பாக பென்டகனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் புஷ் நிர்வாகத்தை நடத்துபவர்கள். ஏகாதிபத்திய போர் வெடிப்பினை தனிநபர்கள் கொண்ட குழுவின் சதி என்று விவரிக்கமுடியாது. இது வரலாற்றை ''கெட்ட ஹிட்லர்'' வழிமுறையினால் ஆராயும் வகையாகும். ஜேர்மனியின் மேலாதிக்கம் செய்யும் ஆளும் வர்க்கங்கள் எதிர்கொண்ட ஆழமான வரலாற்று பிரச்சனைகளை அவரது திட்டங்கள் பூர்த்திசெய்ததால், அவர்கள் ஹிட்லரை பதவியில் அமர்த்தினார்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதே வகையில், அமெரிக்க முதலாளித்துவத்திற்குள்ளேயான அடிப்படை முரண்பாடுகளின் விளைவாக உருவானவைதான் புஷ் ஆட்சியின் கொள்கைகள்.

ஈராக் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் வெறுமனே ஒரு புதிய பழமைவாத சதிக்கூட்டம் செய்த முடிவின் விளைவு அல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த உச்ச நிலையானது அமெரிக்க அரசியல் கட்டமைப்பில் வளர்ந்துகொண்டு வரும் புற்றுநோயின் தெளிவான வெளிப்படுத்தல் ஆகும். புஷ் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்றால் ஏராளமான அதிகாரம் அதன் நிர்வாகத் தரப்பில் குவிக்கப்பட்ன பழைய பேரரசு போல் இயங்கி வருகிறது. காங்கிரஸ் போர் புரிகின்ற அதிகாரத்தை நிர்வாகத்திற்கு தந்துவிட்டது. ஜனநாயகக் கட்சியினர் எதிர்க் கட்சியாக தொழிற்படும் நடிப்பைக்கூட கைவிட்டுவிட்டனர்

மிகப்பெரும் அளவில் சக்திவாய்ந்த நிறுவனங்கள் வழங்கும் பணத்தைக்கொண்டு, இந்த ஆட்சி அவர்களோடு நெருக்கமாக உறவுகொண்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பகிரங்க மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நிதிமோசடிகளிலும் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக உறவுகொண்டு இந்த ஆட்சி செயல்படுகிறது. புஷ்ஷிற்கும் என்ரோனுக்கும் (Enron) அல்லது செனிக்கும் ஹாலிபர்ட்டனுக்கும் (Haliburton) இடையில் நிலவுகின்ற நெருக்கமான உறவுகளில் தற்செயலான அம்சம் எதுவும் இல்லை. தற்போது, ஈராக்கின் "மறு சீரமைப்பு நடவடிக்கைகளில்" அத்தகைய நிறுவனங்கள் மிக விரைவான இலாபம் சம்பாதிக்க முயன்றுவருகின்றன.

ஈராக்கிலும் மற்றும் மத்திய கிழக்கிலும் ஜனநாயகத்தை கொண்டுவர விரும்புவதாக கூறிக்கொள்ளும் இந்த ஆட்சி, உள்நாட்டில் தேசபக்தி சட்டம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைப்பு மூலம் மிக ஆழமான அளவிற்கு ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆக்லாண்ட் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட வன்முறை தாக்குதல் வர இருக்கும் ஆபத்துக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் நடவடிக்கையாகும்.

புஷ்ஷின் மத்திய பொருளாதார மற்றும் சமூகதிட்டம் செல்வத்தை மிகப்பெரும்பாலான மக்கள் கையில் இருந்து ஆளும் செல்வத்தட்டுகளுக்கு மாற்றித்தருவது ஆகும். இன்றைய தினம் அமெரிக்காவின் 14,000 மிகப்பெரும் பணக்கார குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவின் மிக வறிய 20 மில்லியன் குடும்பங்களின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாகும். இத்தகைய, வரலாறு காணாத செல்வ துருவப்படுத்தலானது ஜனநாயக வழியிலான ஆட்சி முறைக்கு ஏற்புடையது அல்ல.

''பொதுமக்களது ஆதரவை உத்தரவாதம் செய்துதரும் பணி, ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், சமுதாய சூழ்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றன மற்றும் மக்களை, ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. மார்ச் 29- 30 ஆகிய நாட்களில், மிச்சிகன், அன் ஆர்பரில் WSWS-நடத்திய சர்வதேச மாநாட்டின் தீர்மானத்தில், நாம் விளக்கியுள்ளதைப்போல் ''ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக ஜோசப் கோயபல்ஸ் பணியாற்றிய காலத்திற்கு பின்னர், இவ்வளவு மோசமாக ஊடகங்கள் ஆட்சியின் பக்கம் திருப்பப்பட்டது இருக்கவில்லை. இப்போது, நடைபெற்று வரும் காலனி ஆக்கிரமிப்பு போரை 'ஈராக்கிற்கான சுதந்திர நடவடிக்கை' என வர்ணிப்பதற்கு ஒரு கோயபல்ஸ் வேண்டும். மற்றும், தொலைக்காட்சி வலைப் பின்னல்கள் மற்றும் செய்தித்தாள்கள் அத்தகைய பிரச்சாரத்துடன் செல்வதற்கு நாஜி ஆதிக்க ஜேர்மனிய பத்திரிகைகளுக்கு இணையான அமைப்புகளாக ஆகியிருக்கவேண்டும்.

இதைப்பற்றி எத்தனையோ முறை திரும்பத் திரும்ப நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அது தேவைதான். ஒவ்வொரு நெருக்கடியிலும் அந்த நெருக்கடியின் தன்மை அதன் உண்மையான போக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்தப் போரின் பின்னர், இதற்கு முன்பு இருந்த நிலைமை இனி எப்போதும் திரும்ப போவதில்லை. கடந்த வாரங்களிலும் மாதங்களிலும் கடைசியாக ஈராக் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர் சர்வதேச உறவுகளை நெறிப்படுத்திய சகல சம்பிரதாயங்களும் நடைமுறைகளும் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுவிட்டன. அவற்றை திரும்ப சேர்த்துவைக்க முடியாது. ஹிட்லரது இராணுவம் ஐரோப்பாவில் அணிவகுத்து சென்றதற்கு பின்னர், இவ்வளவு பெரிய ஏகாதிபத்திய வன்முறையை நாம் பார்த்ததில்லை.

போருக்கு ஆதரவானவர்களும், மற்றும் அந்தப் போரை நடந்து முடிந்ததாக நியாயப்படுத்துபவர்களும் பாக்தாத்தின் சில பகுதிகளில் அமெரிக்கப் படைகளை மகிழ்ச்சி ஆரவாரத்தோடு மக்கள் வரவேற்ற காட்சிகளை சுட்டிக்காட்டுகின்றனர். பாஸ்ரி (Bastille) சிறை வீழ்ந்தது, VE Day அல்லது பேர்லின் சுவர் இடிக்கப்பட்டது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இணையாக சதாம் ஹூசேனின் சிலை நொறுக்கப்பட்டதை போற்றி வரவேற்கப்படுவது முற்றிலுமாக கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதையாகும்.

எது எவ்வாறாயினும், ஜேர்மன் படைகள் ஆஸ்திரியாவுக்குள் 1938ல் Anschluss-TM அணிநடை இட்டபோது ஆரவாரித்த மக்கள் கூட்டம் வாழ்த்தியதை நினைவுகூர வேண்டும். இரண்டாம் உலகப் போரில் கூட, நாஜி படைகள் உக்ரெய்னின் சில பகுதிகளில் மக்களால் வரவேற்கப்பட்டனர், அவர்கள் அந்தக் கட்டத்தில் ஸ்ராலினின் கீழ் பாதிக்கப்பட்ட ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு வழிமுறையாக அதனை பார்த்தனர். ஆனால் அது ஜேர்மனின் இராணுவ நடவடிக்கைகளின் தன்மையை மாற்றவில்லை.

உண்மையிலேயே, அமெரிக்கா ஆஸ்திரேலியா உட்பட அதன் நட்பு நாடுகள், நாஜி தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்ட நூரம்பேர்க் விசாரணையில் தெரிவிக்கப்பட்ட அதே குற்றங்களை செய்தவர்கள் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு போருக்கு திட்டமிட்டு அதை செயல்படுத்தினார்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. அவர்கள் ஈராக்கில் மிகக்கொடூரமான போர்க் குற்றங்களை புரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் மற்றும், பல்லாயிரக்கணக்கான துருப்புகள் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர்கள் இலக்காகிறார்கள். இந்த "விடுதலை" என்பது பொதுமக்களை கொன்றுகுவிப்பதாகும்.

சதாம் ஹூசேன் சர்வாதிகாரம் நீக்கப்பட்டுவிட்டால் நிலைமை சீர்திருந்தும் என்று நம்பியவர்கள், இப்போது மிக விரைவாக ஒன்றை உணர்ந்து வருகின்றனர். அடக்குமுறையிலிருந்து தங்களது சுதந்திரத்தின் குறிக்கோள்களை ஒரு அல்லது மற்ற ஏகாதிபத்திய அரசின் மூலம் அடைய முடியாது என்பதை தற்போது தமது முன்னவர்களைப்போல் மக்கள் உணர்ந்து வருகின்றனர். ஏனெனில், வல்லரசுகள் தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை வைத்திருக்கின்றனர். அவற்றில் வெகுஜனங்களின் அபிலாஷைகளுக்கு இடமில்லை.

இந்த நிகழ்ச்சிநிரல் என்ன?

இப்போது ஒன்று தெளிவாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது: இந்தப் போரின் நோக்கம், ''பேரழிவு ஆயுதங்களை'' கண்டுபிடித்து அழிப்பது அல்ல; இந்தப் போர் ஆரம்பமாவதற்கு முன்னரே, இது சம்மந்தமான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பது போலி தஸ்தாவேஜுகள் மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் அமைந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சனை பற்றி குறிப்பிடும்போது, அமெரிக்காவின் பிரபலமான வலதுசாரி விமர்சகர், றொபர்ட் நோவக், அண்மையில் எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து ஒரு சிறு குறிப்பை மட்டும் எடுத்துக்காட்ட என்னை அனுமதிக்கவும்.

''ஈராக் ஆட்சியை தாக்குவதற்கு உண்மையான காரணம்'', பொதுமக்களுக்காக கூறப்படும் காரணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். தலிபானிடமிருந்து ஆப்கானிஸ்தானை விரைவாக விடுவித்த அமெரிக்க தாக்குதல் நடாத்தப்பட்ட மறுநாள், ஜனாதிபதி புஷ்- பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கும் இரண்டாவது இலக்கு ஈராக் என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு வார்த்தை கூட பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் புஷ் -கொள்கை வகுப்பவர்கள் உடனான பல பேட்டிகளில், அத்தகைய வார்த்தை பற்றி என்னிடம் எவரும் குறிப்பிடவில்லை'' (பேரழிவு ஆயுதங்கள் எங்கேயிருக்கின்றன? Where are the WMD?", townhall.com ஏப்ரல்-7,2003).

புஷ் ஆட்சியுடன் பல தொடர்புகள் உள்ள நோவாக், "பேரழிவு ஆயுதங்களை" பற்றிய பேச்சுக்கள் எல்லாம் பொதுமக்களுக்காகவும், முடிந்தால் போருக்கு ஐ.நா.வின் முறையான அங்கீகாரத்தை பெறுவதற்காக என்று கூறியுள்ளார்.

போரை நெருங்கிக்கொண்டிருந்த வாரங்களில் "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய, பிரச்சாரம் குறைந்தது. புஷ் நிர்வாகம், மற்றொரு பாதையை தேர்ந்தெடுத்தது: போர் ஈராக் மக்களை விடுவிக்கவும் ஜனநாயகத்தை கொண்டுவரவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்றது.

இந்த கூற்றுக்களும் மிக விரைவாக அம்பலத்திற்கு வந்தன. முதலாவதாக; மேலேயிருந்து இராணுவ அதிகாரத்தால் ஜனநாயகம் திணிக்கப்பட முடியாது. இதன்காரணமாக அடிமட்டத்திலிருந்து, சாதாரண மக்களால் நடத்தப்படும் போராட்டத்தின் மூலம்தான் நேர்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஜனநாயகத்தை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் விரும்பமாட்டர்கள். எனவேதான், சதாம் ஹூசேனின் சர்வாதிகாரத்தை அவர்கள் அவ்வளவு நீண்ட காலத்திற்கு ஆதரித்து வந்தார்கள்.

இரண்டாவதாக, உண்மையான ஜனநாயகம் என்பது இந்த பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் முன்னோக்குகளுக்கு முரண்பாடான ஒரு தத்துவமாகும். இஸ்ரேல் பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவின் வெளியுறவு துணை அமைச்சர், மார்க்-கிராஸ்மேன் (Marc Grossman) கருத்துப்படி, ஈராக்கில் புதிய அரசாங்கம் எடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை, இஸ்ரேல் நாட்டை அங்கீகரிப்பதாகயிருக்கவேண்டும் என்பதாகும். மேலும் உண்மையான ஜனநாயகத்தில் ஈராக்கின் எண்ணெய் வளம் மீதான கட்டுப்பாடு ஈராக் மக்கள் வசம் இருக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின் கொள்கை, எண்ணெய் வளத்தை தனியார் மயமாக்குவது, ஓபெக் அமைப்பை (OPEC cartel) பலவீனப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் எண்ணெய் வளங்கள் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை சிதைப்பது.

ஆஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த ஹூக் ஓய்ட் (Hugh White) அண்மையில், சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் விளக்கியிருப்பதைப்போல், அமெரிக்கா விரும்புவது, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் ஈராக்கின் புதிய சர்வாதிகாரியை ஒருவேளை எகிப்தின் ஜனாதிபதி ஹூசைன் முபாரக் பாணியில் செயல்படும் ஒரு சர்வாதிகாரியை அமெரிக்கா விரும்புகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்கா அதிகமாக பேசி வரும் ஜனநாயகம் ஈராக்கில் ஒடுக்குமுறை ஆட்சியை கொண்டுவருவதாகவே அமையும். புதிய ஆட்சி அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பதைக் காட்டிலும் ஆதரிக்கின்ற ஆட்சியாகவே அமையும் என்ற உண்மை மட்டுமே சதாம் ஹூசேன் ஆட்சியிலிருந்து அதனை வேறுபடுத்தும்.

எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது முக்கியமான குறிக்கோள்தான் என்றாலும், வாஷிங்டனது நோக்கங்கள் வெறுமனே ஈராக்கின் எண்ணெய் வளங்களை உடனடியாக கைப்பற்றுவதுடன் எல்லைக்குட்பட்டிருக்கவில்லை. மத்திய கிழக்கு முழுவதையும், உண்மையில் உலகம் முழுவதையும் தனது மேலாதிக்கத்தின்கீழ் மறுஒழுங்கு செய்ய வேண்டும் என்பதற்குக் குறைவில்லாத, விரிவான முன்னோக்கை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஈராக்கில் ஆட்சி மாற்றம்தான் அமெரிக்காவின் குறிக்கோள் என்ற மாயையில் இருந்தவர்கள், சிரியாவிற்கும் ஈரானுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதுடன் அண்மை நாட்களில் திடீர் என்று விழிப்படைந்துள்ளனர்.

அமெரிக்கா போரை ஆரம்பித்த நேரத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் சிரியாவிற்கு ஓர் எச்சரிக்கைவிடுத்தார். சிரியா நாட்டு எல்லையிலிருந்து ஈராக்கிற்குள் இராணுவ பொருட்கள் எதுவும் நுழையுமானால் அது "பகை நடவடிக்கையாக" கருதப்படும், ஈரானிலிருந்து எந்த படைப்பிரிவு நுழைந்தாலும் அது தாக்கப்படும் என்று ரம்ஸ்பீல்ட் எச்சரித்தார். அமெரிக்கா - இஸ்ரேல் பொது விவகார குழுவில், உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்; கொலின் பெளல் அந்தக் கருத்தை வலியுறுத்தி கூறினார். சிரியா "ஒரு நெருக்கடியான தேர்வை" எதிர்கொண்டிருக்கிறது என்று அறிவித்ததுடன், பேரழிவு ஆயுதங்களை பெறுவதற்கான முயற்சியை ஈரான் நிறுத்த வேண்டும் அதேபோல "இஸ்ரேலை கடுமையாக வன்முறையில் எதிர்க்கின்ற குழுக்கள் உட்பட, பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதை" ஈரான் கைவிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்கள் ஏதோ பணிமுறை கவனியாது தற்செயலாக கூறப்பட்டவை அல்ல, மாறாக புஷ் நிர்வாகத்தின் கொள்கையை எதிரொலிப்பவை. ஈராக் போர் முடிந்ததும், "மிக உயர்ந்த முன்னுரிமையோடு", ஈரானில் இரகசியமாக அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கும் என்று, அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கான துணை அமைச்சர், ஜோன்போல்டன் (John Bolton) தெரிவித்தார்.

''ஈராக்-போருக்குப் பின்னர், ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியதுடன் சமமான முக்கியத்துவம் பெற்றது என்றார் அவர். சிரியா, ஈரான் மற்றும் லிபியா, பயங்கர ஆயுதங்களை பெற முயன்றுவருகின்றன என்றார் போல்டன். ஈராக் மீதான தாக்குதல் அவர்களது மனதை திருப்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்த அதேவேளை, "ஈராக் உதாரணம் மட்டுமே போதுமானது என்று கருதுகின்ற அளவிற்கு எங்களில் எவரும் அப்பாவிகள் அல்ல,'' என்று மேலும் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்ற கொள்கை

மத்திய கிழக்கு முழுவதிலும் "ஆட்சி மாற்ற" கொள்கை ஆண்டுக் கணக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. 1996 ஜூலையில், பாதுகாப்புத்துறை துணை அமைச்சர், டக்கலஸ் பெய்த் (Douglas Feith), ஜோன் போல்டனின் இன்றைய மூத்த உதவியாளர் டேவிட் வும்சர் (David Wurmser) மற்றும் பிரதான வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர் ரிச்சர்ட் பேர்ல் (Richard Perle) உட்பட புஷ் நிர்வாகத்தின், முன்னணி உறுப்பினர்கள், இஸ்ரேலில் தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வரவிருந்த நேட்டன்யாகு ஆட்சிக்கு கொள்கை பத்திரம் ஒன்றை தயாரித்துக்கொடுத்தனர். அந்தக் கொள்கை பத்திரத்தில் அவர்கள் பழைய கொள்கைகளை "சுத்தமாய் கைவிடுமாறு" ஆலோசனை கூறியிருந்தனர். "சமாதானத்திற்கு பதிலாக நிலம்" என்ற முன்னோக்கு இல்லாது போகவேண்டும் என அதில் இருந்தது.

''துருக்கி, மற்றும் ஜோர்டான் ஒத்துழைப்போடு, சிரியாவை கட்டுப்படுத்தி, பலவீனப்படுத்தி மற்றும் அதன் எல்லையைக் கூட சுருக்கி இஸ்ரேல் தனது மூலோபாய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள முடியும்" என அறிக்கை கூறியது. "இந்த முயற்சி ஈராக்கில் சதாம் ஹூசேனை பதவியிலிருந்து நீக்குவதில் மையப்படுத்தி இருந்தது-- இஸ்ரேல் அதன் சொந்த உரிமையில் இது முக்கியமான நோக்கமாகும்- அதன் மூலம், சிரியாவின் பிராந்திய ஆதிக்க ஆசைகளை முறியடித்துவிட முடியும்'' அல்லது அண்மையில் பேர்ல் கூறியது போல, ஈராக்கிற்கு பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறை, இந்த பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு ஆட்சி சம்மந்தமாகவும், ''அடுத்து நீ தான்'' என்பதாகவே அமையும்.

மத்திய கிழக்கிற்கு அப்பால், உடனடியான மிக முக்கியமான அமெரிக்க இலக்கு வடகொரியா ஆகும். ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகர் மாரீஸ் ஸ்ட்ராங் (Maurice Strong) அண்மையில் வடகொரியா சென்றிருந்தார். அந்நாட்டில் உண்மையிலேயே தற்போது போருக்கான சாத்தியக்கூறு தோன்றியிருப்பதாக கருத்து தெரிவித்தார். ''போர் தேவையற்றது என்று, நான் நினைக்கிறேன், அது, நினைத்துக்கூட பார்க்க முடியாதது. ஆனால், துரதிருஷ்டவசமாக போர் நடப்பது முற்றிலும் சாத்தியமாக உள்ளது'' என்று அவர் கூறினார்.

ஊடகங்கள் உருவாக்கியுள்ள பிரச்சாரம் மற்றும் தந்துள்ள சித்திரங்கள் ஆகியவற்றால் முற்றிலும் பார்வை இழக்காத எவருக்கும் புதிய கொள்கை தெளிவாகத் தெரியும். முன்னணி அமெரிக்க வரலாற்றாசிரியர், ஆர்தர் சிஸ்லிங்கோ ஜூனியர் (Arthur Schlesinger Jr) கருத்துப்படி, கெடுபிடிப் போர் தத்துவமான அடக்குதல் மற்றும் எதிரியை அச்சமூட்டித் தடுத்தல் ஆகியவற்றிற்கு பதிலாக புஷ் காப்புப்போர் தத்துவத்தை உருவாக்கியுள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார். ''ஜனாதிபதி உருவாக்கியுள்ள 'எதிர்பார்ப்பு தற்காப்பு' கொள்கையானது, பேர்ள் ஹார்பரில் ஏகாதிபத்திய ஜப்பான் பயன்படுத்திய கொள்கைக்கு இணையாக அச்சமூட்டும் வகையில் அமைந்திருக்கின்ற கொள்கையாக உள்ளது'' என்று அவர் கூறியிருக்கிறார் (செயின்ட் பிட்டர்ஸ்பர்க் டைம்ஸ் - ஏப்ரல்-6,2003).

நம்மை எதிர்நோக்கியுள்ள கேள்வி: அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்கே செல்கிறது?

மிக அண்மைக்காலம் வரை ஈராக்கின் புதிய நிர்வாகத்தில், தகவல்துறை அமைச்சராக பதவி ஏற்கப்போகிறார் என்று கூறப்பட்ட முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் ஜேம்ஸ் வூல்ஸி (James Woolsey), ஈராக் போர், ஆரம்பம்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். கெடுபிடிப் போருக்குப் (Cold War) பின்னர் அல்லது அவர் அதனைக் கூறுவதுபோல மூன்றாவது உலகப் போருக்குப் பின்னர், தற்போது அமெரிக்கா நான்காவது உலகப் போரில் இறங்கியிருக்கிறது, அது பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறுகிறார். ''புதிய மத்திய கிழக்கை நோக்கி நாம் நகருகையில் எதிர்வரும் ஆண்டுகளில், எதிர்வரும் பல பத்தாண்டுகளில்....... ஏராளமான மக்களை நாம் பீதியடைய செய்வோம்'' என்று அவர் இந்த மாத ஆரம்பத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கருத்துக்கள், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை. ''பயங்கரவாதத்தை வெற்றிக்கொள்ளும் அமெரிக்கர்கள்'' என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு நடத்திய கூட்டத்தில் கூறப்பட்டவை. இந்த அமைப்பின் தலைவர், வில்லியம் பென்னட், றேகன் நிர்வாகத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றியவர். 2002 நவம்பர் 16 திகதி, வூல்ஸி ஆற்றிய நீண்ட உரையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்தான் கல்லூரி உரையில் இடம்பெற்றன. அந்த உரையில் வூல்ஸி, அமெரிக்கா அவர்கள் ஈரானை ஆண்டு வரும் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பதாகவும், ஈராக் மற்றும் சிரியாவில் "பாசிச" பாத் கட்சிகளுக்கு எதிராகவும், மற்றும் சன்னி முஸ்லீம்களுக்கு எதிரான போரில் இறங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் உரையை பின்வருமாறு முடித்தார்:

''பயங்கரவாதிகளுக்கும், நோய்பிடித்த சூறையாடும் பேர்வழிகளான சதாம் ஹூசேனுக்கும், தன் விருப்பம்போல் ஆளுகின்ற, காட்டுமிராண்டிகளான சவூதி மன்னர் குடும்பத்திற்கும், நாம் சொல்ல விரும்புவது இதுதான்; இப்போது அவர்கள் ஒன்றை உணரவேண்டும், 100 ஆண்டுகளில் நான்காவது முறையாக நாம் தட்டியெழுப்பப்பட்டிருக்கிறோம் இந்த நாடு அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் நாங்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிற நாங்கள் ஒரே வழியில்தான் வெற்றிபெற முடியும். அந்த வழியில்தான் முதல் உலகப்போரில், வில்சனின் 14 அம்சங்கள் திட்ட அடிப்படையில் நாம் வென்றோம். இரண்டாவது உலகப்போரை சேர்ச்சிலும் மற்றும் ரூஸ்வெல்ட்டும் வகுத்த அட்லாண்டிக் சாசன அடிப்படையில் போரிட்டு வென்றோம், மற்றும் மூன்றாவது உலகப்போரை ஜனாதிபதி றேகன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய சிறப்பான கருத்துகளுக்காக போரிட்டு வென்றோம். ஜனாதிபதி ட்ரூமன் கூட ஆரம்பத்தில் மிக முக்கியமாக குறிப்பிட்டதைப்போல் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடத்துகின்ற போர் அல்ல, நாடுகளுக்கு இடையில் நடக்கின்ற போர் அல்ல. அது கொடுங்கோன்மைக்கு எதிராக சுதந்திரத்தை நிலைநாட்டுகின்ற போர்.

''இதற்கு காலம் அதிகமாகும். இது சிக்கல் நிறைந்ததாக இருக்கும். ஆனால் நாம் பயங்கரவாதிகளுக்கும், மற்றும் சர்வதிகாரிகளுக்கும் அப்போதைக்கப்போது நம்மீது நட்பாகயிருக்கின்ற தம்விருப்பம்போல் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் ஒன்றை தெளிவாக சொல்லிவிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். எங்களுக்கு தெரியும், நாங்கள் உங்களை அச்சுறுத்தப் போகிறோம் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்கின்றோம். அப்படி நீங்கள் எங்களைக் கண்டு பயப்படவேண்டுமென்றுதான் விரும்புகிறோம். 100 ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த நாடு அணிவகுத்து வந்துகொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். யாரைக் கண்டு மிகப்பெரிய அளவில் பயப்படுகிறீர்களோ அந்த உங்களது மக்கள் பக்கம்தான் நாங்கள் அணிவகுத்து வருகிறோம்.''

இத்தகைய ஆவேச உரையை கேட்ட பின்பு, மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இடமளித்தாலும், அவரது உரை ஹிட்லர் அல்லது மற்ற நாஜி தலைவர், ஜேர்மனியின் உலக வரலாற்றுக் கடமையை எடுத்துக்காட்டியதை ஒருவர் எளிதாக நினைவுபடுத்தலாம்.

வூல்ஸியின் உரையின் ஒரேயொரு மதிப்பு மிக்க அம்சம் என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று அபிவிருத்தியில் அது கவனம் செலுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் நாம் எழுப்பியிருந்த கேள்விக்கு வரலாற்று அடிப்படையில் அறிந்துகொள்ளுவதன் மூலம்தான் பதிலளிக்க முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த திடீர் வன்முறை வெடிப்பை மனித இனம் எப்படி சந்தித்து சமாளிக்கப் போகிறது? என்பதுதான் ஆரம்பத்தில் நாம் எழுப்பிய கேள்வி.

முதலாளித்துவத்தின் வரலாற்று முரண்பாடுகள்

முதலாவது உலகப்போரில் 1917 ஏப்ரல் மாதம் அமெரிக்கா தலையிட்டதுடன் மற்றும் அதன் வருகையை அமெரிக்கா உலக வல்லரசாக அறிமுகப்படுத்தியது. முதலாம் உலகப்போர், ஜனநாயகத்திற்காகவோ அல்லது வூட்ரோ வில்சனின் 14 அம்ச திட்டங்களுக்காகவோ நடாத்தப்பட்ட போர் அல்ல. அது பாரிய முதலாளித்துவ அரசுகள் உலக ஆதிக்கத்திற்காக தங்களுக்குள் நடத்திக்கொண்ட போராகும்.

இதற்கு முந்தைய 40 ஆண்டுகளில் மனித குல வரலாற்றில் மிகப்பெரும் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், உண்மையிலேயே முதலாளித்துவத்தின் மகத்தான வளர்ச்சியால் இந்த விரிவாக்கம் முன்னோக்கி இயக்கப்பட்டமை, புதிய வரலாற்று பிரச்சனைகளைத் தோற்றுவித்தன.

வர்த்தகம் மற்றும் நிதி வளர்ச்சி, உலகம் முழுவதிலும் இருந்து மூலப்பொருட்களும் இதர வளங்களையும் திரட்டல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், சர்வதேச அளவில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வலைப்பின்னல்கள் பரவலாக ஏற்படுத்தப்பட்டமை, சிறிய உரிமையாளர்கள் நடத்திய தொழிற்கூடங்களை இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற மிகப்பெரும் தொழில் நிறுவனங்களாக பிரதியீடு செய்தமை, இவை அனைத்தும் இவை முன்னர் அபிவிருத்தி அடைந்திருந்த தேசிய அரசு கட்டமைப்பைத்தாண்டி, உற்பத்தி சக்திகள் முழுமையாக சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்துள்ளன என்பதை அறிவிக்கிறது.

எப்படி உலகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்?

பெரிய முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றும், பொருளாதார வாழ்வை ஆதிக்கம் செலுத்திய, சக்திவாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இலாப தேவைகளால் உந்தப்பட்ட ஒவ்வொரு நாடும் தனது தேவைகள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தை ஒழுங்கமைக்க விரும்பின. ஆனால், இந்த நலன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன மற்றும் ஒருங்கிசைந்து போக முடியாதவை. அதன் விளைவாக, பெரிய அரசுகள் தவிர்க்கமுடியாத அளவிற்கு மிக ஆழமாக ஒன்றோடொன்று மோதிக்கொள்ள வேண்டிவந்தது. இந்த மோதல்களின் விளைவுதான் முதலாம் உலகப்போர்.

அதிலிருந்து இலாபம் சம்பாதிக்க விரும்பியதால், ஆரம்பத்தில் அமெரிக்கா இந்த மோதலில் இருந்து விலகி நின்றது. ஆனால், இறுதியில் அமெரிக்காவும் இராணுவ அடிப்படையில் தலையிடவேண்டி வந்தது. அதன் குறிக்கோள்களைப் பற்றி மிகச் சிறப்பாக, பகிரங்கமாக முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஆல் 1917ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கூறப்பட்டது. ''ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்'' என்பதற்காக அமெரிக்கா போருக்கு செல்லவில்லை என்பதை, அவர் வலியுறுத்திக்கூறினார். அதற்கு மாறாக, ''இந்த உலகம் நமக்கு பாதுகாப்பாக'' இருக்கவேண்டும் என்பதற்காக போருக்குச் செல்வதாக குறிப்பிட்டார். ''இது நமது போர், அமெரிக்காவின் போர். இந்தப் போரில் நாம் வெற்றிபெறாவிட்டால், ஏதாவதொரு கட்டத்தில், தனிப்பட்ட முறையில் நாம் ஜேர்மனியை கையாளவேண்டிவரும். எனவே, நமது சொந்த நலனை கருத்தில் கொண்டு நாம் ஜேர்மனியை வீழ்த்தவேண்டும்" (மேற்கோள்- புதிய ராஜ்ஜிய கொள்கைகளின் அரசியல் மூலங்கள்,'' ஆர்னோ மேயர். பக்கங்கள்- 344-345).

போர் தொடர்பான, மார்க்சிச இயக்கத்தின் அணுகுமுறை விஞ்ஞானபூர்வமான ஆய்வின் அடிப்படையில் அமைந்தது. இறுதியாக பார்க்கும்போது, அது தேசிய அரசு அமைப்புக்கு எதிராக உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சி ஆகும். ''தேசம் மற்றும் அரசு என்ற அடிமை விலங்குகளிலிருந்து விடுவித்து, உலக அளவில் மனித இனத்தின் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் ஒரு பொருளாதார வளர்ச்சியின் முற்போக்கான சூறையாடல்தனம் கொண்ட முதலாளித்துவ வெளிப்பாட்டை ஏகாதிபத்தியம் பிரதிநிதித்துவம் செய்கிறது" என்று இவ்வாறு ட்ரொட்ஸ்கி விளக்கம் அளித்தார். (புரட்சிகர அகிலத்துக்கான லெனின் போராட்டம் - நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டது. பக்கங்கள், 369-370).

முதலாளித்துவம் தானே உருவாக்கிய பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயலும் ஒருமுறைதான் ஏகாதிபத்திய போர். ஆனால் அதனால் முற்போக்கான தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை.

எவ்வாறாயினும் அது ஒரு புதிய சமுதாய சக்தியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை படைத்தது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் பூகோள அளவில் உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் சர்வதேச சோசலிச புரட்சி மற்றும் திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சி மூலம் அதாவது உலக உற்பத்தியாளர்களின் அறிவார்ந்த ஒத்துழைப்பின் மூலம், மனித இனத்தின் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பதற்கு அழைக்கப்பட்டது.

ஏகாதிபத்திய போர் அல்லது சோசலிச புரட்சி

இப்போது நாம் சுட்டிக்காட்டுகிற உற்பத்தி பூகோளமயமாதலிலிருந்து இரண்டு முரண்பட்ட முன்னோக்குகள் உருவாகின்றன. அதாவது உலகைப் பங்கிடவும் மற்றும் மறுபங்கீடு செய்யவுமான ஏகாதிபத்திய போரா அல்லது சோசலிச புரட்சியும் மற்றும் மனித இனத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த அடிப்படையில் உலகை மறு ஒழுங்கு செய்வதா என்ற கேள்விகள், முதல் உலகப்போர் ஆரம்பமாகிய நமது சகாப்தத்தை வரையறுக்க தொடர்ந்து வந்திருக்கின்றன.

முதலாம் உலகப்போரில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டதற்கு காரணம் ஜேர்மனி போன்ற தனது போட்டி நாடுகளைவிட தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு ஆகும். ஆனால் வெகுவிரைவில் மிகப்பெரிய ஆபத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளவேண்டிவந்தது. அது ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கையும் நிராகரித்த ரஷ்ய புரட்சி என்ற வடிவில் வந்தது.

ஒரு அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டதைப்போல், போல்ஷிவிக்குகளை பொறுத்தவரை பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தனிச்சொத்துடைமையையும் அங்கீகரிக்கவில்லை அல்லது தேசிய அரசைமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. முற்றிலும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டத்தை அவர்கள் அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவாக, ஏகாதிபத்திய அரசுகள் அமெரிக்கா முன்னிலை பங்குவகிக்க, போல்ஷிவிக்குகளின் புரட்சியை முறியடிக்க ஆயுத படைகளை அனுப்பின மற்றும் மத்திய ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் அது பரவாது தடுக்க வெறியுடன் முயன்றனர்.

''போல்ஷிவிக் புரட்சியை அழிக்க அல்லது கட்டுப்படுத்த முடிவு செய்த மூத்த பங்காளர்கள் அடங்கிய கூட்டணியில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது. இந்த குறிக்கோளை அடைவதற்காக கூட்டணி நாடுகளுக்கு பின்லாந்து, போலந்து, ரூமேனியா மற்றும் ஜேர்மனியின் இராணுவ சேவைகள் தேவைப்பட்டன. இந்த நாடுகளில் போல்ஷிவிக்குகளுக்கு எதிரான பிரச்சாரங்களால், பழமைவாதிகள் மற்றும் பிற்போக்கு சக்திகள் பயனடைந்தாலும் அதை விலையாகக் கொடுக்கத் துணிந்தார்கள்.'' (Mayer - பக்கம் - 22).

பிரிட்டனின் பாபியன் சோசலிஸ்டான பெயாட்ரிஸ் வெப் (Beatrice Webb), அவரது நாட்குறிப்பில், 1919ம் ஆண்டு, பாரீஸ் சமாதான மாநாட்டுக்கு வந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களை கவ்விப்பிடிந்திருந்த பயத்தை சுட்டிக்காட்டினார். ''ஆஸ்திரியாவில் மற்றொரு ரஷ்யாவை நாம் எதிர்கொள்கிறோமா, ஜேர்மனியிலும் அப்படியா, ஒரு கண்டமே கொந்தளிப்பான புரட்சியில் உள்ளதா'' (மேயர் - பக்கம் - 9).

அமெரிக்காவின் புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வாளர் தோர்ன்ஸ்டெய்ன் வெப்லன் (Thornstein Veblen), குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து, என்னவென்றால், "வெர்சைல்ஸ் சமாதான உடன்படிக்கை (Versailles Treaty) வாசகங்களில்", போல்ஷிவிசத்தை தோல்வியடையச் செய்யவேண்டும் என்ற முயற்சி பற்றி வாசகம் எதுவும் இல்லையே தவிர, அந்த உயிர்துடிப்பில்தான் அந்த வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார். (மேயர் , பக்கம் - 29).

ஏகாதிபத்திய அரசுகள் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை கூறிக்கொள்பவர்களும் தொழிற்கட்சிகளுடனும் இணைந்து அந்த புரட்சியை தனிமைப்படுத்துவதில் வெற்றி கண்டன. அந்த புரட்சியை தலைகீழாக கவிழ்க்க முடியவில்லை, ஆனால் தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவாக சீரழிவு ஏற்பட்டது மற்றும் ஸ்ராலின் தலைமையிலான அதிகாரத்துவம் தலைதூக்கியது. சர்வதேசிய முன்னோக்கும், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டமும் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற வேலைத்திட்டத்தால் பதிலீடு செய்யப்பட்டது.

புரட்சியை முதலாளித்துவ அரசுகள் கட்டுப்படுத்தியிருந்தாலும், மனித இன வளர்ச்சிக்கு புதிய வழிகளை காட்ட முடியவில்லை. அதற்கு மாறாக, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, பாசிசம், உள்நாட்டுப் போர் மற்றும் இராணுவ சர்வதிகாரம் கொண்ட இரு தசாப்தங்களைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் வெடித்தது.

இந்தப் போரில் அமெரிக்கா தலையிட்டது ஜனநாயகத்தை பாதுகாத்து நிற்கவேண்டும் என்ற நோக்கத்தாலோ அல்லது பாசிசத்தை வீழ்த்தவேண்டும் என்ற போராட்டத்திற்காகவோ அல்ல, இந்த ஆட்சிகளது சிறப்பியல்பைக்காப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜேர்மன் பாசிசத்தோடும் ஜப்பானிய இராணுவமயத்தோடும் சேர்ந்து செயல்பட்டிருக்கக்கூடும். இந்த நாடுகளது விரிவாக்கம் மூடப்பட்ட பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்துடன் மற்றும் அமெரிக்கா தனது உற்பத்தி சக்திகளின் மகத்தான வளர்ச்சிக்கு உலகம் முழுவதிலும் இடமளிக்க அமெரிக்காவிற்கு "கதவு திறத்தல்" தேவைப்பட்டது.

இதன் விளைவாக, ஜேர்மனியையும் ஜப்பானையும் போரில் வீழ்த்துவது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய அடிப்படையில் அமைந்த பொருளாதார ஒழுங்கமைப்பு--சாம்ராஜ்ஜிய முன்னுரிமை என்பதையும் ஒழித்துக்கட்ட அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் இறங்கியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில், அமெரிக்கா தனக்கு எதிராக சவால்விடக்கூடிய எந்த நாடும் இல்லாத அளவிற்கு முன்னணி முதலாளித்துவ சக்தியாக விளங்கியது. ஆனால், உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும்போது அது இன்னும் சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்ள வேண்டிவந்தது.

கட்டுப்படுத்துவது அல்லது பின்னுக்கு இழுப்பது

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் சோவியத் யூனியன் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய கொள்கை குறித்து ஒரு போராட்டம் வெடித்தது. அமெரிக்க மூலோபாயமானது கட்டுப்படுத்தல் அல்லது பின்னுக்கு இழுத்தல் -சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை ஒரேயடியாக தூக்கி எறிய வேண்டுமா? இந்த போட்டியின் விளைவை முடிவு செய்வதில் பல அம்சங்கள் சம்மந்தப்பட்டிருந்தன. போர் முடிந்த பின்னர், சோவியத் ஒன்றியத்தை கவிழ்ப்பது பெரும் ஆபத்துக்களை முன்வைத்தன. நாஜி ஆட்சியை கவிழ்ப்பதில் அதன் பணி காரணமாக சோவியத் ஒன்றியம் இராணுவ மற்றும் அரசியல் வல்லமையை பெற்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் போர் முடிந்ததும் மக்களிடையில் இடதுசாரி ஆதரவுப்போக்கு வளர்ந்தது மற்றும், முதலாளித்துவ அரசுகளின் காலனிகளில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

அப்படியிருந்தும், அது ஒரு முடிவு செய்யப்பட்ட பிரச்சனையாக இல்லை. கொரியப் போரில் தளபதி மெக்கார்தர் (MacArthur), சீனா மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தவேண்டும் என்று கோரினார். கியூபா உடன் நடைபெற்ற முறுகலில் அமெரிக்க இராணுவம் போரை ஆரம்பிக்க தயாராகயிருந்தது.

அப்படியிருந்தாலும், போருக்கு பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக அமெரிக்கா ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தும் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், 1970 களின் மத்தியில் போருக்கு பிந்திய பொருளாதார செழிப்பு ஒரு முடிவிற்கு வந்ததுடன் அமெரிக்கா தனது போட்டியாளர்கள் மீது செலுத்தி வந்த முழுமையான ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கியது. இதனால், ஒரு தெளிவான மாற்றத்தை காண முடிந்தது. பத்தாண்டு முடிவில், கார்ட்டர் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் தலையிடுவதற்கான திட்டத்தை ஏற்பாடு செய்தது. அதன் தெளிவான அறிவிக்கப்பட்ட நோக்கம் என்னவென்றால், ஆப்கானிஸ்தான் அரசியல் புதைசேற்றில் சோவியத் ஒன்றியத்தை இழுத்துவிட்டு அதை பலவீனப்படுத்தவேண்டும் என்பது.

எனவே, கட்டுப்படுத்தல் கொள்கை கைவிடப்பட்டதுடன் றேகன் நிர்வாகத்தில் சோவியத் ஒன்றியம் தொடர்பாக பெருமளவில் ஆக்கிரமிப்பு கொள்கை கடைபிடிக்கப்பட்டது. இந்த புதிய நோக்குநிலை உள்நாட்டு கொள்கையில் மாற்றத்துடன் கட்டுண்டிருந்தது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய உடன்பாடு (New Deal) என்பதில் சமூக நல சீர்த்திருத்தபோக்கு கைவிடப்பட்டது. அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச அளவில் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் முன்னாள் காலணி நாடுகளில் தேசிய அபிவிருத்தி திட்ட முன்நோக்கு இல்லாதொழிக்கப்பட்டு சர்ஙதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்படும் "பொருளாதாரத்தை சீர்திருத்த" திட்டங்களின் அழுத்தத்தின் கீழ் பூகோள சந்தை கட்டமைப்புக்குள்ளே தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு இந்த நாடுகள் நிர்பந்திக்கப்பட்டன.

1980 களின் இறுதியில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது நிலையை இனியும் நிலைநாட்ட முடியாது என்று உறுதியாக முடிவிற்குவந்துடன், ஒரே வழி சரணாகதி அடைவதுதான் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் கையிலிருந்து அதிகாரத்தை பறித்துக்கொண்ட பொழுது, 1920களின் நிகழ்ச்சிப் போக்கின் கடைசி நடவடிக்கையாக முதலாளித்துவத்தை புனருத்தானத்தை ஒழுங்கமைத்தது.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும், அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய வாய்ப்புக்களையும் புதிய சவால்களையும் சந்தித்தது. 1917 முதல், அமெரிக்கா பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்ட முடியாத அளவிற்கு தடைகல்லாகயிருந்த பிரதான இடையூறான சோவியத் ஒன்றியம் தற்போது இல்லை. இதர பிரதான முதலாளித்துவ அரசுகள் புதிய நிலையை பயன்படுத்தி அமெரிக்காவை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தடுப்பது சவாலாக இருந்தது.

1992 ஆரம்பத்தில் கெடுபிடிப் போருக்கு (Cold War) பிந்திய காலகட்டத்தில் வகுக்கப்பட்ட அமெரிக்க மூலோபாயத்தில் வரையப்பட்ட ஒரு அறிக்கைக்கு இந்தக் கண்ணோட்டங்கள் அடிப்படையாக இருந்தன. பாதுகாப்பு திட்ட வழிகாட்டி (Defence Planning Guidance-DPG) என்ற தலைப்பில், அன்றைய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பெளல் வொல்வோவிச் -இந்த அறிக்கையை தயாரித்தார். அப்போது அவருக்கு மேலதிகாரியான பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் இன்றைய துணை ஜனாதிபதி டிக் சென்னி ஆவார்.

''நமது முதலாவது குறிக்கோள், புதிய போட்டியாளர் மீண்டும் தோன்றிவிடாது தடுப்பது" என அறிக்கை குறிப்பிட்டது. புதிய பிராந்திய பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படையாக அமைந்துள்ள பிரதான கருத்து இதுதான் மற்றும் இதற்கு, எந்த எதிரி நாடும் பூகோள மேலாதிக்கத்துக்குப் போதுமானதாக இருக்கும் ஒரு பிராந்தியத்தின் வளங்களை உறுதியாய் கட்டுப்படுத்தி, அந்த பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவது தேவைப்படுகிறது. இந்த பிராந்தியங்களுள் மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, முன்னாள் சோவியத் ஒன்றிய எல்லைப்பகுதிகள், மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியன உள்ளடங்குவன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக எழக்கூடும் என்று கருதப்படும் போட்டி நாடுகள், பெருமளவிற்கு பிராந்திய அல்லது பூகோள மேலாதிக்கத்தை நாடுவதைக்கூட தடுத்து நிறுத்துகின்ற இயங்குமுறை ஒன்றை நிலைநாட்டல் "அமெரிக்காவிற்கு அவசியம் என்று அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது.

எவ்வாறிருந்தபோதிலும், 1990களின் ஆரம்பத்தில் உடனடியாக இந்த DPG அறிக்கைப்படி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இயலாமல் போய்விட்டது. தங்களின் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான செயல் வேலைத் திட்டத்தை உருவாக்குவதற்காக 1997ம் ஆண்டு ஒன்று சேர்ந்த புதிய பழமைவாதிகள் என அழைக்கப்படுபவர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தை இப்போது பல்வேறு அறிக்கைகளும் மற்றும் கட்டுரைகளும் அறிக்கைகளாக காட்டுகிறது. செப்டம்பர் 2000ல் அவர்கள், ஒரு பிரதான அறிக்கையை வெளியிட்டார்கள். ''அமெரிக்காவின் பாதுகாப்பை மீளக் கட்டி எழுப்பல்'' என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அவர்களது முன்னோக்கு 1992ம் ஆண்டு சென்னி உருவாக்கிய அறிக்கையின் அடிப்படையில் அமைந்திருந்தது. அந்தத் திட்டம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுதற்கான, பாரிய வல்லரசு போட்டியாளர் எழுவதைத் தடுப்பதற்கு மற்றும் அமெரிக்காவின் நலன்கள் மற்றும், குறிக்கோள்களுக்கு ஏற்ப சர்வதேச பாதுகாப்பை உருவாக்க ஒரு மாதிரி நகலை வழங்க வைண்டும்" அந்த திட்டத்தில் அவர்கள் கூறினர்.

பொருளாதாரச் சரிவு

பெளல் வொல்வோவிச் சென்னி மற்றும் இதர கூட்டாளிகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கம் தொடர்பாக உருவாக்கிய மூலோபாயம்தான் தற்போது புஷ் நிர்வாகத்தின் நடுநாயகமான செயல் திட்டமாக உள்ளது. இந்த தனிப்பட்ட மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட உறுதியான அரசியல் பிரச்சாரத்தின் விளைவுதான் இது என்று சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் நடத்திய பிரச்சாரங்கள் கூட அமெரிக்க முதலாளித்துவத்திற்குள்ளேயான மற்றும் உலக பொருளாதாரத்தில் அதன் நிலையின் ஏற்பட்ட ஆழ்ந்த மாற்றங்களின் அதனை எதிர் கொண்டதன் வெளிப்பாடுதான்.

1900-91ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது வளைகுடாப்போரில் அமெரிக்காவின் குறிக்கோள்களை விளக்குகையில், ஜனாதிபதி புஷ் அந்தக் குறிக்கோள் "புதிய உலக ஒழுங்கிற்கு" அடிப்படையை ஏற்படுத்தும் என்று விளக்கினார். ஆயினும், இரண்டாம் உலகப்போர் முடிவில், உலகை திரும்ப ஒழுங்கமைக்கப்போவதாக அமெரிக்கா கிளம்பிய நேரத்தில் எதிர்கொண்ட நிலைமையிலும் பார்க்க ஒருமாறுபட்ட நிலையை தற்போது அமெரிக்கா சந்திக்க வேண்டிவந்தது.

அந்த நேரத்தில் அமெரிக்கா முன்னணி கடன் வழங்கும் நாடாக, முதலீடுகளின் கேந்திர ஆதாரமான உலக தங்க கை இருப்பின் மூன்றில் இரண்டு பங்கிற்கு சொந்தக்கார நாடாக மற்றும் தொழில்துறை உற்பத்தியில் 50-சதவிகிதத்திற்கு சொந்தக்கார நாடாகவும் மற்றும் உழைப்பின் உற்பத்தித் திறனில் பரவலாக முன்னணியில் இருந்த நாடாக விளங்கியது. ஆயினும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அமெரிக்கா மாறுபட்ட சித்திரத்தை முன்வைக்கிறது. இது தற்போது உலகின் பிரதான கடன் வழங்கும் நாடாக இல்லாததுடன், கடனுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது மற்றும் இந்தப் போக்கில் 1900 களில் உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாறிவிட்டது. முந்திய காலத்தில், மேலாதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க நிறுவனங்கள் மேலாதிக்கத்திற்கு சவாலுக்கு ஆளாகி இருக்கின்றன.

தனது பலவீனம் அடைந்துவரும் பொருளாதார நிலையை சரிக்கட்டுவதற்காக ஒரு பிரதான வல்லரசு நாடு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது வரலாற்றில் முதல் தடவையல்ல. மேலும், மிகத் தீவிரமான உள்நாட்டுக் கொள்கையை மேற்கொள்ளுவதற்கான உந்து சக்திகளை வெளிநாடுகளில் மட்டும் காணப்படுவதில்லை. உள்நாட்டிலும் வலுவான காரணிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க முதலாளித்துவத்தில் உருவாகியுள்ள பொருளாதார மாற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நிதிமூலதன ஒட்டுண்ணித்தனம் வர்க்க உறவுகளில் மாற்றங்களை விளைவித்தன. அவை வர்க்க உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஏகாதிபத்திய வன்முறையை முன்னிலைப்படுத்துவதற்கான ஓர் குறிப்பிட்ட சமுதாய அடிப்படையை அமெரிக்காவிற்குள்ளேயே உருவாக்கின. 1990களில் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதாலோ அல்லது புதிய உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளாலோ பெரும்பாலும் பரவலாக செல்வம் குவிக்கப்படவில்லை மாறாக நிதி மோசடி, பங்கு சந்தை பேரங்கள், நிறுவனங்களின் ஒன்றிணைப்பு, நிறுவனங்கள் வேறு நிறுவனங்களால் கையேற்றல், 1990 களின் கடைசி பகுதியில் அப்பட்டமான மோசடிகள் மூலம் பரவலாக சொத்துக்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய முறைகள் எழுவது எப்போதுமே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இதயத்தில் நெருங்கிவரும் நெருக்கடியின் ஒரு குறிகாட்டலாகும். இது இலாப விகிதம் மீது கீழ்நோக்கிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது என்பதை குறித்துக் காட்டுகின்றது. மார்க்ஸ் விளக்கியுள்ளதைப் போல், மூலதனத்தின் தனிப்பிரிவுகள், அதிக அளவில் "பொதுவான மோசடிகளை" கட்டாயம் கையாளும், வெறிப்போக்கில் தொழில்களை ஆரம்பிக்கும் மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் சமூக சராசரிக்கு (Social average) மேலாக தனிமனித இலாப விகிதங்களை (Individual Profit Rates) நிலைநாட்டுவதற்கு இத்தகைய முயற்சிகளை செய்யும் பொருட்டு "புதிய சாகசங்களை" செய்யும்.

ஆனால், இறுதியில் இதுபோன்ற முறைகளால் மூலதனம் தனது பிரச்சனைகளை வென்றுவிட முடியாது. ஆனால் நிதிரீதியான ஊகவாணிபங்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் துறைசார் பணியாளர்களிடம் (professional layers) இருந்தும் "புதிய பணக்காரர்" உருவாக வழிவகுத்தது. இப்படி மேல்நோக்கி நகர்ந்த சமூக அடுக்கு, மக்கட் தொகையில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியாக இருந்தாலும், ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாய அடிப்படையை வழங்கின. "எண்ணெய்காக போர்" பற்றி எந்தக் கவலையும் இல்லாத நியூயோர்க் டைம்ஸ் தாராண்மை கட்டுரையாளர் தோமஸ் பிரைட்மன் மக்கள் தொகையினரின் இந்த பிரிவினருக்காக குரல் கொடுப்பவர்.

இலாப விகித வீழ்ச்சி மீண்டும் தோன்றியதன் விளைவாக மற்றொரு சமுதாய விளைவு உருவாயிற்று. கடந்த காலத்தில் வழங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் உறுதியாக பிடித்துக்கொண்டு நிற்பதன் மூலம் இலாப விகிதம் குறைந்துகொண்டு வருவதை தடுத்து நிறுத்த மூலதனம் முயன்றது. கடந்த 20 ஆண்டுகளைக் குறிக்கும் மிகப்பெரும்பாலான மக்களது வாழ்க்கைகளைப் பாதித்த சம்பளங்கள், சமூக நிலைமைகள் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள் மீதாக நடந்து கொண்டிருக்கும் தாக்குதலின் மூலம் இதுதான். வேறுவிதமாகச் சொன்னால், நிதிரீதியான ஒட்டுண்ணித்தனத்தை எழ வைத்த அதே நிகழ்ச்சிப்போக்கு சமூக துருவப்படுத்தல் ஆழமாவதை விளைவித்திருக்கிறது.

தற்போது, இராணுவமயத்தின் பொருளாதார மற்றும் சமூக மூலத்தை நாம் தெளிவாக காணமுடியும். உண்மையாய் முன் என்றும் எதிர்பார்த்திருந்திராத சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையின் வளர்ச்சியால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பதட்டங்கள் ஆழமடைந்துவரும் சூழ்நிலைமைகளின் கீழ், அதிகரித்து வரும் சமூக அழுத்தங்களுக்கு வெளிநாடுகளில் வடிகால் தேடுகின்ற ஒரு முயற்சியாக ஆளும் செல்வத்தட்டுக்கள் இராணுவமயத்தை துணையாக நாடுகின்றன. அதே நேரத்தில் இராணுவமயத்தை பயன்படுத்தி பூகோள சந்தைகளையும் மற்றும் பொருளாதார வளங்களையும் கைப்பற்றுவதை உறுதிப்படுத்துதல், இலாபத்திற்கான கூடுதல் ஆதாரங்களை உருவாக்குவதற்கு ஒரு வழிமுறையாகும்.

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான மோதல்

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்து வரும் வலியத் தாக்கும்தன்மை அதன் போட்டியாளர்களுக்கு என்றுமில்லா அளவு பெரும் மோதலுக்கு வழிவகுக்கிறது. போருக்கு பிந்திய அட்லாண்டிக் கூட்டு, ஒரு அமெரிக்க விமர்சகர் குறிப்பிட்டதைப்போல் "பாக்தாத்தின் சிதைபாடுகளில்" கிடக்கிறது என்ற உண்மை ஆழமான முக்கியத்துவம் உடையது. இறுதி ஆய்வில், இது ஏனென்றால் இலாபங்கள் வீழ்ந்துகொண்டு வருகின்ற சூழ்நிலையில், தொழிற்துறையின் எல்லாப் பிரிவுகளிலும் அளவிற்கு அதிகமான உற்பத்தித்திறன் நிலவுவதுடன், குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் பொதுவாக பணப் புழக்க தளர்ச்சி நிலவும் சூழ்நிலையில் உலகச் சந்தையே போர்க்களமாகிவிட்டது- அந்தப் போர்க்களத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருளாதார ஆயுதங்கள் இராணுவ வழிமுறைகளுக்கு வழிவிடுகின்றன.

ஈராக் மீது போரை ஆரம்பிப்பது தொடர்பாக, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான நடைபெற்ற மோதல்களும் தற்போது போருக்கு பிந்தைய ஈராக் தொடர்பாக நடைபெற்றுவரும் சர்ச்சைகள் எல்லாமே அந்த நாட்டின் பொருளாதார வளங்களை சுரண்டுவது சம்மந்தப்பட்டது தான். அது எண்ணெய் வளம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. இப்போது, தொலைதகவல் தொடர்பு ஒப்பந்தங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் போராடி நிலைநாட்ட வேண்டியநிலையில் இருக்கின்றன. தற்போது அமெரிக்கா ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கின்றது. முன்னாள் ஆட்சியால் ரஷ்யாவிற்கு தரவேண்டிய கடன்களை துடைத்து அகற்ற முயன்றுவருகின்றது. கொண்டலிசா ரைஸ் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். "ஈராக் விடுதலைக்காக" தங்களது "ரத்தத்தையும் உயிரையும்" தியாகம் செய்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இரண்டாம் உலக போருக்கு பிந்தைய கூட்டுக்களும், உறவுகளும் இனி திருப்பவே முடியாத அளவிற்கு நொருங்கிவிட்டன. சர்வதேச உறவுகள் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டை எதிர்த்து போராடும் வடிவத்தை எடுக்கிறது, ஒரு கட்டத்தில் உருவாக்கப்படும் கூட்டுக்கள் இன்னொரு கட்டத்தில் தேவை ஏற்படும்போது முறித்துக்கொள்ளப்படுகிறது. முதலாம் உலகப்போருக்கு முந்திய காலத்தில் இருந்ததைப்போல், துல்லியமான கூட்டுக்களை அனுமானிப்பது இயலாத காரியம். ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக கூறிவிட முடியும். உலகின் எல்லா பிரதான தலைநகரங்களிலும் இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் நாட்டு முன்னாள் பிரதமர் லோரன்ட் ஃபாபியுஸ் (Laurent Fabius) மார்ச் 26 அன்று பினான்சியல் டைம்ஸ் பத்திரிகையில், ''சிறந்த உலகிற்கு வலுவான ஐரோப்பா'' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையை கருத்தில்கொண்டு ஆராயலாம். சர்வதேச சட்டம் மற்றும், பன்முகத்தன்மை அடிப்படையில், "புதிய சர்வதேசியத்தை" பிரான்ஸ் விரும்புவதாக அவர் எழுதியிருக்கிறார். இது நிகழவில்லையென்றால் சமாதானத்திற்கு வழியில்லை என்று அவர் கூறுகின்றார்.

இந்தக் குறிக்கோள்கள் எப்படி அடையப்படும்? "ஒன்றுபட்ட ஐரோப்பாவை உருவாக்க வேண்டும் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு படையை விரைவில் உருவாக்கி ஆகவேண்டும்" என்ற அவசியத்தை இந்தப்போர் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறுகிறார். ஃபாபியுஸ் கருத்துப்படி, ''அமெரிக்கா ஐரோப்பாவின் குரலை பொருட்படுத்தும்படி செய்ய இயலவில்லை, அதற்குக் காரணம் ஐரோப்பாவிடம் ஒன்றுபட்ட பாதுகாப்பு படை இல்லை.'' இத்தகைய ஒரு பாதுகாப்பு படையை உருவாக்குவதன் மூலம் தான், பிரதான ஐரோப்பிய அரசுகளான, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தங்கள் பக்கம் முன்னாள் சோவியத் அணி நாடுகளை இணைத்துக்கொள்ள முடியும்.

இதை வேறு சொற்களில் விளக்குவது என்றால், ஃபாபியுஸ் படி, அமெரிக்க இராணுவமயம் திடீரென்று வெடித்துக்கிளம்பியுள்ளதால் குறிப்பிடப்படும் சர்வதேச சூழ்நிலைக்கு ஐரோப்பாவை மீண்டும் ஆயுதபாணியாக்குவது தேவையாகவுள்ளது. இதர முதலாளித்துவ நாடுகளும் இதே முடிவிற்குத்தான் வந்திருக்கின்றன.

ஏப்ரல் 7ம் திகதி அவுஸ்திரேலியன் பைனான்சியல் ரீவியூ பத்திரிகை செய்திப்படி, ஜப்பான் தனது இராணுவ பாதுகாப்பிற்காக அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜப்பானில் நிர்பந்தங்கள் உருவாகி வருகின்றன. 'தற்காப்பு நோக்கங்களுக்காக தாக்குதல் தொடுக்கும் ஆயுதங்கள்' டோமாஹாக் ஏவுகணைகள் (Tomahawk cruise missiles) மற்றும் தொலைதூர இலக்கு குண்டு வீச்சு போர் விமானங்களை பெறவேண்டும் என்ற நிர்பந்தங்கள் ஜப்பானுக்கு அதிகரித்துவருவதாக" அந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இந்த துணைக்கண்டத்தில் இந்திய அரசாங்க அமைச்சர்கள் ஈராக் மீது அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை பாகிஸ்தான் மீது இந்தியா முன்கூட்டி திடீர் தாக்குதல் நடத்தும் உரிமையை வழங்கியிருப்பதாக அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால் கடந்த சில நாட்களில் ஒரு பிரச்சனை தோன்றியுள்ளது.

சோசலிச முன்நோக்கு

உலக அரங்கில் தங்களது நலன்களை நிலைநாட்ட முயலுகின்ற பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள் 20ம் நூற்றாண்டைப்போல் 21வது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆயுதகுவிப்பு போட்டியில் இறங்கியுள்ளன.

ஈராக் தொடர்பாக பிரதான வல்லரசுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. சமாதானத்தை நிலைநாட்டுவதோ அல்லது ஈராக் மக்களின் எதிர்காலம் பற்றியோ அந்தப் பிரதான வல்லரசுகளுக்கு கவலையில்லை. அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஏற்படவிருக்கும் எதிர்கால நிலைமை பற்றி தான் அந்த வல்லரசுகள் கவலைப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவிற்கு ஈராக் மட்டுமே இறுதி இலக்கு அல்ல அதுதான் ஆரம்பம் என்பது தெளிவாகத் தெரியும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இராணுவ வலிமை கொண்டு தங்களது நலன்களை தாங்களே தற்காத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது அந்த நாடுகளுக்கு தெரியும். இதை வேறு வகையில் சொல்வதென்றால், மூன்றாம் உலகப்போருக்கான வித்து மட்டும் ஊன்றப்படவில்லை, அவை வளர்ந்து வெடித்து செடியாக முளைவிட ஆரம்பித்துவிட்டது.

இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறைக்கு எதிர்ப்பு என்பது, ஏதாவதொரு முதலாளித்துவ நாடு அல்லது முதலாளித்துவ நாடுகளின் கூட்டணிக்கு ஆதரவை அடிப்படையாக்க் கொண்டிருக்க முடியாது. ஏகாதிபத்திய வன்முறைக்கு எதிர்ப்பை சிராக் பிரதிநிதித்துவபடுத்தவில்லை. அவர் வேறொரு வடிவில் அதனை வெளிப்படுத்துகிறார்.

ஏகாதிபத்திய முதலாளித்துவம் மனித இனத்திற்கு உருவாக்கியுள்ள நெருக்கடியை தீர்த்து வைக்கிற ஒரேயொரு சமுதாய சக்திதான் உண்டு. அந்த சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம். அந்த சக்தி தனது சொந்த சுயாதீனமான சோசலிச முன்னோக்கு அடிப்படையில் உலகை மறு ஒழுங்கமைக்கும் வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதற்கு மனித இனம் பயங்கரமான விலையை தரவேண்டிவந்தது.

ஆனால் தற்போது வரலாறு அந்தப் பிரச்சனையை நம்முன் புதிதாய் முன் வைத்திருக்கிறது. அதே நேரத்தில், பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கான நிபந்தனைகளையும் உருவாக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் புத்துயிர்ப்பைப் பெறவைத்த பூகோளமயமாதலில் வேரூன்றி உள்ள முதலாளித்துவ உற்பத்திப்போக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான அடிப்படையையும் உருவாக்கி இருக்கிறது.

ஆனால் வரலாறு மிகக்கடுமையாக வேலை வாங்கும் மேலாளரைப் போன்றது. 20ம் நூற்றாண்டில் சோசலிச புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டு மற்றும் தோல்வியுற்றதால் எழுகின்ற அனைத்துப் பிரச்சினைகளையும் கூட வரலாறு நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் முன்னோக்கு நெருக்கடியில் நனவுபற்றிய நெருக்கடியில் இப்பிரச்சினைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு, தங்களது போராட்டங்களை நடத்துவதற்கு மற்றும் அரசியல் அதிகாரத்தை தங்கள் சொந்த கைகளில் எடுத்துக்கொள்வதற்கு இதுவரை எந்த வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் முழு நிலமைக்குமான திறவுகோல் ஆகும். இந்த பணிக்குத்தான் உலக சோசலிச வலைத் தளம் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. இந்தப் பணி சிக்கலானதா? ஆம், மிகவும் சிக்கலானதுதான். ஆனால், அதைத்தவிர வேறு வழியில்லை. ஒன்று, சோசலிச புரட்சி உருவாக வேண்டும் அல்லது மனித இனம் மீண்டும் காட்டுமிராண்டித்தனத்தின் மிகக்கொடூரமான வடிவங்களுக்குள் வீழ்ந்துவிடும் --இவைதான் எம் முன்னுள்ள மாற்றுவழிகளாகும்.

சோசலிச தலைமையை உருவாக்குகின்ற பணி மிகவும் கடுமையானது. ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவம் ஜனநாயகத்தை சமாதானம், உலக மக்களின் செல்வ செழிப்பு ஆகியவற்றோடு சமரசமாக இணைந்து செல்வது இயலாத காரியமாகும்.

எனவே சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக கட்டுவதில் உங்கள் பங்கை ஆற்றவும், எங்களது வேலைத்திட்டங்கள் மீது நீங்கள் மிகவும் அவசரமான கவனம் செலுத்தவேண்டும் என்று உங்களை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

See Also :

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு

கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page