World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Journalists' organizations demand inquiry US bombs Al-Jazeera center in Baghdad பத்திரிகையாளர் அமைப்புக்கள் விசாரணை கோருகின்றனர் பாக்தாத் அல்- ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் அமெரிக்கா குண்டுவீசித்தாக்குதல் By Henry Michaels பாக்தாத் நகரில் ஏப்பிரல் 8-ந்தேதி அமெரிக்க இராணுவப்படைகள் இரண்டு நிகழ்ச்சிகளில் மூன்று பத்திரிகையாளர்களைக் கொன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பத்திரிகையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. இப்படிக் கொல்லப்பட்டவர்களில் அல்-ஜஸீரா- நிருபர் தாரிக் அயூப் (Tariq Ayoub) ஒருவர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். ஈராக் தலைநகர் முழுவதிலும், அமெரிக்கப்படைகள் பெருமளவில் கொன்று குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 34-வயதான ஜோர்டானைச் சேர்ந்த பாலஸ்தீனரான அயூப், அல் ஜஸீராவின் பாக்தாத் அலுவலகத்தில் நேரடியாக நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார். உயிர் தப்பிய அல்-ஜஸீரா ஊழியர்கள் அருகாமையில் உள்ள போட்டி செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிலையமான அபுதாபி T.V-யில் தஞ்சம் புகுந்தனர். அதற்குப் பின்னர் அபுதாபி T.V- நிலையமும் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காயிற்று. ஒரு கட்டத்தில் அபுதாபி டி.வி- நிருபர் ஷாகீர் ஹமீது (Shaker Hamed), வானொலி தகவல் தொடர்பு மூலம் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தார். ''பாக்தாத்தில் உள்ள அபுதாபி டி.வி- அலுவலகங்களில் அபுதாபி தொலைக்காட்சி, கத்தார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் அல்-ஜஸீரா -ஆகியவற்றைக் சேர்ந்த 25-பத்திரிகையாளர்கள் இருக்கின்றோம். நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம்'' என அவர் அவசர அழைப்புவிடுத்தார். ஹமீது, செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழு, பத்திரிகையாளர் சர்வதேச அமைப்பு (International Organization of Journalists), நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிருபர்கள் அமைப்பு (Reporters Sans Frontieres), அரபு பத்திரிகையாளர் யூனியன் ஆகியவற்றிற்கு, ''எங்களை உடனடியாக இந்த பிராந்தியத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு தலையிடுங்கள், இந்த பிராந்தியத்தில் ராக்கட்டுகளும், குண்டுகளும், நம்பமுடியாத வகையில் தாக்கிக்கொண்டிருக்கின்றன'' என அவசர உதவி கோரினார். அல்-ஜஸீரா தாக்குதல் நடந்து சற்று நேரத்தில் ஒரு அமெரிக்க டாங்கியிலிருந்து பாலஸ்தீன ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு புகைப்பட பிடிப்பாளர்கள் பலியாயினர். அந்த ஹோட்டலில் 200-க்கு மேற்பட்ட சர்வதேச நிருபர்கள் தங்கியுள்ளனர். ஏறத்தாழ அனைவரும் "இராணுவப் பிரிவுகளோடு இணைக்கப்படாத" ("Non-embedded") நிருபர்கள். பலியானவர்களில் ஒருவர் ராய்டர்ஸ் புகைப்பட பிடிப்பாளர் டாராஸ் பிராட்சுயுக் (Taras Protsyuk) (வயது-35) அவர் உக்ரேன் பிரஜை. மற்றொருவர் ஜோஸ் கெளசோ (Jose Couso) (வயது-37) டெலிசிங்கோ (Telecinco) என்ற ஸ்பெயின் நாட்டு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியவர். செய்தி ஊடகங்களைச் சேர்ந்த மற்ற 3-பேர் காயமடைந்தனர். அல்-ஜஸீரா தொலைக்காட்சி அலுவலகம் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி-23 அன்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட்டுக்கு அல்-ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் ஒரு கடிதம் எழுதி, அந்த அலுவலகம் இருக்கிற எல்லையை சரியாக குறித்து அனுப்பியது. அமெரிக்கப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்திவிடாது தடுப்பதற்காகத்தான் இவ்வாறு முன்கூட்டியே கடிதம் எழுதப்பட்டது. அயூப்பும், அவருடன் சேர்ந்த ஜூஹைர் (Zuheir) என்ற ஈராக்கிய புகைப்பட பிடிப்பாளரும், அந்த தொலைக்காட்சி நிலையமாடியில் நின்று கொண்டு நேரடி ஒளிபரப்பிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது ராக்கெட்டுகள் அந்த நிலையத்தை தாக்கின, கட்டிடம் நொருங்கியது, ஜூஹைர் கழுத்தில் குண்டு பாய்ந்து காயம் பட்டிருக்கிறது. அல் ஜஸீரா குழுவை அழிவில் விட்டது. அருகாமையிலிருக்கும் பாலஸ்தீன ஹோட்டலில் தங்கியிருக்கும்; BBC- நிருபர் ரகே ஒமார் (Rageh Omaar) இந்த தாக்குதல் சந்தேகத்திற்குரியது என்று கருத்து தெரிவித்தார். ''நாங்கள் குண்டு வீச்சை கவனித்துக்கொண்டு படம்பிடித்துக்கொண்டிருந்தோம். எனவே அல்-ஜஸீரா அலுவலகத்தின் மீது நேரடியாக குண்டு தாக்குதல் நடந்தது, தெளிவாக தெரிந்தது. இது ஏதோ குண்டு தவறிவிழுந்ததல்ல, திட்டமிட்டு இலக்கு குறித்து நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகிறது'' என ஒமார் குறிப்பிட்டார். அருகாமையில் எந்த இராணுவ இலக்கும் இல்லை, அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அம்மான் பகுதி நிருபர் யாசர் அபு ஹிலாலா (Yasser Abu Hilalah) இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என கூறுகிறார். ''மக்கள் குடியிருக்கின்ற பகுதியில் அல்-ஜஸீரா அலுவலகம் அமைந்திருக்கிறது. எனவே, எந்த வகையில் பார்த்தாலும் அது தவறாக நடத்தப்பட்ட தாக்குதலாக தெரியவில்லை.'' என்று அவர் குறிப்பிட்டார். அல்-ஜஸீரா பாக்தாத் நிருபர்களில் உயிர்தப்பிய ஒருவர், மஜீத் அப்துல் ஹாதி (Majed Abdel Hadi), இவர் அமெரிக்க ராக்கெட் தாக்குதல் ஒரு கிரிமினல் குற்றம், அந்த தாக்குதல் அமெரிக்காவின் நோக்கங்களை காட்டுகிறது என்றார். "ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்கா புரிந்துவரும் குற்றங்களை உலகம் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக, அதை விரும்பாத அமெரிக்கா எங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறது" என அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் அல்-ஜஸீரா அலுவலகங்கள் மீதும் ஊழியர்கள் மீதும் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் பற்றியும் அவர் விளக்கினார். 2001-ல் அமெரிக்க தலைமையில், ஆப்கனிஸ்தான் மீது படையெடுப்பு நடத்திய ஆரம்ப நாட்களில், காபூலில் இருந்த அல்-ஜஸீரா அலுவலகங்கள், அமெரிக்க ராக்கெட்டுகளால் தகர்க்கப்பட்டன. சென்ற வாரம் பாஸ்ராவில் அல்-ஜஸீரா நிருபர்கள் தங்கியிருந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு குண்டுகள் வீசப்பட்டன, அவை வெடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ராக்கெட் தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள் அமெரிக்கப்படைகள் அல்-ஜஸீரா மற்றும் அபுதாபி தொலைக்காட்சி வாகனங்கள் மீது சுட்டார்கள். ஈராக் தகவல்துறை அமைச்சர் முஹம்மத் சயீத் அல்-சாப் (Saeed Al Sahhaf)- நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அபுதாபி தொலைக்காட்சி குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த தங்களது வாகனங்களில் ஒன்றை நோக்கி அமெரிக்கப் படைகள் சுட்டன, ஆனால் பத்திரிகையாளர்கள் எவரும் காயம் அடையவில்லை என்றார். அல் ஜஸீரா அடையாளச் சின்னத்துடன் வந்து கொண்டிருந்த கார் மீது "பாக்தாத்திற்கு வெளியில் நெடுஞ்சாலையில், அமெரிக்கப் படைகள் சுட்டதாக" கார் டிரைவர் கூறினார். பாஸ்ராவில் அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு நான்கு ஊழியர்கள் உள்ளனர். ஈராக் அரசு அதிகாரிகள் உணவு வழங்குவதை படம் பிடித்த ஒரே பத்திரிகையாளர்களாகிய தங்களது குழுவினர் மீது மார்ச்-29-ந் தேதியன்று பிரிட்டனின் டாங்கிகள் சுட்டன. பாஸ்ரா நிலைய புகைப்பட பிடிப்பாளர் அகில் அப்துல் ரீடா (Akil Abdel Reda) காணாமல் போய்விட்டார். அவரை 12-மணி நேரம் அமெரிக்கப் படைகள் பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஈராக் போர் தொடங்கிய பின்னர் அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த தொலைக்காட்சி நிலையத்தை ஈராக்கின் பிரசாரம் என்று பட்டம் சூட்டினாலும், மக்கள் ஆதரவு சர்வதேச அளவில் பெருகிவருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஈராக் அரசாங்கம் அதன் ஒலிபரப்பு உரிமையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. அல்-ஜஸீராவின் சந்தாதாரர்கள் தொகை ஐரோப்பாவில் இரட்டிப்பாகி உள்ளது. தற்போது அந்த தொலைக்காட்சிக்கு மூன்றரை கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். அல்-ஜஸீரா வலைத் தளம் இன்டர்நெட்டிலேயே சென்ற வாரம் பெரிதும் விரும்பப்பட்ட வலைதளம் ஆகும். அடிக்கடி வலதுசாரி மோசடிப்பேர்வழிகள் அந்த வலைத் தள இணைப்பை துண்டித்து வருகிறார்கள். ஈராக்கில் பிடிபட்ட, மாண்ட அமெரிக்க போர் வீரர்கள் தொடர்பாக ஒளிபரப்பு செய்ததைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும், தீவிரமான அளவிற்கு பார்வையாளர்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்தக் காட்சிகளை அமெரிக்க தொலைக்காட்சி, அலைவரிசைகள் ஒளிபரப்ப மறுத்துவிட்டன. மாண்டுவிட்ட போர் வீரர்களின் மற்றும் காயமடைந்தவர்களது குடும்பங்கள் அனைத்தும் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறவரை அத்தகைய காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம், என்ற அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கையை பின்னர் அல் ஜஸீரா மதித்து ஏற்றுக் கொண்ட போதிலும், ஆரம்பத்தில் அந்த ஒளிபரப்பு தொடங்கியதும் வாஷிங்டனும் லண்டனும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. அண்மை வாரங்களில் அமெரிக்காவின் போர் ஆதரவாளர்கள் அல்-ஜஸீராவிற்கு இடைவிடாத பொருளாதார மற்றும் அரசியல் நிர்பந்தங்களை கொடுத்துவருகின்றனர். நியூயோர்க் பங்கு சந்தையிலும், நாஸ்டாக் பங்கு சந்தையிலும், அல்-ஜஸீரா நிருபர்கள் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களின் குறிப்பான கோபத்திற்கு அல்-ஜஸீரா இலக்காகியிருக்கிறது. பாக்தாத்திலும் இதர பகுதிகளிலும் நடைபெற்று வருகின்ற கொடுமைகள் பற்றி நடுநிலையான தகவல்கள் வருவதை தடுத்துவிட இரண்டு அரசாங்கங்களும் உறுதியாக முயன்றுவருகின்றன. முக்கியமாக அவர்கள் புகார் கூறுவதற்கு எதுவும் இல்லை. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, மேலைநாட்டு நிருபர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அதிகாரபூர்வமான தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரசுரிக்கின்றனர். படையெடுப்பு ஈராக்கின் விடுதலைக்கான நடவடிக்கை என்றே சித்தரிக்கிறார்கள். ஈராக் இராணுவத்தினரும், குடிமக்களும், பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதுகுறித்து உயிர்சேதங்கள் குறித்து உண்மையான தகவல்களைத் தராமல் தவிர்த்துவிடுகின்றனர். ஈராக் தலைநகரில் தற்போது நடைபெற்றுவரும் படுகொலைகளை மூடி மறைத்துவிட முடியவில்லை, தீவிர வலதுசாரி பத்திரிகையாளர் என்று கருதப்பட்டுவரும் டோரன்டோ ஸ்டார் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான ரோசி டி மானோ (Rosie Di Manno) - ஏப்ரல்-8-ந்தேதி தந்திருக்கின்ற தகவலின்படி சரணடைவதாக தோன்றிய ஒரு ஈராக் ராணுவ வீரரை அமெரிக்கப்படைகள் சுட்டதை தான் பார்த்ததாக குறிப்பிட்டார். அல்-ஜஸீரா அலுவலகங்களை குறிவைத்து, வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என பென்டகன் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். "இராணுவ இலக்குகள் நிறைந்த பகுதியில்" அந்த அலுவலகங்கள் உள்ளன. "பொதுவான சுதந்திர உரிமைகளை மதிக்கின்ற ஒரு நாடு ஊடகங்களை குறிவைத்து தாக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை" என்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நபில் கெளரி (Nabil Khoury ) செய்தி வலைப் பின்னலிடம் தெரிவித்தார். ஆனால் கத்தாரில் உள்ள அமெரிக்க மத்திய இராணுவத் தலைமை, புகைப்பட பிடிப்பாளர் அயூப்பின் இறப்பு பற்றிய செய்திகளை விசாரணை செய்து வருவதாக அறிவித்தது. அத்துடன் மறைமுகமாக ஒரு எச்சரிக்கையையும் விடுத்து இருக்கிறது. ''கூட்டணிப் படைகள் ஈராக் ஆட்சியுடன் நேருக்குநேர் சண்டையிடுகின்ற கட்டத்தில் பாக்தாத் ஒரு ஆபத்தான இடமாக மாறிவிடும் என்று ஊடக பிரதிநிதிகளுக்கு திரும்பத்திரும்ப மத்திய இராணுவத் தலைமை எச்சரிக்கை விடுத்தது'' என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பாலஸ்தீன ஹோட்டல் மீது தாக்குதல் பாலஸ்தீன ஹோட்டலில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 14-வது மாடியிலிருந்து 17-வது மாடிவரை சேதம் அடைந்தன. ராய்டரின் அலுவலகம் 15-வது மாடியில் உள்ளது. துபாயின் அல் அராபியா- தொலைக்காட்சி அலைவரிசையின் அலுவலகம் 17-வது மாடியில் உள்ளது. தனது அலுவலக மாடி சேதமடைந்ததாக அந்த தொக்காட்சி நிலையம் தெரிவித்தது. ஹோட்டலின் முகப்பில் அமெரிக்க குண்டுபாய்ந்த துவாரம் தெரிகிறது. ஜன்னல்கள் சிதறின. அந்தக்கட்டிடம் முழுவதும் அதிர்ச்சியடைந்தது, பல ஊடக ஊழியர்கள் உயிர் பிழைப்பதற்காக முன்பகுதியை நோக்கி ஓடிவந்தனர். அமெரிக்க படைகளை நோக்கி ஈராக்கைச் சேர்ந்தவர்கள் அந்த ஹோட்டலில் இருந்து சுட்டதாகவும் எனவே டாங்கிகளிலிருந்து அவர்களை நோக்கி திருப்பிச் சுட்டதாகவும் பென்டகன் தெரிவித்தது. ஆனால் BBC- யைச் சேர்ந்த பால் உட் இது பற்றி தெரிவிக்கும்போது ''இந்தக் கட்டிடத்திலிருந்து வெளியில் எவரும் சுட்டதை பார்க்கவும் இல்லை; கேட்கவும் இல்லை. தனிப்பட்டவர்கள் சுட்டதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் குண்டு வெடித்ததும்தான் தங்களை மறைத்துக் கொள்வதற்காக சுடுவார்கள். நாங்கள் அது பற்றி உறுதியாக சொல்லமுடியாது ஆனால் இந்த ஹோட்டலை ஈராக்கியர்கள், அமெரிக்கர்களை நோக்கி சுடுவதற்கு பயன்படுத்தினார்களா! என்பது எங்களுக்கு தெரியாது. அந்த ஹோட்டலிலிருந்த ஸ்கை நியூஸ் நிருபர் டேவிட் சேட்டர் (David Chater) தான் ஆற்றுக்கு மேல் உள்ள பாலத்தில் ஒரு டாங்கியை பார்த்ததாகவும், அந்த டாங்கியின் பீரங்கி குண்டு வெடிக்கப்படும் முன்னர், கட்டிடத்தை நோக்கி நேரடியாக திரும்பியிருந்ததாகவும் குறிப்பிட்டார். ''நாங்கள் அங்கு இருந்தது, அவர்களுக்கு தெரியும் அதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்த இடத்தை சுற்றிலும் இருந்தோ, அல்லது ஹோட்டலில் இருந்தோ, துப்பாக்கி சுடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக இந்த ஹோட்டலில் இருந்து எவரும் சுடவில்லை. டாங்கியின் குண்டு உண்மையிலேயே அமெரிக்க டாங்கியின் குண்டு, நேரடியாக இந்த ஹோட்டலையும் மற்றும் நேரடியாக பத்திரிகையாளர்களையும் நோக்கி பாய்ந்தது. அது தற்செயலாக நடந்துவிட்ட விபத்து அல்ல, அது மிகத்துல்லியமாக சுடப்பட்ட குண்டு'' என்று சேட்டர் குறிப்பிட்டார். பிரான்ஸ்-3- தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திப்படத்தில் அந்த ஹோட்டல் மீது திட்டமிட்டு அமெரிக்க டாங்கிகள் சுடுவது காட்டப்பட்டது. அந்த தாக்குதலை படம் பிடித்த பத்திரிகையாளரான ஹெர்வ்-டி-லோக் (Herve de Ploeg) ''அமெரிக்க டாங்கிகள் அந்தக் கட்டிடத்தை நோக்கிவந்தன. தங்களது பீரங்கி முனைகளை அந்தக் கட்டிடத்தை நோக்கித்திருப்பின. குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் காத்திருந்து சுட்டன. அல்-டுமூரியா பாலத்தின் மேற்கு நுழைவு வாயிலில் ஹோட்டலுக்கு தென்மேற்கே, 600-மீட்டரில் அந்த டாங்கி நின்று கொண்டிருந்தது. அந்த டாங்கியை நோக்கி எவரும் சுட்ட சத்தம் எனக்கு கேட்கவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார். ''அந்த நேரத்தில் அமைதி நிலவியது துப்பாக்கியால் எவரும் சுடவில்லை, அப்போது நான் பார்த்தேன் பீரங்கி வண்டியின் சுடும்முனை எங்களை நோக்கி திரும்பியது, பீரங்கி உயர்த்தப்பட்டது. இலக்கிற்கு நேராக வந்தது. எனவே உணர்ச்சி வேகத்தில் தற்செயலாக சுடப்படவில்லை. அதைப்பற்றி நான் மிகத்திட்டவட்டமாக கூறுவதற்குக் காரணம் அப்போது நேரடி ஒளிபரப்பிற்கு நான் தயாராகிக் கொண்டிருந்தேன்" என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த ஓட்டலில் இருக்கும் இதர பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களது எதிர்கால பாதுகாப்பு குறித்து கலவரம் அடைந்தனர். ராய்டர்ஸ் தலைமையாசிரியர் கீட் லைன்பேங்க் (Geert Linnebank), ''இந்த சம்பவம்.......... முன்னேறிக் கொண்டிருக்கின்ற அமெரிக்கப் படைகளின் குறிக்கோள் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன. ஏனென்றால் இந்த ஓட்டல் பாக்தாத்தில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் பிரதான தங்குமிடம் என்பது அமெரிக்கப் படைகள் அனைவருக்கும் தெரியும்''- என குறிப்பிட்டார். பாக்தாத் நகரின் நடுப்பகுதிக்குள் டைகிரிஸ் ஆற்றின் பாலங்களைக் கடந்து வந்து கொண்டிருக்கின்ற அமெரிக்க துருப்புக்களை நோக்கி அந்த ஓட்டல் பகுதியிலிருந்து ராக்கெட் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், துப்பாக்கிகளால் சுடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாவது அமெரிக்க காலாட்படைப் பிரிவு தளபதி ஜெனரல் பூபோட் பிளோன்ட் (General Buford Blount) ராய்டருக்கு தந்துள்ள தகவலின்படி பதிலுக்கு டாங்கியிலிருந்து ஒரு குண்டு வெடிக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டல் தாக்கப்பட்டது என்ற உடன் அந்தக் கட்டிடத்தின் மீது சுடுவதை நிறுத்திக் கொள்ள அமெரிக்க இராணுவம் சம்மதித்ததாகவும் குறிப்பிட்டார். கத்தாரில் உள்ள அமெரிக்க மத்திய இராணுவ தலைமையக அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் வின்சென்ட் புரூக்ஸ் சதாம் ஹூசேன் மீது பழிபோட்டார். பாலஸ்தீன ஓட்டலை ஆட்சியின் இதர நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறினார் இந்தக் குற்றச்சாட்டை அந்த ஓட்டலில் தங்கியிருக்கும் பத்திரிகையாளர்கள் மறுத்தனர். வேறு நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். பத்திரிகையாளர்கள் கண்டனம் உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்களும் மற்றும் சில அரசாங்கங்களும் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்துள்ளனர். பாலஸ்தீன மேற்குக்கரை நகரங்களான நாபுலஸ் மற்றும் பெத்தலஹேம் நகர்களில் பல பத்திரிகையாளர்கள் பேரணி நடத்தி கண்டனம் தெரிவித்தனர். பாலஸ்தீன பத்திரிகையாளர் சங்கம் அல்-ஜஸீரா அலுவலகங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் "திட்டமிடப்பட்ட போர்குற்றச் செயலாகும், சர்வதேச சட்டங்களையும், ஒப்பந்தங்களையும், அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும்" என கண்டித்தது. இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் "பத்திரிகையாளர்களுக்கு எதிராக இஸ்ரேலியப்படைகள் இதே வகையான காட்டுமிராண்டி முறைகளைத்தான் கையாளுகின்றன" என அது கூறியது. அம்மானில் உள்ள ஜோர்டான் பத்திரிகை அமைப்பின் அலுவலகத்திற்கு வெளியில் ஜோர்டான் பத்திரிகையாளர்கள் தரையில் அமர்ந்து கண்டனங்களை எழுப்பினர். ஈராக்கில் "பத்திரிகையாளர்கள் மற்றும் சிவிலியன்கள் படுகொலையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். சங்கம் தனது அவசரக் கூட்டத்தில் அயூப் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. "அமெரிக்கப்படைகள் மேற்கொண்டுள்ள படுகொலைகள், காட்டுமிராண்டித் தனமான அழிவு வேலைகள் ஆகியவற்றைப்பற்றி செய்தி ஊடகங்கள் செய்தி தருவதை தடுத்து நிறுத்தும் வகையில் ஊடகங்களை குறிவைத்து" தாக்கி வருவதாக அமெரிக்காவை அந்த தீர்மானம் கண்டனம் செய்திருக்கிறது. மொரோக்கோ தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் அமெரிக்கப் படைகள் தெரிந்தே பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் யூனஸ் முஜாஹித் (Younes Moujahid) இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, "பத்திரிகையாளர்களை பயமுறுத்தும் நோக்கில் இதை செய்கிறார்கள், கொலைகள் தொடர்கின்றன, அவை மோசமடையக்கூடும்" என்று அவர் கூறினார். அமெரிக்க இராணுவம் "தனது அறிக்கைகளில் எல்லாம் போர் தொடங்கியதில் இருந்தே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது". "தங்களது இராணுவ மூலோபாயத்திற்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களை அமெரிக்கா விரும்புவதாக" அவர் குறிப்பிட்டார். "பத்திரிகைகள் தங்களது கடமைகளை செய்ய விடாது தடுக்கும் நோக்கிலேயே" அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் பணியாற்றி வருவதாக அரபு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் செய்திருக்கிறது. சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் "பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்கப்படுவதில் சந்தேகமில்லை என்று கூறியிருக்கிறது. பிரஸ்ஸல்சை தளமாகக் கொண்ட அமைப்பின் தலைவரான, அய்டன் வைட் (Aidan White) வெளியிட்டுள்ள அறிக்கையில் ''அது உண்மையாக இருக்குமானால் அவை மிக பயங்கரமானவை, மற்றும் சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுபவை'' என்று குறிப்பிட்டார். இத்தாலிய பத்திரிகையாளர் சம்மேனத் தலைவர் பாலோ சேர்வன்டி லோங்கி (Paolo Serventi Longhi), இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்கும்போது பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு "முற்றிலும் பாதுகாப்பு இல்லாத நிலை" ஏற்பட்டிருக்கிறது. இத்தாலி அரசாங்கம் உடனடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் தலையிட்டு பத்திரிகையாளர்கள் தங்கியிருக்கின்ற இடங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்தக்கோர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ஜேர்மனியில் சுதந்திர பத்திரிகையாளர் சங்கம் பேர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கண்டன குறிப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறது. ரஷ்யாவின் பத்திரிகை சுதந்திர ஆர்வலர்கள் இந்த கொலைக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஐரோப்பிய யூனியன் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளில் அமெரிக்கா- பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்குவதை கைவிட்டு விடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தனது நாட்டு பிரஜை ஒருவர் பலியாகியிருப்பதால் ஸ்பெயின் அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமான விளக்கம் கேட்கப் போவதாக கூறியிருக்கின்றது. எல்லைகள் கடந்த நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders) இந்த மரணங்கள் குறித்து விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. மார்ச்-22 அன்று பாஸ்ரா அருகில் பிரிட்டனின் ITV- பத்திரிகையாளர் டெரி லாய்ட் (Terry Lloyd) அமெரிக்கப் படைகள் சுட்டு இறந்துவிட்டார். போரின் தொடக்க நாட்களில் படைப்பிரிவுகளோடு இணைக்கப்படாது தனிப்பட்ட முறையில் சென்ற வெகுசில பத்திரிகையாளர்களில் லாயிட் ஒருவர் அவர் பாஸ்ராவை நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது கூட்டணி தளபதிகள் அந்தப் பகுதி தங்கள் வசம் இருப்பதாக தவறான தகவல் தந்தனர். அவரது மரணம் குறித்து விசாரிக்க எல்லைகள் கடந்த நிருபர்கள் அமைப்பு கோரியுள்ளது. லாயிட் கொல்லப்பட்ட அதே தாக்குதலில் காயம் அடைந்த பிரான்ஸ் நாட்டு காமிராமேன், டேனியல் டுமோஸ்கியர் (Daniel Demoustier), இந்த வாரம் தங்களுக்கு "தொந்தரவு கொடுக்கின்ற சாட்சியங்களை ஒழித்துக்கட்டும்" வகையில் ஊடக வாகனங்கள் மீது அமெரிக்கப் படைகள் சுட்டுவருவதாக அமெரிக்கப்படைகள் மீது குற்றம் சாட்டினார். லாயிட் கொலைக்குப் பின்னரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நீடிக்கின்றன என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். |