World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The firing of Peter Arnett: right-wing straitjacket tightens on the US media

பீட்டர் ஆர்நெட் பதவி நீக்கம்: அமெரிக்க ஊடகங்கள் மீது வலதுசாரிப் பிடி இறுகுகிறது

By Patrick Martin
1 April 2003

Back to screen version

நீண்டகாலமாக போர் பகுதிகளில் செய்தி சேகரிக்கும் நிருபராக பணியாற்றிய அனுபவமிக்க நிருபர் பீட்டர் ஆர்நெட் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு புஷ் நிர்வாகமும் மற்றும் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் தெளிவாக விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியாகும். ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருப்பது அந்த நாட்டினை விடுவிக்கும் போர் என்று அதிகாரபூர்வமாக சித்தரித்துக் காட்டுவதற்கு மாறாக அதிலிருந்து விலகி செய்தி கொடுக்கும் நிருபர்களை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கும் நடவடிக்கைதான் இந்தப் பதவி நீக்கம்.

என்.பி.சி. செய்தி ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆர்நெட்டுடன் தனது உறவை துண்டித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. என்.பி.சி. நியூஸ் அமைப்பும் நேசனல் ஜியாகரபிக் (National Geographic) சஞ்சிகை அமைப்பும் இணைந்து கூட்டாக நிறுவியுள்ள எம்.எஸ்.எம்.பி.சி. கேபிள் துணை நிறுவனத்திற்கு பாக்தாத்திலிருந்து போர் தொடர்பாக போர்க்கால செய்திகளை செய்தி அறிக்கைக்கு தருவதற்காக ஆர்நெட்டை அவர்கள் பாக்தாத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பியிருந்தார்கள்.

ஆர்நெட் புரிந்த குற்றம் என்னவென்றால் ஞாயிற்றுக் கிழமையன்று ஈராக் அரசாங்க தொலைக்காட்சியில் ஒரு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் புஷ் நிர்வாகத்தின் இராணுவ தந்திரங்கள் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டார். இந்த இராணுவ தந்திரங்களை உருவாக்கும்போது படையெடுப்பிற்கு ஈராக் மக்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதை புஷ் கருத்தில் கொள்ளவில்லை என்றும் ஆர்நெட் தனது பேட்டியில் கருத்து தெரிவித்தார். ஈராக் அரசு தொலைக்காட்சி அலைவரிசையில் அவரது பத்து நிமிட பேட்டி ஒளிபரப்பப்பட்டது. முதலாவது போர் தோற்றுவிட்டது. ஈராக் மக்களின் கடுமையான எதிர்ப்புதான் அதற்குக் காரணம். தற்போது அவர்கள் மற்றொரு போர்த் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் தனது பேட்டியில் தொடர்ந்து உரையாற்றும்போது அமெரிக்காவிற்கான போர்த் திட்டங்களை உருவாக்கியவர்கள் ஈராக் படைகளின் உறுதிப்பாடு குறித்து தவறாக எடைபோட்டு விட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அது எப்படி நடந்தது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. இங்கு ஈராக்கில் நான் பலமுறை பணியாற்றியிருக்கிறேன். மற்றும் எனது விமர்சனங்கள் தொலைக்காட்சியில் வந்திருக்கின்றன. ஈராக் படைப் பிரிவுகளின் உறுதிப்பாடு குறித்து நான் அமெரிக்க மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நானும் என்னைப் போன்ற மற்றவர்களும் அதேவகை உணர்வுடன் இருந்தோம். ஆனால் எங்களது கருத்துக்களை புஷ் நிர்வாகம் கேட்கவில்லை.

பேட்டியின் ஒரு கட்டத்தில் ஆர்நெட்டை பேட்டி கண்டவர் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் போர் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் கண்டனப் பேரணிகள் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கும்போது உங்களது கேள்விக்கு நான் பதிலளிக்கும்போது அமெரிக்காவில் புஷ் போர் நடத்துவது தொடர்பாக அவருக்கு சவால்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது மற்றும் போருக்கு எதிர்ப்பும் வலுத்துக்கொண்டு வருகிறது. எனவே இங்கு பொதுமக்ககள் பாதிக்கப்படுவது பற்றிய நமது செய்திகள், மற்றும் ஈராக் படைகளின் எதிர்ப்பு பற்றிய தகவல்கள் அமெரிக்க மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றன. இவற்றின் அடிப்படையில் அமெரிக்காவில் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களது வாதங்களுக்கு வலு ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது என்பதாக பதிலளித்தார்.

ஆர்நெட்டின் விமர்சனங்களை சி.என்.என். ஒளிபரப்பியது. அவர்களது இணையதளத்தில் அதை வெளியிட்டார்கள். இது வேண்டுமென்றே அந்த நிருபருக்கு தொந்தரவை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். 1991-ல் பாக்தாத்தில் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் கேபிள் டி.வி. அலைவரிசைகள் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் நேரடியாக அந்த குண்டு வீச்சு செய்திகளை ஒளிபரப்பியது சர்வதேச அளவில் கவனத்திற்கு வந்தது.

அமெரிக்க ஊடகங்களிலும் மற்றும் குடியரசுக் கட்சியிலும் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரி சக்திகள் உடனடியாக ஆர்நெட்டிற்கு எதிராக கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர். அவர் ஈராக் ஆட்சியை அரசியல் அடிப்படையில் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினர். புஷ் நிர்வாகத்தின் ஒரு பகுதி அதிகாரபூர்வ அலைவரிசை என்று கருதப்படும் ஃபொக்ஸ் நியூஸ் இந்த வகையில் ஆர்நெட்டிற்கு எதிராக இயக்கத்தை தொடங்கி வைத்தது. ஃபொக்ஸ் நியூஸ் விமர்சகரான ஜோன் கிப்ஸன் மிகுந்த ஆவேசப்பட்டார். ஆர்நெட் விமர்சனங்கள் ஈராக் தரப்பை ஆதரிப்பது போல் தோன்றுகிறது. ஆர்நெட் ஈராக்கின் எதிர்ப்பு கண்டு மகிழ்ச்சி ஆராவாரம் செய்வது போல் தோன்றுகிறது. பீட்டர் ஆர்நெட் பாக்தாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நமக்கு தெரிகிறது என்று ஜோன் கிப்ஸன் குற்றம் சாட்டினார்.

கிப்ஸன் முன்னாள் குடியரசுக் கட்சி செனட் சபை உறுப்பினர் அல் ட அமட்டோவை (Al D'Amato) பேட்டி கண்டார். அவர் ஆர்நெட் எதிரிக்கு உதவியும் ஆறுதலும் அளிப்பதாக குற்றம் சாட்டினார். போர்க்காலத்தில் இப்படி செய்வது ராஜதுரோகக் குற்றம். இத்தகைய குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு என்று அந்த செனட் சபை உறுப்பினர் கூறினார். அமெரிக்க நாடாளுமன்ற குடியரசுக் கட்சியைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஃபொக்ஸ் தொலைக்காட்சியில் தோன்றி ஆர்நெட்டைக் கண்டித்தனர். புளோரிடாவைச் சேர்ந்த இலனா ரொஸ் லெட்டினன் (Ileana Ros-Lehtinen) மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த பிராட் செர்மன் (Brad Sherman) இருவரும் ஆர்நெட்டை கண்டித்தனர். ரொஸ் லெட்டினன் (Ros-Lehtinen) கியூபாவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளவர். அவர் ஆர்நெட்டின் விமர்சனங்கள் அருவருப்பாக உள்ளன என்று குறிப்பிட்டார். அவர் இப்படி எதிரிக்கு தெளிவாக ஆதரவு தருவது எதிரியின் பக்கம் அணிவகுத்துச் செல்வது எனக்கு வாய் குமட்டுவதாக அமைந்திருக்கிறது என்று ரொஸ் குறிப்பிட்டார்.

தீவிர வலதுசாரி சஞ்சிகையான நேஷனல் ரிவ்யூ (National Review) ஆசிரியர் ரிச் லாரி (Rich Lowry) அவர் ஃபொக்ஸ் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார். கெஸ்ட்டாப்போ (Gestapo) நடத்தும் டி.வி.யில் ஆர்நெட் பேட்டியளித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களிடம் ஈரம் செறிந்த அம்சம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்பிசி ஆரம்பத்தில் ஆர்நெட்டின் விமர்சனங்களை பேணி நின்றது. அவர் பாக்தாத்திலிருந்து செய்தி கொடுப்பது சரியாக உள்ளது என்று கூறியது. அந்த அலைவரிசையின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு, ''பீட்டர் ஆர்நெட் மற்றும் அவரது குழுவினர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது அமெரிக்க மக்களுக்கு துல்லியமான தகவல்களை உடனுக்குடன் நேரடியாக நடப்பது நடந்தபடி பாக்தாத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செய்தி கொடுத்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று முன்னேற்பாடு செய்யாமல் ஈராக் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தது பத்திரிகையாளர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி. உலகம் முழுவதிலும் இதர ஊடகங்களில் அவர் நடத்திய பேட்டிகளை போன்றதுதான் இதுவும். அவரது கருத்துக்கள் அடிப்படையிலேயே பகுத்து ஆராயப்படவேண்டியவை. அவற்றில் வேறு எதுவும் இல்லை. அவர் போர்ச் செய்திகளை மிகச்சிறப்பாக தந்துகொண்டிருக்கிறார். அவரது செய்திகளே அவரது திறமைக்கு சான்று பகர்கின்றன.''

ஆனால் இந்த அறிக்கை வெளியிட்டு சில மணி நேரங்களுக்கு புஷ் நிர்வாகத்தின நேரடியான நிர்பந்தங்களின் காரணமாக அல்லது என்பிசி கம்பெனி உரிமையாளரான அமெரிக்க ஜெனரல் எலெக்டிக் (General Electric) நிர்பந்தம் காரணமாக அந்த அறிக்கை மாற்றப்பட்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஜெனரல் எலக்டிரிக் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய இராணுவ ஒப்பந்தக்காரர். வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஆர்நெட் மீது கடுமையான குற்றச்சாட்டைக் கூறினார். அவரது கருத்துக்கள் முழுமையான அறியாமையின் வெளிப்பாடு. அவர் எந்த போர்த் திட்டத்தையும் எப்போதும் உருவாக்கியதில்லை அல்லது அவற்றை செயல்படுத்தியது இல்லை. அவரது தீர்ப்பு சந்தேகத்திற்கு உரியது. ஈராக் மக்களை சரிகட்டவேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று அந்த வெள்ளை மாளிகை அதிகாரி கருத்து தெரிவித்தார்.

ஆர்நெட்டின் விமர்சனத்தில் உண்மையான பொருள் முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பலருக்கு தெளிவாகத் தெரிந்ததுதான். அவர்களில் பலர் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி வரிசைகளுக்கு போர் தொடர்பான விமர்சன நிபுணர்களாக பணியாற்றி வருகின்றனர். பென்டகனின் இராணுவ தந்திரம் ஆரம்பக் கட்டத்தில் தோல்வியை சந்தித்திருப்பதாக அவர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர். அத்தகைய கண்டனங்கள் அடங்கிய முதல் பக்க கட்டுரைகள் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் இதர தினசரி பத்திரிகைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆர்நெட்டின் விமர்சனங்கள் மிகக் கடுமையான கோபத்திற்கு இலக்கானத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவர் இதற்கு முன்னர் மிகவும் துணிச்சல் உள்ள போர் நிருபராக பாராட்டப்பட்டு இருக்கிறார். அவர் அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக வெளியிடும் பொய் மூட்டைகளை அம்பலப்படுத்துகின்ற வல்லமை படைத்தவர். மற்றும் சதாம் ஹூசேனின் ''கொல்லும் குழுக்கள்'' இன் மிரட்டலால் அமெரிக்க படையெடுப்புக்கு எதிர்ப்பு உருவாகியிருப்பதாக கூறப்படுவதை தள்ளுபடி செய்வதற்கு அவர் தவறிவிட்டார். அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்கள் பென்டகன் கொடுத்துள்ள கருத்தைத்தான் கிளிப்பிள்ளைகள் போல் கூறிக்கொண்டு வருகின்றன.

ஆர்நெட் தலைசிறந்த போர் செய்தி சேகரிப்பு நிருபர் என்பது 1960களில் இருந்து தொடங்குகிறது. அப்போது அவர் அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸிற்கு வியட்நாமில் நிருபராக இருந்தார். வியட்நாம் போர் தொடர்பாக அவர் கொடுத்த செய்திகளின் சிறப்பிற்காக அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் புலியட்சர் பரிசு அவருக்கு கிடைத்தது. 1991ல் பாக்தாத் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர் கொடுத்த செய்தி சர்வதேச புகழ் பெற்றது. அதன் மூலம் அவர் மீது நிரந்தரமாக பெண்டகன் பகையை வளர்த்துக்கொண்டிருக்கிறது. மேலும் முதலாவது புஷ் நிர்வாகம் அவரை குரோத மனப்பான்மையோடு பார்த்தது. அப்போது நடைபெற்ற விமான குண்டு வீச்சு போரின் போது ஈராக் தலைநகரில் தங்கியிருந்த ஒரே மேலைநாட்டு நிருபர்கள் குழு ஆர்நெட்டின் சிஎன்என் அணிதான். அவர் கொடுத்த மிக முக்கியமான செய்திகளில் ஒன்று அமெரிக்க குண்டு வீச்சால் குழந்தைகளுக்கு பால் புட்டி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை அழிக்கப்பட்ட செய்திதான். அப்போது அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அந்த தொழிற்சாலையில் உயிரியல் ஆயுதங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

1998-ம் ஆண்டு ஆர்நெட் மரணப்பள்ளத்தாக்கு பற்றிய சிஎன்என்-டைம் வார இதழ் கூட்டு செய்தி படத்தில் தொகுப்பாளராக அவர் பணியாற்றினார். வியட்நாம் போரின்போது அமெரிக்க இராணுவம் மக்களது நரம்பு மண்டலங்களை பாதிக்கின்ற நச்சுப் புகையை பயன்படுத்தியது. குறிப்பாக டெயில் வின்ட் பகுதியில் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க இராணுவத்திலிருந்து பணியைத் துறந்து ஓடிவந்துவிட்டவர்களை லாவோஸில் தேடுவதற்காக அமெரிக்க சிறப்பு படைகள் நடத்திய திடீர் சோதனைகள் பற்றிய விமர்சனங்கள் ஆர்நெட் கொடுத்தவை. அந்த நிகழ்ச்சியின் இரண்டு தயாரிப்பாளர்களான ஏப்ரல் ஆலிவர் மற்றும் ஜாக்ஸ் ஸ்மித் இருவரும் தங்களது செய்தி அறிக்கைகளை நிரூபிப்பதற்கு மிகப் பரவலான சான்றுகளையும் பதிவேடுகளையும் தயாரித்து வைத்திருந்தனர்.

இப்படி அந்த நேரத்தில் அவர் அம்பலப்படுத்திய தகவல்கள் அமெரிக்க இராணுவ புலனாய்வு வட்டாரங்களை ஆத்திரங்கொள்ளச் செய்தது. அவர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டார்கள். கொலின் பவல் அப்போது முப்படை தலைமைத் தளபதிகள் கூட்டுக் குழுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கர் மற்றும் முன்னாள் சிஐஏ டைரக்டர் ரிச்சர்ர் ஹெல்ம்ஸ் ஆகிய அனைவரும் சிஎன்என் நரம்பு மண்டல விசப் புகைப் பற்றிய செய்திக்கு மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றன. கிளின்டன் நிர்வாகமும் நிர்பந்தத்தை பயன்படுத்திப் பார்த்தது. அன்றைய பாதுகாப்பு அமைச்சசர் வில்லியம் கோகன் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்த செய்தியறிக்கையால் ஈராக் உயிரியில் ஆயுதங்களை தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஈராக்கை குறிவைக்கும் இலக்கு பாதிக்கப்படும் என்றெல்லாம் கூறிப்பார்த்தார்கள்.

சிஎன்என் இறுதியாக ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டது. மிகப் பரிதாபகரமான மன்னிப்பு கடிதமொன்றையும் கொடுத்தது. ஆலிவர் மற்றும் ஸ்மித் இருவரையும் வேலை நீக்கம் செய்தது. ஆர்நெட் தன்னையே இழிவுபடுத்திக்கொள்ளும் வகையில் மரணப் பள்ளத்தாக்கு நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தார். ஒரு கண்டனத்தோடு தப்பினார். ஆனால் அவரது ஒப்பந்தம் அந்த கேபிள் அலைவரிசையோடு அடுத்த ஆண்டு முடிவடைந்தது. அதற்கு பின்னர் அந்த நிறுவனம் அவரை பணியில் வைத்துக்கொள்ளவில்லை. அண்மையில்தான் எம்எஸ்என்பிசி அவருக்கு போர் செய்தி சேகரிப்பு நிருபர் பணியை வளங்கியது.

ஆர்நெட் தொடர்பாக என்பிசி தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் கீழ்க்கண்ட விவரங்கள் கூறப்பட்டுள்ளன. ஆர்நெட் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பேட்டியளித்தது குறிப்பாக போர் நேரத்தில் பேட்டியளித்தது தவறான நடவடிக்கையாகும். தனது சொந்த கருத்துக்களையும் நேரில் தாம் கண்டவற்றையும் அந்த பேட்டியில் அவர் விவாதித்திருப்பது தவறானது. எனவே பீட்டர் ஆர்நெட் இனி என்பிசி நியூசிற்கும் மற்றும் எம்எஸ்என்பிசிக்கும் நிருபராக பணியாற்ற முடியாது.

திங்கட்கிழமை காலை என்பிசி டுடே காட்சியில் தோன்றிய ஆர்நெட் தனது விமர்சனங்களை சரியென்று வாதாடினார். அனைவருக்கும் அடிப்படையிலேயே தெரிந்த விவரங்களைத்தான் நான் அந்த பேட்டியில் கூறியிருக்கிறேன். போர்க்கொள்கையை செயல்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வியப்பளிக்கும் திடீர் திருப்பங்கள் நடந்திருக்கின்றன என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். என்றாலும் அவர் வருத்தம் தெரிவித்தார். தனது அலைவரிசைக்கு தொந்தரவு கொடுத்துவிட்டதாக வருந்தினார். நான் பேட்டி அளித்தது மூலம் அமெரிக்காவில் ஒரு பெரிய தீ விபத்தை போன்ற பரபரப்பு ஏற்பட்டு விட்டது. அதற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன் என்று ஆர்நெட் குறிப்பிட்டார்.

என்பிசியிலிருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளைக்குள் லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல தினசரி பத்திரிக்கையான டெய்லி மிர்ரர் அவரை தனது நிருபராக நியமித்திருக்கிறது. அந்த பத்திரிகை ஈராக் போரில் பிரிட்டன் கலந்து கொள்வதற்கு எதிராக தீவிர இயக்கத்தை நடத்தி வருகிற ஒன்றாகும். அந்த பத்திரிகையின் இணைய தளத்தில் ஆர்நெட்டின் பேட்டி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேட்டியில் ஆர்நெட் கூறியிருப்பதாவது: நான் இன்னமும் அதிர்ச்சியிலும் என்ன செய்வதென்று தெரியாத நிலையிலும் இருக்கிறேன். பாக்தாத்திலிருந்து வருகின்ற செய்திகள் அமெரிக்காவிற்குள் மிகப்பெரும் அளவிற்கு உணர்வுகளை கிளப்பிவிட்டிருக்கின்றன. நம்பகத் தன்மையுள்ள செய்தி அமைப்புகள் இத்தகையை செய்திகளை வெளியிடுவதை விரும்பபவில்லை. அத்தகைய செய்திகளால் அவர்களுக்கு மிகப்பெரும் பிரச்சனைகள் உருவாகின்றன.

68 வயதான நியூஸிலாந்தில் பிறந்த பத்திரிக்கையாளரான அவர் கூறினார், ''நான் ஆத்திரப்படவில்லை. நான் அழுது புலம்பவில்லை. ஆனால் இந்த ஊடக அம்சம் குறித்து நான் நிலைகுலைந்திருக்கிறேன். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் தங்களை கண்டிக்கிற நிருபர்களை அவர்கள் எந்தநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பழிவாங்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒரு சிறிய தவறு செய்துவிட்டேன். அந்த வாய்ப்பை அவர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்தார்கள். ஈராக் அரசாங்க தொலைக்காட்சிக்கு திடீர் என்று திட்டமிடாமல் பேட்டி கொடுத்துவிட்டேன். நான் அப்போது என்ன நினைத்தேன் என்றால் கடந்த 4 மாதங்களாக 100க் கணக்கணவர்களை பேட்டி எடுத்துக் கொண்டு வருகிறேன். எனவே அந்த வகையில் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் இன்னொரு பத்திரிக்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில விமர்ச்னங்களை நான் அந்த தொலைக்காட்சிக்கு தந்து விட்டேன். அதுதான் எனது வாட்டர்லூ. அதோடு சட்டென்று என் கதை முடிந்துவிட்டது.''

பாக்தாத் நகரில் தொடர்ந்து தங்கி இருப்பதா என்பது குறித்து தான் இன்னும் முடிவுசெய்யவில்லை என்று ஆர்நெட் குறிப்பிட்டார். அந்நகரில் இன்னும் இறுதியாக அமெரிக்க பிரிட்டன் படைகள் தாக்குதல் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் என்ன நடந்தாலும் நான் பாக்தாத்தில் இருந்தாலும் அல்லது மத்திய கிழக்கில் வேறு எங்கிருந்தாலும் அல்லது நான் திரும்ப வாஷிங்டன் சென்று விட்டாலும் இந்த போர் பற்றிய உண்மைகளை சொல்வதையும் உண்மையான தகவல் தருவதையும் நான் என்றைக்கும் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.

அவர் தனது அறிக்கையை முடிக்கும் போது இந்தப் போர் இறுதி வரை கசப்பான முடிவுக்கு வருமானால் அதனால் மிகப்பெரும் அளவிற்கு பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் என்று எச்சரித்தார். இப்போதே நாம் சில உண்மைகளை கவனித்தாக வேண்டும். சில ஈராக்கியர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கள் இந்தப் போரில் உறுதியாக இருக்கிறது. இதை நேரில் கண்டு உண்மையைச் சொல்வது அப்படிச் சொல்பவர்கள் மீது கண்டனக் கணைகளை ஏவுகிறார்கள். எது தெளிவானதோ அது நியாயமற்றதாகத்தான் தோன்றும். நான் உண்மையை சொல்ல முடிந்திருக்கிறது என்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் பாக்தாத்திற்கு எனது குழுவினரோடு வந்தேன். ஏனென்றால் பாக்தாத் தரப்பு செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சம்பவம் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. அமெரிக்க ஊடகங்களில் ஈராக் போர் பற்றி நடுநிலையான செய்தி கொடுப்பவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை அதிர்ச்சியில் உறையவைக்கும் அளவிற்கு இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. உலகம் முழுவதிலும் அனைவரும் அறிந்த மிகவும் மரியாதைக்குரியவர் என்று கருதப்படுகின்ற பீட்டர் ஆர்நெட் இத்தகைய ஒரு சாக்குப் போக்கால் பதவியிலிருந்து நீக்கப்பட முடியுமென்றால் வேறு எவருக்கும் இது நடக்கலாம். இப்போது உள்ள நிலவரப்படி போர் பற்றி உண்மையான செய்தி அதிகம் உள்ளது. அமெரிக்க ஊடகங்கள் வரலாறு காணாத அளவிற்கு பென்டகனின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு வளைந்து கொடுத்து செயல்பட்டு வருகின்றன. ஈராக் மக்கள் மீது போர் தொடுத்து கொண்டிருக்கின்ற இராணுவ பிரிவுகளோடு நூற்றுக்கணக்கான அமெரிக்க பத்திரிகையாளர்கள் இணைக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அமெரிக்க ஊடகங்களின் நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved