ஈராக்கில் டிஜிட்டல் படுகொலை
By James Conachy
5 April 2003
Back to screen version
அமெரிக்க செய்தி ஊடகங்கள் வர்ணித்துள்ள 24 மணிநேர ''கடுமையான'' மற்றும் ''தீவிரமான''
போரிற்குப் பின்பு, அமெரிக்க இராணுவம் பாக்தாத்திலுள்ள சதாம் ஹூசேன் சர்வதேச விமான நிலையத்தை 4 ந்தேதி
அதிகாலை கைப்பற்றியுள்ளது. தற்போது ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை, அதன் 40.000 ம் துருப்புக்கள் சுற்றி
வளைத்துக்கொண்டு குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
24 மணிநேர தாக்குதலில் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் தமது உயிர்களை பலி
கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் மூன்றாவது காலாட் படைப்பிரிவுடன் பயணம் செய்துவரும் நியூயார்க் டைம்ஸ்
பத்திரிகையாளர் கொடுத்துள்ள தகவலின்படி, யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் அமெரிக்கத்
துருப்புக்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் 550 ஈராக்கிய துருப்புக்கள் உயிரிழந்து விட்டதாக மதிப்பீடு செய்துள்ளார்.
பாக்தாத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பதுங்கு குழிகளில் மேலும் நூற்றுக்கணக்கானோர் மாண்டிருப்பதாகவும்
அவர் கூறியுள்ளார். விமான நிலையத்தை காப்பாற்றுவதற்காக போராடிய ஈராக்கிய படைகளில் குறைந்தபட்சம் 400
பேர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் நூற்றுக்கணக்கில் காயமடைந்ததாகவும் பரவலாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அத்துடன் பாக்தாத் புறநகரை ஏழாவது காலாட்படைப் பிரிவு நெருங்கிய போது, அமெரிக்க டாங்கிகளை எதிர்த்து
சண்டையிட்ட 400 க்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கிலிருந்து ஈராக் தலைநகரை நோக்கி அணிவகுத்து வந்த அமெரிக்கப் படைப்
பிரிவுகள் ஈராக் குடியரசுப் படையின் பாக்தாத் மற்றும் அல்-நிடா பிரிவுகளைச் சேர்ந்த படையினர்களின் எரிந்துபோன
உடல்கள் மற்றும் டாங்கிகளை கடந்து வந்தன. இதுபோன்ற தாக்குதல்களை வர்ணிப்பதற்கு பென்டகன் பயன்படுத்தும் வார்த்தைகளில்
சொல்வதென்றால், பாக்தாத்தின் தென்கிழக்கு மற்றும் கிழக்கு வழிகளை தற்காப்பதற்கு போரிட்ட ஈராக் படைகளை
''இழிபுகழ் பெற்ற'' B-52
ரக விமானங்கள் மூலம் தரை விரிப்பு (carpet bombing)
குண்டுத் தாக்குதல்களும், யுத்த விமானங்கள் மற்றும் ஆட்டிலெறிகள் மூலம்
ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டன என்பதாகும். இத் தாக்குதல்களில் இருந்து உயிர்தப்பிய குடியரசுப்
படைகளின் மீதமிருந்த 2500 பேர்கள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 3 மற்றும் 4 ல் நடைபெற்ற சண்டைகளில் அமெரிக்கத் தரப்பில் இறந்தவர்கள்
மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10-12 பேர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற போர்களில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தற்போது மோதிக்
கொண்டிருக்கும் இரண்டு படைகளிலும் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள்
மிகப்பெரும் அளவில் வேறுபட்டு காணப்படுகின்றன. இத்தகைய புள்ளி விபரங்கள் போரோடு சம்மந்தப்பட்டவையல்ல.
மாறாக தென் அமெரிக்காவில், ஆப்பிரிக்காவில் மற்றும் ஆசிய நாடுகளில் ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தின்போது நடத்தப்பட்ட
மிக மோசமான அட்டூழியங்களைப்போல் காணப்படுகின்றன. அப்போது தொழில்நுட்ப அடிப்படையில் முன்னறிய ஆக்கிரமிப்பாளர்கள்
நாகரீக வளர்ச்சி குன்றிய நாடுகளையும், மக்களையும் நாசப்படுத்திய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தற்போது
ஈராக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
தங்களது பெயரால் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் குறித்து பல அமெரிக்க மக்கள் ஏற்கெனவே
சந்தேகம் கிளப்பத் தொடங்கிவிட்டனர். உலகிலேயே தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் அளவில் முன்னேறியுள்ள, உலகிலேயே
மிகப்பெரிய இராணுவ வலிமையுள்ள மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு நாடு, டிஜிட்டல் படுகொலை என்று வர்ணிக்கத்தக்க
தாக்குதலை ஈராக் மீது தொடுத்தள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்களும், ஜெட் விமானங்களும் ஈராக்கின் இலக்குகளை செயற்கை
கோள்கள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஏற்கெனவே களத்தில் நின்று கொண்டிருக்கும் கண்கானிப்பாளர்கள் ஆகியவற்றின்
மூலம் மின்னணு கருவிகள் கட்டளைப்படி குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றன. அத்தோடு பி-52 விமானங்களின்
தரைவிரிப்பு குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் ஹெலிகாப்டர் குண்டு வீச்சுக்கள் என்பன பாரியளவில்
நடத்தப்பட்டு, அந்தப் பகுதிகளையே ஒட்டுமொத்தமாக அழித்து அமெரிக்க இராணுவம் முன்னேறுவதற்கு வசதியாக வழிவகுத்துக்
கொடுக்கின்றன.
பல பகுதிகளில் ஈராக்கிய துருப்புக்கள் அணி அணியாக அமெரிக்க டாங்கிகள் மற்றும் கவச
வாகனங்களால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இப்படி, தங்கள் நாட்டு இளைஞர்கள் தினமும் டசின் கணக்கில் எரிந்து
சாம்பலாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்து நிலைகுலையும் மற்ற இளைஞர்கள் உயிர் தியாகத்திற்கும் தயாராகி போரிட்டு வருகிறார்கள்.
எஞ்சியுள்ள ஈராக்கிய டாங்கிகள் நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதும்போது உயர்ந்த தொழில்நுட்பம், குண்டு
வீச்சு வல்லமை, நகர்ந்து செல்லும் வலிமையுள்ள அமெரிக்க பீரங்கி வண்டிகளால் மிக விரைவில் தாக்கி, தகர்க்கப்பட்டு
விடுகின்றன.
புஷ் நிர்வாகமும், பென்டகனும் மற்றும் முற்றிலும் வெட்கக்கேடான அமெரிக்க ஊடகங்களும்
ஏற்கெனவே ஈராக்கில் நிகழ்த்தப்பட்டுள்ள நாசங்கள் குறித்து பெருமையடித்துக் கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவிலும்
மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் இந்தப் போர் குறித்து வெறுப்புணர்வும், பயங்கர
உணர்வும் வெளிப்பட்டு அதிகரித்து வருகிறதே தவிர வேறு ஒன்றையும் இது காட்டவில்லை.
கடந்த 10 நாட்களில் ஈராக்கிற்கு எதிரான அவமானகரமான தாக்குதல்கள் பாரிய
அளவில் அதிகரித்திருக்கின்றன. ஏனென்றால், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நுழைந்தவுடன் அந்நாட்டு மக்கள் அவர்களை
வரவேற்பார்கள் என்றும், ஈராக் படைகள் உடனடியாக சரணடைந்துவிடும் என்றும் ஆரம்பத்தில் திட்டமிட்டு போரைத்
தொடக்கினார்கள். அதற்கு நேர்மாறாக எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்ததும் தமது ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற
அனைவரையும் படுகொலை செய்வதற்கு புஷ் நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.
இந்தப் போரின் உண்மையான தாக்கம் குறித்து அமெரிக்காவில் செய்திகள் வெளியிடப்படுவதில்லை.
ஈராக் மக்களது நிலை பற்றி எந்தவிதமான கவலையும் தெரிவிக்காமல் ஈராக்கில் பலியாகிற, பாதிக்கப்படுகின்ற மக்கள்
பற்றிய விபரங்களையும், புகைப்படங்களையும், செய்திகளையும், செய்திப்படங்களையும் வெளியிடுகின்ற அரபு மற்றும்
ஐரோப்பிய போட்டி ஊடகங்கள் மீது அமெரிக்க ஊடகங்களின் ஆத்திரம் தற்போது திரும்பி இருக்கிறது.
இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கி வருவதாக மிகப்பெரும் அளவில் பென்டகன் பிரச்சாரம்
செய்து வருகிறது. ஆனால், ஈராக்கிய மக்கள் மிகப்பெரும் அளவில் மடிந்துகொண்டு வருவதும், அதற்கு மேலாக ஈராக்கை
''விடுதலை'' செய்கிறோம் என்ற பெயரில் முகமூடி அணிந்து கொண்டு வரும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து
தங்கள் நாட்டை தற்பாதுகாத்துக் கொள்ளப் போராடும் ஈராக்கிய இளைஞர்களை கொன்று குவித்துக் கொண்டு
வருவதும், இந்தப் பிரச்சார வாதங்களை எல்லாம் பொய்யாக்கி இருக்கிறது
எனவே ஈராக்கிய இராணுவமும், பொதுமக்களும் சம்பிரதாய இராணுவ முறைகளில் எந்த
வகையிலும் அமெரிக்கப் படைகளை எதிர்த்து நிற்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. ஆகவே, வரலாறு முழுவதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட
மக்கள் வழிமுறையாக எதிர்த்து வருவதைப்போல், தற்போது கொரில்லா தாக்குதல்களிலும், தற்கொலைத் தாக்குதல்களிலும்
ஈராக்கியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
|