World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Into the maelstrom: the crisis of American imperialism and the war against Iraq

கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

By David North
1 April 2003

Back to screen version

மிக்சிகன், அன் ஆர்பரில் மார்ச் 29 அன்று, உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் நடாத்திய, சோசலிசமும் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான போராட்டமும் யுத்தமும் என்ற மாநாட்டில், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான, டேவிட் நோர்த் ஆற்றிய ஆரம்ப உரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.

அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிற்கு எதிராக "தேர்ந்தெடுத்த போரை" ஆரம்பித்த முதல் 10 நாட்கள் பற்றி மதிப்பிடும்போது, அடொல்ஃப் ஹிட்லரது வாழ்க்கை வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதிய பிரிட்டனின் வரலாற்று ஆசிரியர் இயான் கெர்ஷா (Ian Kershaw) ஒவ்வொரு தொகுதிக்கும் தந்திருக்கும் துணைத் தலைப்புகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன. முதல் தொகுதி பாசிச தலைவர் 1936ம் ஆண்டு இராணுவம் அற்ற பிரதேசமான ரைன்லாந்து பிரதேசத்தினுள் ஜேர்மன் துருப்புகள் திரும்ப வெற்றிகரமாக நுழைந்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. அந்த முதல் தொகுதி துணைத்தலைப்பு: ஹிப்ரிஸ் (Hubris) என்பது "அழிவை அணைத்துக் கொள்ளும் அளவிற்கு அதிகமான அகந்தை" என்று ஆசிரியர் அதனை விளக்குகிறார். இரண்டாவது தொகுதி பேரழிவில் வீழ்ச்சியடைந்த ஹிட்லரும் அவரது ஆயிரம் ஆண்டு நிலைக்கும் என்ற ரைசும் (Reich- மூன்றாம் குடியரசு) அழிவில் சிக்கிக்கொண்ட வரலாற்றை எடுத்துரைக்கிறது. அதற்கு நெமிசிஸ் (Nemesis) என்று துணைத்தலைப்பிடப்பட்டிருக்கிறது. நெமிசிஸ் என்பது அகந்தைக்காரியான ஹிப்ரிஸை வஞ்சம் தீர்த்த கிரேக்க கடவுள்.

ஈராக் மீது படை எடுப்பதற்கு முந்திய மாதங்களில் புஷ் நிர்வாகத்தின் ஹிப்ரிஸ்கள் (அகந்தைக்காரர்கள்) எல்லை இல்லாமல் ஆட்டம் போட்டனர். உலகிற்கே கட்டளையிட ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு உள்ள உரிமையை ஆட்சேபிக்கத் துணியும் எவர் மீதும் அவதூறுகளைப் பொழிந்தார்கள் மற்றும் அச்சுறுத்தல்களை விடுத்தார்கள். புஷ் மற்றும் அவரது சகாக்கள் ஈராக்கிற்கும் மற்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத படிப்பினையைத் தரப்போவதாக உறுதிமொழி அளித்தனர். ஆனால், நிர்வாகம் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர், வியட்நாம் போர் காலகட்டத்தில் அப்போது அமெரிக்காவின் தலையீட்டிற்கான அரசியல் மற்றும் இராணுவ தந்திரங்கள் முழுமையாகத் தவறானவை என்பது தெளிவாவதற்கு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்தப் போரில், இந்தப் போர்த்திட்டம் முழுவதின் வெற்றுத்தன்மை ஒரு வாரத்திற்குள் அம்பலத்துக்கு வந்து விட்டன.

கடந்த 10 நாள் போரானது, செய்தி ஊடகத்தால் விடாப்பியாக வளர்த்து வரப்பட்ட, அமெரிக்காவை அசைக்கவே முடியாது என்ற கண்காணாத கற்பனைக்கு அதிர்ச்சிதரும் அடி விழுந்திருக்கிறது. டொனால்ட் ரம்ஸ்பீல்ட் உதட்டுக்கு மேலே வியர்வைத் துளிகள் திட்டுத் திட்டாகக் காணப்படுகின்ற, கூனிக்குறுகிய, நிதானம் தவறிய முதியவரைப் போல காணப்படுகிறார். போர் ஆரம்பமாகிய சில மணி நேரத்திற்குள், ஈராக் அதிர்ச்சியில் நிலைகுலைந்து அடிபணிந்து விடும்? ஈராக் ஆட்சி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு விழுந்து விடும்? ஈராக் இராணுவம் போர் புரியும் வல்லமை இல்லாதது? இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டுவிட்டால், ஈராக் கணிசமான அளவிற்கு தனது இராணுவ நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க முடியாத அளவிற்கு முடக்கப்பட்டு விடும்? இதற்கெல்லாம் மேலாக, அமெரிக்க மற்றும் பிரிட்டனின் படைகள் தங்களைக் காப்பாற்ற வந்தவர்கள் மற்றும் விடுவிக்க வந்தவர்கள் என்று ஈராக் மக்களால் வரவேற்கப்படுவார்கள் என்ற புஷ் நிர்வாகத்தினதும், இராணுவ நிபுணர்களினதும் மற்றும் ஊடகங்களினதும் கணிப்புக்கள் என்ன ஆயிற்று.

போருக்கு முன்னரே, கென்னத் ஆடல்மன் (Kenneth Adelman) ஈராக் மீது படையெடுக்க வேண்டுமென்று கடந்த பத்து ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்ற வலதுசாரி மூலோபாய வல்லுநர் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், "சதாம் ஹூசேனின் இராணுவ வலிமையைத் தகர்த்து ஈராக்கை விடுவிப்பது மிக எளிதான காரியம் என்று நான் நம்புகிறேன்" என்பதாக எழுதியிருந்தார். இந்த போரை தூண்டிக்கொண்டிருந்த மற்றொருவரான ரிச்சர்ட் பேர்ல் (Richard Perle), MSNBC தொலைக் காட்சிக்கு பேட்டியளித்தபோது, "ஈராக்கில் அங்குமிங்குமாக சில இடங்களில் எதிர்ப்பு இருக்கலாம். ஆனால் வெகுசில ஈராக்கியர்கள்தான் சதாம் ஹூசேனை பாதுகாக்க சண்டையிடப் போகிறார்கள்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஊடகங்கள் இதுபோன்ற கருத்துக்களை எந்தவிதமான ஆட்சேபனைகளும் கூறாமல் ஏற்றுக்கொண்டன. அவை தங்களது செல்வாக்கு மிக்க நிருபர்களை குவைத்திற்கு அனுப்பி வைத்தன. குவைத்தில் அமெரிக்க இராணுவத்தோடு இணைக்கப்பட்டு (அல்லது அவர்களோடு ஒரேதாக படுத்து) பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அத்தனைபேரும் பாக்தாத் போரின் வெற்றி சிறப்பில் கவரப்பட்டு மிகுந்த பரவசப்பட்டவர்களாக காணப்பட்டனர்.

அங்கு விமர்சன ரீதியான செய்திகளின் அடையாளங்கூட இல்லை. புஷ் நிர்வாகம் கூறுகின்ற தகவல்களை ஆராயாமல் அப்படியே வெளியிட்டார்கள். சென்ற ஆண்டு பெரிய நிறுவனங்களைச் சார்ந்த ஊடகங்கள், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனின் பிரச்சார ஊதுகுழல்களாகவே தங்களை முழுமையாக தரம்தாழ்த்திக்கொண்டதை கண்ணுற்றது. தவறான தகவல்கள், பொய் மற்றும் முழுமையான கட்டுக்கதை இவற்றிலிருந்து உண்மையை பகுத்துப்பார்க்க ஊடகங்கள் தவறிவிட்டன. இராணுவத்தின் உளவியல் அடிப்படையிலான பணிகளுக்கு ஒரு கருவியாக அவற்றை ஒருங்கிணைத்தலை ஊடகங்கள் மகிழ்வோடு ஏற்றன. கடந்த இரண்டு வாரங்களில் சிஎன்என், எம்எஸ்என்பிசி, ஃபாக்ஸ் (CNN, MSNBC, FOX) மற்றும் இதர ஊடக வலைப்பின்னல்களால் அறிவிக்கப்பட்ட சில செய்திகளை நினைவுபடுத்தி பார்க்கலாம். 'குடியரசு காவலர் தளபதிகள் (Republican Guard Generals) மின்மடல் வழியாக இராணுவ சரணாகதி பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள், ஈராக்கின் வெளிநாட்டமைச்சர் தாரிக் அசீஸ் அடிபணிந்துவிட்டார், சதாம் ஹூசேன் கொல்லப்பட்டுவிட்டார், அமெரிக்கப் படைகள் பாக்தாத்திற்குள் நுழையும்போது மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டன, மற்றும் மிக அண்மைக்காலத்தில், சில நாட்களுக்கு முன்னர் பாஸ்ராவில் பொதுமக்கள் கிளர்ச்சி எழுச்சி முன்னேற்றகரமாக இருந்தது' இவையே அவர்களால் வழங்கப்பட்ட செய்திகளாகும்.

இதுபோன்ற கூற்றுக்கள் கொச்சையாக மற்றும் அறிவுக்குப் பொருந்தாக வகையில் பென்டகன் கற்பனையாக உருவாக்கியவை. இவை செய்தி ஊடகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன மற்றும் அவை உண்மைகள் என்று ஒலிபரப்பப்பட்டன. சென்ற ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் ஒரு ஆசிரிய தலையங்கம் எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தில் மிகுந்த கற்பனை நயத்தோடு ஒன்றை எழுதியிருக்கிறார்கள். "குழந்தை குட்டிகளோடு குடும்பங்கள் பாஸ்ரா நகருக்கு அருகாமையில் சாலைகளில் அணிவகுத்து நின்று ஆரவாரத்தோடு அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ் படைகள் இரைச்சலுடன் வடக்கில் செல்கையில், வரவேற்று உள்ளனர்" என்று எழுதியிருக்கிறது. அது "சதாம் ஹூசேனின் அச்சுறுத்தலை அவரது ஆட்சியின் பயங்கரத்தை கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கும்", "பத்தாம்பசலி இராஜதந்திர தூதர்களையும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரையும்" கண்டித்து எழுதியிருக்கிறது. மிகுந்த ஆவேசமாக, போஸ்ட், போரை எதிர்ப்பவர்கள் "கடற்படை வீரர்களை (Marines) தங்களை விடுவிக்க வந்தவர்கள் என்று மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்கும் ஈராக்கியரைப் பார்க்கட்டும்" என அறிவுறுத்தி இருக்கிறது.

ஊடகங்கள் தங்களது சொந்த பிரச்சாரத்தை சற்று அதிகமாகவே செய்து விட்டன. ஈராக்கியர் காட்டிவரும் எதிர்ப்பு தவிர மற்ற அத்தனையும் எதிர்பார்க்கப்பட்டன. ஊடகங்கள் ஈராக்கின் 23 மில்லியன் மக்களும் அமெரிக்காவின் இராணுவ வலிமையின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழும் அதன் சொந்த காட்சியை முன்னிறுத்தின. படையெடுத்து வந்தவர்கள் சங்கடங்கள் மற்றும் பின்னடைவுகளை சந்திக்கும் சற்றும் எதிர்பாராத ஒரு நிலைக்கு முற்றிலும் தயாரிப்பற்ற நிலைக்கு ஊடகங்களை அதன் சொந்த அடிமைநிலை கொண்டு வந்து விட்டது. உண்மையிலேயே இந்த தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்ற போக்கு அமெரிக்க இராணுவப் படைகளுக்கு எதிர்ப்புகள் பெருகி வந்த நேரத்திலும் நீடித்துக் கொண்டிருந்தது. போர் ஆரம்பமாகிய ஆரம்ப நாட்களில் எதுவும் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாதது புஷ் நிர்வாகத்தின் போர்த் தந்திர மூலோபாய மற்றும் படை நடமாட்ட தப்புக் கணக்குகள் மட்டத்திற்கு குறிகாட்டியது. ஊடகங்கள் மிகுந்த பரவசப்பட்டு எழுதியது எல்லாம் படைகளின் கவச வாகனங்கள் வடக்குநோக்கி கண் மண் தெரியாமல் வேகமாக நடைபோட்டு வருவதாகவும் பூமியே அதிர்ந்து வருவதாகவும் அந்த அளவிற்கு பீரங்கி வண்டிகள் இடைவிடாது முன்னோக்கி செல்வதாகவும் "உறுதியான பந்திகளில்" மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கோடு செய்திகளை வெளியிட்டன.

ஆனால் வியாழக்கிழமை அன்று இந்த முகப்புத் தோற்றம் நொருங்கிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு செய்தியில் பென்டகனின் மூலோபாயம் குறித்து இராணுவத்திற்குள் கவலைகள் வளர்ந்துகொண்டு வருவது பற்றி வெளியிட்டது:

"கொடுரமான வானிலை, நீண்ட மற்றும் பாதுகாப்பு இல்லாத விநியோக வழிகளுடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் இராணுவ வலிமையை கண்டு செயலற்றுக் கிடக்க மறுக்கும் ஒரு எதிரி போன்றவை அமெரிக்காவின் இராணுவ எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் உரிய காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சில முன்னணி அமெரிக்க இராணுவ தளபதிகளை விரிவான அடிப்படையில் மறுமதிப்பீடு செய்வதற்கு வழிவகுத்திருக்கிறது. அவர்களில் சிலர் இந்தப் போர் மேலும் மேலும் அமெரிக்கப் படைகளை அதிக அளவில் உறிஞ்சும் சண்டைக்குள் இழுக்கும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக கூட பார்க்கின்றனர். ஈராக்கின் போர்க்களங்கங்களிலும் மற்றும் பென்டகனின் மாநாட்டு அறைகளிலும் இராணுவத் தளபதிகள் நேற்று நீண்ட கடுமையான போர்குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்னர் கூட இப்படிப்பட்ட நீண்ட கடுமையான போர் ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

''எப்படி இந்தப் போர் ஒரு முடிவுக்கு வரும் என்று நீங்கள் சொல்லமுடியுமா?'' என்று ஒரு மூத்த அதிகாரி நேற்று கேட்டார்.

பென்டகன் தானே உருவாக்கிய பிரமைகளின் எதிர்பாராத விளைவுகளை தானே சந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு இப்போது வந்திருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் தற்போது ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பாக்தாத் மீது படையெடுப்பு நடத்துவதற்கு கூடுதல் துருப்புக்களை வழங்குவதற்காக மட்டுமல்ல, அளவிற்கு அதிகமாக நீடித்துக் கொண்டே போகும் தனது விநியோக வழிகளையும் பாதுகாப்பதற்காகவும் இந்தக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த விநியோக வழிகள் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளவை.

எல்லையற்ற அகந்தையுடன் புஷ் நிர்வாகம் இந்தப் போரை "ஈராக் சுதந்திரத்திற்கான நடவடிக்கை" என்று சிறப்புப் பெயர் புனைவித்திருக்கிறது. தற்போது நாளுக்குநாள் அதிகரித்துவரும் எதிர்ப்பை எதிர்கொள்கையில், அதன் குறிக்கோளுக்கான தர்க்க அடிப்படையான ஈராக்கைப் பிடித்துக் கொண்டு அதை அமெரிக்காவின் காலனித்துவ காபந்து அரசாக மாற்றுதலுக்காக அமெரிக்காவை ஈராக் மக்கள் மீது அதிக அளவில் கொடுரமான தாக்குதல்களை நடத்த இயக்கும். பாக்தாத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு அந்த மக்கள் மீது குண்டு வீசி மற்றும் அவர்களைப் பட்டினி போட்டு, ஈராக் மக்களை "விடுவிக்க" அமெரிக்கா முயலக்கூடும். புஷ் அடிக்கடி கூறிவருவதைப்போல் இந்தப் போர் அரைகுறை நடவடிக்கையாக இருக்காது. இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்தப் போர் மிகக்கொடுரமான வெகுஜனங்களை கொன்று குவிக்கின்ற கொலை வெறியாக மாறுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

கட்டற்ற கொடுங்கோன்மையின் ஒரு வரலாறு

போருக்கு பொது மக்களின் எதிர்ப்பின் அளவு போர் ஆரம்பமாவதற்கு முன்னரே, போர் எதிர்ப்பு இயக்க சகாப்தத்தின் உச்ச நிலையில், வியட்நாம் யுத்தத்துக்கு காட்டிய எதிர்ப்பினையும் அடுத்தடுத்து மீறிவிட்டமை குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. போர் தொடங்கும் முன்னர் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றிலேயே மிகப் பெரியனவாகும். பெப்ரவரி 15-16 வாரக்கடைசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் எண்ணிக்கையிலும் கலந்துகொண்டவர்களது தரத்திலும் முன்னொருபோதும் இல்லாதளவில் ஒன்றாக இருந்தது. வரலாற்றில் இந்த அளவிற்கு போருக்கு சர்வதேச ரீதியான எதிர்ப்பு காட்டப்பட்டது ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. இரண்டாவது அகிலத்தின் சிறப்பு மிக்க நாட்களில் கூட, முதல் உலகப்போர் ஆரம்பமாவதற்கு முன்னர் 1914ம் ஆண்டு போருக்கு எதிராக இந்த அளவிற்கு ஒருங்கிணைந்த சர்வதேச இயக்கத்தை உருவாக்க முடியவில்லை. தற்போது உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை அணைத்துக் கொண்டு செல்கின்ற இந்த இயக்கம் மிக சிறப்பான புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டது. இந்த இயக்கம் தன்னிச்சையாக தோன்றியிருக்கிறது. இந்த அறிக்கையில் இதற்கான காரணத்தை நான் பின்னர் விளக்குவதற்கு முயற்சிக்கிறேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகியிருப்பதன் அடையாளச் சின்னம்தான் இந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்.

எவ்வாறாயினும், இத்தகைய வெகுஜன கண்டனங்கள் மற்றும் பேரணிகளால் போரை நிறுத்திவிட முடியாது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இயக்கம் சமூக அடிப்படையில் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக வளர வேண்டுமென்றால் அரசியல் விழிப்புணர்வு உயர்ந்த அளவிற்கு வளர வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுஜன போராட்டத்திற்கு அடிப்படையாக கொண்ட ஒரு வேலைத்திட்டமும் முன்னோக்கும் அவசியமாகும்.

தற்போது அமெரிக்காவை ஆளும்தட்டினரின் தகமையையும் மற்றும் அதன் ஈவிரக்கமற்ற தன்மையையும் குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறாக ஆகிவிடும். அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் இராணுவமும் அசைக்க முடியாதவை அல்ல. ஆனால் அவர்கள் ஏமாளிகள் அல்லர். இந்த ஆளும் வர்க்கத்திற்கு விரிவான வரலாற்று அனுபவம் உண்டு. உள்நாட்டில் எதிர்ப்புகளை சமாளித்த கசப்பான அனுபவம் உண்டு மற்றும் வெளிநாடுகளில் எதிரிகளோடு எண்ணிறைந்த போர்களை இந்த ஆளும் வர்க்கம் புரிந்திருக்கிறது. எனவே தனது வர்க்க நலன்களுக்கு சவாலாக எது தோன்றினாலும் அதன் மீது கட்டற்ற கொடுங்கோன்மையை கட்டவிழ்த்துவிடுகின்ற அளவிற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றது. உள்நாட்டு ஜனநாயகக் கொள்கைகளை மிக அப்பட்டமாக மீறுகின்ற நடவடிக்கையை அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்க்ரோப்ட் (John Ashcroft) மேற்கொண்டிருப்பது அமெரிக்க ஆளும் வர்க்க வரலாற்றில் பல முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன: 1919-20ல் பால்மர் திடீர் சோதனைகள்; 1937 நினைவுநாள் படுகொலைகள்; 1950களின் மக்கார்த்தே (McCarthyite) வேட்டையாடும் நடவடிக்கை, நியூயோர்க், டிட்ரோய்ட் மற்றும் இதர நகரங்களில் 1960களின் கடைசியில் நடைபெற்ற சேரிப்பகுதிகள் கிளர்ச்சி எழுச்சிகளை இரத்த வெள்ளத்தில் நசுக்குதல்; 1970 மே மாதம் வியட்நாம் போருக்கு கண்டனம் தெரிவித்த நான்கு கென்ட் நகர மாணவர்கள் கொல்லப்பட்டமை; 1971 செப்டம்பரில் ஆட்டிக்கா சிறைக் கைதிகள் படுகொலை, 1993 ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் Waco நகரில் 80 குழப்பமடைந்த மற்றும் அரசியல் ரீதியாய் தீங்கில்லாத அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் எரிக்கப்பட்டமை.

இத்தகைய வரலாற்று அனுபவங்களை நினைவுகூர்வது பொருத்தமானது என்று கருதுவதற்கு காரணம் இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உலக முதலாளித்துவ அமைப்பின் மிக தீர்மானகரமான பகுதியாக அது அமைந்திருப்பதால் அதன் வரலாற்று அபிவிருத்தியை தெளிவாகவும் விபரமாகவும் நாம் புரிந்துகொள்வதன் மீது போருக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஈராக்கிற்கு எதிரான போரை, சிக்கலான மற்றும் நீண்ட வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளின் உச்சநிலை மற்றும் திருப்புமுனை என இரண்டு வகையாக நாம் சிறப்பாக புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக இந்தப் போரை அமெரிக்கா தூண்டி விட்டதால் அமெரிக்கா அதன் விளைவுகளுக்கான அரசியல் மற்றும் தார்மீக பொறுப்புக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டாக வேண்டும். இன்றைய புஷ் நிர்வாகம் வரலாற்றை உருவாக்குகின்ற வல்லமை படைத்தது அல்ல. தன்னால் புரிந்துகொள்ள முடியாத புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளால் ஆட்டுவிக்கப்படுகின்ற ஒரு கருவியாக அது ஆடிக்கொண்டிருக்கிறது. 1914ம் ஆண்டில் முதலாம் உலகப்போர் ஆரம்பமாகியது. 1939ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாகியது. 2003ல் போர் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. உலக முதலாளித்துவ முறையில் ஆழமாக வேரூன்றிவிட்ட முரண்பாடுகளால் இந்த போர் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. மிக விரிவான வரலாற்று சூழ்நிலையில் புரிந்து கொள்ளும்போது இந்தப் போருக்கு காரணமாக அமைந்திருக்கின்ற முரண்பாடுகள் முந்தைய உலகப்போர்களை உருவாக்கிய அதே முரண்பாடுகளின் சாராம்சம் தான் என்பதை கண்டுகொள்ள முடியும். மீண்டும் கூறுவதானால், இந்தப் போர் அடிப்படையிலேயே பூகோள பொருளாதார அபிவிருத்தியின் தன்மைக்கும் அதன் காலத்திற்கு ஒவ்வாத தேசிய-அரசு முறையின் தன்மைக்கும் இடையிலான மோதலின் அடிப்படையிலிருந்து எழுகின்றது.

2002 செப்டம்பரில் மிக பகிரங்கரமாக மேலாதிக்க செயல்திட்டம் புஷ் நிர்வாகத்தால் தனது தேசிய பாதுகாப்பு மூலோபாயம் தொடர்பான அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை உலக பொருளாதாரத்தின் மிகப் பரந்த ஆதார வளங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் கீழ்ப்படியச்செய்யும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அல்லது அதை இன்னும் துல்லியமாக சொல்வதென்றால் அமெரிக்காவின் ஆளும்தட்டினரின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் உலக பொருளாதார வளங்கள் பயன்படவேண்டும் என்பதுதான். தற்போதுள்ள தேசிய முதலாளித்துவ அரசுகள் மத்தியிலான வளங்களை, முக்கியமாக எண்ணெய் வளம், இவற்றை அடைதலும் பயன்படுத்தலும் தொடர்பான அனைத்து மோதல்களும், மிக சக்திவாய்ந்த தேசிய-அரசுகளால் அதாவது ஐக்கிய அமெரிக்க அரசுகளால் தீர்க்கப்பட இருக்கின்றன. இந்த முடிவுகள், உண்மையான மனிதத் தேவைகளின் பகுத்தறிவுபூர்வமான கணிப்பீடுகளின் அடிப்படையில் அல்லாமல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகடந்த நிறுவனங்களின் பெரிய பங்குதாரர்களின் இலாப கணிப்பீடுகளின் அடிப்படையில் செய்யப்பட இருக்கின்றன.

ஈராக்கிற்கு எதிரான போரின் வரலாற்று வேர்கள்

இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரை, அமெரிக்க சிந்தனையில் மேலாதிக்கம் செய்யும் நடைமுறைவாதப் போக்கின் (Pragmatic Tendency) உள்ளார்ந்த இயல்புக்கு எதிராக செல்லும் சிலவற்றை செய்வதற்கு சற்று பொறுமையாக எனது உரையைக் கேட்க வேண்டும் என கேட்க இருக்கிறேன். அதாவது நாம் அதன் வரலாற்று வேர்களை ஆய்வு செய்வதன் மூலம், தற்போதைய பிரச்சினைகளைப் புரியவும் அதற்கு தீர்வு காணவும் விழைவதாகும். ஆகையால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தம் தோய்ந்த உச்சக் கட்டத்தை அணுகுகையில், அதன் மூலம் மற்றும் அபிவிருத்தியை மீளாய்வது அவசியமானதாகும். புதிரான வகையில், மற்றும் நனவற்ற பெரும் மட்டத்துக்கு, ரம்ஸ்பீல்ட் உட்பட புஷ் நிர்வாகத்தின் பல்வேறு பிரதிநிதிகளால் இந்த வரலாறு வணங்கி வரவேற்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு காலனித்துவ ஆசைகள் இல்லை. அல்லது ஈராக் எல்லையில் மற்றும் அதன் இயற்கை வளங்களை சூறையாடும் நோக்கம் இல்லை என வலியுறுத்தும் வடிவத்தை இது எடுத்திருக்கிறது. எப்போதும்போல், தான் படையெடுத்து செல்லுகின்ற நாட்டின் மக்களை விடுவிப்பதற்காக மட்டுமே அமெரிக்கா விரும்புகிறது என கூறப்படுகின்றது.

எந்தவொரு ஏகாதிபத்திய நாடும் இப்படி விடாப்பிடியாக வெற்றிகரமாக தனது மிகக்கொடுரமான காட்டுமிராண்டி நடவடிக்கைகளைக்கூட ஜனநாயக கற்பனாவாதத்தின் வாய்ச்சவடாலுக்குள் மறைத்துக்கொண்டதில்லை. இந்த வெற்றியை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் புரட்சிகர தோற்ற மூலங்களில் கற்பித்துக் கூறப்படலாம். அந்த நேரத்தில் அமெரிக்கா பிறந்தபோது மனிதனது அழிக்க முடியாத மாற்ற முடியாத அடிப்படை உரிமைகள், சுதந்திரம், மகிழ்வான வாழ்வை மேற்கொள்ளல் ஆகியவற்றிற்கு அது உறுதி கொடுத்தது. இந்த கருணைகள் முப்பது இலட்சம் அடிமைகளான உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்பட்டன. அமெரிக்க அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்களின் நிலைப்பாட்டிற்கு முரணான இந்தப் போக்கை அமெரிக்க அரசியல் சட்டம் உருவானவுடன் அந்தமரபைச் சார்ந்தவர்கள் அதை சாதாரணமாக சமாளித்துவிட முயன்றார்கள். அமெரிக்க கண்டம் முழுவதிலும் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த --ஐக்கிய அமெரிக்க அரசுகள் "Manifest Destiny"-(வட அமெரிக்க கண்டம் முழுவதும் கடவுளால் வரையறுக்கப்பட்டது என்ற நம்பிக்கை) ஐ தழுவிக் கொண்ட நேரத்திலும் கூட, அடிமைகள் பற்றிய தீர்க்கப்படாத பிரச்சினை புதிய நாட்டை துண்டாடுகின்ற வல்லமை படைத்ததாக, 1861-ம் ஆண்டு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. ஆப்ரகாம் லிங்கனின் தலைமையில் அமெரிக்க யூனியன் புரட்சிகரமான பரிணாமங்களைப் பெற்றது. அமெரிக்க கூட்டாட்சியின் பொருளாதார அடிப்படைகள் தூக்கியெறியப்பட்டன மற்றும் 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள அடிமைகள் வடிவிலான சொத்துடைமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அமெரிக்கா சென்ற கொள்கை வழிகள் ஆப்ரகாம் லிங்கன் கற்பனை செய்ததிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தன. அடிமைகள் ஒழிப்பும் யூனியன் காப்பாற்றப்பட்டதும் சுதந்திரத்தின் "புதிய பிறப்பை" உருவாக்கவில்லை, மாறாக தொழிற்துறை முதலாளித்துவம் வடக்கு அமெரிக்க கண்டம் முழுவதிலும் தன்னை பலப்படுத்திக்கொண்டது. இந்த தவிர்க்கமுடியாத பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகளின் வெளிப்பாடு, மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கின்ற அரசாங்கத்திற்கானதாக இல்லை, புதிய முதலாளித்துவ ஆதிக்க கும்பல் அதன் நலனுக்காக அவர்களே தேர்ந்தெடுக்கின்ற அவர்களுக்காக பாடுபடுகின்ற அரசாங்கமாக அமைந்துவிட்டது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மற்றும் இலாப அமைப்பு முறையின் சவால் செய்யமுடியாத மேலாதிக்கத்திற்கு எதிரான முட்டுக்கட்டைகள் அனைத்தும் மிகக்கொடுரமாக தாக்கி தகர்க்கப்பட்டன அல்லது நசுக்கப்பட்டன. பழைய பூர்வீக அமெரிக்க சமுதாயத்தில் மிச்சமிருந்த அந்த சமுதாய அமைப்பும் பண்பாடும், தனியார் நில உடைமை மற்றும் தொழிற்துறை ஆகியவற்றின் அடிப்படையிலான பொருளாதார முறையை தன்னுள் கிரகித்துக் கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. 30 ஆண்டுகளில் அமெரிக்காவின் மிச்சமிருந்த பூர்வீக சமுதாய அமைப்பும் பண்பாடுகளும் சிதைக்கப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் உருவாகிவரும் தொழிலாள வர்க்கத்தின் முதலாவது பெரும் போராட்டங்களை மிகக் கொடுரமாக ஒழித்துக்கட்டியது. வர்க்கப் போராட்டத்தின் மிகவும் பிரபலமானவற்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், 1877-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ரயில்வே வேலை நிறுத்தம், 1880களில் நடைபெற்ற 8 மணிநேர பணிக்கான போராட்டம், 1892-ம் ஆண்டு நடைபெற்ற எஃகு தொழிலாளர் கிளர்ச்சி (Homestead Steel strike), 1894-ம் ஆண்டு நடைபெற்ற புல்மன் வேலை நிறுத்தம் (Pullman strike) போன்றவற்றை நாம் குறிப்பிடலாம்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் தேசியரீதியான உறுதிப்படுத்தல் உள்நாட்டு எல்லைக்கப்பால் விரிந்து செல்வதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தது. 1898-ம் ஆண்டு வெடித்த ஸ்பெயின் - அமெரிக்கப் போர், அமெரிக்காவின் நிலைமை ஒரு ஏகாதிபத்திய அரசாக ஆரம்பமாகியதை குறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பது தனது பணி என்று கூறிக்கொண்டு, கரீபியனில் கியூபா மற்றும் போர்ட்டோரிக்கோ மற்றும் பசிபிக்கில் பிலிப்பைன்சை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம் அமெரிக்கா ஸ்பெயின் மீதான தனது வெற்றியை கொண்டாடியது. பசிபிக் தீவுக் கூட்டத்தின் "விடுதலை" க்கு, 200,000 பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கையைப் பலி கொண்டு, தேசிய ஜனநாயக கிளர்ச்சி எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியமை தேவைப்பட்டது.

19ம் நூற்றாண்டின் முடிவில் அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவாகியமை உலக நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாகும். காலனித்துவத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சி பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களைக் கொண்டிருந்த அதேவேளை, மிகவும் சக்தி மிகுந்த முதலாளித்துவ நாடுகளிடையே சந்தைகளுக்காகவும் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் அதிகரித்த அளவில் மிகமூர்க்கமான போராட்டங்களை நடத்தும் ஏகாதிபத்திய அமைப்பு முறையாக 19ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அதன் பண்பு உருமாற்றமடைந்தது. இத்தகைய போராட்டங்கள் மூலம், பிரதான முதலாளித்துவ அரசுகள் உலக பொருளாதாரத்தில் தங்களுக்கு என்று ஒரு ஆளுமைமிக்க நிலையை உத்தரவாதப்படுத்துதற்கு விழைந்தன.

ஐரோப்பிய போரும் ரஷ்ய புரட்சியும்

ஐரோப்பாவில் பிரதான வல்லரசுகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்கள் இறுதியில் 1914-ஆகஸ்ட் மாதம் முதலாம் உலகப்போராக வெடிப்பதற்கு வழிவகுத்தது. இந்தப் போரின் பின்னே இருக்கும் வரலாற்றுக் காரணங்களை, ரஷ்ய மார்க்சிஸ்ட்டான லியோன் ட்ரொட்ஸ்கி மிக அற்புதமாக விளக்கினார்:

தற்போது நடைபெற்று வருகின்ற போர் அடித்தளத்தில் தேசிய அரசுக்கும் மற்றும் அதன் அரசியல் வடிவத்திற்கு எதிரான உற்பத்தி சக்திகளின் கிளர்ச்சியாகும். இது தேசிய அரசு சுதந்திர பொருளாதார அலகாக இருப்பது வீழ்ச்சியடைந்துவிட்டது என அர்த்தப்படுகின்றது. இந்தப் போரின் உண்மையான புறநிலை முக்கியத்துவம், தற்போதைய தேசிய பொருளாதார மையங்களின் நிலை முறிவும் (உடைவும்), மற்றும் அந்த இடத்தில் உலகப்பொருளாதாரத்தை பதிலீடு செய்வதும்தான். ஆனால் அரசாங்கங்கள் இந்த ஏகாதிபத்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு முன்மொழியும் முறை, மனிதசமுதாய உற்பத்தியாளர்கள் அனைவரதும் அறிவார்ந்த முறையிலான, ஒழுங்கமைக்கப்பட்ட ஒத்துழைப்பு மூலம் அல்ல, மாறாக இந்தப் போரின் முடிவில் வெற்றிபெற்ற நாடு பெரிய வல்லரசு என்ற நிலையிலிருந்து உலக வல்லரசாக மாறுவதுடன், அந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தால் உலக பொருளாதார அமைப்பு சுரண்டப்படுவதன் மூலம் ஆகும்."

உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்தியால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளை, பிரதான முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களால், தங்களது தேசிய நலன்களின் பேரில் தீர்க்க முயலும் வழிமுறைகள்தான் போர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேறு வழியில்லையா? ஆம், வேறு வழி இருந்தது. உலகப்பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, முதலாளித்துவ பதில் மட்டுமல்ல, அதே பிரச்சனைக்கு தொழிலாள வர்க்க தீர்விற்கும் கூட வழியிருந்தது. அதாவது, உலக சோசலிச புரட்சியின் மூலம் முழு தேசிய அரசு அமைப்பையும் தூக்கி எறிந்துவிட்டு, பூகோளப் பொருளாதாரத்தின், தேசிய பகுதிப் பொருட்களை இசைவான முறையில் ஒருங்கிணைத்தல் ஆகும். எந்த முரண்பாடுகள், ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தை போருக்கு உந்தித் தள்ளுகின்றதோ, அதே முரண்பாடுகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சியை நோக்கி உந்திச் செல்லும்.

செயல் விரைவுடைய உலக வரலாற்று அபிவிருத்தியின் இயக்குமுறை தொடர்பான இந்த அசாதாரண நுண்ணறிவுத்திறன், 1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் வெடிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

1914ம் ஆண்டு ஐரோப்பிய போர் வெடித்ததும், 1917ல் ரஷ்ய புரட்சி தோன்றியதும் அமெரிக்காவினைப் பொறுத்தவரை, தொலைநோக்கான வரலாற்று விளைபயன்களைக் கொண்டதாகும். தனியே பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 1914 அளவில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான உற்பத்தி சக்தியுள்ள முதலாளித்துவ பொருளாதாரமாக ஆகி இருந்தது. தாமதமாக உலக அரங்கில் நுழைந்த அமெரிக்கா பரந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நிழலில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், ஐரோப்பிய போர் ஐரோப்பாவை அழித்ததும் பிரிட்டன் அபரிமிதமாய் சேர்த்து வைத்திருந்த செல்வம் கரைந்ததும், பழைய உலகிற்கும் மற்றும் புதிய உலகிற்கும் இடையில், அதிகாரச் சமநிலையை மாற்றி அமைத்தது. 1917 உலகப்போரில் அமெரிக்கா இறங்கிய நேரத்தில் முதலாளித்துவ அரசுகளிலேயே மிகப்பெரிய அரசு என்ற நிலை என்பது ஏற்கனவே அமெரிக்காவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. அப்படியிருந்தும், உலகிலேயே முன்னணி அரசாக அமெரிக்கா உருவாகி வந்த நேரத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற்றதும் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டதும், ஒட்டுமொத்த ஏகாதிபத்திய உலக அமைப்பின் உயிர்வாழ்விற்கே முன்னொருபோதுமில்லா வரலாற்று அறைகூவலை முன்வைத்தது.

புரட்சிகர அரசாங்கத்தை தூக்கி வீசுதற்கு முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம் இந்த அச்சுறுத்தலுக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் பதிலிறுத்தன. ஜனாதிபதி வூட்ரோ-வில்சன் (Woodrow Wilson) முன்னாள் ஜார் மன்னரினது இராணுவத் தளபதிகள் தலைமையில் இயங்கி வந்த எதிர்ப்புரட்சி படைகளுக்கு ஊக்கமூட்டுகின்ற வகையில் அமெரிக்கப் படைகளை அனுப்பினார். இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன மற்றும் அமெரிக்கா தனது விஷேட படைகளை திரும்ப பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குப் பதில், பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு தனது இராஜதந்திர அங்கீகாரத்தை ரத்து செய்தது. (அந்த நிலை 1933 வரை திரும்பப் பெறப்படவில்லை) மற்றும் அமெரிக்காவிற்குள், புரட்சியின் சோசலிச ஆதரவாளர்கள் மீதும் தீவிர ஆதரவாளர்கள் மீதும் மிகக்கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஒரே அறிக்கையின் கட்டமைப்பிற்குள் 20ம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்குகள் அனைத்தையும் ஆராய்வது இயலாத காரியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த அடிப்படை ரீதியான பொதுமைப்படுத்தலை செய்ய முடியும்: 20ம் நூற்றாண்டின் மீதமிருக்கும் பெரும்பாலான காலப்பகுதி முழுவதிலும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு வளர்ச்சியிலும் ஒரு கரிய நிழல் போல் சூழ்ந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய ஏகாதிபத்திய வல்லரசாக வளர ஆரம்பித்த காலத்திலிருந்து, சோவியத் ஒன்றியம் தனக்கு அடிப்படையிலேயே வேறுபட்ட ஒரு அச்சுறுத்தலாகவும், மற்ற எந்த முதலாளித்துவ போட்டியாளரையும் விட தனக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் அமெரிக்கா கருதியது. சோவியத் ஒன்றியம் நீடித்திருப்பதே முதலாளித்துவ ஆட்சி மற்றும் முழு உலக முதலாளித்துவ அமைப்பையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்தன. சோவியத் அரசால் முன்வைக்கப்பட்ட இந்த அடிப்படை சவாலால் ஊக்குவிக்கப்பட்ட அச்சம், அமெரிக்க அரசியல் வாழ்வில் கம்யூனிச விரோத நடவடிக்கைகள் ஆற்றிய அசாதாரணமான பாத்திரத்திற்கு காரணம் கூறுகின்றது.

சோவியத் அரசின் தன்மை மிகப்பரந்த அளவில் சீரழிவை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பதை வலியுறுத்தியாகவேண்டும். 1923 இற்கும் 1927 இற்கும் இடையில் ட்ரொட்ஸ்கியினதும் இடது எதிர்ப்பாளர்களின் அரசியல் தோல்வியும் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சர்வாதிகாரத்தைப் பின்னர் பலப்படுத்திக்கொண்டமையும் அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த புரட்சிகர சர்வதேசிய கோட்பாடுகள் திட்டமிட்டபடியும் மற்றும் முற்றிலுமாக காட்டிக் கொடுக்கப்பட்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் உண்மையான புரட்சிகர சிந்தனையை கேலிக்குரியதாக்கவும், ஒட்டுண்ணி அதிகாரத்துவ ஆட்சியின் கொள்கைகளை நியாயப்படுத்தவும் மட்டுமே மார்க்சிசத்தில் ஒரு சில சொற்கள் மிஞ்சியிருந்தன.

எவ்வாறாயினும், உலகின் பெரும்பகுதிகளில் முதலாளித்துவ சொத்துடைமை அடிப்படை உருவாவதை சோவியத் ஒன்றியம் தடுத்தது. ஏதாவதொரு வகையில், அமெரிக்காவின் பூகோள குறிக்கோள்கள் நிறைவேறுவதை சோவியத் ஒன்றியம் செயலிழக்கச்செய்தது. இதற்கெல்லாம் மேலாக, முதலாளித்துவம் அல்லாத ஒரு சமுதாயம் அமைப்பது சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டியது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவின் இடையறா பகையை சோவியத் ஒன்றியம் தூண்டிவிட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உருவான குழப்பத்தில், உலக முதலாளித்துவ விவகாரங்களை ஒழுங்கமைக்கும் சர்ச்சைக்கு இடமற்ற சமரசக்காரராக அமெரிக்கா வெளிப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் உள்ள அதன் முந்தைய ஏகாதிபத்திய போட்டி நாடுகள் தற்போது அமெரிக்காவின் காலடியில் விழுந்துகிடந்தன. இங்கிலாந்தோ அல்லது பிரான்சோ, தங்களது பழைய சாம்ராஜ்யங்களை பராமரிக்க முடியா நிலையில் இருந்தன. கொள்கை அடிப்படையில் பழைய ஏகாதிபத்திய உறவுகள் நீடித்திருப்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. ஏனெனில் அந்த உறவுகள் பொருளாதார வளங்கள் மற்றும் சந்தைகளில் அதன் சொந்த வாய்ப்புக்களை தடுத்தது. அவை அமெரிக்காவின் பூகோள தலைமையின் கீழ்வரவேண்டி நிர்பந்திக்கப்பட்டன.

அமெரிக்கா தனது இராணுவ வலிமையை கட்டுப்பாடற்ற வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதிக்கமுடியாத உலக சூழ்நிலை காரணமாக, அமெரிக்காவின் சொந்த மேலாதிக்க அபிலாஷைகள் வெட்டப்பட்டன. முதலாவதாக, நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்ததில் தனது தீர்க்கமான பாத்திரத்தின் விளைவாக சோவியத் யூனியன் ஒரு உலக வல்லரசாக உருவாயிற்று. இரண்டாவதாக, பாசிசத்தின் தோல்வி மற்றும் பழைய ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளது அதிகாரங்கள் பலவீனப்பட்டதால் காலனித்துவத்திற்கு எதிரான "மூன்றாவது உலக நாடுகள்" என்று கூறப்பட்டவற்றில் உள்ள மக்களின் வரலாறு காணாத வெகுஜன புரட்சி இயக்கத்தைக் கண்டது. மூன்றாவதாக, இரு தசாப்தங்களாக நீடித்த போர் மற்றும் பொருளாதாரத் தாழ்வின் பின்னர் ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் இதர முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீதும், சோவியத் ஒன்றியத்தின் மீதும் மற்றும் மூன்றாவது உலகத்தில் கிளர்ச்சிகளில் இறங்கிய மக்கள் மீதும் ஒட்டுமொத்தமாக போர் தொடுப்பதற்கு வேண்டிய தனிப்பட்ட தியாகம் செய்யும் மட்டங்களை திணிக்க அனுமதிக்கவில்லை. மேலும் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதங்களை தயாரித்ததை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எந்த பகுத்தறிவுபூர்வமான உணர்வு கொண்ட பிரிவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மூன்றாம் உலகப்போர் பற்றிய ஆபத்தை முன்வைத்தது.

என்றாலும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உடனடியாக அமெரிக்க கொள்கை சென்ற திசை வழி தெளிவாக இல்லை. கணிசமான மற்றும் சக்திவாய்ந்த அமெரிக்க ஆளும் தட்டுக்கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தாக்குதலை நடத்தக் கோரி வந்தன. அதாவது, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலைமையின் கீழ் உலக முதலாளித்துவ அமைப்பின் சவால் செய்யமுடியாத எதிர்ப்பை மீண்டும் நிலைநாட்டும் "பழைய நிலைக்குதிரும்புதல்" கொள்கையை கடைபிடிக்கவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தின் பொதுவான விரிவாக்கம் சோவியத் ஒன்றியத்துடன் ஏதாவது ஒரு வகை சமரசத்திற்கு வரவேண்டும் என்பதை ஆதரித்த அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சில பகுதியினரது கரத்தை வலுப்படுத்தியது. இந்த சமரசத்தின் பண்பு, அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகளிடையே மிக முக்கியமானவரான ஜோர்ஜ். எப். கெனான் (George F. Kennan) ஆல் முன்னோடியாக இருந்து வகுக்கப்பட்ட "கட்டுப்படுத்தல்" என்ற வேலைத் திட்டத்தில் நுட்பமாக செய்யப்பட்டது. இதன்கீழ் சோவியத் ஒன்றியத்துடன் நேரடியாக இராணுவ மோதலில் ஈடுபடுவதை அமெரிக்கா தவிர்க்கும். மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பையும் அதன் செல்வாக்கு கிழக்கு ஐரோப்பாவில் நிலைநாட்டப்படுவதையும் அமெரிக்கா சகித்துக்கொள்ளும், ஆனால், உலகின் இதர எல்லா மண்டலங்களிலும் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு பரவுவதை தடுக்க அமெரிக்கா முயலும். "சோவியத் செல்வாக்கு" என்ற சொல், உலகின் எந்தப் பகுதியிலாவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக உருவாகும் எந்தவிதமான சோசலிச அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் என்று விளக்கப்பட்டது.

ஆனால் எந்த அளவிற்கு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பின்பற்ற முடியும்? சோவியத் ஒன்றியத்துடனும் பின்னர் சீனாவுடனும் போர் வெடித்துக் கிளம்பக்கூடும் என்ற அச்சுறுத்தல் உருவாகும் கட்டம் வரையும் மற்றும் அணு ஆயுதப்போரை உருவாக்கக்கூடும் என்ற ஆபத்து எழும்வரை இக்கொள்ளகை நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு, கொரிய மோதலை பொருத்தவரை தென்கொரியாவில் பொம்மை ஆட்சியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா தலையிட்டது. ஆனால், ஜெனரல் மெக்ஆர்தரின் (MacArthur) 37வது அகலரேகையை கடப்பது என்ற கண்மூடித்தனமாக முடிவை எடுத்து, யாலூ ஆற்றை நோக்கி அமெரிக்கப் படைகளை நடத்திச் சென்றதால் இந்தப் போரில் சீனா ஈடுபட வேண்டி வந்தது. ஜனாதிபதி ட்ரூமன் நிர்வாகம் அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஜெனரல் மெக்ஆர்தரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் மறைமுகமாக காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை எந்த அளவிற்கு சகித்துக்கொள்வது என்பது தொடர்பாக 1950கள் மற்றும் 1960கள் முழுவதிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு உள்ளேயே ஒரு கடுமையான போராட்டம் குமுறிக் கொண்டு இருந்தது. அமெரிக்காவுடன் நேரடியாக மோதலில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அல்லது அமெரிக்காவின் முக்கிய நலன் எட்ட முடியாத அளவிற்கு இடையூறு செய்கின்ற நாடுகள் மீது அணு ஆயுதங்கள் உட்பட அமெரிக்காவின் இராணுவ வலிமையை எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தவேண்டும் என்று கூறுகின்ற ஆளும் மேல் தட்டின் கணிசமான பகுதிகள் எப்போதும் இருந்து வந்தன.

போருக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி விரிவடைதல் தொடர்கின்ற வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய வல்லுநர்கள் "கட்டுப்படுத்தல்" தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினர். பத்தாண்டுப் போரில், 30 இலட்சம் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டதும், மற்றும் சிஐஏ (CIA) நிதி உதவியோடு பல ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்ததும், 1953ம் ஆண்டு ஈரானின் பிரதமர் மொசாடேக் (Mossadegh) இன் தேசியவாத ஆட்சி கவிழ்க்கப்பட்டது, 1954ல் குவாத்தமாலாவில் ஆர்பன்ஸ் (Arbenz) ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், கொங்கோவில் 1960ம் ஆண்டு லுமும்பா (Lumumba) ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதும், கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சியை அழிப்பதற்கு கணக்கில்லாத முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டதும், பிரேசிலில் குலார்ட் (Goulart) அரசாங்கத்தை கவிழ்த்ததும், 1965ல் இந்தோனேஷியாவில் சுகார்டோவை (Suharto) பதவிக்கு கொண்டுவந்த எதிர்ப்புரட்சியை நடத்தியது, 1967ல் வலதுசாரி கிரேக்க இராணுவ தளபதிகளை கிளர்ச்சி செய்ய தூண்டிவிட்டது, 1973ம் ஆண்டு சிலி நாட்டில் ஜனாதிபதி சல்வடார் அலன்டே (Salvador Allende) பதவியிலிருந்து விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்றவைதான் அதனை அனுமதித்த கொள்கைகளுக்கு அதுதான் சரியான பதம். இவை மிதவாத கொள்கைகள் (moderate policy) கடுமையான கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களது கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

1960களில் இறுதியில் உலக முதலாளித்துவத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலை மங்கிக்கொண்டு வந்தது. ஐரோப்பிய பொருளாதாரங்கள் மீளக் கட்டி அமைக்கப்பட்டதும் மற்றும் ஜப்பான் முன்னணிக்கு வந்ததும் அமெரிக்க பொருளாதார மேலாதிக்க நிலையின் புள்ளிவிவர குறிகாட்டிகளில் சரிவிற்கு தவிர்க்க முடியாதபடி வழிவகுத்தது. வெளிவர்த்தகத்தில் அமெரிக்க செலுத்துகை சமநிலையில் வீழ்ச்சியும், ஏற்றுமதி அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க தொழில்கள் அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது பலவீனமான அளவிற்கு போய்விட்டது என்பது தெளிவாயிற்று. இதனால், உலக நாணய மாற்றின் அடிப்படை நாணயமாக டொலர் (ரிசர்வ் கரன்சியாக) முக்கிய பாத்திரம் வகித்ததன் அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பினை நீண்ட நெருக்கடிக்கு இட்டுச்சென்றது. போருக்குப் பிந்தைய நிதி அமைப்பு முறைக்கு அடிப்படையாக இருக்கும் டொலர் தங்க மாற்று உத்திரவாதத்தை 1971 அளவில் அமெரிக்கா கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 2ம் உலகப் போருக்குப் பின்னர், போருக்குப் பிந்தைய பொருளாதார விரிவாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு உலக முதலாளித்துவ முறையின் நீண்ட கால நெருக்கடிக்கு காரணமும் ஆகியது.

அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் எல்லா அம்சங்களிலும் இரண்டு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் உலக அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் பெருகிவரும் முரண்பாடுகளில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு மற்றும் அந்த முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே அமெரிக்காவின் நிலை சீர்கேடடைந்து வருவதற்கு பதிலாக நன்கு புரிந்து கொள்ளப்பட முடியும். உள்நாட்டு கொள்கையை பொறுத்தவரை ஆளும் வர்க்கம் சர்வதேச நெருக்கடிக்கு அளித்த பதில், சீர்திருத்தவாதத்தின் எந்த சாயலையும் கைவிட்டுவிட்டு தொழிலாள வர்க்கத்தின் எல்லா பகுதியினரது வாழ்க்கைத் தரங்களின் மீதும் நீடித்த தாக்குதலை தொடரும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. வெளிநாட்டுக் கொள்கைகளை பொறுத்தவரை, தனது எல்லா போட்டியாளர்கள் மீதும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் அதிகரித்த அளவில் வலுச்சண்டைப் போக்குகளை மேற்கொள்ள தொடங்கியது.

1979ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீட்டை தொடக்கிவிட்ட நிகழ்ச்சிப் போக்குகள் 2001 செப்டம்பர் 11ன் துயர நிகழ்ச்சியாக உச்சத்தில் முடிந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை நிலைகுலையச் செய்து பொறிந்து போகச்செய்வதை நோக்கமாகக் கொண்டது. றேகன் நிர்வாகத்தின் கொள்கையின் முழுதிசைவழியும் அதிகாரத்துவ சோவியத் அமைப்பு முறையில் பெருகிவரும் பிரச்சனைகளை இராணுவ, அரசியல் மற்றும் பொருளதார அழுத்தங்கள் ஆகியவற்றின் சேர்க்கையுடன் தூண்டிவிடுவதன் மூலம் சோவியத் ஒன்றியத்தை பொறிந்து போகச்செய்வதை குறிக்கோளாகக் கொண்டது.

இந்த வழியிலான அமெரிக்காவின் முயற்சிகள், கோர்ப்பசேவ் தலைமையில் சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கு மற்றும் முதலாளித்துவத்தை புனருத்தானம் செய்வதற்கும் சோவியத் அதிகாரத்துவம் செய்த முடிவால் றேகன் நிர்வாகம் வியப்படைகின்ற வகையில் முன்னதாக செய்யப்பட்டு விட்டது.

இந்த சீர்குலைவிற்கு அடிப்படைக் காரணங்கள் சிக்கலானவை. ஆனால், அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு தொடர்ந்து இடைவிடாது சர்வதேசியவாதம் காட்டிக்கொடுக்கப்பட்டதன் விளைவுதான். அடிப்படையிலேயே சோவியத் ஒன்றியத்தின் தேசியவாத மற்றும் அதிகாரத்துவ பொருளாதாரக் கொள்கைகள் உலக பொருளாதார வளங்களிலிருந்து சோவியத் ஒன்றியத்தைத் துண்டித்துடன், அதனை முற்றாக சாத்தியப்பாடற்றதாக்கியது.

சோவியத் ஒன்றியம் சிதைந்ததை சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிகத்தை நிறுவுதற்கான ஒரு வாய்ப்பாக அமெரிக்கா அதை எடுத்துக்கொண்டது. 1917 இற்குப்பின், முதல் தடவையாக அமெரிக்கா தனது இராணுவ வலிமையை தனது பூகோள குறிக்கோள்களை அடைவதற்கு பயன்படுத்துவதற்கு தெளிவான சர்வதேச கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. முதலாவது புஷ், சோவியத் ஒன்றியம் மறைந்துவிட்டது குறித்து சோவியத் ஒன்றியம் மறைந்துவிட்டதால் "புதிய உலக ஒழுங்கு" உருவாக்குவதற்கான வழியை திறந்துவிட்டிருப்பதாக கூறி வெளியிட்ட பிரகடனத்தின் பொருள் இதுதான். இந்தப் புதிய உலக ஒழுங்கு என்ன என்பதை அவர் தெளிவாக விளக்காதபோதும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள நலன்களுக்கு ஏற்ப உலகை மறுஒழுங்கமைப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் மறைவால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அரசியல் வெற்றிடத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளது என்பது அதிக அளவில் தெளிவாகத் தொடங்கியது.

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர், தனது உலக பொருளாதார அபிலாஷைகளுக்கான அமெரிக்க முதலாளித்துவத்தின் வல்லமையானது அதன் தற்போதுள்ள தேசிய எல்லைகளால் முன்வைக்கப்படும் கட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு மேல் மிகப்பாரியளவில் வளர்ந்திருக்கிறது என லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். ``அமெரிக்க முதலாளித்துவம், 1914ம் ஆண்டு ஜேர்மனியை போர் பாதைக்கு தள்ளிவிட்ட அதே பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது. உலகம் பிளவுபட்டிருக்கிறதா? அது மீண்டும் பிளவுபடுத்தப்பட்டாக வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை 'ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது' தான் ஒரு பிரச்சனை. ஐக்கிய அமெரிக்க அரசுகள் உலகையே, 'ஒழுங்கமைக்க வேண்டும்'. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலைக் குமுறலை மனித இனம் நேருக்கு நேராக சந்திக்கும் நிலையை வரலாறு கொண்டு வந்திருக்கிறது.`` என குறிப்பிட்டார்.

அவரது தொலைநோக்கு தற்போது உணரப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயம் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் உலக பொருளாதார ஆதாரங்களை முழுமையாக தனக்கு கீழ்படியச்செய்யவும் தனது மிகப்பெரும் இராணுவ வலிமையை பயன்படுத்துவதைக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன செய்யவேண்டும் ?

ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டிருப்பது, உற்பத்தி சக்திகளின் பூகோள தன்மைக்கும் காலத்திற்கு ஒவ்வாத தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டின் உலக வரலாற்று பிரச்சினைக்கு ஏகாதிபத்திய அடிப்படையில் தீர்வுகாணும் இறுதியானதும், அதிஉச்சமானதுமான ஒரு முயற்சியாகும் ஆகும். உலகின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இறுதி அதிகாரம் கொண்டவராக தொழிற்படும் உலக பொருளாதார ஆதாரங்களில் பெரும்பங்கை தான் கொள்ளயிட்டு கவர்ந்து கொண்ட பின்னர், அவை எப்படி பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்பதை முடிவு செய்யும் ஒரு அதியுயர் தேசிய அரசாக தன்னை நிலைநாட்டிக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை வெற்றிகொள்ள முன்மொழிகிறது. உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளின் தீர்விற்கு இந்த வகையான ஏகாதிபத்திய தீர்வுமுறை 1914ம் ஆண்டே முற்றிலும் பிற்போக்குத்தனமாக ஆனது என கருதப்பட்டது. காலம் கடந்த பின்னரும் அந்த முறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உண்மையில், அத்தகைய ஏகாதிபத்திய செயல்திட்டம் எதுவாக இருந்தாலும், 20ம் நூற்றாண்டில் மிகப்பிரம்மாண்டமான அளவிலான உலக பொருளாதார வளர்ச்சியானது அப்படியான ஒன்று பைத்தியக்காரத் தனமானதாகும். ஒரு தேசிய அரசின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் எந்த முயற்சியும் சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பின் அபரிமிதமான மட்டத்துடன் பொருந்திப் போகாது. அத்தகைய செயல் வேலைத் திட்டத்தின் ஆழமான பிற்போக்குத்தன்மையானது அதனை அடைவதற்கு தேவைப்படும் காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது.

எவ்வளவோ துயரங்களுக்கு மத்தியிலும் 20ம் நூற்றாண்டு வாழ்வு பயனற்றதாகிவிடவில்லை. இந்த நூற்றாண்டின் போக்கில் மனித இனத்தையே அமைதியான முறையில் ஒன்றுபடுத்துகின்ற அளவிற்கு புறநிலைமைகளின் முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் கூட நாடுகடந்த பெரிய நிறுவனங்கள் தோன்றியிருப்பது தேசியத்தின் மீதான பூகோள பொருளாதார ஒருங்கிணைப்பின் வெற்றியை குறித்துக் காட்டுகிறது. பொருளாதார வாழ்வின் அடிப்படை அலகாக தேசிய அரசு இனி எந்த அர்த்தத்திலும் இல்லை. உற்பத்தியின் முழு நிகழ்ச்சிப் போக்கும் மிக உயர்ந்த ஒருங்கிணைந்த சர்வதேச உற்பத்தி என்கிற அடிப்படையில் செல்கிறது. எந்தவிதமான தேசிய ஒழுங்குமுறையினாலும் கட்டுப்படுத்த முடியாதவாறு மிகப்பெரிய அளவிலும் படுவேகமாகவும் நிதி நிர்வாக நடைமுறைகள் இந்த நிகழ்ச்சிப்போக்கைத் தூண்டிவிடுகின்றன.

இந்த பரந்த நிகழ்ச்சிப்போக்கை அதன் சொந்த மேலாதிக்க கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படுத்தும் எந்த தேசிய அரசின் முயற்சியும் பிற்போக்குத்தனமானதுடன் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. இதை வேறு எந்த உதாரணத்தையும்விட எண்ணெய் வளத்தை நாடுவது சிறப்பாக விளக்கிக்காட்டுகிறது. தற்போது நடைபெறும் போரில் எண்ணெய் வளம் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. இந்த எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எவ்வளவுதான் இடையறாத முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும், எண்ணெய் வளம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை கிடைக்கின்ற ஒரு பொருள்தான் என்ற உண்மையை மாற்றாது. தனது இராணுவ வெற்றியின் அடிப்படையில் அமெரிக்கா கிடைக்கின்ற எல்லா எண்ணெய் வளங்களையும் முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிடும் என்று வைத்துக்கொண்டால் கூட உலக பொருளாதார நீண்ட கால வளர்ச்சிக்கு தேவைப்படும் ஒட்டுமொத்த எரிபொருள் ஆதாரங்களின் அளவை அதிகரித்துவிட முடியாது.

தற்போது நடைபெற்றுவரும் போர் உலக முதலாளித்துவ முறையின் காலவதியற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. மீண்டும் ஒருமுறை இது மனித இனத்தை பேரழிவிற்குள் தள்ளிவிட அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. முழு உலகமும் பரவி வரும் அழிவு மற்றும் மரணம் என்கிற சூறாவளிக்குள் தள்ளப்படுகின்றன. நேற்று, ரம்ஸ்பீல்ட் தனது முஷ்டியை உயர்த்தி ஈரானுக்கும் சிரியாவிற்கும் எச்சரிக்கை விடுத்தார். இன்றைய தினம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மறைமுகமாக ஈராக்கிற்கு ரஷ்யா எந்த ஆதரவு தந்தாலும் அதை அமெரிக்கா சகித்துக்கொள்ளாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேரழிவு ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னால், எத்தனை நாடுகள் அதற்குள் இழுத்துவிடப்படுமோ?

ஆனால், வரலாறு எந்தவிதமான தீர்வும் இல்லாத எந்தப் பிரச்சனையையும் முன்வைப்பதில்லை. உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரச்சனைகளுக்கு சூறையாடும் ஏகாதிபத்திய தீர்வு மட்டுமே அங்கு இல்லை. இந்த பூகோள நிகழ்ச்சிப் போக்குகளுக்குள்ளே புறநிலைரீதியாக சர்வதேச சோசலிச தீர்விற்கான வாய்ப்புகளும் அடங்கியுள்ளன. சென்ற மாதம் உலகம் முழுவதிலும், வெகுஜன கிளர்ச்சிகள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்திற்கு நாம் இங்கே வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டங்கள் முதலாளித்துவ அமைப்பின் எல்லா பாரம்பரிய அரசியல் சக்திகளுக்கும் எதிராகவும் மற்றும் அவற்றிலிருந்து சுயாதீனமாக ஏறத்தாழ தன்னியல்பாக அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. இது உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு சர்வதேசியவாத மற்றும் சோசலிச தீர்வு உருவாகி வருவதற்கான ஆரம்ப வெளிப்பாடுகள் என்பது புரிந்து கொள்ளப்பட முடியும். உயிரற்ற உற்பத்தி சக்திகள் மட்டும் இங்கு சர்வதேச மயமாக்கப்பட்டிருக்கவில்லை. மனித இனம் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் காலத்திற்கு ஒவ்வாத அனைத்து வடிவங்களான இனம், மதம், தேசியம் ஆகியவற்றின் புறநிலை முக்கியத்துவமும் திடீரென்று தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றது. உலகப் பொருளாதார அபிவிருத்தியின் உள்ளார்ந்த நிகழ்ச்சிப்போக்கு புதிய சர்வதேச மனித அடையாளம் வெளிப்படையாய் உருவாவதை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த உள்ளடக்கத்திற்குள், உலகம் முழுவதிலும் இளைஞர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது, மாற்றம் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும்.

ஆனால், சமூக அபிவிருத்தியின் நனவற்ற நிகழ்ச்சிப்போக்காக இன்னமும் இருக்கின்ற இந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் ரீதியாய் நனவு கொண்ட ஒரு இயக்கமாக மாற்றியமைக்க வேண்டும். இந்தப் பணிக்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் குரலான, உலக சோசலிச வலைத் தளம் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு அரசியல் இயக்கம்தான், தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயல்புக்கு ஏற்ப சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றது. இதன் தினசரி வெளியீடுகள் உலக அபிவிருத்திகளின் ஒன்றுபட்ட கருத்துருவின் அடிப்படையிலான, சர்வதேச ஒத்துழைப்பின் அசாதாரணமான மட்டத்தின் ஒரு விளைவாகும்.

20ம் நூற்றாண்டின் மிகப்பரந்த புரட்சிகர மூலோபாய அனுபவத்தின் படிப்பினைகளை ஈர்த்துக்கொள்ளலை அடிப்படையாகக் கொண்ட தத்துவார்த்த மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு உலக சோசலிச வலைத் தளம் பணியாற்றி வருகிறது.

இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் பணிகள் பரவலாக விரிவடைவதற்கான அடித்தளத்தை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எழுப்புகின்ற கேள்வி: அடுத்து என்ன செய்ய வேண்டும்? போருக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பாடு செய்வதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை.

இந்தப் போர், பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்திற்கும் அரசியல் அமைப்பில் உள்ள எல்லா பழைய கட்சிகளுக்கும் இடையில் நிலவுகின்ற மிகப் பரந்த இடைவெளியை அம்பலத்திற்கு கொண்டுவந்துவிட்டது. இந்த பயனற்ற அமைப்புக்களால் பொதுமக்களுக்கு எதையும் தரமுடியவில்லை. உருவாகிவரும் வெகுஜன இயக்கத்திற்கு ஒரு வேலைத்திட்டமும் ஒரு முன்னோக்கும் தேவைப்படுகின்றன. நமது இயக்கம், எமது காலத்தின் பாரிய பிரச்சனைகள் அனைத்திற்கும் சிக்கலற்ற எளிதான தீர்வு எதுவும் இல்லை என்ற கடுமையான உண்மையை மறைக்க முயலவில்லை. மொத்தத்தில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாகும். இன்று நிலவும் உலகம் 20ம் நூற்றாண்டின் துயரமிக்க அனுபவங்களால் உருவானது. புரட்சிகர மாற்றத்திற்கான பல வாய்ப்புக்களை இழந்திருப்பதுடன், தொழிலாள வர்க்கம் தோல்விகளை சந்தித்திருக்கின்றது. தற்போதைய நிகழ்வுகள் சம்பந்தமான ஆய்வுகள் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் தினசரி வெளிவரும் கட்டுரைகளுக்கு இந்த வரலாற்று சம்பவங்களின் படிப்பினைகள் அடிப்படையாக உள்ளன.

உலக சோசலிச வலை தளத்தின் செல்வாக்கு மிகவேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதில் எந்தவிதமான தவறான கருத்துக்கும் இடமில்லை. முதலாளித்துவ அமைப்பு முறையின் எந்த ஒரு குறிப்பிட்ட அம்சத்தையும் கண்டிப்பதற்காக மட்டும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பது நமது நோக்கமல்ல. தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தன்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். இறுதி ஆய்வுகளில், போருக்கு எதிரான போராட்டம் என்பது எதிர்ப்பியக்கம் தொடர்பான விவகாரம் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்ைைதக் கைப்பற்றி சோசலிச சமுதாயத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவது தொடர்பானதாகும்.

அடிக்கடி தொழிலாள வர்க்கத்தின் தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளில் மாற்றங்கள், தகவல் தொடர்புகளில் புரட்சி, தகவல் தொழில்நுட்பங்களில் புரட்சி, முற்றிலும் புதிய தொழில்துறைகளும், உழைப்பின் வடிவங்கள் உருவாகியிருப்பது, தொழிலாள வர்க்கத்தின் தன்மைகளிலும் நடைமுறைகளிலும் மிகத்தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், சென்ற நூற்றாண்டின் மத்தியில் நிலவிய பழைய தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தை விட தற்போது மிக விரிவான, பரவலான மக்கள் பிரிவுகள் வளர்ந்திருக்கின்றன. நமது விளக்கத்தில் தமது வாழ்விற்காக வாராந்த ஊதியத்தை பிரதானமாக சார்ந்திருக்கும் அனைவரையும் சேர்த்துக்கொள்வோமானால் அமெரிக்காவிற்குள்ளேயே மக்களில் மிகப்பெரும்பாலோர் தொழிலாள வர்க்கமாகின்றனர். மேலும், பூகோளமயமாக்கலும் பொருளாதார மாற்றங்களும் ஏற்படுத்திய தாக்கங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அபிவிருத்தியடையாத, குறிப்பாக ஆசியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் புதிய தொழிலாள வர்க்க பிரிவுகளை உருவாகியுள்ளன.

உலகம் முழுவதிலும், போர் என்பது அதிகரித்த உண்மையான துன்பம் மற்றும் கஷ்டங்களையுமே உருவாக்கும். அமெரிக்காவில், முதலாளித்துவ சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்சினைகள் எதையும் போரை அடிப்படையாகக் கொண்டு தீர்த்துவிட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் பெரும் அபிவிருத்திக்கான எல்லா சூழ்நிலைகளும் மிக அதிக அளவிற்கு வெளிப்பட்டு வருகின்றன. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் நுழைகின்ற அனைவருக்கும், மனித இனத்திற்கு எதிரான சுரண்டலுக்கும், அநீதியின் எல்லா அம்சங்களுக்கும் எதிரான போராட்டத்தில் நுழைகின்ற அனைவருக்கும், மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் தேவைப்படுகின்ற வேலைத்திட்டங்களையும், ஆய்வுகளையும், முன்னோக்கையும் வழங்குவதற்கு உலக சோசலிச வலைதளத்தை புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தின் அரசியல் மையமாகவும் அறிவுமையமாகவும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுதான் நமது நோக்கம். இந்த புதிய உலக இயக்கத்தை உருவாக்குவதில் இந்த மாநாடானது மேலும் ஒரு முக்கிய அடி எடுத்துவைப்பாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved