World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Blair caught lying about soldier's "execution"

சிப்பாய் "கொலை'' தொடர்பாக பொய் உரைத்து பிடிப்பட்ட பிளேயர்
By Julie Hyland
29 March 2003

Back to screen version

ஈராக் போரில் பலியான ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் சகோதரி தன் சகோதரன் போரில் மாண்ட சூழ்நிலைகள் குறித்து பிரதமர் டோனி பிளேயர் பொய் சொல்வதாக கண்டனம் செய்திருக்கிறார்.

சாப்பர் லூக் அல்சாப் (வயது-24) மற்றும் சார்ஜண்ட் சைமன் கல்லிங்வோர்த் (வயது-26) இருவரும் சிறப்பு வெடிகுண்டு யூனிட்டை சேர்ந்தவர்கள். தெற்கு ஈராக், ஸாப்வான் பகுதியில் இந்தவார ஆரம்பத்தில் அவர்கள் பயணம்செய்த லாண்ட்ரோவர் வாகனம், சுற்றிவளைத்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர் பின்னர் அல் ஜஸீரா தொலைக்காட்சி அவர்களது உடல்களை ஒளிபரப்பில் காட்டியது. மற்றும் ஈராக் சிவிலியன்கள் சிதைந்த லாண்ட்ரோவர் மீது நின்று நடனமாடிய காட்சியையும் ஒளிபரப்பியது.

மார்ச்,27 வியாழக்கிழைமை அன்று கேம்ப்டேவிட் இல் பிளேயர், ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் உடன் நடத்திய கூட்டு நிருபர்கள் பேட்டியில் சிப்பாய்கள் மரணம் முக்கிய இடம்பெற்றது. அதைப்பயன்படுத்தி அமெரிக்கா- பிரிட்டன் ஈராக் மீது படையெடுத்திருப்பதற்கு தார்மீக அடிப்படையில் நியாயம் கற்பிக்க ஆரம்பித்தனர்.

''அந்த இருவரும் கொலை செய்யப்பட்டமை புரிந்துணர்விற்கும் அப்பாற்பட்ட இரக்கமற்ற செயல்''

என பிளேயர் குறிப்பிட்டார்.

அவர்கள் இறந்த விதம் "சதாம் ஆட்சியின் கீழான அநாகரீகமான தன்மைக்கு மேலும் சான்றாக உள்ளது'' என்று அவர் தொடர்ந்தார்.

''மரபு முறையான போர் தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளும் அப்பட்டமாக மீறும் இன்னுமொரு நடவடிக்கை இது.

''அதற்கெல்லாம் அப்பால் சம்பந்தப்பட்ட சிப்பாய்களது குடும்பங்களை பொறுத்தவரை புரிந்துணர்விற்கும் அப்பாற்பட்ட இரக்கமற்ற செயலாகும். உண்மையிலேயே தங்களது ஆன்மாவில் ஒரு துளியாவது மனித நேயம் உள்ளவர்களது புரிந்துணர்விற்கு அப்பாற்பட்ட கொடூரச்செயல்'' என பிளேயர் குறிப்பிட்டார்.

புஷ் சேர்ந்து கொண்டு கருத்தை வலியுறுத்துகையில் ''அவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள்..... ஆயுதம் இல்லாத இராணுவத்தினர்கள் கொலைசெய்யப்பட்டனர். அது ஒரு போர்குற்றம்'' என்றார்.

ஆனால் நீனா அல்சாப், லூக்கின் சகோதரி பிளேயரின் அறிக்கை குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார் அவர் பொய் சொல்வதாக குற்றம் சாட்டினார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் பேட்டி அளிக்கையில், தொலைக்காட்சியில் பிரதமர் எனது சகோதரன் கொலைசெய்யப்பட்டார் என தெரிவித்து கண்டனம் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்.

லூக்கின் படைப்பிரிவை சார்ந்த கேர்னல் அவரது குடும்பத்தினரை சந்திக்க வந்தபோது, லூக் கொலைசெய்யப்படவில்லை எனவும் இது சம்பந்தமாக "அதிகாரபூர்வமான தகவல் பதிவு செய்யப்படவேண்டும்" எனவும் கூறியதாக நீனா பத்திரிகைக்கு தெரிவித்தார். "லூக்கின் லாண்ட்ரோவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள், அவர் உடனேயே இறந்துவிட்டார் என்று நீனா மேலே தொடர்ந்தார்.

குடும்பம் முழுவதுமே பிரதமர் மீது கோபமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ''அவர் உடனடியாக இறந்தார் என்பதை அறிவது பெரிய வேறுபாட்டை உருவாக்குகின்றது. என்ன நடந்தது என்பது குறித்து ஏன் அவர்கள் பொய் உரைக்கிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.'' என அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.

''இது ஒரு தவறு. பொதுமக்கள் உண்மையை அறியவேண்டியது முக்கியமாகும். உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறியவேண்டும்'' என நீனா குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் பேட்டி முடிந்ததும் எந்த அடிப்படையில் சிப்பாய்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்று கூறுகிறீர்கள்? என்று நிருபர்கள் வலியுறுத்தி கேட்டனர். விவரங்கள் எதையும் கொடுக்க பிளேயர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் அவரது அதிகாரபூர்வமான பிரதிநிதி பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து திட்டவட்டமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

"இப்படி பேசுவது பயங்கரமானது ஆனால் இரண்டு உடல்களும் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை எனவே ஒருவரும் திட்டவட்டமாக இதுபற்றி உறுயாக கூறமுடியாது" என அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதை வேறுவகையில் கூறுவதென்றால், நாங்கள் பொய் சொல்கிறோம் என்பதை எவரும் திட்டவட்டமாக நிரூபிக்க முடியாது. எனவே நாங்கள் எங்களது சொந்த நோக்கங்களை மேலும் நிறைவேற்ற தொடர்ந்து பொய்சொல்லிக்கொண்டே இருப்போம்.

கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மட்டுந்தான் கூட்டு நிருபர் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட மோசடி அறிக்கைகள் அல்ல. பிளேரும், புஷ்சும் நாஜிசத்திற்கு எதிராக தங்கள் நாடுகள் நடத்திவந்த கிளர்ச்சிகள் குறித்து அடிக்கடி கூறிவருகிறார்கள். ஆனால் இன்றைய தினம் எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் ஆக்கிரமிப்பு போரை நடத்துவதும் மூலம் அமெரிக்கா- பிரிட்டன் பாசிச ஜேர்மன் கொள்கையை கடைபிடித்துவருகிறது. இருவரும் தங்களது போருக்கு பரவலான ஆதரவு இருப்பதாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் உலகம் முழுவதிலும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் கண்டனப்பேரணிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஈராக் மக்களை ''விடுவிப்பதற்காகவே'' போர் என்று இருவரும் கூறுகின்றனர். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் அந்த நாட்டை ஆக்கிரமித்து எண்ணெய் ஆதாரங்களை கைப்பற்றி சதாம் ஹூசேன் இடத்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தை திணிப்பதுதான்.

ஒரு தவறு என்பதற்கு அப்பால், இந்தப் போரே தொடக்கத்தில் இருந்து முடிவுவரை பொய் மூட்டைகளின் அடிப்படையில் உருவானதுதான். இவை அத்தனையும் சர்வதேச சட்டத்தை மீறுகின்ற உண்மையான குற்றவாளிகளான பிரிட்டனின் பிரதமரையும் மற்றும் அமெரிக்க குடியரசு தலைவரையும் அவர்களது குற்றங்களிலிருந்து மூடிமறைப்பதற்காக பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved