World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Blair's press conference: lies and self-delusion

பிளேயரின் பத்திரிகையாளர் மாநாடு: பொய்களும் சுயமாயைகளும்

By Julie Hyland
27 March 2003

Back to screen version

பிரதமர் டோனி பிளேயர் மார்ச் 25 செவ்வாய் கிழமை தனது மாதாந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார். அது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு காட்சியாக அமைந்திருந்தது.

போருக்கு எதிராக பொதுமக்கள் காட்டிவரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் பல மாதங்களாக யுத்தப்பிரசாரம் செய்யும் பிரிட்டனின் ஊடகங்கள் அமெரிக்கா தலைமையில் நடைபெற்றுவரும் போருக்கு அரசாங்கம் கொடுத்துவரும் ஆதரவை மன்னித்துள்ளதுடன், குறிப்பாக பிரதமரின் மிக உறுதியான நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் திமிர்பிடித்த, மூர்க்கத்தனமாக மற்றும் முட்டாள்தனமாக அமெரிக்காவின் அப்பட்டமான சுயநலத்தினால் மட்டும் உந்தப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கலாம். ஆனால் பிளேயர் மிக உயர்ந்த தார்மீக நெறிமுறைப்படி செயல்படுகிறார் மற்றும் அவரது நல்லெண்ணத்தை அவரது எதிரிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள் என்று மிகப்பெரும்பாலான ஊடக நிபுணர்கள் வற்புறுத்தி வந்தனர்.

ஆனால் செவ்வாய் கிழமை அவர் அளித்தபேட்டி பிரிட்டிஷ் பிரதமரும் பொய்களை திரிப்பு வேலைகளை சுயமாயையில் மூழ்கடிக்கும் குணத்தில் தனது அமெரிக்க சகாவிற்கு இணையாக செயல்படுபவர்தான் என்பதை நிரூபித்து விட்டார். அவர் நேர்மையாக இருக்கும் ஒன்று, உலகின் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பிரிட்டனின் ஏகாதிபத்திய நலன்களை மிக தீவிரமாக வலியுறுத்துவதில் அவருக்குள்ள உறுதிபாடுதான்.

இந்தப் போர் ஆரம்பித்த பின்னர் செய்தியாளருக்கான முதலாவது பேட்டியை, ஈராக்கிற்கு எதிராக நீண்ட மற்றும் கொடூரமான காலனி ஆதிக்க அடக்குமுறை வரலாறு படைத்த ஒரு ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் மற்றும் புஷ் நிர்வாகத்தின் பிரதான நண்பனாகவும் அவர் அளித்தார். 1958ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கம் ஈராக்கிலிருந்து விரட்டப்பட்டது. இந்த காலனித்துவ ஆதிக்கத்தை மூடிமறைத்து, ஈராக்கை ''நாகரீக வழிக்கு'' திருத்தப்போவதாக கூறிக்கொண்டார். இதன் மூலம் வரலாற்றில், காலத்தில் சிதைந்துவிட்ட மற்றொரு ஏமாற்றுகரமான போக்கை தொடருவதற்கு பிளேயர் முனைகின்றார்.

''மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள நாடுகளில் மிகுந்த வளர்ச்சியடைந்த நாடாக ஈராக் விளங்கிவந்தது. தற்போது பாக்தாத் மற்றும் இதர நகரங்கள் மூன்றாவது உலக நாடுகளைச்சேர்ந்த நகரங்களைப்போல் உண்மையிலேயே மாறிவிட்டது.'' என்று பிளேயர் கூறினார். சதாம் ஹூசேனின் ஆட்சியில் பெரும்பாலான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர், 60% ஈராக்கிய மக்கள் அரசாங்கத்தின் உணவு உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ''பாக்தாத் நகரில் 5 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் மொாசாம்பிக்கை விட அதிகமாக உள்ளது. ஏறத்தாழ 10 இலட்சம் குழந்தைகள் சத்தூட்ட குறைவினாலும், நோய் நொடிகளாலும் மடிந்து விட்டனர்.'' என தொடர்ந்து கருத்து தெரிவித்தார்.

எனவே அதிக முக்கியத்துவம் வாய்ந்த மனிதநேய அடிப்படையிலான நடவடிக்கை என்னவென்றால் ஈராக்கில் உணவிற்காக எண்ணெய் என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியாக வேண்டும்'' என பிளேயர் அறிவித்தார்.

இப்படிப்பட்ட பொய்மூட்டைகளை அரைகுறை உண்மைகளை, அங்கு திரண்டிருந்த பிரிட்டனின் ஊடக பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்பு எதுவும் இருக்காது என்ற பயமின்மையால் கூறியிருக்கிறார். அவர் விளக்கிக்காட்டிய நிலவரம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐ.நாடுகள் சபை மேற்கொண்ட இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் நேரடி விளைவு என்பது ஊடகபிரதிநிகள் அனைவருக்கும் தெளிவாகவே தெரியும்.

ஐ.நாவின் சொந்த ஆய்வுகளின்படி மத்திய கிழக்கிலேயே மிகுந்த செல்வ வளம் நிறைந்த நாடாகவும், மிகவும் வளர்ந்த மேம்பட்ட சமூக நலத்திட்டங்களை கொண்டிருந்ததும், உயர்ந்த கல்வித்தரமும், ஆற்றல்களும் நிருந்திருந்த நாடு பொருளாதார தடை நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளால் மிகுந்த ஏழ்மை நிறைந்த நாடாக மாறிவிட்டது என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

1991 முதலாவது வளைகுடாப் போருக்குப் பின்னர், 12ஆண்டுகள் ஐ.நா பொருளாதாரத் தடை நடவடிக்கைகளில் இருந்து தற்போது தொன் கணக்கில் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும், அமெரிக்கா பிரிட்டன் ஆதரவோடு ஈராக் மீது வீசி நாசப்படுத்தி, பல்லாயிரக்கணக்கான துருப்புக்களுடன் அங்கு படையெடுத்து அந்த நாகரீகத்தை அழித்துவிட்டு ஈராக் மக்களை மண்டி இடச்செய்து நாட்டின் பொருளாதார வளங்களையும் கைப்பற்றி மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முனைகின்றனர். மேலும் பத்திரிகையாளர் ஜோன் பில்கர் (John Pilger) சுட்டிக்காட்டியிருந்ததைப் போல் 2002 ஜூலை மாதம் ஐ.நா ஒப்புதலுடன் ஈராக்கால் அதற்கான பணத்தை செலுத்திய பின்னரும் பிரிட்டனின் ஆதரவோடு அமெரிக்கா 5.4 பில்லியன் டொலர்கள் மெறுமதியான மனிதாபிமான உதவியை தடுத்துவிட்டது. உணவிற்காக எண்ணெய் என்ற திட்டத்தின் முன்னால் ஒருங்கிணைப்பாளர் டென்னிஸ் ஹாலிடே (Denis Halliday) இந்த தடை ஒரு இனப்படுகொலைக்கு ஒப்பானது என எதிர்ப்பு தெரிவித்து பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

ஈராக்கில் புற்றுநோய் அதிகரித்து வருவது குறித்து டொனி பிளேயர் சிடுமூஞ்சித்தனமாக குறிப்பிட்டிருக்கிறார். இப்படி புற்றுநோய் பெருகுவதற்கு காரணம் தொன்கணக்கில் யூரேனியம் பூசப்பட்ட (depleted uranium) வெடிகுண்டு, செல்கள், ராக்கெட்டுகள் ஈராக் பெரிய நகரங்களிலும் இதர நகரங்களிலும் சென்ற வளைகுடாப் போரில் வீசப்பட்டமையே ஆகும்.

தற்போது அமெரிக்காவும் பிரிட்டனும், அவர்களது கூட்டணி படைகள் மூலம் அதே வகையான ஆயுதங்களை இன்னும் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் எனவே தற்போது நடைபெற்றுவரும் குண்டு வீச்சு தாக்குதல்களால் புற்றுநோய் போன்ற பயங்கர ஆட்கொல்லி நோய்கள் மேலும் மிகப்பெரும் அளவிற்கு உயருகின்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளை மறுசீரமைப்பதுதான் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் கூட்டணியின் படைகளின் ''முன்னுரிமை நடவடிக்கை'' என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். ஏனென்றால் அமெரிக்காவும், பிரிட்டனும் இராணுவத் தாக்குதல் நடவடிககைகளில் ஈடுபட்டதால் தான் மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்று சேரமுடியவில்லை, நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. சர்வதேச அளவில் போர்குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா போர் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றது என்று தெரிந்தும் மனிதாபிமான அடிப்படையில் ஈராக்கில் பல்வேறு உதவிகளை வழங்கிவந்த அமைப்புகள் அந்நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன.

உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மட்டும் ஈராக்கிற்கு செல்வது தடுத்து நிறுத்தப்படவில்லை. மற்றும் பாஸ்ரா நகரில் வாழுகின்ற 6 இலட்சம் மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீரோ, மின்சாரமோ கிடைக்காத அளவிற்கு குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

ஐ.நா பொதுச்செயலாளர் கொபி அன்னான் எதிர்வர உள்ள மனிதாபிமான பேரழிவுகள் தொடர்பாக எச்சரிக்கை செய்திருக்கிறார். மேலும் அமெரிக்க பிரிட்டன் படைகள் உடனடியாக உணவுப்பொருட்களை ஈராக்கிற்கு கொண்டு செல்லவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் தங்களது இராணுவ குறிக்கோள்களை அடைந்தபின்னர்தான் உணவு பொருட்கள் வழங்குவதை திரும்ப தொடங்க முடியும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் வலியுறுத்தி கூறிவருகின்றன.

புஷ் அமெரிக்க காங்கிரசில் முன்வைத்த 76 பில்லியன் டொலர்கள் (ா50 பில்லியன்) போர் வரவு- செலவு திட்டத்தில் 1.7 பில்லியன் டொலர்கள் சீரமைப்பிற்காகவும், மற்றும் 500 மில்லியன் டொலர்கள் மட்டுமே மனிதாபிமான உதவிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே படையெடுத்து வரும் அமெரிக்கா பிரிட்டன் துருப்புகளை தெருவில் கூடிநின்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்காததில் வியப்பு ஏதுவும் இல்லை. பிளேயரும், மற்றவர்களும் தங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று கூறிவந்தார்கள். ஆனால் பொதுமக்கள் உறுதியோடு எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பொதுமக்களது ஆத்திரம் அதிகரித்துவருகிறது. ஈராக்கிலிருந்து வெளிவரும் பெருமளவில் முன்தணிக்கை செய்யப்பட்ட செய்திகள் கூட பரவலாக படைகள் சந்திக்கும் எதிர்ப்பை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியிருக்கிற பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டின் மீது ஏகாதிபத்திய படைகள் படையெடுத்து வந்திருக்கின்றன என்பதால் ஆத்திரம் அடைந்து அமெரிக்க மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிடுவதற்காக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பத்திரிகையாளர் ''பல ஈராக் மக்கள் மேலைநாட்டு படைகள் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நாட்டை பிடித்துக் கொள்ளவந்தவர்கள் என்று கருதுவதில் உண்மையான ஆபத்து உண்டா?'' என்று கேட்க முன்தள்ளப்பட்டார்.

அந்தக் கருத்தையே பிளேயர் ஏற்றுக்கொள்ளவில்லை தற்போது சதாம் ஹூசேன் ஆட்சிக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் எதையும் செய்வதற்கு தயங்கிவருகின்றனர். தாங்கள் வெறுத்து ஒதுக்குகின்ற ஆட்சியின் முடிவுகாலம் நெருங்கிக்கொண்டு வருகின்றது என்பது நிச்சயமாக அவர்களுக்கு தெரியும். எனவே அதுவரை அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்று பிளேயர் கூறினார்.

கடந்த வளைகுடாப்போரைத் தொடர்ந்து 1991ல் சதாம் ஹூசேனுக்கு எதிரான ஈராக் மக்களை ஆதரிக்காததாலும், கிளர்ச்சிசெய்த மக்களை கைவிட்டுவிட்டதாலுமே தற்போது படையெடுப்பு ஆரம்பமாகியதும் சதாம் ஹூசேனுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்து எழவில்லை என பிளேயர் கருத்துகின்றார். அப்படியே இருந்தாலும் ஈராக் மக்கள் தற்போது அமைதி காப்பது வியப்பளிப்பதாக இல்லை. இப்போது இந்த நிலைப்பாடு ஏன் எடுக்கப்பட்டது என்பதையும், இப்போது ஈராக் மக்கள் ஏன் அமெரிக்காவையும், பிரிட்டனையும் ஏன் நம்பவேண்டும் என்பதையும் அவர் விளக்கவில்லை. ஆனால் மிகமுக்கியமாக ஏகாதிபத்திய போருக்கு எதிராக பொதுமக்களது எதிர்ப்பு உருவாவது தேசிய இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய நோக்கங்களின் அடிப்படையில்தான் என்பதை டொனி பிளேயர் சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லை. இப்படி லண்டனில் அவர் பேட்டியளித்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே பாக்தாத் நகரத்தின் மத்திய சந்தை சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிறைந்து நின்று முஷ்டியை உயர்த்தி அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு நின்றனர்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது உதாரணமாக உம் கசர் (Umm Qasr) நகரை பற்றி டொனி பிளேயர் கூறியிருப்பதாகும். ''தற்போது அங்கு பிரிட்டிஷ் துருப்புக்கள் சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன மக்களுக்கு உதவுவதுதான் தங்களது குறிக்கோள் அவர்களது நாட்டை விடுவிக்கவே வந்திருப்பதாக தெளிவாக ஈராக் மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருப்பதாக'' டோனி பிளேயர் கூறியிருக்கிறார்.

அதிகாரபூர்வமாக நடத்தப்படும் உலகம் தலைகீழான போர் பிரச்சாரம் ஆக்கிரமிப்பு படையை சேர்ந்த சிலர் ஈராக் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது ஈராக் மக்களுக்கு பிரிட்டனின் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பிளேயரின் இந்த பொய்மையான தத்துவம் பயங்கரமான அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்கு ஒரு தர்க்கரீதியிலான வாதமாக பயன்படுத்தப்படுகின்றது. சதாம் ஹூசேனுக்கு எதிர்ப்பு என்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு ஆதரவு என்று எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால் படையெடுப்பிற்கு எதிரானவர்கள் சதாம் ஹூசேன் ஆதரவாளர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட அசட்டுத்தனமான தர்க்க வாதத்தைத்தான் சர்வதேச அளவில் அமெரிக்க மற்றும் பிரிட்டனது போர் கொள்கை எதிர்பாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள் அத்தகைய எதிர்ப்பு பிரான்சிலிருந்து வந்தாலும் சரி அல்லது ஜேர்மனியிலிருந்து வந்தாலும் சரி அல்லது உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டனம் தெரிவிப்பதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட தர்க்க ரீதியிலான அறிவுக்குப் பொருந்தாத வாதங்களைத்தான் கூறிவருகிறார்கள்.

ஈராக்கை பொறுத்தவரை அவர்களது வாதப்படி படைகளுக்கு எதாவது எதிர்ப்பு வருகிறது என்றால் அது சதாம் ஹூசேனின் கையாட்களிடமிருந்துதான் வரவேண்டும் அத்தகைய கையாட்களை ஒழித்துக்கட்ட எடுக்கப்படும் எந்தப்போர் நடவடிக்கையும் நியாயமானது மற்றும் சட்டபூர்வமானது என்பதே அவர்களின் கருத்து.

இத்தகைய தர்க்க ரீதியிலான அடிப்படையில் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மிகப்பெரும் அளவிற்கு குண்டு வீசிதாக்குதல் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். தரையில் சிறப்பு அதிரடிப்படைகள் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கின்றனர் பாஸ்ரா நகரை பிடித்தது ''இராணுவ குறிக்கோள்'' என்று கூறி சிவிலியன் கட்டமைப்புகளை, தொலைக்காட்சி நிலையங்களை குறிவைத்து தாக்குவது ஏற்கனவே தொடங்கிவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved