World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

British troops lay siege to Basra

பிரிட்டனின் துருப்புக்களால் பாஸ்ரா நகர் முற்றுகை

By Peter Symonds
27 March 2003

Back to screen version

தெற்கு ஈராக் நகரான பாஸ்ராவில் சதாம் ஹூஸேனுக்கு எதிரான மக்கள் ''கிளர்ச்சி'' என்று பல்வேறு செய்தி ஊடகங்களில் வதந்திகளும், அனுமானச் செய்திகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலைமையில், சில அடிப்படை உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. 1.3 மில்லியன் மக்கள் வாழுகின்ற ஒரு நகரத்தை பிரிட்டனின் துருப்புக்கள் பெருமளவில் சுற்றி வளைத்துக்கொண்டு முற்றுகையிட்டிருப்பதால், நகரத்து மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தற்போது மின்சாரம் இல்லை, தூய்மையான குடி தண்ணீர் இல்லை. மிகப்பெரும் அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகின்ற ஓர் ஆபத்து அங்கு இவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வாபா-அல்காய்த் (Wafa al-Qaed) என்ற நீர் வழங்கும் நிலையம் இந்த நகருக்கு 60 சதவிகிதத்திற்கு மேலான தண்ணீரை வழங்கி வந்தது. சென்ற வெள்ளிக்கிழமையன்று பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களால் இந்த நீரேற்று நிலையம் தற்போது செயல் இழந்துவிட்டது. கடும் குண்டு வீச்சால் உயர் அழுத்த மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதால் நகரின் மின்சார விநியோகமும், நீரேற்று நிலையம் தண்ணீர் வழங்குவதும் தடைப்பட்டுவிட்டது.

செவ்வாய்க்கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவைச் சேர்ந்த தொழிலாளர்களும் உள்ளூர் தொழில்நுட்ப ஊழியர்களும் மூன்று பேக்கப் ஜெனரேட்டர்களை இயக்கியதன் மூலம் பொதுமக்களில் பாதிப்பேருக்குத்தான் தண்ணீர் வழங்க முடிந்திருக்கிறது. இதுவும் ஒரு தற்காலிக செயற்பாடாகத்தான் இந்த ஜெனரேட்டர்கள் இயங்கி வருகின்றன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவைச் சேர்ந்த பிரதிநிதி ஆன்டோரியா நோட்டரி இந்த நிலவரம் குறித்து பேட்டியளித்தார். ''சாக்கடை கலந்துகொண்டிருக்கும் ஆற்றுத் தண்ணீரை மக்கள் குடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பலவீனமானவர்கள் இத்தகைய தண்ணீரைக் குடித்தால் அது மிகவும் ஆபத்தாகிவிடும்'' என்று அவர் எச்சரித்தார். அத்துடன் நகரின் இதர நீரேற்று நிலையங்களிலிருந்து கிடைக்கின்ற தண்ணீர் தரமானது அல்ல என்றும் கருத்து தெரிவித்தார்.

தூய்மையான குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல் போன்ற தொற்று நோய்கள், வாந்திபேதி மற்றும் அம்மை நோய்கள் உருவாகக்கூடும். ஈராக்கில் இத்தகைய நோய்களால் ஏற்கெனவே பல குழந்தைகள் இறந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அத்தோடு தூய்மையற்ற தண்ணீரைப் பருகுவதால் 5 வயதுக்கும் குறைந்த 1 லட்சம் குழந்தைகள் உடனடியாக கடுமையான நோய்வாய்படக்கூடும் என்று ஐ.நா.வின் (UNICEF) குழந்தைகள் உதவி நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாஸ்ராவில் இராணுவ முற்றுகை நீடித்துக் கொண்டிருப்பதால் இதர அத்தியாவசிய தேவைகளான உணவு உட்பட எல்லாப் பொருட்களும் கிடைக்காத ஒரு சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. இதர பகுதி ஈராக் மக்களைப்போல் பாஸ்ரா நகரத்தைச் சேர்ந்தவர்களும் ஐ.நா.வின் உணவுக்கு எண்ணெய் திட்டப்படி மிகக்குறைந்த அளவிற்கான உணவுப் பொருட்களையே பெற்று வந்த போதிலும், இந்தத் திட்டம் மார்ச் 15 ந்தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அதிகாரிகள் பாஸ்ரா மக்களை பட்டினி போட்டு அடிபணிய வைக்கவேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்று மறுத்தாலும், முற்றுகையின் அடிப்படை நோக்கம் என்ன? ஒலிபெருக்கி மற்றும் விமானம் மூலம் பொது மக்களுக்கு விநியோகித்து வரும் துண்டுப் பிரசுரங்களில் அவர்கள் கூறுவது பாஸ்ரா நகரம் வீழ்ச்சியடைந்துவிட்டால் ஏராளமான உணவுப் பொருட்களை வழங்கவும், மற்றும் உதவியும் தருவோம் என்பதாகும்.

இந்தச் சூழ்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று பாஸ்ராவில் பொதுமக்கள் கிளர்ச்சி என்று வந்து கொண்டிருக்கிற செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. நகர மக்கள் கிளர்ச்சி செய்வதற்கான தயார் நிலைக்கு வந்துவிட்டதாகவும், சதாம் ஹூசேனுக்கு ஆதரவான இராணுவத்தினர் அச்சத்தையும், பீதியையும் கிளப்பியிருப்பதால் அந்த கிளர்ச்சி வெடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் சித்தரித்துக் காட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியானது தங்களது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் சிடுமூஞ்சித்தனமான முயற்சியாகவே இருக்கிறது. ஹூசேன் ஆதரவு இராணுவத்தினர் பீரங்கிகளை, வெடிகுண்டுகளைக் கொண்டு கிளர்சிக்காரர்களுக்கு எதிராக பயங்கர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற பயங்கரமான செய்திகளை பிரிட்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் நோக்கம் என்னவென்றால், இப்படிப்பட்ட செய்திகளை சாக்காக பயன்படுத்தி பாத் கட்சியின் தலைமை அலுவலக கட்டிடங்கள் உட்பட மக்கள் நிறைந்த நகரப் பகுதிகளில் பொதுமக்கள் மீதும், கட்டிடங்கள் மீதும் குண்டு வீசித் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பாஸ்ராவில் பெரும்பாலான ஷியா மக்களிடையே சதாம் ஹூசேனுக்கு எதிர்ப்பு இல்லை என்று மறுப்பதற்காக இதை சொல்லவில்லை. மாறாக தற்போது பல செய்தி ஊடகப் பண்டிதர்கள் மதிப்பீடு செய்திருப்பதைப்போல், ஹூசேன் மீதான எதிர்ப்பு என்பது ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கான ஆதரவு என்று ஆகிவிடாது. 1991 ல் வாஷிங்டன் நடத்திய மோசடியை ஷியாக்கள் மிகவும் கசப்பான அனுபவமாக இன்றைக்கும் நினைவில் வைத்துக் கொண்டுள்ளனர். அப்போது ஹூசேன் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு ஆதரவு தருவதாக அவர்களை அமெரிக்கா ஊக்குவித்ததோடு உறுதியுமளித்தது. ஆனால் அந்த உறுதிமொழியை அமெரிக்கா காப்பாற்றவில்லை. ஈராக் இராணுவம் திரும்பவும் பாஸ்ராவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பழிவாங்கியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியை முடக்கியுள்ள பொருளாதார தடைகளை விதித்து வருபவர்களை, தெற்குப் பகுதியில் விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பிராந்தியம் என்ற போர்வையில் நகரத்திற்கு அருகிலும், நகரிலும் இலக்குகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியவர்களை எப்படி தங்களை ''விடுதலை செய்ய'' வந்தவர்கள் என்று பாஸ்ரா மக்கள் வரவேற்பார்கள்? வாஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருக்கிற ஈராக் இஸ்லாமிய புரட்சி உயர் குழு (SCIRI) என்ற ஷியாக்கள் அமைப்பு அண்மையில் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஹூசேன் ஆட்சியை நீக்குவதற்காக மட்டுமே அமெரிக்கப் படைகளை வரவேற்கப் போவதாகவும் ஆனால் ''அமெரிக்கப் படைகள் ஈராக்கை பிடித்துக் கொள்ளவோ அல்லது காலனியாக ஆக்கிக் கொள்ளவோ முயன்றால், ஈராக் மக்கள் அதை எதிர்த்து நிற்பார்கள்'' என்று SCIRI ன் தலைவர் முஹம்மத் பக்கீர் அல்ஹாலீம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார்.

ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு பின்னரும் பாஸ்ரா மக்கள் பிரிட்டனின் துருப்புக்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்கவில்லை. தற்போது அமெரிக்காவும், பிரிட்டனும் இந்த நகரத்தை தாங்கள் பிடிக்கவேண்டிய ''இராணுவ இலக்கு'' என்று அறிவித்துவிட்டன. இந்த அறிவிப்பின் மூலம் இந்த நகரம் தானாகவே சரணடையும் என்று அவர்கள் நம்பவில்லை என்பது தெளிவாகிறது.

சதாம் ஹூசேனுக்கு ஆதரவான இராணுவத்தினர் இந்த நகரத்து மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தகவலாகும். சதாம் ஹூசேனுக்கு ஆதரவாகப் போராடுகின்ற இராணுவத்தினரின் எண்ணிக்கை செய்திக்கு செய்தி வேறுபட்டுக் கொண்டே போகிறது. 1000 மேற்பட்ட பிதாயின்கள் (Fedayeen), இராணுவ மற்றும் ஆயுதம் தாங்கிய பொதுமக்கள் ஆதரவோடு போராடி வருகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு சிறிய படைப்பிரிவு, பிரிட்டிஷ் துருப்புக்களை நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பதற்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியம் இல்லை என்பது தெளிவு.

மறைந்துபோன எழுச்சி

பிரிட்டன் இராணுவம் தீவிரமாக கிளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. பல்வேறு ஊடகங்களில் வந்திருக்கின்ற செய்திகளின்படி, பல வாரங்களாக அமெரிக்க மற்றும் பிரிட்டனின் புலனாய்வு ஏஜென்ட்டுகள் பாஸ்ரா நகருக்குள் இருந்துகொண்டு கிளர்ச்சியை தூண்டி வருகிறார்கள். இவ்வகையான பிரச்சாரம் வானொலி, ஒலிபெருக்கிகள் மற்றும் அறிக்கைகள் மூலம் மக்களுக்கு தரப்படுகின்றன. பாஸ்ராவில் ஹூசேனின் நிர்வாக அமைப்பை முடக்கிவிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க் கிழமையன்று பாஸ்ராவின் புறநகர்ப் பகுதியிலுள்ள பாத் கட்சி அலுவலகத்தில் பிரிட்டிஷ் துருப்புக்கள் நடாத்திய திடீர்த் தாக்குதலில், இக்கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரது 20 மெய்க் காவலர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

எனவே இந் நகரில், ஹூசேனுக்கு எதிரான நடவடிக்கை பற்றிய எந்த செய்தியாகயிருந்தாலும் அதை பிரிட்டனின் பிரதிநிதிகள் பிடித்துக் கொள்வார்கள் என்பதில் வியப்பு எதுவும் இல்லை. ஆனால், இப்படி வெளிவருகின்ற செய்திகள் எல்லாமே விபரம் இல்லாமல், ஒரு தரப்பு பிரச்சாரம் அதிகம் கலந்த செய்திகளாகவே இருக்கின்றன. மேஜர் ஜெனரல் பீட்டர் வால் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது ''வெளிப்படையான கிளர்ச்சி'' நடைபெறவிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றிற்கு ஆரம்பமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார். ஆனால் அதுபற்றிய விபரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், முன்னணி ஷியா தலைவர் ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பினால் ''கிளர்ச்சி'' தூண்டப்படலாம் என்று ஒரு செய்தி அங்கு உலாவ விடப்பட்டிருக்கின்றது.

பிரிட்டிஷ் படை எதுவும் நகருக்குள் அனுப்பப்படவில்லை. இப்போது நிலவுகின்ற நிச்சயமற்ற நிலையை வலியுறுத்துகின்ற வகையில் மூத்த அதிகாரி ஒருவர், டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ''நாம் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் சூழ்நிலை இல்லை. இங்கு எதுவும் நடக்கலாம். இங்கு மிகவும் ஆபத்தான நிலை உள்ளது. சிம்ம சொப்பணம் போல் வர்ணிக்கப்படுகிற நிலவரம் தவிர்த்த சூழ்நிலை உத்திரவாதம் ஆகும் முன்னர் பிரிட்டிஷ் துருப்புகளை அங்கு அனுப்ப முடியாது'' என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். சரியான தகவல்கள் கிடைக்க முடியாத நிலையிலும் டோனி பிளேயர், மூத்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பங்கு மார்க்கெட்டுகளை சேர்ந்தவர்கள் சாதாரணமாக உற்சாகம் அளிக்காத இந்த நிலவரத்தை ஆக்கப்பூர்வமான திருப்பம் என்று எடுத்துக் கொள்ளுகின்றனர்.

ஆனால், எத்தகைய கிளர்ச்சி அங்கு நடந்திருந்தாலும் அது மிக விரைவாகவே மறைந்துவிட்டது. அதே நேரத்தில், அத்தகைய கிளர்ச்சி எதுவும் நடக்கவில்லையென்று மூத்த ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெகிரானில் உள்ள SCIRI பேச்சாளர் ஒருவர் கூறுகையில் ''இல்லை, எந்தவிதமான கிளர்ச்சியும் நடக்கவில்லை. பாஸ்ராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஓரளவிற்கு கலவரங்கள் நடந்தன. ஆனால், அவை பரவலாக நடைபெறவில்லை. அது ஒரு பெரிய கிளர்ச்சியல்ல. சதாமுக்கு எதிராக மட்டுமே மக்கள் கோஷம் போட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.

கத்தாரில் இருந்து ஒளிபரப்பாகும் அல் ஜெசிரா தொலைக்காட்சி நிலையம், பாஸ்ரா மக்கள் அமைதியாக வரிசையில் நின்று எரிவாயு புட்டிகளை வாங்கிக்கொண்டு செல்கின்ற காட்சியை ஒளிபரப்பியது. இந்த தொலைக்காட்சியின் நிருபர் பாஸ்ரா நகருக்குள் நடமாடுகின்ற சில பத்திரிகையாளர்களில் ஒருவர். ''சதாம் ஹூசேன் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுந்துவிட்டார்கள் என்பதற்கு நகரில் எந்தவிதமான அடையாளமும் இல்லை எனவும், நகரில் அமைதி நிலவுகிறது'' எனவும் இந்த நிருபர் தெரிவித்தார்.

பாஸ்ரா மக்களின் கிளர்ச்சி தொடர்பாக வெள்ளை மாளிகை ஒரு மனதோடு வரவேற்கவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டேனால்ட் ரம்ஸ்பீல்ட் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''மக்கள் அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்வதை தூண்டுவதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இதுபோன்ற நகரங்களில் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை சுட்டுத்தள்ளுவதற்கு தயாராக உள்ளவர்களும் இருக்கிறார்கள்'' என்று கூறினார். ரம்ஸ்பீல்ட்டை பொறுத்தவரை அவரது கவலை ஈராக் மக்களின் நலன்களைப் பற்றியது அல்ல. மாறாக அத்தகைய கிளர்ச்சியின் அரசியல் விளைவுகளைப் பற்றியே கவலைப்படுகிறார்.

பாஸ்ரா மற்றும் இதர நகரங்களில், தெருக்களில் சண்டை நடப்பதை தவிர்க்கும் வகையில் குறுகிய கால கண்ணோட்டத்தில் அமெரிக்க இராணுவம் கிளர்ச்சியை ஊக்குவிக்கலாம். அது தகுந்த நடவடிக்கையாகக் கூட அவர்களால் கருதப்படலாம். ஆனால் கிளர்ச்சியில் ஈடுபடுகின்ற மக்கள் அமெரிக்க இராணுவம் அங்கு நடமாடுவதை வெறுப்பவர்கள். அவர்கள், ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் நோக்கமான பாக்தாத்தில் புதிய காலணி ஆதிக்க ஆட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தையே சிதைத்துவிடுவார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved