போரில் கிடைப்பதை பங்கு போடுவதில் அமெரிக்கா-பிரிட்டன் மோதல்
By Nick Beams
31 March 2003
Back to screen version
போருக்கு பிந்திய ஈராக்கின் வளங்களை எப்படி சுரண்டிக் கொள்வது என்பதில்
பிரிட்டனுக்கும் மற்றும் அமெரிக்க நலன்களுக்குமிடையே மோதல்கள் தொடங்கிவிட்டன.
சென்ற வாரம் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியானது (US
Agency for International Development - USAID)
இரண்டாவது லாபம் தருகின்ற பெரிய ஒப்பந்தத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கிவிட்டதாக
அறிவித்தது. இந்த பேரத்தில் 4.8 மில்லியன் டொலர்களுக்கான பணிகளை உம் கசார் துறைமுகத்தில்
மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் இயங்கும்
SSA (Stevedoring Services of America)
நிறுவனத்திற்கு வழங்கிவிட்டதாக
USAID அறிவித்தது.
இந்த SSA
நிறுவனம் சியாட்டில் துறைமுகத்திலும், மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள 150 துறைமுகங்களிலும் சரக்குகளை ஏற்றி
இறக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கின்ற பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரிட்டனின் பெரிய நிறுவனமான
P&O அமைப்புடன் போட்டி போட்டுக் கொண்டு இந்த ஒப்பந்தத்தை
பெற்றுள்ளது.
''இது மிகவும் நேர்த்தியான வர்த்தகமாக இருப்பதுடன், எங்களுக்கு உற்சாகத்தையும்
அளிக்கிறது. உண்மையிலேயே எங்களுக்கு மிகந்த உற்சாகத்தை அளிப்பது என்னவெனில், ஈராக்கிற்கு உதவிப் பொருட்களை
கொண்டு வருவதும் மற்றும் எங்களது இராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு உதவுவதும் தான்'' என்று இந்த நிறுவனத்தின்
ஆசியப் பகுதி துணைத் தலைவர் பாப் வாட்டர்ஸ் (Bob
Watters) சியாட்டில் போஸ்ட்-இன்டலிஜன்ஸ்சர்
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
SSA தலைமை அதிகாரி
மகிழ்ச்சியடைந்திருப்பதில் வியப்பு எதுவும் இல்லை. லாபத்தோடு மனித நேய அடிப்படையும் இணைந்த சிறப்பான
வர்த்தகம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இதைவிட சிறந்த வர்த்தகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
உம் கசார் துறைமுக ஒப்பந்ததை
SSA நிறுவனத்திற்கு
வழங்குவதற்கு USAID
அமைப்பு முடிவு செய்வதற்கு முன்னர், அங்குள்ள எண்ணெய் கிணறுகளில் தீயை
அணைக்கவும், பழுதுபார்க்கவும் கெல்லாக் பிரெளன் அன்ட் ரூட் (Kellogg,
Brown & Root) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மூலம்
வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த நிறுவனம் ஹாலிபர்ட்டன் குழு (Haliburton)
நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த நிறுவனத்தின் தலைவராக இன்றைய
அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி பணியாற்றி இருக்கிறார். இந்த முடிவின் காரணமாக, அதிக லாபம் தருகின்ற
ஒப்பந்தங்கள் தங்களுக்கு கிடைக்காதோ என்ற அச்சம் அமெரிக்காவைச் சாராத பெரிய நிறுவனங்களிடையே
ஏற்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில்
USAID அமைப்பானது, ஐந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈராக்கில்
சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக 900 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு டெண்டர்களை
அனுப்புமாறு அழைப்பு விடுத்தது. இந்த நேரத்தில் பிரிட்டனின் பெரிய கட்டுமான நிறுவனங்கள், தங்களை
கைவிட்டுவிட்டார்கள் என்று மிகுந்த ஆத்திரத்தில் வெளிப்படுத்திக் கொண்டன.
BBC தகவலின்படி
அரசாங்கம் தலையிட்டு தங்களுக்கும் இதுபோன்ற ஒப்பந்தங்களில் பங்குவேண்டும் என்று பிரிட்டன் கம்பெனிகள், தமது
அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன. இதற்கும் சிறந்த வழி ஒன்று உள்ளது. அமெரிக்க கம்பெனிகளிடமிருந்து சில துணை
ஒப்பந்தங்களைப் பெறுவதுதான் அவற்றின் வழியாக இருக்கின்றது. இது போன்ற பொருளாதார உறவுகள் இப்போது
நிலவுகின்ற அரசியல் உறவை எடுத்துக் காட்டுவதாக அமையும்.
பிரிட்டனின் ஆலோசகர்கள் மற்றும் கட்டுமான குழுவினர், அரசாங்க அதிகாரிகளை
சந்தித்துப் பேசிய பின்னர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், பிரிட்டன் நிறுவனங்களின் கவலைகள் அதில்
தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
''எங்களது கவலைகளை கடுமையாக அரசாங்கத்திடம் தெரிவித்தோம். 1990 களின்
தொடக்கத்தில் குவைத் விடுவிக்கப்பட்டபோது நடைபெற்றது போன்ற நிகழ்ச்சிகள் தற்போது நடந்துவிடாது தவிர்க்குமாறு
வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம். அப்போது, அமெரிக்காவின் பொறியாளர்கள் பிரிவு மூலம் பெரும்பாலான
ஒப்பந்தங்களை அமெரிக்க நிறுவனங்கள் பெற்றுக்கொண்டன'' என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பட்ரீசியா ஹெவிட்
USAID அமைப்போடு
தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரிட்டனின் நிறுவனங்களுக்காக ஆதரவைத் திரட்டினார். ''வர்த்தக அடிப்படையில்
லாபம்'' பெறவேண்டும் என்ற போட்டியில் பிரிட்டன் ஈடுபடவில்லை என்றும், ஈராக்கினுடைய ''மறு நிர்மாணப்
பணிகளில்'' ஒப்பந்தங்களை வழங்கும்போது, ''சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்'' என்பதுதான் தங்களது
நோக்கமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போருக்கு பிந்திய ஈராக்கில், ஐ.நா. வின் பங்கு பணிகள் பற்றி அமெரிக்காவிற்கும்,
பிரிட்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியிருப்பதற்கு காரணமான வர்த்தக நலன்களை பிரதிபலிக்கின்ற
வகையில் ஹெவிட் இந்தக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அவர் பி.பி.சி க்கு அளித்த பேட்டியில் ஐ.நா.
ஆதரவோடு மக்கள் நிர்வாகத்திடம் ஈராக்கை மறுசீரமைக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமாகும்
என்று கூறினார்.
''ஐ.நா. கட்டளைப்படி, மக்கள் நிர்வாக அமைப்பு வந்துவிடுகிற நிலைக்கு நாம்
நெருங்கி வந்துவிட்டால், அப்போது சிறந்த கம்பெனிகளுக்கிடையே மறு நிர்மாணப் பணிகளில் சம வாய்ப்புக்கள்
கிடைப்பதை நாம் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கலாம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. பல பிரிட்டன்
கம்பெனிகள் உட்பட பல கம்பெனிகள் ஈராக் நிறுவனங்களுடன் பணியாற்றி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக,
ஈராக் மக்கள் தங்களது பொருளாதாரத்திற்கு தேவையான முதலீடுகளை திரட்டுவதுடன், அதன் வளர்ச்சித் திட்டத்
தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியும்'' என்று ஹெவிட் கூறியுள்ளார்.
பிரிட்டனின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள்
குறித்தும், ''மனித நேய அடிப்படையிலான உதவிகளை'' செய்வதற்கும் ஐ.நா.வின் ஈடுபாடு அவசியமாகும் என்ற
கருத்தை தொலைநோக்கோடு அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்கள் தலையிட்டு அவற்றிற்கு
ஆதரவு தருவதற்கும் மற்றும் முதலீடுகளை தருவதற்கும் ஐ.நா. வின் ஈடுபாடு அவசியம் என்று மேலும் குறிப்பிட்டார்.
தெற்கு பசிபிக் பகுதியில் காலனி ஆதிக்கம் தொடங்கிய நேரத்தில், வர்த்தகத்தோடு
சேர்ந்து உள்ளூர் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகின்ற இயக்கங்களும் தொடர்ந்து நடைபெற்றன. கிறிஸ்தவ
மிஷினரிகள் நன்மை செய்வதற்காக வந்து பல காரியங்களையும் செய்து முடித்தனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டு
வர்த்தகர்களும் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளும் நவீன கால மனித நேய உதவியாளர்கள் அளவிற்கு பணியாற்றவில்லை.
ஈராக்கை ''மீளக் கட்டியமைக்கும்'' பணிகளில் நிறைய லாபம் இருக்கிறது. ஆனால்,
உண்மையிலேயே பெருமளவிற்கு பணம் கிடைப்பது என்பது எண்ணெய் வளங்களை சுரண்டுவதில்தான் தங்கியுள்ளது. ஆதலால்
இங்கு ஒரு அரசியல் பிரச்சனை எழுந்துள்ளது. புஷ்சும், பவலும் ஈராக்கினுடைய எண்ணெய் வளங்கள் ''ஈராக் மக்களுக்கே
சொந்தம்'' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளுவது சிரமம். ஏனென்றால், மிகப் பிரம்மாண்டமான எண்ணெய் நிறுவனங்கள்
இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன.
செய்தி ஊடகங்களில் ஈராக் பற்றிய செய்திகளை உருவாக்குபவர்கள் இந்தப் போர் ஈராக்
மக்களை ''விடுவிப்பதற்காக'' நடத்தப்படுகிறது என்று கூறி வருவதுடன், இந்த அடிப்படையில் பணியாற்றவும் தொடங்கி
விட்டார்கள். வரும் மாதங்களில் அவர்களது வாதங்கள் எந்த அடிப்படையில் அமையும் என்பதை சென்ற
செவ்வாய்க்கிழமையன்று ''சுதந்திர சந்தை'' தத்துவத்தை மிகத்தீவிரமாக ஆதரிக்கின்ற பைனான்சியல் டைம்ஸ்
பத்திரிகையாளர் அமித்தி சிலேஸ் (Amity Shlaes)
தனது கட்டுரையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அவரது கருத்துப்படி, எண்ணெய் மக்களுக்குச் சொந்தம் என்று சொல்லுகிறபோது அது
அரசாங்கத்திற்கு சொந்தம் என்று மாற்றுவதில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார்.
''அரசாங்க கட்டுப்பாட்டில் எண்ணெய் இருப்பது ஈராக் மக்களுக்கு பயன்படும் என்ற
அனுமானம் சிக்கலான ஒரு வித்தையாகும். உண்மையில் அரசிற்கு எண்ணெய் சொந்தமாக இருந்தால் ஈராக்கிற்கு
சாபக்கேடாக ஆகிவிடும் என்று வாதிட முடியும். மேலும், மீள்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற நேரம்
வரும்போது அமெரிக்காவும், பிரிட்டனும் மேற்கொள்ள வேண்டிய ஒரேயொரு மிக முக்கியமான கடமை ஈராக் எண்ணெய்
வளத்தை தனியார்மயமாக்கி ஸ்திரத்தன்மை ஏற்பட உதவுவதாகும். இப்படி செய்யும்போது, போருக்கு பிந்தைய
வெகுமதிகளை பெறுவதற்கு தகுதி வாய்ந்த குர்தூ இனத் தலைவர்களை நீக்கிவிடக் கூட நடவடிக்கை எடுக்கலாம். அப்படிச்
செய்யும்போது ''டைகிரிஸ் நதிக்கரையில் டெக்ஸாஸ்'' என்று குற்றம் சாட்டப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்பட
வேண்டியதில்லை'' என்று அவர் வாதிடுகிறார்.
சிலேஸ் வலியுறுத்திக் கூறுகின்ற வாதத்தின்படி, ''எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் புதிய ஈராக்கினுடைய எந்த அரசியல் தலைவரும் ஒரு சில ஆண்டுகளுக்குள் ஊழல் செய்பவர்களாக
ஆகிவிடுவார்கள். எனவே, எதிர்கால ஈராக் தலைவர் சட்டப்பூர்வமான அடிப்படையில் நியாயம் வழங்குபவராக
இருக்கவேண்டும் என்றால், அந்தத் தலைவர் எண்ணெய் வளத்தை புதிய அரசாங்கத்தில் இருந்து விலக்கிக்கொள்ள விரும்பி
உறுதிமொழி தரவேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.
இதை வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், ஈராக் போருக்கு பிந்தைய
''சட்டப்பூர்வமான'' அரசாங்கம் (அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அங்கீகரிக்கும் அரசாங்கம்) ஈராக்கின் எண்ணெய்
வளத்தை சர்வதேச அளவில் இயங்கும் பெரிய எண்ணெய் நிறுவன கும்பல்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதாகும்.
அதுதான் ஈராக் மக்களுக்கு நன்மை தரும் செயல் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தக்
கட்டுரையாளர் கூறுகிறார்.
நிச்சயமாக இந்தக் கட்டுரையானது, இந்தப் போரின் தன்மைகள் குறித்த நிலவரங்களை
மிகப்பெரும் அளவிற்கு உள்ளடக்கியிருக்கின்றது. இந்தப் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் சற்று குறைவான
இத்தனை நாட்களிலும் எந்த விதமான ''பாரிய மக்களைக் கொன்று குவிக்கும்'' ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மாறாக, இந்தப் போரை தூண்டியவர்கள் தற்போது போரினால் கிடைப்பதை பங்குபோட்டுக் கொள்வதற்கு
மூர்க்கமாகப் போட்டியிடுகிறார்கள்.
|