:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Washington's use and abuse of the Geneva Conventions
ஜெனிவா ஒப்பந்தங்களை வாஷிங்டன் பயன்படுத்துதலும், அவற்றை முறைகேடாக பயன்படுத்துவதும்
By Henry Michaels
29 March 2003
Back
to screen version
ஈராக்கில் அமெரிக்க போர்க் கைதிகளை அரசாங்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதற்காக
ஈராக் தலைவர்களை போர்க் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்போவதாக புஷ் நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. இந்த
அப்பட்டமான மூர்க்கமான போக்கு தொடர்பாக ஊடக விமர்சகர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் சர்வதேச அளவில் செயல்படும்
மனித உரிமைகள் தொடர்பான அமைப்புக்கள் ஆகியவை புஷ் நிர்வாகத்தின் மீது மிகச் சரியாக குற்றம் சாட்டியுள்ளன.
மார்ச் 23 அன்று, அமெரிக்கப் படை வீரர்களை ஈராக் துருப்புக்கள் பிடித்துக்கொண்டன
என்ற செய்தி வந்ததும், புஷ் கீழ்கண்டவாறு பிரகடனப்படுத்தினார். ''அவர்கள் போர்க் கைதிகளை மனித நேய
அடிப்படையில் நடத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களது வீரர்களை நாங்கள் பிடிக்கும்போது எந்த
அளவிற்கு மனித நேய அடிப்படையில் நடத்துகிறோமோ, அதே அடிப்படையில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால், போர்க் கைதிகளை முறைகேடாக நடத்துபவர்கள் போர் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்'' என
புஷ் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ''ஜெனிவா ஒப்பந்தம்,
போர் கைதிகளை படம் எடுப்பது மற்றும் அவர்களுக்கு துன்புறுத்துவது அல்லது போர் கைதிகளை இழிவுபடுத்துவது ஆகியவற்றை
தடுக்கிறது'' என்று குறிப்பிட்டார். பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் அதேபோன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகங்கள் கடமை தவறாது அரசின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, போர்க் கைதிகள்
தொடர்பான ஜெனிவா ஒப்பந்தங்களை ஈராக் மீறிவிட்டதாக மிகுந்த விபரத்தோடு ஆத்திரம் பொங்க எழுதியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான் வீரர்கள் பிடிபட்ட நேரத்தில் அமெரிக்கா ஜெனிவா ஒப்பந்தங்களை துச்சமாக மதித்து நடந்துகொண்டது.
அப்போது, வாய் மூடி மெளனம் சாதித்த அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளும் தற்போது
போர்க் கைதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்தின் புனிதத் தன்மை குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
''பல்கலைக்கழக நிபுணர்கள் திடீர் என்று தொலைக்காட்சிகளில் தோன்றி ஈராக்கியர்களை கண்டிக்கிறார்கள். அப்படி
கண்டனம் செய்யும்போது, வாஷிங்டன் இதற்கு முன்னர் போர்க் கைதிகள் தொடர்பாக மிகக் கடுமையான சர்வதேச
சட்ட மீறல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டதை சுட்டிக்காட்டவே இல்லை.
புதிதாக புஷ் நிர்வாகம் கண்டுபிடித்த சர்வதேச சட்டம் குறித்து கவலை தெரிவித்திருப்பது
தொடர்பாக சர்வதேச அளவில் வெறுப்பு உணர்வு உருவாகியிருப்பதை புரிந்துகொள்வது சிரமம் இல்லை. வெள்ளை
மாளிகையும் பென்டகனும் அமெரிக்கப் படைப்பிரிவுகளோடு இணைக்கப்பட்டு (embedded)
பணியாற்றிக்கொண்டிருக்கும் செய்தியாளர்கள் ஈராக் போர்க் கைதிகளை
படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் ஊடகங்கள் முழுவதிலும் ஈராக் போர்க் கைதிகளின் முகங்களையும்
மற்றும் இதர விபரங்களையும் மிகவும் இழிவுபடுத்துகின்ற வகையில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது, 1949ன்- ஜெனிவா
ஒப்பந்தங்களை தெளிவாக மீறுகின்ற செயலாகும்.
மேலும், அமெரிக்க அரசாங்கம் ஹேக்கிலுள்ள (Hague)
சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதில் சாதனை படைத்திருக்கிறது.
நிகரகுவா துறைமுகத்தில் சட்ட விரோதமாக கண்ணிவெடிகளை வைத்ததற்காக 1980களில் அமெரிக்கா மீது குற்றம் சாட்டப்பட்டு
சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமெரிக்கா நிராகரித்தது.
புஷ் நிர்வாகம் மேலும் ஒருபடி அதிகமாகச் சென்று புதிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை
(International Criminal Court)
ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. சென்ற மாதம் திறந்துவைக்கப்பட்ட இந்த நீதிமன்றம்
இனக்கொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும், போர் தொடர்பான சட்டங்களை மீறும் தனி நபர்கள்
மீது விசாரணை நடத்துவதற்கு அதிகாரம் படைத்தது. அமெரிக்கா பிற நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு
அமெரிக்க பிரதிநிதிகள் மீது மனித இனத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வழக்குத் தொடர வேண்டாம் என்று
கோரிக்கைவிடுத்து வருகிறது.
சென்ற வாரம் தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பெளவல் பெல்ஜியத்திடம்
அதன் போர்க் குற்றங்கள் தொடர்பான சட்டத்தை திருத்துமாறு கேட்டுக்கொண்டார். பெளவல், ஜோர்ஜ் புஷ் சீனியர்,
துணை ஜனாதிபதி டிக் சென்னி மற்றும் முன்னாள் அமெரிக்க இராணுவ தளபதி நோர்மன் ஸ்வார்ட்ஸ் கொப்வ் ஆகியோர்
1991 வளைகுடாப் போரில் போர்க் குற்றங்கள் புரிந்ததாக பெல்ஜியத்தில் வழக்குகள் தாக்கல் செய்வதை தடுத்து
நிறுத்துவதற்காகவே பெல்ஜியம் தனது சட்டத்தை திருத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கைவிடுத்திருக்கிறது. தற்போது,
நடைபெற்றுவரும் போரில் மனித உரிமைகளை மீறியதாகவும், மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும்
இதேபோன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்று வாஷிங்டன் அஞ்சுகிறது.
''போருக்கு எதிரான சட்டத்தரணிகள்'' (Lawyers
Against the War) என்ற அமைப்பு, இந்த அமைப்பு இன்றைய
புஷ் நிர்வாகம் நூரம்பேர்க் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ள மிகப்பெரிய சர்வதேச குற்றத்தை புரிவதாக குற்றம்
சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையை மீறி ஈராக் மீது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் தாக்குதலை
தொடுத்திருப்பது இத்தகைய மிகப்பெரிய சர்வதேச குற்றம் ஆகும் என்று அந்த அமைப்பு கண்டித்திருக்கிறது. இந்த அமைப்பை
நிறுவியவர்களில் ஒருவரான பேராசிரியர் மைக்கேல் மண்டல் (Michael
Mandel) கனடாவின் சட்டப் பல்கலைக்கழகமான
Osgoode Hall Law School
இல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தெரிவித்துள்ள கருத்தின்படி இரண்டாவது
உலகப்போருக்குப் பின்னர், நாஜி தலைவர்கள் மீது நூரம்பேர்க் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அந்த வழக்கில்
வழங்கப்பட்ட தீர்ப்பில், ''ஆக்கிரமிப்பு போரை ஆரம்பிப்பது மிகப்பெரிய சர்வதேச குற்றமாகும். இதற்கும் இதர
போர்க் குற்றங்களுக்கும் வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். ஆக்கிரமிப்பு போரில், ஒட்டுமொத்தமாக எல்லா தீங்குகளும்
அடங்கியிருக்கின்றன'' என்று அத்தீர்ப்பை பேராசிரியர் மைக்கேல் மண்டேல் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
புஷ் நிர்வாகம், உலகிலேயே மிக மோசமாகவும் அதிகமாகவும் போர் கைதிகள் பற்றிய
ஜெனிவா ஒப்பந்தங்களை மீறி நடந்துகொள்ளுகின்ற நாடாக உள்ளது. ஆப்கானிஸ்தான் போரில் பிடிபட்ட நூற்றுக்கணக்கான
தலிபான் போர் வீரர்களை கியூபாவில் உள்ள குவன்டனாமோ குடா பகுதியில் சட்ட விரோதமாக சிறை வைத்திருக்கிறது.
ஜனவரி 2002ல் குவன்டனாமோ பகுதிக்கு முதலாவது குழு சிறைக் கைதிகள் கொண்டு வரப்பட்டபோது பென்டகன் அவர்களது
புகைப்படங்களை வெளியிட்டதுடன் தொலைக்காட்சியில் அந்த சிறைக் கைதிகள் ஆரஞ்சு நிற உடுப்புகளை அணிந்து அமெரிக்க
படை வீரர்கள் முன் மண்டியிட்டிருப்பதையும், கைகளிலும் மற்றும் காலிலும் விலங்கு பூட்டப்பட்டிருப்பதையும், கறுப்பு
கண்ணாடி அணிந்திருப்பதையும் மற்றும் அவர்களது வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை முகமூடிகள் மூடியிருப்பதை
தொலைக்காட்சியில் படமாக காட்டினார்கள். இப்படி வெளியிடப்பட்ட படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்தின.
ஆனால் அந்த கைதிகளை போர்க் கைதிகளாக அங்கீகரிக்க புஷ், ரம்ஸ்பீல்ட் மற்றும் பெளவல் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
அமெரிக்க போர்க் கைதிகளை ஈராக் படம் பிடித்ததை புஷ் மற்றும் ரம்ஸ்பீல்ட் கண்டித்த
அதே நாளில், மேலும் 30 கைதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கியூபாவிற்கு அனுப்பப்பட்டனர். சர்வதேச பொது மன்னிப்பு
அமைப்பு தந்திருக்கும் தகவலின்படி, ''குவன்டனாமோ இராணுவ முகாமில் 40 ற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 660
வெளிநாட்டு குடிமக்கள் கைதிகளாக உள்ளனர். ஆப்கானிஸ்தானில் சர்வதேச ஆயுதப்படைகளுடனான சண்டையின்போது
இவர்களில் மிகப்பெரும்பாலோர் கைது செய்யப்பட்டனர். குவன்டனாமோ முகாமில் உள்ள பலர் குற்றச்சாட்டு அல்லது
விசாரணை இல்லாமலும் மற்றும் அவர்களது வக்கீல்கள், உறவினர்கள், அல்லது நீதிமன்ற தொடர்பு இல்லாமல் ஓராண்டிற்கு
மேலாக காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் நடத்தப்படும் விதம் சர்வதேச தரங்களை மீறுவதாக உள்ளது''
என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க அரசாங்கம் தலிபான் கைதிகளின் நிலையை மூன்றாவது ஜெனிவா
ஒப்பந்தத்தின் 5 ஆவது பிரிவுப்படி ''தகுதி வாய்ந்த ஒரு நடுவர்மன்றம்'' முடிவு செய்வதை மறுத்தே வந்திருக்கிறது.
அமெரிக்க அரசாங்கம் ஒருதலைபட்சமாக, அவர்களை ''பயங்கரவாதிகள்'' என்றும், ''சட்ட விரோத போராளிகள்''
என்றும், வர்ணித்துள்ளது. இந்த பதங்கள் ஜெனிவா ஒப்பந்தங்களில் இடம்பெறாதவை. மேலும், தலிபான் அரசின் ஆயுதப்படைகளில்
அவர்கள் போர் வீரர்களாக பணியாற்றி வந்தார்கள். அப்போது ஆப்கானிஸ்தான் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற நிர்வாகமாக
செயல்பட்டு வந்தது. அந்த நிர்வாகம் ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
ஜெனிவா ஒப்பந்தத்தின் நான்காவது பிரிவு போர் கைதிகள் பற்றி விளக்கம் தருகிறது.
''ஒரு நாட்டின் ஆயுதப்படைகளின்'' ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் ''ஒழுக்கமைக்கப்பட்ட தொண்டர் படைகள்''
மற்றும் வழமையான இராணுவத்தில் இணைந்துகொள்ள நேரம் கிடைக்காததால் ஆக்கிரமிக்கும் படைப்பிரிவுகளை எதிர்ப்பதற்கு
தாங்களே முன்வந்து ''ஆயுதங்க்ளை ஏந்தி போரில் இறங்குகிற குடிமக்கள்'' ஆகிய அனைவரும் போர் கைதிகள்தான்
என்று ஜெனிவா ஒப்பந்தம் திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கிறது.
ஐ.நா. மனித நேய உரிமைகள் குழு, அமெரிக்காவிற்கான மனித உரிமை குழு, ஒழுங்குமுறையற்ற
கைது பற்றிய ஐ.நா. செயற்குழு மற்றும் ஜெனிவா ஒப்பந்தங்கள் தொடர்பான விதிகளை முடிவு செய்யும் அதிக அதிகாரம்
படைத்த அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை சங்கக்குழு ஆகியவை கண்டனம் செய்த பின்னரும், வாஷிங்டன் தனது
போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
குவன்டனாமோ கைதிகளை அமெரிக்கா தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான நிலையில் காவலில்
வைத்திருக்கிறது. புதிய சிறைக்கொட்டடிகளில் 24 மணி நேரமும் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். வாரத்திற்கு
30 நிமிடங்கள் மட்டுமே கை, கால் விலங்குகளுடன் உடற்பயிற்சி செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இது 1949 ஜெனிவா
ஒப்பந்தங்களை தெளிவாக மீறுகின்ற நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது பிரிவு போர்க் கைதிகள் எல்லா
நேரத்திலும் மனிதநேய அடிப்படையில், நடத்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது. அதே ஒப்பந்தத்தின் 25 வது
பிரிவு ''போர்க் கைதிகள், அவர்களை காவலில் வைக்கும் அதிகாரிகள் இருக்கும் வசதிக்கு இணையான வசதிகளுடன் அதே
பகுதியில் காவலில் வைக்கப்படவேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறது. 21வது பிரிவு, கைதியின் பாதுகாப்பு காரணங்களுக்கு
தவிர மற்றும்படி நெருக்கமாக காவலில் வைத்திருக்கக்கூடாது என்று தடை விதிக்கிறது.
குவன்டனாமோ கைதிகள் சட்டபூர்வமான இருட்டறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தாங்கள் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டிருக்கிறோமா என்பதை நீதிமன்றத்தில் முறையிட முடியாத நிலையில் உள்ளனர்.
மற்றும் அவர்கள் எவ்வளவு காலத்திற்கு இப்படி கைதிகளாக இருப்பார்கள் என்பதற்கு எந்தவிதமான தகவலும் இல்லை.
அரசாங்கம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றங்கள், கைதிகள் தொடர்பாக தங்களது
சட்டபூர்வ அதிகாரத்தை செலுத்த மறுத்துவிட்டன. எனவே, அந்தக் கைதிகள் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுக்களை
தாக்கல் செய்ய முடியாது தடுத்துவிட்டனர். இதன் விளைவாக பல்வேறு தற்கொலை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் பாஹ்ரம் (Bagram)
அமெரிக்க விமானப்படைத்தளத்தில், தலிபான் மற்றும் அல்கொய்தா கைதிகளை
அமெரிக்க அதிகாரிகள் சித்திரவதை செய்ததாகவும் மற்றும் மோசமாக நடத்தியதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து
விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு சபை விடுத்த வேண்டுகோளை ஏற்கவும் புஷ் நிர்வாகம்
மறுத்துவிட்டது. பாஹ்ரன் காவல் முகாமில் 2002 டிசம்பர் மாதம் இறந்துவிட்ட இரண்டு கைதிகளின் மரணவிசாரணை அறிக்கையில்
அவர்கள் இருவரும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கைதிகளை நீண்ட நேரம் சங்கடமான நிலையில் நிற்கவைப்பதும் தூங்கவிடாமல் தடுப்பதும் 24 மணி நேரமும்
விளக்கு வெளிச்சத்தில் வைத்திருப்பதும் போன்ற நிர்பந்தம் கொடுக்கும் நெருக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள்
மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
2001 நவம்பர் கடைசியிலும், மற்றும் டிசம்பர் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க
மற்றும் பிரிட்டனின் சிறப்புப் படைகளுடன் வடக்கு கூட்டணி போர் பிரிவு என்று கூறப்படும் ரஷீத் டொஸ்டும் (Rashid
Dostum-ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்புத்துறை துணை
அமைச்சர்)
இனது விசுவாசப் படைகளுடன் இணைந்து குண்டூஸ் பகுதியில் முந்தைய தினம் சரணடைந்த 400 முதல் 800 ஆப்கானிஸ்தான்காரர்கள்
அல்லாத தலிபான் ஆதரவாளர்களை கூட்டணிப் படைகள் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
குவாலா-இ-ஜாங்கி கோட்டைக்கு உள்ளே இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. அமெரிக்க, விமானப்படை விமானங்கள்
அவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி கொண்டிருக்கின்றன. அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி விமானப்படை
தாக்குதலை நியாயப்படுத்தினர். ஆனால், எல்லா சான்றுகளுமே ஒரு தரப்பு கொலை நடைபெற்றதை நிரூபிக்கின்றன.
அது எப்டியிருந்தாலும், ஜெனிவா ஒப்பந்தங்களின்படி பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் கொலை செய்வது மற்றும்
போர் கைதிகளுக்கு எதிராக குறிப்பாக தப்பி ஓட முயலும் கைதிகளுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடை
விதித்திருக்கின்றன. இப்படி தப்பியோட முயலும் போர் கைதிகளை மிகவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தான் ஆயுதரப்பிரயோகம்
செய்து பிடிப்பதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
குவாலா-இ-ஜாங்கி கோட்டையில் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து மேலும் குண்டூஸ்
போரில் சரணடைந்த மொத்தம் 8,000 பேரில் 3000 கைதிகளை கொலை செய்து அவர்களை புதைத்ததில் வடக்கு
கூட்டணி படைகளுடன் அமெரிக்க இராணுவ தலைமை உடைந்தையாக செயல்பட்டிருக்கிறது.
தன்னைப் பொருத்தவரை ஈராக் நிர்வாகம் - ஜெனிவா ஒப்பந்தங்களின்படி கட்டுப்பட்டு
அமெரிக்க போர் கைதிகளை நடத்துவதாக உறுதியளித்துள்ளது. அமெரிக்க போர் கைதிகளை தொலைக்காட்சியில்
காட்டியது உண்மையிலேயே ஜெனிவா ஒப்பந்தத்தின் 13 வது பிரிவை மீறிய நடவடிக்கையா என்பதில் சட்ட நிபுணர்களுக்கு
இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அந்த விதி இயற்றப்பட்ட நேரத்தில் தொலைக்காட்சிகள் இல்லாததுடன்
தொலைக்காட்சி படச்சுருள்களை அல்லது புகைப்படங்களை காட்டுவதை அந்த பிரிவு தடைசெய்யவில்லை. இதில்
ஒரேயொரு தொடர்புடைய பிரிவு, போர்க் கைதிகள் பொதுமக்கள் ஆவலோடு பார்க்கும் வகையிலும் மற்றும் இழிவுபடுத்தும்
வகையிலும் நடத்தப்படாது பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் பிரபல வழக்கறிஞர்
ஜோப்ரி ராபர்ட்ஸ்சன் (Geoffrey Robertson)
ஈராக்கை கண்டித்திருக்கிறார். அதே நேரத்தில், போர் கைதிகளை பகிரங்கமாக
காட்டுவதால் அந்தத் கைதிகளின் உறவினர்கள் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று உறுதிபெறும் அனுகூலமாக
இருக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஈராக், ஜெனிவா ஒப்பந்தங்களை மீறியிருந்தாலும் அந்த மீறல் நடவடிக்கை வாஷிங்டனின்
மிகபெரிய மீறல் நடவடிக்கைகளோடு ஒப்பிடும்போது மிகவும் அற்பமானது. மேலும், புஷ் நிர்வாகத்தின் அறிக்கையில் உள்ளார்ந்த
ஒரு அச்சுறுத்தல் அடங்கியிருக்கிறது. தான் பிடித்து வைத்துள்ள 3,500 ஈராக் போர் கைதிகளை ஜெனிவா ஒப்பந்தங்களை
மீறி நடத்தப்போவதாகவும் தலிபான் போர் வீரர்களுக்கு கிடைத்த அதே நடவடிக்கைகள்தான் ஈராக்கியர்களுக்கும்
என்பதாக எச்சரிக்கை செய்திருக்கன்றது.
ஈராக் மக்களது எதிர்ப்பு அதிகரித்து வருவது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இதனால், அமெரிக்கப்
படையெடுப்பில் பாதக விளைவுகள் வெளிப்படுகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் மிகவும் விரக்தி அடைந்து எந்த
கொடுங்கோன்மைகளையும் செய்வதற்கும், எந்த குற்றச்சாட்டுகளையும் கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றது. இன்றைய
தினம் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சனை என்னவென்றால், அமெரிக்கர்கள் பலர் உட்பட உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான
மக்கள் அதிக அளவில் அமெரிக்காவின் போர் நடவடிக்கையின் வரலாற்றை ஆராய்ந்துகொண்டு வருகிறார்கள். அவர்கள்
தங்களது சொந்த முடிவிற்கு வருகிறார்கள். மற்றும், வெள்ளை மாளிகையும் பென்டகனும் கூறகின்ற பொய்களையும்
அவதூறுகளையும் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களில் வருகின்ற பொய்களையும் அவதூறுகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்து
வருகின்றனர். |