World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Bush and Blair hold crisis summit புஷ் மற்றும் பிளேயர் நடத்திய நெருக்கடி உச்சிமாநாடு By Peter Symonds மோசமான முறையில் தாறுமாறாக சென்று கொண்டிருக்கும் போர் திட்டங்கள் பற்றி விவாதிக்கவும் மற்றும் போருக்குப்பிந்திய ஈராக்கில், உருவாக இருக்கும் அரசியல் கட்டமைப்பு குறித்து, விரிவடைந்து வரும் கருத்து வேறுபாடுகளை சரிக்கட்டுவது தொடர்பாக விவாதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர் இருவரும் இந்த வாரம் அவசரமாக கூட்டப்பெற்ற கேம்ப்-டேவிட் உச்சிமாநாட்டிற்கு சேர்ந்து வந்தனர். வியாழன் அன்று, கூட்டாக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில், இரண்டு தலைவர்களும், இராணுவ நடவடிக்கை நெருக்கடிக்கு ஆகிவிடுமோ என்ற அச்சுறுத்தல் பற்றி முடிந்த அளவிற்கு சிறப்பாக, தங்களது கண்ணோட்டத்தை எடுத்துக்காட்ட முயன்றனர். ஒரு வாரத்திற்கு முன்னர், சிறப்பாக சித்தரித்துக் காட்டப்பட்ட எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மகிழ்ச்சி ஆரவாரத்தை வரவேற்கும் மக்கள் கூட்டத்திற்கு பதிலாக, கூட்டணிப் படைகள் உறுதிமிக்க எதிர்ப்பை சந்தித்தன. ஈராக் இராணுவம், ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு தப்பியோடவில்லை மற்றும் சதாம் ஹூசேன் ஆட்சி அப்படியே நீடிக்கிறது. ஈராக் பொதுமக்கள் அச்சத்தாலும் மற்றும் கொடுங்கோன்மையாலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள், என்று பிளேயர் மற்றும் புஷ் இருவரும் தொடர்ந்து ஒரு வெற்று கருத்தையே வலியுறுத்தி கூற மட்டுமே முடிந்தது. ஈராக் நகரங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான பிரதான போர்கள் இன்னும் தொடங்கவில்லை. இதுவரை பெரும்பாலும், சரியான ஆயுதங்கள் இல்லாத, ஈராக்கின் அரைகுறை படை வீரர்களோடுதான், போர் நடந்துகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் புஷ் அதை பற்றி, கருத்து தெரிவிக்கும்போது, "அந்த சர்வாதிகாரியின் மிகத் தீவிரமான மற்றும் மிக உறுதி வாய்ந்த படைப் பிரிவுகளோடு, இப்போது நாம் போர் புரிந்து வருகிறோம்" - என்று குறிப்பிட்டார். பிளேயர் ஓரளவிற்கு வருந்தத்தக்க முறையில், "ஏற்கனவே, போரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை" -ஊடகங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஈராக் போர் முடிவில்லாமல், இடைவிடாது, நீண்டு கொண்டே போகின்ற இரத்தக்களரி போராக மாறிவிடும் சாத்தியக்கூறுகளின் முன்னேற்றம் வாஷிங்டன் மற்றும் லண்டனில் பதட்டங்களைத் தூண்டி விடுகின்றன. போர் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டதும் புஷ் எரிச்சல் அடைந்தது, அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, புஷ் கூறியதாவது: "எவ்வளவு காலம் அது, எடுத்துக்கொண்டாலும். அதுதான், உங்களது கேள்விக்கு பதில், மற்றும் அதைத்தான், நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். கால அட்டவணை பற்றிய பிரச்சினை அல்ல இது. வெற்றி சம்மந்தப்பட்ட விவகாரம். மற்றும் ஈராக் மக்கள் அதை அறியவேண்டும். அதை நீங்கள் பாருங்கள்." புஷ் சங்கடப்பட்டது எதைக் காட்டுகிறது என்றால், அமெரிக்காவின் போர் மூலோபாயம் பற்றிய கருத்து வேறுபாடுகளை காட்டுகின்றது. இந்த கருத்து வேறுபாடுகள் பற்றி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: "படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், போர்களத்தில், மிக வலுவான தரைப்படைகள், இறக்கப்பட வேண்டும் என்பதை, இணைத்துக்கொள்ளும் தங்களது முயற்சியை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் தள்ளுபடிசெய்துவிட்டதால் அவர் மீது, ஆத்திரம் அதிகரித்து வருவதாக, மூத்த பென்டகன் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அரசு உள் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்" - இதைப் பற்றி கருத்து கேட்டபோது, அந்த கருத்தை தள்ளுபடி செய்துவிட்ட ட்ரம்ஸ்பீல்ட் போர்த் திட்டங்களில் தளபதிகள் "ஆழமாக சம்மந்தப்பட்டிருப்பதாகவும்", போர்த் திட்டங்களை "அங்கீகரித்திருப்பதாக" வும் குறிப்பிட்டார். லெப்டினென்ட் ஜெனரல் வில்லியம் வால்லஸ், தெரிவித்துள்ள கருத்துக்களை அவ்வளவு எளிதாக தள்ளுபடி செய்துவிட முடியாது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வியாழன் அன்று, அவர் அளித்த பேட்டியில் மிகத் தெளிவாக ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். "தற்போது நாம் போரிட்டு வரும் எதிரி, நாம் போர்த் திட்டங்களை தீட்டிய காலத்தில், உத்தேசித்திருந்த எதிரியிலிருந்து மாறுபட்டு, காணப்படுகிறார்" - என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனரக ஆயுத தாக்குதல்களுக்கு எதிராக, இராணுவத்தில் பணியாற்றாதவர்கள் மிகுந்த விருப்பத்தோடு களத்தில் இறங்கி, தற்கொலை தாக்குதல்களில் இறங்கியிருப்பது குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்தார். "நான் சந்திக்கின்ற தாக்குதல்கள் மிகவும், சங்கடமானவையாய் இருக்கின்றன. நமது நுட்ப வாகனங்களை .50 calibre சிறிய துப்பாக்கிகள் மூலம் மற்றும் கிடைக்கின்ற ஒவ்வொரு ஆயுதத்தையும் கொண்டு, டாங்கிகளையும் பீரங்கி வண்டிகளையும் (Bradleys) தாக்கி வருகிறார்கள்" - என்றும் அவர் கூறியுள்ளார். பென்டகனின் கருத்தை அவரும் திரும்ப கூறினார். ஈராக்கில் அரைகுறை பயிற்சி பெற்றவர்கள் "போரிடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டார். வால்லஸ் மறைமுகமாக ஒன்றை ஏற்றுக்கொண்டார், அமெரிக்க இராணுவம் அதற்கு எதிரான மக்களை சந்திக்கிறது என்பதுதான். பாக்தாதிற்கு வெளியே பீரங்கி பொருத்தப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டரை (Apache helicopter gunships) சுட்டு வீழ்த்தி சேதப்படுத்திய இடைத் தடையான குண்டு மழைகளைப் பற்றிக் குறிக்கையில், "எல்லோரும் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டை மோதிக் கொண்டிருக்கிறோம், மற்றும் அவர்கள் அனைவரும் வானத்தை நோக்கி சுடும்போது, அதுவும் ஒரே நேரத்தில் சுடும்போது, அது மிகவும் கடுமையானது`` என்று வால்லஸ் கூறியுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல், தற்போது ஈராக்கில் மூத்த அமெரிக்க தரைப்படை தளபதியாக பணியாற்றி வரும் வால்லஸ், "ஈராக்கில் பணியாற்றிவரும் பல மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பல நாட்களாக சொல்லி வருகின்ற கருத்தை" வால்லஸ் தற்போது வெளிப்படுத்தினார். மிகக் கடுமையான குண்டு வீச்சு தாக்குதல்களால், ஏற்பட்ட சேதத்தின் பாதிப்புகளால், ஈராக்கின் எதிர்ப்பு சிதைந்துவிடவில்லை. மற்றும் மக்கள் அதிகமுள்ள பகுதிகளை பிடித்துக்கொள்ள தற்போது தளபதிகள் நகர்ப்புற யுத்தத்துக்கு தயாராக வேண்டும். ஒரு மூத்த இராணுவ அதிகாரி மிகவும் எச்சரிக்கையான முறையில் இது பற்றி விமர்சனம் செய்தார். ``நீங்கள் உண்மையிலேயே இதுபற்றி அக்கறை கொண்டிருந்தால், இஸ்ரேல் பாணியில், டாங்கிகள் மற்றும் புல்டோசர்களோடு படையெடுப்பு நடத்தவேண்டும்`` - என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு சீர்குலைந்து வரும் இராணுவ நிலவரத்தை அமெரிக்கா சந்தித்து வருகிறது என்பதற்கு திட்டவட்டமான அடையாளம் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக 120,000 -அமெரிக்கத் துருப்புக்கள் மேலும் ஈராக்கிற்கு அனுப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகும். சதாம் ஹூசேன் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், அந்த நாட்டை பிடித்துக்கொள்வதற்கு, திட்டமிடப்பட்டு ஆரம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் தற்போது களத்தில் தீவிரமாக போர் புரிவதற்காக தேவைப்படுகின்றனர். மாதக்கணக்கில் இல்லாவிட்டாலும், படைகள் அனுப்பும் ஒரு இடத்தில் சேருவதற்கு வாரக்கணக்கில் ஆகும். மேலும், 5,000-துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு பிளேயர் பிரிட்டனின் மந்திரி சபை ஒப்புதலைப் பெறவேண்டும். தற்போது பாஸ்ரா நகரில் முற்றுகையிட்டுள்ள பிரிட்டனின் துருப்புக்களை விலக்கி, அவர்களை பாக்தாத் நகரை தாக்க அனுப்புவதற்காக, பிரிட்டன் மாற்றுப் படையை அனுப்பவேண்டும். போருக்குப் பிந்திய ஈராக் போர் நடத்தப்படுவது தொடர்பாக, ஒன்றுபட்ட ஒரு அணியாக தங்களை காட்டிக்கொண்டாலும், போருக்குப் பிந்திய ஈராக் நிர்வாகம் தொடர்பாக இருவருக்கும் இடையே, கணிசமான அளவிற்கு கருத்து வேறுபாடுகள் நிலவுவதை புஷ் மற்றும் பிளேர் இருவரும் மறைத்துவிட முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் ஐ.நா.வின் பங்கு பணி பற்றி மையப்படுத்தி இருந்தது. ஐ.நா.வை கெடுபிடி போர் காலத்து காலாவதியாகிவிட்ட நினைவு சின்னம் என்று கருதுகின்ற புஷ் நிர்வாகத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், ஐ.நா.வையே ஒழித்துக்கட்டிவிட விரும்புகின்றனர். அமெரிக்கா, பாக்தாத்தில் நடத்தவிருக்கும் ஆட்சிக்கு, சட்டபூர்வமான அங்கீகாரம் தருவதிலும், மற்றும் மனிதநேய அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்குவதிலும், ஐ.நா. பயனுள்ள பணியாற்ற முடியும் என்று, வெள்ளை மாளிகை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், அமெரிக்காவின் அரசு செயலாளர் கொலின் பவெல், ஈராக்கில் ஐ.நா.வின் ஈடுபாட்டிற்கான மட்டுப்பாடுகள் பற்றி வெளிப்படையாக அறிவித்தார். ஐ.நா.வின் "மாபெரும் பயன்பாடு" பயனுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட பவெல் போருக்குப் பிந்தைய ஈராக் நிர்வாகத்தை ஐ.நா. மேற்பார்வை செய்வதற்கு வழி இல்லை என்றார். "கூட்டணி சகாக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு சுமையை கொடுக்கமாட்டோம். எங்களது கூட்டணி சகாக்கள் எந்த அளவிற்கு எதிர்காலம் அமையும் என்பதை பொறுத்து முடிவு செய்வார்கள்" என்று பவெல் கூறினார். பிளேயர் ஐ.நா.-விற்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால், கேம்ப் டேவிட் மாநாட்டில், இந்த வகையில் கணிசமான முன்னேற்றத்தை அவர் காண முடியவில்லை. ஏற்கனவே, முந்தைய அசோரஸ் உச்சிமாநாட்டில் உடன்பாடு ஏற்பட்ட அளவிற்கு அப்பால் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் காணத் தவறிவிட்டார். "அசோரஸ் உச்சி மாநாட்டில் நானும் ஜனாதிபதியும் எடுத்த நிலைப்பாடு அப்படியே நீடிக்கிறது. பெயர் குறிப்பிட வேண்டுமானால், ஐ.நா. எங்களது சகாக்கள் மற்றும் பாகஸ்தர்கள் மற்றும் இருதரப்பு நன்கொடையாளர்கள், ஆகியோருடன் பணியாற்றுவோம்" என்று பிளேயர் வெறுமனே குறிப்பிட்டார். அப்போது, நிருபர்கள் விபரங்களை கேட்டனர். "ஏராளமான விபரங்கள்" இன்னும் விவாதிக்கப்பட இருக்கின்றன என்று மட்டுமே கூறி பிளேர் தவிர்த்துவிட்டார். பாக்தாத்தில் ஆட்சி அதிகாரத்தை வாஷிங்டன் ஏகபோகமாக தன்னிடம் வைத்துக்கொள்ளாது, தவிர்க்கும் வகையில் உறுதி செய்துகொள்ளுமாறு பிரிட்டனில் பிளேயருக்கு மிகக்கடுமையான நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. லண்டனிலிருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் - பத்திரிகை தனது ஆசிரிய உரைக்கு, ``போருக்குப் பிந்தைய ஈராக் நிர்வாகத்தை, ஐ.நா. ஏற்றுக்கொள்ள வேண்டும்`` என்று தலைப்பிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் சில பிரிவுகளில் நிலவுகின்ற இது தொடர்பான கவலைகளை அந்த ஆசிரிய உரை கோடிட்டுக் காட்டுகிறது. ``ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ஒரு பாட்டிற்குத்தான் வாய் அசைக்கின்றனர், எனவே அதில் ஆலோசனை கூறுவதற்கு அதிகம் இல்லை`` என்று அந்த பத்திரிகை அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் நிலவுகின்ற பிளவுகளை, சரிசெய்வதற்கு சமரசத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் போருக்குப் பிந்தைய ஈராக்கில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்தப் பத்திரிகை வேண்டுகோள் விடுக்கிறது. அமெரிக்கா தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டுமானால், அமெரிக்காவிற்கு எதிரான உணர்வு அலை கணக்கிட முடியாத அளவிற்கு, அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் உருவாகும்; மற்றும் பயங்கரவாதிகளது தாக்குதல் ஆபத்து அதிகரிக்கும் என்று, அந்த ஆசிரிய உரை எச்சரிக்கிறது. ஐ.நா. முத்திரை அவசியம் என்று அந்த ஆசிரியஉரை வாதிடுகின்றது. இப்போது, ஒட்டுமொத்த முயற்சி சட்டப்பூர்வமானது அல்ல என்பதால் அதை ஒட்டுமொத்தமாக வெற்றிபெறச் செய்வதை உத்தரவாதம் செய்வதற்கு ஐ.நா. இசைவாணை அவசியமானது என்று அது கேட்டுக்கொள்கிறது. "வாஷிங்டன் எவ்வளவுதான் மறுப்புகளை தெரிவித்தாலும், ஒருதலைப் பட்சமாக அமெரிக்கா ஆட்சியை பிடித்துக்கொள்வது, ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கையாக கருதப்படும், வேறு அல்ல" என்று அந்த ஆசிரிய உரை மேலும் கூறியது. இதுவரை ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தலைமையில், 45-நாட்களுக்கு, ஐ.நா.வின் "உணவிற்கு எண்ணெய் திட்டத்தை`` மேற்கொள்வது என்று ஓரளவிற்கு ஒரே ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு ரஷ்யாவும் சிரியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரான்சும், ஜேர்மனியும், ஈராக் மீது வாஷிங்டன் ஒருதலைப்பட்சமாக, படையெடுப்பதை போருக்குப்பின்னர் அங்கீகரிக்கும் எந்த ஐ.நா. தீர்மானத்தையும் எதிர்க்கின்றன. ஜேர்மனி, சமரசம் செய்துவிட்ட தீர்மான வாசகத்தில், ஒரு குறிப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது, அந்தக் குறிப்பில் ஆக்கிரமிப்பு அரசுகள், சர்வதேச ஒப்பந்தங்களின்படி மனிதநேய அடிப்படையில் உதவி வழங்குவதை "கடமை" என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பேர்லினும் பாரிசும் வாஷிங்டன் உடன் சமரசம் செய்துகொள்ள விரும்புகின்றன என்ற இதர அறிகுறிகளுக்கு மத்தியில், பிரான்சும் ஜேர்மனியும், ``எண்ணெய்க்கு, உணவு வழங்குகின்ற திட்டத்தை கைவிட`` விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் போரின் விளைவுகள் ஈராக் மக்களிடையே எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிலவரம் என்ன, என்பது குறித்து, ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் நடத்த விருந்த சிறப்பு மாநாட்டிற்கு அமெரிக்க தெரிவித்த எதிர்ப்பிற்கு ஜேர்மனியும் பிரான்சும் ஆதரவு காட்டின. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் டு வில்பன் வியாழன் அன்று லண்டனில் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் அமைப்பில் ஆற்றிய உரையில், இன்னொரு சமிக்ஞையில் சமரச போக்கு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். "படை பலத்தை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை" என அவர் வலியுறுத்தினார். முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதை ஒரு கொள்கையாக ஏற்றுக்கொள்வதில் இருக்கின்ற ஆபத்தைத்தான் சுட்டிக்காட்டினோம்" என குறிப்பிட்ட அவர், அமெரிக்காவுடன் சமரசப் போக்கில் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ``மகத்தான மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த காலங்களில் அமெரிக்காவுடன் மீண்டும் நெருக்கமான, நம்பிக்கையான உறவு அவசியம்`` என்று குறிப்பிட்டார். போரில் கிடைப்பதை பகிர்ந்துகொள்வது ஐ.நா.வின் பங்கு பற்றி கருத்து வேறுபாடுகள் உருவாக்கப்பட்டிருப்பதன் பிரதான நோக்கம் போருக்கு பிந்தைய ஈராக்கில் எதை பங்கு போட்டுக்கொள்வது என்பதில் ஏற்பட்டுள்ள மிகுந்த வருந்தத்தக்க போட்டி தான். பிரான்சையும் ஜேர்மனியையும் மட்டுமல்ல, வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான பிரிட்டனையும் வேகமாய் அதிர்ச்சியடையச் செய்தது, வாஷிங்டன் போருக்குப் பிந்தைய ஈராக்கில், சீரமைப்பு பணிகளுக்கான மிக உயர்ந்த லாபம் தருகிற ஒப்பந்தங்களை அமெரிக்க கம்பெனிகளுக்கு படுவேகமாக வழங்கிவருவதாகும். இதில் மிகத் தெளிவாக தெரிகின்ற ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், ஈராக் எண்ணெய் கிணறுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கு, டெக்ஸாஸ் எண்ணெய் கம்பெனியான, ஹாலிபர்ட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கெல்லார்க் பிரெளன் அன்ட் ரூட் (Kellogg Brown & Root (KBR)) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்திருப்பதை குறிப்பிடலாம். இந்த கேபியார் ஹாலிபர்ட்டன் எண்ணெய் நிறுவனத்துடன், அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனிக்கு நெருக்கமான உறவு உண்டு. இந்த ஒப்பந்த அறிவிப்பு மூலம், அந்தக் கம்பெனியின் பங்குகள் விலை 54-சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான நிலை. ஈராக்கின் சாலைகள், மின்சாரம், மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கு, 900-மில்லியன் டாலர் மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தம் வழங்கப்பட இருக்கிறது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சி (USAID) மேலும் சில வரிசையான திட்டங்களை உருவாக்கி வருகிறது. ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரீவியூ இன் இன்றைய பதிப்பில், "போர் வெகுமதிகளை பகிர்ந்துகொள்ளும், சண்டை நடக்கிறது`` - என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்திருக்கிறது. ``KBR-ஐ, தேர்ந்தெடுத்திருப்பது ஐரோப்பாவில், ஒரு நீராவி வால்வைத் திறந்த சீற்றத்தைக் கிளப்பியுள்ளது. இலாபம் தருகின்ற மறுகட்டுமான திட்டங்களை தானே வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது, மற்றும் தனக்கு வேண்டிய கம்பெனிக்கு காண்டிராக்ட் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன`` என்று அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது. ஈராக்கை சீரமைப்பிற்கு, 25-முதல் 100-பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பகுதி ஈராக்கின் எண்ணெய் வருமானத்திலிருந்து தான் செலுத்தப்பட வேண்டும். பிரிட்டனின் வர்த்தகம், மற்றும் தொழிற்துறை செயலாளர் பெட்ரிஷியா ஹெவித் (Patricia Hewitt), பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில், "வர்த்தக இலாப" போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை. ஆனால், அமெரிக்க கம்பெனிகளோடு பிரிட்டிஷ் நிறுவனங்கள் "சரிசமமாக போட்டியிடுகின்ற வாய்ப்புவளத்தை" உருவாக்கித்தரவேண்டியது அவசியமாகும் என அவர் கருத்து தெரிவித்தார். ஐ.நா. ஆதரவோடு அமையும் புதிய சிவிலியன் ஆட்சியிடம் மறுகட்டுமான அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டியது "அவசியமாகும்" எனவும் அவர் கருத்து தெரிவித்தார். தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி, அமெரிக்காவின் பெரிய கம்பெனிகள் தங்களது இயல்பான போக்கில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள முடியும். USAID-வழிகாட்டி நெறிமுறைகளின்படி எந்த அரசாங்க ஒப்பந்தங்களாகயிருந்தாலும் அவற்றை வழங்கும்போது அமெரிக்க கம்பெனிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், டெண்டர்களை தாக்கல் செய்கின்ற எல்லா நிறுவனங்களும் அமெரிக்காவில் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழைப் பெறவேண்டும். இந்த நிபந்தனை, அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள கம்பெனி டெண்டர்களைப் பெறுவதற்கு தடைக்கல்லாக உள்ளது. ஐ.நா. பொறுப்பில் மறு கட்டமைப்பு பணிகள் நடைபெறுமானால், ஐரோப்பிய மற்றும் இதர கம்பெனிகள் நன்கு போட்டி போட முடியும். போருக்குப் பிந்தைய ஈராக்கில், ஐ.நா. பெரும் பங்கு ஆற்றவேண்டும் என பிளேயர் வலியுறுத்தி கூறுவது, இப்படி போரில் அடித்த கொள்ளையை பங்கு போடுவதற்கு நடைபெறும் அருவருக்கத்தக்க போட்டிகளை மட்டும் கருத்தில் கொண்டு அமைந்தது அல்ல. முன்னெச்சரிக்கையுடன் சமநிலை பேணிக்கொண்டு டோனி பிளேயர், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் "பாலமாக" செயல்பட முயன்று வருகிறார். போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆழமான பிளவுகள் நிலவுவது அம்பலத்திற்கு வந்தது. அதை சரிகட்டுகின்ற வகையில், ஈராக் மறுகட்டுமானப் பணியில் ஐ.நா.வின் பங்கு தொடர்பாக வேண்டுகோள் விடுக்கிறார். கேம்ப்டேவிட்டில் எந்த உடன்பாட்டையும் பிளேயர் காண முடியவில்லை என்பது பிளேயரின் எதிர்ப்பாளர்களின் கருத்தை வலுப்படுத்தியுள்ளது. பிரிட்டனின் நலன்கள் ஐரோப்பாவில்தான் உள்ளன என்பது பிளேயரின் எதிர்ப்பாளர்கள் எடுத்துவைக்கின்ற வாதம் ஆகும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய யூனியனின் முன்னாள் கமிஷனராக, வாஷிங்டனில் பணியாற்றி வந்த, ரோய் டென்காம் (Roy Denham), இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூன் பத்திரிகையில் கீழ்கண்டவாறு விமர்சனம் எழுதியிருக்கிறார்: "டோனி பிளேயரின் கனவுக்கொள்கை, அவரது காதுக்கு அருகிலேயே வெடித்து சிதறிவிட்டது.... வாஷிங்டனில் பிரிட்டனுக்கு செல்வாக்கு இருக்கிறது என்ற கற்பனை முன்னர் எந்த காலத்திலும் இருந்ததைவிட இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஆனால், பிரிட்டனின் செல்வாக்கு ஐரோப்பாவில் இதைவிட குறைவாகயிருக்கிறது.... சுதந்திர ஐரோப்பிய கொள்கையை உருவாக்குவதில் பிரிட்டன் கணிசமான வேறுபாட்டைச் செய்ய முடியும். ஆனால், அமெரிக்காவின் கொள்கைகளை பொறுத்தவரை, அவரது முயற்சிகள் மன்ஹார்ட்டன் நடைபாதை ஓரத்தில் விற்கப்படுகின்ற ஐஸ்கிரீம் அளவிற்குத்தான் மாற்றத்தை ஏற்படுத்தும்." |