:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Why Germany's Christian Democrats support the war against Iraq
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினர் ஈராக்கிற்கு எதிரான
போரை ஆதரிப்பது ஏன்
By Ulrich Rippert
25 February 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஈராக்கிற்கு எதிரான போர் ஐரோப்பிய ஆளும் குழுவினரை மட்டுமல்ல, ஜேர்மனியின்
ஆளும் குழுவினரையும் பிளவுபடுத்தி விட்டது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU)
கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) மற்றும் சுதந்திர ஜனநாயகக்
கட்சியினர் (FDP) மேலும் ஜேர்மனியின் பழைமைவாத பத்திரிகைகள்
ஆகியவற்றின் சில குழுக்கள் ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர்
(Gerhard Schorder -சமூக ஜனநாயகக் கட்சி -SPD)
மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஸ்ஸர் (பசுமைகட்சி) ஆகியோருக்கு எதிராக நடத்திவரும் இயக்கம் மிக
தீவிரமாக உச்சகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU)
இன் தலைவர் ஆஞ்சலாமெர்கல் பெப்ரவரி 20 திகதி வாஷிங்டன் போஸ்டில் எழுதியிருக்கும் ''ஜேர்மனியர்கள்
அனைவருக்குமாக ஷ்ரோடர் பேசவில்லை'' என்ற கட்டுரையாகும். இனி ஜேர்மனி எப்போதும் தனியாக நடவடிக்கையில்
ஈடுபடக்கூடாது என்ற ஜேர்மனியின் மிக முக்கியமான அரசியல் பாடத்தை ஷ்ரோடர் தனது தேர்தல் தந்திரோபாயத்திற்காக
தள்ளுபடி செய்துவிட்டார் என்பதாக மெர்கல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜேர்மன் அரசாங்கம் துருக்கிக்கு இராணுவ உதவி தருவதை தடுத்து நிறுத்தியதன் மூலம்
''நேட்டோ சட்டபூர்வமான அமைப்புதான் என்பதற்கான அடிப்படைக்கே வேட்டு வைக்கப்பட்டு விட்டதாக''-மெர்க்கல்
எழுதியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள
வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் ஈராக் கண்டனங்களுக்கும்
அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அத்திலாந்திற்கு
இடையிலான உறவுகளுக்கு தமது பங்களிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைவர் முனீச் நகரில்
நடைபெற்ற நேட்டோ பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது அமெரிக்காவின் போர் கொள்கைக்கு ஆதரவு
தெரிவித்தார். நேரடியாக இராணுவ பலத்தை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியதும் மற்றும் அந்த பிராந்தியத்தில் அமெரிக்கப்படைகள்
பெருமளவில் நிறுத்தப்பட்டதன் விளைவாகத்தான் சதாம் ஹுசெயின் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களோடு ஒத்துழைக்க
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, என்று கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் குறிப்பிட்டார். ஜேர்மன் அரசாங்கத்தின்
நலன்களுக்கு விரோதமாக ஷ்ரோடரது கொள்கைகள் அமைந்திருப்பதாக அறிவித்தார்.
அமெரிக்க தூதுக் குழுவினரோடு தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்திய மெர்க்கல்
கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவிற்கு முழு ஆதரவு தெரிவித்த எட்டு ஐரோப்பிய
நாடுகளின் கையெழுத்திட்ட பிரகடனத்தில் கையெழுத்திட்டிருக்கும் என்று குறிப்பிட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள்
வந்திருக்கின்றன.
அண்மைக் காலம்வரை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும் மற்றும் அதன் சகோதரக் கட்சியான
கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) ஆகியவை போர்பற்றிய அறிக்கைகளை
வெளியிடும்போது மிகப்பெரும் நிதானப்போக்கை கடைபிடித்து வந்தன. ஏனென்றால் அப்போது முக்கியமான மாநில தேர்தல்கள்
நெருங்கி வந்துகொண்டிருந்தன. மேலும் மிகப்பெரும்பாலான ஜேர்மனி மக்கள் அமெரிக்காவின் போர் கொள்கையை
ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அந்தத் தலைவர்களுக்கு தெரியும். தற்போது பகிரங்கமாக புஷ் நிர்வாகத்துடன்
கிறிஸ்தவ ஜனநாயக யூனியனினதும் மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியனினதும் தலைவர்கள் சகோதரத்துவம் பாராட்டி அறிக்கைகள்
வெளியிட்டு வருவது பெரும்பாலான பொது மக்களுக்கு எதிராக ஒரு வலதுசாரி தாக்குதலை தொடுத்துக்
கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இப்படி பகிரங்கமாக புஷ் நிர்வாகத்திற்கு பின்னால் அணிவகுத்து நிற்பதற்கு பல்வேறு காரணங்கள்
உண்டு.
மெர்க்கல் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் வெளியுறவுக் கொள்கை விளக்க அதிகாரி
வொல்ப்காங் ஷொய்பிள (Wolfgang Schäuble)
இருவரும் பிரதானமாக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். வாஷிங்டன் போஸ்டில் மெர்க்கல்
எழுதியுள்ள கட்டுரையில் அமெரிக்காவுடன் நெருக்கமான நட்புறவும், கூட்டும் நிலைநாட்டப்படுவது ஐரோப்பிய ஒருங்கிணைப்பு
என்ற ஜேர்மனியின் கொள்கைக்கு அடிப்படையான அம்சமாகும் என்று விளக்கியிருக்கிறார்.
அதேபாணியில் தான் ஷொய்பிள வாதிக்கிறார். அமெரிக்க நிர்வாகத்துடன் தீவிரமான
மோதல்கள் உருவானால் ஏற்படும் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஷ்ரோடர் அமெரிக்காவுடன் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட ஷொய்பிள இதற்கு தனிப்பட்ட முறையில்
ஷ்ரோடர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துக்கள் நெருப்புக் கோழியைத்தான் நினைவுபடுத்துகின்றன. புதிய ஆபத்துக்கள்
வரும்போது மண்ணுக்குள் நெருப்புக்கோழி தன் தலையை மறைத்துக்கொள்ளுமாம். அமெரிக்கா எந்தவிதமான
கட்டுப்பாடும் இல்லாமல் உலக வல்லரசாக மாறுவதற்கு முயன்று வருகிறது. அந்த முயற்சியில் சர்வதேச கொள்கையின்
அடிப்படைகளை மாற்றிவிடவில்லை என்று மெர்க்கலும், ஷொய்பிளவும் கருதுகிறார்கள். இந்த இரண்டு தலைவர்களும் புஷ்
நிர்வாகம் இதற்கு முன்னர் ஐரோப்பா தொடர்பான பொதுக்கருத்தை இப்போது கைவிட்டுவிட்டு அதனது செல்வாக்கை
ஐரோப்பிய நாடுகளை பிளவு படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படவில்லை.
வாஷிங்டனுக்கு அடிபணிந்து நடந்து கொள்ளும் பாரம்பரியத்தை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்
கடைப்பிடித்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு பெரும் வெளியுறவுக் கொள்கை
கருத்து வேறுபாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அமெரிக்காவின் பக்கம் நின்றது. இரண்டாவது உலகப்போர்
முடிந்த உடன் மேலை நாடுகளுடன் ஜேர்மனி தனது உறவுகளை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பது தொடர்பானது
ஒரு தகராறு. மற்றொரு தகராறு கிழக்கு ஜேர்மனியோடு சமரசம் செய்துகொள்ள முயன்ற வில்லி பிரண்டின்(Willy
Brandt) கிழக்கு ஐரோப்பிய கொள்கை (Ostpolitik)
சம்மந்தப்பட்டது. அதற்கு ஆரம்பத்தில் வாஷிங்டன் எதிர்ப்பு தெரிவித்தது.
அமெரிக்காவின் போர் கொள்கைக்கு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஒரு தலைப்பட்சமாக
ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் உள்ளார்ந்த அடிப்படையாக அமைந்திருக்கின்றன. கிறிஸ்தவ
ஜனநாயக யூனியனினுள்ளும், கிறிஸ்தவ சமூக யூனியனுள்ளும் உள்ள நாடாளுமன்ற துணைத்தலைவர் பிரடரிக் மெர்ட்ஸ் (Friedrich
Merz) ஹஸ மாநில பிரதமர் றோலண்ட் கோக் (Roland
Koch) மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் பிரிட்பர்ட் பூலூகர் (Friedbert
Pflueger) ஆகியோர் இதுதொடர்பாக உள்நாட்டு அரசியல் குறிக்கோள்களையும் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் சமூகநல சேவைகள் மீதான வெட்டு, வேலை நீக்கம், ஜேர்மனியின் பொதுசேவைகளை தனியார்மயமாக்கல்
போன்றவற்றிற்கு எதிரான தொடர்ச்சியான பரந்த எதிர்ப்பு தொடர்பாக கவலைப்படுவதைப்போல் வெளிநாட்டு
கொள்கைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
அவர்கள் புஷ் நிர்வாகத்தின் போர்வெறி உணர்வுகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
கொடூரமான விளைவுகள், மற்றும் பயங்கரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய போர் பெரும்பாலான பொதுமக்களை
அதிர்ச்சியூட்டுவதுடன் வெறுப்பையும் தருகிறது. அதேநேரத்தில் இந்த அரசியல்வாதிகள் மக்களை பயமுறுத்துவதற்கான
கருவியாகவும் தங்களது விருப்பை சமுதாயம் ஏற்றுக்கொள்ளச் செய்யும் சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவேதான் அவர்களுக்கு ரம்ஸ்பீல்ட் அல்லது புஷ்ஷோடு கூடிக்குழாவுவதற்கு உற்சாகம் வருகிறது.
அமெரிக்காவின் அரசியலில் புஷ் நிர்வாகத்தில் இடம் பெற்றிருக்கின்ற மூர்க்கமான கிரிமினல்
சக்திகளைதான் இவர்கள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சமூக ஜனநாயக மற்றும் பசுமைக்கட்சி அரசாங்கம்
சமுதாய பிரச்சனைகள் அனைத்திலும் வலதுசாரி போக்கில் செல்வதற்கு அவர்கள் நிர்பந்தங்களை கொடுத்துக்கொண்டு
இருக்கிறார்கள். சமூக ஜனநாயக கட்சியின் தலைமையில் இயங்கிவரும் ஆட்சி ஏற்கெனவே சமூகநல சலுகைகளில் பெரும்
பகுதியை இல்லாதொழித்துவிட்டது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியனினதும், கிறிஸ்தவ சமூக யூனியனினதும் வலதுசாரிகள் ஆறுமாதங்களுக்கு
முன்னர் பதவிக்கு வந்த ஷ்ரோடர், பிஸ்ஸர் அரசை மிகக்கடுமையாக சாடிவருகின்றனர். .
அவர்களுக்கு பழைமைவாத ஊடகங்கள் ஆதரவு தருகின்றன. மக்களிடையே பெருகிவரும்
போர் எதிர்ப்பு மனப்பான்மைக்கு எதிராக இவர்கள் மிகத் விசர்பிடித்துபோல் பிரதிபலிக்கின்றனர். உண்மையை நிலைநாட்ட
வேண்டுமென்ற சில அடிப்படைகளைக்கூட பத்திரிகைத் துறையின் ஆரம்பக்கட்ட தரங்களையும் கூடநிலை நாட்டாமல் ஆவேசமாக
கசப்பையும் அக்னிஅஸ்திரங்களையும் வெளிப்படுத்துகின்றன. பென்டகனின் போர்ப்பிரச்சாரத்தால் ஊக்குவிக்கப்பட்டு
அவர்கள் மக்களிடையே பயத்தையும் பீதி உணர்வையும் உருவாக்க முனைகின்றன.
சில கிறிஸ்தவ ஜனநாயக யூனியனினதும், கிறிஸ்தவ சமூக யூனியனினதும் மற்றும்
தாராளவாத ஜனநாயக கட்சியினதும் அரசியல்வாதிகளோடு இணைந்து பழைமைவாத பத்திரிகைகள் ஈராக்கில்
இருந்துவரும் பெரியம்மை நோய் கிருமிகள் (smallpox virus)
தொடர்பான ஆபத்துக்களை குறைத்து மதிப்பிடுவதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றன. இரகசிய
சேவைகள் தந்திருக்கும் புலனாய்வு தகவல்களை அரசு புறக்கணித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
பொதுமக்கள் பெருமளவில் போர் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்திய மறுநாள்
Frankfurter Allgemeine Sonntagzeitung
பத்திரிகை மத்திய அமைச்சரகம் ஒன்றிலிருந்து கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பரபரப்பான ஓர் செய்தியை
வெளியிட்டிருந்தது. ஜேர்மனியில் பெரியம்மை தாக்குமானால் 25 மில்லியன் மக்கள் இறந்து விடுவார்கள் எனவும் இந்தத்தகவல்
அரசாங்கத்திற்கு 2002 ஆகஸ்ட் 9 ஆம் திகதியே தெரியும் என்றும் ஆனால் அந்த தகவலை பொதுமக்களுக்கு தருவதற்கு
தவறிவிட்டதாகவும் அந்த பத்திரிகை மிகுந்த பரபரப்போடு அந்த தகவலை வெளியிட்டது.
இந்த செய்தி முழுவதுமே வெறும் பீதியை கிளப்பும் நடவடிக்கைதான். மத்திய சுகாதாரத்
துறையில் பணியாற்றும் தலைமை அதிகாரிகளுக்கு இரகசிய சேவைகள் விவகாரத்தில் முழுமையாக அனுபவமே இல்லை.
அம்மை ஊசிபோடும் திட்டங்களுக்காக 30 மில்லியன் யூரோக்களை நிதி ஒதுக்கீடாக பெறுவதற்காக இத்தகைய பேரழிவு
வரும் என்று கற்பனையாக அந்த இளநிலை அதிகாரிகள் வரவு செலவு குழுவிற்கு வழங்கிய அறிக்கையில் எழுதிவிட்டார்கள்.
பாதுகாப்பு வரையறையில் மிகக்குறைந்த அளவிற்கே மதிப்பிடப்படும் இரகசிய சேவை அறிக்கையை அடித்தளமாக
கொண்டு இந்த அறிக்கையை அவர்கள் எழுதியிருந்தார்கள். இது மிக பொதுவான ஆதாரங்களிலிருந்து எடுக்கப்பட்டது.
''இத்தகைய தகவல் ஒரு உறுதிப்படுத்தப்படாததும், சான்றாகவும் ஆகாது'' என்று
Süddeutsche Zeitung பத்திரிகை
விமர்சனம் செய்திருக்கிறது.
பழைமைவாத வட்டாரங்கள் மக்களை பயமுறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கின்றன
என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. ஈராக் சர்வாதிகாரிக்கு எதிராக கண்டனக் கணைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றின் உட்பொருள் மிகவும் பிற்போக்கானவை, நகைப்பிற்கு இடமானவை. இப்பத்திரிகைகள் ஜனநாயகத்தை
பெரும்பான்மை மக்களது விருப்பத்துடன் இணைத்து குழப்பக்கூடாது என்று எழுதியிருக்கின்றன. அரசாங்கங்கள் தங்களது
அரசியல் குறிக்கோள்களை செயல்படுத்துவதில் உறுதியுடன் நிற்க வேண்டும்; தாங்கள் ஆட்சிசெய்யும் மக்களது கருத்தை
பற்றி கவலைப்படக் கூடாது என்பதாக அந்தப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.
பெப்ரவரி 17 இல்
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை தனது முதல்பக்க தலையங்கத்தை ''தவறாக
புரிந்து கொள்ளப்பட்ட ஜனநாயகம்'' என்று தலைப்பிட்டு ஈராக் பிரச்சனை தொடர்பாக சமூக ஐனநாயக-
பசுமை கட்சி அரசாங்கத்திற்கு 70% மேற்பட்ட மக்கள் ஆதரவு தருகின்றனர். அதற்குப் பின்னர் இந்த கேள்வியை
அந்த பத்திரிகை எழுப்புகிறது. ''இவ்வளவு தெளிவாக வெளியிடப்பட்ட மக்களது கட்டளையை அரசு நிறைவேற்ற கடமை
பட்டிருக்கவில்லையா? பலர் இந்த வழியில் தான் பார்க்கின்றனர்'' என எழுதியிருக்கிறது.
அப்படியல்ல என்று அந்த பத்திரிகை சொல்கிறது. ''மக்களது விருப்பம் தான்'' ஜனநாயகம்
என பரவலாக கூறப்பட்டிருக்கின்ற விளக்கமானது, ''ஜனநாயகத்தின் படுமோசமாக சீரழிவாகும்'' என அது
எழுதுகின்றது. தான் எழுதியிருப்பதற்கு ஆதாரமாக பிரபலமான தத்துவ ஞானியை தனது பிரதான ஆதாரமாக அந்தப்பத்திரிகை
காட்டியிருக்கிறது. ''கிரேக்க மொழி சொல்லான ஜனநாயகத்தை அப்படியே அடிபிறழாமல் ஜேர்மன் மொழியில்
மொழிபெயர்ப்பதால் உருவாகும் ஆபத்தை கார்ல் பொப்பர் (Karl
Popper) ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். 'ஜனநாயகம் என்பது ஒருபோதுமே மக்களது விருப்பமல்ல,
அப்படியிருக்கவும் முடியாது; அப்படியிருக்கவும் கூடாது '' என அந்தப் பத்திரிகை எழுதியிருக்கிறது.
அந்தப் பத்திரிகையின் கருத்துப்படி ஜனநாயகத்தின் உள்ளடக்கமாக இருப்பது மக்களது
விருப்பமல்ல மாறாக ஒரு தனிமனிதனினதோ அல்லது குழு ஆட்சியினதோ சர்வாதிகாரமாகும். அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவது
என்பது எப்போதுமே ஒரு சிலரது விடயமே. ஜனநாயகத்தின் சிறப்புத்தன்மை என்னவென்றால் சிறிது காலத்தில் அதிகாரம்
பறிக்கப்படுகின்றது. அப்போதைக்கப்போது அரசாங்கத்தின் கொள்கைகள் மீது வாக்களிக்கின்ற சாத்திக்கூறு மக்களுக்கு
உள்ளது என அப்பத்திரிகை குறிப்பிடுகின்றது.
''இப்படி கூறுவதன் பொருள் பெரும்பான்மை மக்கள் விரும்பத்தக்கது என்று கருதுகின்ற
காரியத்தை அரசாங்கம் செய்யுமானால் அது அடிப்படையிலேயே தவறானது'' இவ்வாறு அந்த தலையங்கம் குறிப்பிடுகின்றது.
மக்களது கருத்துக்கு விரோதமாக தனது விருப்பை செயல்படுத்தும் அரசாங்கத்திற்கு
ஆதரவாக இந்த வாதம் எழுப்படுகிறது. இப்படித்தான் புஷ் அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தலையே
களவாடினார். இப்படிப்பட்ட கருத்துக்களின் காரணமாகத்தான் சமூக ஐனநாயக -பசுமை கூட்டணி அரசாங்கம் விரைவில்
அதன் பதவிகாலம் முடியும் முன்னர் அதன் பதவியை விட்டு விலகவேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. சமுகநல
ஒதுக்கீடுகள் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன்
வலதுசாரி குழுவினரின் பார்வையில் ஷ்ரோடர் அரசு வளர்ந்துவரும் மக்கள் நிர்பந்தத்தை தாக்குப்பிடிக்கும் நிலையில்
இல்லை என்பதுதான்.
''எந்த ஜனநாயக விலைகொடுத்தாவது அவர்கள் பதவியை விட்டுவிலக வேண்டுமென்று
நான் நினைக்கிறேன்'' என்று கிறிஸ்தவ சமூக யூனியன் தலைமை நிர்வாகி மைக்கேல் கிளொஸ் (Michael
Glos) மாத தொடக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் குழு கூட்டத்தில்
குறிப்பிட்டார். அதற்குப் பின்னர் அரசின் மீது வலதுசாரிகள் நடத்துகின்ற தாக்குதல்கள் வலிமை பெற்றிருக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈராக் மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம்
நடந்தது. அதை பயன்படுத்தி அரசிற்கு நிர்பந்தம் கொடுக்க கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும், கிறிஸ்தவ சமூக யூனியனும்
பாடுபட்டது. அதிபர் தனது மந்திரி சபையின் பிரகடனத்தை நியாயப்படுத்தி உரையாற்றிய பின்னர் கிறிஸ்தவ ஜனநாயக
யூனியனும், கிறிஸ்தவ சமூக யூனியனும் இரண்டு தீர்மானங்களை விவாதத்திற்காக தாக்கல் செய்தது. ஒரு தீர்மானம்
ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஒன்றுபட்டு நின்றாக வேண்டும் என்ற தலைப்பில் அமைந்தது. அமெரிக்காவுடன்
ஒன்றுபட்டு நிற்பதாக எட்டு ஐரோப்பிய அரசுகள் வெளியிட்ட பிரகடனத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டது, இந்தத்தீர்மானம்
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஷ்ரோடர் அரசு தனது நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு ஈராக்கிற்கு எதிரான போரில்
பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இரண்டாவது தீர்மானம் ஒரு வகையில் அதிக பொதுத்தன்மை கொண்டது. ஜேர்மனியின் வெளிநாட்டுக்
கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக எதிர்காலம் கேள்விக் குறியாகும் அளவிற்கு அரசு செயல்படுவதாக
இரண்டாவது தீர்மானம் குற்றம் சாட்டியது. இதன் மூலம் நாட்டின் உயிர் நாடியான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு
கொள்கை நலன்கள் அதன் செல்வாக்கு உலக அரங்கில் அதற்கு இருக்கும் மதிப்பு மரியாதை ஆகியவற்றிற்கு பாதிப்பை
ஏற்படுத்தியிருப்பதாக அந்த தீர்மானம் குற்றம் சாட்டியது.
அடுத்தநாள் இந்த விவாதங்கள் வரவிருக்கின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு வெள்ளோட்டம்
என்பது தெளிவாகத்தெரிந்தது. என்றாலும் அத்தகைய நடவடிக்கைக்கு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக
யூனியன் நாடாளுமன்றக் குழுவில் எதிர்ப்பு நிலவியது. வாக்கெடுப்பு நடத்தப்படும் முன்னர் ஏழு
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர்.
எனவே அரசு தனது பெரும்பான்மையை நிலைநாட்டியது ஆனால் ஷ்ரோடர் அரசை உறுதியற்றதாக்குவதற்கான முயற்சி
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் அணியினருக்கு எந்த அளவிற்கு அமெரிக்கா
ஆதரவு தருகிறது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இன்டர்நேஷ்னல் ஹெரால்ட் டிரிபியூன் கட்டுரையாளர் வில்லியம்
பாப் (William Pfaff) தெளிவுபடுத்தியிருக்கிறார்.
''அமெரிக்காவின் போர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷ்ரோடர் மன்னிக்கப்படமாட்டார்; அரசியல் ரீதியாக
ஜேர்மன் அதிபரை புஷ் நிர்வாகம் அழித்துவிட முயலும்'' என்று அந்தக் கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.
ஜேர்மனியில் ''ஆட்சிமாற்றம்'' தான் வாஷிங்டனில் உள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைகளில்
முன்னணியில் தற்போது இடம் பெற்றிருக்கின்றது போல் தெரிகின்றது.
Top of page
|