World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German elections: Social Democrats and Greens retain power with a narrow majority

ஜேர்மன் தேர்தல்: சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் குறைந்த பெரும்பான்மையுடன் அதிகாரத்தை பாதுகாத்துக்கொண்டனர்
By Ulrich Rippert and Peter Schwarz
24 September 2002

Back to screen version

பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடரினது சமூக ஜனநாயகக் கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் கூட்டரசாங்கமானது, மிகவும் குறைந்த ஆனால் தெளிவான பெரும்பான்மையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் அதிகாரத்தை பாதுகாத்துக்கொண்டனர்.

புதிய பாராளுமன்றத்தில் இவ் இரு கட்சிகளும் மொத்தமாக 306 உறுப்பினர்களை கொண்டிருப்பர். இது அறுதிப்பெரும்பான்மைக்கு தேவையானதைவிட 4 அதிகமானதுடன், பழைமைவாத எதிர் கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினதும் (CDU), கிறிஸ்தவ சமூகக் கட்சியினதும் (CSU) கூட்டுக் கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) மொத்த இருக்கைகளான 295 இனைவிட 11 அதிகமாகும். ஜனநாய சோசலிசக் கட்சி (PDS- முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச கட்சியான SED இல் இருந்து உருவாகியது) 2 ஆசனங்களை மட்டுமே பெற்றது. இதனால் அது 1990 இல் ஜேர்மன் மறுஇணைப்பின் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் தடவையாக தனது பிரிவை கொண்டிருக்காது. இவ்விருவரும் தனி உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சமூக ஜனநாயக கட்சியும் எதிர்க்கட்சியான யூனியனும் ஒரேயளவான வாக்குகளை, 38.5% இனை பெற்றிருந்தன. ஆகக்குறைந்தளவான பெரும்பான்மையான 8,864 வாக்குகளால் சமூக ஜனநாயக கட்சி பலமான கட்சியாக இருப்பதுடன், விஷேடமான ஜேர்மன் வாக்களிப்பு முறைகளால் பெற்ற 4மேலதிக ஆசனங்களுடன், பாராளுமன்றத்தில் பலம்கூடிய கட்சியாகவுள்ளது. ஆனால் கடந்த 1998 இன் தேர்தலுடன் ஒப்பிட்டால் சமூக ஜனநாயக கட்சி 2.4% வாக்குகளை இழந்துள்ளது. யூனியன் கட்சிகள் 3.4% வாக்கு அதிகரிப்பை பெற்றுள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சியினதும் பசுமைக் கட்சியினது பெரும்பான்மைக்கான முக்கிய காரணம் பசுமைக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளாகும். இது 1998 தேர்தலில் 6.7% ஆக இருந்தது தற்போதைய தேர்தலில் 8.6% ஆகியுள்ளது. இது ''சுதந்திர சந்தை'' தாராளவாத ஜனநாயகக் கட்சியை பின்தள்ளிவிட்டது. தாராளவாத ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் 1%ஆல் அதிகரித்துள்ளது. ஆனாலும் இது அவர்கள் பெறப்போவதாக கூறிய 18% இலும் மிகக்குறைவான 7.2% இனை பெற்றுள்ளது.

ஜனநாய சோசலிசக் கட்சியின் (PDS) வாக்குகள் 1998 இருந்த 5.1 இருந்து 4% ஆககுறைந்துள்ளது. இதனால் புதிய பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமான அந்தஸ்த்தை பெறுவதற்கான ஆகக்குறைந்த தகமையை (ஆகக்குறைந்தது மொத்தவாக்குகளில் 5% இனை, அல்லது 3நேரடி அங்கத்தவர்களை பெறாததால்) இழந்துள்ளது. அவர்கள் கிழக்கு பேர்லினில் இருந்து தேர்ந்தெடுக்கப்ட்ட 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளான குடியரசுக்கட்சி, ஜேர்மன் தேசிய கட்சி (NPD), Schill கட்சி (ஹம்பேர்க் நகர மாநகரசபை தலைவரான Ronald Schill இனால் தலைமை தாங்கப்படும் கட்சி) போன்றவை ஒவ்வொன்றும் 1% இற்கு குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. இம் மூன்றும் இணைந்து 1.8% இனை மட்டுமே பெற்றன.

வாக்களித்த மொத்தவாக்காளர்களின் தொகை 79.1% ஆகும். இது 1998 இலும் பார்க்க சற்று குறைவாகும்.

ஸ்ரோய்பர் தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை

இறுதியான தேர்தல் முடிவுகள் நீண்ட, பரபரப்பான இரவின் முடிவிலேயே வெளிவந்தது. வழமையாக தேர்தல் நாளன்று மாலை 6மணியளவிலேயே பெரும்பாலும் யார் வெற்றிபெறுவார் என்பது ஒரளவு உறுதியாக தெரியவந்துவிடும். இம்முறை, முடிவுகளை தீர்மானிப்பதற்கு முன்னர் பல மணித்தியாங்கள் வாக்கு எண்ணுதல் நடைபெற்றது. உத்தியோகபூர்வமான முடிவுகளானது முதலில் திங்கட்கிழமை அதிகாலை 4மணியளவிலேயே வெளிவந்தது.

நள்ளிரவுவரை தேர்தல் முடிவுகள் அங்குமிங்குமாக மாறிக்கொண்டிருந்தது. முக்கிய தொலைக்காட்சி நிலையங்களான ARD உம் ZDF உம் பாரியளவில் வித்தியாசப்பட்டுக் கொண்டிருந்தன. மாலை 6மணியளவில் ZDF இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் இடையில் நெருக்கமான போட்டியிருப்பதாக குறிப்பிடுகையில், ARD எதிர்க்கட்சிகள் 3% இனால் முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்டது.

இறுதி முடிவுள் தெளிவற்றதாக இருந்தபோதிலும், தொலைக்காட்சி கமராக்களின் பரிபாலனத்தில் எதிர்க்கட்சிகள் நீண்ட, களியாட்டத்துடனான கொண்டாட்டங்களை நடாத்திக்கொண்டிருந்தன. பவாரியா மாநிலத்தினை அடித்தளமாகக் கொண்ட கிறிஸ்தவ சமூகக் கட்சியினதும் (CSU) இன் தலைவரும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான எட்முண்ட் ஸ்ரொய்பர் (Edmund Stoiber) முதலில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினது (CDU) தலைவியான அங்கலா மெயர்க்கலுடன் (Angela Merkel) இணைந்து முதலில் பேர்லின் நகரிலும், பின்னர் மூனிச் நகரத்திலும் தொலைக்காட்சி கமராக்களின் முன்னர் தோன்றினார். இவ்விரு காட்சிகளிலும் விசர்த்தனமான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். மாலை கடந்து செல்கையில் சமூக ஜனநாயகக் கட்சியினது வாக்குகள் எதிர்க் கட்சியினதை அண்மித்துக்கொண்டிருக்கையிலும், ஸ்ரொய்பர் தனது கட்சி பெரும்பான்மையான கட்சியாகவும், பாராளுமன்றத்தில் உறுதியானதாகவும் இருப்பதாக குறிப்பிட்டு வந்தார். தொடர்ச்சியான முடிவுகள் இவ்விரு அறிக்கைகளும் பிழையானது என்பதை உறுதிப்படுத்தின.

யூனியன் கட்சிகளின் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு மத்தியில், 1998இல் பெற்றவாக்குகளை விட அது அதிகமாக பெற்றிருந்தபோதிலும் அதனது வரலாற்றில் இரண்டாவது மோசமான முடிவுகளை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை தேர்தல் விமர்சகர்கள் கவனிக்க தவறிவிட்டனர். கடந்த தேர்தலை தவிர கிறிஸ்தவ சமூகக் கட்சியினர் 1953 இல் இருந்து இடம்பெற்ற தேர்தல்கள் அனைத்திலும் 40% ஆன வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 1972 இலும் 1998 இலும் மாத்திரமே சமூக ஜனநாயகக் கட்சி கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தது.

திங்கட்கிழமை காலை ஸ்ரோய்பரின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டதும், அவர் வெற்றியாளனாக காட்டிக்கொண்டது தவறான விளக்கத்தினால் அல்ல என்பது தெளிவானது. ஆனால் தன்னை 4வருடங்களுக்கு எதிர்க்கட்சிக்கு தள்ளிவிட்ட வாக்காளர்களின் தீர்ப்பை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ZDF தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரோய்பர் ''சமூக ஜனநாயகக் கட்சியினதும் பசுமைக் கட்சியினது ஒரு சிறிய பெரும்பான்மையை அடித்தளமாக கொண்டு அரசாங்கமானது ஜேர்மனியின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க முடியாது'' எனவும், ஈராக் மீதான யுத்த திட்டம் தொடர்பாக ஷ்ரோடரிற்கும் புஷ் இற்கும் இடையாலான வெளிப்படையான முரண்பாட்டை சுட்டிக்காட்டி சிவப்பு-பச்சை கூட்டு என குறிப்பிடப்படும் அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லை'' எனக்குறிப்பிட்டார்.

ஸ்ரோய்பர் தொடர்ந்தும் ''இவ் அரசாங்கமானது நீண்டகாலம் நிலைக்கும் என நான் நம்பவில்லை எனவும், யூனியன் கட்சிகள் முக்கிய வெற்றி பெற்றுள்ளதாகவும், ஒரு வருடத்தினுள் இவ்வரசாங்கம் புதியதால் மீளமைக்கப்படும்'' எனவும் குறிப்பிட்டார். சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் காலத்திற்கு முன்னர் பதவிவிலக்கப்படுகையில் தான் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளதாக அவர் ARD இற்கு தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தை விரைவாக உறுதியற்றதாக்குவதற்கும், கலைப்பதற்கும் பகிரங்கமான எச்சரிக்கையாகும். பெரும்பான்மை இல்லாமை யுத்தத்திற்கு பின்னான ஜேர்மனியிலோ அல்லது மறு இணைப்பின் பின்னான 12 வருடத்திலோ இல்லாத ஒன்றல்ல. தற்போதைய தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் பெற்றுள்ள பெரும்பான்மையை விட குறைந்த பெரும்பான்மையுடன் கடந்த காலத்தில் யூனியன் கட்சியின் அரசாங்கங்கள் பிரச்சனையின்றி ஆட்சி புரிந்துள்ளன. முன்னாள் பிரதமரான கொன்ராட் அடினோரின் (Konrad Adenauer) யூனியன் கட்சியினர் 1 பெரும்பான்மை ஆசனத்துடனும், அண்மையில் கெல்முட் கோலின் கீழ் 4 பெரும்பான்மை ஆசனத்துடனும் அவர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர்.

ஸ்ரோய்பர் இவ்வளவிற்கு சுய மூர்க்கத்தனத்துடன் பேசுவதற்கு காரணம், அவரது ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டிற்கு பெரும் முதலாளித்துவத்திடமிருந்தும், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்தும் கிடைத்து ஆதரவாகும்.

தேர்தல் நாட்களுக்கு சற்று முன்னர், அமெரிக்க அரசாங்கமானது ஸ்ரோய்பருக்கு ஆதரவாக தலையீடு செய்தது. ஷ்ரோடரின் அரசாங்கத்தின் நீதி அமைச்சரான Herta Däubler-Gmelin, புஷ் இனை கிட்லருடன் ஒப்பிட்டதாக கூறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஷ்ரோடரின் அரசாங்கத்தின் மீது தாக்குதலை செய்தது. திங்கட்கிழமை புஷ் நிர்வாகம் பேர்லினில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் மீதான தனது எதிர்ப்பை தெளிவாக காட்டியது. திங்கட்கிழமை மாலை வெற்றிபெற்ற வேட்பாளருக்கு தனது வாழ்த்து செய்தியை அனுப்ப வாஷிங்டன் மறுத்ததை, Süddeutsche Zeitung பத்திரிகை ''வழமையான இராஜதந்திர முறையிலிருந்து விலகிய மற்றும் ஷ்ரோடரின் முகத்தில் அடித்தது போலாகும்'' என குறிப்பிட்டது.

திங்கட்கிழமை வார்ஷோவில் இடம்பெற்ற நேட்டோ கூட்டத்தில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மறுத்துவிட்டதுடன், கடந்தவாரங்களில் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்த திட்டங்களுக்கு ஷ்ரோடரின் எதிர்ப்பை தாக்கி, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் நஞ்சு ஊட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

முக்கிய வர்த்தக பிரதிநிதிகளும் இத்தேர்தல் குறித்து தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர். Spiegel செய்தி ஸ்தாபனமானது அதனை பின்வருமாறு தொகுத்து கூறியுள்ளது: ''ஒரு தனியார் வங்கியின் ஆய்வாளர் ஒருவர் ''இதைவிட மோசமாக ஒன்றும் வரமுடியாது'' எனவும் ''பங்கு சந்தையின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் இது ஒரு சிக்கலான நிலை'' எனவும் கூறியுள்ளதாக அது குறிப்பிட்டது. அவர் மேலும் ''எதிர்கால அரசாங்கத்தின் இச்சிறிய பெரும்பான்மையானது பலவீனமான பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்கும் எனவும், பங்குச்சந்தை நிலைமையை சீரழிக்கும் எனவும் குறிப்பிட்டார்''. திங்கட்கிழமை ஜேர்மன் பங்குச்சந்தையான DAX 5% இழப்பை சந்தித்தது.

யுத்தத்திற்கான பொது எதிர்ப்பு

சில கிழமைகளுக்கு முன்னர் முக்கிய கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஸ்ரொய்பர் வெற்றி பெறுவார் என கூறியிருந்தன. எவ்வாறிருந்தபோதிலும், ஷ்ரோடர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தவுடன் நிலைமை தீடீரென மாற்றமடைந்தது. சமூக ஜனநாயகக் கட்சிக்கும் பசுமைக் கட்சிக்கும் கிடைத்த வாக்குகள் புஷ் நிர்வாகத்தின் யுத்த கொள்கைக்கான ஜேர்மன் வாக்காளர்களின் எதிர்ப்பாகும்.

இவ்விடயம் தொடர்பாக ஷ்ரோடரின் எதிராளிகள் தெளிவாக உள்ளனர். ஸ்ரொய்பரின் உள்நாட்டு கொள்கைக்கான விஷேட நபரான Günther Beckstein என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் யூனியன் கட்சிகளுக்கான வாக்கு யுத்தத்திற்கான வாக்கா என கேட்டபோது, தேர்தல் நிலைமையில் கூடுதலாக முக்கியவிடயமாக இது உள்ளதாக முறையிட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியினதும் பசுமைக் கட்சியினதும் வலதுசாரி, இராணுவ கொள்கைகள் மீது வெறுப்படைந்து தமது முதுகைகாட்டிய உறுதியான வாக்காளர்களை யுத்தமானது, தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஷ்ரோடருக்கு சாதகமாக வாக்களிக்க செய்துள்ளது. அத்துடன் தேர்தல் முடிவுகளானது இரு தரப்பினரதும் முதலாளித்துவ சார்பான கொள்கைகள் மீதான மிகுந்த எதிர்ப்பையும் பிரதிபலித்துள்ளது. ஆனால் இது கூடுதலாக யூனியன் கட்சிகளுடனும், தாராளவாத கட்சியுடனும் பொதுவான ஒன்றிணைப்பை காட்டுகின்றது.

தேர்தல் தொடர்பான வரைபடமானது ஜேர்மனியின் சமூக சீரழிவினை எடுத்துக்காட்டுகின்றது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் மட்டுமல்லாது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சமூக துருவப்படுத்தலானது அதிகரித்துள்ளது.

வருமானம் அதிகமாகவும், வேலையின்மை குறைவாகவும் உள்ள தெற்கில் நேரடிவாக்குகள் கூடுதலாக யூனியன் கட்சிக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. பவேரியா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூக கட்சியானது 1998 உடன் ஒப்பிடுகையில் 11% அதிகரிப்பை பெற்றுள்ளது. இது அம்மாநிலத்தில் வழங்கப்பட்ட வாக்குகளில் 60% ஆனதை வென்றுள்ளது.

ARD தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலில் சமூக ஜனநாயகக் கட்சியினது உள்நாட்டு அமைச்சரான ஒட்டோ ஷில்லி (Otto Schily) பவேரியா மாநிலத்தில் வாக்கு மோசடிகள் நிகழ்ந்திருக்கலாம் என்ற சாத்தியப்பாட்டை எழுப்பியிருந்தார். இது கடந்த ஏப்பிரலில் இடம்பெற்ற மாநகராட்சி தேர்தலில் Dachau என்னும் நகரத்தில் பாரிய வாக்கு மோசடிகள் செய்ததாக கிறிஸ்தவ சமூக கட்சி (CSU) மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததை அடித்தளமாக கொண்டதாகும்.

தெற்கு ஜேர்மனியில் இரண்டாவது பாரிய மாநிலமான Baden-Württemberg ல் எதிர்பார்த்ததுபோல் யூனியன் கட்சிக்கு 43% ஆன வாக்குகள் கிடைத்தது. ஆனால் அங்கும் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களாகும்.

மேற்கின் ஏனைய மாநிலங்கள் சமூக ஜனநாயகக் கட்சியினது பிடியில் உள்ளபோதும், கிராமப்புறங்களில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி ஆதரவை பெற்றுள்ளது. பாரிய தொழிற்துறை பிராந்தியமான றுவர் (Ruhr) இல் கடந்த காலத்தில் சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சியிடம் உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்து. இங்கும் 1998 உடன் ஒப்பிடுகையில் சமூக ஜனநாயகக் கட்சி சிறியளவிலான இழப்பை சந்தித்துள்ளது. ஆனாலும் 50-60% ஆன வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர். கடந்த கால சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியலுடன் அதிருப்தி அடைந்திருந்தவர்களும் மீண்டும் அவர்களுக்கு வாக்களித்திருந்தனர். Hessen மாநிலத்தில், மாநில தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி கூட்டரசாங்கத்தை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி- தாராளவாதக் கட்சி அதிகாரமிழக்க செய்திருந்போதிலும், அங்கு மீண்டும் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி 50% இற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

பாரிய நகரங்களில் பசுமைக் கட்சி தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. அத்துடன் ஜேர்மனியின் இரண்டாவது வாக்கு முறையாலும் அவர்கள் இலாபமடைந்துள்ளனர். (ஒரு வாக்காளருக்கு இரண்டு வாக்குகள் உள்ளது, இம்முறையின்படி முதலாவது வாக்கு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டாலும், இரண்டாவது வாக்கு வேறு கட்சியை சேர்ந்தவருக்கும் வழங்கலாம்) ஈராக் மீதான யுத்தத்திற்கான எதிர்ப்பை காட்ட பாரிய நகரங்களில் உள்ள மத்திய தட்டினர் பசுமைக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் முக்கிய தேர்தல் பிரச்சார நபர் வெளிநாட்டு அமைச்சரான ஜோஸ்கா பிஸ்ஸராகும்.

பசுமைக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான Hans-Christian Ströbele இற்கு கிடைத்த வாக்குகள் குறிப்பிடப்படவேண்டியதாகும். அக்கட்சியின் வரலாற்றில் முதல்தரமாக பேர்லினின் தேர்தல் தொகுதி ஒன்றான Friedrichshain-Kreuzberg இல் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் பசுமைக் கட்சியின் பாராளுமன்ற குழுவில் கொசவோ மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு எதிராக வாக்களித்தவராகும். இவர் கட்சித் தலைமையால் நம்பிக்கையற்ற பட்டியலில் இடப்பட்டவராகும்.

கிழக்கு ஜேர்மனியில் Saxony மாநிலத்தையும், மற்றும் ஒரு சில கரையோர தொகுதிகளையும் தவிர வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மற்றய தொகுதிகள் சமூக ஜனநாயக கட்சிக்கு கிடைத்துள்ளது. கிழக்கில் சமூக ஜனநாயகக் கட்சி 4.6% ஆல் தனது வாக்கினை அதிகரித்து, 40% இனை பெற்றுள்ளது. இது மேற்கில் அது இழந்த 4% இற்கு எதிர்மாறானதாகும். யூனியன் கட்சிகள் பலமான கட்சியாகியுள்ள வடக்கில் 40% உடன் ஒப்பிடுகையில், கிழக்கில் 28% வாக்குகளையே பெற்றுள்ளன.

ஜனநாய சோசலிசக் கட்சி (PDS) மேற்கில் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள முடியாது போயுள்ளது. இது விதிவிலக்கல்ல. மேற்கில் அது 1.1% வாக்குகளையே பெற்றுள்ளது. இதேவேளை, கிழக்கில் தனது வாக்காளர்களில் 25% இனை இழந்துள்ளது. அங்கு 16.8% இனை பெற்றுள்ளது. அவர்களின் 300.000 வாக்காளர்கள் சமூக ஜனநாயக கட்சியை நோக்கி திரும்பியுள்ளனர். கிழக்கு ஜேர்மனியில் மாநில அரசாங்கங்களில் இணைந்து கொண்ட பின்னர், அது சமூக சேவைகளில் வெட்டுக்களை ஆதரித்துள்ளதுடன், ஒரு தீவிரமான சமூக சேவை வெட்டுகளுக்கு எதிரான கட்சி என்ற மரியாதையை இழந்துள்ளது. அது அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட இரு மாநிலங்களான Sachsen-Anhalt இலும் Mecklenburg-Vorpommern இலும் கூடிய இழப்பை சந்தித்துள்ளது.

ஒரு பிளவுபட்ட சமூகம்

இத்தேர்தல் முடிவுகள் ஏற்கனவே பிளவுபட்ட ஒரு சமுதாயத்தை காட்டுகின்றது. வாக்களிப்பால் பிரதிபலித்த பிராந்திய மற்றும் அரசியல் ரீதியாக முரண்பாடுகள், உள்வர்க்க முரண்பாடுகளை ஒரு ஒழுங்கற்ற முறையில் பிரதிபலிக்கின்றது. தேர்தல் பிரச்சாரத்தில் யுத்தம் பற்றிய கேள்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம், அவர்களால் நிறைவு செய்யமுடியாத குறிப்பிட்ட எதிர்பார்ப்புக்களை சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் உருவாக்கியுள்ளது. ஆனால் யுத்த எதிர்ப்பு மனநிலையானது இதனை அடக்குவது கடினமானது என்பதை காட்டும்.

கடந்த நான்கு வருடங்களின் நிகழ்வுகளின் பின்னர், முதலாளித்துவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் எடுக்கும் என்பதில் ஐயுறவு எதுவுமில்லை என்பதை காட்டுகின்றது. தேர்தல் அன்று மாலைப்பொழுது இரண்டு கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதிகள் ''ஒழுங்கு'' என்ற வார்த்தையை அதிகமாக பிரயோகித்தது தற்செயலானதல்ல. அவர்கள் குறிப்பிடுவதுபோல் ஒரு குறைந்த பெரும்பான்மை என்பது பாதிப்பானதல்ல, மாறாக இது பாராளுமன்ற பிரிவுகளை கட்டுப்படுத்த உதவும்.

திங்கட்கிழமை நிதியமைச்சரான Herta Däubler-Gmelin தனது இராஜினாமா தொடர்பான அறிக்கையை விடுத்தார். இது புஷ் நிர்வாகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாகும். இதேவேளை இராணுவ தலைவர் மாதிரியான சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளரான Franz Müntefering, சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற பிரிவின் ஒழுங்கினை கட்டுப்படுத்தும் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்புதிய கூட்டரசாங்கத்திற்கான திட்டமானது தேர்தலின் முன்னர் பிற்போடப்பட்ட நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டங்களின் மீது பாரிய வெட்டுக்களை கொண்டிருக்கும் என்பது தெளிவாகும்.



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved