World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan peace talks: the LTTE bows to international capital இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை: தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது By the Editorial Board தாய்லாந்தில் திங்கள் முதல் புதன் வரை இடம்பெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியல் வங்குரோத்தில் ஒரு புறநிலையான படிப்பினையை வழங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், அரசாங்க நிர்வாகத்துக்கும் கூட்டு அதிகாரிகளின் மாநாட்டு அறைக்குமான ஒரு நுழைவு சீட்டுக்காக, யுத்தத்தில் சளைத்துப் போன தமது துருப்புக்களை மாற்றிக் கொண்ட தேசிய விடுதலை இயக்கங்களின் நீண்ட வரிசையில் இணைந்துகொள்ளப் போவதாக உலகுக்கு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதானப் பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம் தமது முதலாவது உரையில், விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனான ஒரு கூட்டை விரும்புகின்றது எனப் பிரகடனம் செய்தபோது, அவர் பேச்சுவார்த்தைக்கான நாதத்தை ஒழுங்கமைத்தார். "இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள், தீவை ஒரு வெற்றிகரமான புலி பொருளாதாரத்துக்கு மாற்றியமைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார். "நாங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை வரவேற்கிறோம். அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு நாட்டின் பொருளாதார மீளமைப்புக்கான இலக்கில் அவர்களின் சம பங்காளிகளாக தமிழ் புலிகளை அணைத்துக்கொள்வதன் மூலம் எதிர்பார்த்ததை மிகவும் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும்." பொருளாதார வழக்கில், இந்த "புலி பொருளாதார" முறை மிகவும் பொருத்தமானதாகும்: அது ஆசியாவில் அமைக்கப்பட்டுள்ள மலிவு உழைப்பு மேடைக்கு, கழுத்தை வெட்டும் போட்டியின் ஊடாக வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதை குறிக்கின்றது. இலங்கையில், நாட்டை "மிகவும் போட்டிக்குரியதாக" ஆக்குவதன் பேரில் தனியார்மயத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட விபரங்களுடனான நிகழ்ச்சி நிரல் மற்றும் செலவு வெட்டுக்களின் அடுத்த கட்டம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தாலும், உலக வங்கியாலும் மற்றும் வர்த்தகத் தலைவர்களாகும் உருவாக்கப்பட்டுவிட்டது. எவ்வாறெனினும் முதலீட்டுக்கு பிரதான தடையாக இருந்து வருவது, பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளியதோடு ஆழம் கண்டுவந்த சமூக மற்றும் அரசியல் பதட்ட நிலைமைகளை உருவாக்கி விட்ட 19 வருடகால உள்நாட்டு யுத்தமாகும். கொழும்பு அரசாங்கத்துடன் பங்குவகிப்பதற்கான பாலசிங்கத்தின் அர்ப்பணிப்பானது, யுத்தத்துக்கு முடிவுகட்டுவதோடு சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மாற்றுத் திட்டங்களை அமுல் செய்வதற்காக மட்டுமல்லாமல் வளர்ச்சி கண்டுவரும் வறுமை, வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்குமான உறுதிமொழியாகும். பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் நற்சாட்சிப் பத்திரங்களை காண்பிப்பதற்காக, தமது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் அவர்களது சாதனைகளை சுட்டிக்காட்டுகின்றார். "நாங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக, சமூக பிணைப்பும் சட்டம் மற்றும் ஒழுங்கும் உறுதிசெய்யப்பட்ட ஒரு சக்திவாய்ந்த நிர்வாக அமைப்பை கட்டியெழுப்பியுள்ளோம்." "ஆகவே விடுதலைப் புலிகள், நிர்வாகத்திலும் அதேபோல் வடக்குக் கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியிலும் ஒரு முக்கிய முன்னணி பாத்திரம் வகிக்க வேண்டும் என்பது தீர்க்கமானதாகும்," என அவர் பூதாகரப்படுத்தினார். இந்தச் செய்தி தெளிவானதாக இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் எதிரிகளுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ள வழிமுறைகள் -அச்சுறுத்தல், கொடுமையான தடுத்துவைப்பு, சரீர ரீதியான வன்முறை மற்றும் கொலை- இப்போது அனைத்துலக மூலதனத்தின் பேரில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயக்கம் "சட்டம் மற்றும் ஒழுங்குக்காகவும்" "சமூக பிணைப்புக்காகவும்" இலங்கை அரசாங்கத்துடனும் அதனது அரச ஒடுக்குமுறை கருவியுடனும் ஒன்றன் பின் ஒன்றாக வேலை செய்யும். தாய்லாந்தின் சதாஹிப் கடற்படைத் தளத்தில் பாலசிங்கத்துக்கும் அரசாங்கத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளரான ஜி.எல்.பீரிசுக்கும் இடையில் அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் இடம்பெற்ற மூன்று நாள் பேச்சுவார்த்தைகளின் சில விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அரசாங்கம் பாலசிங்கத்தின் அர்ப்பணிப்பை நன்றியுடன் ஏற்றுக்கொண்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமின்றிய அதேவேளை ஒரு முடிவுக்கான அடிப்படை திட்டத்திலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல் இருந்துகொண்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் மேலும் மூன்று பேச்சுவார்த்தை அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, இறுதி அறிவிப்பானது உடனடி உதவியை கோரி சர்வதேச நிதி வழங்குனர்களுக்கு ஒரு கூட்டு வேண்டுகோளை விடுத்தது. அது ஒரு மதிப்பீட்டின்படி யுத்தத்தால் இடம்பெயர்ந்த 1.6 மில்லியன் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கும், வடக்கிலும் கிழக்கிலுமான புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்கும் உதவுவதற்காக ஒரு கூட்டு நடவடிக்கை படையை ஸ்தாபிப்பதாகவும் அறிவித்தது. "அது எல்லாவகையான திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கு மிகவும் சாத்தியமானது," என பீரிஸ் பிரகடனம் செய்தார். "இங்கு முரண்பாடுகள் கிடையாது. நாட்டில் ஒரு கூட்டுழைப்பு இருக்கின்றது," எனவும் அவர் குறிப்பிட்டார். பாலசிங்கம் இந்த ஏற்பாடுகளுக்கு முத்திரை குத்துவதற்காக புதன்கிழமை இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், விடுதலைப் புலிகள் ஒரு சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக தொடர்ந்தும் அழைப்பு விடுக்கமாட்டார்கள் என அறிவித்தார். "விடுதலைப் புலிகள் ஒரு தனி அரசின் கொள்கையுடன் இயங்குவதில்லை." "நாங்கள் ஒரு தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடன் இயங்குவோம். தாயகம் என்பது ஒரு தனியான அரசை அர்த்தப்படுத்தாது; அது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். விடுதலைப் புலிகள் சுதந்திரத்துக்காகப் போராடுகின்றார்கள் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதல்ல," என அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் அது ஒரு சுதந்திரத் தமிழ் அரசுக்கான தமது நீண்டகாலக் கோரிக்கையை கைவிடுவதற்கு தயாராகுவதாக விடுதலைப் புலிகளின் தலைமை சமிக்ஞை செய்தது. இது உண்மையில் பேச்சுவார்த்தைகளுக்கு சமூகமளிப்பதற்கான அதனது உடன்பாட்டில் தொக்கிநின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு தனி அரசு சம்பந்தமான விடயம் நிகழ்ச்சி நிரலில் கிடையாது என அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய பெரும் சக்திகளின் ஆதரவுடன் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளார். எவ்வாறெனினும், பாலசிங்கம் கோரிக்கையை வெளிப்படையாக நிராகரித்தமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வர்த்தகத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளதோடு இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டவரம்புக்குள் தம்மை ஒன்று சேர்த்துக்கொள்ள விரும்புகிறது என்பதை உலகுக்கு ஒலிபரப்புவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ஒன்றாகும். இந்த முன்னேற்றம் எல்லா எதிர்பார்ப்புகளையும் மிஞ்சுகிறது என குறிப்பிட்ட இலங்கை பேச்சுவார்த்தையாளர்கள் அவரது அறிக்கையை உடனடியாக வரவேற்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கில் தங்கியுள்ள விக்கிரமசிங்க, தாம் "உட்சாகமடைந்ததாக" தெரிவித்தார். சமாதான முன்னெடுப்புகள் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது விரைவில் முடிவடையும் என நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வர்த்தக வட்டாரங்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் வகையில், கடந்த வாரம் கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகப் பதிவில் எல்லா பங்குகளினதும் விலைச் சுட்டெண் 5.3 சதவீதத்தை எட்டியது. முதலாளித்துவ தேசியவாதத்தின் தர்க்கம் ஒரு சுதந்திர ஈழத்துக்கான கோரிக்கையை கைவிடுவதற்கான தலைமைத்துவத்தின் தீர்மானம், விடுதலைப் புலி உறுப்பினர்களின் சில பகுதியினர் மத்தியில் ஒரு காட்டிக்கொடுப்பாகக் கருதப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் நிச்சயமாக, கொழும்புக்கான விடுதலைப் புலிகளின் விட்டுக்கொடுப்புகள் அதனது தேசியவாத முன்னோக்கின் தர்க்க முடிவுகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஒரு தனியான தமிழ் ஈழத்துக்கான கோரிக்கையானது, இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட வேறுபடுத்தல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் இலக்காகிக்கொண்டிருக்கும் தமிழ் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளைக் கொண்ட பரந்த மக்களின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. மாறாக அது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கும் அனைத்துலக மூலதனத்துடன் அதனது சொந்த உறவுகளை ஸ்தாபித்துக்கொள்வதற்குமான சிறந்த நடவடிக்கையாக அதனது சொந்த அரசை நிறுவும் தமிழ் முதலாளித்துவவாதிகளின் இலட்சியங்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலாப அமைப்பையோ அல்லது இலங்கை மீதான ஏகாதிபத்திய அழுத்தங்களையோ சவால் செய்வதில்லை. அதனது இலக்கு எப்பொழுதும் ஒரு தனித் தமிழ் ஈழத்துக்கான ஏகாதிபத்திய ஆதரவை தேடுவதாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு பிரதி உபகாரமாக விடுதலைப் புலிகள் அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு தீவின் வடக்கு கிழக்கை மலிவு உழைப்பு சுவர்க்கமாக திறந்துவிட மிகவும் தெளிவாக உறுதியளித்துள்ளனர். மத்திய கிழக்கில் பீ.எல்.ஓ. அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. மற்றும் தென் ஆபிரிக்காவில் ஏ.என்.சீ. போன்ற ஏனைய முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களைப் போலவே, அனைத்துலக அரங்கில் தாக்கத்தை உண்டுபண்ணுவதற்கான விடுதலைப் புலிகளின் இயலளபும் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. 1990களின் நடுப்பகுதியில் இருந்து அது யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கும் கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு செல்வதற்குமான பெரும் வல்லரசுகளின் அதிகரித்து வந்த அழுத்தத்துக்கு உள்ளானது. இந்த தொடர்ச்சியான மோதல்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஒரு தடையாக இருந்து வந்தது மட்டுமல்லாமல், ஏற்கனவே ஸ்திரமற்றுள்ள இந்தியத் துணைக் கண்டத்தை மேலும் ஸ்திரமின்மைக்குள் இட்டுச் செல்வதற்கும் அச்சுறுத்தி வந்தது. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக, இலங்கையினுள் சமாதானத்துக்கான எந்தவொரு நகர்வும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த சிங்கள தீவிரவாத சக்திகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. பிரித்தானியாவாலும் நோர்வேயாலும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொடர் "சமாதான முன்னெடுப்புகள்" சிங்கள பேரினவாதிகளின் "காட்டிக்கொடுப்பு" எனும் கூச்சல்களால் தோல்வி கண்டது. எவ்வாறெனினும் செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவில் இடம்பெற்றத் தாக்குதல்களை பின்தொடர்ந்த அனைத்துலக அரசியல் சூழ்நிலையின் மாற்றம் இலங்கையினுள்ளும் சக்திகளின் சமநிலையை சரிசெய்தது. புஷ் நிர்வாகம் இந்தியத் துணைக்கண்டத்திலான அமெரிக்க நலன்களில் இடையூறுகளை சகித்துக்கொள்ளாது என பளிங்குத் தெளிவாக சுட்டிக் காட்டியது. இலங்கையின் அனைத்து பெரும் அரசியல் கட்சிகளும் இந்தப் போக்கினுள் விழுந்ததோடு ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு தமது உடன்பாட்டை சமிக்ஞை செய்தனர். ஐம்பது வருடங்களில் பிராந்தியத்தினுள் முதலாவது நேரடி ஏகாதிபத்திய இராணுவத் தலையீடு இதுவாகும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு நெருக்கவாரம் கொடுக்க முன்வந்ததோடு, ஒரு தனித் தமிழ் அரசு மீதான தமது எதிர்ப்பை வலியுறுத்தியது. வாஷிங்டனின் கண்களில், இந்த மிகச் சிறியத் தீவில் இடம்பெறும் யுத்தமானது பிராந்தியத்தில் அதனது பரந்த குறிக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக தெரிகின்றது. விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு சலுகையளிப்பதானது இந்தியத் துணைக்கண்டத்தினுள் விசேடமாக காஷ்மீரினுள் பிரிவினைவாத இயக்கங்களை மட்டுமே ஊக்குவிக்கும். இந்த சூழ்நிலைகளின் கீழ் இரு பகுதியினரும் யுத்தத்தை தொடர்வது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைமையைப் பொறுத்தவரையில், தனிமைப்பட்டு முற்றாக அழிந்து போவதே பதிலீடாக இருந்து வந்தது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே அவர்களை "பயங்கரவாதிகள்" என முத்திரையிட்டுள்ள அதேவேளை ஏனைய ஐரோப்பிய சக்திகள் ஜீவாதாரமான வெளிநாட்டு நிதி மற்றும் அரசியல் ஆதரவை வெட்டித்தள்ளியுள்ள போதிலும் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றன. கடந்த டிசம்பரில் பாலசிங்கம் கருத்து வெளியிடும் போது: "சங்கை ஊதிக் கெடுத்தது போன்று, பின் லேடன் எனும் ஒரு பைத்தியக்காரன் அமெரிக்காவுடன் மோதிக்கொண்டதால் சில நாடுகள் அவர்களது பயங்கரவாதிகள் பட்டியலில் எங்களையும் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்." யுத்தமானது இலங்கை வர்த்தகத்தில் ஒரு நம்பிக்கையற்ற பொருளாதார நிலைமையை உருவாக்கி விட்டிருந்தது. விடுதலைப் புலிகள் 2000 ஆண்டில் இலங்கை இராணுவத்துக்கு ஒரு தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க இராணுவ தோல்விகளை ஏற்படுத்தியது. இவை பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்வதை அவசியமாக்கியதோடு கடன் அதிகரித்துடன் அன்னிய செலாவணி நெருக்கடிக்குள்ளாகியது. 1948ல் சுதந்திரமைடைந்ததில் இருந்து முதற்தடவையாக 2001ல் பொருளாதாரம் பாதகமான நிலைமையை கண்டது. செப்டெம்பர் 11ன் பின்னர், கூட்டுத்தாபன கும்பல் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென சுட்டிக்காட்டியதோடு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் அவர்களது கோரிக்கையை நிராகரித்ததையடுத்து புதிய தேர்ல்களுக்காக நெருக்கியது. டிசம்பர் தேர்தலில் வெற்றிபெற்ற விக்கிரமசிங்க, பெப்பிரவரியில் விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார். ஆனால் முதலில் மேமாதம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிங்களத் தீவிரவாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்ததை அடுத்து மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறெனினும், கடந்த ஜூலையில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் புஷ்சை சந்தித்தபோது தமது முன்நடவடிக்கைகளுக்கான ஆணைகளைப் பெற்றுக்கொண்டார். அவர் 20 வருடங்களின் பின்னர் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த முதலாவது இலங்கைப் பிரதமராகும். தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகளை அறிவித்தையடுத்து, ஆகஸ்ட்டில் அவர் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதாக பிரகடனப்படுத்தினார். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு 12 நாட்களுக்கு முன்னர் விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகள் இலங்கையினுள் முன்கூட்டிய உயர்ந்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் 65,000 ற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதோடு, பெருந்தொகையானவர்கள் அங்கவீனர்களாகியுள்ளனர். 18 மில்லியன் முழு சனத்தொகையிலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதோடு விசேடமாக வடக்குக் கிழக்கில் உட்கட்டமைப்பின் பெரும்பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளது. ஆனால் ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுப்பது அவசியமானதாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள்
நடத்தப்படுவது சாதாரண உழைக்கும் மக்களின் -பொதுவில் சிங்கள, தமிழ் மக்கள்- மத்தியில் இருந்துகொண்டுள்ள சமாதானம்
சம்பந்தமான நிஜ எதிர்பார்ப்புகளை எட்டுவதற்காக அல்ல. அவர்களின் நோக்கம் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான
சுரண்டலை உக்கிரமாக்குவதற்காக ஆளும் கும்பல்களுக்கு மத்தியில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை மேற்கொள்வதேயாகும்.
"பிராந்திய சுயாட்சிக்கும்" "அதிகாரப் பகிர்வுக்குமான" முன்மொழிவுகள் முதலில் யுத்தத்தை தோற்றுவித்த அதே இனவாத
பதட்டநிலைமைகளை அழியாமல் இருக்கச் செய்யும் அதே வேளை தவிர்க்க முடியாத வகையில் எதிர்கால மோதல்களுக்கும்
வித்திடும். இலங்கையை "புலி பொருளாதாரத்துக்கு" மாற்றுவதற்கான திட்டமானது, கொழும்பிலும் சரி வடக்கிலும் சரி,
ஜனநாயகமுறையில் அமுல்படுத்தப்படமாட்டது, அமுல்படுத்தவும் முடியாது. |