World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
LTTE official issues death threat against SEP in Sri Lanka தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர் By M. Aravinthan தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உள்ளூர் உத்தியோகத்தரான செம்மனன், இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்குப் பிரதேசமான ஊர்காவற்துறை தீவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தலுக்கு சமமான அச்சுறுத்தலை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கில் சோ.ச.க. யின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதாகவும், கட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட கடற்தொழிலாளர் சங்கத்தையும் கைப்பற்றப் போவதாகவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை பிரதிநிதியான செம்மனன், செப்டெம்பர் 6ம் திகதி அம்பிகைநகர் கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க கூட்டத்தின்போது: "எமது வரலாற்றில் இந்த வகையிலான கட்சிகளை நாங்கள் அனுமதித்தது கிடையாது. இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது? வெகுவிரைவில் நாங்கள் நோயைக் கண்டுபிடிப்பதோடு அவசியமான மருந்தையும் கொடுப்போம். எந்தவொரு வியாதிக்கும் விடுதலைப் புலிகளிடம் மருந்து உண்டு" எனக் கூறினார். இந்தச் செய்தி பிழையற்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே மாதம் சென்னையில் ஒரு தேர்தல் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தபோது ஒரு பெண் தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இந்தக் கொலைக்கு பொறுப்புச் சொல்லாத அதேவேளை, தமது தலையீட்டை மறுக்கவும் இல்லை -தற்கொலைத் தாக்குதல்கள் அதன் பிரத்தியேக உரிமையைக் குறிக்கும் சின்னமாக இருந்து வருகின்றது. இந்த மரண அச்சுறுத்தலுக்கான உடனடிக் காரணம், கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கம், சங்கத்திலிருந்து ரூபா 15,000 ($US160) நிதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்க மறுத்ததேயாகும். இந்தப் பணத்தொகையானது பிரதேசத்தில் உள்ள ஒரு கடற் தொழிலாளியின் நான்கு அல்லது ஐந்து மாத ஊதியத்துக்கு சமமானதாகும். ஆகஸ்ட் 23ல் கூட்டுறவு சங்க தலைவர்களை விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை காரியாலயத்துக்கு அழைத்த செம்மனன், கன்னபுரத்துக்கு அருகாமையில் உள்ள மேற்கு வேலைனையில் இன்னுமொரு காரியாலயத்தை அமைப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அடுத்தநாள் கூடிய சங்கக் கமிட்டி, தொழிலாளர்களின் நலன்கள் தவிர்ந்த வேறு எந்த விடயத்துக்காகவும் அதனது நிதியை செலவு செய்ய சங்கத்துக்கு உரிமை கிடையாது என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு தொகையையும் வழங்காதிருக்க முடிவு செய்தது. அதனது பிரதிநிதி இந்தத் தீர்மானத்தை விடுதலைப் புலிகளின் காரியாலயத்துக்கு அனுப்பி வைத்தார். ஆகஸ்ட் 29ல் இன்னுமொரு கடிதத்தை அனுப்பிய விடுதலைப் புலிகள் இந்தத் தீர்மானத்தை நிராகரித்ததோடு செப்டெம்பர் 6ல் மனம்போன போக்கில் அங்கத்தவர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். சங்க உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் செய்ததைப் போலவே, சங்கக் கமிட்டியும் சமூகமளிக்காமல் இருக்க முடிவு செய்தது. சங்கப் பிரதிநிதி வேல்முருகன், துணைச் செயலாளர் குகதாசன் மற்றும் 102 மொத்த உறுப்பினர்களில் 25 உறுப்பினர்களும் மட்டுமே கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தனர். இந்தக் கூட்டத்தின் போது ஏனைய கடற் தொழிலாளர் சங்கங்கள் "பலவழிகளிலும் அவர்களுக்கு ஆதரவளித்ததாகக்" குறிப்பிட்ட செம்மனன், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்க மறுத்ததையிட்டு சங்கத்தின் கமிட்டியை விமர்சித்தார். பின்னர் இந்த சங்கம் "ஒரு வகையிலான கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக" தமக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்த அவர், நேரடியாக சோ.ச.க.வை தாக்கினார். "அந்தக் கொள்கை இலங்கை இராணுவத்தையும் ஏனைய அமைப்புகளையும் ஆதரிப்பதில்லை. அது தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கையாகும். இந்தக் கட்சி அம்பிகைநகர் கிராமத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமக்குத் தெரியவந்துள்ளது. எங்களை எதிர்க்கும் இந்த வகையிலான கட்சிகளுடன் எமக்கு அனுபவம் உள்ளது," என அவர் பிரகடனம் செய்தார். இதையடுத்து செம்மனன் ராஜீவ் காந்தியின் கொலையை சுட்டிக்காட்டியதோடு விடுதலைப் புலிகள் விரைவில் "நோயை கண்டுபிடிப்பதுடன்" "அவசியமான மருந்தையும்" கொடுப்பர் என எச்சரித்தார். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைப் பற்றி பேசும்போது: "நாங்கள் சோ.ச.க.வின் நடவடிக்கைகளைப் பற்றி வன்னியில் உள்ள எமது தலைவர்களுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததோடு அவர்களை (சோ.ச.க. உறுப்பினர்களை) தென் இலங்கைக்கு எத்திவிரட்டுவதாகவும் எம்மிடம் குறிப்பிட்டார்கள். எமது போராட்டத்தின் சக்தியின் காரணமாக உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தை எங்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு நெருக்கி வந்துள்ளன," என அவர் பிரகடனப்படுத்தினார். இறுதியாக செம்மனன், சங்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதிவழங்க வேண்டும் அல்லது சங்கத்தின் கமிட்டி மாற்றப்படும், ஆகவே அது விடுதலைப் புலிகளுக்கு அடிபணிய வேண்டும் எனக் குறிப்பிட்டார். அவர் செப்டெம்பர் 13ல் இன்னுமொரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியபோதிலும், சங்க உறுப்பினர்களானாலும் சரி விடுதலைப் புலிகளின் உத்தியோகத்தர்களானாலும் சரி யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. சோ.ச.க.வுக்கு எதிரான விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தரின் கடுமையான அச்சுறுத்தல்களும், கட்சி தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு எதிரான அவர்களது எதிர்ப்பும், விடுதலைப் புலிகள் ஒழுங்கு செய்துகொண்டுள்ள அரசியல் பாத்திரத்தையிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அரசாங்கம் - விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை செம்மனன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டது, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும், அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கி இரண்டு நாட்கள் கடந்த பின்னருமாகும். இன்று தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் தீவின் வடக்குக் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்காக அழுத்தம் கொடுப்பார்கள். பெரும் வல்லரசுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் பெறுபேறுகளால் இலங்கை அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளியுள்ளதாக செம்மனன் பூதாகரப்படுத்தினார். உண்மையாகவே அமெரிக்காவும், பிரித்தானியாவும் மற்றும் ஏனைய நாடுகளும் தீவில் தமது பொருளாதார மூலோபாய நலன்களுக்கு ஒரு தடையாக உருவெடுத்துள்ளதும் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்தியத் துணைக்கண்டத்தை மேலும் ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள அச்சுறுத்துவதுமான நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்காக, அரசாங்கம் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் நெருக்கவாரங்களைத் திணித்தன. எந்தவொரு முடிவினதும் உன்மையான திருப்பம் எதுவாக இருந்தாலும், அது தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் --பொதுவில் சிங்களம் மற்றும் தமிழ்-- மீதான அவர்களின் பரஸ்பரம் சுரண்டலை உக்கிரமாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட இலங்கை ஆளும் கும்பல்களுக்கிடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையாகவே இருக்கும் அதேவேளை அடிப்படை ஜனநாயக உரிமைகளில் மேலும் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும். தனது பங்கிற்கு சிறந்த சாதகமான கொடுக்கல் வாங்கல்களுக்கான பேச்சுவார்த்தையில் அவநம்பிக்கை கொண்டுள்ள விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அவசியமான எதையும் பயன்படுத்தத் தயாராக உள்ளனர். விடுதலைப் புலிகள் சோ.ச.க.வை இலக்கு வைத்தது இதுதான் முதற் தடவை அல்ல. 1998 ஜூலையில் விடுதலைப் புலிகள் சோ.ச.க.வின் நான்கு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுத்து வைத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைமை இரண்டு மாதங்களாக அந்த நால்வரும் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்கவோ அல்லது அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக ஒத்துக்கொள்ளவோ மறுத்து வந்தனர். சோ.ச.க. உறுப்பினர்கள், சோ.ச.க.வும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதனது சகோதரக் கட்சிகளும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக முன்னெடுத்த சக்திவாய்ந்த அனைத்துலகப் பிரச்சாரத்தை அடுத்தே இறுதியாக விடுதலை செய்யப்பட்டார்கள். கடந்த வார நடுப்பகுதியில் இடம்பெற்றக் கூட்டத்தில், செம்மனன் சோ.ச.க.வின் வேலைத்திட்டத்தின் வர்க்க சுபாவத்தையும் வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கான அதனது எதிர்ப்பையும் சுட்டிக் காட்டத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1983ல் யுத்தத்தின் ஆரம்பத்தில் இருந்து, சோ.ச.க.வும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட்டுக் கழகமும் தொழிலாள வர்க்கத்துக்கான ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டத்துக்காக போராடி வருகின்றது. அது கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களது கொலைகாரக் கொள்கைகளை எதிர்த்து வந்துள்ளதோடு, வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றுமாறும் அழைப்புவிடுத்து வந்துள்ள அதேவேளை தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்வதை எதிர்த்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. அதேநேரம், சோ.ச.க. விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டத்தையும் எதிர்த்து வந்துள்ளது. அது இந்தியத் துணைக்கண்டத்திலும் அனைத்துலக ரீதியிலுமான ஒரு சோசலிச குடியரசு ஒன்றியத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில், சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் ஐக்கியத்துக்காக உறுதியாகவும் சமரசமற்றும் போராடி வந்துள்ளது. சோ.ச.க. தமது அங்கத்தவர்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சறுத்தல்களை எதிர்க்கவும் கண்டனம் செய்யவும், தீவு பூராவும் அதனது நடவடிக்கைகளை தொடர்வதற்கும் அதனது அரசியல் முன்நோக்குக்காக சுதந்திரமாக பிரச்சாரம் செய்யவதற்குமான சோ.ச.க.வின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தவும் அனைத்து தொழிலாளர்களுக்கும், இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.
|