WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan political infighting continues as date is
set for peace talks
இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதி குறிக்கப்படும்போது அரசியல் உள்முரண்பாடுகள்
தொடர்கின்றன
By Nanda Wickremesinghe
31 August 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காகவும், வாக்களிக்கும்போது
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி ஒழுங்குகளுக்கு அப்பால் வாக்களிக்க அனுமதிப்பதற்காகவும் அரசியலமைப்பில்
சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவையின் நகர்வுகளோடு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஐக்கிய
தேசிய முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
இந்த மாற்றங்களுக்கு அவர் உடன்பட வேண்டுமென கோரியதோடு புதிய தேர்தலுக்கு வழியமைப்பதற்காக பாராளுமன்றத்தை
கலைப்பதாக அச்சுறுத்தியும் ஜனாதிபதிக்கு 10 நாள் இறுதி நிபந்தனையொன்றை விடுத்தார்.
இந்தக் கருத்து முரண்பாடுகளின் பின்னால் இருந்து கொண்டிருப்பது, நாட்டின் 19 வருடகால
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
சமாதானப் பேச்சுவார்த்தையின் தலைவிதி சம்பந்தமாக ஆளும் வட்டாரங்கள் கொண்டுள்ள அக்கறையேயாகும். விக்கிரமசிங்க
கடந்த டிசம்பரில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வாக்குறுதியளித்து அதிகாரத்துக்கு
வந்தபோதும் அவர் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கடுமையாக எதிர்த்து வரும் சிங்கள தீவிரவாதக் குழுக்களின்
ஒன்றிணைந்த பிரச்சாரத்துக்கு முகம்கொடுக்கின்றார்.
குமாரதுங்கவும் அவரது எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணியும் அரசாங்கத்தை
ஸ்திரமற்றதாக்குவதற்கு இந்த நிலைமையை சுரண்டிக்கொள்ளக் கூடும் என பிரதமர் பீதி கொள்ளுமளவுக்கு முழு
கொழும்பு ஸ்தாபனமும் சிங்கள பேரினவாதத்துக்குள் மூழ்கிப்போயுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி, குமாரதுங்க தனது
அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசியலமைப்பின் 70 வது பிரிவின் கீழ் உள்ளபடி பொதுத் தேர்தல் இடம்பெற்று ஒரு
வருடத்தின் பின்னர் -அதாவது டிசம்பர் 5ன் பின்னர்- பாராளுமன்றத்தை கலைக்க தயாராகிவருவதாக குற்றம் சாட்டுகிறது.
இந்த உடன்பாடு இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்பதே விக்கிரமசிங்கவின் தேவையாகும்.
அவரது இறுதித் தீர்மானம் குமாரதுங்கவை முன்கூட்டியே நெருக்குவதற்காகவும் மூன்று வருடத்துக்குள்
நாட்டை ஒரு மூன்றாவது பொதுத் தேர்தலுக்குள் தள்ளுவதாக அவரைக் குற்றம் சாட்டுவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது. அதே சமயம், பாராளுமன்றத்தை கலைப்பதாக அச்சுறுத்துவதன் மூலம், ஐ.தே.மு. தேர்தலொன்றுக்கு
முகம்கொடுப்பதை விரும்பாத எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் வழிக்கு வருமாறு
நெருக்குவாரம் கொடுக்கின்றது. பகைமையின் ஒரு பெறுபேறாக: விக்கிரமசிங்க இறுதி நிபந்தனையை தொடர்ந்தும்
அனுசரிக்காததோடு, குமாரதுங்க சமரசத்துக்கான சமிக்ஞைகளைக் காட்டும் அதேவேளை தனது அரசியலமைப்பு அதிகாரத்தில்
எந்தவொரு பலவீனத்தையும் ஏற்படுத்துவதை எதிர்த்து வருகின்றார்.
ஐ.தே.மு. அமைச்சரவை, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களை தொடர்ந்து
முன்னெடுப்பதற்கான தமது நோக்கத்தை புதன் கிழமை பாராளுமன்றத்தில் இறுதியாக அறிவித்தது. அது சட்டமாக்கப்படுமானால்,
18வது அரசியலமைப்பு திருத்தம் "ஜனாதிபதி ஒரு உறுப்பினராக அல்லாத அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்குமானால், பாராளுமன்றத்தால் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தைத்
தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை தடுக்கும். இந்த திருத்தம் கட்சி
ஒழுங்குகளுக்கு முரணாக வாக்களித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான எந்தவொரு நல்லொழுக்கம் சம்பந்தமான
நடவடிக்கையையும் தடுக்கும்.
விக்கிரமசிங்க தற்போது லன்டனில் இருந்துகொண்டுள்ள குமாரதுங்கவுக்கு தமது
கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக கால அவகாசம் வழங்குவதன் பேரில் செப்டம்பர் 3ம் திகதி ஒரு விசேட
அமைச்சரவையை கூட்டினார். திருத்தத்தை அமுல்படுத்துவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகியுள்ள
போதிலும் அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் கருத்துக் கணிப்புக்கு விட வேண்டுமா என்பதை நிச்சயிப்பதற்காக உயர்
நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. ஐ.தே.மு. தலைவர்கள் எதிர்க் கட்சியின் ஒரு
பகுதியினர் அரசியலமைப்பு திருத்தத்துக்கு வாக்களிப்பார்கள் என பகிரங்கமாகவே நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும்,
அதன் தோல்வி அரசாங்கத்துக்குள் நெருக்கடியையும் முன்கூட்டிய தேர்தலையும் உருவாக்கக் கூடும்.
குமாரதுங்கவுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை உக்கிரமாக்கும் அதேவேளை, விக்கிரமசிங்க
வீழ்ச்சி கண்டுவரும் நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதன் ஒரு முயற்சியாக யுத்தத்துக்கு முடிவு கட்டுவதை
அவசியமாகக் கொண்டுள்ள பெரு வர்த்தகர்களின் சக்திவாய்ந்த பகுதியினரோடு அணிதிரள்கின்றார். கூட்டுத்தாபனத் தலைவர்களுக்கு
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு அரசியல் தீர்வு
அவசியமாகியுள்ளது. இது ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்திலும் சமூக நிலைமைகளிலும் ஆழமான
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைமுறைக்கிடப்பட்ட ஒரு சமூக நலம் சம்பந்தமான மசோதா
நாட்டின் மிகவும் வறுமையான தட்டினரின் குறைந்த சமூக வருமானத்தில் மேலும் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது.
குமாரதுங்க ஐ.தே.மு.வின் இறுதி நிபந்தனையை நிராகரித்திருந்ததோடு அவர் தெளிவாக
தற்காப்புடன் இருந்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ஆகஸ்ட் 9ல் அரச ஊடகங்களுக்கு உரையாற்றுகையில், "இந்த
இக்கட்டான சூழ்நிலையில்" பாராளுமன்றத்தை கலைக்க தமக்கு உத்தேசம் கிடையாது எனக் குறிப்பிட்ட போதிலும்,
"தாய் நாடு" ஒரு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்குமானால் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்
அவர் எச்சரித்தார். எவ்வாறெனினும், அவர் இந்த விடயம் தொடர்பாக, இரண்டு வாரங்கள் கழிவதற்கு சற்று முன்னதாக,
ஆகஸ்ட் 19ல், தற்போதைய அரசாங்கம் அதனது பெரும்பான்மையை இழக்கும் வரையிலும் மற்றும் ஒரு பதிலீடு
இல்லாமல் போகும் வரையிலும் தாம் பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என பாராளுமன்றத்துக்கு ஒரு
எழுத்து மூலமான உறுதிமொழியை அனுப்பிவைத்திருந்தார்.
தற்போது விக்கிரமசிங்க பலம்பொருந்தியவராக இருந்து கொண்டிருப்பது, அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு நிச்சயமான திகதியை இறுதியாக
ஒழுங்கு செய்துகொண்டுள்ளது என்ற அதன் அறிவித்தலே என்பது மிகத் தெளிவான எடுத்துக்காட்டாகும். பேச்சுவார்த்தைகளை
முதலில் மே மாதம் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்த போதிலும் ஐ.தே.மு. உள்ளேயே இருந்து கொண்டுள்ளவர்கள்
உட்பட்ட சிங்கள பேரினவாதிகளின் பிரச்சாரத்தின் அழுத்தத்தின் பேரிலான அக்கறையினால் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முதலாவது சுற்று செப்டம்பர் 16-18ல் தாய்லாந்தில் இடம்பெறும்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களத் தீவிரவாதக் குழுக்கள் விடுதலைப்
புலிகள் மீதான அரசாங்கத்தின் தடையை நீக்குவதற்கான திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதோடு இந்தப்
பேச்சுவார்த்தைகளை ஒரு தேசத் துரோகமாகக் கருதுகின்றன. எவ்வாறெனினும் அரசாங்கம் தற்போது ஒரு மாதத்தின்
பின்னர் மீளாய்வு செய்வதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கியுள்ளது -இது பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிப்பதற்கான விடுதலைப் புலிகளின் முன் நிபந்தனைகளில் ஒன்றாகும்.
நேரடி அமெரிக்கத் தலையீடு
புஷ் நிர்வாகத்தின் தலையீடானது விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை பலப்படுத்துவதில் ஒரு
முக்கிய ஆதாரப்பொருளாக இருந்து வந்துள்ளது. விக்கிரமசிங்க, தசாப்தங்களின் பின்னர் இலங்கைப் பிரதமரின் முதலாவது
வெள்ளை மாளிகை விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னரே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கான திகதிகளை
அறிவித்தார்.
அரசாங்கத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு, கடந்த ஆகஸ்ட் 22ம் திகதி அமெரிக்க
அரச துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஆமிடேஜ் தமது இந்தியத் துணைக்கண்ட விஜயத்தின் ஒரு பாகமாக இலங்கைக்கு
விஜயம் செய்ததன் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டது. அவர் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர்
மாநாட்டில் பேசும்போது "அமெரிக்கா சமாதான முன்னெடுப்புகளில் ஒரு நிச்சயமான பாத்திரத்தைக் கொண்டுள்ளது"
எனக் குறிப்பிட்டார். அவர் வாஷங்டன் "இலங்கைக்கான அதனது அனுகுமுறைகளில்" மாற்றங்களை ஏற்படுத்திக்
கொண்டுள்ளதாகவும், "இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு
ஆதரவளிப்பதாகவும்" விளக்கினார்.
ஆமிடேஜ், யாழ்குடாநாட்டுக்கு ஒரு சங்கேத (குறியீடாய் அமைந்த) பயணத்தை மேற்கொண்டார்.
நேரடியான அச்சுறுத்தல் எதுவென்றால், வாஷிங்டன், அல் குவேடாவிடம் போலவே விடுதலைப் புலிகளுடனும் பேச்சுவார்த்தை
நடத்தாது என அவர் பிரகடனப்படுத்தியதாகும். இந்தக் கருத்து வெளிப்படையானதாக இருந்தது: விடுதலைப் புலிகள்
இந்தப் பாதையில் அடியெடுத்து வைக்காவிட்டால், அது "பயங்கரவாத இயக்கமாக" முத்திரை குத்தப்படுவதோடு இராணுவ
இலக்குகளுக்கு உள்ளாகும். "விடுதலைப் புலிகள் மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அவர்களால் மீண்டும் யுத்தத்துக்கு
செல்ல முடியாத பட்சத்தில் சமாதனப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள்," எனக் குறிப்பிட்ட அவர் அமெரிக்கா
கொழும்புக்கு இராணுவ உதவிகளைச் செய்யும் என்பதை சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் அமெரிக்கா விடுதலைப் புலிகள்
மீதான தடையை மீளப்புதுப்பித்தது.
ஆமிடேஜ் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்குமாறு குமாரதுங்கவையும் எதிர்க்
கட்சியையும் நெருக்கினார். அவர் குமாரதுங்கவின் ஆலோசகர் லக்ஷ்மன் கதிர்காமரிடம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்
கட்சிக்கும் இடையிலான "கூட்டுழைப்பின்" அவசியத்தை வலியுறுத்தினார். புஷ் நிர்வாகம் இலங்கை விடயங்களில் தலையீடு
செய்வது அழிவுகரமான யுத்தம் சதாரண மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் சம்பந்தமான எந்வொரு அக்கறையினாலும்
அல்ல. மாறாக, அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு பிரதான இலக்காக உருவாகியுள்ள
இந்தியத் துணைக் கண்டத்தில் அதன் நிலையை மேலும் பலப்படுத்துவதற்காகும்.
ஐ.தே.மு, கோஸ்டி மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க் கட்சியான பொதுஜன
முன்னணியின் செலவில் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் தமது நிலையை தாங்கிக்கொண்டது. ஒரு குழு குமாரதுங்கவின்
சகோதரர் அனுர பண்டாரநாயக்கவால் தலைமைதாங்கப்படுவதோடு சில முன்னாள் அமைச்சர்கள் ஜே.வி.பி.யினருடனும்,
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான பேரினவாத பிரச்சாரங்களோடும் அணிதிரண்டுகொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி மற்றும் ரிச்சட் பத்திரன உட்பட்ட ஒரு எதிர் குழு பேச்சுவார்த்தைகளுக்கு
ஆதரவளித்துக்கொண்டிருப்பதோடு தேசிய ஐக்கியத்துக்கான ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் தேவையைப் பற்றி அறிக்கைகள்
வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவானது கடந்த வருடம் பொதுஜன முன்னணியில் இருந்து வெளியேறி ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கு
வழிவகுத்த ஐ.தே.மு. அமைச்சர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.
குமாரதுங்க பொதுஜன முன்னணி கோஸ்டிகளுக்கிடையில் சமநிலையை உருவாக்குவதோடு
பிளவு ஏற்படுவதையும் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார். அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு
பரந்த ஆதரவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான போதிலும், அவரது ஆட்சேபனைகளும்
விமர்சனங்களும் அமைப்பு ரீதியில் ஜே.வி.பி.யால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரத்தோடு அணிசேர்ந்துகொண்டுள்ளன.
அவர் பேச்சுவார்த்தைகளுக்கான விடுதலைப் புலிகளின் பிரதான முன்நிபந்தனைகளான, தடை நீக்கமும் தீவின் வடக்குக்
கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை நிறுவுவதும் பேச்சுவார்த்தையின் மத்திய விடயங்களின் ஒரு பாகமாக மாத்திரமே
கலந்துரையாடப்பட வேண்டும் எனக் கோரினார்.
எவ்வாறெனினும் அரசாங்கம் தப்புவதற்கு வழியின்றி உள்ளது. இது எதிர்க்கட்சியான
பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், விக்கிரமசிங்கவின்
சொந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியடைந்துள்ள ஏழு உறுப்பினர்களுடன், அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியேறுவதற்கான
சாத்தியங்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் நடத்திய ஒரு இரகசிய கூட்டத்தையடுத்து அம்பலத்துக்கு வந்தது.
அதற்கும் மேலாக, பிரதமர் கூட்டணியின் ஒரு பிரதான பங்காளியான, நாட்டின் கிழக்குப்
பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஆட்சேபனைகளுக்கும்
முகம்கொடுக்கின்றார். விக்கிரமசிங்க ஸ்ரீ.ல.மு.கா. தலைவரும் கப்பல்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் எதிர்ப்பையடுத்து
முன்மொழியப்பட்ட 18வது அரசியல்சட்ட திருத்தத்தில் ஒரு பகுதியை கைவிட்டார். இந்தப் பகுதி சிங்களக் கட்சிகளால்
செல்வாக்குச் செலுத்தப்படும் தேசிய முதன்மைக்கான ஒரு சக்திவாய்ந்த பாராளுமன்றக் குழுவை ஸ்தாபிப்பதன் மூலம்
முஸ்லீம் சிறுபான்மையினருக்கு பிரதிகூலமாக அமையும் என ஸ்ரீ.ல.மு.கா குறிப்பிட்டது. ஹக்கீம் விடுதலைப் புலிகளுடனான
எந்தவொரு தீர்மானத்திலும் முஸ்லீம்களுக்கான அரசியல் பாத்திரத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும் என அரசாங்கத்துக்கு
அழைப்பு விடுக்கின்றார்.
ஐ.தே.மு. அரசாங்கம் விடுதலைப் புலிகளின் முன்நிபந்தனைகளை வழங்குவதில் தோல்விகண்டதையிட்டு
அதிருப்தியடைந்துள்ள பல தமிழ் கட்சிகளின் ஆதரவை அது தக்கவைத்துக்கொள்ளும் எனக் கூறுவதற்கும் அங்கு உத்தரவாதம்
கிடையாது. விடுதலைப் புலிகள் 18வது அரசியல் திருத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு
அவசியமானது எனக் கூறுவதன் மூலம் குமாரதுங்கவுக்கு எதிராக விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றனர். ஆனால் இந்த இயக்கம்
தனது சொந்த பிரிவுகளால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கடந்த மாதம் விடுதலைப் புலிகளின் ஒரு உயர்மட்டத் தலைவரான
கரிகாலன், வடக்கும் கிழக்கும் தமிழர்களுக்கு பிரத்தியேகமாக சொந்தமானது --பிராந்தியத்தில் முஸ்லீம்களுக்கு உரிமைகள்
கிடையாது என்பதை உணர்த்தி-- என கருத்து வெளியிட்டதை அடுத்து எந்தவொரு விளக்கமும் இன்றி சக்திவாய்ந்த முறையில்
பதவியிறக்கப்பட்டார்.
இந்த எல்லாவிதமான அரசியல் விரோதங்களும், நாட்டின் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம்
செய்வதாக கூறிக்கொள்பவர்கள் உட்பட்ட அனைத்து பெரும் கட்சிகளதும் அரசியலின் பிற்போக்கு இனவாத
கொள்கையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. செப்டம்பர் நடுப்பகுதியில் தாய்லாந்தில் இடம்பெறவுள்ள
பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகள், ஒரு தொகை அருவருக்கத்தக்க சூழ்ச்சிகளாலும் கொடுக்கல் வாங்கல்கள்
மற்றும் உள் முரண்பாடுகளாலும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் ஆளும் கும்பலின் ஒரு பகுதியை மற்றைய கும்பலின் செலவில்
பலப்படுத்திக்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளன.
See Also:
இலங்கையின்
அரசியல் ஸ்திரமற்ற நிலைமை உடனடியான புதிய தேர்தலுக்கான அச்சுறுத்தலை விடுக்கின்றது.
இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான
கால அட்டவணையில் பல மாதகால தாமதம்
Top of page
|