World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Candidates debate on German TV: Schröder and Stoiber advance similar right-wing policiesவேட்பாளர்களுக்கு இடையேயான தொலைக்காட்சி விவாதம்: ஷுரோடரும், ஸ்ரொய்பரும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வலதுசாரி அரசியலையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்By Peter Schwarz ஞாயிறு மாலையில் முதன் முறையாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு விவாதத்தில் இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் சந்தித்துக் கொண்டனர். பிரதமர் ஹெகார்ட் ஷுரோடரும், அவருடைய போட்டியாளருமான எட்முன்ட் ஸ்ரொய்பரும், தனியார் தொலைக்காட்சி சேவைகளான RTL, SAT-1 போன்றவற்றின் இரு நிருபர்களாலும் மாறி மாறி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான 75 நிமிட நிகழ்சியில் கலந்து கொண்டனர். இவ்விவாதமானது ''பொறி பறக்கும் வசனங்கள்'', ''ஆட்சிக்கான போலியான நடிப்புகள்'' போன்றவை உள்ளடக்கியிருக்கும் என செய்தி நிறுவனங்களால் மிகவும் கவர்ச்சிகரமான தலைப்புச் செய்திகளை வெளியிட்டிருந்தன. தொலைக்காட்சியின் அனைத்து சேவைகளிலும் அரசியல் வல்லுனர்களின் கருத்துப்பரிமாற்றங்களே இடம் பெற்றன, அத்துடன் கருத்து கணிப்பாளர்கள் மேலும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் விவாதங்களும் குறிப்பாக இப் பேச்சுக்களில் யார் வெற்றி பெறுகிறார் என்பதாகவே இடம் பெற்றன. ZDF எனும் தொலைக்காட்சி அதனது சேவையில், ''ஒரு மத்தியஸ்தர்'' என தலையங்கமிட்ட நிகழ்ச்சியில் இதனை ஒரு மல்யுத்த போட்டியாளனை பரீட்சித்ததைப் போன்று செய்ததேயன்றி, ஒரு அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்த தொலைக்காட்சி நிறுவனங்களில் இடம் பெற்ற பேச்சு விவாதங்கள், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெற்றவற்றை முன்னுதாரணமாக கொண்டிருந்தன. இதே முறையையே அந்நிறுவனங்கள் இறுதி வரைக்கும் கடைப்பிடித்தன. ஜேர்மனியின் பிரதமர் அமெரிக்காவை போல் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படாததால் இதுவரையில் ஜேர்மனியில் இப்படியான நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கவில்லை. செப்டம்பர் 22ம் திகதி தேர்தலில், மக்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வாக்களிப்பர், அவர்களே பின்னர் பிரதமரை தெரிவு செய்வர். இந்த தெரிவிற்கு வழமையாக இரண்டு அல்லது அதற்கும் மேலான கட்சிகள் தேவை. ஏனைய கட்சிகள் இந்த தொலைக்காட்சி கலந்துரையாடலுக்கு அனுமதிக்கப்படவில்லை. FDP இதற்கு எதிரான ஒரு நெருக்குவாரத்தை கொடுத்திருந்தபோதிலும் அது அனுமதிக்கப்படவில்லை. இவ்விவாதம் அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை நிரப்ப முடியாமல் போய்விட்டது. வேட்பாளர்களுக்கு, அவர்கள் மிகவும் ஒரு குறிப்பிட்ட விடயத்தை பேசுவதற்காக ஆகக் கூடியது மூன்றரை நிமிடங்கள்தான் வழங்கப்பட்டன, அதில் அவர்கள் தயார்ப்படுத்திய, அனேகமாக தேர்தல் போட்டிக்கான சுலோகங்களையே முன்வைத்தார்கள். உண்மையான சர்ச்சைக்குரிய விடயங்கள், புதிய நிலமைகள் மற்றும் அவற்றிற்கான விபரங்கள் போன்ற எவற்றையுமே அவர்கள் குறிப்பிடவில்லை. 15 மில்லியன் மக்கள் இந்த ஒளிபரப்பை பார்வையிட்டாலும், தேர்தல் விளைவுகளை இது மிகவும் சிறிய அளவே பாதிக்கும். தேர்தலில் பங்குகொள்ளாது விடுவோரின் அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் இலக்குடன் இது தயாரித்து அரங்கேற்றப்பட்டு இருப்பினும், அதைக் கட்டுப்படுத்த முடியாமலே உள்ளது. நீண்ட காலமாக வாக்காளர்களின் நீண்ட கால அனுபவத்தை இவ் ஒளிபரப்பு சேவையே போதுமானவரை நிரூபித்துள்ளது. அதாவது, இவ்விரு முக்கியமான வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதை மேலும் இது தெளிவுபடுத்தியது. ஷுரோடருக்கும், ஸ்ரொய்பருக்கும் இடையேயான கொள்கை சம்பந்தமான உள்ளடக்கத்தின் வித்தியாசமானது அவர்களுடைய ஒலிக்கும் தொனியில் மட்டுமே உள்ளன. பிரதமராக வரவிரும்பும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைவர் சில விடயங்களை இடதுசாரி நிலையிலிருந்து முன்வைக்கையில் சமூக ஜனநாயகக் கட்சி மேலும் அதிகமாக வலதுசாரித் திருப்பத்துக்கு போய்விட்டிருந்தது. ஷுரோடர் அரசாங்கம் முடிவெடுத்த, இலாப வெற்றியீட்டாளர்களுக்கான இலவச வரிக் கொள்கை மற்றும் பெரிய நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் வரிகளை சேமித்துக் கொள்ளுவதற்கான சீர்திருத்த நடவடிக்கை போன்றவற்றை ஸ்ரொய்பர் விமர்சித்தார். இவ் விமர்சன விவாதங்கள் சற்று மும்முரமாகி வார்த்தைகள் சூடேறியதும், இவ் வித்தியாசங்கள் பின்னர் இரு பக்கத்திலுமான சில வரையறுக்கப்பட்ட புரிந்துணர்வு நிலமைகளுக்குள் கையாளப்பட்டன. சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் இணைந்த ஒரு பெரிய கூட்டரசாங்கத்துக்கான சுமுகமான நிலமைகளைப் பற்றி பேசியதும், அவ்விரு அரசியல்வாதிகளும் அதை நிராகரித்தனர். ஆனால் இந் நிராகரிப்பு காரணத்துக்கான உள்ளடக்கம் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதையே அப்பேச்சு தெரியப்படுத்தியது. ஷுரோடர் குறிப்பிடுகையில், ஜனநாயக சோசலிச கட்சியைத் (PDS- முன்னாள் ஸ்ராலினிச கட்சி) தவிர ஜேர்மன் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும், ''அடிப்படையில் ஒன்றுடன் மற்றொன்று கூட்டரசாங்கம் அமைக்க தகுதியானதே'' எனத் தெரிவித்தார். அத்துடன் அவர் பசுமைக் கட்சியுடன் தொடர்ச்சியாக கூட்டரசாங்கம் அமைக்கும் விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார். பெரிய கூட்டரசாங்கம் அமைப்பதில் உள்ள அபாயம், அதாவது ''எமது நாட்டில் தீவிரவாதம் வளர்ச்சியடையும்'' என்பதன் காரணத்தால்தான் அதை நிராகரிப்பதாக ஸ்ரொய்பர் விளக்கினார். ''நான் இந்த நாட்டில் ஒரு ஜேர்மன் Pim Fortuyn (கொலன்டில் கொலை செய்யப்பட்ட வலதுசாரி) வருவதை அல்லது திடீரென ஒரு தீவிரவாத அரசியல்வாதியின் ஆத்திரமூட்டல் நடவடிக்கை தோன்றுவதை விரும்பவில்லை. ஏனெனில் ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு உண்மையான எதிர் கட்சி இல்லாமையினால் ஏற்படும் அதிருப்திதான் இப்போக்குகளுக்கு காரணமாகும்'' எனக் குறிப்பிட்டார். ஈராக்கில் இராணுவத் தலையீடு ஈராக்குக்கு எதிரான இராணுவத் தலையீடு பற்றிய கேள்வியில் மிகவும் கூர்மையான வித்தியாசங்கள் தோன்றியுள்ளன. இருப்பினும் இக்கேள்வியிலும் கூட ஆரம்பத்தில் இருந்ததை போலல்லாது ஷுரோடருக்கும், ஸ்ரொய்பருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கதல்ல. ஷுரோடர் தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரிவிக்கையில், அதாவது, ஈராக்குக்கு மேலான இராணுவத் தலையீடு ஒரு பிழை என அவர் கருதுவதாக குறிப்பிட்டார். எனவேதான், ''எனது தலைமையின் கீழ் ஜேர்மனியின் உதவியும் கிடைக்க மாட்டாது'' எனக் கூறிய அதே சமயம் அதற்கான பின்பக்க கதவையும் திறந்து விட்டிருக்கிறார். ''சதாம் ஹுசைனை அகற்றவேண்டும் என நாம் விரும்புகின்றோம் எனக் கூறுகின்றனர். சர்வதேச அவதானிகள் நாட்டுக்குள் போவதற்காக நாம் அழுத்தம் கொடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்த அரசியல், இந் நேரத்திற்கான நிலைமைகளின் கீழ் பிழையானது'' எனக் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதை வேறுவார்த்தைகளில் கூறுவதானால், யுத்தம் வேறு காரணங்களின் அடித்தளத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. ''சர்வதேச அவதானிகள் நாட்டுக்குள் போவதற்காக நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்பதனூடு ஷுரோடர் ஒரு ஜேர்மன் பிரதிநிதியையும் அங்கே அனுப்புவதற்கு விருப்பம் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவிலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கே ஆளும் தட்டினரில் ஒரு பகுதி, ஈராக் அரசாங்கத்தை அழிப்பதற்கான அமெரிக்காவின் இந்த கொள்கையால் புஷ் அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தனிமைப்பட்டு விடும் என அச்சம் அடைந்துள்ளனர், எனவே யுத்தத்துக்கான வேறு ஒரு பொருத்தமான சாக்குப் போக்கை தேட வேண்டி உள்ளது. ஷுரோடருடைய காரணங்களை ஸ்ரொய்பர், இவை ஒரு ''பொறுப்பற்றதாக'' உள்ளது என கண்டித்துள்ளார். எவர் ஒருவர் ''மிக தேவையற்று நடைமுறைச்சாத்தியப்பாட்டை நிராகரிக்கின்றாரோ, ''அவர் சதாம் ஹுசைனுக்கு அழுத்தம் கொடுப்பதை ஐக்கிய நாடுகள் சபை கைவிடுவதற்குமான'' காரணமாக முன் வைக்கிறார். அதே சமயம் ஸ்ரொய்பர் குறிப்பிட்டதாவது, ''ஜேர்மனியின் எந்த பிரதமரும், அவர் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து வந்தால் என்ன அல்லது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அல்லது கிறிஸ்தவ சமூக கட்சியிலிருந்து வந்தால் என்ன ஒரு இராணுவ முன்னெடுப்பை ஒருபோதும் எடுக்கவும் இல்லை எடுக்கப் போவதும் இல்லை. இவ் விடயம் குறித்து எதுவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது''. மேலும் ''ஒரு இராணுவ பிரயோகத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு நாம் இருவரும் முயற்சிப்பதாக'' அவர் ஒத்துக் கொண்டார். ஷுரோடர் மற்றும் அவருடைய கூட்டான பசுமைக் கட்சியின் வெளிநாட்டு அமைச்சரான ஜொஸ்கா பிஷ்ஷர் போன்றோருடைய வெளிநாட்டு அரசியலானது, அவர்களுடைய முன்னோடியான (கிறிஸ்தவ ஜனநாயக கட்சி -CDU) கெல்மூட் கோல் மற்றும் Hans-Dietrich Genscher என்பவர், Klaus Kinkel (இருவரும் தாராளவாதக்கட்சியை-FDP- சேர்ந்தவர்கள்) போன்றோர்கள் முன்னெடுத்தையே தொடருவதை ஸ்ரொய்பர் மிகவும் உணர்வுபூர்வமாக அறிந்திருந்தார். அரசாங்கத்திற்குள் பிஷ்ஷர் முதன் முதலில் பதவியேற்கையில் அவர் பசுமைக் கட்சி வெளிநாட்டு கொள்கை என்பது ஒன்றும் கிடையாது, மாறாக ஜேர்மன் வெளிநாட்டு கொள்கையே உண்டு என அவர் கூறினார், இதுதான் அவர்கள் முன்வைக்கும் வேலைத் திட்டமாகும். ஜேர்மன் மறுஇணைப்புக்கு பின்னால் ஜேர்மனியின் வெளிநாட்டு அரசியல் மேலும் மேலும் அமெரிக்காவில் தங்கியிருப்பதில் இருந்து விலகி ஒரு சுயாதீனமான ஏகாதிபத்திய நலங்களை விஸ்தரிப்பதை கொண்டிருந்தது. இது ஒரு சர்வதேச இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க கூடிய மிகவும் பிரதானமான முன்நிபந்தனைகளை அதற்கு வழங்கியது. இதைப் பொறுத்த மட்டில், கெல்முட் கோல் அரசாங்கம் பதினாறு வருடத்தில் அடைய முடியாததை ஷுரோடர் அரசாங்கம் அதனது நான்கு வருடத்திற்குள் நிறையவே பெற்றுக் கொண்டுள்ளது. சர்வதேச ரீதியில் படைகளை விஸ்தரிப்பதற்கான செலவை அது 10 மடங்காகவும், 1998 முதல் 178 மில்லியன் யூரோவிலிருந்து 2002 க்குள் 1,7 பில்லியன் யூரோக்களாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு ஷுரோடர் ஆகஸ்ட் மத்தியில் Süddeutschen Zeitung எனும் பத்திரிகைப் பேட்டியில் ஸ்ரொய்பருடன் நடத்திய காரசாரமான ஒரு பேச்சில் பெருமைப்பட்டுக் கொண்டார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி வேறு எந்தவொரு நாட்டையும் விட அதனது துருப்புக்களை மிக அதிகளவில் வெளிநாடுகளில் நிறுத்தி உள்ளது. ஷுரோடர் விமர்சிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் யுத்ததுக்கான திட்டத்தை இந்த அரசியல் அடித்தளத்தில்தான் விளங்கிக் கொள்ள முடியும். இவை ஏதோ சமாதானத்துக்கான காதல் மற்றும் அமைதிப் போக்கு போன்றவற்றின் உணர்வுகளை மீளக் கொண்டு வருவதைக் குறிக்கவில்லை, மாறாக ஜேர்மனி எதிர்காலத்தில் ஒரு சுயாதீனமான ஏகாதிபத்திய நலனையும், அதன் உணர்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியாகும். ஷுரோடர் கூறும் ''ஜேர்மன் பாதை'' எனும் வார்த்தை பிரயோகத்தின் விளக்கத்தை இதனுடன்தான் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். ஸ்ரொய்பர் பிரதமராக வந்தால், அவர் இதே வழியைத்தான் முன்வைப்பார். ஜேர்மன் இராணுவத்தின் நடவடிக்கைகளை உயர்த்துவது என்பது அவர்களின் தற்போதைய தேர்தல் வேலைத்திட்டத்தின் மிகவும் ஒரு மத்தியமான புள்ளியாகும். வேலையில்லாத் திண்டாட்டம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய இவர்களுடைய நிலைப்பாட்டில் ஒலிக்கும் ஒரேமாதிரியான பண்பு மிகவும் ஒரு விசேடமானதே. விவாதத்தில் ஷுரோடருடரான வாக்களித்தபடி வேலையில்லாதோரின் எண்ணிக்கையை 3,5 மில்லியனாக குறைத்துக்கொள்வில்லை என ஸ்ரொய்பர் குறிப்பட்டார். இதற்கான ஸ்ரொய்பரின் பதிலும் ஷுரோடருடைய அரசியலுடன் மிக நெருக்கமாக உள்ளது. அதாவது மேற்படி வரி மற்றும் சமூக சேவைகளின் குறைப்புகளினூடு நிறுவனங்கள் ஒரு திட்டவட்டமான மலிவான கூலியுழைப்பையே கோருகின்றார். Hartz- ஆணைக்குழு எனும் திட்டத்தின் மத்திய புள்ளி குறைந்த கூலியுழைப்புக்கான ஒரு பெரிய பட்டாளத்தை உருவாக்குவதுதான் என ஷுரோடர் தெரிவித்தார். வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் வேலையை அவர்கள் மறுக்கும் பட்சத்தில், நேரடியாகவே அவர்கள் வேலை வழங்கும் காரியாலயத்திலிருந்து அதற்கான ஒரு நிறுவனத்துக்கு வேலைக்காக அனுப்பப்பட்டு, மேலும் அங்கே அவர்களுக்கு அதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மற்றவர்கள் "Ich-AG" (சுய நிறுவனம்) எனும் அரசால் பராமரிக்கப்படும் நிறுவனங்களுக்குள் சேர்க்கப்பட்டு, உதாரணத்துக்கு நவீன மார்க்கட்டுகளில் பொருட்களை தட்டுக்களில் அடுக்கும் வேலைகளுக்காக அனுப்பப்படுவர். ஆனால் இவை இறுதியில் வேலையில்லைத் திண்டாட்டத்தை தீர்க்கப் போவதில்லை, மாறாக ஒழுங்கு முறையான வேலை நிலமைகள் மலிவான கூலியுழைப்பு எனும் ஒழுங்கற்ற நிலமைகளால் பிரதியீடு செய்யப்படும். தொழிலாளர் இயக்கங்கள் கடந்த பத்து வருடங்களில் போராடிப் பெற்றுக் கொண்ட சமூக வசதிகள் போன்றவை குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்படவுள்ளன. வேலை வழங்கும் நிலையங்கள் வெளிவிட்ட வேலையில்லாதோர் பற்றிய பிழையான எண்ணிக்கை போன்ற குழறுபடியைப் பற்றி ஷுரோடர் போதுமானவரை சிடுமூஞ்சித் தனமாக கதைப்பது மேற்குறிப்பிட்ட வேலை நிலமைகளை நடைமுறைப்படுத்தவேயாகும். ஸ்ரொய்பரிடம் இவ்வாறான வேலை நிலமைகளைப் பற்றி, அதாவது ஏன் தேர்தலுக்கு சற்று முன்பாக இதைப் பற்றி கூறுகின்றீர்கள் எனக் கேட்டதிற்கு அவர், இந் நிலைமைகளை பொதுஜன அபிப்பிராயங்கள் முதல்படியாக ஏற்றுக்கொள்ளவதற்கு பெரும் அதிர்ச்சி ஒன்று தேவையாக இருக்கலாம் எனவும் கூறினார். ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரொய்பர் அவரது வாக்களிக்கும் தட்டினருக்கான மிக முக்கிய நடவடிக்கையாக, நடுத்தர நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு கோரிக்கை என்பதை மிகவும் பகிரங்கமாக தெரியப்படுத்தினார். இது வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான ஒரு மிக முக்கியமான செய்தியாகும் எனவும், அதே சமயம் நிர்பந்தத்தின் நிமித்தம் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த மலிவான கூலியுழைப்பு முறைக்கும் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். ஒரு மாற்று அரசாங்கம் ஏற்படும் பட்சத்தில் அதனுடைய உடனடியான மிகவும் ஒரு மத்தியமான வேலைத் திட்டம் இதுவாகும். இதை கிறிஸ்தவ ஜனநாயக கட்சி எதிர்வரும் வெள்ளிக் கிழமை பகிரங்கமாக அறிவிக்க உள்ளது. வேலை வாய்ப்புக்கள் எங்கு அவசரமாகத் தேவைப்படுகிறதோ அங்கு அவற்றை உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி ஷுரோடர் அல்லது ஸ்ரொய்பர் ஒருபோதுமே சிந்தித்தது கிடையாது. அதாவது, கல்வி, தொழில் நுட்பம், சுகாதாரத் துறை, மருத்துவ தாதிகள் மற்றும் சுற்றுசூழலைப் பாதுகாக்கும் துறைகள் போன்றவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் பரந்தளவிலான பொது வேலைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் தேவைப்படுகின்றன, மேலும் இவற்றை வேறு மிகப்பெரிய வருமானம், சொத்துக்களைக் கொண்டோரால் நிதி வழங்கப்பட்டு செயல்படுத்த வேண்டி உள்ளது. எனவே இப் பணியை சமூக ஜனநாயகக் கட்சியும், அதேபோன்று தொழிற்சங்கங்களும் முழுப்படியே நிராகரித்து விடுகின்றன. குடியேற்றம் குடியேற்றம் எனும் விடயத்தைப் பொறுத்தவரை, இது யார் மற்றவரை விடவும் வலதுசாரித் தனமாக முந்திக் கொள்ளலாம் எனும் போட்டியால் இது முற்றாகவே மதிப்பிழந்து போய் உள்ளது. இரண்டு வேட்பாளர்களும் குடியேற்றத்தை ஆகக் குறைந்தளவாக பேணிக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். ஸ்ரொய்பர், ஐரோப்பாவுக்கு வெளியில் இருந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை நிறுத்துவதில் கடைப்பிடிக்கும் பொதுவான கொள்கையை பற்றிப் பேசியதுடன், ''மேலும் அதிகமான குடியேற்றவாசிகள்'' வரும் திட்டத்தை உள்ளடக்கி இருக்கும் புதிய குடியேற்ற சட்டத்தையும் தாக்கினார். இதனை ''எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது'' என ஸ்ரொய்பர் மேலும் கூறிக் கொண்டார். ஷுரோடர், இதைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், இப் புதிய சட்டமானது, குடியேற்றவாசிகளை ''மிகவும் திறமையாக நிர்வகிக்கவும், அதாவது உண்மையில் அது அவர்களை மிகவும் மட்டுப்படுத்த முடியும்'' என குறிப்பட்டார். குடியேற்ற வாசிகளை பொறுத்த மட்டில் இச்சட்டமானது ''எமக்கு தேவையானவர்கள்'' யார் ''எமக்கு மிகவும் தேவையற்றவர்கள் யார்'' என வித்தியாசப்படுத்தி காட்டுவதால், குடியேற்ற வாசிகளை மட்டுப்படுத்துவதையும், அதேசமயம் அது குடியேறும் வாய்ப்புக்களையும் வழங்குவதால் அதை எமக்கு வித்தியாசப்படுத்தி பார்க்கவும் இச்சட்டம் உதவுவதாக'' குறிப்பிட்டார். மனிதாபிமானம், அடிப்படை உரிமை, ஜனநாயகம், சம உரிமை அல்லது சமூக அந்தஸ்து போன்ற பதங்கள் இவ்விடயத்திலும், மற்றும் நடைபெற்ற இந்த விவாதம் முழுமையிலும் எவ்விதமான பாத்திரத்தையுமே வகிக்கவில்லை. மேலும் இவை இந்த இரு வேட்பாளர்களின் அரசியல் பதங்களில் இருந்தும் துடைத்து கட்டப்பட்டுள்ளன. ''சமூகம்'' எனும் இப்பதம், அரசின் மிகவும் மேன்மை தங்கிய அவர்களின் மனைவிமாரின் சமூகநல நடவடிக்கைகளில் மட்டுமே வெளிப்படுகின்றது. ஸ்ரொய்பர் இவ் வார்த்தைக்கு கொடுத்த வியாக்கியானம் பின்வருமாறு: ''என்னைப் பொறுத்த மட்டில் ''சமூகம்'' என்பது, அது இன்றும், நாளையும் வேலைத்தலங்களை உருவாக்குவதற்கே'' என்பதாக கூறினார். அவரின் அக்கருத்தை மலிவான கூலியுழைப்பையும், பலாத்காரமாக பெற்றுக்கொள்ளப்படும் வேலையையும் ஆதரிப்பதற்கே பிரயோகிக்க முடியும். இந்த தொலைக்காட்சி விவாத நிகழ்சி, செப்டம்பர் 22ல், எவ்வாறு ஒரு வலதுசாரி
வேலைத் திட்டம் மட்டுமே இத் தேர்தலுக்காக முன்வைக்கப்பட இருக்கின்றது என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. மில்லியன்
கணக்கான மக்களின் தலைவிதி, அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், பதில்கள் போன்றவை இத் தேர்தலில்
பங்குகொள்ளும் எந்தவொரு கட்சிகளிடமும் கிடையாது. |