World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா :
இலங்கை
Sri Lankan plantation unions call off wage campaign இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு பிரச்சாரத்துக்கு முடிவுகட்டின By Vilani Peiris இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே நடாத்திய சம்பள உயர்வுக்கான பிரச்சாரத்தை விரைவாக நிறுத்திக்கொண்டது. மெதுவாக வேலை செய்யும் திட்டத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதன் தொழிற்சங்க நடவடிக்கையானது, ஜூலை 31ம் திகதி ஆரம்பமாகி எந்தவொரு சம்பளக் கோரிக்கையும் கிடைக்கப்பெறாத நிலையில் ஆகஸ்ட் 7ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தொழிற்சங்க தலைமைகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இன்னமும் சம்பள உயர்வுக்கான இணக்கம் காணப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் பெரிய தொழிற்சங்கமான இ.தொ.கா, நாட்டின் தேயிலை மற்றும் றப்பர் பெருந்தோட்டங்களின் தமிழ் பேசும் உழைப்புப் படையினரின் பெருந்தொகையான வாக்குகளை பெற்றுள்ள ஒரு அரசியல் கட்சியாகவும் இயங்குகின்றது. தற்போது இ.தொ.கா. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஒரு கூட்டணிக் கட்சியாகும். அதன் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நடவடிக்கையை நிறுத்திக் கொண்டதன் மூலம் பெரும் வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கு தெளிவாக பிரதிபலித்தார். மெதுவாக வேலைசெய்யும் நடவடிக்கை ஆரம்பமானதன் பின்னர், வர்த்தக தலைவர்கள் "நாட்டின் பொருளாதாரத்துக்கு இழப்பு ஏற்படுவதை முற்றாகத் தடுக்க உத்தரவாதமளிக்கும்படி" பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களை வலியுறுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். உடனடியாக "ஒத்துழையாமை" இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த தொண்டமான் சண்டே லீடர் பத்திரிகையுடன் பேசுகையில்: "நான் தீர்மானமெடுக்கும் போதே கைத்தொழிலுக்கு முதலிடம் வழங்கியதோடு இப்பொழுதும் அதை பேணி வருகின்றேன்," என்றார். இ.தொ.கா. இந்த பிரச்சாரத்தை தொழிலாளர்களின் ஆகக் குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 151 ஆக (1.64 டாலர்கள்) அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்தது. 2000 ஆண்டில் எல்லா சம்பள உயர்வு கோரிக்கைகளையும் இடைநிறுத்துவதன் பேரில் தொழிற்சங்கத் தலைவர்களால் முதலாளிகளுடன் இரண்டு வருடகாலத்துக்கான கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜூலை மாதத்தோடு காலவதியானதையடுத்து பெருந்தோட்ட உரிமையாளர்கள் ஊதியம் சம்பந்தமான ஒரு முரண்பாட்டை தவிர்த்துக்கொள்வதில் அக்கறைகொண்டிருந்தனர். தொழிற்சங்கங்களின் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரமானது, முதலாளிமார்களுடன் புதிய கொடுக்கல் வாங்கலொன்று ஏற்படும் வரையிலும் தொழிலாளரிடையே வளர்ச்சிகண்டு வரும் வெறுப்பை தணிப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டதாகும். 2000 ஆண்டு ஒப்பந்தத்தின் படி, ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு 121 ரூபா மட்டுமே நாளாந்த சம்பளமாகக் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வந்த விலைவாசி இந்த அற்ப சம்பளத்தையும் முழுமையாக விழுங்கியிருந்தது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2000 ஆண்டில் தோட்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கிய விவசாய தொழிலாளர்களது உண்மையான சம்பளமானது, விலை அதிகரிப்பு தொடர்ந்துகொண்டிருந்த அதேவேளை 9.8 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. கடந்த ஆகஸ்டிலிருந்து வாழ்க்கைச் செலவுப் புள்ளி 3261.1 வரை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் ஆகக் குறைந்த நாட் சம்பளமாக குறைந்த பட்சம் 200 ரூபா வரை எதிர்பார்க்கின்றார்கள். ஒப்பந்தம் காலவதியானதையடுத்து, பெருந்தோட்ட உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனம், முதலாவது வருடம் 142 ரூபாவும் இரண்டாவது வருடம் 146 ரூபாவுமாக இரண்டு கட்ட சம்பள அதிகரிப்புடனான இன்னுமொரு இரண்டு வருடகால ஒப்பந்தத்தை முன்மொழிந்தனர். இ.தொ.கா.வின் 151 ரூபா கோரிக்கையானது, 121 ரூபா அடிப்படை நாளாந்த சம்பளத்துடன் ஊக்குவிப்புத் தொகையாக 15 ரூபாவும் வருகை ஊக்குவிப்பு பணமாக 15 ரூபாவையும் கொண்டதாகும். இந்தக் கோரிக்கையானது மிக நீண்டகாலத்துக்கும் முன்னர், 1998ன் வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது முன்வைக்கப்பட்டதுடன், தொழிலாளர்களது எதிர்பார்ப்புகளில் இருந்து வெகுதூரம் பின்னால் இருந்துகொண்டுள்ளது. சில அறிக்கைகள் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் நடவடிக்கையில் பங்கேற்றதாக சுட்டிக்காட்டிய போதிலும், அநேகமானவர்கள் -இ.தொ.கா. அங்கத்தவர்களும் கூட- இதில் பங்குகொள்ளவில்லை. நுவெரெலியா, மஸ்கெலியா மற்றும் கொட்டகலை போன்ற மலையக தோட்டப்பகுதிகளில் 40 சதவீதமான தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்ததோடு பதுளையில் 65 சதவீதமானோர் பங்குபற்றியிருந்தனர். பண்டாரவளை, அப்புத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரியில் இ.தொ.கா. உறுப்பினர்களில் அரைவாசிப் பேர் பங்குபற்றியிருந்தனர். சிலர் நாளாந்த இலக்கான 18 கிலோ தேயிலைக் கொழுந்துக்கு பதிலாக மூன்று அல்லது நான்கு கிலோக்களை மட்டுமே பறித்திருந்தனர். ஏனையோர், எவ்வாறெனினும், தொழிற்சங்கங்களில் நம்பிக்கை இழந்துள்ளதோடு தண்டனைகளுக்கு அஞ்சி 10 கிலோவரை பறித்திருந்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவம் வேண்டுமென்றே தொழிலாளர்களை பிரித்து வைத்திருந்தது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், 13 தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டியும் இப்பிரச்சாரத்துக்கு ஆதரவளித்தன. ஏனைய தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கவில்லை. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அரசாங்கத்தின் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், தன்னால் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி 181 ரூபா பெற்றுக்கொடுக்க முடியும் எனக் கூறி தொழிலாளர்களை பங்குபற்ற வேண்டாம் என ஆலோசனை கூறினார். இ.தொ.கா, இந்த வெற்று வாயளப்புக்களை தனது பிரச்சாரத்துக்கு முடிவுகட்ட ஒரு சாட்டாக பயன்படுத்திக் கொண்டது. சந்திரசேகரனால் அமைச்சருடன் பேசி 181 ரூபாவை பெற்றுத்தர முடியுமானால் நடவடிக்கையை தொடர்வதில் அர்த்தமென்ன? என இ.தொ.கா. வாதாடியது. சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு இணக்கப்பாடு காணப்படவில்லை என்பதை கூறத் தேவையில்ல. அண்மையில் சந்திரசேகரன் குறைந்த சம்பள உயர்வை ஏற்கத் தயார் என்பதை சுட்டிக்காட்டி அமைச்சருக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கடிதமெழுதியிருந்தார். கம்பெனிகளால் சம்பளத்தை அதிகரிக்க முடியாவிட்டால், அவர்களால் 1992ல் வெட்டித் தள்ளிய வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கான கொடுப்பனவை மீள அறிமுகப்படுத்தி சம்பளத்தை 161 ரூபாய்களாக்க முடியுமென அவர் குறிப்பிட்டிருந்தார். 1998ல் இருந்து, தொழிலாளர்களது சம்பள கோரிக்கைகளை முடக்கிய தொழிற்சங்கத் தலைமைகள் அவர்களை இரண்டு தடவைகள் கூட்டு ஒப்பந்தத்துக்குள் தள்ளின. அந்த ஆண்டில் சுமார் 600,000 பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சம்பள உயர்வுக்கான நடவடிக்கையை மேற்கொண்டதோடு 2000 ஆண்டில் இடம்பெற்ற சம்பளப் போராட்டத்தில் 450,000 தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்தத் தலைமைகள் ஒரு அற்ப சம்பள உயர்வை வழங்கும் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு பிரச்சாரங்களுக்கு முடிவுகட்டின. தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் தோட்ட தனியார் மயமாக்கலுக்கும் ஆதரவு வழங்கின. அநேகமானவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்காத பட்சத்தில் அவர்களது சம்பளம் மேலும் வெட்டப்படும். இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். புதிய வீடுகள் கட்டப்படுவதில்லை. சில சமயங்களில் ஒரு சிறிய வீட்டை நான்கு குடும்பங்கள் பகிர்ந்துகொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர். தோட்டங்ளில் கிடைத்த அற்ப சொற்ப மருத்துவ வசதிகளும் கூட வெட்டித் தள்ளப்படுகின்றது. அதே சமயம் முதலாளிகள் தினசரி பறிக்கவேண்டிய கொழுந்து தொகையை 12 கிலோவிலிருந்து 18 கிலோவாக அதிகரித்துள்ளனர். ஒரு ஹெக்டருக்கான உற்பத்தி 1,250 கிலோவிலிருந்து 1500 கிலோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகை கூட முதலாளிகளால் வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வானது "பெரும்பாலான தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இன்னமும் சர்வதேச வறுமைக்கோட்டின் கீழ் இருந்துகொண்டுள்ளதை அர்த்தப்படுத்துவதாக" ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் அது, "சம்பளங்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் கைத்தொழிலின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும்" என்றும் கூறுகிறது. இந்தக் கட்டுரை சம்பள உயர்வானது "பெருந்தோட்டக் கைத்தொழிலை வற்றச் செய்யும்" எனப் பிரகடனம் செய்த இலங்கை பெருந்தோட்ட அமைப்பின் தலைவர் மகேந்திரா அமரசூரியவின் கூற்றை எதிரொலிக்கின்றது. இ.தொ.கா.வின் பிரச்சாரத்தின்போது, தொழிலாளர்கள் தாம் தொழிற்சங்க தலைவர்களில் எந்தவொரு நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை என உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் தெரிவித்துள்ளனர். டிக்கோயா என்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சிவஞானம்; "இந்த மெதுவாய் வேலை செய்யும் இயக்கத்தில் பிரயோசனமில்லை. தொழிற்சங்கம் ஒரு நாளைக்கு 151 ரூபா கோரிக்கையை தீர்மானித்துள்ள போதிலும், வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் 200 ரூபாவும் கூட போதுமானதல்ல. கடந்தாண்டும் எமது போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஒரு சத்தியாக்கிரகத்தை அட்டனில் ஒழுங்கு செய்திருந்த போதிலும், அதன் மூலம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை," எனக் குறிப்பிட்டார். அதே தோட்டத்தைச் சேர்ந்த எம். சந்திரசேகரம்; "உடை, சுகாதார நடவடிக்கை மற்றும் எமது பிள்ளைகளின் கல்வி போன்றவற்றுக்கான செலவுடன் பார்க்கும் போது நாளாந்தம் 500 ரூபாவும் கூட போதாது" என்றார். எஸ். சுந்தரம் குறிப்பிடுகையில்; "தொழிற்சங்கங்கள் எமக்காக போராடுவதில்லை. அவர்கள் எப்போதும் நிர்வாகத்துடன் சமரசத்துக்கே செல்வார்கள்," என்றார். மஸ்கெலியா டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த ஞானராஜ்; "தொழிற்சங்கங்கள்
தொழிலாளரை குழப்புகின்றன. ஒரு தொழிற்சங்கம் மெதுவாய் வேலை செய்யுமாறு கூறும்போது மற்றைய தொழிற்சங்கம்
அப்படி செய்யாதே என்கிறது. எமது தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் இந்த நடவடிக்கைகளில் பங்குபற்றவில்லை,"
என்றார். அதே தோட்டத்தை சேர்ந்த கபிரியல் பேசுகையில்; "பொதுஜன முன்னணி (முன்னைய அரசாங்கம்) யூ.என்.பி
இரண்டுமே ஒன்றுதான். தொழிலாளர்களின் நிலைமைகளில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. சகல தொழிற்சங்கங்களும்
எம்மைக் காட்டிகொடுக்கின்றன," எனக் குறிப்பிட்டார். |