WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா
:
இலங்கை
Political standoff in Sri Lanka threatens to precipitate fresh elections
இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை உடனடியான புதிய தேர்தலுக்கான அச்சுறுத்தலை
விடுக்கின்றது.
By Nanda Wickramasinghe
9 August 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இலங்கையின் பாரளுமன்றத்தின் இயக்கம் சம்பந்தமாக ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவுக்கு ஒரு இறுதி நிபந்தனை விதிப்பதற்கான ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின்
(UNP) தீர்மானமானது, புதிய அரசியல்
நெருக்கடிகளை தூண்டிவிடுவதோடு இரண்டு வருடங்களுக்குள் ஒரு மூன்றாவது பொதுத் தேர்தலுக்கும் வழிவகுக்கும் அச்சுறுத்தலைக்
கொண்டுள்ளது. யூ.என்.பி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி
(UNF) அரசாங்கத்தின் பிரதானக் கட்சியாகும்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும், கடந்த ஆண்டுத் தேர்தலில் தோல்விகண்ட
பொதுஜன முன்னணியின் தலைவியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையிலான பதட்ட நிலைமைகள் மாதக்
கணக்காக குவிந்த வன்னமுள்ளன. திங்கள் அன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட யூ.என்.பி. நிறைவேற்றுக் குழு, 10
நாட்களுக்குள் குமாரதுங்க மூன்று அடிப்படை அரிசியல்யாப்பு மற்றும் சட்ட விடயங்களோடு உடன்பட வேண்டும் அல்லது
அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைப்பதோடு புதிய தேர்தலுக்கும் அழைப்பு விடுக்கும் எனக் கோரியது.
அந்த மூன்று விடயங்களாவன: பொதுத் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர்
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல்; தனிப்பட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு கட்சி ஒழுங்குகளுக்கு அப்பால் தமது விருப்பத்திற்கேற்ப வாக்களிக்க அனுமதித்தல்; மற்றும் கட்சி சார்பின்றியும்
எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் வேலைகளில் பங்கெடுக்கும் வகையிலும் ஒரு நிறைவேற்றுக் குழு
முறையை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தல்.
யூ.என்.பி.யின் இறுதி நிபந்தனையானது தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை உடைப்பதற்கான
ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். பிரதமர் விக்கிரமசிங்க தமது கொள்கைகளை திணிப்பதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க
நிறைவேற்று அதிகாரங்களை தம் கையில் கொண்டுள்ள ஜனாதிபதியின் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கின்றார். இலங்கையின்
அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மட்டுமல்லாமல் பிரதமர் உட்பட அமைச்சரவை
அமச்சர்களை நியமிக்க அல்லது வெளியேற்றுவதற்கான அதிகாரத்தையும் கொண்டுள்ளதோடு, ஆயுதப் படைகளின் பிரதான
ஆணையிடும் அதிகாரியாகவும் இருந்துகொண்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் குமாரதுங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒரு மோதல்
குமுறிக்கொண்டிருந்தது. இதன் வெளித் தோற்றம் ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான ஒரு தொடர்ச்சியான
குற்றச்சாட்டுக்களையும் எதிர்குற்றச்சாட்டுக்களையும் கொண்ட சர்ச்சைகளை தோற்றுவித்தது. அரசாங்க அமைச்சர்கள்,
அவர் மில்லியன் கணக்கான டொலர்களை ஒரு தொகை பாதுகாப்பு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக
வழங்கியதாகவும் உளவுப்பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்ட கைப்பையை அமைச்சரவை கூட்டத்துக்கு எடுத்து வந்ததாகவும்
குற்றம்சாட்டினர். மேலும், தேர்தல் தினத்தன்று 10 பேரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டவராகக் கருதப்படும்
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை உட்பட்ட பல பொதுஜன முன்னணி தலைவர்கள் கடந்த
பொதுத் தேர்தலோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டுள்ளனர்.
எதிர்க் கட்சியினரை வாயடைக்கச் செய்வதன் பேரில் குற்றச்சாட்டுக்களை அதிகரித்து
வருவதாக அரசாங்கத்தை குற்றம்சாட்டிய பொதுஜன முன்னணி, கீழ்படிவுடன் பிரதிபலித்தது. குமாரதுங்க தனது கைப்பை
சம்பந்தப்பட்ட விவகாரத்தைக் கிளப்பிய அமைச்சரவை அமைச்சரை வெளியேற்றுவதாக அச்சுறுத்தினார். ஜனாதிபதியின்
படி, பிரதமர் மீதான ஒரு தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்துவதற்காக கை பைக்குள் குண்டுகள் இருந்ததாக
அமைச்சர் குறிப்பிட்டார். பொது ஜன முன்னணி, கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி "அடக்குமுறைகளை" மேற்கொள்வதாக
ஐக்கிய தேசிய முன்னணியை குற்றம்சாட்டியது.
இந்தக் குரோதச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், யூ.என்.பி. சார்பு சண்டே லீடர்
பத்திரிகையில் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு கட்டுரை, குமாரதுங்க அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக
ஒரு "அரசியல் யாப்பு சதியை" உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுது. குமாரதுங்க தமது அரசியல்யாப்பு அதிகாரத்தைப்
பயன்படுத்தி விக்கிரமசிங்கவைப் பதிலீடு செய்யவும் அவரது சொந்த பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவும்
சூழ்ச்சி செய்வதாக குறிப்பிடப்பட்ட கதை, தேசியத் தொலைக் காட்சி மற்றும் வானொலி உட்பட அரசாங்க
ஊடகங்களால் உடனடியாக தூக்கப்பிடிக்கப்பட்டது. இது உண்மையானாலும் சரி பொய்யானாலும் சரி, தமது இறுதி
நிபந்தனையை விதிப்பதற்காக யூ.என்.பி. இந்தக் கதையை தூக்கிப் பிடித்தது.
சமாதானப் பேச்சுக்கள் சம்பந்தமான வேறுபாடுகள்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான இந்த கசப்புணர்வுகள் கைப்பையிலோ
அல்லது அரசியல் யாப்பு சதி முயற்சியிலோ -உண்மையானாலும் சரி அல்லது கற்பனையானாலும் சரி- எதனையும் செய்யவதற்கில்லை.
இந்த பதட்ட நிலைமைகளுக்கு பின்னால், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
(LTTE) நீண்ட கால யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம்
முடிவு காணும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த அரசியல் வேறுபாடுகள் இருந்துகொண்டுள்ளன.
சர்வதேச முதலீடுகளுக்கு ஒரு தடையாகவுள்ள அதேவேளை பிராந்தியத்தின் ஸ்திரமற்ற
நிலைமைக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு பெரு வர்த்தகர்களின்
பிரதான பகுதியினரும் மற்றும் மேற்குலகச் சக்திகளும் நெருக்கி வருகின்றனர். விக்கிரமசிங்க பெப்பிரவரியில் ஒரு நிரந்தர
யுத்த நிறுத்தத்துக்காக விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுக் கொண்ட போதிலும்,
தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதியை ஒழுங்கு செய்ய முடியாமல் உள்ளார். மே மாதம்
பேச்சுவார்த்தைகளுக்கான திகதி குறிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் ஒத்திப் போடப்பட்டதோடு இப்போது தற்காலிகமாக
செப்டெம்பர் மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான காலதாமதங்கள் அடிப்படை விடயங்களோடு தொடர்புபட்டுள்ளன.
19 வருடகால கொடூரமான யுத்தத்தை உக்கிரமாக்குவதற்காக சிங்களப் பேரினவாதத்தின் பின்னால் அணிதிண்ட ஆளும்
கும்பல், பெளத்த பெருந்தலைவர்கள், இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் யுத்தத்தோடு தொடர்புபட்ட வியாபாரிகள்
உட்பட ஒரு இனவாதத் தீவிரவாத பிரிவை உருவாக்கி விட்டுள்ளது. இவர்கள் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் கடுமையாக
எதிர்த்து வரும் அதேவேளை எந்தவொரு சமாதானப் பேச்சையும் தேசத்துரோகத்துக்கு சமமானதாக கருதுகின்றனர்.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சிக்கும் எந்தவொரு அரசாங்கமும்
தமது சொந்த இயக்கத்துக்குள்ளேயே இருப்பவர்கள் உட்பட இவ்வாறான சிங்கள தீவிரவாதிகளில் நம்பிக்கை வைக்க
வேண்டும். 2000 ஆண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் அடிப்படையில் அரசியல் யாப்பில் மாற்றங்களை
ஏற்படுத்த முயற்சித்தபோது, விக்கிரமசிங்கவும் யூ.என்.பி.யும் கூச்சல் நிறைந்த இனவாத பிரச்சாரங்களுக்கு தலைசாய்த்ததோடு
இந்த நடவடிக்கைகளையும் கீழறுத்தனர். இப்போது சப்பாத்து அடுத்த காலில் இருப்பதோடு விக்கிரமசிங்க,
பேச்சுவார்த்தைக்கூடான தமது நகர்வுகளை குமாரதுங்க பேரினவாத உணர்வுகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் பொதுஜன
முன்னணியை பலப்படுத்துவதன் பேரில் தகர்த்துவிடக் கூடும் என பீதியடைந்துள்ளார்.
ஜனாதிபதி விடுதலைப் புலிகளுக்கான "சலுகைகள்" எனக் கூறப்படுவன பற்றி தமது
அக்கறையை வெளிப்படுத்தி விக்கிமசிங்கவுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார். அவர் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலான
இடைக்கால நிர்வாக சபையை நிறுவுவதும் விடுதலைப் புலிகள் மீதான உத்தியோகபூர்வ தடையை நீக்குவதும் பேச்சுவார்த்தைகள்
ஆரம்பமானதன் பின்னரே இடம்பெற வேண்டும் எனக் கோரியுள்ளார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகள் இந்த இரண்டு
நிலைமைகளும் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாகவே இட்டுநிரப்பப்பட்டிருக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
பலவித சிங்களத் தீவிரவாத அமைப்புகள், பேச்சுவார்த்தைகளை தடுப்பதற்காக அரசியல்யாப்பு
அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதியை நெருக்கிவருகின்றன. கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஒரு
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP)
குமாரதுங்கவுக்கு பின்வருமாறு அழைப்பு விடுத்தது: "ஐக்கிய தேசிய முன்னணியால் நாடு பிரிக்கப்படுவதை நிறுத்துவதற்காக
உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். அது உங்களது கடந்த ஆறுவருடகால பாவங்களை கழுவித் தள்ளும்."
சர்வதேச நாணய நிதியத்தின்
(IMF) கோரிக்கைகளை
விக்கிரமசிங்கவின் நெருக்கடிகள் மேலும் குவிந்து வருகின்றன. அவரது அரசாங்கம் சர்வதேச
நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார
நெருக்கடியை சீர்செய்வதன் பேரில் பெருவர்த்தகர்களின் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. விக்கிரமசிங்க வாழ்க்கை
நிலைமைகள் மீதான தொடர்ச்சியான வெட்டுக்களால் தோன்றியுள்ள வளர்ச்சி கண்டுவரும் அமைதியின்மையை பொதுஜன
முன்னணி சுரண்டிக்கொள்ளும் என பீதிகொண்டுள்ளார். ஆட்சியில் இருக்கும்போது பொதுஜன முன்னணியும் சர்வதேச நாணய
நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைக்கிட்டது.
அரசாங்கம் ஆகஸ்ட் மாத கடைசி இரண்டு வாரங்களுக்குள் உடனடியாக நடைமுறைக்கிட
வேண்டியுள்ள சுமார் 30 மசோதாக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இவை அரசாங்க நிறுவனங்களை
விற்றுத் தள்ளுதல், வருமானத்தை வெட்டுவதற்காக ஓய்வூதியத் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும்
தொழிலாளர்களை குறைப்பதற்கு வசதி செய்வதன் பேரில் நாட்டின் தொழில் சட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்தல்
ஆகியவற்றையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளன. கடந்த வார இறுதியில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி நடீம் உல் ஹக்: "இந்த விடயம் (இலங்கையில்) மறு சீரமைப்பாகும்,
உதவி அல்ல" என அரசாங்கத்தை எச்சரித்தார்.
ஆளும் வட்டாரங்களுக்கு மத்தியில், பொருளாதார மறுசீரமைப்பு எதிர்ப்பைத் தூண்டிவிடும்
என்ற பீதி ஏற்கனவே இருந்துகொண்டுள்ளது. கடந்த மாத
சண்டே டைம்ஸ் பத்திரிகையின் வர்த்தகப் பகுதியில் வெளியான ஆசிரியர் குழு கட்டுரை:
"பொருளாதார மறுசீரமைப்பு அமுலுக்கு வரும்போது, "அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத்
தவறுமானால் அது ஆர்ஜன்டீனாவைப் போன்ற ஒரு நாட்டில் நாம் கண்டது போன்ற ஒரு வெடிப்புக்கு வழியமைக்கக்
கூடிய ஆபத்து இருந்துகொண்டுள்ளது என எச்சரித்தது.
குமாரதுங்கவுக்கான யூ.என்.பி.யின் இறுதி நிபந்தனையானது தற்போது
இருந்துகொண்டுள்ள பூட்டை உடைப்பதாகும். அரசாங்கம் எதிர்த் தரப்பினர் நிலைமையை அரசியல் ரீதியில் தகர்க்கக்
கூடும் என்ற பீதியில் தமது நிகழ்ச்சி நிரலுக்கு பிரதான விடயங்களை முன்வைக்க முடியாமல் இருந்து கொண்டுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகஸ்ட் 6ம் திகதி ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஒரு சமரசத்துக்குச் செல்லவோ அல்லது தேர்தல்களை நடத்தவோ நோக்கம் கொண்டுள்ளது. "முக்கியமான
அடிப்படை விடயம் நாம் ஒன்றாக வேலைசெய்து இந்த விடயத்தை தீர்க்க வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் வாஷிங்டனுக்கான பயணம், குமாரதுங்கவுடனும் எதிர்க்
கட்சியுடனுமான தற்போதைய முறுகல் நிலையில் அவரது கரத்தை பலப்படுத்தியுள்ளது. விக்கிரமசிங்க 20 வருடங்களில்
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த முதலாவது இலங்கைப் பிரதமராகும். சந்திப்பிலிருந்து வெளியில் வந்த விக்கிரமசிங்க,
புஷ் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதில் "நான் உங்கள் பின்னால் இருக்கின்றேன்"
எனக் குறிப்பிட்டதாக பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். பிரதமர் பொருளாதார உதவிக்கு வாக்குறுதியளித்த
இராஜாங்க செயலாளர் கொலின் பவெல் மற்றும் ஏனைய அமெரிக்க உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.
பெருவர்த்தகர்கள் தற்போதைய முரண்பாடுகள் சம்பந்தமாக தமது எரிச்சலை வெளிப்படுத்தினர்.
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினதும் பெருவர்த்தகர்களின் சமாதான இயக்கமான ஸ்ரீலங்கா பெர்ஸ்ட்டினதும் உப தலைவரான
ஜகத் பெர்னான்டோ, முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்பை எதிர்த்தார். அவர் "சமாதான முன்னெடுப்புகளுக்கான
இந்த சூழ்நிலையில் ஒரு தேர்தல் விரும்பத்தக்கதல்ல. அது பேச்சுவார்த்தைகளை (விடுதலைப் புலிகளுடனான)
ஸ்தம்பிக்கச் செய்வதோடு பேச்சுவார்த்தைகளின் மூலம் உருவெடுக்கும் சாதகமான பெறுபேறுகளையும் தாமதப்படுத்தும்,"
என்றார்.
தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சந்திரா அம்புல்தெனிய உணர்வுகளை வெளிப்படுத்தி
பேசுகையில்: "இன்னுமொரு தேர்தலை நடத்துவதானது அனாவசியமானது. ஒருவர் நாட்டின் பொருளாதாரத்தைப்
பற்றி சிந்திக்க வேண்டும். அரசாங்கம் சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக ஒரு பெரும் முயற்சியை எடுத்துள்ளது.
அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புரிந்துணர்வு இருக்க வேண்டும். இரண்டு கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்,"
என்றார்.
ஏனைய வர்த்தகத் தலைவர்கள், எந்தவொரு உடனடித் தேர்தலிலும் அரசியல் யாப்பு
மாற்றத்துக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கும்
ஐக்கிய தேசிய முன்னணிக்கு மிகவும் சிறிய வாய்ப்பே இருந்துகொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்கள். கொழும்பு
பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெருவர்த்தகர்களின் அதிருப்தியின் ஒரு விளைவாகும். எல்லாப் பங்கு
சுட்டெண்களும் ஆகஸ்ட் 1ல் 699 புள்ளிகளில் இருந்து ஆகஸ்ட் 5ம் திகதி 646 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டன. இதே
5 நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் மிலங்கா புளூ சிப் (Milanka
blue chip) (பெரும் முதலீட்டாளர்களுக்கான பங்கு) புள்ளிகள் 1,210 புள்ளிகளில் இருந்து 1,094
புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டன.
ஸ்திரமற்ற நிலைமையின் வெளிப்பாடுகள் நிச்சயமற்றவையாக உள்ளன. எந்தவொரு பக்கத்திலும்
சமரசம் காணப்படாத பட்சத்தில் நாடு விரைவாக ஒரு புதிய அரசியல் நெருக்கடிக்குள்ளும் இன்னுமொரு தேர்தல்
சுற்றுக்கும் தள்ளப்படும். உடனடியான நிலைமைகளின் மாற்றங்களும் திருப்பங்களும் எதுவாக இருந்தாலும், எவ்வாறெனினும்,
இந்த நிகழ்வுகள் ஆளும் கும்பலின் எல்லாப் பகுதியினரும் இனவாத அரசியலில் ஆழமாக மூழ்கிப்போயுள்ள அதேவேளை
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான ஆழமான ஊடுருவலை தோற்றுவிப்பதைத் தவிர சீரழிந்து வரும்
பொருளாதாரத்துக்கு பதிலளிக்க முடியாதவர்கள் என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகின்றது.
See Also :
இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணையில் பல மாதகால
தாமதம்
இலங்கையில்
ஒரு ஸ்திரமற்ற யுத்த நிறுத்தம்
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு
இலங்கையின் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமான அச்சுறுத்தலை விடுக்கின்றது
Top of page
|