World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்A Comment on Art and the Marxist Party கலை மற்றும் மார்க்சிச கட்சி பற்றிய ஒரு குறிப்புரைBy Joanne Laurierகலைத்துவ அறிதலின் புறநிலை பண்பையும் மற்றும் புரட்சியாளர்களுக்கு அதனது படிப்பினையின் முக்கியத்துவத்தையும் பற்றி விரிவுரையில் ஆராய்ந்த ஒரு கேள்வியைப் பற்றி நான் விரிவாக்க விரும்புகிறேன். கலைக்கான ஒரு மார்க்சிச கட்சியின் ஒரு அக்கறையானது ஒரு ஆடம்பரமான விடயம், அன்றாட வாழ்வின் கடுமையான உழைப்பின் மன அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கு ஒரு வகையான சந்தோசமான பொழுதுபோக்கு என்பது போன்ற உறுதியான நம்பிக்கை இன்னும் இருந்துவரலாம். இது கலைக்கும் அவருக்கும் தீமை பயப்பதாக இருக்கும். என்றாலும் இன்றைய கலந்துரையாடல் நாம் அந்த எண்ணப்பாட்டிற்கு எதிராக போராடுவதில் குறிப்பிடும்படியான-முக்கியமான முன்னேற்றத்தைச் செய்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கலையானது மனிதகுலம் உலகத்தைப்பற்றி விளங்கிக்கொள்வதற்கான ஒரு முக்கியமான சாதனமாக இருப்பதுடன், இதன் மூலம்தான் யதார்த்தத்தை மாற்றும் அவர்களது முயற்சி நடந்தேறுகிறது. அனுபவம், அறிவு மற்றும் ஆசைகளை ஸ்தூலமான பிம்பங்களாக வடிப்பதற்கான (மாற்றுவதற்கான) அவசியம் ஒரு கற்பனையான அல்லது தீடீர் எண்ணப்பாடோ அல்ல, அது மனித நனவில் தெளிவாக கட்டப்பட்டிருக்கிறது. இரவில் நாம் எல்லோருமே கலைஞர்களாக இருக்கிறோம். கனவுகள், நனவான அனுபவத்திற்கான அவைகளது அழுத்தமான, கற்பனை விபரணைகளுடன் பல கலைப்படைப்புகளினது பண்புகளை எடுத்துக்காட்டுகிறது. விஞ்ஞானச் சிந்தனை போலல்லாது, கலை அதனது உள்ளடக்கத்தினை உணர்ச்சிபூர்வமான வடிவத்தில் எடுத்துக்காட்டுகிறது, ஹேகல் குறிப்பிட்டது போல், அதனடிப்படையில் உள்ளடக்கத்தினை ''எமது உணர்ச்சித் தன்மைக்கும் மற்றும் மனக்கிளர்ச்சிக்கும் நெருக்கமாக'' கொண்டுவருகிறது. அவர் எழுதுகிறார்: ''ஒரு கலைஞனின் படைப்பியல் கற்பனையானது ஒரு மாபெரும் மனதின், ஒரு பெரும் இதயத்தின் புனைவாற்றலாகும். அது புறநிலை அனுபவத்தில் இருந்து பெற்றுக்கொண்ட (படிமத்தின்) வடிவத்தின் முற்றிலும் திட்டவட்டமான முன்வைப்பில் மிகவிரும்பி வரவேற்கும் மனித நலன்களையும் அறிவாழத்தையும் உள்வாங்கும் ஆற்றலாகும். "அறிவாழத்தையும் மிக விரும்பி வரவேற்கும் மனித நலன்களையும்" பற்றிய இந்த உள்வாங்கிக்கொள்ளல் எப்படி மார்க்சிசத்திற்கு அக்கறையற்ற ஒரு விடயமாக இருக்கமுடியும்? எல்லாவற்றுக்கும் முன்னர், கலையானது ஸ்த்தூலமான உருவ (படிம) வடிவத்தில் (Concrete Imagery) புறநிலை அறிவை முன்வைக்கிறது, இது விஞ்ஞானத்தினால் அடையமுடியாதது. ''இங்கிலாந்தில் எழுத்தாளர்களின் அற்புதமான சகோதரத்துவத்தை'' பற்றி 1854 இல் மார்க்சின் குறிப்பினை நாம் நினைவுகூரலாம், "Dickens உள்ளடங்கலாக, Thackeray, Gaskell மற்றும் Charlotte Brontë ஆகியவர்கள் ''முழு தகுதிவாய்ந்த அரசியல் வாதிகள், பத்திரிக்கையாளர்கள், ஒழுக்கவியல்வாதிகள் எல்லோரையும் சேர்த்து'' அவர்களால் சொல்லப்பட்ட உண்மைகளை விட உலகிற்கு அதிகமான உண்மைகளை சொல்லியிருக்கிறார்கள்." குறிப்பிட்ட படங்களும், புதினங்களும் (நாவல்கள்) அல்லது ஓவியங்களும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட அரசியல் அல்லது விஞ்ஞான ஆய்வுகளை விட சமூக மற்றும் உளவியல் உண்மைகளை அதிக கூர்மையான முறையிலும், அழிக்கமுடியாத வகையிலும் காட்டியிருக்கின்றன என்பதை எமது சொந்த அனுபவத்தில் இருந்து நாம் அனைவரும் அறிவோம். அமெரிக்க குட்டிமுதலாளித்துவ வாதியின் பிரமைகள் மற்றும் கனவுருப் புனைவாற்றல்கள், அதனது துன்பியல் மற்றும் இரக்க பண்புகள் பற்றி சொல்லும் Dreiser இன் அமெரிக்க துன்பியல் இல் வரும் Clyde Griffiths இன் பாத்திரத்தினை மார்க்சிச இயக்கத்தின் அனைத்து இலக்கியங்களாலும் ஒருபோதும் கடக்கமுடியாதிருக்கிறது அல்லது சமப்படுத்த முடியாதிருக்கிறது. சமூக வாழ்வினது அறிவின் ஒரேயொரு வளமூலம் என்ற மட்டில் இலக்கியம் மற்றும் கலையில் இருந்து ஒருவர் தன்னை துண்டித்துக் கொள்வாரானால் அவர் தன்னையே ஆபத்தான வகையில் முடக்கிக்கொள்பவராக இருப்பார். ஆனால் தெளிவானவகையில் கலைத் துறையானது சமூக போக்கு மற்றும் வரலாற்று புறநிலையறிவின் சாதரண துறையாக மட்டும் இருக்கவில்லை. கலைத்துவப் படைப்பை விஞ்ஞான நெறிமுறையினுடன் குழப்பிக் கொள்ளக்க கூடாது, இருந்தபோதும் விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் இடையில் ஒரு சீனச்சுவர் இல்லை. விஞ்ஞானமானது பருப்பொருட்களின் அறிவை அவற்றினது பிரபஞ்சத்தன்மையில் அடைய முனைகிறது. ஸ்த்தூலமான பருப்பொருள் உணர்வு (concrete sense object) விஞ்ஞானத்தில் அருவமான கருப்பொருள் விஷயமாக (abstract subject matter) உருமாறுகிறது. மூலதனத்தின் முதல் அத்தியாயத்தை எண்ணிப்பாருங்கள். கலையில் பிரபஞ்சத்தன்மையானது ஒரு ஸ்த்தூலமான பருப்பொருள் உணர்வாக வடிவம் எடுக்கிறது. மேலும், உலகம் பற்றிய அணுகுமுறையில் இந்த வித்தியாசம், ஹேகல் சுட்டிக்காட்டியது போல், இந்த புறவடிவம் சார்ந்த வித்தியாசம், கலையை எமது உணர்ச்சித்தன்மைக்கும் மற்றும் உணர்ச்சிகரமான வாழ்க்கைக்கும் மிக நெருக்கமாகக் கொண்டுவருகிறது. விஞ்ஞானங்களில் இருப்பதை விட பரந்த அளவில் இரகசியமானதும், பரந்த அளவில் உள் மடிந்ததுமான நிகழ்ச்சிப்போக்குடன்: சிக்கலான போக்கான மனித குலத்தின் உள்ளார்ந்த வாழ்க்கைகள் மற்றும் மிகப்பிரமாண்டமான, நூற்றாண்டுகள் பழமையுடைய உளவியல் அனுபவங்களின் திரட்சிகளுடன் நாம் இங்கே கையாளுகிறோம். இந்த பிரமாண்டமான சிக்கல் நிறைந்த உளவியல் அனுபவம் எப்படி வெளிப்படையான உண்மைகளின் அல்லது பிரபஞ்ச விதிகளின் வடித்தெடுக்கப்பட்ட ஒரு கோர்வையாக இருக்க முடியும்? இந்த அனுபவத்தைப் பேணும், தொகுத்துக் கூறும் மற்றும் செழுமைப்படுத்தும் ஒரு அவசியமான புறநிலைரீதியான வழிமுறைகளாக கலை வடிவம் இருக்கிறது. கலைஞனின் நனவான சமூகப்பார்வையின் ஆய்வை மட்டும் வைத்து ஒரு கலைப்படைப்பினை மதிப்பீடு செய்வது எப்படி போதாததாக இருக்கிறது என்பது இலகுவாக தெரிய வரும். உண்மையில், கலைஞர்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கும் அணுக்களல்லர்தான்; அவன் அல்லது அவள் ஒரு வர்க்க சமூகத்தின் அங்கத்தவராக இருக்கின்றனர், ஒரு திட்வட்டமான அளவிலான வர்க்க பாரபட்சத்தையும் மட்டுப்படுத்தல்களையும் கொண்ட, பொதுவாக மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இருந்தபோதும், வாழ்வு பற்றிய முக்கியமான உண்மைகளை உணர்ந்துகொள்வதில் இருந்தும் அல்லது விளங்கிக் கொள்வதில் இருந்தும் ஒரு தனிப்பட்ட மனிதனை இப்படியான பாரபட்சங்கள் தடுத்திருக்குமானால், இன்று மார்க்சிசம் உள்ளடங்கலாக எந்தவகையான கூர்மையான சிந்தனைகளும் இருந்திருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வர்க்கப்பார்வையில் இருந்து நனவாக உடைத்துக்கொள்வது உண்மையில் மார்க்சிசத்திற்கு அவசியமாக இருக்கிறது. அதேபோன்று, காலாவதியாகிவிட்ட, உலகத்தை அனுபவிக்கும் மற்றும் பார்க்கும் முறைகளுடன் ஒரு உடைவைச் செய்வது கலைத் திறனுக்கு அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட அளவில் ஒரு அபிவிருத்தியடைந்த அழகியல் உணர்வின் ஊடாக, சமூக மற்றும் உளவியல் நிகழ்ச்சிப் போக்கை பெயர்த்துக்காட்டும் மற்றும் வர்க்கச் சமூகத்தில் சராசரி மனிதர்களால் உய்த்துணர முடியாத--கண்டுபிடிக்க முடியாத உணர்வுகளையும் உருவங்களில் உருமாற்றும் திறனை கலைஞன் கொண்டிருக்கிறான். அந்த உணர்வின் அபிவிருத்தியின் அர்த்தம் அவர்களின் கண்டுபிடிப்புகளின் பரந்த தாக்கத்தினையிட்டு அவன் அல்லது அவள் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அல்ல. விஞ்ஞான நிபுணன் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதியது கலைத்துவ நிபுணனுக்கும் கூட பொருந்தும்: ''ஒரு நீராவிக் கப்பலுக்குள் புகமுடியாத பிரிக்கும் கட்டமைப்புப் பகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன அதனால் ஒரு விபத்து ஏற்பட்டால் ஒரே தடவையில் கப்பல் முழுவதும் மூழ்குவதில்லை, அதுபோல் தான் மனிதனது நனவுகளிலும் புகமுடியாத எண்ணற்ற பிரிக்கப்பட்ட பலபகுதிகள் உண்டு: ஒரு பிரிவில் அல்லது பல பிரிவுகளில் மிக புரட்சிகரமான விஞ்ஞான சிந்தனையை நீங்கள் காண முடியும்; இருந்தும் பிரிக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் உயர்ந்த மட்டத்தில் பிலிஸ்த்தின் வாதம் இருப்பதை நீங்கள் காண முடியும்.'' அற்புதமான கூருணர்வுத்திறமும் மற்றும் அற்புதமான பிலிஸ்டினிசமும் --அல்லது அதைவிட மோசமான தன்மை-- திறமையான கலைஞர்களுக்குள் உடனொத்து இருந்து வருகின்றன. இவை பரந்த அளவில் கலையில் இருப்பதும் சாத்தியமானதே ஏனெனில் நாம் ஒரு தூய்மையான நனவை அல்லது அறிவுரீதியான நிகழ்ச்சிப்போக்கை பற்றிப் பேசவில்லை. நனவான சிந்தனையின் மட்டத்தை ஒருபோதும் அடையாத வழிகளில் பலதைப் பற்றிய உண்மையை மனித குலம் ஆழமானமுறையில் உணர்வதுடன், புலன் உணர்வால் அறிந்துகொள்கிறது. மக்களில் பலர் இவ்வகையான உணர்வுகளை வெளிவிடாது அடக்கி வைக்கிறார்கள் அல்லது புறக்கணித்துவிடுகிறார்கள். கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்களால் முடியாது; அவனோ அல்லது அவளோ அவைகளை அடையக் கூடியதாக இருக்கிறது மற்றும் கலைத்துவ வடிவத்தின் பிரத்தியேகமான மொழியில் அவை கட்டாயம் வெளிப்பட வேண்டியிருக்கிறது. கலைப்படைப்புகள் வடிவமெடுக்கும் வழிமுறைகளில் நனவற்றநிலையும் பாதி நனவுநிலையும் பங்கெடுப்பதாக இருக்குமானால், அதன் பின்னர் சாதரணமாக ஒரு படைப்பினை அதனது நனவான பார்வையின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது முற்றாக பிழையானதாக இருக்கும். அப்படியானால், ஒருவர் படைப்பின் ஒரு பகுதியைத்தான், மேல்நிலையில் இருக்கும் நனவான பகுதியை மட்டுமே பார்க்கவேண்டியிருக்கும். அத்துடன், வர்க்கச் சமூகத்தில் சிறு எண்ணிக்கையிலான மனிதர்கள் மட்டும்தான் சமூகம் பற்றிய ஒரு ஒத்திசைவான விஞ்ஞானப்பார்வையை கொண்டிருப்பர் என்பதால் கலைஞர்கள் எப்போதுமே கிட்டதட்ட பிழையாகத்தான் இருக்கிறார்கள் என்ற வாதத்திற்கு இட்டுச் செல்லும். அப்படியான பார்வை மகிழ்ச்சியூட்டுவதாக (வசதியானதாக) தான் இருக்கும் ஆனால், முக்கிய புள்ளியை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பை அது தவறவிட்டுவிடும். இவைகள் அனைத்தும் ஏன் ஒரு புறநிலையறிவின் மற்றும் விஞ்ஞானத்தின் ஒரு பெண் அல்லது ஆணான மார்க்சிஸ்டுக்கு அக்கறைக்குரியதாக இருக்கிறது? எல்லாவற்றுக்கும் மேலாக, இது எல்லோருக்கும் அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும் ஏனெனில் கலைத்துவ ஆற்றலானது வாழ்வின் மிக அற்புதமான மற்றும் மதிப்புமிக்க மூலகங்களாகும். ஆனால், குறிப்பாக மார்க்சிசத்தை நாம் கவனிப்போம். அது ஒரு விஞ்ஞானம், ஆனால் அது மனித உறவுகள் பற்றிய விஞ்ஞானம்; அது புறநிலையாக இருக்கிறது, அதேநேரம் மனித அகநிலை நடவடிக்கையை வழிநடத்துவதுதான் அதனது முதன்மையான செயல்பாடாக இருக்கிறது. மார்க்சிசம் என்பது அசையாத அணுக்கள், மூலக்கூறுகளின் இயக்கம் பற்றிய ஆய்வல்ல. மனித சமூகத்தின் நலத்தினையிட்டு அக்கறைப்படும் ஒருவர் எப்படி மனித உறவுகள், மனக்கிளர்ச்சிகள், தூண்டுதல்கள் மிக நிலைத்து நிற்கும் மற்றும் பேரார்வம் ஊட்டும் வெளிப்படுத்தலைக் கொடுக்கும் துறையைப் புறக்கணிக்க முடியும்? கலை தனிமனிதர்களை ''மிக சிக்கலானதாவும் மற்றும் நெகிழ்வுள்ள'' தாகவும் உருவாக்குகிறது என ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டபோது மனதில் இதை வைத்திருக்கல்லை? எந்த விஞ்ஞானத்தையும் உட்கிரகித்தல் பிரத்தியேகமான கலைச்சொற்களையும், அறிவின் முக்கிய பகுதியையும் மற்றும் அந்த விஞ்ஞானத்தின் அறிவுக்கூர்மையினை நடைமுறையில் பயன்படுத்தலையும் கற்றுக்கொள்வது தவிர்க்க முடியாத வகையில் சம்பந்தப்பட்டுள்ளது. மார்க்சிசத்தில் எதற்கு நாம் மதிப்பளிக்கிறோம்? புறநிலைரீதியான பார்வையும், அறிவுரீதியான ஆய்வும், உடனடியானதில் இருந்து அதனது மிகவும் பொதுவான ஏற்படக்கூடியவிளைவுகளுக்கு முன்னேறுவதாகும். இது அனுபவமின்மையில், அநேகமாக தவிர்க்க முடியாதவகையில் ஒரு குறிப்பிட்ட சம்பிராதாய அணுகுமுறைவாதத்தை, முரண்பட்ட முழுமையின் ஒரு முழுமையான விளக்கமில்லாமல் விதிகளை பிரயோகிக்கும் ஒரு போக்கை உருவாக்கும். இங்கே கலைப்படைப்புக்கான கூருணர்வுத்திறம் முற்றிலும் ஒரு முக்கிய பாத்திரத்தினை வகிக்கிறது. ஒரு சிரத்தை மிகுந்த கலைப்படைப்பு பற்றிய ஆய்வானது, அதனது எந்த வடிவத்திலும், சம்பிரதாயவாதத்திற்கு மிகவும் ஆற்றல் வாய்ந்த மாற்று மருந்துகளுள் ஒன்றாக இருக்கிறது. உண்மையான கலை, முன்னேற்பாடாகச் செய்யப்பட்டுள்ள, எளிமைப்படுத்தலின் எதிரியாகும்; இது உடனடித் தீர்வை ஒருபோதும் தராத பிரச்சினைகளின் தெளிவற்ற, சிக்கலான மண்டலமாக இருக்கிறது. ஒரு சிரத்தைமிகுந்த கலைப்படைப்பு எல்லையற்ற அதிர்வுகளை முடுக்கிவிடுகிறது; அது உட்கிரகிப்பை எதிர்க்கிறது, வடிவத்தை மாற்றுவதுடன், அதனது உண்மையை மீள உறுதிப்படுத்துகிறது; அதை ஓய்வுறச் செய்ய முடியாது, லெனினின் வார்த்தையில் கூறினால், யதார்த்தத்தைப்போலவே அதுவும் தீவிரமானதாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக கட்சிக்குள் உருவாகிய கலைத்துவ கேள்வி மீதான விருப்பங்கள்--இது ஒரு சில எதிர்மறைக்கருத்துக்களையும் உருவாக்கியிருக்கிறது-- இந்த விஷயங்களையிட்டு மேலதிகமாய் இனி சொல்வதற்கு எதுவுமில்லாத குட்டி முதலாளித்துவ இடது குழுக்களுக்கு எதிராக, எமது இயக்கத்தின் வாழ்வின்தன்மை மற்றும் புத்திஜீவிதத்தின் உறுதிப்பாட்டினதும் ஒரு அறிகுறியாக இருக்கிறது என நான் கருதுகிறேன். (ஏனைய சோசலிச கட்சிகள் அதனது அங்கத்தவர்கள் Hamlet படத்தின் புதிய பிரதியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு பற்றிய விவாதத்திற்கு ஈர்க்கப்படுவதை கண்டுகொள்ள முடியுமா?) கலைப் பக்கத்தின் மீதான ஆர்வமானது கட்சி அங்கத்தவர்களும் சரி அல்லது எமது பத்திரிக்கையின் வாசகர்களும் சரி 'அரசியல் தனியே' என்பதுடன் திருப்தியடையவில்லை என்பதை நன்றாக எடுத்துக்காட்டியுள்ளது. இங்கே வேறொன்றிற்குமான ஒரு ஆசை இருக்கிறது, அழகியல் மற்றும் ஆன்மப் பசியை திருப்திபடுத்துவதற்கான ஆசையது. நான் இந்த அழைப்பை குறிப்பாக இங்கே வந்திருக்கும் இளைஞர்களிடம் விடுக்கிறேன். மிகப் பரந்த மனப்பான்மை மற்றும் உணர்வாற்றல் சார்ந்த காரணமுள்ள--அநீதிகளின் மீதான ஒரு வெறுப்பு, மனித சமூகத்தின் மீதான ஒரு அக்கறை உணர்வு, ஒரு நல்ல உலகத்திற்கான ஆசையினாலும் தான் ஒருவர் புரட்சிகர கட்சியில் இணைந்துகொள்கிறார். அதன் பின்னர், அந்த உணர்வுகளை விஞ்ஞான அறிவின் விளக்கில் அவைகளை கடினமானதாகவும், இன்னும் தெளிவானதாகவும், இன்னும் சரியானதாகவும், தவிர்க்க முடியாத வகையிலும், அவசியமாகவும் ஒருவர் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் தனது அறிவினை ஆழமாக்கிக்கொள்வதின் போக்குக்கு ஒரு குறுகிய நலன் தான் தேவை அல்லது பரந்த மனித அக்கறைக்கு தமது முதுகைத் திருப்பிக் கொள்ள வேண்டும் என யாராவது ஒருவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தால் அது துரதிர்ஷ்டமானது, துரதிஷ்ட்டத்தையும் (அவப்பேறு) விட இன்னும் மோசமானதாக இருக்கும். பயிற்றுவிக்கப்படாத, உண்மையான ஆனால் புரட்சிகர நோக்கங்களானது தவிர்க்க முடியாமல் கலைத்துவ உணர்ச்சிமயத்தினை ஒத்த தன்மையை கொண்டிருப்பதுடன், அது ஒருபோதும் முற்றாக தொலைந்துவிடாது. இத்தாலிய எழுத்தாளர் Pasolini தன்னைப்பற்றி தனது கவிதையில் வர்ணித்ததுபோலான தரத்தின் ஏதொவொன்றினை புரட்சிகர வேட்கை கொண்டிருக்கவேண்டும்: "Grown up? Never never ! ''வளர்ந்தோம்? ஒருபோதும் இல்லை ஒருபோதும் இல்லை! இருத்தலைப் போலவே ஒருபோதும் முதிராமல் அற்புத நாள் முதல் அற்புத நாள் வரை எப்போதும் பசுமையாய் இருப்போம்.'' இது ஒரு முக்கியமான கலந்துரையாடல். சார்புரீதியாக பழக்கப்படாத இப்படியான வேலை இலகுவானதாக இருப்பதில்லை. அதற்கு குறுக்குவழிகள் இல்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட தோழர்கள் தம்மை இந்த கேள்விகளுக்கு அர்ப்பணித்தாகவேண்டும். அது அக்கறையான மற்றும் நேரமெடுக்கும் முயற்சிதான். ஆனால், தற்கால சமூகம் மற்றும் சமூக உறவுகள் பற்றிய கட்சியின் புரிதலை புறநிலைரீதியாக ஆழமாக்கும் நிலைப்பாட்டில் இருந்தும் மற்றும் இன்னும் மனிதத் தன்மையானதாவும், இன்னும் நெகிழ்வானதாகவும் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தும் பார்க்கையில் அதன் பலாபலன்கள் கணிசமானவை, மேலும் அதனடிப்படையில் பரந்துபட்ட மக்கள் தட்டினருக்கு உண்மையான ஒரு புரட்சிகர அழைப்புவிடுவதற்கு கட்சி அதனது திறனை ஆழமாக்கவேண்டும் .
|