World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Hundreds of Tamils held without trial despite Sri Lankan peace talks

இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மாறாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் விசாரணையின்றி தடுத்து வைப்பு

By Shree Haran and K. Ratnayake
23 September 2002

Back to screen version

இலங்கையின் முதற் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் தாய்லாந்தில் இடம்பெற்ற போதிலும் நாட்டின் மிக கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் மறுத்துள்ளது. நாட்டின் சிறுபான்மை தமிழர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் திட்டமிடப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, பெரும்பாலானோர் தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) அங்கத்தவர்கள் அல்லது அவர்களுக்கு உதவி வருபவர்கள் என்ற போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அதன் பங்குக்காக தமிழ் கைதிகளின் விடுதலையை அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதைப் பற்றி வலியுறுத்தவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கைதிகளுக்காக கைப்பற்றிய அரசாங்க படைவீரர்களை மாற்றிக் கொள்ள ஒழுங்குகள் செய்வதில் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்களத் தீவிரவாதக் குழுக்களின் அழுத்தத்திற்குப் பணிந்தமையால் அரசாங்கத்தின் சமாதானப் பேச்சுவார்ததைகளுக்கு ஒரு வாரம் முன்னதாக குறைவடைந்தன.

செப்டம்பர் 12 அன்று அரசாங்கம் இரண்டு வாரங்களுள் இரண்டாவது தடவையாக மாற்றீட்டை தாமதப்படுத்தியது. ஆகஸ்ட் 31 இற்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி கொழும்பு ஏழு படைவீரர்களுக்கு மாற்றீடாக 23 தமிழர்களை விடுதலை செய்வதாக இருந்தது. எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டது. தமிழர்கள் தீவின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பிரதேசத்தின் விளிம்பில் உள்ள ஓமந்தைக்கு கொண்டு செல்லப்படவிருந்தனர். ஏழு இராணுவ வீர்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக கையளிக்கப்படுவதாக இருந்தது.

எவ்வாறெனினும், ஆகஸ்ட் 30 அன்று அமைச்சரவை பேச்சாளரான ஜீ.எல்.பீரிஸ், கைதிகள் மாற்றீடானது "சட்ட சிக்கல்கள்" காரணமாக சில நாட்கள் தாமதமாகும் என பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார். "சில கைதிகள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளதுடன் தொழில்நுட்ப இடைஞ்சல் சரி செய்யப்படும் வரை மாற்றீடு இடம்பெற மாட்டாது" எனக் குறிப்பிட்டதோடு, செப்டம்பர் 16 சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் செப்டம்பர் 11 அன்று இராணுவ தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல விடுதலையாவோரின் எண்ணிக்கை 23 இலிருந்து 14 இற்கு வெட்டப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளுக்கு அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சு அலுவலர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து வரும் பதிலுக்காக தாம் காத்திருப்பதாகவும் அடுத்த நாள் தயார்படுத்தப்பட்டிருந்த மாற்றீடு மீண்டும் தாமதமாகும் எனவும் பத்திரிகையாளருக்கு காட்டிக்கொண்டனர். மாற்றீடு செய்யப்படவேண்டிய கைதிகளின் எண்ணிக்கை அன்றிலிருந்து 13இற்கு வெட்டப்பட்டதுடன் ஒரு திகதியும் நிச்சயிக்கப்படவில்லை.

இந்த மாற்றங்களுக்கும் தாமதங்களுக்குமான உண்மைக் காரணம் சிங்கள பேரினவாத குழுக்களின் எதிர்ப்பேயாகும். இது மூன்று தமிழ் கைதிகள் பாரதூரமான கொலைகளுக்காக குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது இனங்காணப்பட்டுள்ளார்கள் எனக் குற்றம்சாட்டி வந்த ஊடகங்களால் எண்ணெய் வார்க்கப்பட்டு வந்தது. ஒருவர் 2000 ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதான கொலை முயற்சியின் சந்தேக நபர் எனவும், இரண்டாமவர் 1995 ல் பலாலி விமானத்தளத்தில் ஒரு விமானத் தகர்ப்புக்கு காரணமானவராக இனங்காணப்பட்டவர் எனவும், மூன்றாமவர் 1997 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். தங்கதுரையை கொன்ற கொலையாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

குமாரதுங்க, மாற்றீடு செய்யப்படவுள்ளோரின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என கோரி விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ளார். அவர் கொலை முயற்சிகள் மற்றும் குறிப்பாக மத்திய வங்கி, பிரதமரின் அலுவலகம் மீதான பல்வேறு குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பான விடுதலைப் புலி காரியாளர்கள் உட்பட "பெருமளவு எண்ணிக்கையான" கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய எண்ணியுள்ளது என குற்றஞ்சாட்டுவதன் மூலம் சிங்கள பேரினவாதிகளை மேலும் ஊக்குவித்தார்.

சிங்களத் தீவிரவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி (JVP), மேலுமொரு அடி முன்னேறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எட்டு தற்கொலை குண்டுதாரர்களை விடுதலை செய்யும்படி கோரியுள்ளார் என நியமுவ என்ற அதனது செய்தித்தாளில் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை பொய்யானது என நிரூபிக்கப்பட்டது. ஆனால் இந்த நிச்சயிக்கப்பட்ட கைதிகள் மாற்றீடானது விக்கிரமசிங்க தனது ஆளும் தேசிய ஐக்கிய முன்னணியில் உள்ள குழுக்களின் பேரினவாத பிரச்சாரத்தின் அரசியல் விளைவுகளையிட்டு பீதியடைந்துள்ளதால் தாமதமாகின்றது.

14 தமிழ் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு கைப்பிடியளவே ஆகும். பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் அறிவிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி நாடு பூராவும் உள்ள சிறைகளில் 349 தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்: களுத்துறை சிறைச்சாலையில் 199, மட்டக்களப்பில் 30, வெலிக்கடையில் 27, பதுளையில் 9, போகம்பறையில் 2, திருகோணமலையில் 8, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 4, நீர்கொழும்பில் 17, அநுராதபுரத்தில் 34, யாழ்ப்பாணத்தில் 14 மற்றும் காலியில் 5.

பெரும்பாலானவர்கள் ஒரு போதும் எந்தவொரு குற்றத்திற்கும் முயற்சித்தவர்களோ குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களோ அல்ல. நூற்றுக்கணக்கான ஏனையோரைப் போலவே அவர்களும் பொலிஸ் இராணுவ தேடுதல் வலை விரிப்புகளின் போது "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" சுற்றிவளைக்கப்பட்டவர்கள். சிலர் ஒப்புதல் வாக்கு மூலங்களை கறந்துகொள்வதற்காக சித்திரவதைகளுக்கு உள்ளக்கப்பட்டனர். இது பின்னர் அவர்களை விசாரணையின்றி மாதக்கணக்காகவும் வருடக்கணக்காகவும் தடுத்து வைத்திருப்பதற்காகன ஒரு சாட்டாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் "விடுதலைப் புலிகளின் பயற்சி பெற்றவர்கள்" மற்றும் "விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கியதால்" விடுதலைப் புலிகளின் தாக்குதல்களோடு தொடர்புபட்டவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். எவ்வாறெனினும், சிலர் ஒரு போதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை.

கடந்த சில மாதங்களில், அரசங்கமானது பொதுவில் ஒரு சில தமிழ் கைதிகளை விடுதலை செய்து வந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின்படி எல்லாமாக 415 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த்தரமான ஐந்தாம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இது பாதுகாப்பு படையினருக்கு விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை உறுதியாக வழங்கத் தவறும் எவரையும் தடுத்து வைக்க அனுமதி வழங்குகிறது.

எனினும் அரசாங்கமானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எந்தவொரு பொது விடுதலையையும் புறக்கணித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் ஜூலையில் ஊடகவியல் அறிக்கைகளுக்கு பதிலளிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்ட கைதிகளுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் வாபஸ்பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்தது. அதற்கும் மேலாக விக்கிரமசிங்க அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளோ அல்லது கொழும்பை தளமாகக் கொண்ட எந்தவொரு முதலாளித்துவ தமிழ் கட்சிகளோ தமிழ் கைதிகளின் விடுதலைக்காக பிரச்சாரங்கள் தொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் கடந்த வாரம் தாய்லாந்து பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதை சம்பிரதாய பூர்வமாக வேண்டி நின்றது. தமிழ் கூட்டமைப்பும் அவ்வாறேயாகும். எவ்வாறெனினும் இவ் அமைப்புக்கள் இப் பிரச்சினையை அப்பாற்கொண்டு செல்லவோ அல்லது கைதிகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தூக்கி நிறுத்துவதற்கு வற்புறுத்தவோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கைதிகள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது சாதாரண பகடைக் காய்களேயாகும்.

இலங்கையில் உள்ள கட்சிகளில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மாத்திரமே எல்லா தமிழ் கைதிகளினதும் உடனடி நிபந்தனையற்ற விடுதலைக்காகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத சட்டங்களையும் இரத்துச் செய்வதற்காகவும் உறுதியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. அதனது பிரச்சாரங்களின் பயனாக முன்னைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1997இல் எட்டு தமிழ் கைதிகளையும் 2001ஆம் ஆண்டு மேலும் ஆறு கைதிகளையும் விடுதலை செய்யத் தள்ளப்பட்டது.

மிக அண்மைய சம்பவத்தின்போது, 1998 ஆம் ஆண்டு ஆறு இளம் தமிழர்கள் இலங்கையின் மத்திய தோட்டப்பகுதியான அட்டனில் கைது செய்யப்பட்டதோடு தேயிலை தொழிற்சாலை மீதான குண்டுத்தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டனர். பல மாதங்களாக சிறைவைக்கப்பட்ட பின்னர் ஆரம்பக் குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட அதேவேளை, அந்த அறுவரும் சம்பந்தமில்லாத முன்னர் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களுக்கெதிரான ஒரேயொரு சாட்சி சித்திரவதையின் கீழ் பெறப்பட்ட மற்றும் அவர்கள் ஒருவருக்கும் எழுதவோ அல்லது வாசிக்கவோ தெரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட "குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் மாத்திரமேயாகும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் (World Socialist Web Site -WSWS) இணைந்து சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த பிரச்சாரத்தின் பெறுபேறாக 2001 இல், சட்ட மா அதிபர் இந்த அறுவரும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதோடு அவர்களின் விடுதலைக்கும் உத்தரவிடத் தள்ளப்பட்டார். இவ் அறுவரும் ஒரு போதும் எந்த குற்றத்திற்கும் எத்தனித்தவர்களோ குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களோ அல்லர். இவர்கள் எதிர்தரப்பினரும் நீதிமன்றமும் சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து தாமதப்படுத்தி கொண்டிருக்கையில் மூன்று வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் வாடினர்.

அரசாங்கம் பெப்பிரவரியில் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு மற்றும் இயக்கத்தின் மீதான அதனது உத்தியோபூர்வ தடையை செப்டெம்பர் 4 அன்று சம்பிரதாயப் பூர்வமாக விலக்கியதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதித்துள்ள போதிலும், நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் "விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" சிறைவைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் ஆத்திரமும் ஏமாற்றமும் இவ் வருடம் ஏற்கனவே மூன்று உண்ணாவிரத போராட்டங்களுக்கும் இம்மாதம் மற்றுமொன்றிற்குமான அச்சுறுத்தலுக்கும் வழிசமைத்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்கும் அனைவரையும் இலங்கையில் உள்ள தமிழ் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத சட்டங்களையும் இரத்துச் செய்யமாறும் கோர மீண்டும் அழைப்பு விடுக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved