World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Poverty and a lack of democratic rights A first-hand report of life in LTTE-held areas of Sri Lanka வறுமையும் ஜனநாயக உரிமைகளின்மையும் இலங்கையின் விடுதைலப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வாழ்க்கை பற்றிய ஒரு நேரடி அறிக்கை By our correspondents இலங்கையில் கொழும்பு ஊடகங்கள் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெருமளவில் சுதந்திரத்தை உருவாக்கவும் யுத்தப் பிரதேசங்களில் தமிழர்களின் வாழ்க்கை நிலையை பெரிதும் முன்னேற்றுவதற்கு வழியமைத்துள்ளதாக எடுத்துக் காட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இன்னமும் மக்கள் இராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருவதுடன் வாழ்க்கைத் தரத்திலும் எந்தவித மாற்றமும் இல்லாத அரசாங்கக் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களில் நிலைமை அதுவல்ல. நமது நிருபர்களது அறிக்கை, முன்னர் இராணுவத் தாக்குதல்களுக்கும் நீண்ட பொருளாதார தடைகளுக்கும் கீழ்ப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் நிலையிலும் பாரிய மாற்றங்களில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. 145 கிலோ மீற்றர்களுக்கு, இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தை தீவின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ.9 பாதையானது இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா நகரை அடையுமுன் வன்னியின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் கிழக்கு யாழ்குடா என்பன ஊடாக செல்கிறது. இப்பாதை பிரதான கேந்திர முக்கியத்துவமுடைய இராணுவ முகாமான ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றி யாழ் குடாநாட்டின் பெரும்பாகத்தை அப்பகுதி யாழ் நகர புறநகர் பகுதிகளுள் செல்லுமுன் நிறுத்தப்பட்ட தாக்குதலான 2000 ஏப்பிரல் மே தாக்குதலினால் பெரிதும் சீர்குலைந்திருந்தது. கடல் மார்க்கமாக பயணம் செய்வது அல்லது இராணுவ வான் போக்குவரத்தில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வது போன்ற நெருக்கடிகளை தவிர்ப்பதன் பேரில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட பலன்களில் ஏ9 பாதையைத் திறப்பதும் ஒன்றாகும். சாதாரண மக்களுக்கு யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பயணத்தில் கணிசமானளவு கஷ்டங்கள் தொடர்கின்றன. இந்த 145 கிலோமீற்றர்களை கடக்க ஐந்து வெவ்வேறு பஸ்களில் செல்லவேண்டும். வவுனியாவிலிருந்து ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி வரை சென்ற ஒருவர், அங்கிருந்து 15 நிமிடங்கள் சூனியப் பிரதேசத்தை நடந்து கடந்த பின்னர் விடுதலைப் புலிகளின் சோதனை சாவடியை அடைவார். அதன் பின் ஓமந்தையின் மறுபகுதியிலிருந்து பஸ் ஒன்று பயணிகளை மேலும் 5 கிலோமீட்டர்கள் ஏற்றி சென்று முகமாலைக்குச் செல்வதற்காக, விடுதலைப் புலிகளின் பிரதான காவல் நிலையமான புளியங்குளத்தில் உள்ள தமிழீழ போக்குவரத்து கழகத்துடன் இணைக்கும். மேலுமோர் வாகனம் இப்பயணிகளை முகமாலையிலுள்ள இராணுவக் கடவையில் யாழ் செல்லும் பஸ்ஸில் ஏற்றுவதற்காக பயணிகளை இட்டுச் செல்லும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அரசாங்க பஸ்சேவை கிடையாது. இந்த அனைத்து சேவைகளும் தனியார் நிறுவனங்களால் அதிக கட்டணங்களுடன் நடத்தப்படுகின்றன. பயணிகள் குழுக்களாக தனியார் பஸ்கள் அல்லது வான்களை வாடகைக்கமர்த்தி ஒவ்வொருவரும் ஒரு வழிப்பயணத்திற்கு 1000 ரூபா (10 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஒரு சராசரித் தொழிலாளியின் வாராந்த வேதனத்துக்கு சமமானதாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி ஊடாக ஏ9 பாதையில் செல்லும் ஒருவர், அழிவுக்குள்ளான கட்டிடங்கள், வீடுகள், கடைகள் மற்றும் கோவில்களை காண்பர். இவை 19 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தின் அழிவுச் சின்னங்களாகும். அரசசார்பற்ற நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ள "கவனம் கண்ணிவெடி" எச்சரிக்கை பலகைகளையும் காணலாம். இந்த அதிவேக வீதியானது, கண்ணிவெடிகளால் ஏற்பட்ட பெரும் கிடங்குகளை தவிர்ப்பதற்காக குறுக்கு நெடுக்கான சரளைப் பாதையாக மாறியுள்ளது. வீதிக்கு அப்பால் மக்கள் இராணுவ மோதல்களின் அறிகுறிகள் தோன்றும் போது உடனடியாக இடம்பெயரக் கூடிய வகையில், ஓலைக் கூரையால் வேயப்பட்ட மண்குடிசைகளில் வறுமைப்பிடியினுள் வாழ்வதைக் காணலாம். அநேகர் முன்னர் இடத்துக்கிடம் பெயர்ந்து நாட்கள் வாரங்கள் அல்லது மாதக்கணக்காகவும் கூட காடுகளில் மரங்களினடியில் வாழ்ந்திருக்கின்றனர். இப்பிரதேசத்தில் முறையான தண்ணீர் வசதி கிடையாது. அண்மையில் கட்டப்பட்ட பதினெட்டு மீட்டர் உயரமான நீர்த்தாங்கி விமானப்படை தாக்குதலால் சேதமடைந்துள்ளது. மக்கள் தற்போது நீண்ட தூரம் சென்று நீர் பெற வேண்டியுள்ளது. யுத்த நிறுத்தத்தின் பின்னர் அநேக குடும்பங்கள் தமது கிணறுகளை துப்பரவு செய்திருப்பினும் பெரும்பான்மையான கிணற்று நீர் உப்பு சுவையாயுள்ளது. வன்னியில் உள்ள அநேக பாடசாலைகள் விமானப்படை குண்டு வீச்சாலும் ஆட்டிலறி தாக்குதல்களாலும் அழிவுக்குள்ளாகியுள்ளன. ஒரு சில பாடசாலைகள் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி நகரில் உளள இரு பாடசாலைகள் அடிப்படை வசதிகளின்றி இயங்குகின்றன. கட்டிடங்களில் கதவுகளோ அல்லது ஜன்னல்களோ கிடையாது. இப்பகுதியின் ஏனைய பாடசாலைகள் களிமண்ணால் கட்டப்பட்டு, ஓலையால் வேயப்பட்ட, தளபாடங்களே அற்ற கொட்டகைகளாகும். அங்கு போதுமானளவு ஆசிரியர்களும் இல்லை. அநேக மாணவர்கள் பாடசாலைக்கு நடந்தோ அல்லது சைக்கிள்களிலோ பன்னிரண்டு கிலோமீற்றர் வரை கடக்கின்றனர். கிராமிய பொருளாதார ஆய்வு அபிவிருத்தி கூட்டத்தாபனத்தின் அண்மைக்கால ஆய்வின்படி, வன்னியின் ஐந்து கல்வி சேவை பகுதியிலுள்ள 25, 245 மாணவர்கள் போதுமான வசதிகளின்மையால் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை. ஏனையவர்களில் 4,768 பேர் விலகியுள்ளதாகவும், மேலும் 17,264 பேர் ஒழுங்கின்றி வருகை தருவதாகவும் 3,213 பேர் முற்றாக பாடசாலை செல்லவதில்லை. சுகாதாரப் பிரச்சனைகள் வருடக்கணக்கான யுத்தமும் பொருளாதாரத் தடையும் பாரிய சுகாதார பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. கிழக்குப் பகுதியிலிருந்து விமான குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக வன்னிக்கு ஓடியவர்கள் போர் நிறுத்தத்தின் கீழ் தற்போது மீண்டும் திரும்பிக் கொண்டுள்ளனர். செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆய்வானது கிழக்கு பகுதியில் உள்ள திருகோணமலை நகரில் மீளக்குடியமர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளில் 68 வீதமானோர் போஷாக்கின்மை அல்லது நிறைகுறைவு, மலேரியா, உட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. கிளிநொச்சியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் ஏறத்தாள 3000 மக்கள் மலேரியாவுக்கு சிகிச்சை பெற்றுள்ள அதேவேளை, மாகாண சுகாதார அதிகாரிகள் இதே பகுதியில் புதிய மலேரியா பரவல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். வறுமை, மருந்து பற்றாக்குறை போதியளவு சுகாதார சேவையின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். அநேக மக்கள் மண் குடிசைகளில் கோரை புற்களால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடிசைகளில், நுளம்புகளிலிருந்து எதுவித பாதுகாப்புமின்றி வாழ்கின்றனர். இவ்வாறான நிலைமைகளின் கீழ் சிறுவர்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். யுத்தத்தின் பயனாக வன்னிப் பகுதியில் ஒன்பது ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய சில ஆஸ்பத்திரிகளும் போதிய உபகரணங்களின்றியும் பயிற்சி பெற்ற அலுவலர்கள், மற்றும் தளபாட பற்றாக்குறைகளுடன் இயங்கிவருகின்றன. வைத்தியர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறையே பார்வையிடுகின்றனர். முழங்காவில், வேருவில் இரண்டுக்கும் ஒரே ஒரு வைத்தியரே உள்ளார். வேறொருவர் ஒரே நாளில் வேருவில்லிலுள்ள மூன்று சிகிச்சை நிலையங்களிலும் வேலை செய்கிறார். வேருவில் பிரசவ வார்ட் எந்தவித வசதிகளோ வைத்தியரோ இன்றி காணப்படுகின்றது. கடுமையான நோயாளர்கள் 30 மைல்களுக்கப்பால் உள்ள அக்கிராயான் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள். ஆனால் அதற்கும் அவசர நிலைமைகளில் வாகன வசதி கிடையாது. வன்னியில் காணப்படும் சுகாதார சேவை நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. தமது சுய தேவைக்காக அவ்வமைப்பு, அரச ஆஸ்பத்திரிகளுக்கு அரசாங்கத்தால் அனுப்பப்படும் மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களில் குறிப்பிடத்தக்க தொகையை எடுத்துக் கொள்கிறது. அக்கிராயன் ஆஸ்பத்திரியிலுள்ள ஒரே ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரும் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தனியார் ஆஸ்பத்திரியில் சேவையாற்றுகிறார். சாதாரண மக்களால் அங்கு சென்று சிகிச்சை பெற முடியாது. விடுதலைப் புலிகளின் "மருத்துவப் பிரிவு" அக்கிராயன் அரசாங்க ஆஸ்பத்திரியை இயக்கி வருகின்ற போதிலும் அவர்களுக்கு முறையான மருத்துவப் பயிற்சி கிடையாது. ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் அலுவலர்கள் கால் முறிந்த ஒரு வாலிபருக்கு ஆயுர்வேத சிகிச்சை முறையை வழங்கினர். பெற்றோரின் வேண்டு கோளுக்கிணங்க, அவர் வவுனியா அரசாங்க ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பின் வைத்தியர்கள் அவரது கால் எலும்புகள் முறையற்று பிணைக்கப்பட்டிருப்பதாகவும் மீண்டும் திருத்த முடியாது எனவும் தெரிவித்தனர். அல்சர் மாத்திரைகளால் சிகிச்சையளிக்கப்பட்ட ஒரு வயிற்றுவலியுடைய நோயாளி வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றலான பின்னர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் அவரைப் பார்ப்பதற்குக் கூட அவரது மனைவிக்கு விடுதலைப் புலிகளால் "பாஸ்" அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களில் குடும்பக் கட்டுப்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைப் பெற்ற, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கருத்தடை செய்ய அனுமதிக்கப்படுவர். வரிகளும் அதிகவிலையும் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலான பொருளாதாரத் தடையை அரைவாசியாக குறைத்திருப்பினும் கூட, அத்தியாவசியப் பொருட்களின் விலை கொழும்புடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்தாக உள்ளது. விடுதலைப் புலிகளினால் அமுல்படுத்தப்படும் வரிகளால் சாதாரண மக்கள் கணிசமானளவு கஷ்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். வழமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் ஒவ்வொரு லொறிக்கும் 25 சதவீத வரி அறவிடப்படுகிறது. இதன் விளைவாக 100,000 ரூபா பெறுமதியான பொருட்கள் உடனடியாக 125,000 ரூபாயாக அதிகரிக்கின்றன. இதற்கும் மேலாக பெரு வியாபாரிகளிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்யும் சிறு வியாபாரிகள், வாங்கும் பொருட்களுக்கு இன்னுமோர் வரியை செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். ஏதாவதொரு பொருள் விலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்காவிட்டால், விடுதலைப் புலிகளானால் பலத்த தண்டத்திற்கு உட்படுத்தப்படுவார். இத்தகைய செயல்முறைகளால் பொருட்களின் விலை மேலும் உயர்த்தப்படுகிறது. ஒரு கிலோ சீனி ரூ. 50, 1 கிலோ மாவு ரூ. 27 ஒரு பனடோல் வில்லை ரூ. 2.50 ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ.40 ஆக கொழும்பு விலையிலும் 50 சதவீதம் உயர்ந்ததாக காணப்படுகிறது. கூட்டுறவு சங்க கடைகளில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 18 ரூபாவாக விற்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருப்பினும் அங்கு மண்ணெண்ணெய் கிடையாது. தீவின் தென்பகுதியில் 350 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மூட்டை சீமெந்து இங்கு 900 ரூபாயாகும். கூட்டுறவு கடைகளில் பொருட்களின் விலை கொழும்பு விலைகளை ஒத்திருப்பினும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் காலாவதியானவையாகும். விடுதலைப் புலிகள் புதிய பொருட்களை எடுத்துக் கொண்டு தமது களஞ்சியத்திலிருந்து காலாவதியான பழைய பொருட்களை கூட்டுறவு கடைகளுக்கு அனுப்புகிறது. இவையாவும் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட அவர்களது ஆதரவாளரான கூட்டுறவு கடை நிர்வாகிகளால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. விடுதலைப் புலிகளினால் நடத்தப்படும் கடைகளில் புதிய பொருட்கள் இருந்தாலும் மக்களால் அதை கொள்வனவு செய்ய முடியாது. ஒரு வயதான விவசாயி மிகக் கசப்புடன் இங்ஙனம் கூறினார்: "பொருளாதார தடை எங்கே நீக்கப்பட்டது? பொருட் போக்குவரத்தை தடுப்பதும், கொண்டு வரப்படும் பொருட்களை வரிகளினூடாக பதுக்கி வைத்திருப்பதும் கூட பொருளாதாரத் தடையே. தடை இருக்கிறதோ இல்லையோ நாம் அதே நிலையிலேயே இருக்கிறோம்." வன்னியிலுள்ள அநேக மக்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் நிவாரணத்தில் தங்கி வாழும் அகதிகளாகும். ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான மாதாந்த நிவாரண நிதி 630 ரூபாய்களாகும். ஒருவருக்கு ரூ.168 மட்டுமே. ஆனால் இது இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், விடுதலைப் புலிகள் இந்த நிவாரண நிதியை 540 ரூபாயாகவும் 135 ரூபாயாகவும் முறையே குறைத்துள்ளது. வன்னி மக்கள் பிரதானமாக விவசாயத் தொழிலிலும் மீன்பிடிப்பதிலும் தங்கியுள்ளனர். ஏனைய வேலைத் தளங்கள் யுத்தத்தால் அழிந்துபோய் விட்டன. இந்தப் பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகள் வரி விதிக்கின்றனர். விவசாயிகளின் நுகர்வுப் பொருட்களான உரம், பசளை, கிருமி நாசினி போன்றவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் 50 கிலோ நெல் மூடையை ரூ. 1,050 நிர்ணயம் செய்வதோடு ஒரு மூடைக்கு ரூ.150 வரியை விவசாயிகளிடமிருந்து அறவிடுகின்றனர். அநேக விவசாயிகள் மேலதிகக் கடனில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான நிலங்கள் பல ஆண்டுகளாக பயிர்ச் செய்கையின்றி தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன. சில கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளன. முன்னர் கலப்பை இழுக்கப் பயன்படுத்தப்பட்ட எருமைகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடற்புலிகளிடமிருந்து பாஸ் பெறவேண்டும். அதுவும் நான்கு அல்லது ஐந்து வரிகளைக் கட்டியே பெறவேண்டும். அநேக மீனவர்கள் மீன் பிடி படகு, உபகரணம் மற்றும் வலைகள் இன்றி ஆழ்கடலில் குளித்து நண்டு, கடலட்டை பிடித்து சம்பாதிக்க தள்ளப்பட்டுள்ளனர். அப்படியிருப்பினும் கூட விடுதலைப் புலிகள் வருமானத்தலிருந்து ஒரு பகுதியை சுரண்டிக்கொள்வார்கள். "நாம் ஓரிரு கடலட்டை பிடிக்க நாள் முழுதும் கடலில் மூழ்குவோம். சில நாளில் ஒன்றுமே பிடிக்க முடிவதில்லை. ரூ.300 பெறுமதியான கடல் அட்டைக்கு விடுதலைப் புலிகள் ரூ.150 விலை நிர்ணயிக்கின்றனர். விஸ்வமடுவில் ஒரு கிலோ இறாலை 80 ரூபாவுக்கு வாங்கும் விடுதலைப் புலிகள் ரூ. 300-500 வரை மன்னார் மீன்கடைகளில் விற்கின்றனர்" என ஒரு மீனவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுவோருக்கும் உள்வருவோருக்கும் கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. வன்னியிலிருந்து வெளியேறும் 26-45 வயதுக்கிடையிலான சகலரும் 200 ரூபா செலுத்த வேண்டும். 26 வயதுக்குட்பட்டோர் ரூ. 300 செலுத்த வேண்டும். ஒரு சமயம் 1997ல் விடுதலைப் புலிகளின் எதிரிகளான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப்) அங்கத்தவர் ஒருவர் இங்கிருந்து வேலணைக்கு (யாழ்பகுதி) அனுமதியின்றி சென்றார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் அன்மையில் அவர் திரும்பி வந்தபோது கைது செய்யப்பட்டார். அடிப்படை உரிமைகளை பொறுத்த மட்டில், எந்தவொரு மாற்றமுமே கிடையாது. விடுதலைப்
புலிகள் மட்டுமே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு இயக்கமாகும். விடுதலை புலிகளை
தமிழ் மக்களது ஏக பிரதிகள் என ஏற்றுக்கொண்டுள்ள ஏனைய தமிழ் கட்சிகள் இந்த தடையை ஏற்றுக்கொள்ளனர்.
பொதுக் கூட்டங்கள் ஏனைய அமைப்புகளது அரசியல் இலக்கிய விநியோகம் போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. |