WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
WSWS Chairman David North addresses Berlin meeting on US war drive against
Iraq
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் யுத்த முன்னெடுப்பு பற்றி பேர்லின் கூட்டத்தில் உலக
சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த்தின் உரை
By our reporter
14 November 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
நவம்பர் 4 ஆம் தேதியன்று, உலக சோசலிச வலைத் தளம் ஈராக்கிற்கு
எதிரான யுத்தத்தை எதிர்க்க தேவையான ஒரு அரசியல் மூலோபாயம் பற்றி விவாதிக்க பொதுக்கூட்டம் ஒன்றை பேர்லினிலுள்ள
ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் நடத்தியது. அரங்கம் நிரம்பிய இந்தப் பொதுக் கூட்டத்தில் உலக சோசலிச
வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர்
டேவிட் நோர்த் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சு உயிரோட்டமான சில வேளைகளில் சூடான விவாதத்தை படியவிட்டது.
நோர்த் தன்னுடைய உரையை ``இருபதாம் நூற்றாண்டின் துன்பகரமான அனுபவங்கள்``
பற்றிய குறிப்புக்களுடன் ஆரம்பித்தார். அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை மேலெழுந்தவாரியாக பிரதிபலிக்கும் பழக்கத்தால்,
அரசியல் வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், தெளிவான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் புறக்கணித்து
விடுகின்றனர். ஆனால், அரசியல் நிகழ்வுகளுக்கு நம்முடைய அணுகுமுறை, ஒரு குறிப்பிட்ட நாளில் செய்தித் தாள்கள்
மற்றும் தொலைக் காட்சியைப் பார்ப்பதால் உருவாகும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நாம் நம்மை
முழு வரலாற்று அனுபவங்களில், முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் அரசியல் அனுபவங்களில் அடித்தளமாகக்
கொண்டிருக்கிறோம்."
``100 வருடங்களுக்கு முன் நிலைமை என்ன?`` என்று வினாவிய நோர்த், வெளிப்படையாகத்
தெரியும் ஐரோப்பிய சமூகத்தின் செல்வம் மற்றும் செழிப்பின் பின்னணியில், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்,
வரலாற்றிலேயே ஒரு பிரமாண்டமான இரத்த களரிக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டிருந்தன. வரலாற்றின்
விதிகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவில்லாமல், எதிர்வரும் இருபதிலிருந்து, முப்பது ஆண்டுகளில் அந்த நகரத்திலும், அந்த
நாட்டிலும் என்ன நடக்குமென்று, 1902 அல்லது 1903 ஆம் ஆண்டு பேர்லினில், யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்?
அக்காலத்தில் முன்னிலையிலிருந்த மார்க்சிஸ்டுகள் மட்டுமே, தெளிவான, நோக்குநிலையை
வழங்கும் நிலையில் இருந்தனர். அவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது எதாவதெனில், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை
வரலாற்று நிகழ்வுகளுடன் அவற்றின் தொடர்பில் ஆராய முடிந்ததால் தான்.
மேலும் நோர்த் தொடர்ந்தார், ``உலகம் என்பது கணமும் தொடர்பும்
ஆகும். எல்லா புதிய அபிவிருத்திகளும் தங்களுக்குள், மிக ஆழமான, பரந்த வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்குகளைக்
கொண்டுள்ளன மற்றும் விளக்கிக் காட்டலாக இருக்கின்றன. ஒரு விஞ்ஞான முன்னோக்கு பற்றிப் பேசுகையில், நம் மனதில்
வளர்த்திருக்கும் கருத்துருக்களுக்கும் அபிவிருத்தியின் புறநிலைப் போக்குகளுக்கும் இடையே உள்ள உண்மையான உறவினைப்
பற்றியே பேசுகிறோம்."
மேலும் அவர் விளக்கும் போது, சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் பலம் என்பது,
சமுதாய பொருளாதார அபிவிருத்தியின் புறநிலைப் போக்குகளை சரியாகப் புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு
நடைமுறை வழக்கத்தினை உருவாக்குவதற்கான அதன் திறனில் இருக்கிறது. மற்றொரு புறம், ஆளும் முதலாளித்துவ வர்க்கமான
பூர்ஷ்வாக்களின் அடிப்படை பலவீனம், ஒரு சமூக சக்தி என்ற வகையில், அதன் அகநிலை நோக்கங்களும் வர்க்க நலன்களும்,
புறநிலையான சமூக முன்னேற்றத்திற்கு தீர்க்க முடியாத முரண்பாடுகளாகவே இருக்கின்றன என்ற உண்மையில் உள்ளது.
நாள்தோறும், அமெரிக்க செய்தித்தாள்கள் மற்றும் செய்தி ஊடக விமர்சனங்களில் இந்த முரண்பாடுகள், அபத்தமான,
சுய ஏமாற்றுக் கருத்துகளாக வெளிப்படுகின்றன.
நோர்த் மேலும் தெளிவு படுத்தினார். உலகினை ஆதிக்கம் செலுத்திடுவதற்காக புஷ்
அரசாங்கம் மேற்கொள்ளும் போர் ஏற்பாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த திட்டங்கள், 12 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த
சோவியத் யூனியனின் பொறிவுக்குப் பின்னரான சர்வதேச அரசியல் அபிவிருத்தி பற்றிய அடிப்படையில் தவறான விளக்கத்தினால்
வழி நடத்தப்படுகின்றன. ``ஒரு குளிர்யுத்த வெற்றி`` என்று ஆருடம் சொல்லவில்லை, ஆனால் அவை, இருபதாம்
நூற்றாண்டின் அனைத்து தீர்க்க இயலாத பிரச்சனைகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு திரும்ப வந்து விட்டதைக் கூறுகின்றது.
``தோற்றங்கள் ஏமாற்றும் இயல்புடையன`` என்று நோர்த் மேலும் கூறினார். ``இராணுவ
பலத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதிகரித்துவரும் நம்பிக்கை மற்றும் அதனுடைய பழைய நட்பு நாடுகளின்
மேல் அது காட்டும் ஈவிரக்கமற்ற போக்கு ஆகியவை, பலம் மற்றும் தன்னம்பிக்கையின் அறிகுறி அல்ல, ஆனால்
பலவீனம் மற்றும் நிலையில்லாத தன்மையின் அறிகுறியே ஆகும்.
``வளரும் பொருளாதார பிரச்சனைகளால் தாக்குண்ட வாஷிங்டனிலுள்ள ஆளும் செல்வந்தத்
தட்டினர், அவர்களது சர்வதேச போட்டியாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக எண்ணி, உலக அரசியலில் தங்களுடைய
ஆதிக்கத்தை நிலை நாட்ட இராணுவ பலத்தினை உபயோகிக்கின்றனர்`` என்றார் நோர்த். தற்போது போருக்காக
செய்யப்படும் ஆயத்தங்கள் இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிகரித்து வரும் உள்நாட்டு சமூக பதட்டம் மற்றும் மோதல்களுக்கு புஷ் அரசாங்கத்திடமிருந்து
எந்தவொரு பதிலும் இல்லை. மேலும் நாட்டுப்பற்று உணர்வுகளை பரவச் செய்திட மேற்கொண்ட முயற்சிகளும்
பெரும்பான்மையான அமெரிக்க மக்களிடமிருந்து போதிய அளவு ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. அதே
நேரத்தில், அமெரிக்க அரசாங்கம், ``பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்`` என்ற உத்தியினை, அடிப்படை ஜனநாயக
உரிமைகளை அழித்திட உதவும் வாகனமாக உபயோகித்துள்ளது.
தற்போதுள்ள புள்ளியியல் விவரப்படியும், சமூக ஆய்வுகளின் அடிப்படையிலும், அமெரிக்காவில்
ஏற்பட்டுள்ள சமுதாயத்தின் அழிவுகர சீர்குலைவினை நோர்த் முன்வைத்தார். சமுதாயத்தின் ஓர் எல்லையில் சிறு
செல்வந்தத்தட்டினர், இதுவரையிலும் விவரிக்க முடியாத அளவு அதிக செல்வத்தைச் சேர்த்துள்ளனர். ஆனால் அதேவளை,
பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலை அதிகம் துன்பம் தருவதாகவும், பல கோடி ஏழை மக்களின்
நிலை தாங்க முடியாததாகவும் உள்ளது. அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்களுக்கு எந்தவொரு வடிகாலும் இல்லை,
என்ற சூழ்நிலையில் தொழிற் சங்கங்கள், உழைக்கும் மக்களுடைய நலன்களை ஏமாற்றியுள்ளன. அமெரிக்காவில் சமூக
வெடிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
மேலும் நோர்த் கூறுகையில், ``பல வருடங்களாக ஐரோப்பிய இடது சாரிகள் அமெரிக்க
தொழிலாளர்களை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்``, வாஷிங்டனிற்கு சமீபத்தில் வந்திருந்த ஜேர்மன் வெளியுறவுத் துறை
அமைச்சர், ஜோஸ்கா ஃபிஷரால் (பசுமைக் கட்சி) கோழைத்தனமான, அடிமைத்தனமான நடத்தையில் அது காட்டப்பட்டது.
அமெரிக்க சமுதாயத்தின் உள்ளே இருக்கும் முரண்பாடுகள் மற்றும் மோதல்களைப் பற்றி குறைத்து மதிப்பிடலிலும், அதனால்
அமெரிக்க அரசாங்கத்திடம் இருப்பதாக நம்பப்படும் காணமுடியாத சக்தி எனும் மிகையான மதிப்பிடலிலும் அது அதன்
வேரைக் கொண்டிருக்கிறது.
நோர்த் தொடர்ந்தார்: ``அமெரிக்காவிலிருந்து வந்துள்ள சோசலிஸ்ட் என்ற வகையில்
போருக்கு எதிரான இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியமானது என நான் கருதும் ஒன்றை வற்புறுத்தி கூறுவதற்கு அனுமதியுங்கள்.
உங்களில் பலர் நான் கூறுவதைக் கேட்டு, பெரும்பாலனவற்றினை என்னோடு ஆமோதிப்பதாக நான் எண்ணுகின்றேன்.
நிச்சயமாக, நான் பேசுவதைக் கவனிக்கையில், நீங்கள் கூறக்கூடும்: ஆமாம், இவையெல்லாம் உண்மை தான், ஆனால்
போரை எவ்வாறு தடுப்பது? ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷுரோடரின் போர் எதிர்ப்புக் கொள்கையில் உங்களுக்குச்
சில பிரமைகள் இருப்பதாக நான் கற்பனை செய்தாலும், அமெரிக்கா போரை விரும்பிடும்போது, எவ்வாறு போரை
நிறுத்த முடியும் என்ற கேள்வி எழுகின்றது. எத்தகைய சமுதாய சக்தியால் போரை நிறுத்தும் கொள்கையை மேற்கொள்ள
முடியும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்கும் திறனுள்ள சமூக சக்தி எது?
"போருக்கு எதிரான தீவிர எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம்
திரும்ப வேண்டும். நிலவுகின்ற அரசியல் குழப்பத்தைப் பொருட்படுத்தாது, அந்த எதிர்ப்பு, ஐக்கிய அமெரிக்க அரசுகளில்
இருக்கும் புரட்சிகரமான சக்தியாகிய, தொழிலாள வர்க்கத்திடம் இருக்கிறது என்கிற அங்கீகாரத்தை அடிப்படையாகக்
கொள்ள வேண்டும். இந்த முன்னோக்கை மறுக்கின்ற எவரும் உண்மையான போர் எதிர்ப்புக் கொள்கையொன்றை
உருவாக்க இயலாது. தனிப்பட்ட முதலாளித்துவ தலைமைகளின் போர் எதிர்ப்புத் திறமைகள் என்று அழைக்கப்படுவதில்,
முற்றிலும் நம்பிக்கையில்லாத நிலைக்கோ அல்லது பிரமை கொண்ட நிலைக்கோ நீங்கள் தள்ளப்படுவீர்கள்.
வலியுறுத்தப்பட வேண்டிய இரண்டாவது புள்ளி, தொழிலாள வர்க்கத்தின் பக்கம்
திரும்புவதில் தொக்கி நிற்கிறது. போருக்கு எதிரான எதிர்ப்பு, சர்வதேச அளவிலான எதிர்ப்பாக இருக்க வேண்டும்.
நெருக்கடியின் ஆரம்ப நிலையிலேயே, போருக்கு எதிரான எதிர்ப்பு கணிசமான அளவில் இருப்பது நமக்கு நம்பிக்கையின்
வளமாக இருக்கவேண்டும். உற்பத்தி பூகோளமயமாதல் வர்க்கப் போராட்டம் நனவுபூர்வமாக சர்வதேச மயமாதலுக்கான
புற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இப்போதைய தேவை இராணுவ
வாதம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச அளவிலான இயக்கம்.
இவ்வியக்கம் சமுதாயத்தில் நிலவிடும் முக்கிய பிரச்சனைகளுடன், போரை தொடர்பு படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக
அதன் சக்தியை செலுத்திடும். எமது சர்வதேச இயக்கத்தின் மையத்தில் இருப்பது இந்த வேலைத் திட்டம்தான்.
அடுத்ததாக தொடர்ந்த விவாதத்தில், ஈராக்கிய அரசு எதிர்ப்பாளர் கமிட்டியின்
உறுப்பினர் ஒருவர், உரை நிகழ்த்தியவர் ஈராக்கிய அரசிற்கு ஆதரவு அளித்ததாகவும், பயங்கரவாதத்தின் மூலம் ஆளும்
ஓர் ஆட்சியைப் ஆதரித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவின் போர் தயாரிப்புக்களை ஆதரித்த அவர்
மேலும், ``பாசிசம் வன்முறையின் மூலமே முறியடிக்கப்படக் கூடும்`` என்று வரலாறு காட்டியுள்ளது என கத்தினார்.
நோர்த்தின் பதில் பலமான கைத்தட்டல்களைப் பெற்றது. அவர் கூறினார்,
``போருக்கு எதிரான நம்முடைய எதிர்ப்பு நாம் சதாம் ஹூசேனின் கொள்கைகளை ஆதரிக்கிறோம் என அர்த்தப்படுத்தாது.
ஆனால் சதாம் ஹூசேனுக்கு எதிரான போராட்டத்தை ஏகாதிபத்தியத்திற்கு ஒப்பந்தம் விட நாம் தயாரிக்கவில்லை.
அமெரிக்க அரசாங்கத்தின் பலமான ஆதரவினை சதாம் ஹூசேனின் ஆட்சி பெற்ற பொழுதிலேயே எமது இயக்கம் அதை
எதிர்த்தது. 1970ஆம் ஆண்டுகளில் ஹூசேன் ஆட்சிக்கு வருவதை ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஆதரித்தன. ஏனென்றால்,
மத்திய கிழக்கு நாடுகளில் இடதுசாரி சக்தி மற்றும் சோசலிச சக்திகளுக்கு எதிராக அவரை மதிப்பு மிக்க ஆதரவாளராக
அது நினைத்தது. 1980ஆம் ஆண்டுகளில் ஈரானிற்கு எதிரான போரிலும் அவர்கள் அவரை ஆதரித்தனர்.
அமெரிக்காவின் ஆதரவினை எந்தவொரு ஈராக்கிய மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்காகவும்
அணுகுவது முற்றிலும் திவாலான கொள்கையாகும். ஏகாதிபத்தியம் ஆனது எல்லா வளர்ச்சிடையாத நாடுகளிலும் இரத்தம்
தோய்ந்த பிற்போக்கான மரபுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் குண்டுகள் மற்றும் ஈராக் மக்களின் படுகொலைகள்
மூலம் ஈராக்கில் ஜனநாயகம் வரப்போவதில்லை. அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் இணைத்துக்
கொள்ளும் எந்தவொரு ஈராக்கியரும், மிகக் கொடிய காட்டிக் கொடுப்பு எனும் குற்ற உணர்வை அடைய நேரிடும்.
``ஈராக்கிய தொழிலாளர் இயக்கம் நீண்ட சரித்திரத்தை உடையது. ஸ்ராலினுடைய
கொள்கையினால் அரசியல் அழிவை சந்தித்த, உலகிலேயே பலமான கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டிருந்தது. ஈராக்கின்
இயற்கை வளங்களை தன்னுடைய சுய லாபத்திற்கு திருட விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈராக்கிய மக்களின்
நலனுக்கு பின்னரே அத்தகைய சேர்ம இருப்பைப் பயன்படுத்தலாம் என்று அதனை நம்புவதற்கு, ஒருவருக்கு அளவிற்கு
மிஞ்சிய தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் குணம் வேண்டும்.
நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின் சடவடிக்கைகள் மீது வரிகள் மற்றும் ஏனைய தடுப்பு
நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும்-- அட்டாக் இயக்கத்தினை ஆதரிக்கும் இரண்டு இளைஞர்கள்,
உடனடியாக போரை நிறுத்திவிடும் வழி என்ன என கேட்டனர். நோர்த் அதற்கு பதிலளித்தார்: ``நாங்கள் அரசியல்
அதிசயம் நிழ்த்துபவர்கள் அல்ல. பெரும் அளவிலான மக்களிடையே புதிய தலைமையை உருவாக்கிட, குறுக்கு வழிகளைக்
கண்டுப்பிடிக்கவோ, தொடரும் கடினமான போராட்டங்களைத் தவிர்க்கவோ முடியும் என்று நினைப்பது தவறு. இன்று
உலகிலேயே எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை அரசியல் முன்னோக்கு நெருக்கடியாகும். ஒரு விதத்திலோ அல்லது
வேறு விதத்திலோ தொழிலாள வர்க்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என கூறிய எல்லா பழைய அமைப்புகளும்,
அவர்களை அப்பட்டமாக ஏமாற்றிவிட்டனர். இதுவே இருபதாம் நூற்றாண்டின் துன்பகரமான மரபுரிமையாகும்.
"சர்வதேச புரட்சிகர கட்சி ஒன்றைக் கட்டுவதை எமது முன்னோக்கு கொண்டிருக்கிறது.
உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் அரசியல் ஆதரவற்ற நிலையினைக் கருத்தில் கொண்டே நாம்
இக்கொள்கையை மேற்கொண்டுள்ளோம். அவர்களுடைய நலன்களுக்காக பேசும் எந்த கட்சியினையும் அவர்கள் பார்க்கவில்லை.
"உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான புரட்சிகரமான மற்றும் ஆழமான
மாற்றம் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் வாழ்கின்றோம். அத்தகைய மாற்றங்கள் தவிர்க்கமுடியாத வகையில் அரசியல்
மூலமாக தம்மை வெளிப்படுத்துகின்றதென வரலாறு உரைக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக அளவில்
ஏற்படும் பொருளாதார வளர்ச்சியினைப் பொறுத்தே அரசியல் வடிவங்களின் தோன்றலுக்கான சாத்தியம் நிலவுகின்றது.
"சர்வதேச அரசியல் இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கு பதிலீடாக வேறெதுவும் ஏதும் கிடையாது.
யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை கொண்டு வருவதற்குத் தேவையானது, ஒவ்வொரு
நாட்டிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சமுதாய பிரச்சனைகளை யுத்தம் தொடர்பான
பிரச்சினையுடன் நாம் இணைப்பதேயாகும். யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரே யதார்த்தபூர்வமான
முன்னோக்கு, பசுமைக் கட்சியினர் உள்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக
அணிதிரட்டுவதைக் கொண்டிருக்கிறது."
See Also :
Top of page
|