World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை ஆப்கான் போலீஸ் சுட்டுக் கொலை By Peter Symonds காபூலில் கடந்த திங்கள் இரவு, பல்கலைக்கழக துயிற்கூடத்தில், நிலவும் நிலைமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை, போலீஸார் தானியங்கி துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, நான்கு மாணவர்கள் பலியானார்கள், மேலும் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் பகலில் புனித ரம்ளான் நோன்பிருந்து விட்டு, விடுதியில் மாலை வேளைக்கான உணவு தீர்ந்துவிட்டது என்ற செய்தி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் சகாக்கள் கொல்லப்பட்டதற்கும் விடுதியில் சரிவர உணவு, நீர், மின்சாரம், வெப்பமூட்டி இல்லாததற்கும் தங்களது கோபத்தைக் காட்டுமுகமாக, அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முற்பட்டபொழுது இந்த மோதல் செவ்வாய்கிழமை வரை நீடித்தது. மீண்டும் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் தள்ள, போலீஸ் தானியங்கி துப்பாக்கியால் வானில் சுட்டும், நீரை பாய்ச்சியும் மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, பல்கலைக்கழக கட்டிடத்தை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். இதில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர், மேலும் பலர் கைதாயினர். ஹமீத் என்ற இளம் மாணவர் செய்தியாளரிடம் சொல்கையில், "திங்களன்று இரவில் ஆர்ப்பாட்டத்தின்போது எங்கள் நண்பர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று ஜனாதிபதி மாளிகை நோக்கி அமைதி ஊர்வலம் நடத்த இருக்கும்போது இவ்வாறு நிகழ்ந்துள்ளது. கடந்த மூன்று, நான்கு நாட்களாக சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை மற்றும் விடுதியில் மின்சாரம் இல்லை" என்றார். ஜல்மே உமர்கல் என்ற விவசாயத்துறை மாணவர் கூறினார்: ``உணவு, நீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் தவிக்கிறோம். இப்போது எங்களை கொன்றும் வருகிறார்கள். நாங்கள் வாழ்வது ஜனநாயக நாட்டிலா, சர்வாதிகார நாட்டிலா என்று தெரியவில்லை`` என்கிறார். ``இரவில் படிக்கமுடியாத அளவுக்கு இங்கு மிகவும் குளிராக உள்ளது. நாங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் எழுதிப் படிக்கிறோம்`` என அப்துல் ஹதி என்ற ஆர்பாட்டக்காரர் கூறினார். மாணவர்கள் துப்பாக்கி, தடி, கற்கள் கொண்டு தாக்கியதால், எங்களைக் காத்துக்கொள்ள அவ்வாறு செய்தோம் என உள்துறை அமைச்சக அதிகாரிகளும், போலீசும் சொல்கிறார்கள். பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குனர் தின் மொகமது, மாணவர்களில் சில நாசகாரர்களும் இருந்தார்கள் என்று சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமில்லை என வெளிப்படையாக கண்டித்தார். துணை உள்துறை அமைச்சர் ஜென்ரல் ஹெலல், மாணவர்கள் அல் கொய்தாவுக்கும், பின் லாடனுக்கும் ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர் என்றும் இத்தகைய "பதட்டம் விளைவிக்கும் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை போலீஸ் தடுக்கவேண்டியதாயிற்று" என்றும் சொல்கிறார். அசோசியட் பிரஸிடம் உமய்த் என்ற மாணவர், "ஆர்ப்பாட்டம் செய்யும் ஒவ்வொரு மாணவனும் தலிபான் அல்லது அல்-கொய்தா என்று கூறப்படுகிறான். நீங்கள் பட்டினி கிடப்பதோ அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உடனே நீங்கள் தலிபானை சார்ந்தவர்கள்" என சொல்கிறார்கள் என்றார். மாணவர்கள் மீது நடந்துள்ள இந்த மிருகத்தனமான போலீஸ் ஒடுக்கு முறைகள், அத்தகைய எதிர்ப்புக்கள் பரந்த அளவிலான அரசியல் மற்றும் சமூக அமைதியின்மையை தட்டி விடும் என்பது பற்றி ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாயின் நிர்வாகத்திற்கும் பாதுகாப்பு எந்திரத்திற்கும் உள்ள ஆழமான கவலையை எதிரொலிக்கிறது. சீர்கேடடைந்த விடுதியில் அவதிப்படும் மாணவர்களைப் போலத்தான், அடிப்படை வசதிகளுக்கான நாளாந்தப் போராட்டத்தில் பெருவாரியான ஆப்கான் அதேவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நடந்த சம்பவம் பற்றி விவாதிக்க, கர்சாய் செவ்வாயன்று ஒரு அவசரக்கூட்டத்திற்கு மூத்த அதிகாரிகளை அழைத்திருந்தார். மாணவர்களின் கோபத்தை தணிக்க, போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டார் மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்தார். ஆயினும், அதேவேளை, "பல்கலைக்கழகம் அரசியல் நடத்தும் இடம் அல்ல என்பதை மீண்டும் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்" என்றும் மாணவர்களை எச்சரித்தார். இதுபோன்ற ஆர்பாட்டங்கள் மேலும் தொடர்ந்தால் விடுதிகளை மூடிவிடுவோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் மொகமத் ஷரீஃப் ஃபெய்ஸ் எச்சரித்துள்ளார். ஆழமான சமூக நெருக்கடி அமெரிக்க ஆதரவு வடக்குப்பிராந்திய கூட்டணியின் இராணுவம், தலிபான் ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வர காபூலில் நுழைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மாணவர்களின் கிளர்ச்சி, பெரும்பான்மை மக்கள் எதிர்கொள்ளும் வறுமையை கர்சாய் அரசாங்கமும் பிரதான வல்லரசுகளும் கவனிக்கத் தவறிவிட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. நடந்து கொண்டிருக்கும் சமூக நெருக்கடி, ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடு அமைதியையும் செழிப்பையும் கொண்டுவருதற்காக ஒருபோதும் அல்ல, அதற்கு மாறாக அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் சூறையாடும் நோக்கத்திற்காக என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது. ஆப்கானின் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து வல்லரசுகளின் சந்திப்பு ஜனவரி மாதத்தில் டோக்கியோவில் நடைபெற்றது. அதில் உதவித்தொகையாக ஐந்து பில்லியன் டாலர்களை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இத்தொகை காபூல் கேட்டதை விட மிகவும் குறைவானது. பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைகள் ஒருபுறம் இருக்க, கர்சாய் அரசின் அதிகாரிகளுக்கே ஊதியம் தரக்கூட இது போதுமானதாக இல்லை. செப்டம்பரில் உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பில், அமெரிக்க கருவூல செயலாளர் போல் ஓநெய்ல், 165 மில்லியன் டாலர் நிதி உதவியை கர்சாய் அரசுக்கு ஆறு மாதத்திற்கு வழங்கினால்தான், அரசு நிர்வாகம் செயல்பட முடியும், "தினசரி அலுவல் நடத்த இதுவே போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது" என்றார். தலைநகரின் பெரும் பகுதிகள் முழுவதும் இடிபாடுகளிலும், சேவைகள் ஒன்றில் அழிந்து விட்டது அல்லது இல்லாத நிலையிலும், தலைநகருக்கு வெளியே நிலைமை இன்னும் மோசமாகவும் உள்ளது. இருபது ஆண்டுகளாக நடந்த போரினால், அடிப்படை கட்டமைப்புக்கள் கூட புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு, குறிப்பாக வறட்சியான இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. பலருக்கு சரியான மருத்துவ வசதி அங்கு இல்லை. கடந்த மாதம் உலக உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "அங்கு கிராமப்புற பகுதியில் நான்கு மில்லியன் மக்களுக்கு, அதாவது கிட்டத்தட்ட இருபது சதவீத மக்கள் தொகைக்கு, அடுத்த 12 மாதங்களுக்கு உயிர்வாழ உணவு அவசரமாய் தேவைப்படும் என்கிறது. இதில் 1.4 மில்லியன் மக்கள், குளிர்காலம் தொடங்கியதும் எளிதில் அடையமுடியாத இடங்களில் வாழ்பவர்கள் என மதிப்பிடப்படுகின்றது. இந்தப் புள்ளி விபரங்களில் "நகர்ப்புற பாதிக்கப்பட்டோர், திரும்பி வந்தவர்கள் மற்றும் உள்ளுக்குள் இடம் மாறியவர்கள்" சேர்க்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் சுகாதாரத்துறையின் புள்ளி விபரம் உலகிலேயே மிகவும் மோசமானது. யுனிசெஃப் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அங்கு ஒரு லட்சம் பிரசவங்களில், 1600 தாய்மார்கள் இறப்பதாகவும், அதில் 87 சதவிகித இறப்புக்கள் சரியான மருத்துவ சிகிச்சை இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்ககூடியதென்றும் தெரிவிக்கின்றது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில், இந்த நாடு உலகிலேயே நான்காம் இடத்தை வகிக்கின்றது. வாஷிங்டன் துணையோடு பதவியேற்ற கர்சாயின் வலுவற்ற நிர்வாகம் இனக்குழு, மத உணர்வு வழியில் ஆழமாய் பிளவுபட்டு உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், கடந்த ஆண்டு காபூலைக் கைப்பற்றிய வடபிராந்திய கூட்டணியின் யுத்தப் பிரபுக்களிடம் உள்ளது. தலைநகருக்கு வெளியே நாடானது, தத்தம் சொந்த எதேச்சதிகார மற்றும் காட்டுமிராண்டி ஆட்சி நடத்தி வரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் யுத்தப் பிரபுக்கள் மற்றும் குடிப்படைக் கொமாண்டர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நாட்டில் ஆழமாகிவரும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தவிக்கும்
கர்சாய், தமது ஆட்சியைத் தக்கவைக்க அமெரிக்கா மற்றும் ஏனைய வல்லரசுகளின் தயவை முற்றிலும் சார்ந்துள்ளது. மாணவர்கள்
எதிர்ப்புக்கு போலீசின் பதிலானது, கர்சாய் நிர்வாகமானது எந்த எதிர்ப்பையும் இட்டு விழிப்பாக இருக்கின்றது
என்பதையும் அரசியல் சாராத எந்த ஒரு எதிர்ப்பையும் கூட ஒடுக்குவதற்கு அது சற்றும் தயங்காது என்பதையும் விளக்கிக்
காட்டுகின்றது. |