WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sinhala extremists stir up anti-Muslim violence in Sri Lankan capital
இலங்கைத் தலைநகரில் சிங்களத் தீவிரவாதிகள் முஸ்லிம் விரோத வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர்
By K. Ratnayake
12 November 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
இலங்கைத் தலைநகரான கொழும்பில் ஒரு முஸ்லிம் மத பாடசாலையை விரிவுபடுத்துவது
சம்பந்தமான ஒரு சிறிய உள்ளூர் முரண்பாட்டை, சிங்களத் தீவிரவாதிகள் கடந்த மாத இறுதியில் ஒரு பெரும் இன
முரண்பாடாக தூண்டிவிட்டனர். இனவாதிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளையும் கடைகளையும் கொள்ளையடித்து
தீயிட்டதோடு, பாதுகாப்புப் படையினரை நகரின் பரந்த பிரதேசங்களூடாக மூன்று நாள் ஊரடங்குச் சட்டத்தை
அமுல்செய்யத் தள்ளினர். முஸ்லிம் குழுக்களுக்கு இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல்லப்பட்டதோடு
பலர் காயமடைந்தனர்.
இந்த மோதல்கள், நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரை ஒரு முடிவுக்கு கொணரும்
நோக்கில் கொழும்பு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தாய்லாந்தில் ஆரம்பமாகிய சமாதானப்
பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்று இடம்பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 30 அன்று தொடங்கியது.
இந்த மோதல்கள் நாட்டின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவதை எதிர்க்கும்
சிங்களத் தீவிரவாதிகளால் தூண்டிவிடப்பட்டுவரும் பதட்ட நிலைமைகளின் அறிகுறிகளாகும். இந்த திணிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,
எந்தவொரு வாய் தர்க்கமும் கூட இனவிரோதங்களை தூண்டுவதற்கு பற்றிக்கொள்ளக்கூடும்.
இந்த முரண்பாடுகள் வீடுகளும் சிறிய வியாபார நிலையங்களும் கலந்து அமைந்துள்ள ஒரு
பிரதேசமான மாளிகாவத்தையில் இடம்பெற்றன. அது பலவித பிரதேசங்களில் அதிகளவில் தனித்துவாழும் பெருந்தொகையான
வறிய முஸ்லிம் மற்றும் சிங்களம் அதே போல் சிறிய அளவு தமிழர்களினதும் வசிப்பிடமாகும்.
1999 இல் உள்ளூர் முஸ்லிம்கள் ஒரு துண்டு நிலத்தில் -சுமார் 50 சதுர மீட்டர்கள்-
மதப் பாடசாலையொன்றை நிர்மானித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் இன்னுமொரு சிறய துண்டு நிலத்தை வாங்கிய பின்னர்,
மாநகர சபையின் அனுமதியுடன் இந்தப் பாடசாலையை விஸ்தரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
அருகில் இருக்கும் போதிராஜராமய கோவிலில் உள்ள பெளத்த பிக்குகள் இது பெளத்தர்களின்
உரிமைகளை மீறக்கூடும் எனக் குற்றம்சாட்டி, பேரினவாதக் கட்சியான சிங்கள உறுமய கட்சியின் ஆதரவுடன், நிர்மாண
நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். சில சிறிய ஆர்ப்பாட்டங்கள்
இடம்பெற்றிருந்தன. பொலிசார் "சட்ட விதிமுறைகளை மீறல்" என்ற அடிப்படையில், திட்டமிடப்பட்ட கட்டிடத்துக்கு
எதிரான ஒரு நீதிமன்ற வழக்கை பதிவுசெய்வதற்காக இந்த ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்திக் கொண்டனர்.
நீதிமன்றம் அக்டோபர் 25 அன்று நிர்மாண நடவடிக்கைகளுக்கு சார்பாக தீர்ப்பளித்ததோடு
வேலைகளும் அதே தினம் ஆரம்பிக்கப்பட்டன. எவ்வாறெனினும், ஐந்து நாட்களின் பின்னர், பொலிசார் நகரின் பிரதான
நிர்வாக அலுவலரான கொழும்பு பிரதேச செயலாளரிடம் இருந்து ஒரு கடிதத்தை முன்வைத்தனர். அந்தக் கடிதமானது
இந்த நிலம் சம்பந்தமாக முரண்பாடு இருப்பதாகக் கூறி, வேலைகளை இடை நிறுத்தக் கோரியது. எதிர்ப்பை ஒழுங்கு
செய்த பெளத்த பிக்குவான தானபத்தேகம சோபித, தனது வேண்டுகோளின் பேரிலேயே அக் கடிதம் எழுதப்பட்டிருந்ததாக
ஊடகங்களிடம் ஏற்றுக்கொண்டார்.
நிர்மாண நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானர்வகள், நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக் காட்டி
கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, உயர்மட்ட அலுவலர்கள் உட்பட, பொலிசும் வேலைகளை நிறுத்துவதற்கு முயற்சித்தனர்.
பொலிசாருடனான வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, சம்பவங்களை பார்க்க கூடியிருந்த சிங்கள
குண்டர் கும்பல்கள் கற்களை வீசி உள்ளூர் முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தனர். இந்தக் கும்பல்கள் பொலிசாரின்
முன்னிலையில் தாக்குதல்களை நடத்தியதோடு வீடுகளை எரித்து கடைகளை கொள்ளையிட்டும் வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
முஸ்லிம் குழுக்கள் பதில் தாக்குதலுக்காக கூடியபோது பொலிசார் அவர்களை விரட்டிக் கலைத்தனர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறியதையடுத்து அரசாங்கமானது நகரின் பல பிரதேசங்களில்
ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்ததோடு, அதை அமுல் செய்வதற்காக சுமார் 7,000 இராணுவத்தினரையும் பொலிசாரையும்
அணிதிரட்டியது. சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக ஊறிப்போயுள்ள பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் பிரதானமாக
நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தது. முஸ்லிம் குழுக்களை செயலிழக்கச் செய்வதற்காக மக்கள்
கூடியிருந்த பிரதேசங்களில் பகிரங்கமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த படையினர் மொகமட் ஜுனைட் என்ற ஒரு
தொழிலாளியை கொன்றனர். அதே பிரதேசத்தில், புகாரி பரீடாவான 50 வயது முதிர்ந்த பெண்ணும், 26 வயது
கர்ப்பிணித் தாயான சித்தி பவுசியாவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததோடு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்லப்பட்டனர்.
ஜூனைட் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவர் அண்மையில் உள்ள ஒரு களஞ்சியத்துக்கு
சென்றுகொண்டிருந்தபோதே கொல்லப்பட்டதாக அவரது மனைவி குறிப்பிட்டார். இராணுவத்தின் கண்மூடித்தனமான
துப்பாக்கிச் சூடுகளால் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல சுமார் 20 நிமிடம் ஆகியது என உள்ளூர் மக்கள்
விளக்கினர். ஆஸ்பத்திரியை அண்மிக்கும் போது அவர் உயிரிழந்தார். அடுத்த நாள் அவரது மரணச் சடங்கில் தமது கண்டனக்
குரலை எழுப்புவதற்காக 10,000 பேர் கலந்துகொண்டனர்.
பொலிசார் மத்திய மற்றும் வட கொழும்பு பிரதேசங்களில் அக்டோபர் 31 திகதியும்
நவம்பர் 1 திகதியும் பி.ப. 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரையும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக
அமுல் செய்யத் தள்ளப்பட்டனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தமது வீடுகளும் கடைகளும் தொடர்ச்சியாக
தாக்கப்பட்டதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர். மாளிகாவத்தைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான
500 வீடுகளிலும் கடைகளிலும் சுமார் 300 சேதமுற்றுள்ளதோடு சில டாக்சிகள், மோட்டார் பைக்குகள், லொரிகள்
மற்றும் வாகனங்களும் சேதமுற்றுள்ளன. பழிவாங்கல் தாக்குதல்களின் போது சிங்களவர்களுக்குச் சொந்தமான சுமார்
10 வீடுகள் முஸ்லிம் கும்பல்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
ஒரு மெக்கானிக்கான எம்.எம்.ஏ. நிசாம், அக்டோபர் 30 வன்முறைகளைக் கேள்விப்பட்டவுடன்
வீட்டுக்கு விரைந்ததாக உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். "நான் வேலை செய்யும் கரேஜிக்கு
சொந்தமான ஒரு வாகனத்திலேயே வந்தேன். குண்டர்கள் தடிகளையும் வாள்களையும் தூக்கிக்கொண்டு எனது வீட்டுக்கு
வந்தார்கள். நாங்கள் ஓடிவிட்டோம். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் எனது வீட்டை நாசம் செய்ததோடு
எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றார்கள். அத்தோடு ஒரு முச்சக்கர வண்டியும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.
நாங்கள் ஏழைகள். எனது மனைவி வாழ்க்கைச் செலவுக்காக வீட்டில் சங்கிலிகள் செய்கிறார். நாம் எமது
வாழ்க்கையை மீண்டும் எவ்வாறு ஆரம்பிப்பது? என அவர் தெரிவித்தார்.
இன்னுமொரு குடியிருப்பாளரான 49 வயது மொகமட் பாயிஸ் நடந்தவற்றை விளக்கினார்.
"யாரோ ஒருவர் பிஸ்டலால் என்னைக் குறிவைத்தபோது நான் ஓடினேன். வீடுகளை சேதப்படுத்தியது ஏனைய பிரதேசங்களில்
இருந்து வந்த குண்டர்களேயானாலும் அவர்கள் தமக்கு முஸ்லிம் வீடுகளைக் காட்டும் ஆட்களை வைத்திருந்தார்கள். மக்கள்
ஏன் ஒரு மதப் பாடசாலைக்காக இவ்வாறானவற்றை செய்யவேண்டும்? நாங்கள் பல ஆண்டுகளாக சமாதானமாக
வாழ்ந்து வந்துள்ளோம். ஆனால் நாம் அதை எதிர்காலத்தில் செய்வது எப்படி? எனக் கேள்வி எழுப்பினார்.
சிங்களப் பேரினவாதிகள் முஸ்லிம் விரோத உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் பேரில் மதப்
பாடசாலை விஸ்தரிப்புத் திட்டத்தைப் பற்றிக் கொள்வார்களேயானால், அது தெளிவாக ஒரு பரந்த திட்டத்தின் பாகமாகும்.
உள்ளூர் பெளத்த கோவிலுடன் தொடர்புபட்ட அமைப்புகளால் விநியோகிக்கப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில்:
"இன்னுமொரு ஆப்கானிஸ்தானின் பிறப்பைத் தடுக்க, புத்தர் சிலைகளை தகர்க்கும் பின்லேடன்களின் பிறப்பைத் தவிர்க்க
முன்னணிக்கு வாருங்கள்," எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
"சிங்களவர்களை காப்பதற்கான ஆயுத முன்னணி" என தன்னைத் தானே அழைத்துக்கொண்ட
ஒரு அமைப்பு, நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு மத பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
கடிதமொன்றை அனுப்பியிருந்தது. எந்தவொரு தலையீட்டையும் நிராகரிக்க முயற்சிக்கும் சிங்கள உறுமய கட்சி வெளியிட்டிருந்த
அறிக்கையானது: "சட்டவிரோத நிர்மாணங்களை நிறுத்து! பெளத்த உரிமைகளுக்காக அணிதிரள்!..... சிங்களவர்களை
ஐக்கியப்படுத்து! பயமின்றி முன்செல்! என பிரசங்கம் செய்திருந்தது. சி.உ. தலைவர் திலக் கருணாரத்ன, இஸ்லாமிய
பாடசாலைகள் பயங்கரவாத தொடர்புகளைக் கொண்டிருப்பதால் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமானது என ஒரு
பத்திரிகையாளர் மாநாட்டில் ஆத்திரமூட்டும் வகையில் தெரிவித்தார்.
இந்த இன வன்முறைகளுக்கான பகிரங்கத் தூண்டுதல்களானவை,
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தாய்லாந்துப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான
சிங்கள உறுமய, மக்கள் விடுதலை முன்னணி (JVP), பெளத்த
பெருந்தலைவர்களாலான ஏனைய சிங்களத் தீவிரவாதிகள் மற்றும் எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணி ஆகியோரின்
பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துவதன் பேரிலேயே இடம்பெற்றன. இந்த குழுக்கள், நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிரான
பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு நகர்வையும் எதிர்ப்பதோடு தீவின் கிழக்கில் ஒரு தனியான நிர்வாக
சபையை உருவாக்கும் முஸ்லிம் கும்பலின் கோரிக்கையையும் எதிர்க்கின்றன.
மத்திய கொழும்பில் சிறிய மதப் பாடசாலைக்கான அதனது நிர்மாண நடவடிக்கைகள்
இன்னமும் நிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2, கொழும்பு பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற பெளத்த
பிக்குகள், இஸ்லாமிய மத குருக்கள் மற்றும் பொலிஸ் ஆகியோரது உயர் மட்ட கூட்டமானது சிங்களத் தீவிரவாதிகளுக்கு
சார்பாக அடிபணிந்து போனது. பாடசாலை தொடர்ந்து இயங்கமுடியும். ஆனால் எந்வொரு விஸ்தரிப்பும் செய்யக்
கூடாது. "இந்த திட்டம் (நிர்மாணப் பணிகள்) முன்செல்லாது என பல முன்னணி பெளத்த மத குருக்களுக்கு பெளத்தமத
விவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக," கொழும்பு துணை மேயர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
Top of page
|