Kashmir election results in defeat for ruling party
காஷ்மீர் தேர்தல் முடிவுகள்-- தோல்வியில் ஆளும் கட்சி
By Deepal Jayasekera
22 October 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தல், கடந்த 50 ஆண்டுகளுக்கு
மேலாக ஆட்சியிலிருந்த தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு முடிவான தோல்வியைத் தந்திருக்கிறது. கட்சியின் தலவர்
உமர் அப்துல்லா, அவரது தாத்தா ஷேக் அப்துல்லாவினால் தொடங்கப்பட்ட தேசிய மாநாடு கட்சியில், அவரது
தந்தை பரூக் அப்துல்லாவைப் பின்பற்றி அம்மாநிலத்தின் முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அம்மாநிலத்தின்
கோடை கால தலைநகரில் அவரது வாய்ப்பை இழந்தார்.
தேர்தல் மிகப் பரவலான வன்முறை மற்றும் உறுதிப்படுத்தாத ஓட்டு ஏய்ப்பு ஆகியவற்றுடன்
நடந்தாலும் அறுதிப் பெரும்பான்மையினை எந்த ஒரு கட்சிக்கும் தரவில்லை. 87 இடங்களைக் கொண்டிருந்த மாநில
சட்டமன்றத்தில் முன்னர் 57 இடங்களைக கொண்டிருந்த தேசிய மாநாடு கட்சி வெறும் 28 இடங்களாகக்
குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் இருந்து 21 இடங்களாக தன்னுடைய நிலையை உயர்த்தியுள்ளது மற்றும்
மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் தொடங்கப்பட்டிருந்தாலும் 15 இடங்களைப் பெற்றுள்ளது.
தில்லியில் மத்திய கூட்டரசாங்கத்தில் முன்னணி கட்சியான இந்து வெறி பாரதிய ஜனதாக்
கட்சி எட்டு இடங்களில் ஒரு இடத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. மேலும் அதன் தேர்தல்
தோழமைக் கட்சியான ஜம்மு மாநில மோர்ச்சா, முதன் முதலாகத் தேர்தலில் போட்டி இட்டாலும், போட்டியிட்ட
11 இடங்களில் 1 இடத்தினை மட்டுமே வெல்ல முடிந்தது. மீதி உள்ள இடங்கள் பிற சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சையாகப்
போட்டியிட்டவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் நான்கு கட்டங்களாக செப்டம்பர் 16 முதல் தொடங்கி அக்டோபர் 8 அன்று
முடிந்தது. ஆயினும், புதிய அரசாங்கம் அமைத்திட இன்று வரை எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. காங்கிரஸ்
மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய இவற்றுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் யார் முதலமைச்சர் பதவியில்
இருப்பது என்ற பிரச்சினையில் இருக்கிறது. தற்போதைய முதலமைச்சர் பரூக அப்துல்லா தொடர்ந்து இடைக்கால
பொறுப்பை ஏற்க மறுத்தது, தேர்தல் முடிந்த பத்து நாட்களில் பி.ஜே.பி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் நேரடி
ஆட்சிக்கு வழி திறந்து விட்டிருக்கிறது.
இந்திய அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் இந்தத் தேர்தலின் முடிவினை "அரசியல்
பூகம்பமென" விவரித்துள்ளார். "ஓரளவாவது இயல்புநிலை திரும்பிட இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று கருத்துரைத்துள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாநிலத்தில், இந்தியப் பாதுகாப்புப் படைக்கும் இந்திய ஆட்சியை எதிர்க்கும்
இஸ்லாமிய அடிப்படைவாத குடிப்படைக்கும் (Militia)
இடையே நடக்கும் சண்டையில், கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய
50,000 பேர்கள் இறந்திருக்கின்றனர் என மதிப்பிடப்படுகிறது.
தேர்தல் அரசியலின் திரிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளே இந்தத் தேர்தல் முடிவுகள் இரண்டு
பக்கங்களிலும் சண்டைக்குப் பொறுப்பனாவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் உணர்வினைப் பிரதிபலிக்கிறது. மாநிலத்தின்
எல்லா பகுதிகளிலும் சண்டை தீவிரமடைந்திட நேரடியாகக் காரணமானவர்களான பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் தேசிய
மாநாட்டுக் கட்சி ஆகியோரை தேர்தல் வாக்காளர்கள் விலக்கி வைத்து, மாநிலத்தில் அமைதியைக் கொணர்ந்திட
யாரால் இயலும் என நம்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் வாக்களித்துள்ளனர்.
இம் முடிவினில் கருத்தைக் கவருகின்ற சிறப்பு அம்சம் முஸ்லிம் ஆதிக்கம் உள்ள பகுதிகளில்
மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியே வந்திருப்பதாகும். இக்கட்சி காங்கிரசின் முன்னாள் உறுப்பினரும் உள்துறை
அமைச்சருமான முக்தி முகம்மது சயீதால் தொடங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் தேர்தல் களத்தினை முன்னின்று
நடத்திய கட்சியின் துணைத் தலைவரான அவரது மகள் மெக்பூபா முக்தி மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்திய பாதுகாப்புப் படையினரால் நீண்ட நாட்கள் நடந்த மனித உரிமை மீறல்களை
விமர்சித்தாலும், அமைதியை நிலைநாட்டுபவராக தன்னைப்பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்கிட மெக்பூபா முக்தி கவனமாகவே
செயல்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீர் பற்றிய பேச்சவார்த்தைக்கு அழைப்பு
விடுத்தார் மற்றும் மேலும் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவர்த்தை நடத்திடவும் உறுதி
அளித்தார். மேலும் அவர்கள் மதிப்புடனும் நற்பெயருடனும் தங்களது ஆயுதங்களைக் கீழேபோட ஒரு வழி அவர்களுக்குத்
தேவை என்றும் கூறி உள்ளார்.
இந்துக்கள் ஆதிக்கமுள்ள ஜம்முவில் காங்கிரஸ் தன்னுடைய பெரும்பாலான தேர்தல் ஆதாயத்தினை,
பாரதீய ஜனதா தளம் மற்றும் அதன் இந்து தீவிரவாத கூட்டாளியான, ஜம்மு மாநில மோர்ச்சா வின் தோல்வி மூலம்
அடைந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காஷ்மீரின் அனைத்துப் பிரிவினர் --இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும்
புத்த மதத்தினர்-- மற்றும் சந்தேகம் உடையோர் உட்பட என்கிற தற்காப்பு வாசகக் குறிப்புடன் பல்வேறு பிரிவினைவாத
இயக்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தள்ளார்.
அதேநேரத்தில் அதிகமாகியுள்ள வாக்களிப்பு முடிவுகள், முஸ்லிம் வாக்காளர் மத்தியில்,
சட்டரீதியான பிரிவினைவாத அமைப்புக்களின் தொளதொளத்த கூட்டணியான, அனைத்துக்கட்சி ஹூரியத் மாநாடு
கட்சியின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பிற்கு ஆதரவு குறைந்துள்ளதைக் குறிக்கின்றது. மேலும் வாக்களித்தவர்கள் ஆயுதம்
ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வன்முறை மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 46 சதவீதத்திற்கும் குறைவாக
இருந்தாலும், இக் குறிப்பிடத்தக்க வகையில், 1999ம் ஆண்டு தேசிய தேர்தலில் பெற்ற 32 சதவீதத்திற்கு அதிகமாகவே
இருந்தது. ஜம்மு உட்பட அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை வகிக்கும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டினருகில் உள்ள முக்கிய மாவட்டங்களான கார்ணா
(71 சதவீதம்), குரூஸ் (77சதவீதம்), மற்றும் உரி (67சதவீதம்) உள்பட அதிகப்பட்ச வாக்களிப்பு பதிவாகி உள்ளது.
தொடர்ந்திடும் குறைந்த அளவிலான ஒட்டுமொத்த வாக்குப் பதிவு பிரதிபலிப்பது, வெறுமனே
ஆயுதமேந்திய பாதுகாப்புப் படைகள் மீதுள்ள பயம் அல்ல, மாறாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்பாடுகளின்
மீது வாக்காளர்களுக்கு உள்ள வெறுப்பு மற்றம் தொடர்ந்தும் சீர்கெட்ட மற்றும் முறையற்ற தேர்தல் நடவடிக்கைகள்
மீதான அவநம்பிக்கை -இதை ஒத்த உணர்வுகளே வாக்களித்த மக்களால் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் மீதான வெறுப்பு
தேசிய மாநாட்டுக் கட்சியின் தோல்வி, அதன் நிர்வாகத்திற்கு
பரந்த அளவிலான வெறுப்பையே காட்டுகிறது. மாநிலத்திற்கு
"அதிகபட்சம் சுயாட்சி" பெற்றிட போராடுவோம் என்று வாக்களித்தே இக்கட்சி 1991ம் ஆண்டு பேரவைத் தேர்தலில்
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. ஆறு வருடங்கள் கழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்
அதனுடைய அடக்குமுறை ஆட்சி, லஞ்ச ஊழல் மற்றும் அது இந்து வெறி பாரதிய ஜனதாக் கட்சியுடனான அதன் சந்தர்ப்பவாதக்
கூட்டு தோழமையினால் முற்றிலும் சீரழிந்தது. பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாயியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில், இளைய வெளியுறவுத்துறை அமைச்சராக ஒமர் அப்துல்லா
பணியாற்றியுள்ளார்.
கடந்த டிசம்பரில் புதுதில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தில் நடந்த
பிரிவினைவாத கொரில்லாக்களால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மிகப் பெரிய இராணுவக் கட்டி எழுப்பல்
மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான வாஜ்பாயினுடைய வலுச்சண்டைக்கு இழுக்கும் போக்கினையும், தேசிய மாநாட்டுக்
கட்சி ஆதரித்தது. காஷ்மீர் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் ஏந்திய பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப்
படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. பீரங்கி மற்றும் குண்டுகளின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குடிமக்கள் பலரின்
இறப்புக்கு காரணமாகியது ஆயிரக் கணக்கானோரை அகதிகள் முகாமிற்கு செல்ல வைத்தது.
தேர்தல் வாக்குகள் பிறகட்சிகள் மேல் உள்ள நம்பிக்கையை விடவும் தேசிய கட்சிக்கு
எதிரான போக்கினையே அதிகமாக பிரதிபலித்துள்ளது என்று பல கருத்துரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு
கருத்துரையாளர் மாலினி பார்த்தசாரதி "இந்து" நாளிதழில் குறிப்பிடுகையில், காங்கிரசின் பணி சிக்கலாகிவிட்டதென்பதே
அரசியல் நடைமுறை உண்மை என்றும், இந்தத் தேர்தல் முடிவுகள் வேறு பிற கட்சிகள் மீதான வேண்டுகோளை விடவும்
தேசிய மாநாட்டுக் கட்சி மீதான பொதுமக்களின் வெறுப்பையே பிரதிபலிக்கின்றது."
தேர்தல் முடிவுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஹூரியத் கட்சி, "இந்த வாக்குகள்
மத்திய அரசிற்கு (பாரதிய ஜனதாக் கட்சிக்கு) எதிரானது" என்று கூறியுள்ளது. "குறிப்பிட்ட மட்டத்திற்கு காஷ்மீர்
மக்களுடைய அபிலாஷைகளைப் பற்றிப் பேசுவோர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான பேச்சுவார்த்தை
மற்றும் பிரிவினையாளர்களின் விடுதலைக்கு பரிந்துரை செய்திடுவோர்" ஆகியோரை மேற்கோள் காட்டி, அதன் தலைவர்
அப்துல் கானிபட் காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் ஒற்றுமையுடன் செயல்படக் கதவைத் திறந்து வைத்துள்ளார்.
திரைக்குப் பின்னால் இருந்த அமெரிக்க அரசாங்கத்தின் தலையீடு, பல காலமாக காஷ்மீர்
மீதான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கிய ஒரு அடி எடுப்பாக, முதலில் ஹூரியத் கட்சியைத் தேர்தலில்
பங்கேற்க வற்புறுத்தினாலும், அது தற்போது அப்பகுதி மட்டும் அல்லாது, அதற்கு அப்பாலும் உள்ள மேற்கு ஆசியா
மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாஷிங்டனின் பரந்த குறிக்கோள்களை மறைமுகமாக அழித்திடக் கூடியதாக
மாறியுள்ளது.
அக்டோபர் 10ம் தேதி அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர்,
பிரதமர் வாஜ்பாயி தேர்தலை நடத்தியதற்காக புகழ்ந்துரைக்கும் போது, "இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய
இருநாடுகளையும் இழுபறியிலுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்திட, காஷ்மீர் பிரச்சினை உட்பட ராஜீய ரீதியில
பேச்சுவார்த்தையை விரைவில் புதுப்பிப்பதை நோக்கிய ஒரு வலுவான முயற்சியினை எடுக்க நாங்கள் அழைத்துள்ளோம்"
எனக் கூறினார். மேலும் அவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுடனான பேச்சுவார்த்தையைத் துவங்கிட இந்திய அரசாங்கத்தின்
ஈடுபாட்டினையும் வரவேற்றுள்ளார்.
வாஜ்பாயி அரசாங்கத்தின் அனுமதியுடன் செயல்படும் காஷ்மீர் கமிட்டி எனும் அரசு
சாரா நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்க நாட்டின் அதிகாரிகள் பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்துள்ளனர்.
அக்டோபர் 7ம் தேதி, தேர்தல் நடப்பதற்கு ஒருநாள் முன்னர், அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளாக்வில், காஷ்மீர்
கமிட்டியுடன் அடுத்ததாக என்ன செய்வது என்பதைப் பற்றி விவாதித்திட, முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியின்
தலைமையில் ஒரு மதிய வேளை உணவு கூட்டத்தை நடத்தி இருந்தார்.
காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட, எந்த ஒரு கட்சியும் காஷ்மீர்
பிரச்சினைக்கு முற்போக்கான தீர்வினைக் கூறவில்லை. 1947ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியலில்
பெரும் பங்கு வகித்த காங்கிரஸ் கட்சி, காஷ்மீரைப் பிரிவினை செய்ததற்கும் மற்றும் 1990ம் ஆண்டு முதல் சண்டைக்கு
வழிவகுத்த வகுப்புவாதத்தைத் தூண்டி விட்டதற்கும் மிகப் பெரிய அளவில் அரசியல் பொறுப்பினை ஏற்க வேண்டி உள்ளது.
அதிகமான சுயாட்சி உரிமை, பிராந்திய சபைகளை உருவாக்குதல் மற்றும் மாநிலத்தைப் பிரித்தல் --என முன்மொழியப்பட்ட
அனைத்துத் "தீர்வுகளும்" முதல் இடத்தில் இந்த மோதலுக்கு வழிவகுத்த அதே வகுப்பு வாத அரசியலின் தொடர்ச்சியையே
அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன அவை மேலும் பதட்டங்களுக்கே வழி கோலும்.
See Also :
இந்தியா காஷ்மீரில் ஜனநாயக விரோத தேர்தலை தயார் செய்கிறது
Top of page
|