World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

White House snubs German foreign minister

வெள்ளை மாளிகை ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சரை அவமதித்துள்ளது

By Barry Grey
6 November 2002

Back to screen version

கடந்த வாரம் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சரான ஜொஸ்கா பிஸ்ஸரின் வாஷிங்டனுக்கான விஜயத்தின்போது வெள்ளைமாளிகை தனதுபாணியில் ஒரு இழிவுபடுத்தும் அவமதிப்பை வழங்கியுள்ளது.

ஜேர்மனியின் பசுமைக் கட்சியின் தலைவர், சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி கூட்டரசாங்கத்தில் ஜேர்மனி பிரதமரான சமூக ஜனநாயகக் கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடருக்கு அடுத்த முக்கியமானவராகும். இது சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கடந்த 22 செப்டம்பர் இரண்டாம் தடவையாக பதவி ஏற்றபின்னர் அமெரிக்காவிற்கான ஒரு முக்கிய ஜேர்மன் தலைவரின் விஜயமாகும். கடந்த காலத்தில் பிஸ்ஸர் தனது விஜயத்தின்போது உதவி ஜனாதிபதியான டிக் சென்னி, தேசியபாதுகாப்பு ஆலோசகரான கொன்டலீசா ரைஸ் போன்றோரை வழமையாக சந்தித்துள்ளார். ஆனால் இம்முறை வெள்ளைமாளிகைக்கு அழைக்கப்படாததுடன், பாதுகாப்பு அமைச்சரான கொலின் பெளலை மட்டுமே சந்தித்தார்.

இந்த அவமரியாதையானது, ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்ததால், தேர்தலின் கடைசி வாரங்களில் வெற்றியை பெற்றுக்கொண்ட சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டரசாங்கத்திற்கு புஷ் நிர்வாகத்தால் பகிரங்க செய்தியை அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். தேர்தலுக்கு முந்திய வாரங்களின் கருத்துக் கணிப்பீடுகளில் ஷ்ரோடரும், பிஸ்ஸரும் கிறிஸ்தவ சமூக யூனியனின் தலைவரான எட்முண்ட் ஸ்ரொய்பரின் வலதுசாரி எதிர்க்கட்சியின் பின்தங்கியிருந்தனர். எவ்வாறிருந்தபோதிலும், ஜேர்மனியின் பரந்த யுத்த எதிர்ப்பு போக்கிற்கு அழைப்புவிட முடிவெடுத்ததிலிருந்து விரைவாக முன்னணிக்கு தள்ளப்பட்டதுடன், தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.

இதற்கு புஷ் நிர்வாகமானது பிரச்சனையுடன் ஆத்திரத்தை மறைத்தபடி பிரதிபலித்ததுடன், மேலும் வாஷிங்டனின் யுத்த தயாரிப்புக்கான பரந்த மற்றும் ஆழமான எதிர்ப்பை ஜேர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதும் உணர்ந்துகொண்டது. அமெரிக்காவிலும் கூட யுத்த எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியை சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சியின் வெற்றியானது தூண்டிவிடும் என வெள்ளை மாளிகை பயந்ததற்கும் காரணங்கள் உண்டு.

ஜேர்மன் தேர்தலின்போது புஷ் நிர்வாகமானது ஸ்ரோய்பருக்கான ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன் தேர்தலின் பின்னர் வழமைக்கு மாறான இராஜதந்திர நடைமுறையை ஏற்படுத்தி ஷ்ரோடரின் வெற்றிக்கு தனது வாழ்த்தை தெரிவிக்க மறுத்தது. இன்றுவரையில் வாழ்த்துச்செய்தி தொடர்பான ஒரு சிறிய குறிப்பைக் கூட புஷ் அனுப்பவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க மறுத்ததுடன், புஷ் நிர்வாகத்தின் பல முக்கிய தலைவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு ''நஞ்சூட்டப்பட்டு்ள்ளதாக'' குறிப்பிட்டனர்.

ஷ்ரோடரும், பிஸ்ஸரும் தமது பங்கிற்கு அமெரிக்க அரசாங்கத்துடனான முரண்பாடுகளை குறைத்துக்கொள்ள தீவிரமாக இயங்கினர். ஜேர்மன் தேர்தல் நடந்து சிலநாட்களின் பின்னர் வாஷிங்டனுக்கு செல்ல பிஸ்ஸர் திட்டமிட்டிருந்தபோதிலும், வெள்ளை மாளிகை அவர் ஒரு அழையாத விருந்தாளி என தெரிவித்திருந்தது. இறுதியில் அக்டோபர் 30 ஆம் திகதி ஒரு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோதிலும், வெள்ளை மாளிகை வாசல்கள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுகொண்டார்.

புஷ் நிர்வாகத்தின் பேச்சாளர்கள் இத்திட்டமிட்ட அவமதிப்பை குறைத்துமதிப்பிட்டதாக தெரிகின்றது. ஒரு வெள்ளை மாளிகை அதிகாரியிடம் கேட்கப்பட்டபோது, அவமதிப்பானது வேண்டுமென்று செய்யப்பட்டது என்பதை நிராகரித்தார். பிஸ்ஸருடனான கலந்துரையாடல் குறித்து பெளல் பின்னர் ஒருநாள் அறிக்கை வழங்குவார் என குறிப்பிட்டார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் மீதான வெள்ளை மாளிகையின் முரண்பாடானது வரவிருக்கும் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் தொடர்பாக ஷ்ரோடரும், பிஸ்ஸரும் தமது நிலைப்பாட்டை மாற்றிய திகதியுடன் இணைந்துள்ளது. வாஷிங்டனுக்கான பிஸ்ஸரின் விஜயத்திற்கு முன்னர் ஜேர்மன் பாராளுமன்றத்தில் கடந்தவார ஆரம்பத்தில் ஷ்ரோடர் ''ஈராக் மீதான சாத்தியமான யுத்தத்தில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம்'' என தெரிவித்திருந்தார். இதே கூட்டத்தில் ''ஈராக்கை ஒரு முன்னணியில் இருத்துவது பிரயோசனமானதா, நான் இல்லை என்றே கூறுவேன்'' என பிஸ்ஸர் கேட்டிருந்தார்.

இதேவேளை, அமெரிக்காவுடனான ஜேர்மனியின் முரண்பாடானது ஒரு தந்திரோபாய ரீதியானதல்ல கொள்கை ரீதியானது என திரும்ப திரும்ப வலியுறுத்தியிருந்தார். ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கான'' ஜேர்மனியின் ஆதரவை திரும்ப திரும்ப கூறியதுடன், 1999 இல் யூகோஸ்லாவியா மீதான ஆகாய யுத்தத்தில் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கம் கலந்துகொண்டதையும், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் ஜேர்மனியின் விஷேட படையினர் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து தற்போது இயங்குவதையும் குறிப்பிட்டார்.

ஜேர்மன் மீதான அமெரிக்காவின் இராஜதந்திர தனிமைப்படலுக்கான உண்மையான காரணம், செப்டம்பர் 22 தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜேர்மன் நீதி அமைச்சரான Herta Däubler-Gmelin தெரிவித்ததாக கூறப்பட்ட கருத்துக்களாகும். ஒரு தொழிற்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் Herta Däubler-Gmelin ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் தொடர்பாக ''புஷ் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப முனைகின்றார். இது ஹிட்லரால் பயன்படுத்தப்பட்ட நன்கு அறியப்பட்ட ஒரு முறையாகும்'' என குறிப்பிட்டிருந்தார்.

புஷ் இனை நாசிகளின் தலைவருடன் (ஹிட்லருடன்) மரியாதைக் குறைவாக ஒப்பிட்ட குறிப்புகளை நிராகரித்த வெள்ளை மாளிகையால் உற்சாகமளிக்கப்பட்ட ஸ்ரோய்பரும், ஜேர்மனியின் வலதுசாரி தொலைத்தொடர்பு சாதனங்களும் இதனை ஒரு அரசியல் பிரச்சனையாக்க மாற்ற முயன்று இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலை சாதகமாக்க முயன்றனர்.

இதில் முக்கியமானது என்னவெனில், புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் நாசிகளுக்கும் இடையிலான ஒரேமாதிரியான தன்மை தொடர்பான ஒப்பீடானது நியாயமானதாகும். Herta Däubler-Gmelin இன் தவறு என்னவெனில் அவர் இதனை உரத்து கூறியதாகும். இக்கருத்தானது ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் கூறப்படுவதொன்றாகும். ஒரு அரசாங்க தலைவர் என்ற வகையில் ஹிட்லர் தனது வெளிநாட்டுக் கொள்கையை இராணுவபலத்தின் மீதும், மூர்க்கமான யுத்தத்தின் மீதும் மத்தியாகவும் வெளிப்படையாவும் அடித்தளமாக கொண்டிருந்ததின் பின்னர், தற்போதைய வெள்ளை மாளிகை ஆட்சியாளரால் தான் அப்படியான முறைகளை கையாளப்படுகின்றது. ஈராக் மீதான புஷ் இன் முயற்சிக்கு பின்னணியில் இருப்பது அதிகரித்துவரும் சமூக அமைதியின்மை தான் என்பதில் எவ்விதமான ஐயுறவுமில்லை. இவ் அமைதியின்மையானது அமெரிக்காவில் அதிகரித்துவரும் வேலை வெட்டுக்களுடனும், பொருளாதார சுமைகளுடனும் மற்றும் நிறுவனங்களின் மோசமான ஏமாற்றுடனும், ஊழல்களுடனும் இணைந்ததாகும்.

ஜேர்மன் நீதி அமைச்சர், தான் தவறாக குறிப்பிட்டுவிட்டதாக உடனடியாக தெரிவித்துடன், ஷ்ரோடர் பலமான மன்னிப்பை புஷ்ஷிடம் கோரியிருந்தார். மேலும் புதிய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி கூட்டரசாங்கத்தில் Herta Däubler-Gmelin இன் மீண்டும் நியமிக்காததன் மூலம் ஷ்ரோடர் தனது வாக்கை காப்பாற்றினார்.

அக்டோபர் 30 ஆம் திகதி கூட்டத்தின் பின்னர் பெளலும், பிஸ்ஸரும் ''கொலின்'' ''ஜொஸ்கா'' என அழைத்துக்கொண்டதன் மூலம் சினேகிதமான ஒரு நாடகத்தை காட்டினர். ஆப்கானிஸ்தான் ''சமாதான முயற்சி'' இன் தலைமையை ஜேர்மன் ஏற்றுக்கொள்வது மற்றும் அல் கொய்தா வலைப்பின்னலை விசாரிப்பது உள்ளடங்கலாக தாம் உடன்பாடு கண்டுள்ள விடயங்களை வலியுறுத்துகையிலும், ஈராக் தொடர்பாக தொடர்ச்சியாக முரண்பாடுகள் உள்ளதாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதேவேளை ஜேர்மனி பின்னடிக்கும் விடயமான துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தினுள் விரைவாக இணைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு தனது நண்பருக்கு பெளல் வலியுறுத்தினார்.

பெளலின் சிநேகிதபூர்வமான அணுகுமுறையானது, ஜேர்மன் மீதான புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் அணுகுமுறை தொடர்பாக அமெரிக்க அரசாங்க வட்டாரத்திலுள்ள குறுகியகால மட்டும் நீண்டகால கவலையையே ஒரளவிற்கு பிரதிபலிக்கின்றது. ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் ஜேர்மனிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்க இருப்பதால் தனது ஈராக் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தராவிட்டாலும் நடுநிலையாவது வகிப்பதை வாஷிங்டன் விரும்புகின்றது.

அமெரிக்க-ஜேர்மன் உறவின் விரிசல்கள் தொடர்பான பரந்த கவலையை பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கென்றி கீஸிங்கர் அண்மையில் Scotland on Sunday இலும், Washington Post இலும் எழுதிய கட்டுரைகளில், ஒரு அமைதியான போக்கினை கடைப்பிடிக்குமாறு புஷ் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது ''அமெரிக்க எதிர்ப்பு'' குரலுக்கு ஷ்ரோடர் மீது குற்றம்சாட்டிய கீஸிங்கர், அண்மைய ஜேர்மன்-அமெரிக்க உறவின் முறிவிற்கு பேர்லின் மீது பாரத்தை சுமத்தினார். இதேவேளை, இரண்டு முக்கியமான சக்திகளுக்கு இடையிலான உறவின் முறிவின் பாரிய தாக்கம் குறித்து பரிசீலிக்குமாறு புஷ்ஷினை கேட்கொண்டுள்ளதுடன், ''ஐரோப்பா முதலாம் உலக யுத்தத்திற்கு முந்திய காலத்திற்கு திரும்புவதாக'' எச்சரித்தார்.

தனது பங்கிற்கு பிஸ்ஸர், பிரயோசனமற்றவகையில் அமெரிக்காவினை எல்லையற்று புகழ்ந்ததுடன், புஷ் இன் நிர்வாகத்திற்கான மேலெழுந்தவாரியான ஆதரவை தெரிவித்தார். அவர் ''எங்களுக்குள் முரண்பாடுகளும் குழப்பங்களும் இருந்தால், அதை நாங்கள் குடும்பத்திற்குள் கலந்துரையாடிக் கொள்ளவோம்'' என குறிப்பிட்டார். அவர் மீண்டும் மீண்டும் பெளலை புகழ்ததுடன், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு உதவியதற்காகவும், பத்து வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் மறு இணைப்புக்கான அமெரிக்காவின் ஆதரவிற்காக நன்றி தெரிவித்தும் கொண்டார். ''எங்களுக்கு அமெரிக்கா செய்த உதவுயை நாங்கள் மறக்கமாட்டோம்'' எனவும் அவர் கூறினார்.

எவ்வாறிருந்தபோதிலும் அவரது சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும், பிஸ்ஸரால் புஷ்ஷிற்கும் ஷ்ரோடருக்கும் இடையிலான நேரடியான சந்திப்பிற்கு வெள்ளை மாளிகையை ஒத்துக்கொள்ளவைக்க தூண்டுவதற்கான ஒரு வார்த்தையைத்தானும் பெளலிடமிருந்து பெற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை. புஷ் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கான ஜேர்மன் பிரதமரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அடுத்த மாதம் பிராக் நகரில் நடைபெறவிருக்கும் நேட்டோ மாநாட்டில் தான் ஷ்ரோடரை சந்திப்பேனா என்பது குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை.

பிஸ்ஸரின் அடிபணிவானது சாதாரணமாக அல்லது முக்கியமாக அவரது அகநிலையான குள்ளத் தனத்தினதோ அல்லது முதுகெலும்பின்மையிலான ஒரு பிரதிபலிப்பல்ல. அவர் ஒருதலைப்பட்சமானதும், ஆளுமை மிக்கதுமான அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ள ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாவார். ஒருபக்கத்தில் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் உள்ள எண்ணெய் வழமான பிரதேசத்திலும், பாரம்பரியமாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்கு விருப்பமான கிழக்கு ஐரோப்பாவிலும், துருக்கியிலும் அமெரிக்காவினது இராணுவ பொருளாதார ஆதிக்கம் அதிகரிப்பதை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள விரும்பாதுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்தும் ஜேர்மனியின் விருப்புக்கள் அமெரிக்க-ஐரோப்பிய உறவின் உறுதியிலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவிலும் தங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிகவும் பலமான அமெரிக்காவுடனான பகிரங்க உடைவு தொடர்பான பேர்லினின் பயமானது அது ஜேர்மனியின் பொருளாதாரத்தினை இல்லாதொழித்துவிடுவதுடன், ஐரோப்பாவினுள் பிரிந்து செல்லும் போக்குகளையும் அதிகரிக்க செய்யும் என்பதை அடித்தளமாக கொண்டுள்ளது. மேலும், ஷ்ரோடரின் அரசாங்மானது ஈராக் யுத்தம் தொடர்பான அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக ஜேர்மன் வர்த்தகப் பிரிவினரிடையே பரந்த எதிர்ப்பிற்கு முகம்கொடுக்கின்றது. அத்துடன் அது தனது இராணுவத்தை பரவலாக்கி பலப்படுத்தும் நேரத்திலும், அண்மைய எதிர்காலத்தில் வரவிருக்கும் யுத்தத்தில் ஜேர்மனியின் வெற்றிக்கு அடித்தளமிடும் நேரத்திலும் தனது சொந்தநாட்டினுள் அதிகரித்துவரும் யுத்த எதிர்ப்பு இயக்கம் குறித்தும் அச்சமுற்றுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved