உலக பொருளாதாரம்
Deflation threat to world economy
பணச்சுருக்கம் உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்துகின்றது
By Nick Beams
16 October 2002
Back
to screen version
பங்கு முதல் சந்தைகள் தொடர்ந்து சரிவடைந்தும் நிதி நெருக்கடி எங்கும் பரவத் தொடங்கி
இருக்கிற நிலையில், நிதிப் பத்திரிகைகளில் எல்லாம் பூகோளப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சிக்குப் பின்னர் இதுவரை
கண்டிராததொரு பணச்சுருக்க காலகட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ என்கிற விவாதம் இடம்
பெற்றிருக்கின்றது.
உதாரணமாக அக்டோபர் 10 அன்று தி எக்கனாமிஸ்ட் - ல் வெளியிடப்பட்ட,
"கடன், பணச்சுருக்கம் மற்றும் மறுப்பு" என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரை, 1930 களுக்குப் பின்னர் எப்போதுமில்லாத
அளவில் விலை வீழ்ச்சி ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது என எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும்
ஜப்பானிலும் பணச்சுருக்கம் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்க முடியும். சிறப்பாக அமெரிக்காவில் கடன்வாங்குவதில்
அதிகரிப்பை எடுத்துக் கொண்டால் "குறிப்பாக கீழ்த்தரமான நிலையை" இது நிரூபிக்க முடியும். பணவீக்க சூழலில் கடன்வாங்கும்
நாடு திருப்பிக் கொடுக்கும் கடன்தொகையை மதிப்பிறக்கம் செய்யப்பட்ட செலாவணியாக கொடுக்கும் சாதகத்தைப்
பயன்படுத்திக் கொள்ள நினைப்பதால், பணச்சுருக்க சூழ்நிலைகளின் கீழ் கடன் சுமை அதிகமாகிறது என்பதே இதற்குக் காரணமாகும்.
தொடர்ந்து விலை வீழ்ச்சி நீடிக்கும் பட்சத்தில் சொத்துக்களின் மதிப்பு அவைகளை வாங்குவதற்காக
ஈட்டிய கடன்தொகையை விட குறையும்போது மாபெரும் நெருக்கடிகள் உருவாகும். இப்படிப்பட்டதொரு நிலையைத்தான்
ஜப்பானில் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் எதிர் கொண்டிருக்கின்றன. மேலும், வங்கிகள் பிணை எடுப்பு முயற்சிகள்
இருப்பினும், வங்கி கொடுக்கும் கடன்களில் பெரும்பகுதி வராக் கடனாகக் காட்டப்படுதற்கும் இதுவே முக்கிய காரணமாகும்.
இந்த சிக்கல்கள் உலகின் பிறபாகங்களுக்கும் பரவ ஆரம்பித்திருப்பதாகத் தோன்றுகிறது.
அதே பதிப்பில் வெளியிடப்பட்ட இன்னொரு கட்டுரையில், தி எக்கனாமிஸ்ட், அமெரிக்கப்
பொருளியலாளர் ஜே.கே கால்பிரெய்த் என்பவரால் கூறப்பட்ட கருத்தின்பால் கவனத்தை ஈர்த்தது. அதாவது
"நன்நம்பிக்கை மற்றும் முட்டாள்தனம் என்கின்ற தவறுகளில் இருந்து பணவீக்கம் நிறுவனங்களைக் காப்பாற்றுகின்றது" என்றார்.
"கடனாளி கம்பெனிகளும் தனிநபரும் பண வீக்கத்தினால் அவர்களுடைய கடன் சுமையிலிருந்து அடிக்கடி காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்,
அது அவர்களின் உண்மையான சுமையை அழித்திருக்கிறது" என்பதை கடந்த முப்பது ஆண்டுகளான நடைமுறையை ஆய்ந்து அவர்
கூறி இருக்கிறார்.
1990களின் இறுதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் அதற்கு முன் எப்போதும்
இல்லா அளவில் தனியார் நிறுவனங்களின் கடன்சுமையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தொடர்புடையதாக கூர்மையாக
அதிகரித்துக் கொண்டிருந்தபோது, இந்தக் கடனில் பெரும்பாலானவை வருமானம், இலாபம் மற்றும் பங்கு விலைகளில்
சாதிக்க முடியா வளர்ச்சியை கற்பனை செய்து கொண்டிருந்த வேளையில், "பணவீக்கமானது முதலாளிகளையும் நுகர்வோரையும்
அவர்களுடைய மூடத்தனத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை."
பைனான்சியல் டைம்ஸ் ம் பணச்சுருக்கத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. அமெரிக்க
ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர்களின் கூட்டமைப்பின் தலைவராகிய கிளென் ஹபார்ட்-(Glenn
Hubbard)- ஆல் வெளியிடப்பட்ட அமெரிக்கா பணச்சுருக்க அபாயத்தில்
இருந்தது என்பதை மறுக்கும் கருத்தை அக்டோபர் 9 அன்று அது வெளியிட்டது. ஹபார்டின் கூற்றுப்படி, "அமெரிக்கப்
பொருளாதாரத்தின் அடிப்படை நிலைகள் நன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது" மற்றும் 1995ல் தொடங்கிய உற்பத்தித்திறனில்
உயர்வு இன்னும் பாதிப்பில்லாமல் தொடர்கிறது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும் அவர் கடந்த முப்பது ஆண்டுகளில்
எப்போதும் இல்லாத அளவில் நுகர்வோர் உண்மையான வருமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்கின்றார். இவைகளால்
எல்லாம் பொருளாதார அடிப்படைகள் "உறுதியாக இருக்கின்றன" என்று வலியுறுத்தினார்.
இந்த நன்னம்பிக்கைப் பார்வை மோர்கன் ஸ்டான்லி
(Morgan Stanley)
நிறுவனத்தின் தலைமை பொருளியலாளர் ஸ்ரெஃபான் றோக் (Stephen
Roach) என்பவரால் ஒத்துக் கொள்ளப்படவில்லை. அவர் நான்கு
நாட்களுக்குப் பின்னர் பைனான்சியல் டைம்ஸில் அவரது எதிர்வாதத்தை வெளியிட்டார். பணச்சுருக்க அழுத்தங்களை
எடுத்தபோதிலும் விலைகளில் ஒட்டு மொத்த வீழ்ச்சி இருக்காது என்னும் அநேக பொருளாதார வல்லுநர்களின் கருத்து,
பொருள்களைப் போன்று சேவைகள் துறை பணச்சுருக்கத்தை சந்திக்க நேராது என்னும் கற்பனையை அடிப்படையாகக்
கொண்ட தவறாகும் என்று வாதிட்டார்.
2000-ன் இறுதியில் வர்த்தக சுழற்சியின் இறுதி உச்சத்தில், சேவைகளின் பணவீக்கம் வருடத்திற்கு
3 சதவீதம் என்ற வீதத்தில் இருந்தது, ஆனால் அதன் பின்னர் சதவீத புள்ளி 0.8 அளவில் அது குறைந்திருந்தது என்று
றோக் தெரிவித்தார். இது அதற்கு முந்தைய ஆறு பொருளாதார பின்னிறக்கத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்கு முரண்பாடாக
இருந்தது. எப்படியெனில் வர்த்தக சுழற்சியின் உச்சத்தினைத் தொடர்ந்து ஆறு கால்பகுதிகளில் சேவைகளின் பணவீக்கம் சராசரியாக
0.2 சதவீதம் அதிகரித்தது.
பொருட்கள் துறைக்கான அளவீடுகள் பணச்சுருக்க அழுத்தங்கள் வேலை செய்வதை மிகவும் தெளிவாகக்
கூட காட்டின. கடந்த வர்த்தக சுழற்சியின் உச்சத்தில் 0.7 சதவீதமாக இருந்த பொருட்களைப் பொறுத்த பணவீக்கம்
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 0.8 சதவீத பணவீக்கத்திற்கு நழுவிச்சென்றது. "இந்த வீச்சு, முந்தைய ஆறு
வர்த்தக சுழற்சிகளில் அதே 18 மாத காலத்தில் ஏற்பட்ட சராசரி மாற்றத்தை விடவும் மூன்று மடங்காகும்" என
றோக் தெரிவித்தார். பொருளாதாரத்தின் பொருட்கள் உற்பத்தித் துறையில் பணச்சுருக்க அழுத்தங்களின் தாக்கம் இதற்கு
முன்னர் இருந்த வர்த்தக சுழற்சிகளில் இருந்ததை விடவும் மிகத் தீவிரமாக இருக்கிறது, ஆனால் இந்த முறை அவை சேவைத்
துறையில் விலை ஏற்றத்தால் பாதிக்கப் பட்டிருக்கவில்லை.
கார்டியன் பொருளாதார செய்தித் தொடர்பாளர் லாரி எலியட்டால் எழுதப்பட்ட,
திங்களன்று வெளியான "பணச்சுருக்கம் சதாமைவிடவும் பெரிய அச்சுறுத்தல்" என தலைப்பிடப்பட்ட கட்டுரையில், லெமான்
பிரதர்ஸ் நிறுவனம், hedge funds
மற்றும் equity fund
மேலாளர்களான சென்ட்ரல் பாங்க் உடனான அதன் கலந்துரையாடல்களில் "ஆழ்ந்த கவலை" அடைந்துள்ளது என்றது. கடந்த
வருடத்தின் வட்டி வீத குறைப்புக்களின் தாக்கம் தேய்ந்து கொண்டிருக்கிறது, அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜப்பானின் "நஷ்டமான
பத்தாண்டுகள்" எனும் நிலையில் தான் இருக்கின்றன, மேலும் வோல் ஸ்ட்ரீட் பங்குகள் இன்னும் 40 சதவீதம் வீழ்ச்சி அடையவுள்ளன
என்பதும் இதனுள் அடங்கும்.
அளவுக்கு அதிகமான உற்பத்தி ஆற்றல்
பணச்சுருக்கத்தின் முக்கியத்துவம், விலைகள் சரிந்து கொண்டே இருக்கும் சந்தையில் தம் உற்பத்திப்
பொருட்களை நிறுவனங்கள் விற்க வேண்டுமானால், பொருட்களின் அடக்கவிலையைத் தொடர்ந்து குறைக்க நிர்பந்திக்கும்,
இலாபவீதங்கள் மீதான கீழ்நோக்கிய அழுத்தத்தைக் குறிகாட்டுவதில் மட்டும் அல்லாமல், அங்கு பொருளாதாரம் முழுவதும்
அளவுக்கு அதிகமான உற்பத்தி ஆற்றல் இருப்பதையும் கூட அது சுட்டிக்காட்டுகிறது. பின்னால் 1999ல், உற்பத்தி இடைவெளி
-- எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான வேறுபாடு--
1930 களுக்குப் பின்னர் எப்போதும் இருந்ததை விட மிக அதிக அளவில் இருந்ததாக தி எக்னாமிஸ்ட் மதிப்பீடு
செய்தது. அதன் பின்னர் சிறிதளவு முன்னேற்றம் இருப்பதாகத் தோன்றியது, மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின்
நிலைமையுடன் இன்னும் மோசமாக உள்ளது என்று சொல்லும் வகையில், மூன்று வருடங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட உற்பத்தி
ஆற்றலை நெருங்கி இருந்த செயற்பாடு இப்போது அதன்சாத்தியமான ஆற்றலுக்கு 1சதவீதம் குறைவாக செயல்படுவதாக
மதிக்கப்படுகிறது.
பெரும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வீணாகிப்போன நிலையில் அவைகளின்
மீதான நெருக்கடிகளுடன் பணச்சுருக்க அழுத்தங்கள், இலாபங்களில் வீழ்ச்சி மற்றும் பங்கு விலைகளில் சரிவு ஆகியவை,
நிதிச் சந்தைகளில் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானிய வங்கிகளின் துயரம் பரவலாகப் பேசப்பட்டு
வருகிறது ஆனால் இப்பொழுது பைனான்சியல் டைம்ஸின் அக்டோபர் 13 பதிப்பில் வந்த ஒரு கட்டுரையின்படி,
ஜேர்மனியில் இக்கட்டானதொரு நெருக்கடி உருவாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
"உலகப் பொருளாதாரம் கார்ப்பொரேட் நிறுவனங்களின் கையாடல், சந்தை எழுச்சி இவைகளினின்று
வங்கி நெருக்கடிகள் இல்லாமல் முந்தைய விற்பனைக்குத் தகுந்த சந்தைகள் போன்று நிலைத்து நிற்கும் என்று வாதிப்பது
நாகரீகமாகி விட்டது" என அந்தக் கட்டுரை தொடங்கியது. ஆனாலும் ஜேர்மனியைப் பாருங்கள், அது உங்களுக்கு ஆச்சரியமூட்டும்.
ஜேர்மனிய வங்கித் தொழில் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. முன்னணி பங்குகளின் டாக்ஸ் குறியீட்டெண்
கட்டுப்பாடின்றி சரிகிறது, கடன்நிலை நிர்ணய முகவாண்மைகள் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களின் நிதிநிலை பற்றி
உறுதியான எச்சரிக்கைகளை வழங்குகின்றன. வங்கிகளின் பங்குகள் மிகுந்த வேகத்துடன் வீழ்ச்சி அடைந்துள்ளன மேலும் கடன்
எல்லைகள் (மிகுந்த பாதுகாப்பான, மிகுந்த சிக்கலான முதலீடுகளுக்குள்ள வேறுபாடு) ஊதிப்பெருகுகின்றன. நலிவடைந்த
நிறுவனங்களின் பிரச்சினைகள் பற்றிய வதந்திகள் எங்கும் வலம் வருகின்றன. ஒழுங்குபடுத்துநர்களிடமிருந்தும், வங்கியாளர்களிடமிருந்தும்
என்னதான் மறுப்புக்கள் வந்த போதிலும், அவசரமாக விலகிக் கொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் எங்கே எந்தப் பெரிய
வங்கி நலிவுற்றது என்ற செய்தி வருமோ என்கின்ற அச்சுறுத்தலில் உள்ளனர்."
டாலர் அளவிலான பங்கு மதிப்புக்களின்படி, கடந்த ஆண்டில் ஆர்ஜண்டினா மற்றும் பிரேசில்
வங்கிகள் நீங்கலாக மற்ற அனைத்து நாடுகளின் வங்கிகளைவிடவும் ஜேர்மன் வங்கிகள் பின்னடைவு கண்டிருக்கின்றன என்று
கட்டுரை சுட்டிக்காட்டியது. ஐரோப்பிய மத்திய வங்கியின் முதன்மை பொருளியலாளர் ஒட்மார் இஸ்ஸிங் (Otmar
Issing) கூறியிருப்பதாவது, ஜேர்மன் வங்கித் தொழில் "நெருக்கடி"
இல்லாமல் இருந்தபோது அந்த சூழல் மிகவும் "வியப்பூட்டும் விதத்தில்" இருந்தது. ஜேர்மன் வங்கிகளின் நிலை மற்றும்
அவற்றின் பலவீனங்களால் ஒட்டுமொத்த நிதி அமைப்புக்கு உண்டாகும் அபாயம் பற்றி பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவலைப்படத்
தொடங்கி இருக்கிறது என இலண்டனில் உள்ள வங்கியாளர்கள் கருதுகின்றனர்.
ஆபத்தான தளர்வுகள் ஏற்கனவே தோன்றத் தொடங்கி விட்டிருக்கின்றன. தி எக்கனாமிஸ்ட்
கூற்றுப்படி, சர்வதேச கடன் சந்தைகளில் அவநம்பிக்கையும் பங்கு சந்தைகளின் மீது (equity
markets) ஒன்றை ஒன்று பாதிப்பவைகளாக உள்ளன. கடந்த
வாரம், ஃபோர்ட் மோட்டார் கம்பெனியால் வெளியிடப்பட்ட ஐந்து வருட கடன் பத்திரங்களின் மதிப்பு அவற்றின் மேல்
மதிப்பீட்டில் 89 சதவீதம் மட்டுமே விலை குறிக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் இந்த கடன் பத்திரங்கள் "மதிப்பற்ற"
நிலைக்கு குறைந்து விட்டன என்ற போதிலும் கடன் விகிதத்தை நிர்ணயிக்கும் இரண்டு மிகப் பெரிய நிறுனங்களான மூடிஸ் (Moody's)
மற்றும் ஸ்டாண்டர்டு அண்ட் புவர்ஸ் (Standard
and Poor's) ஆகியவை, இந்த நிறுவனத்தின் கடன்வீத மதிப்பீட்டை
குறைக்க வேண்டுமென்ற எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன என கடந்த வாரம் அறிவித்தது.
தற்போதைய பொதுவான சந்தை நிலவரத்தினால் ஃபோர்டின் கடன் பத்திரங்கள் நலிவடைந்திருக்கின்றன
என்று தோன்றுகின்றது. இந்த வருடம் இதுவரை 50 கம்பெனிகளின் முதலீட்டுப் பத்தரங்கள் "மதிப்பற்ற" நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது கடந்த வருடத்தின் மொத்த எண்ணிக்கையை விட ஏழு மட்டுமே குறைவு, மேலும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் கடன்
பத்திர வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளின் மதிப்பு 2001-ம் ஆண்டிற்கான மொத்த தொகையைவிட ஏற்கனவே
அதிகரித்து 140 மில்லியன் டாலர்கள் அளவை எட்டிவிட்டது. மூடியின் கூற்றுப்படி, "ஒரு குறுங்கால நிலைச்சான்றாக 18
தொடர்ச்சியான காலாண்டுகளாக அமெரிக்கக் கம்பெனிகளின் நம்பகத்தன்மை தரம் குறைந்திருக்கின்றது" என தி எக்கனாமிஸ்ட்
தெரிவித்தது.
இந்த நிகழ்ச்சிப்போக்குகளை ஒன்றாய் எடுத்துக் கொண்டால், உற்பத்தி இன்னும் பெருகிக்
கொண்டிருப்பதால் பூகோளப் பொருளாதாரம் சீரடைந்து அமெரிக்காவில் அனைவரும் நன்றாயிருப்பார்கள் என்னும் புஷ்
நிர்வாகத்தின் மற்றும் ஹபார்டின் உறுதிகளை எல்லாம் கீழறுக்கின்றன.
தொழிலாளர்கள் அதிகமாய் உற்பத்தித்திறன் கொண்டிருப்பதால் வருமானம் பெருகும் என்று
ஹபார்ட் கூறுகிறார். ஆனால் இது ஒரு தவறான ஆய்வாகும், ஏனென்றால் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயக்கு
சக்தி, அவர்கள் கூறும் விதமாக உற்பத்தித்திறன் அல்ல, மாறாக லாபவீதம் ஆகும். தற்போதைய சூழ்நிலையின் தனித்தன்மைகளுள்
ஒன்றை நாம் இங்கு காணவேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது அதிக லாபத்தைக் குறிப்பதாக
இருந்தது. ஆனால் ஹபார்ட் மற்றும் பலரின் கூற்றுப்படி, 1955லிருந்து, அமெரிக்க உற்பத்தித்திறன் கூர்மையாக
அதிகரித்ததிலிருந்து நிலைமை எதிர்மறையாக உள்ளது. அமெரிக்காவின் தேசிய கணக்கியல் புள்ளி விவரங்கள் 1997 லிருந்து
ஒட்டு மொத்த லாபவீதம் சரியத் தொடங்கியதாகக் காட்டுகின்றன. ஆனாலும் தனியார் நிறுவனங்கள் பொருளாதாரத்தில்
வளர்ச்சி வீதத்திற்கு மேலாக இலாப அதிகரிப்பு பற்றி தொடர்ச்சியாக அறிவிக்கின்றன. இந்த முடிவுகள் "கற்பனைத்திறன்
வாய்ந்த கணக்கீடு" களாலும் என்றோன் மற்றும் வேல்ட் கொம் ஆகியவை மறுபெயர்களாகி உள்ள ஏமாற்று வேலை
மற்றும் கையாடல் இவைகளால் மட்டுமே சாத்தியமாகும்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பினால் இலாபவீதம் அதிகரிப்பதைப் பார்க்கிலும், இலாபவீதம் குறைவதே
தொடர்கின்றது. இதனால் உண்டாகும் அளவுக்கு அதிகமான உற்பத்தி ஆற்றல், பணச்சுருக்கம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள்
ஆகியவற்றின் நிகழ்ச்சிப்போக்குகள் பொருளாதார சந்தையில் கணிசமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ
இலாப அமைப்பின் உயிர் நாடியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாட்டால் பூகோளப் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது
என்பதை அது காட்டுகிறது.
|