World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

New Kashmiri government to push for talks to end armed conflict

ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவர புதிய காஷ்மீரி அரசாங்கம் பேச்சுவார்த்தைக்காக முயற்சி

By Deepal Jayasekera
5 November 2002

Back to screen version

இரண்டு வார கால முட்டுக்கட்டைக்குப் பின்னர், மக்கள் ஜனநாயகக் கட்சி (Peoples Democratic Party -PDP) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியன இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, கடந்த வாரம் இறுதியாய் ஒரு கூட்டு பேரத்தை முடித்தன. கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தில் அதிகாரத்தில் வீற்றிருந்த தேசிய மாநாட்டு கட்சி (National Conference -NC), கடந்த மாதம் முடிவுற்ற தேர்தல்களில் அதன் சட்டமன்ற பெரும்பான்மையை இழந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமைக்கப்பட்ட, மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அவர்களின் குறைந்த பட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படை அம்சங்களின் மீது உடன்பட்டிருந்தன, ஆனால் யார் முக்கிய பதவியான முதலமைச்சர் பதவியை வைத்திருப்பது என்பதில் சச்சரவு கொண்டிருந்தனர். முடிவில், காங்கிரஸ், துணை முதலமைச்சர் பதவிக்கும் கூட்டணி கூட்டுக் குழுவின் தலைவர் பதவிக்கும் பதிலாக, தனது நிலையை" மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீதுக்கு விட்டுக் கொடுத்தது. புதிய அரசாங்கம் கடந்த வார முடிவில் பதவி ஏற்றது.

15 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் முறையே, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி போல, கூட்டணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்)- லிருந்து இரு சட்டமன்ற உறுப்பினர்களையும், சிறுத்தைகள் கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்களையும் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்கள் 14 பேர்களையும் உள்ளடக்கும். முன்னர் 87 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மாநில சட்டமன்றத்தில் 57 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, தற்போது 28 இருக்கைகளைக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலத்தில், தொடர்ச்சியான இந்திய ஆட்சியை எதிர்க்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் இந்த மாநிலத்தில் நிலவிவரும் நீண்டகால மோதலுக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன உணர்வுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இத்தேர்தலில் தங்களின் வாக்கை திடீரென்று அதிகரித்துக் கொண்டன. 1980களின் இறுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் 50,000 இறப்புக்களை விளைவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இக்கூட்டணி வேலைத்திட்டமானது, பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் தேசிய அரசாங்கமானது, "இந்த மாநிலத்தில் கெளரவமான முறையில் அமைதியை மீளக் கொண்டுவருவதில் பரந்த அடிப்படையிலான ஒருமித்த கருத்தை வளர்த்தெடுப்பதற்கு" மாநில சட்டமன்றத்துடனும் ஏனைய குழுக்களுடனும் "பரந்த அளவில்" மற்றும் நிபந்தனை அற்ற பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. கசப்பான மோதலுக்கு எந்த தீர்வுக்குமான அடிப்படையாக, வேண்டுகோளானது தெளிவற்று இருக்கிறது, ஆனால் அது ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுடன் வெளிப்படையாகப் பேசுதற்கு கதவு திறந்து விட்டிருக்கிறது.

இரு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை அடைவதில் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான வழியைத் தெளிவாக்குவதில் கணிசமான அளவு அழுத்தத்தின் கீழ் இருக்கின்றன. இந்திய ஆளும் செல்வந்தத்தட்டின் ஒரு பகுதியினர் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"- ஆல் உருவாக்கப்பட்ட அரசியல் சூழலை, பாக்கிஸ்தானையும் ஆயுதம் ஏந்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களையும் பலி கொடுத்து காஷ்மீரில் ஒரு தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகப் பார்த்தனர்.

இந்தக் கண்ணோட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக, இந்திய செய்தி ஊடகம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊட்டி வளர்க்க இருக்கும் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் பற்றி கவலைகளை வெளியிட்டது. இதன் விளைபயன் குறிப்பிட்ட நிறைவை வெளிப்படுத்தும் விதமாக, டைம்ஸ் ஆப் இந்தியா அறிவித்தது: "நன்றாக முடிவதெல்லாம் நன்றாக இருக்கும். அந்தப் பழமொழி பழகிப்போனதாக இருக்கலாம், கடந்த பதினைந்து நாட்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து ஐயத்திற்கு இடமில்லாமல் சிறந்த செய்திகள் வரவிருப்பது பற்றி விவரிப்பதற்கு சிறந்த வழி வேறு இல்லை."

காஷ்மீரில் கட்சிகளுடன் திரைமறைவுக் காட்சி விவாதங்களில் தீவிரமாய் சம்பந்தப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்க நாடுகள் கூட கூட்டணி உருவாக்கத்தை வரவேற்றது. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வருகை தந்திருந்த, கொள்கை திட்டமிடலின் அமெரிக்க அரசுத்துறை இயக்குநர், ரிச்சர்ட் ஹாஸ், அரசாங்கக் கூற்றை வரவேற்றார், "அது நல்லாட்சிக்கான புதிய வாய்ப்பைத் திறந்திருக்கிறது மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில், "இயல்பு வாழ்க்கை திரும்ப உதவி இருக்கிறது" என்றார்.

காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க வாஷிங்டன் நாடிவருகிறது. அது இருநாடுகளுக்கும் இடையில் மூன்று போர்களைப் பற்றவைத்திருக்கிறது. கடந்த டிசம்பரில், புதுதில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம் மீதான காஷ்மீரி பிரிவினைவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவும் பாக்கிஸ்தானும் எல்லை நெடுகிலும் பத்துலட்சக்கணக்கான நன்கு ஆயுதம் தரித்த துருப்புக்களை அணிதிரட்டின மற்றும் இப்பிராந்தியத்தை இன்னொரு போரில் இழுத்துவிட அச்சுறுத்தின. அத்தகைய மோதலானது, ஆப்கானிஸ்தானிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் புஷ் நிர்வாகத்தின் சொந்த தலையீட்டையும் ஈராக்கிற்கு எதிரான போருக்கான அதன் தயாரிப்புக்களையும், அதேபோல அமெரிக்காவின் பொருளாதார நலன்களையும், குறிப்பாக இந்தியாவில் வளர்ந்து வரும் அதன் பொருளாதார நலன்களையும் குறுக்காக வெட்டி விடும்.

தேர்தலைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்க அரசுகள் காஷ்மீரில் அதன் அரசியல் தலையீட்டை, உள்ளூர் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதுடன் முன்னெடுத்திருக்கிறது. அக்டோபர் 31 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், அதன் கலந்துரையாடல்களைப் பற்றிக் கேட்கையில், அரசுத்துறைப் பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறினார்: "நல்லது, நான் அதனை விளக்கமாக உறுதிப்படுத்த முடியாது, ஆனால் ஆம், நமது தூதரகம் காஷ்மீரில் உள்ள நிலைபற்றி மிக அக்கறை கொண்டிருக்கிறது. அங்கு தேர்தல்களுக்காக நாம் ஆட்களை வைத்திருந்தோம்..... அது நமக்கு மிக அக்கறையுடைய நடந்து கொண்டிருக்கும் விஷயம் ஆகும், மற்றும் பல்வேறு குழுக்களையும் தொடர்பு கொள்வதற்கு முயல்கிறோம்."

தொடர்ந்து இராணுவம் இருப்பதற்கான ஆதரவு

புதிய முதலமைச்சர் முப்தி சயீது அவரது நிர்வாகம் "கடந்த 13 ஆண்டுகளாக முடிவற்ற துன்பங்களால் பாதிக்கப்பட்டு வரும் மாநில மக்களுக்கு ஆறுதலைக் கொண்டு வரும் என்று அறிவித்தார். ஆனால் காஷ்மீரி மக்கள் மத்தியில் போர் எதிர்ப்பு உணர்வுக்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் பதவியை வென்றிருக்கும், புதிய கூட்டணி மாநிலத்தில் நூறாயிரக்கணக்கான இந்தியத் துருப்புக்களின் தற்போதைய இருப்பை ஆதரிப்பதாக உறுதி அளித்திருக்கிறது.

தங்களின் கூட்டணி வேலைத் திட்டத்தில், கட்சிகள் "பாக்கிஸ்தானிலிருந்து மூலத்தோற்றம் கொண்டுவரும் எல்லை தாண்டிய போர்க்குணத்தை எதிர்த்துப் போரிடுவதில் இந்திய அரசாங்கத்துடன்" அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பை உறுதி அளித்தன. வேறுவார்த்தைகளில் சொன்னால், பல்வேறு பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளுக்காக அழைக்கின்ற அதேவேளை, பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களுக்கு செவிமடுக்காத எவரையும் நசுக்குவதில் நிர்வாகமானது இந்தியப் பாதுகாப்புப்படைகளுடன் ஒத்துழைக்கும்.

காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டை அடைவதில், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆனது, நூற்றுக்கணக்கான காஷ்மீரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதன் தேர்தல் கோரிக்கையை ஒழுகவிட்டது. புதிய அரசாங்கமானது "நீண்டகாலமாய் வழக்குகள் எதுவுமின்றி வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை" மறு ஆய்வு செய்வதற்கு தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்ளும் மற்றும் "குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும், சீரிய குற்றங்களுடன் குற்றம் சாட்டப்பட்டிராதவரையும் மற்றும் அவர்களுக்கு வழங்கக் கூடிய தண்டனைக் காலத்தை விட அதிகமாக சிறையில் கழித்திருக்கும் அளவு தண்டனை பெறக்கூடிய குற்றங்களின் பேரில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் அனைவரையும்" விடுவிக்கும்.

மக்கள் ஜனநாயகக் கட்சி-- காங்கிரஸ் நிர்வாகமானது, புதுதில்லியின் கொடூரமான புதிய சட்டமான பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை (POTA), அமல்படுத்தப் போவதில்லை என உறுதி அளித்திருக்கிறது. அது "பயங்கரவாதி" என குறிக்கப்பட்டுள்ள எந்த குழுவையும் சேர்ந்ததற்காக அல்லது எந்த வகையிலும் அதற்கு உதவியதற்காக கடும் தண்டனைகளை வழங்குகிறது. ஆயினும், கட்சிகள் பொடா மசோதாவின் ஜனநாயக விரோத இயல்பை எதிர்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட கஷ்டப்படுகின்றன, ஆனால் "போராளிகளைக் கையாளுவதற்கு போதுமான சட்டங்கள் அங்கு இருக்கின்றன" என்று கருதுகின்றன.

சித்திரவதைக்கும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்கும் பேர்பெற்ற அரசு போலீஸ் படையான, சிறப்பு நடவடிக்கைக் குழுவைக் கலைத்துவிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதி அளித்திருந்தது. கூட்டணி உடன்பாட்டின் கீழ், இக்குழுவானது தனி அமைப்பாக இயங்குவது முடிவுக்குக் கொண்டு வரப்படும் ஆனால் அதன் உறுப்பினர்கள், அவர்களின் காட்டுமிராண்டித்தனமான வேலையைத் தொடருவதற்கு அவர்களை அனுமதிக்கும் "வழக்கமான போலீஸ் அமைப்புக்குள்ளே ஒன்றாக்கப்படுவர் அல்லது மறுஇடத்தில் வைக்கப்படுவர்."

தேர்தலைப் புறக்கணித்த 23 சட்டரீதியான காஷ்மீரி பிரிவினைவாத கட்சிக்காரர்களின் ஒரு தொளதொளத்த கூட்டணியான அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு, எச்சரிக்கையுடன் மாநில அரசாங்கத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை வரவேற்றது. அக்டோபர் 27 அன்று ஹூரியத் தலைவர் மிர்வைஜ் உமர் பரூக்: "ஹூரியத்தைப் பொறுத்தவரை காஷ்மீரின் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு மிகத்தெளிவானது எனக் கூறினார். ஆயினும், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுக்காக மற்றவர்கள் செய்யும் முயற்சிகளை நாங்கள் இல்லாதாக்க விரும்பவில்லை. புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்த சூழலை ஏற்படுத்துவதிலும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு வசதி செய்வதிலும் முனைப்பாக இருக்குமானால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை."

வாஜ்பாயியின் இந்து பேரினவாத பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) மாநிலத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. சில பிஜேபி தலைவர்கள், மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணிக்குள் நுழைந்ததன் மூலம் மக்களை ஏமாற்றி விட்டதற்காகவும் பொடா மசோதாவை அமல்படுத்தாதிருக்க எடுத்த முடிவிற்காகவும் காங்கிரஸ் கட்சியைத் தாக்கினர். ஆனால் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியால் தெளிவாகக் கூறப்பட்ட, புதுதில்லியிலிருந்து வந்த உத்தியோக ரீதியிலான பதில், "மாநிலத்தின் அபிவிருத்திக்கும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கும்" புதிய அரசாங்கத்துடன் "முழு ஒத்துழைப்பு" அளிக்க உறுதி கூறுவதாக இருந்தது.

ஒப்பீட்டளவில் வாஜ்பாயி அரசாங்கத்திடம் இருந்து வரும் ஓசையற்ற பதிலானது, இந்தியாவின் ஆளும் செல்வந்தத் தட்டின் மிகவும் சக்தியுள்ள பகுதிகள், புதுதில்லியின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு சாதகமாக காஷ்மீரில் ஒரு தீர்வை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற புரிதலை எதிரொலிக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved