World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The political failure of the PLO and the origins of Hamas

பி.எல்.ஓ- வின் அரசியல் தோல்வியும் ஹமாஸின் தோற்றமும்

பகுதி1

By Jean Shaoul
5 July 2002

Back to screen version

செப்டம்பர் 1993-ல் நடைமுறைக்கு வந்த ஒஸ்லோ உடன்படிக்கைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இஸ்ரேலிய - பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக இஸ்ரேலுக்கு பக்கமாக ஒரு பாலஸ்தீனிய நாடு அமைக்கப்படுவதற்காகவும் வரவேற்கப்பட்டன.

ஆனால் இந்தக் காட்சி கந்தலாகி விட்டது. இஸ்ரேலின் லிக்குட் -தொழிற்கட்சி கூட்டரசாங்கம், அமெரிக்க ஆதரவுடன், 1967 போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய டாங்குகளை அனுப்பியுள்ளது. பாலஸ்தீனிய நிர்வாகத்தை (Palestinian Authority-PA) ஒழிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஷெரோன் அரசாங்கம் ஒஸ்லோ உடன்படிக்கைகளை கிழித்தெறியவும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டம் சூட்டவும் ஹமாஸ் என்ற இஸ்லாமிய அரசியல் குழு மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் தற்கொலை குண்டு தாக்குதல்களை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி வருகின்றது.

அப்பாவி மக்களை இலக்காகக் கொண்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், இஸ்ரேலிய ஒடுக்குமுறைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை அடித்தளமாகக் கொண்டிருக்கும், முற்போக்கு முன்னோக்கு இல்லாத அரசியல் போக்குகளால் செல்வாக்கு செலுத்தப்படும், இளைஞர்களால் நடத்தப்படும், மனக்கசப்பூட்டும் மற்றும் திகிலூட்டும் நடவடிக்கைகளாக இருக்கின்றன. அப்பாவி மக்களைக் கொல்வதற்கு வடிவமைக்கப்பட்ட இந்த செயல்கள் பாலஸ்தீனிய மக்களின் உணர்வுகளையும் கொள்கைகளையும் துளியளவுக்கூட முன்னேற்றவில்லை.

பயங்கரவாத தந்திரோபாயங்களுக்கு பொறுப்பு என கூறிக் கொள்ளும் குழுக்களுள் ஹமாஸ் மிக முக்கியமான ஒன்றாகும். ஹமாஸ் யாசிர் அரபாத்தின் (Yasser Arafat) ஃபத்தா (Fatah) தலைமைக்கும் மத சார்பற்ற பாலஸ்தீனிய நாட்டை உருவாக்கும் அதன் முன்னோக்கிற்கும் கூட மிக முக்கியமான எதிர்ப்பாளி ஆகும். இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் அரசியல் இசைவினை உத்திரவாதப் படுத்துவதற்கான சமரச முயற்சியில் அரபாத் அடைந்த தோல்வியில் இதுநாள்வரை ஹமாஸ் அரசியல் ஆதாயம் அடைந்துள்ளது. வாஷிங்டன் அரபாத்தை தீண்டத்தகாதவராக அறிவித்த பின்னரும் கூட, அரபாத் ஜனாதிபதி புஷ்- இன் காலடியில் தொடர்ந்து தன்னை நெடுஞ்சாண்கிடையாக விழவைத்துக் கொள்ளும் முயற்சிகள், வெறுப்பு அடைந்துள்ள பாலஸ்தீனிய இளைஞர்களை, பாலஸ்தீனிய நிர்வாக தலைமைக்கு போர்க்குணமுள்ள மாற்றாக இஸ்லாமிய தீவிரவாதிகளிடமும் மத அடிப்படைவாதிகளிடமும் சென்று சேர உதவுகின்றன.

ஆனால், மதப் பழமைவாதம் மற்றும் யூதர்களுக்கு எதிரான வறட்டு செமிட்டிச எதிர்ப்பு போக்கு ஆகிய இவற்றின் சேர்க்கையான ஹமாஸின் பிற்போக்கு சித்தாந்தத்தால் இப்போதைய தேக்க நிலையிலிருந்து வெளிவர வழிகாண முடியாது. ஹமாஸ், பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லீம் நாட்டை உருவாக்க முயலுகிறது; இந்த நாட்டில் யூதர்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இடமில்லை; அதனது இளம் காரியாளர்களை தற்கொலை பயங்கரவாத செயல்களுக்கு அனுப்புவதன் மூலம் அது அடையப்படும். இத்தகைய இயக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலை, 25 சதவீத பாலஸ்தீனியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக மதிப்பிடப்படும் நிலை, மதச்சார்பற்ற அரபு முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வி மற்றும் ஸ்ராலினிசத்தாலும் அதன் கருத்தியல் கிளைகளாலும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு உண்மையான சோசலிச மாற்றீடு உருவாவது தடை செய்யப்பட்டமை பற்றிய ஒரு வரலாற்று ஆய்வு மூலம் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் மற்றும் அரசியல் ரீதியாக போராடமுடியும்.

எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் முஸ்லிம் சகோதர இயக்கம்

காசா பாலைநிலத் துண்டுப் பகுதியில் கடந்த இண்டிபாடா எழுச்சிக்குப்பின் உடனடியாக 1988ல் நிறுவப்பட்ட, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காசா முஸ்லிம் சகோதர இயக்கம் (Gaza Muslim Brotherhood) என்னும் இஸ்லாமிய அரசியல் இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தனது தோற்றத்தில் மற்றும் செயல்படும் வகையில் இஸ்லாமிய மதத்தை புதுப்பித்தலில், அடுத்துள்ள எகிப்தில் முஸ்லிம் சகோதர இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக மாறியதில், கடப்பாடு கொண்டிருக்கும், அரபு நாடுகளிடையே தோன்றிய பல முன்னணி இஸ்லாமிய இயக்கங்களில் முஸ்லீம் சகோதர இயக்கம் முக்கியம் வாய்ந்த ஒன்று ஆகும். ஒரு காலத்தில் இஸ்லாம் மதம் சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகித்தது. அந்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர முஸ்லிம் சகோதர இயக்கம் பாடுபட்டது. ஷரிய சட்டத்தின் (Sharia law) அடிப்படையில் எகிப்தை ஒரு இஸ்லாமிய நாடாக்கவும் இது முயற்சி செய்தது. இதன் அடிப்படையில் இந்த இயக்கம் ஷரிய சட்டத்தைப் பின்பற்றுபவர்களையே மற்றும் எகிப்து மீது மேலாதிக்கம் செய்திருந்த ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்தவர்களையே உண்மையான அரசர்களாக மதித்தது.

வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு எதிர் எடையாக இந்த இயக்கம் நில உடைமையாளர்கள் மற்றும் முதலாளிகள் சார்பில் கார்ப்பொரேட்டிசம் மற்றும் ஆதரித்து வக்காலத்து வாங்குதல் ஆகியவற்றையும் இதனுடன் ஒன்று சேர்த்தது. சமூக வாழ்வின் ஒவ்வொரு அரங்கிலும் இந்த இயக்கத்தின் சமூக வேலைத்திட்டம் அவசியமான பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் படிக்க வேலைக்கு செல்ல அணுமதிக்கப்படும் அதேவேளை, ஆண்களுடன் சரிசமமாக பழக அனுமதிக்கப்படமாட்டார்கள். கல்வியின் சாரத்தை மதமே போதிக்கும். பொருளாதாரம் குரான் (Koran) கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இதனை செயல்படுத்த முஸ்லிம் சகோதரத்துவம் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் மசூதிகளை நிறுவிற்று. துணை இராணுவ அமைப்புகளையும் இது நிறுவிற்று. இரண்டாவது உலகப்போரின் பின்னர் 1948-ல் எகிப்திய பிரதமரைக் கொலைசெய்த கொலைப்படையையும் அது அமைத்தது.

அனைத்துக்கும் மேலாக, தேசிய இயக்கத்துக்குள்ளே சோசலிச மற்றும் கம்யூனிச இடதுகளின் -- அவர்களில் பலர் யூதர்களாக இருந்தனர்-- வளர்ந்து வரும் செல்வாக்கையும் மதச்சார்பின்மையையும் எதிர்த்துப் போராட நனவான முயற்சியில் இந்த இயக்கம் மத குறுங்குழு வாதத்தையும் யூதர்களை எதிர்க்கும் செமிட்டிச எதிர்ப்பையும் பயன்படுத்தியது. இது சிறப்பாக தொழில் மயமான அலெக்ஸாண்டிரியா நகரத்தில் காணப்பட்டது. இந்நகரம் பல இனத்தவரைக் கொண்டது. முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் தொழிலாள வர்க்க விரோத அச்சு, பிற்போக்கு சமூக வேலைத் திட்டத்துடன் தேசியவாதத்தையும் மதத்தையும் இவ்வாறு இணைத்தது.

1952-ல் கெமால் அப்துல் நாசரை பதவிக்கு கொணர்ந்த, சுதந்திர அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் ஆதரவாளராக இது இருந்தது. நாசரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பு 1954-ல் தடை செய்யப்பட்டது. இதன் தலைவர்களும் ஆதரவாளர்களும் செளதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டதால் முஸ்லிம் சகோதரத்துவத்தின் செல்வாக்கு நலிவடைந்தது. மத்திய கிழக்கில் பிரதானமாக மதச்சார்பற்ற தேசியவாத இயக்கத்தின், மிகவும் முக்கியமாக நாசரிச செயல் வேலைத்திட்டம் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வளர்ந்து வரும் பேரும் புகழும் காரணமாக, அதன் அரசியல் வீழ்ச்சி இருந்தது. அடுத்த முப்பது ஆண்டுகளில் எகிப்திலும் காசாவிலும் முஸ்லிம் சகோதரத்துவம் இயக்கத்தின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.

எகிப்து, இப்பகுதியில் முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு எதிரான போராட்டம், 1956ல் சூயஸ் கால்வாய்க்கு எதிரான அவர்களின் இணைந்த தாக்குதலில், நாசரை இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் கொண்டு வந்து நிறுத்தியது. பிரிட்டனும் பிரான்சும் சூயஸிலிருந்து பின்வாங்கிய பின்னர் நாசர் மாவீரர் ஆனார். அதன் பின்னர் இருந்து நாசர் பாலஸ்தீனியர்கள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிராக முன்னணிப் பாத்திரத்தை அவர் எடுத்துக் கொண்டார், பொருளாதார மற்றும் இராணுவ உதவிக்காக மாஸ்கோவில் உள்ள ஸ்ராலினிஸ்டுகள் பக்கம் திரும்பினார்.

அவருடைய ஆட்சியால் கொண்டு வரப்பட்ட முற்போக்கான சமுதாய, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்கள் --அரசின் மட்டுப்படுத்தப்பட்ட மதச்சார்பின்மை, மற்றும் பெரிய எஸ்டேட்களை சிறு நிலங்களாக பிரித்தல், அடிப்படைத் தொழில்துறைகளை தேசியமயமாக்கல் கல்வி மற்றும் அடிப்படை சேவைகளை அபிவிருத்தி செய்தல்-- இவை யாவும் மக்கள் ஆதரவை இவருக்கு தேடித் தந்தன. மத்திய கிழக்கு முழுவதும் கம்யூனிசத்திற்கு ஒரு அரசியல் மாற்றாக, அவர் மதச்சார்பற்ற அரபு முழுமைவாதம் என்பதில் பிரமைகளை முன்னிலைப்படுத்தினார். ஆனால் நாசரின் சரியாக சிந்திக்காத, 1967-ல் இஸ்ரேலுடன் ஆன போரில் ஈடுபடா இராஜதந்திரம், அதில் சோவியத் ஒன்றியம் சிடுமூஞ்சித்தனமான பாத்திரத்தை ஆற்றியது, ஜூனில் நடந்த போரில் அரபு நாடுகள் படுதோல்வியடைய வழிவகுத்தது.

இந்த போரினால் அதிகம் பேர் அகதிகளானார்கள். பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரையை விட்டு ஜோர்டானுக்கு ஓடிவிட்டனர். இதன் விளைவாக இஸ்ரேல் மேற்குக்கரை, காசா பகுதிகளை ஆக்கிரமித்தது மற்றும் கிழக்கு ஜெருசலேமை இணைத்துக் கொண்டது. பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கு அப்பால், அது கடுமை குறையாத பேரழிவாக ஆனது. இந்தப் போர் அந்த பிராந்தியத்தில் பிளவுபட்ட, குரோதம் மிகுந்த முதலாளித்துவ குழுக்களின் தலைமையின் கீழ், எந்த நோக்கத்திற்காகவும் ஒன்றுபடவும் மற்றும் செயல்படவும் இயலாமையை விளக்கிக் காட்டிற்று.

அரபு தோல்வியும் நாசரிசம் செல்வாக்கு இழப்பும் இரு எதிர்மறையான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தின. பல புதிய கொரில்லா அமைப்புகள் தோன்றின. இவை பாலஸ்தீனியர்கள் தமது நாட்டை விடுவிக்க சொந்த சுதந்திரமான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரின மற்றும் அரசியல் இஸ்லாமியம் மறுபிறப்பு எடுத்தது.

ஃபத்தாவும் பி எல் ஓ வும்

1964-ல் பிஎல்ஓ நிறுவப்பட்டது. நாசர் தம் சொந்த நலனுக்காக நியமித்த பாலஸ்தீனிய முக்கியஸ்தர்களால் அது மேலாதிக்கம் செய்யப்பட்டது. யாசிர் அரஃபாத்தின் ஃபத்தா அணி முக்கிய கொரில்லா அமைப்பாக உருவெடுத்தது. அது அரசியல் சட்டவிதிகளை திருத்தி அமைத்தது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தை உறுதிப்படுத்தியது. பெப்ரவரி 1969ல் அரஃபாத் தலைமையின் கீழ் செயல்நிறைவேற்று குழுவை, தன்னாதிக்கத்திற்குள் கொண்டு வந்தது.

பிஎல்ஓ ஜனநாயக மதச்சார்பற்ற நாட்டை உருவாக்க ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்த தீர்மானித்தது தவிர்ந்து, அது பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவித அரசியல் பொருளாதார திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அது ஒரு மக்கள் முன்னணி கூட்டாக செயல்பட்டது. அதன் சாசனம் விதிமுறை 8-ன்படி, "வரலாற்றில் பாலஸ்தீனிய மக்கள் வசித்து வரும் காலகட்டம் பாலஸ்தீனத்தை விடுவிக்கும் தேசிய விடுதலைப்போராட்ட காலம். இதனால், பாலஸ்தீனிய அணிகள் மத்தியிலான மோதல்கள் இரண்டாந்தரமானவை மற்றும் அவை, ஒருபுறம் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் மறுபுறம் பாலஸ்தீன அரபு மக்களுக்கும் இடையில் நிலவும் அடிப்படை மோதலுக்காக, ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்." இந்த அடிப்படையில் பிஎல்ஓ -தான் பாலஸ்தீனிய மக்களின் "ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி" என பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் கட்சி ஃபத்தா மூலமாக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

அரபு ஆளும் செல்வத் தட்டு ஒட்டுமொத்தமானதும் தொடர்பாக, சாசனமானது, "அதன் உள்ளார்ந்த ஆற்றல்களுக்கு ஏற்ப, அனைத்து அரபு அரசுகள் ஒவ்வொன்றுடனும் பிஎல்ஓ ஒத்துழைக்கும்; விடுதலைப் போருக்கான தேவைகளின் வெளிச்சத்தில் அவைகளுடன் நடுநிலைப் போக்கைக் கையாளும்; மற்றும் இதன் அடிப்படையில் எந்த அரபு நாட்டின் உள்விவகாரங்களிலும் பிஎல்ஓ தலையிடாது" என்றது.

அரபு அரசுகளின் துரோகத்தால் வழிநடத்தப்பட்ட பாலஸ்தீனிய மக்கள் அரசியல் முட்டுச் சந்திலிருந்து மீள முடியவில்லை, இதை பிஎல்ஓவினால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அது ஒரு உண்மையான மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக இருந்தபோதிலும், அதன் அணிகளுக்குள்ளே வேறுபட்ட சமூகப் போக்குகளை தன்னுள் உள்ளடக்கி இருந்தபோதிலும், அதன் திட்டம் வர்க்க பிரச்சினைகளை மூடி மறைக்க சேவை செய்தது மற்றும் அதனை தேசிய பிரச்சினைகளுக்குக் கீழ்ப்படுத்தியது. எவ்வளவோ வீரம் செறிந்த மற்றும் மனம்வெறுத்த போராட்டத்துடன் மட்டுமல்லாது, அது பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அது தேசியக் கட்டமைப்பை நாடுகிறது, அதில் அதன் சொந்த தொழிலாள வர்க்கத்தை சுரண்ட விழைகிறது.

பிஎல்ஓ ஒரு பீனிக்ஸ் பறவைபோல இறந்துபோன மதச்சார்பற்ற தேசீயவாதத்திலிருந்து எழுந்தது. மத்திய கிழக்கில் ஏற்கனவே தோல்வியுற்ற ஒரு இயக்கத்தின் முனை மழுங்கடிக்கப்பட வெளிப்பாடாக அது இருந்தது.

அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஃபத்தாவும் பிஎல்ஓவும் ஒன்றாக இருந்தன. உலகத்தின் கண்களில் புரட்சியுடனும் ஜனநாயக, மதச்சார்பற்ற, பாலஸ்தீனத்துக்கான போராட்டத்துடனும் பிஎல்ஓ ஒன்றாக இனங்காணப்பட்டது.

ஃபத்தா மற்றும் பிஎல்ஓ-வின் தலைவரான அரஃபாத் பிஎல்ஓ-வை அடையாளப்படுத்தினார் மற்றும் திருவாளர் பாலஸ்தீன் ஆக அழைக்கப்பட்டார். ஆனால் எந்த அரபு நாடுகளை பிஎல்ஓ சார்ந்திருந்ததோ மற்றும் அரசியல் ரீதியாக சவால் செய்ய மறுத்ததோ அவற்றால் திரும்பத் திரும்ப துரோகம் இழைக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியம் எகிப்துக்கும் சிரியாவுக்கும் மீளவும் இராணுவ உதவி அளித்தும், 1973ல் அக்டோபரில் நடந்த போரில் அரபு ஆயுதப்படைகள் தோல்வியுற்றன. அமெரிக்க உதவிக்குப் பதிலாக எகிப்து, இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அது வழிவகுத்தது, பிஎல்ஓ வை தனிமைப்படுத்தியது.

இஸ்ரேலுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை எந்தெந்த நாடுகளில் இருந்து அது நடத்தியதோ அந்தந்த நாடுகளில் உள்ள ஆட்சிகளுக்கு எதிரானதாக விரைவில் ஆனது. 1970-71ல் ஜோர்டானிலும் பின்னர் லெபனானிலும் பிஎல்ஓ பாலஸ்தீனிய மற்றும் அரபு மக்களுக்கு இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு அரசியல் மற்றும் சமூக வேலைத்திட்டத்தை அளிக்க முடியவில்லை. அதன் இராணுவ தாக்குதல்கள் மற்றும் அணிவகுப்பு லெபனானிய தேசீயவாதிகளை பகைத்துக்கொள்ளவே சேவை செய்தது. அவர்களின் ஆரம்ப ஆதரவு பின்னர் வெறுப்பாக மாறிற்று, 1982-ல் இஸ்ரேலின் கைகளில் பிஎல்ஓ தோற்கவும் நாடுகடத்தப்படவும் வழி அமைத்துக் கொடுத்தது.

பிஎல்ஓ-வை தனது கட்டுப்பாட்டில் ஏற்று சில ஆண்டுகளுக்குள் அரஃபாத் தாமே இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார், ``இரு நாட்டு`` தீர்வை ஒப்புக்கொண்டார். இஸ்ரேல் பக்கத்தில் மேற்குக்கரை மற்றும் காசாவில் ஒரு சிறிய மற்றும் தனித்த பாலஸ்தீன நாட்டை அமைக்க ஒப்புக்கொண்டார். பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும், இவை இஸ்ரேலாலும் அதனை ஆதரிக்கும் அமெரிக்காவாலும் எப்போதும் நிராகரிக்கப்பட்டன.

1987- டிசம்பரில், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்களால் நடாத்தப்பட்ட இண்டிபடா எனும் தன்னெழுச்சியான கிளர்ச்சி, பிஎல்ஓ வை அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் கரங்களுக்குள் தள்ளியது. இந்த கிளர்ச்சி இஸ்ரேல் முதலாளித்துவ வர்க்கத்தை மட்டுமல்ல பாலஸ்தீன முதலாளித்துவ வர்க்கத்தை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் கூட பாதித்தது. பாலஸ்தீனத்தில் மட்டும் அன்றி எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் எங்கும் வெகுஜனங்களின் புரட்சிகர இயக்கம் தங்களின் கட்டிற்கு அடங்காமல் வெடித்தெழும் என்று அவர்கள் அஞ்சினர்.

டிசம்பர் 1988ல் அமெரிக்க அரசுத் துறையால் வார்த்தைக்கு வார்த்தை கூறப்பட்டு எழுதப்பட்ட ஒரு அறிக்கையில், அரஃபாத் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார், இஸ்ரேலுடனான ஒரு அமைதி தீர்வு ஒரு "மூலோபாயம், இடைக்கால தந்திரோபாயம் அல்ல" என ஏற்றுக் கொண்டார், மற்றும் "தனிநபர், குழு மற்றும் அரசு பயங்கரவாதம் உட்பட எல்லாவித பயங்கரவாதத்தையும் விட்டுவிடுவதாக அறிவித்தார். செய்தியாளர் மாநாட்டில் இஸ்ரேலை அரபாத் ஏற்பது தொடர்பாக அறிவிக்குமாறு கேட்கப்பட்டபோது, அரபாத் தன் உண்மைநிலையை நிலையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் விதமாய் பத்திரிகையாளரிடம் கூறினார், "என்ன விரும்புகிறீர்கள்? நான் நிர்வாணமாக நிற்கவேண்டும் என விரும்புகிறீர்களா? அது அழகாக இருக்காது" என்றார்.

நவீன அரசியல் இஸ்லாம்

ஜூன் 1967-ல் இஸ்ரேல் 6 நாட்களில் அரபு இராணுவங்களை முறியடித்து அழித்தது, எகிப்து மற்றும் சிரியாவின் மதசார்பற்ற தேசியவாத ஆட்சிகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் உள்ள இவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோரை செல்வாக்கிழக்க வைத்தது. அது அவர்களின் வேற்றுமைகளைக்களைய இயலாமை, இஸ்ரேலால் வியப்பூட்டும்படி செய்யப்படும் திடீர்த்தாக்குதலில் இருந்து அவர்களின் இராணுவ தளவாடங்களையும் அமைப்புக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான மிகவும் அடிப்படை முன்னெச்சரிக்கைகளைக் கூட எடுப்பதற்கு இயலாமையை அவர்கள் நிரூபித்தனர்.

1967 போர் பிஎல்ஓ-வின் தோற்றத்திற்கு மட்டும் வழிவகுக்கவில்லை மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அதேபோன்ற சக்திகளின் புதுப்பித்தலை இனவிருத்தி செய்வதற்கும்கூட வழிவகுத்தது. மதசார்பற்ற தேசியவாதத்தின் நெருக்கடியிலிருந்து இஸ்லாமிய சக்திகள் ஆதாயம் அடைந்தன மற்றும் அவை தொழிலாள வர்க்கத்திற்கு சுதந்திரமான அரசியல் பாத்திரம் இல்லை என ஸ்ராலினிஸ்டுகளால் குறிப்பிட்ட மட்டத்துக்கு வலியுறுத்தப்பட்டதால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை இஸ்லாமிய சக்திகள் ஓரளவு நிரப்ப முடிந்தது.

பிஎல்ஓ ஜனநாயக, மத சார்பற்ற தேசிய அரசை நாடிய அதேவேளை, முஸ்லிம் சகோதரத்துவம் இவை இரண்டையும் எதிர்த்து, பரந்த இஸ்லாமிய அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடியாக, ஒவ்வொரு நாட்டிலும் ஏனைய மதங்களை விலக்கும் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க இது முயன்றது.

எகிப்தில் நாசருக்குப் பின்னர் வந்த அன்வர் சதாத் அவரது சொந்த ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் பொருட்டு அரசு மதச்சார்பின்மை கொள்கைளை திரும்பப் பெறத் தொடங்கினார். ஷரிய சட்டத்தை பிரதான சட்டமூலமாக அங்கீகரிக்கும் விதத்தில் அரசியற்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அவரை எதிர்த்த இடதுகள் மற்றும் நாசரிய கொள்கைகளைப் பின்பற்றியோருக்கு எதிரான தனது பிரச்சாரத்தில், முஸ்லிம் சகோதரர்களையும் இஸ்லாமிய மாணவ காரியாளர்களையும் சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் இஸ்லாமிய எதிர்ப்புப் போக்குகள் அபிவிருத்தி அடைவதற்கான சூழலை உருவாக்கினார். ஷரியாவை முக்கிய சட்டமசோதா ஆக ஆக்கினார். முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு சக்தி அளித்தது போல ஏனைய கமாத் (Gama'at) இஸ்லாமியா போன்ற இஸ்லாமிய போராளிக்குழுக்கள் தோன்றின. காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் போன்றவை இதிலிருந்து பிரிந்து தோன்றிய குழு ஆகும்.

தொடரும்......



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved