சர்வாதிகாரத்தின் நிழல்: செப்டம்பர் 11க்குப் பின்னர் புஷ் இரகசிய அரசாங்கத்தை
நிறுவினார்
By the Editorial Board
4 March 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
புஷ் நிர்வாகம்
நிறைவேற்றும் பிரிவைச் சேர்ந்த 75 முதல் 150 அதிகாரிகளைக் கொண்ட "நிழல் அரசாங்கத்தை" நிறுவி இருக்கிறது.
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் அணு ஆயுதத் தாக்குதலின் சாத்தியத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை என கூறப்படும்
வகையில், காவல் அரண் வலுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு, "அரசாங்கத்தின் தொடர்ச்சியை"
அளிப்பதற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர் என்று வாஷிங்டன் போஸ்ட் வெள்ளிக் கிழமை செய்தி அறிவித்தது.
நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின் மிக குறைந்த நேரத்தில் தற்காலிகமாக
வெளியேறுவதற்கான நிறைவேற்று ஆணை ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இந்த ஏற்பாடு ஒரு மாதத்திற்குப் பின்னரும்
நிரந்தரமாக செய்யப்பட்டது.
நிர்வாகமானது,
குளிர் யுத்தத்தின் காலத்தின்போது தயாரிக்கப்பட்ட நீண்டகால வரவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு முடிவெடுத்தது ஆனால் முன்னர் ஒருபோதும் அது செயல் ஊக்கப்படுத்தப்படவில்லை. தற்கொலை
விமானக் கடத்தல்கள், உலக வர்த்தக மையத்தையும் பென்டகனையும் அழித்த சிலமணி நேரங்களுக்குள்ளேயே 100க்கும்
அதிகமான அதிகாரிகள் ஹெலிகாப்டர்களால் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
அவர்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கிழக்குப் பகுதியில் உள்ள மலைசார்ந்த நிலப்பகுதியில்
உள்ளதாக நம்பப்படும் இரு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அது தற்காலிக ஆட்சியின் இருக்கையாக ஆனது.
அக்டோபர் இறுதியில் இவ் ஏற்பாடு நிரந்தரமாக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் துணை அமைச்சரவை
மட்டத்திற்குக் கீழே ஆட்சிப் பணித்துறையின் உயர் மட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட அதிகாரிகள், அப்போதிருந்து 90
நாட்கள் இடைவெளியில் சுழல் முறையில் விடப்பட்டனர். அழிவுகர சம்பவத்தின்போது நிறைவேற்று பகுதியின் இந்த அதிகாரிகளுக்கு
முழு அதிகாரங்கள் வழங்குவதற்காக சட்டரீதியான பத்திரங்கள் வரைவு செய்யப்பட்டன.
நிர்வாகத்தின் பேச்சாளர் போஸ்ட் அறிக்கையை உறுதிப்படுத்தி
இருக்கின்றார், மற்றும் அயோவா (Iowa) வில் குடியரசுக்
கட்சி பிரச்சாரத்திற்கு தோன்றுகையில் புஷ் தாமே இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தார். "நாம் அரசாங்கத்தின்
தொடர்ச்சி பற்றிய விஷயத்தை அக்கறையுடன் எடுத்தோம் ஏனென்றால் எமது தேசம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது"
என புஷ் அறிவித்தார். "எங்கெல்லாம் பயங்கரவாதிகள் மறைய முயற்சிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை இந்த
நாடு துடைத்தழிக்கும் வரையில், நமக்குப் பாதுகாப்பில்லை." வேறுவார்த்தைகளில் சொல்வதானால், "பயங்கரவாதம்
மீதான யுத்தம்" போல, இரகசிய அரசாங்கமும் முடிவில்லாததாக இருக்கிறது.
மார்ச்3 போஸ்டில் மேலும் அறிக்கையின்படி, புஷ் நிர்வாகமானது ஐக்கிய
அமெரிக்க அரசுகளுக்குள் டெல்டா படைகளை இறக்கியிருக்கிறது --அதே அதிரடிப்படைப் பிரிவுதான் ஆப்கானிஸ்தானில்
யுத்தத்தை முன்னெடுத்தது-- அணு ஆயுதத் தாக்குதல் சம்பவம் நிகழக்கூடிய பட்சத்தில் வாஷிங்டனைச் சுற்றி பயங்கரவாத
எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்குவதற்கு விழிப்புடன் ஆயத்த நிலையில் அது வைக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்புக்கு முரண்பட்ட ஆட்சி
இந்த இரகசிய அரசாங்கத்தின் கெட்ட இயல்பு என்னவெனில் அது முற்றிலுமாக நிறைவேற்று
பகுதி அதிகாரிகளைக் கொண்டிருக்கின்றதோடு, இது அமெரிக்க அரசியல் அமைப்பின் இதயப் பகுதியாக இருக்கும் அதிகாரங்களைப்
பிரித்தல் என்பதன் முழு மீறலாக இருக்கின்றது. அரசாங்கத்தின் ஏனைய இரு பகுதிகளில், சட்டம் இயற்றல் மற்றும்
நீதித்துறை ஆகியவற்றில் ஒருவரும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை அல்லது அவற்றைப் பற்றி அறிந்திருக்கக்
கூட இல்லை. அவசரநிலை அரசாங்கம் ஒன்று தோன்றும் அத்தகைய சம்பவத்தில், நிறைவேற்றுப் பகுதியின் அதிகாரிகளை
மட்டுமே கொண்டிருக்கும் அவ் அதிகாரிகளின் நடவடிக்கைகள், சட்டமியற்றல் பகுதியின் மேற்பார்வையோ அல்லது நீதித்துறையின்
சரிபார்ப்போ இன்றி, அவர்கள் இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரங்களை செயல்படுத்துகின்ற அளவில், வெளிப்படையாகவே
அது சர்வாதிகார ஆட்சியாக இருக்க நேரும்.
"அரசாங்கத்தின் தொடர்ச்சி" பற்றிய பகட்டாரவாரம் இருப்பினும், புஷ் இன் திட்டம்
அமெரிக்க அரசியற் சட்டத்தில் விளக்கப்பட்டவாறு ஜனாதிபதியின் மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
புஷ் மரணத்தை அடுத்தோ அல்லது அவரின் ஆற்றலின்மை தொடர்பான நிகழ்ச்சியை அடுத்தோ அடுத்து வரவிருக்கும்
உதவி ஜனாதிபதி டிக் செனிதான் முழு நடவடிக்கைக்கும் பொறுப்பாக இருப்பார். அடுத்து, மூன்றாவது மற்றும்
நான்காவது நிலையில் இருக்கும் செனட் சபையின் சபாநாயகர் டென்னிஸ் ஹாசர்ட் மற்றும் செனட் சபையின் தலைவர்
புரோ டெம் றொபேர்ட் பிர்ட் ஆகியோர் பெயரளவில் தலைமை வகிக்கக் கூடிய அரசாங்கம் பற்றியதில் சம்பந்தப்படவில்லை
அல்லது அதைப்பற்றி அறிந்திருக்கக்கூட இல்லை.
புஷ் நிர்வாகமானது அவசரநிலை தயாரிப்பு பற்றி ஜனாதிபதி றேகனால் வழங்கப்பட்ட
1988 நிறைவேற்று ஆணையை தெளிவாகவே மீறி உள்ளது. அது தேசிய பாதுகாப்பு சபைக்கு "நிறைவேற்றுப்
பகுதியுடன் இணைந்து, தேசியப் பாதுகாப்பு--அவசரநிலை தயாரிப்பு விஷயங்களில் காங்கிரஸ் மற்றும் மத்திய நீதித்துறைக்கு
உதவி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்" என அறிவுறுத்துகின்றது.
ஞாயிறு அன்று தொலைக்காட்சி நேர்காணலில், ஜனநாயகக் கட்சியின் முன்னணி காங்கிரஸ்
உறுப்பினரும் செனட் சபையின் பெரும்பான்மைத் தலைவருமான ரொம் டாஷ்லே, தானோ அல்லது மற்ற காங்கிரஸ்
தலைவர்களோ அத்திட்டம் பற்றி கலந்தாலோசிக்கப் பட்டிருக்கவில்லை என உறுதி செய்தார். எதிர்காலத்தில்
இருக்கக் கூடிய அளவில் என்று மட்டும் அல்ல, இன்றைய யதார்த்தத்தில் இது இரகசிய அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறதா
என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது, "எனக்குத் தெரியாது. அவர்களின் பாத்திரம் பற்றித் தெரியாது, அவர்களின்
தற்போதைய பொறுப்பாளர் பற்றித் தெரியாது ஏனெனில் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸில் உள்ள ஒருவர்
அறிவார் என்றும் காங்கிரஸ் மற்றும் நீதித்துறை பகுதியினர் சேர்க்கப்பட்டிருப்பர் என்றும் நீங்கள் நினைக்கலாம்"
என்றார்.
இது ஒரு அசாதாரணமான நிலை: அமெரிக்க செனட்டின் தலைவர், வாஷிங்டனில் மிக
ஆற்றலுள்ள உறுப்பினர், அமெரிக்க அரசாங்கம் இன்னும் ஜனநாயக ஆட்சி விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறதா, அல்லது
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கோ அல்லது பொது மக்களுக்கோ தங்களுடைய நடவடிக்கைகளுக்காக எந்த
விதத்திலும் பொறுப்பில்லாத தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளால் திரைமறைவில் அது இயங்கிக் கொண்டிருக்கிறதா
என தனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறார்.
அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, இரகசிய அரசாங்கத்தை நிறுவுவது என்பது, வாஷிங்டன்
அதிகாரிகள் மட்டத்தில் திரைக்குப் பின்னால் ஆன நீண்டகாலமான போராட்டத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். அது
கிட்டத்தட்ட முழு தசாப்தத்திலும் எண்ணப்பட்டு வந்திருக்கிறது. இது ஆரம்பத்தில் கிளின்டன் நிர்வாகத்தை சீர்குலைக்க
சட்ட பூர்வ/ செய்தி ஊடக
/ காங்கிரஸ் பிரச்சார வடிவத்தை எடுத்தது. அது
1995-96ல் மத்திய அரசாங்கத்தை இழுத்து மூடல், மற்றும் அதன் உச்சத்தில் பதவி நீக்க விசாரணையாக வெளிப்பட்ட
ஒரு தொடரான சுதந்திரசபை விசாரணைகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
இது 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை
நசுக்கியும் புஷ்ஷுக்கு ஜனாதிபதி பதவியைத் தீர்ப்பளித்தும்- உச்ச நீதிமன்றம் ஜனநாயக விரோத தலையீட்டைச் செய்ததால்
பின்தொடரப்பட்டது. இப்பொழுது, ஜனநாயகக் கட்சியினதும் அதேபோல குடியரசுக்கட்சியினதும் தேர்ந்தெடுக்கப்பட்ட
காங்கிரஸ் உறுப்பினர்களின் முதுகுக்குப் பின்னால், தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின்
இரகசிய, இராணுவ ஆதரவு அரசாங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும்
அரசியல் வாழ்க்கையில் ஒரேயடியான மாற்றத்தை நடைமுறைப்படுத்துதற்கு, புஷ் நிர்வாகமானது "பயங்கரவாதத்தின்
மீதான யுத்தம்" என்பதைப் பற்றிக் கொண்டுள்ளது. அது அயல் நாடுகளில் தீவிர வலதுசாரி இராணுவவாத வேலைத்திட்டத்தையும்
உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் நடைமுறைப்படுத்துவதாகும்.
அமெரிக்க மக்களுக்கு வருகின்ற மாபெரும் அச்சுறுத்தலானது, வெளிநாட்டு பயங்கரவாதிகளிடமிருந்தோ
அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அரசாங்கத்தின் திரைமறைவு எந்திரங்களில்
இருந்தே வருகிறது. பயங்கரவாதத் தாக்குதல்களில் --அமெரிக்க உளவு முகவாண்மை மற்றும் அமெரிக்க இராணுவத்தின்
பாத்திரம் இன்னும் விசாரணை செய்யப்பட வேண்டியதாய் இருக்கிறது-- அத்தாக்குதல்கள் சட்டமன்றத்திற்கு மறைவாக,
ஒரு இணை அரசாங்கத்தை அமைப்பதற்கான சாக்குப் போக்காக ஆகியும் இருக்கிறது. புஷ் நிர்வாகம் நிறுவத்தொடங்கி
இருக்கின்ற இராணுவ--போலீஸ் சர்வாதிகாரத்திற்கு "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அடித்தளமாக ஆகி இருக்கிறது.
அது வெள்ளை மாளிகையிலிருந்தும் பல்வேறு "மறைக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களிருந்தும்" தொழிற்படும் பெயர்
குறிக்கப்படாத அதிகாரிகளின் இரகசிய சதிக்கூட்டத்தால் இயக்கப்படுகிறது.
|