ஷிணீதீணீக்ஷீணீtஸீணீனீ ஸிணீsமீஸீபீக்ஷீணீஸீ 19472002
Veteran Sri Lankan Trotskyist dies in
Colombo
சபாரத்தினம் இராசேந்திரன் 1947-2002
நீண்ட அனுபவம் வாய்ந்த இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட் கொழும்பில் காலமானார்.
Statement of the Socialist Equality Party (Sri Lanka)
2 March 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
தோழர்
சபாரட்ணம் இராசேந்திரன் அவர்களது மறைவினை, சோசலிச சமத்துவக் கட்சி ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.
இராஜேந்திரன் அவர்கள் இலங்கையின் வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் மாசி 27 அன்று அதிகாலை 4
மணியளவில் நிமோனியா மற்றும் நுரையீரல் செப்ரிசீமியா நோயினால் காலமானார். அவர் உலக சோசலிச வலைத்
தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் அங்கத்தவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான
சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாவார். அவர் மனைவியையும் இரு மகள்களையும் ஒரு மகனையும்
விட்டுச்சென்றுள்ளார்.
கட்சிக்காகவும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் இராசேந்திரன் ஆற்றிய சேவை
மிகவும் தீர்க்கமானதாக விளங்கிய வேளையில் அவர் தனது 54வது வயதில் சடுதியாக காலமானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு
ஒரு பாரிய இழப்பாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் தனது
இளம் வயதில் இணைந்துகொண்ட அவர் அதன் கொள்கைகளுக்காக துணிகரமாகவும் திடசங்கற்பத்துடனும் 30 ஆண்டுகளாக
போராடி வந்துள்ளார்.
இராசேந்திரன் இலங்கையின் வடக்கிலுள்ள யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியான நயினாதீவில்
1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் திகதி பிறந்தார். அவருக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
அதிகமான யாழ்ப்பாண தமிழ் பெற்றோர்களைப் போலவே இவரது பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த
கல்வியை பெற்றுக் கொடுப்பதில் ஆழ்ந்த அக்கறை காட்டினர். இராசேந்திரன் இளம்பிராயத்தில் கணேசா வித்தியாலயத்திலும்,
நயினாதீவு மத்திய கல்லூரியிலும் மாணவனாக இருந்து அதன் பின்னர் பொருளியற் பட்டதாரியாவதற்காக கொழும்பு
சென்று கல்வி கற்றார்.
1972 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக
அங்கத்தவர்களுடனான சந்திப்பின் பின்னர் கட்சியினுடைய இளைஞர் அமைப்பான இளம் சோசலிஸ்ட்டில் அவர் இணைந்து
கொண்டார். அது இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு நெருக்கடியான காலகட்டமாக விளங்கியது. ஒரு தசாப்தத்துக்கு
குறைவான காலப்பகுதியான 1964 ல் லங்கா சம சமாஜக் கட்சியானது மாக்சிசத்தின் அடிப்படையான கொள்கைகளை
வெளிப்படையாக கைவிட்டதுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால்
தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது.
லங்கா சம சமாஜக் கட்சியினது அப்பட்டமான காட்டிக் கொடுப்பானாது இலங்கையிலும்
சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. லங்கா சம சமாஜக் கட்சி
சோசலிச அனைத்துலக வாதத்தை சூழ, சிங்கள தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் அரசியல் போராட்டத்தை
நிராகரித்தமையானது இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்களினது
தோற்றத்துக்கு வழிவகுத்தது. மக்கள் விடுதலை முன்னணியானது (JVP)
சிங்கள சோவனிசத்தினதும் மாவோயிசத்தினதும் மற்றும் காஸ்ட்ரோயிசத்தினதும் ஒரு கலவையாகும். அத்தோடு
அது தெற்கிலுள்ள சிங்கள கிராமப்புற விரக்தியடைந்த இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கையும் செலுத்தியது. வடக்குக்
கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தொடர்ச்சியான
இன வேற்றுமையினால் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுபான்மையினர் மத்தியிலும், ஒரு போராட்டத்தினூடாக தனித் தமிழ் அரசை
அமைக்கும் அதனது கோரிக்கையை கண்ட விரக்தியடைந்த இவ்விளைஞர்களையும் அவ்வியக்கம் கவர்ந்தது.
பல தசாப்தங்களாக பரந்த மக்களால் மார்க்சிச ட்ரொட்ஸ்கிசவாதிகளாக அடையாளங்
காணப்பட்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சி 1970ல் இரண்டாவது தடவையாகவும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்துக்குள்
நுழைந்து கொண்டது. 1971ல் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களை கொடூரமாக நசுக்கியும், பின்னர் சிங்கள மொழியை
அரச மொழியாகவும், பெளத்த சமயத்தை அரச மதமாகவும் பிரகடனப்படுத்தியன் மூலம் தமிழர் விரோத வேறுபாடுகளை
உக்கிரமாக்கும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அமைச்சரவையிலும் ல.ச.ச.க. அங்கம் வகித்தது.
இக்காலகட்டத்தில் தீவிரமானவர்களாகவும் இந்த விடயங்களைப் பற்றி ஆழமாக சிந்திக்காதவர்களாகவும் இருந்த பல
இளைஞர்கள், ல.ச.ச.க. வை "ட்ரொட்ஸ்கிசம்" எனவும் அது தோல்விகண்டு விட்டது எனவும் நினைத்தனர். ஆகையால்
தமது உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜே.வி.பி.யுடனோ அல்லது விடுதலைப் புலிகளுடனோ இணைந்துகொள்வதை
ஒரே பதிலீடாக நினைத்தனர்.
இத்தகைய ஒரு நிலைமையின் கீழ் 1968ல், ல.ச.ச.க.வின் காட்டிக் கொடுப்பின் அனைத்து
சிக்கலான அரசியல் விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவுபடுத்துவதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
அதன் முக்கிய பிரச்சினையாக, ல.ச.ச.க. சோசலிச அனைத்துலக வாதத்தை தொடர்ச்சியாக கைவிட்டு சிங்கள
பேரினவாதத்தை நாடியது. 1972ல் இராசேந்திரன் கட்சியுடன் முதல் முறையாக தொடர்பு கொண்ட வேளை அது ஜே.வி.பி.
கிளர்ச்சியின் போது ஸ்ரீ.ல.ச.சு.க- ல.ச.ச.க. அரசாங்கத்தால் திணிக்கப்பட்டிருந்த சட்டவிரோதமாக்கல் நடவடிக்கையிலிருந்து
தப்பிப் பிழைத்திருந்தது. அந்த வருடம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காங்கிரசை தொடர்ந்து பு.க.க.வின்
பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய நா.அ.அ. குழு வைப் பற்றி ஒரு தொடர்ச்சியான விரிவுரைகளை
ஆரம்பித்திருந்தார். ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுடன் இராசேந்திரனும் அதில் கலந்து கொண்டிருந்தார்.
இராசேந்திரன் 1973ல் பு.க.க.வில் இணைந்துகொண்டபோது, அவர் நனவுபூர்வமாக
தமிழ் பிரிவினைவாதத்தை நிராகரித்ததோடு சோசலிசத்துக்கான போராட்டத்தில் சிங்கள தமிழ் தொழிலாளர்களை
ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பெறுபேறுகளால் மாத்திரமே தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு
முடிவு கட்டமுடியும் எனவும் வலியுறுத்தினார். அது ஒன்றும் சுலபமான தீர்மானம் அல்ல. அச்சமயத்தில் தமிழ் தேசியவாதமும்
தமிழீழ விடுதலைப் புலிகளும் எழுச்சியுற்றிருந்தன. ல.ச.ச.க.வின் காட்டிக்கொடுப்பின் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தின்
புரட்சிகரப் பாத்திரம் பற்றிய அமைதிவாதம் தலைநீட்டிக் கொண்டிருந்தது. மாஓ, சேகுவேரா மற்றும் கோசிமின்
கொள்கைகளைப் பொழியும், பல்வேறுபட்ட சந்தர்ப்பவாத குறுகிய பாதைகளைத் தேடும் கதையளப்பாளர்களுக்கும்
அக்காலகட்டத்தில் பஞ்சமிருக்கவில்லை.
இன்று விடுதலைப் புலிகள் தமிழர்களை ஒரு ஆபத்தான முட்டுச்சந்துக்குள் தள்ளுவதற்காக
கொழும்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிக் கொண்டிருப்பது பல விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றது.
ஆனால் 1970களின் ஆரம்பத்தில் சோசலிச வார்த்தை ஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அதன் தேசியவாத
முன்நோக்கின் வங்குரோத்தை தெளிவாகப் புரிந்துகொண்டிருந்த அரிதான ஒரு சில தமிழ் இளைஞர்களில் இராசேந்திரனும்
ஒருவராக இருந்தார். 1974ல் இராசேந்திரனை கொழும்பில் சந்தித்த உறவினர் ஒருவர் அவரை அண்மையில்
பின்வருமாறு நினைவுகூர்ந்தார்: "அவர் ஒரு செல்வந்தமான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அவரது தந்தையார்
தமிழரசுக் கட்சி (ஒரு முதலாளித்துவ தமிழ் கட்சி) யின் ஆதரவாளர். ஆனால் இராசேந்திரன் வேறுவிதமாக ட்ரொட்ஸ்கிச
வேலைத்திட்டத்துக்காக விவாதிக்கும்போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். பின்னர் நானும் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தில் இணைந்துகொண்டேன்" என அவர் குறிப்பிட்டார்.
தடுமாற்றம் இல்லாத திடநம்பிக்கை
தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு ஒரே பதிலீடு தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக
சோசலிச அனைத்துலகவாதம் மட்டுமே என்ற தனது நம்பிக்கையில் இராசேந்திரன் தடுமாற்றம் கொண்டிருக்கவில்லை.
ஏனையவர்களைப் போல அவரும் திட்டமிட்ட இன பாரபட்சத்துக்கு ஆளாகவேண்டியிருந்தது, சிங்களம் மட்டும் என்ற சட்டவிதியின்
பலாபலானாக ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் தனது தொழில் தகமைக்காக சிங்கள மொழியை
கற்கவேண்டியிருந்தது. தமிழர்களுக்கு எதிரான பரந்த அடக்குமுறைகளின் ஒரு பாகமாக அவரது வீடு பலமுறை இராணுவ
பொலிஸ் தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அவரை பார்க்க வடக்கு கிழக்கிலிருந்து உறவினர்கள் வந்தால் பொலிஸ்
நிலையத்தில் அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது. அங்கே கீழ்தரமான சித்திரவதைகளுக்கும் பகிரங்கமான
இனவாத பட்டியலுக்கும் முடிவு கிடையாது. அவர் அதையிட்டு ஆத்திரமுற்றிருப்பினும் கூட அவர் ஒரு போதும் "சிங்களவர்களை"
முற்றாக குற்றம் சாட்டியது கிடையாது. ஏனெனில் தொழிலாள வர்க்கத்தை பிரித்து வைக்க வேண்டுமென்றே இலங்கையில்
சமூகப்பதட்டத்தை திட்டமிட்டு தூண்டும் ஆளும் கும்பல்களே இதற்கு பொறுப்பு என்பதை அவர் நன்கு விளங்கிக்
கொண்டிருந்தார்.
அவர் பு.க.க.வில் இணைந்த நாளில் இருந்து, தனது அரசியல் வேலைகளில் மிகுதியான
ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார். அவர் தனது இளம் பாராயத்திலிருந்து காக்கை வலிப்புக்கு [இசிவு வலிப்பு]
இட்டுச்செல்லும் நரம்பு வியாதியினால் தொல்லைக்குள்ளாகியிருந்தார். உயர்ந்தளவு மன அழுத்தமானது, அவரை
உணர்விழக்கச் செய்யும் வலிப்பளவை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதை அவருடன் மிக நெருக்கமாக வேலை செய்தவர்கள்
சுட்டிக்காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருந்த போதிலும் அவர் நா.அ.அ.கு.வின் ஆவணங்களையும் கட்டுரைகளையும்
கட்சியின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் பாதைக்கு மொழிபெயர்ப்பதில் இறுதிவரை ஈடுபட்டிருந்தார்.
1973க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் இராசேந்திரன் கொழும்பில் உள்நாட்டு
வருமானவரி தினைக்களத்தில் தொழில் புரிந்தார். அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த அரசாங்க
லிகிதர் சேவை சங்கத்தில் ல.ச.ச.க.வின் அரசியலுக்கு எதிராக கூர்மையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பு.க.க.வில்
இணைந்து கொண்டார். ஒரு முழுமையான பொது சேவையாயிருந்ததிலிருந்து பிரிக்கப்பட்ட உள்நாட்டு வருமானத்
திணைக்களமானது ஒரு மூடப்பட்ட திணைக்களமாகிய போது, இலங்கை வரி அதிகாரிகள் தொழிற் சங்கத்தில்
இணைந்ததோடு, அதனுடைய பழமைவாத தலைமையின் "தொழிற் சங்கத்தில் அரசியல் இல்லை" எனக் கூறும்
போக்கிற்கு எதிராக மீண்டும் மீண்டும் போராடினார். 1986 இலிருந்து 1991 வரை அவர் தொழிற் சங்க குழுவின்
ஒரு அங்கத்தவராகயிருந்தார்.
1978ல் இராசேந்திரன் திருமணம் செய்துகொண்டதை அடுத்து அவரும் அவரது மனைவியும்
யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றலாகி சென்றனர். பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சியானது அதற்கு முன்னைய வருடத்தில்
அதிகாரத்திற்கு வந்திருந்ததுடன் தொழிலாளர்களை கூறுபடுத்துவதற்காகவும் அதனுடைய சுதந்திர சந்தைக் கொள்கைகளை
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குமான ஓர் கருவியாக அதனது தமிழ் எதிர்ப்புத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
ஒரு தீர்க்கமான காலப்பகுதியில் நிரூபித்துக்க காட்டப்பட்டிருந்தது என்னவெனில், அந்தப் பகுதியில்
RCL உறுப்பினர்களுடைய ஒரு முக்கிய குழுவிற்கு அரசியல்
தலைமையை இராசேந்திரன் அவர்கள் வழங்கியதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களுக்கு ஊக்கமளித்ததானது
தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்விளைவினை உருவாக்கியது. இவர்களில் பலர் விடுதலைப் புலிகளுடனும் மற்றும் ஏனைய
பிரிவினைவாத அமைப்புகளுடனும் சேர்ந்துகொண்டனர். இவர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் ஏனைய பிரிவினைவாத
இயக்கங்களுடனும் இணைந்து கொண்டனர். போர்க்குணம் கொண்ட எதிர்ப்புகளும் ஆயுதக் கிளர்ச்சிகளும் தலைநீட்டின.
அதைத் தொடர்ந்து 1983ல் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினரை கொன்றதையடுத்து தென்பகுதி
சிங்களப் பேரினவாதிகள் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்த இனப்படுகொலைகளை முன்னெடுத்தனர்.
இதுவே நாட்டில் தற்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பமாக விளங்கியது.
அது
இராசேந்திரனின் அரசியல் நடவடிக்கையில் ஒரு கடினமான காலகட்டமாக விளங்கியது. அவர் தமிழ் தேசியவாதத்துக்கு
எதிராகப் போராடிய அதே வேளை சகலவிதமான அரச அடக்குமுறைகளையும் கடுமையாக எதிர்த்து வந்தார்.
யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் கொழும்பில் இருந்து எந்த ஒரு அரசியல் வெளியீடுகளும்
யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கட்சி ஆவணங்களை பிரசுரிப்பது
விநியோகிப்பது உட்பட சகல அரசியல் நடவடிக்கைகளும் இரகசியமாகவே இடம்பெற்றன. 1983 இல் பிரச்சனைகளின்
தீவிரமான கட்டத்தில், இராசேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்ட RCL
இன் "காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டம்" என்னும் அறிக்கை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி
கொண்டுவரப்பட்டு, அங்கு அதனை அச்சிட்டு வினியோகிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. 1983 திட்டமிட்ட
படுகொலையையும் LSSP யும் இலங்கை ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் ரீதியில் குற்றப்பாத்திரம் வகித்ததனையும் இவ் அறிக்கை மிகவும் ஆழமாக ஆய்வுசெய்திருந்தது.
அதே காலகட்டத்தில் இராசேந்திரன் பு.க.க. நீண்டகால அங்கத்தவர்களைக்
கொண்டிருந்த பல பெரும் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற கட்சியின் போராட்டங்களுக்கு அரசியல் வழிகாட்டியாக
விளங்கினார். அச்சமயம் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான எந்தவொரு பரந்த அரசியல் போராட்டத்திலிருந்தும்
முறித்துக்கொண்டு, உடனடிப் பொருளாதாரக் கோரிக்கைகளின் பேரிலான மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைளுக்குள்
உடனடிப் பொருளாதாரக்க கோரிக்கை நடவடிக்கையளவிற்கு மட்டுப்படுத்தி பின்வாங்குவதை, தொழிற்சங்கத் தலைவர்கள்
செயற்திறனுடன் ஊக்கமளிக்கும் போக்கிற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் போராடுவது அவசியமானதாக
இருந்தது. சீ-நோர் தொழிற்சாலையிலும் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையிலும்
LSSP இனது காட்டிக்கொடுப்புடன் முறித்துக்கொண்டவரும்
ஒரு முன்னைநாள் LSSP இன் தலைவரும், ஆனால் அவருக்கே
உரிய மத்தியவாத அடையாளத்தினையும் மற்றும் சின்டிக்கலிச அரசியலினையும் பின்பற்றும் பாலதம்புவினால் தலைமை
தாங்கப்பட்ட இலங்கை வர்த்தக தொழிற்சங்கத்துடன் பு.க.க. அங்கத்தவர்கள் மோதவேண்டியிருந்தது.
ஒரு நெருக்கடியான காலகட்டம்
இராசேந்திரன் ட்ரொட்ஸ்கிச இயகத்துக்கு மிகவும் நெருக்கடியான ஆண்டாக விளங்கிய
1986ல் கொழும்புக்குத் திரும்பினார். சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படைகளைக் காக்கும் ஒரு அரசியல்
போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, (ICFI)
பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP)
நீண்டகாலத் தலைமையை வெளியேற்றியது. தொ.பு.க.வுடனான பிளவும் அரசியல் முன்நோக்கின் தொடர்ச்சியான தெளிவுபடுத்தல்களும்
இராசேந்திரனின் உடல்நிலைமை பலவீனமாகியிருந்த போதிலும் அவருக்கு புதிய சக்தியை வழங்கின. அவர் புதிய
ட்ரொட்ஸ்கிச பரம்பரையை பயிற்றுவிப்பதற்கு அவசியமானவை என தான் கருதிய முக்கியமான கட்சி ஆவணங்களை
மொழிபெயர்க்கும் கடமையில் தானாகவே ஈடுபட்டார்.
ஆயினும் அதுவும் பு.க.க.வுக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டமாக விளங்கியது.1987ல்
கட்சியின் ஆரம்ப பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய மாரடைப்பால் காலமான போது ஒரு பாரிய இழப்பை
அனுபவித்தது. இந்த பாரிய தாக்கத்தின் பின்னர், பு.க.க. அரச ஒடுக்குமுறை மற்றும் இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு
எதிரான தனது பேரினவாத பிரச்சாரத்தை எதிர்க்கும் எவரையும் உடல் ரீதியில் அழிக்கும் ஜே.வி.பி.யின் பாசிச
தாக்குதல், போன்ற ஒன்றிணைந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டது. தனது உத்தரவுகளுக்கு இணங்க மறுத்த மூன்று பு.க.க.
உறுப்பினர்கள் ஜே.வி.பி. குண்டர்களால் கொலை செய்யப்பட்டனர். அத்தகைய குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களில் இராசேந்திரன்
தனது வீட்டை கட்சியின் முக்கிய கூட்டங்களை நடத்தவும் கட்சி உறுப்பினர்கள் தங்கியிருக்கவும் கட்சியின் பொறுப்பில்
விட்டு வைத்தார். இந்தக் காலகட்டத்தில் அவரது துணைவியாரான ஜானகி அவருக்கு தகுந்த ஆதரவு வழங்கினார்
என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
இராசேந்திரன் தனது உடல்நிலை, அரசாங்க உத்தியோகத்தையும் கட்சிப் பொறுப்புக்களையும்
ஒன்றாகச் செய்வதற்கு பாதகமாக இருப்பதை அறிந்து 1991ல் உரிய காலத்துக்கு முன்னரே ஓய்வு பெற்றார். ஓய்வு
பெற்ற காலம் முதல் கட்சியின் காரியாளர்களில் ஒரு ஊதியமற்ற முழுநேர ஊழியராக செயற்பட்டார். உலக
சோசலிச வலைத் தளம் ஸ்தாபிதம் செய்யப்பட்டதிலிருந்து வலைத் தளத்தின் தமிழ் பகுதிக்கு கட்டுரைகளை
மொழிபெயர்ப்பதில் மிக முக்கிய பாத்திரம் வகித்தார். தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சிபெற்றவராக
விளங்கிய இவர், சரியான மொழிபெயர்ப்புகளை செய்யும் போது மூலப்பிரதியில் உள்ள அரசியல் கருத்துக்களை தெளிவாகச்
சொல்வதில் தீவிரக் கவனம் செலுத்துபவராக விளங்கினார். அண்மையில் அவர் செய்த மொழிபெயர்ப்புக்களில் சில
பின்வருமாறு: நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத் திட்டம், டேவிட் நோர்த்தின் சோவியத்
யூனியனில் நடப்பது என்ன, சோவியத் யூனியன் எங்கே செல்கின்றது, சோவியத் யூனியனின் முடிவு, கீர்த்தி பாலசூரியவின்
சமசமாஜ கட்சியின் வரலாற்றிலிருந்து என்பவையாகும்.
அவர் தனது சுகயீனம் காரணமாக வேலையை மட்டுப்படுத்த வேண்டியிருந்ததையிட்டு கவலையடைந்திருந்தார்.
ஆயினும் அவர் அது குறித்து மிகவும் குறைவாகவே பேசிவந்துள்ளதோடு அடுத்தவர்கள் அதைச் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக
இருந்தார்கள். அவர் இறப்பதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பிருந்தே சீர்கேடான உடல் நிலையில் இருந்த போதும் வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டது அண்மையிலாகும்.
கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் அவரது நற்பண்புகளையும் உபசரணைகளையும் பரந்த
அறிவையும் உடனடியாக நினைவுகூர்ந்தனர். ஒருவர் யாராவது ஒரு தமிழ் தலைவரைப் பற்றி விசாரித்தால் இராசேந்திரனால்
அவரது சொந்த விபரங்களை மட்டுமல்ல மொத்தத்தில் தனது மொழியைக் கொண்டு அந்த மனிதனின் கொள்கையைப்
பற்றிய ஒரு தெளிவான சராம்சத்தையே கொடுக்க முடியும். அவர் முன்நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
அமிர்தலிங்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில் "அவருக்கு முதுகெலும்பு கிடையாது ஆனால் அதைப்பற்றி வாயளப்பதற்கு அவருக்கு
ஒரு பெரிய வாய் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராசேந்திரன் இசையையும் இந்திய நடனத்தையும் இலக்கியத்தையும் விரும்பினார். அவர்
1968ம் ஆண்டும் 1970ம் ஆண்டும் அவரது சிறுகதைகளுக்காக ஒரு தங்கப் பதக்கத்தையும் ஏனைய விருதுகளையும்
பெற்ற போதிலும் அவரது இலக்கிய வேலைகளுடன் முன் செல்லமுடியாதவராக விளங்கினார். அவர் தனது பிள்ளைகள்
இந்திய இசையையும் நடனத்தையும் பயில வேண்டும் என விரும்பியது அது தமிழர்களின் பரம்பரை வழக்கம் என்பதால்
அல்ல. மாறாக, அவரே குறிப்பிட்டது போல் "சில விடயங்கள் உணர்வும் அறிவும் ஆழமான மனவெழுச்சியுமுள்ள மனிதனை
உருவாக்கும்." அவர் தனது மூத்த மகளின் முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது உரைநிகழ்த்துவதற்காக
சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயசுக்கு "கெளரவ அதிதியாக" அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் மூலம் பரம்பரை வழக்கத்தை உடைத்தெறிந்தார்.
அவரது கட்சித் தோழர்கள் அவரை சாந்தமானவராகவும் உறுதியானவராகவும் கண்டனர்.
ஏதாவது ஒரு அரசியல் விவாதம் ஆரம்பமாகும் போது அவர் பொதுவில் அமைதியாக இருப்பார். ஆனால் விடயங்கள்
தொடர்ச்சியாக சூடுபிடிக்குமானால், அவர் திடீரென மிகவும் சக்திவாய்ந்த முறையில் மிகவும் சரியாக அல்லது
அடிப்படைக் கருத்துக்களைச் சொல்வதில் கவனமாக பிரவேசிக்கும் அதே வேளை தனது நிலைப்பாட்டை இலகுவில் விடவும்
மாட்டார்.
அவர் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இராசேந்திரன் தனது வைத்தியசாலை
படுக்கையில் இருந்தபோது "நான் நலமடைந்து மீண்டும் வலைத் தள வேலைகளை செய்வேன்" என தோழர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
அவர் ஏனையவர்களிடம் "நான் இந்த நோயை தாங்கிக் கொள்வதோடு தொடர்ந்தும் உயிர்வாழ்வேன். ஏனென்றால்
நான் ஒரு மார்க்சிஸ்ட், நான் எமது முன்நோக்கின் வெற்றியில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இயக்கத்தின் முன்நோக்கில் தான் கொண்டிருந்த முழுமையான திடநம்பிக்கையின் பேரில் அவர் மீண்டும் வேலைக்கு வருவதாக
மறுபடியும் உறுதியாகத் தெரிவித்திருந்த போதிலும், அவரது உடல் நலக் குறைவால் இடைநிறுத்தப்பட்டது.
இராசேந்திரனின் கடந்த மூன்று தசாப்த கால அரசியல் பங்களிப்புகள் அனைத்து விதமான
தேசிய வாதத்துக்கும் எதிராக அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஏனையவர்களுக்கு ஒரு சிறந்த
படிப்பினையாகும். சோசலிச சமத்துவக் கட்சி அவரது நினைவுக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கின்றது.
|