கராச்சி குண்டு வெடிப்பு பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது
By Vilani Peiris
20 June 2002
Back to screen version
கடந்த வாரம் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நிகழ்ந்த கார் குண்டு
வெடிப்பானது பாக்கிஸ்தானின் இராணுவ பலசாலியான ஜெனரல் பர்வெஸ் முஷாரப் எதிர் கொண்டிருக்கும் நிச்சயமற்ற
அரசியல் நிலைமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்
அரசாங்கத்துடன் உறவுகளை முறித்துக் கொண்டார் அத்துடன் அவர் இப்பொழுது இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீருக்குள்
ஆயுதம் தரித்த இஸ்லாமிய போராளிகள் நுழையாமல் தடுக்கவேண்டும். பாக்கிஸ்தான் இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளை
கொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களிடமிருந்து அவர் எதிர் கொள்ளும் எதிர்ப்பு வளர்ச்சி அடைகிறது.
கராச்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்த
பட்சம் 50 பேர் காயம் அடைந்தனர், இது அமெரிக்க பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்வெல்ட் இஸ்லாமாபாத்தை
விட்டுச் சென்ற அடுத்த நாள் நடந்தது. காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் இஸ்லாமிய குழுக்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரம்ஸ்வெல்ட் வலியுறுத்தினார். புதுதில்லியில் உள்ள இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில்
மீது கடந்த டிசம்பரில் காஷ்மீரி பிரிவினைவாதிகளைச் சேர்ந்த ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலை அடுத்து எல்லையில்
இலட்சக்கணக்கான இந்திய மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தினர் உயர் மட்ட உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ தளத்தின்மீது நடத்தப்பட்ட
தாக்குதலைத் தொடர்ந்து அடல்பிகாரி வாஜ்பாயியை பிரதமராகக் கொண்ட இந்திய அரசாங்கம், பாக்கிஸ்தான் பிரதேசத்திலுள்ள
பயிற்சி முகாம்கள் என அழைக்கப்படுவனவற்றுக்கு எதிராக இராணுவ தாக்குதல்கள் நடத்த வேண்டும் என அச்சுறுத்தியது,
இது பதட்டங்களைத் தணியவிடாமல் செய்வதாக உள்ளது, அதாவது பதட்டம் என்ற சக்கரம் பின்புறம் சுழலாமல் தடுக்க
பற்சக்கரத் தடையில் இன்னும் ஒரு வெட்டுக் குழியை ஏற்படுத்துவது போன்றதாகும். இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு
பாக்கிஸ்தான் இராணுவம் நேரடியாக ஆதரவளிப்பதுடன் ஏற்பாடும் செய்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது-
இக்கோரிக்கையை இஸ்லாமாபாத் மறுக்கிறது. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரினுள் இஸ்லாமியப் போராளிகள்
நுழைவதை பாக்கிஸ்தான் இராணுவம் தடுக்க வேண்டும் என முஷாரப்பை சந்தித்த ரம்ஸ்வெல்ட் மற்றும் அமெரிக்க துணை
அரசு செயலர் ரிச்சட் அமிட்டேஜ் ஆகியோர் கோரினார்.
கடந்த வாரம் புதுதில்லி ஒப்புக் கொண்டது, அதாவது "எல்லை தாண்டிய பயங்கரவாதிகள்"
என அது கூறுபவர்களின் ஊடுருவலில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றது. ஆனால் முஷாரப்பின் நடவடிக்கைகள் பாக்கிஸ்தானுக்குள்
பரந்த அளவிலான கோபத்தை ஏற்படுத்தியது. பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் -அவற்றில் சில இந்திய
ஆட்சியில் உள்ள ஜம்மு காஷ்மீரில் செயலூக்கத்துடன் இருக்கும் ஆயுதம் தரித்த குழுவினருடன் நேரடி தொடர்புகளைக்
கொண்டவை - நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
முன்பு தெரிந்திராத ஒரு அமைப்பான, அல் கானூன், கராச்சியில் நடந்த குண்டு
வெடிப்புக்கு உரிமை கோரியது. பத்திரிக்கைக்கு கொடுத்த, கையால் எழுதப்பட்ட அறிக்கையில் அது எச்சரித்தது: "அமெரிக்காவும்
அதன் கூட்டாளிகளும் அதன் கையாளாக செயல்படும் பாக்கிஸ்தானிய ஆட்சியாளர்களும் மேலும் தாக்குதல்களுக்குத் தயாராக
இருக்க வேண்டும் .... (இந்த) குண்டுத் தாக்குதல் பாக்கிஸ்தானில் அல் கானுன் ஜிகாதி (புனிதப் போர்) நடவடிக்கையின்
தொடக்கம்தான்."
இந்த பயங்கரவாத நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் நிர்வாகங்கள் இரண்டுமே
பாக்கிஸ்தானுக்குள் போலீஸ் நிர்வாகங்களை அதிகப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தின. தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை
அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்" என அமெரிக்க ஜனாதிபதி புஷ் எச்சரித்தார். செவ்வாய்க் கிழமை பாக்கிஸ்தானில்
அதன் தூதரகத்தை அமெரிக்கா மீண்டும் திறந்தது, அத்துடன் போலீஸ் விசாரணைக்கு "உதவியாக" - 80 எப்.பி.ஐ ஏஜண்டுகளைக்
கொண்ட ஒரு பெரும் படையையும் அங்கு நிறுத்தியது -அதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாளர்கள் மற்றும்
SWAT குழு
உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள்.
ஜனவரியிலிருந்து பாக்கிஸ்தானில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட
நான்கு தாக்குதல்கள் நடந்தன. ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையின் நிருபர் டானியல் பேர்ள் ஜனவரியில் கடத்தப்பட்டுப்
பின்னர் கொல்லப்பட்டார். மார்ச் 17ல் இஸ்லாமாபாத்திலுள்ள புரொடஸ்டண்ட் கிறித்தவ ஆலயத்தின்மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் உள்பட ஐந்து பேர் இறந்தனர். மார்ச் 8ல் கராச்சியில் நடந்த ஒரு குண்டு
வெடிப்பில், 11 பிரெஞ்சு தொழில் நுட்ப வல்லுநர்கள் உள்பட 15 பேர் இறந்தனர், அந்த 11 பேர் நீர்மூழ்கிக் கப்பல்
கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒவ்வொரு சம்பவத்தின்போதும் வாஷிங்டன் பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் அதன் போலீஸ்
மற்றும் இராணுவ இருப்பை கணிசமான அளவு அதிகப்படுத்துவதற்காக தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டது. புஷ்ஷின் "பயங்கரவாதத்துக்கு
எதிரான பூகோளப் போர்" என்பதை சாக்குப் போக்காகப் பயன்படுத்தி அந்த நாட்டினுள் தனிச்சிறப்புள்ள எண்ணிக்கையில்
அமெரிக்க போலீஸ், சி.ஐ.ஏ ஏஜண்டுகள் மற்றும் சிறப்புப் படைகள் இப்போது செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து
தப்பிச்சென்ற அல் கொய்தா உறுப்பினர்களையும் அவர்களுடன் சேர்த்து பாக்கிஸ்தானுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப்
பொறுப்பானவர்களையும் வேட்டையாடுவதாக புஷ் நிர்வாகம் வலியுறுத்தும் அதேவேளையில், இப்படியான நடவடிக்கைகள்
முஷாரப்பின் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆதரவு ஆட்சியின் எதிராளிகளுக்கு குறி வைப்பது போல் தோன்றுவது
அதிகமாகி வருகிறது.
1999ல் நடந்த ஒரு இராணுவ சதியில் முன்னைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பிடமிருந்து முஷாரப்
ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். இது ஜம்மு காஷ்மீரில் உள்ள மூலோபாய கார்கில் பகுதியில் பதுங்கி இருந்த ஆயுதம்
ஏந்திய இஸ்லாமிய போராளிகளுக்கு வழங்கி வந்த ஆதரவை அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்து நிறுத்திய பிறகு நிகழ்ந்தது.
இப்போது அவர் அதேமாதிரியான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார், வெறும்
மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் அவர் இந்த அமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இப்படியான சக்திகளுக்கு கடந்த
20 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவம் ஊக்கம் அளித்து வருகிறது. பெனாசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP)
மற்றும் நவாஸ் ஷெரிப்பின் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (PML)
உள்பட ஏனைய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவு திரட்ட முஷாரப் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தார். ஆனால்
அவர் தொடர்ந்து மறுதலிப்புச் செய்யப்பட்டார். முஷாரப் பிரதியீடு செய்யப்பட வேண்டும் என பிரிட்டனை தளமாகக்
கொண்ட கார்டியன் செய்தித்தாளில் பூட்டோ பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
முஷாரப்பின் "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கைகள் ஆயுதம் தரித்த இஸ்லாமிய குழுக்களுக்கு
மட்டும் எதிரானதல்ல ஆனால் அவரது அரசியல் எதிராளிகளுக்கும் குறி வைக்கப்பட்டதாகும். கடந்தவார இறுதியில் மூன்று
பி.எம்.எல் தலைவர்களை -ராஜா ஜபாருல் ஹக், சயித் ஜபா அலி ஷா மற்றும் சிடிகுல் பாரூக் ஆகியோரை- போலீசார்
கைது செய்தனர், அத்துடன் மற்றைய கட்சி உறுப்பினர்களையும் வேட்டையாடுகின்றனர். அந்த மூவரும் கடந்த வெள்ளிக்
கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்ற தடை செய்யப்பட்ட ஒரு ஊர்வலத்தின்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில்
முதன்முறையாக குற்றம் சாட்டப்பட்டனர். ஒரு நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுதலை செய்தது. போலீசார் அவர்களை
நாட்டிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் குற்றம் சுமத்தி மீண்டும் அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.
ஆயுதம் தரித்த காஷ்மீரி குழுக்களை கைவிட்டதற்காக முஷாரப் இஸ்லாமிய அடிப்படைவாதக்
குழுக்கள் மத்தியில் ஒரு துரோகியாகக் கருதப்படுகிறார், அந்தக் குழுக்களை "விடுதலைப் போராளிகள்" என்று அடுத்தடுத்து
வந்த பாக்கிஸ்தான் அரசாங்கங்கள் பிரகடனம் செய்தன.
பாக்கிஸ்தான் காஷ்மீரின் தலைநகரான முசாபர் பாத்தில் 10,000 பேர் பங்கெடுத்த
ஒரு கூட்டத்தில் ஜமியாத் - இ- இஸ்லாமி இயக்கத் தலைவரான காஜி ஹூசெயின் அகமது பேசினார், அப்போது அவர்
காஷ்மீரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் பகுதிகளை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அவரது போராளிகள்
தொடர்ந்து தாண்டிச் செல்வார்கள் என்று எச்சரித்தார்.
மற்றொரு இஸ்லாமிய அமைப்பான முற்றஹிடா மஜ்லிஸ் அமல் (MMA)
காஷ்மீரில் சமீபத்தில் ஒரு மாநாட்டை நடத்தியது பற்றி பாக்கிஸ்தானை
தளமாகக் கொண்ட
'GÎv' பத்திரிகை
அறிவித்தது, அதில் அந்த அமைப்பின் அறிக்கை பிரகடனம் வெளியிடப்பட்டது: "காஷ்மீர் புனிதப்போர் தொடர வேண்டும்,
ஏற்கனவே ஆப்கானிஸ்தானை விலைபேசி விற்றுவிட்ட இராணுவ அரசாங்கம் அதனை காஷ்மீருக்கு செய்யக் கூடாது."
கடந்தவார இறுதியில் லாகூரில் பழமைவாத அரசியல் மற்றும் மதக்குழுக்கள் நடத்திய கூட்டத்தில்
15,000 லிருந்து 20,000 வரையிலான ஆதரவாளர்கள் பங்கெடுத்ததாக கணிக்கப்பட்டது. அந்த ஜனத்திரள் மத்தியில்
பிரபல இஸ்லாமிய தலைவர் மெளலானா பஜ்லுர் ரெமான் பேசினார், அவர் முஷாரப்பும் பாக்கிஸ்தான் இராணுவமும் "இஸ்லாம்,
புனிதப்போர், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரை விற்றுவிட்டார்கள்" என கூறினார்.
அதே கூட்டத்தில் காஜி ஹூசெயின் அகமது பின்வருமாறு பிரகடனம் செய்தார்: "இராணுவம்
அமெரிக்க நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றக் கூடாது. நாம், பாக்கிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் நமது
இறையாண்மையின் அழிவில் அல்ல. நமது ஆயுதப் படைகளுடன் சேர்ந்து நாம் (இந்தியாவுக்கு எதிராக) போராட
வேண்டுமென நிலைமை கோருமாயின், நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் எப்.பி.ஐ மற்றும் ஏனைய அமெரிக்க
நிறுவனங்கள் நமக்கு கட்டளைகள் இடுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்
கொண்டு போய்விட வேண்டும்."
முஷாரப், அவரது மிக நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியிலேயே ஆதரவை இழந்து வருவதற்கான
அறிகுறிகள் தென்படுகின்றன. குறைந்த பட்சம் அடுத்த அக்டோபரில் நடக்க இருக்கும் தேசிய தேர்தல்கள் வரையிலாவது
பதவியில் நீடிக்கும்படி பாக்கிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்ட போதிலும் கடந்த வெள்ளிக் கிழமை வெளிநாட்டு
அமைச்சர் அப்துல் சத்தார் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த வாரம் பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட
ஹெரால்ட் பத்திரிக்கையில், கடந்த டிசம்பரில் முஷாரப்பின் உயிரை எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றி அளிக்காத
முயற்சிகள் பற்றி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் ஓய்வு பெற்ற (இளைப்பாறிய) இராணுவ ஜெனரல் தலத் மசூத்
கூறியதாவது: "அங்கே பல்வேறு சதிகள் கடந்த மாதங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டன.... நாம் அனைத்துப் பக்கங்களிலிருந்துவரும்
மற்றும் உள்ளிருந்தே வரும் அழுத்தத்தின் கீழ் இருக்கிறோம்."
முற்றுகையிடப்பட்ட நிலைமையின் கீழும் அவருக்கு சொந்த, முக்கியமான அரசியல் தளம்
எதுவும் இல்லாத நிலையிலும் இருக்கும் முஷாரப் பெருமளவில் தங்கி இருப்பது எதில் என்றால் இராணுவம் மற்றும் அரசு
அதிகாரத்தின் பகுதிகள் மற்றும் அதேபோல வாஷிங்டனில் இருந்து கிடைக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவில்
ஆகும். ஆனால் புஷ் நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கும் ஆதரவு நிபந்தனைக்குட்பட்டதாகும், அதன் சொந்த தலையீடு இராணுவ
பலசாலியின் தனிமைப்படலை அதிகப்படுத்தியது. வாஷிங்டனின் வளரும் கயிறு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முஷாரப்
தவறுவாராயின் அவர் விரைவிலேயே எந்த ஆதரவும் அற்றவராக தன்னைக் கண்டு கொள்வார்.
ஆட்சியின் மீது முஷாரப்புக்கு உள்ள மிகவும் தளர்வான பிடியானது பாக்கிஸ்தானில் மட்டுல்ல,
ஆனால் அந்தப் பிராந்தியம் முழுவதுமே ஸ்திரத்தன்மை இன்மையை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த காரணியாக விளங்குகிறது,
எந்த ஒரு சம்பவமும் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூளக்கூடிய சாக்குப் போக்காக மாறக்கூடிய
நிலைமையில்தான் இவ்வாறான நிலைமை உள்ளது.
|