World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Record abstention in second round of election
French right-wing parties consolidate large parliamentary majority

இரண்டாவது சுற்றுத் தேர்தலில் உச்ச அளவு வாக்களிப்பின்மை

பிரெஞ்சு வலதுசாரிக் கட்சிகள் பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மையை வலுப்படுத்துகின்றன

By David Walsh
18 June 2002

Back to screen version

ஜூன்16 அன்று இறுதியில், அலங்கோலமான திரை 2002 பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலில் சரிந்து வீழ்ந்தது. நான்கு முறையான தேர்தல் நிகழ்ச்சிப்போக்குகள் (எட்டு வாரங்களாக நடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டு சுற்றிலும்), இறுதியில், வலதுசாரிக் கட்சிகள் ஜனாதிபதி பதவியையும் தேசிய பாராளுமன்றத்தில் 577 இருக்கைகளில் 399 ஐ தக்கவைத்ததை விளைவித்துள்ளது. இன்னொரு உச்சநிலையை அடையும் முகமாக, ஞாயிற்றுக் கிழமை வாக்களிப்பில் 40% மக்கள் வாக்களிக்காது விலகி இருந்தனர்.

ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கோலிசவாதிகள் தலைமையிலான ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான ஐக்கியம் (UMP), 354 இடங்களுடன், தேசிய பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்கும். வலதுசாரி-மத்தியவாத கட்சியான, பிரான்சுவா பேய்ருவின் (François Bayrou) பிரெஞ்சு ஜனநாயகத்திற்கான ஐக்கியம் (UDF) 29 இடங்களை வென்றது. 37 வேட்பாளர்களுடன் இரண்டாவது சுற்றில் போட்டியிட்ட, ஜோன் மேரி லு பென்னின் அதிவலதுசாரி தேசிய முன்னணி ஒரு இடத்தையும் வெல்லவில்லை. தெற்கு பிரான்சில் உள்ள ஒரேஞ்சு நகர மேயர், ஜாக் பொம்பார்ட் (Jacques Bompard), வாக்ளுஸ் மாவட்டத்தில் (Vaucluse) இரு முனைப்போட்டியில் 42.4 சதவீத வாக்குகள் பெற்று தேசிய முன்னணிக்கு மிக நெருங்கி வந்தார்.

சோசலிசக் கட்சியானது தனது பாராளுமன்ற பிரிவு 248 பிரிதிநிதிகளில் இருந்து 140 ஆக வீழ்ச்சி அடைந்ததைக் கண்டது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அசெம்பிளியில் அதன் 35 இருக்கைகளில் 21ஐ தக்கவைத்துக் கொண்டு, எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நிகழ்த்திக் காட்டியது. இருப்பினும், முற்றுகையிடப்பட்ட கட்சித் தலைவர் றொபேர்ட் ஹியூ அவரது மாவட்டமான வால் டுவாஸ் -ல் (Val d'Oise) யு.எம்.பி வேட்பாளரிடம் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பிரெஞ்சு பசுமைக் கட்சியினர் தங்களின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 7லிருந்து 3 ஆக வீழ்ச்சியுற்றதைக் கண்டனர். முன்னர் வைத்திருந்து இழந்த இடங்களுள் பசுமைக் கட்சியின் தேசிய செயலாளர், டொமினிக் வுவனே (Dominique Voynet) இன் இடமும் ஒன்று. முந்தைய பன்மை இடதுகள் அரசாங்கத்தில் மந்திரிசபை அமைச்சராக இருந்த, குடியரசுக் கட்சியின் தலைவரான ஜோன் பியர் செவனுமோ (Jean-Pierre Chevènement) உம் ஒரு இடத்தையும் வெல்லவில்லை. உத்தியோகபூர்வ இடது கட்சிகள் கடந்த பாராளுமன்றத்தில் மொத்தமாக 314 இடங்களில் இருந்து, இணைந்த மொத்தமாக 178 இடங்களாக வீழ்ச்சி அடைந்தன.

தோற்கடிக்கப்பட்ட ஏனைய "இடது" பிரமுகர்களுள், குறைந்த வேலை வாரத்தை அறிமுகப்படுத்தலில் அவரது பாத்திரத்திற்காக "35மணி வேலைநேர பெண்மணி" யாக பிரபலமான, சோசலிசக் கட்சி அமைச்சர், மார்ட்டின் ஓபிரியும் (Martine Aubry) உள்ளடங்குவார். "உழைப்பில் நெகிழ்ச்சி" (labor flexibility) யை அறிமுகப்படுத்த முதலாளிக்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களின் நிலைமைகளை சீர்படுத்த என உண்மையை மறைத்துக்காட்டும் விதமாய் அக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் மற்றும் மேலதிக நேர வேலைக்கான சம்பளத்தை இழத்தல் மூலம் தொழிலாளர்களின் வருமானத்தில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. முந்தைய பிரதமர் லியோனல் ஜொஸ்பனுடன் நெருக்கமாக தொடர்புகொண்டிருந்த சோசலிசக் கட்சியின் முன்னணி பிரமுகர், பியர் மொஸ்கோவிசி, சோசலிசக் கட்சி பேச்சாளர் வின்சென்ட் பெய்லான் மற்றும் முந்தைய மந்திரிசபை அமைச்சரான மேரி-நோயல் லியெனுமான் (Marie-Noëlle Lienemann) ஆகியோர் போல் தோற்கடிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தேர்தலின் விளைவை விளக்குதற்கு, சர்வதேச செய்தி ஊடகம் செய்ய விரும்புவதுபோல, பிரெஞ்சு வாக்காளர்களின் வலது பக்கம் சாய்தலின் விளைவாக கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய வரம்பைக் கடந்து விட்டதைக் குறிக்கிறது. ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில். தற்போதிருக்கும் ஜனாதிபதியின் 57 இலட்சம் வாக்குகளை ஒப்பிடும்பொழுது, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் மூன்று சிறிய கட்சிகள், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன், முப்பது லட்சம் வாக்குகளைப் பெற்றன என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

கோலிசக் கட்சியின் தேர்தல் வெற்றிக்கான மிக ஆழமான மூலம் கடந்த இரண்டு மாதங்களான போக்கின்போது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் காணப்படுகின்றது.

ஏப்பிரல் இறுதியில் தேர்தல் சுற்றின் தொடக்கத்தில், தற்போதிருக்கும் ஜனாதிபதி, சிராக் பொதுவாகவே செல்வாக்கிழந்திருந்தார், இகழ்ச்சிக்குரியவராகக் கூட இருந்தார். ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றில் அவர் 19.9 சதவீதம் மக்கள் வாக்குகளை மட்டும் பெற்றார், (இது வாக்களிக்கத் தகுதியானவர்களில் 14 சதவீத வாக்குகளுக்கும் குறைவானது), ஐந்தாவது குடியரசின் கீழ் பதவியிலிருக்கும் ஜனாதிபதி என்றும் பெறாத அளவு மிகக் குறைந்த வாக்காகும்.

ஜனாதிபதி வாக்களிப்பில் முதலாவது சுற்றில் இப்போது பிரெஞ்சு ஜனாதிபதி பதவியை, தேசிய பாராளுமன்றத்தை, செனட்டை, அரசியல் சாசன அவையை மற்றும் ஏனைய வகையான அரசு நிறுவனங்களை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் (யு.எம்.பி, ஜனநாயக தாராண்மைக் கட்சி மற்றும் யு.டி.எப் பகுதிகள்) கட்சிகளுக்கு வாக்களித்த பதிவு செய்த வாக்காளர்களின் வீதம் 18-20 சதவீதமாக இருந்தது.

பிற்போக்கு மற்றும் ஆபத்தான விளைவு ஏற்படுவதற்குப் பிரதான பொறுப்பு "இடது" கட்சிகளில்- சோசலிசக் கட்சி, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் "அதி இடது" என்று அழைக்கப்படும் கட்சிகளில் தங்கியுள்ளது. ஜூன் 16 அன்று தேர்தல் தோல்வி அவர்களின் சொந்த தயாரிப்பாக இருந்தது.

ஜோஸ்பனின் சோசலிச கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் முதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளை மேற்கொண்டது, வளர்ந்துவரும் சமூக இன்னல்களை அடக்கியதுடன் மற்றும் மக்களின் பரந்த தட்டினரை தம்மிலிருந்து அந்நியப்படுத்தியது. இது லு பென் மற்றும் அவரது தேசிய முன்னணியின் போலி ஜனரஞ்சகவாத, தேசியவாத சொல்லலங்காரப் பேச்சுக்களை செவிமடுப்பதில் வெற்றிகாணும் அளவு அத்தகைய கோபத்தையும் குழப்பத்தையும் கொண்ட சூழ்நிலைகளை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றில், "அதிதீவிர இடது" குழுக்களால் உதவி செய்யப்பட்டு சோசலிசக்கட்சி- கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற ஜோஸ்பனை அப்புறப்படுத்தி, சிராக்கிற்கு அடுத்தபடியாக லு பென் வந்தபொழுது, கடந்த ஐந்தாண்டுகால அரசியற் பாவங்களை மேலும் கூடிய துரோகச்செயலால் கூட்டினர்: தேசிய முன்னணி சர்வாதிகாரம் பற்றிய உடனடி அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதைச் சுற்றி வெறிக் கூச்சலைத் தூண்டி விட்டனர் மற்றும் அவர்களது ஆதரவை சிராக்கிற்கு அளித்தனர்.

இந்த வசந்த காலத்தில் பிரெஞ்சு "இடதுகள்" பங்களிப்பு சிராக்கை புனருத்தாரணம் செய்வதும் புனிதப்படுத்துவதுமாக இருந்திருக்கிறது மற்றும் என்றுமில்லாவகையில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மை பகுதியை முதலாளித்துவ வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டுக்களை அளிக்கும்படி செய்வித்திருக்கிறது. ஏப்பிரல் இறுதியிலும் மே ஆரம்பத்திலும் ஜனாதிபதி தேர்தலின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுக்களின் இடையில் சிராக்கிற்காக பிரச்சாரம் செய்ததன் மூலம் சோசலிச கட்சியும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு கீழே இருந்த அரசியல் அடித்தளத்தை முக்கியமாக வெட்டினார். "இடதுசாரி" கட்சிகள் வாதம் செய்வதுபோல், சிராக்கை மக்களின் உரிமைகளையும் "குடியரசின் மதிப்புக்களையும்" பாதுகாப்பதற்கு கணக்கில் கொள்ளமுடியும் என்றால், இந்த "இடதுசாரி" கட்சிகள் ஏன் தேவைப்படுகின்றன'' என மிக தர்க்க ரீதியாக தம்மைத்தாமே கேட்டுக் கொண்டனர்?

பிரெஞ்சு வாக்காளர்களின் மற்றொரு பகுதி -சமீபத்திய இந்த தேர்தலில் 39.7 சதவீதம்- ஒட்டு மொத்தமாக வாக்களிக்காதிருக்க முடிவு செய்தனர். 180 மாவட்டங்களில் வாக்களிக்காமை வீதம் தேசிய சராசரியை விஞ்சி நின்றது. 14 மாவட்டங்களில் அது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது, அம்மாவட்டங்கள் மூன்றில் போட்டியானது அதிவலதுசாரி வேட்பாளர்களுக்கும் வலதுசாரி வேட்பாளர்களுக்கும் இடையில் இருந்தது. வாக்களிக்காதுவிட்ட அவர்களின் சமூக சேர்க்கை உள்ளபடியான தன்மையின்படி இருந்தால், சராசரியாக பாதிப்பேர் வேலை இல்லாதோர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் 18-24 வரையிலான வயதினர் ஆவர், அவர்கள் ஞாயிற்றுக் கிழமை வாக்களித்திருக்கமாட்டார்கள்.

உயர் வாக்களிக்காமை வீதத்திற்காக பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் சிலரால் வழங்கப்பட்ட விளக்கங்கள் -உலகக்கோப்பை, தந்தையர் நாள், இதமான வானிலை ஆகியன- அக்கறையுடன் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அங்கு பிரெஞ்சு அரசியல் அமைப்பு முறையில் ஆழமான நெருக்கடி இருக்கிறது, "இயல்பு நிலைக்கு திரும்புதல்" அல்லது சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பில் இரு கட்சி முறையின் உருவாக்கம் பற்றி அனைவரும் பேசுவதை மறைக்க முடியாது.

வாக்களிக்காது விட்டவர்கள் 42 சதவீதத்தினர் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் மேல் நம்பிக்கை இன்மையை குறிகாட்டுகிறது என லு மொன்ட் பத்திரிகை அறிவித்தது. பெரும்பாலான மக்கள், பாராளுமன்ற வலது மற்றும் இடதுகளின் வேலைத்திட்டங்கள் கிட்டத்தட்ட ஒத்ததன்மையதாக இருக்கின்றன என மிகச் சரியாக உணர்கின்றனர். தாங்கள் இழிவாகக் கருதும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களித்தோர் எத்தனை சதவீதம்? என வாக்களித்தவர்களை ஒருவர் கேட்கலாம்.

ஒருவர் எதிர்பார்ப்பதுபோல், கோலிச கூட்டணி தலைவர்களின் பதில் ஆரவாரமானதாகவும் சுய திருப்தி உடையதாகவும் இருந்த்து. பிரதமர் ஜோன் பியர் ரஃப்ரன் (Jean-Pierre Raffarin), அமைதியும் தன்னடக்கமுமான சிறு நகர அமைதியாலும் நவீனத்தாலும் புழுங்கும் உண்மையில் நோக்கம் கொண்ட, ஆனால் முட்டாளதனமாகவும் தந்திரமாகவும் அந்த அளவுக்கு அதிகமாக ஒன்றும் சொல்லாதவர், "அது ஒற்றுமைக்கும் நம்பிக்கைக்குமான வெற்றியாக இருக்கிறது: அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்குமான ஒற்றுமையும் நம்பிக்கையுமாகும், பிரெஞ்சு மக்களுக்கும் எமது செயல்பாட்டிற்கும் இடையிலான ஐக்கியமும் நம்பிக்கையுமாகும்" என குறிப்பிட்டார்.

அவரது கட்சிக்கு நன்கு தகுதியாக, அது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தான் ஒன்றும் கற்றிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் முகமாக, சோசலிசக் கட்சியின் இடைக்காலத் தலைவர், பிரான்சுவா ஒலாண்ட் பின்வருமாறு கூறினார், "ஐந்தாண்டுகளாக, லியோனல் ஜொஸ்பனின் கீழ், நாட்டை பொருளாதார மீட்சி மற்றும் சமூக முன்னேற்றப் பாதையில் முன்னெடுப்பதில் நல்ல நம்பிக்கை வைத்த இடதுசாரிகளுக்கு இந்த முடிவு ஒருவேளை நியாயமற்றதாகத் தெரியலாம்." பொதுவாக, சோசலிக் கட்சியின் அறிவிப்புக்கள் மக்கள் நன்றியில்லாதவர்களாகவும், அவர்களுக்கு மதிப்பற்றவர்களாகவும் உள்ள அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றியது.

சோசலிசக் கட்சியின் தலைமைக்கான போராட்டம் இப்பொழுது இடம்பெறவிருக்கிறது. ஜோஸ்பனின் முன்னாள் நிதி அமைச்சர் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் (Dominique Strauss-Kahn) மற்றும் முன்னாள் பிரதமர் லோரண்ட் ஃபாபுய்ஸ் (Laurent Fabius) ஆகியோர் கட்சியின் வலதுசாரிப் பகுதியிலிருந்து இரு வேட்பாளர்கள் ஆவர், ஒப்ரி (Aubry) குறைந்தது அவரது ஞாயிறு தோல்விவரையாவது, சாத்தியமான "இடது" தேர்வாகக் கருதப்பட்டார்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்திய அதன் தேர்தல் துயரங்களால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஸ்ராலினிச கட்சி தேசிய பாராளுமன்றத்தில் அதன் பாராளுமன்றக் குழு சலுகைகளை வெளிப்படையாக தக்கவைத்திருக்கிறது, அதற்கு குறைந்த பட்சமாக 20 பிரதிநிதிகள் வேண்டும். இடதுசாரி முதலாளித்துவ செய்தி ஊடகங்களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒருவகை மீளமைப்புப் பணியின் இலக்காக இருந்தது. அதேபோல சோசலிசக் கட்சியின் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த பொறிவு தொடர்பாக கணிசமான கவனம் இருந்தது. பிரான்சுவா மித்திரோன்ட் 1970களின் ஆரம்பத்தில் சோசலிசக் கட்சியை மீள உருவாக்கிய பின்னால், தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சோசலிஸ்டுகள் அரசியல் தொடர்பைக் கொண்டிருந்ததற்கு ஸ்ராலினிஸ்டுகள் அரசியல் சாதனமாக இருந்திருக்கின்றனர்.

ஆர்ஜன்ரை (Argenteuil) நகரத்தில் ஹியூவின் தோல்வி பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அவரது நிலையை முன்னேற்றாது. அங்கு அவர் சிலகாலம் தாக்குதலுக்கு ஆளாகி இருந்திருக்கிறார். அவரது தலைமை பற்றி விமர்சிப்பவர்களான வடக்கு பிரான்சிலுள்ள ஜோர்ஜ் ஹாக் (Georges Hage) மற்றும் அமியன் (Amiens) நகரத்தில் உள்ள மாக்சிம் கிரெமெட்ஸ் (Maxime Gremetz) இருவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹியூ அவரது தோல்விக்கு அவரது மாவட்டத்திலுள்ள தேசிய முன்னணியின் முயற்சிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார், அவர்கள் தங்களின் ஆதரவை யு.எம்.பி வேட்பாளருக்கு அளித்தனர். ஜோன் மேரி லு பென் பகிரங்கமாகவே ஹியூவின் தோல்விக்காக அழைப்பு விடுத்தார். தசாப்தகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செய்த பகுதியில் நவபாசிச கட்சி எந்தவித செல்வாக்கையும் ஏன் செலுத்த வேண்டும் என்பது ஹியூ இனால் கவனிக்கப்படாத கேள்வியாக இருந்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 26 மற்றும் 27ல் தேசிய மாநாட்டை கூட்டுகிறது. அதில் தேர்தல்களின் படிப்பினைகளைப் பற்றி விவாதிக்கவும் புதிய அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தங்களின் துரதிர்ஷ்டங்களில் இருந்து முன்னேறுவதற்கு "அதி இடதுசாரி" கட்சிகளைப் பயன்படுத்த ஸ்ராலினிஸ்டுகள் முயற்சியும் கூட செய்கின்றனர். ஜூன் 15 அன்று பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதற்கு அது பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக (LCR) உறுப்பினர்கள் உள்பட "கம்யூனிசத்தின் எதிர்காலம் பற்றி அக்கறை கொள்ளும் அனைவரையும்" அழைத்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறிய அவரது கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, லு பென் தேர்தலைக் கண்டனம் செய்தார். அவர், "இந்த பாராளுமன்றம் ஒரு பிரெஞ்சு நபரை இரண்டில் பிரதிநிதித்துவப்படுத்தாது" என அறிவித்தார். பிரெஞ்சு "சுதந்திரத்திற்காக" போராடும் ஒரே கட்சியை தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, தேசிய முன்னணி தலைவர்," 40 சதவீதமே பிரான்சுக்கு பொருந்துகின்ற சட்டங்களின் மீது அது வாக்களிக்கப் போவதால்; ஏனைய 60 சதவீதம் பிரஸ்ஸல்ஸூக்கு (ஐரோப்பிய ஒன்றியம்) ஒதுக்கப்பட்டிருக்கின்றதன் காரணத்தால், இது ஒரு எச்ச பாராளுமன்றம்" என்று குற்றம் சாட்டினார்.

பிரெஞ்சு செய்தி ஊடகமானது பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தோல்வி அடைந்ததைப் பற்றி அதன் செல்வாக்கு பின்னடைந்திருப்பதன் குறிகாட்டல் என்று தன்னிறைவுடன் விவாதிக்கிறது. அதன் தேர்தல் வெற்றி தோல்வி என்னவாக இருந்தாலும், மற்றும் அதன் அரசியல் தளத்தின் வலுவான தன்மை எதுவாக இருந்தாலும், அதன் பலத்தை மிகைப்படுத்துவது தவறாக இருக்கும், அந்த தேசிய முன்னணியானாது அதன் ஆதரவை, தேசிய பாராளுமன்றத்தில் வலதுசாரிகள் மற்றும் உத்தியோகப்பூர்வ இடதுகள் ஆகியோரின் அரசியல் ரீதியான பழமைவாத கூட்டுக்களின் ஏகபோகம் மற்றும் பரந்த அளவிலான சோசலிச எதிர்ப்பு இன்மை ஆகிய சூழ்நிலைமைகளின் கீழ்தான் அதிகரிக்கின்ற நிலையை எடுக்கிறது. பொருளாதார சூழ்நிலை மோசமடைகையில், பிரெஞ்சு "சிறு மனிதனுக்காக" பேசிக் கொண்டு, பூகோளப் பொருளாதாரத்தின் நெருக்கடி மற்றும் குழப்பங்களை மறந்துவிட்டு, லு பென் தொடர்ந்து தற்போதைய நிர்வாக அமைப்பிற்கு எதிரான விமர்சகராக தம்மைக் காட்டிக் கொள்வார்.

சிராக்-ரஃப்ரின் (Chirac-Raffarin) அரசாங்கமானது அதன் அனைத்து திட்டங்களையும் கூறாதிருக்கிறது. இருப்பினும், இந்த வலதுசாரி அரசாங்கம் உள்நாட்டில் பெருகிவரும் சமூக முரண்பாடுகளை மட்டும் எதிர் கொள்ளவில்லை, மாறாக உலகரீதியான விலை இறக்கம், பதட்டங்கள் பற்றிய மற்றும் ஐரோப்பாவில் பிளவுகள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற, சூறையாடும் கொள்கைகள் பற்றிய வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களையும் எதிர் நோக்குகின்றது.

புதிய மேற்பார்வையாளர் ஜாவெர்ட் (Javert) உள்துறை அமைச்சர் நிக்கோலா சர்க்கோசி (Nicolas Sarkozy) இன் கீழ், அரசாங்கமானது அதன் சட்டம் ஒழுங்கு பிரச்சாரத்தை, குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு எதிராக முன்னெடுக்க விரும்புகிறது. புதிய நிர்வாகமானது நிச்சயமாக, தற்காலிகமாக என்றாலும் முறைமையாக இடதுசாரி கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு நன்றி கூறும். இப்பொழுது, தேசிய நலனின் பெயரில், பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள், ஓய்வூதியங்கள், சமூக வேலைத் திட்டங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும். சமூகப் போராட்டங்கள் வெடிப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் தலைமை மற்றும் முன்னோக்கு பற்றிய பிரச்சினைகள் புதிய அவசியத்தை பெற்றுக்கொள்ளும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved