WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
Burmese Junta release Suu Kyi amid fears of political unrest
பர்மிய ஜுன்டா அரசியல் ஸ்திரமின்மை பற்றிய பீதியால் சு கீயை விடுதலை செய்தது
By Sarath Kumara
10 May 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
பர்மிய இராணுவ ஜுன்டா, ஒரு வாரமாகத் தொடர்ந்த வதந்திகள், ஊகங்களை அடுத்து
எதிர்க்கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய கழகத்தின் (NLD)
தலைவியான ஆங் சன் சு கீயை 19 மாத வீட்டுக் காவலில் இருந்து திங்கட்கிழமை விடுதலை செய்தது. இந்த முடிவு,
நட்டின் பொருளாதாரத்தை முடமாக்கியதோடு அதிகரித்து வந்த சமூக சீரழிவுக்கும் வழியமைத்த சர்வதேச தடைகளுக்கு
முடிவு கட்டுவதன்பேரில், பெரும் வல்லரசுகளுடனும் எதிர்க் கட்சியுடனுமான ஒரு உடன்படிக்கைக்கு வழியமைப்பதைக்
குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் ரசாலி இஸ்மாயிலின் ஆசியின் கீழ் சமாதானத்துக்கும்
அபிவிருத்திக்குமான அரச பேரவை (SPDC) என உத்தியோகபூர்வமாக
அழைக்கப்படும் ஜுன்டாவுக்கும் சு கீக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகள் 2000 அக்டோபரில் இருந்தே
நடைபெற்று வந்துள்ளன. இந்த அரசாங்கம் 250 க்கும் அதிகமான அரசியல் கைதிகளை விடுவித்ததோடு தலைநகர்
ரங்கூனில் என்.எல்.டி.யின் அலுவலகத்தை மீளவும் திறக்க அனுமதித்திருந்த போதிலும், சு கீயை வீட்டுக் காவலில் வைத்திருப்பதை
முடிவுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை. இறுதியாக சமாதானத்துக்கும் அபிவிருத்துக்குமான அரச பேரவை, கடுமையான
பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல்களின் கீழ் நசுங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த முடிவுக்கு வரத்தள்ளப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் தனது பொருளாதாரத் தடையை ஏப்பிரல் 22ல் புதுப்பித்ததுடன்
ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றம், பர்மாவிலான முதலீடுகளுக்கு தடைவிதிக்கவும் அழைப்புவிடுத்தது. அமெரிக்க
காங்கிரஸ் இறக்குமதி மீதான ஒரு மேலதிக தடைக்கான சட்ட விதியையும் தயாரிக்க முன்வந்தது. வாஷிங்டன் ஏற்கனவே
பர்மா மீது முதலீடு, இருபக்க உதவி மற்றும் ஆயுதங்கள் மீதான தடை உட்பட ஒரு தொகை பொருளாதார மற்றும்
போக்குவரத்து தடைகளையும் விதித்திருந்தது.
சு கீ தனது விடுதலை சம்பந்தமாக ஜுன்டாவுடன் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருந்த
போதிலும் இரு பகுதியினரும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றி மெளனம் சாதிக்கின்றனர். எதிர்க் கட்சி தலைவி,
பொருளாதாரத் தடைகளை தொடர்ச்சியாக பேணிவருமாறு சர்வதேச வல்லரசுகளிடம் உடனடியாகக் கோரிய
போதிலும், சமரசத்துக்கான ஒரு சில சைகைகளையும் விடுத்தார். அவர் பொதுக் கூட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ
அழைப்புவிடுக்காத அதேவேளை, அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்தும் விலகியிருந்தார். தாம் தலைநகருக்கு வெளியில்
பயணம் செய்யவிரும்பினால் அதிகாரிகளுக்கு அறிவிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இந்த விடயம் 2000 ஆண்டில் அவரது
வீட்டுக் காவலை மீள அமுல்படுத்தத் தூண்டியது.
சு கீ, இரங்கூனில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், தற்போதைய
பேச்சுவார்த்தைகளையிட்டு ஜாடை காட்டியுள்ளார். அவர் "நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான (ஜுண்டாவுடன்)
அம்சம் முடிந்துவிட்டது" எனவும் நாம் "தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்து முன்நோக்கி
செல்கிறோம்" எனவும் தெரிவித்தார். நலன்புரி சேவை மற்றும் கல்வி போன்ற சமூக விடயங்களோடு நடவடிக்கையில்
ஈடுபடுவது குறித்த ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட ஜுன்டா- என்.எல்.டி இணைந்த குழுவொன்றை அமைப்பதற்கான
கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஜுன்டா கடந்த வியாழக்கிழமை,
எதிர்க்கட்சியுடன் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையை மூடிய கதவுகளுக்குள் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஒரு ராஜதந்திரி வாஷிங்டன்போஸ்டுக்கு
(Washington post) கருத்துத் தெரிவிக்கையில்:
"சு கீயை விடுதலை செய்வது இலகுவானதாக இருந்துதது. அவர் அளவுக்கதிகமாக படகை ஓட்டமாட்டார் என்பது ஜெனரல்களுக்குத்
தெரியும். அவர்கள் அதற்காக நன்கு பிரபலமடைந்துள்ளார்கள். ஆனால் மாணவர் தலைவர்களை என்ன செய்யப் போகிறார்கள்?
ஏனைய கட்சிகளின் நடவடிக்கைகள் என்னவாகும்? ஜெனரல்களை சத்தமாக விமர்சித்துக் கொண்டிருக்கும் மக்களின்
நிலைமை என்ன?" பர்மிய சிறைகளில் 1,500 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்
ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.
பரந்த அதிருப்தியை அணிதிரட்டுவதை விட, ஜுன்டாவுடனான தனது பேச்சுவார்த்தையில்,
சர்வதேச தடைகள் மீது சு கீ நம்பிக்கைகொண்டது, 1998ல் பெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்
மத்தியிலான அவர் எடுத்த நிலைப்பாட்டின் ஒரு தொடர்ச்சியாகும். அச்சமயம் அவர் இராணுவத்துடன் பொதுத் தேர்தலை
நடத்துவற்கான ஒரு உடன்பாட்டுக்கு சென்றதை அடுத்து ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக்கொண்ட ஜெனரல்கள், பெருமளவிலான எதிர்ப்புப் போராளிகளை நசுக்கியதோடு அரசியல்
நிலைமையையும் ஸ்தாபிதம் செய்துகொண்டனர். 1990 தேர்தலில் தோல்வி கண்ட ஜுன்டா, பெறுபேறுகளை மிக இலகுவாக
அலட்சியம் செய்தது.
அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் இராணுவத்துக்கு எதிராக சு கீயை ஆதரித்தது
ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அக்கறையினால் அல்ல. மாறாக ஜுன்டா சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையாக
கணிக்கப்பட்டது. 1962ல் ஆட்சியை கைப்பற்றிய ஆயுதப் படை, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பர்மிய பொருளாதாரத்தின்
கணிசமான பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததோடு நாட்டின் இயற்கை வளங்களையும் உழைப்புச் சக்தியையும்
சுரண்டிக் கொள்ள எதிர்பார்க்கும் எந்த ஒரு முதலீட்டாளர்கள் மீதும் இறுக்கமான கட்டுப்பாட்டைப் பேணி வந்தது.
இராணுவம் கடந்த நான்கு தசாப்தங்களாக சிறுபான்மையினர் உட்பட்ட எதிர்க் கட்சியினர் மீதான கொடூரமான அடக்குமுறையினூடாக
தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சு கீயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தீர்மானம் இராணுவத்தினுள்ளான பிளவுக்கு
வழிவகுத்துள்ளது. கடந்த வெள்ளியன்று முன்நாள் இராணுவத் தளபதியான நீ வின்
(Ne Vin) உடைய நான்கு உறவினர்கள் அரசாங்கத்தை
கவிழ்க்க சதி செய்யும் குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டதோடு குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படலாம்.
1962 சதிப்புரட்சியை வழிநடத்திய நீ வின், 1988ல் பரந்த போரட்டங்களுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவரது மருமகனும் மூன்று பேரப்பிள்ளைகளும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையானது, எதிர்க்
கட்சியுடனான கொடுக்கல் வாங்கல்களை எதிர்க்கும் இராணுவத்தின் சில பகுதியினருக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.
அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் சு கீயின் விடுதலையை வரவேற்கும் அதேவேளை,
ஜுன்டா தனது பிடியை மேலும் தளர்த்தும்வரை தடைகள் விலக்கப்படமாட்டது எனவும் எச்சரிக்கை செய்துள்ளன. அமெரிக்க
அரச திணைக்கள பேச்சாளர் ரிச்சாட் பெளச்சர் குறிப்பிடும்போது: "அரசியல் மறுசீரமைப்புக்காகவும் தேசிய சுமூகநிலைக்காகவும்
முடிவு காண்பதற்காக பல மீளாய்வுகளை செய்யவேண்டியுள்ள அதேவேளை, பொருளாதாரத் தடை பற்றி அக்கறை
செலுத்துவதற்கு முன்னதாக, நாங்கள் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக்
கொண்டுள்ளோம்" என்றார். அமெரிக்க வர்த்தகத்தைப் பற்றிப் பேசுகையில், வோல்ஸ்ரீட் ஜேர்னல்
சுட்டிக் காட்டியதாவது: "ஒரு தடை சம்பந்தமான அச்சுறுத்தலை உக்கிரப்படுத்துவதற்கான தருணம் இதுவாகும். பர்மாவில்
உண்மையான மறுசீரமைப்பு ஏற்படும் வரை, ஜுன்டா எமது கண்களில் பறையர்களாகவே (சமூகத்தில் தாழ்த்தப்பட்ட
சாதி) காணப்படும்."
சமூகப் பொருளாதார நெருக்கடி
சு கியிற்கும் ஜுண்டாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னணியாக விளங்குவது
நாட்டின் சமூக நிலைமைகளின் வெடித்துச் சிதறும் விளைவுகள் சம்பந்தமான பொதுவான பீதியாகும். ஜுன்டாவுடன்
நெருங்கிய தொடர்புடைய பர்மிய பொருளியளாளரை மேற்கோள்காட்டி மார்ச் மாதம் வெளிவந்த ஒரு பீ.பீ.சி.
அறிக்கை: "மக்கள் இந்த நிலைமைகளையையிட்டு மிக அதிருப்தியடைந்துள்ளார்கள். அவர்கள் தற்போது அதை சகித்துக்கொண்டபோதிலும்,
நிலைமை அடுத்த பன்னிரண்டு மாதங்களுள் சீரழிவு நிலைக்குத் தொடருமானால் மாபெரும் சமூக குமுறலுக்கான மிகவும்
நிச்சயமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்."
பர்மா மீது கடந்த தசாப்தங்களாக இருந்துகொண்டுள்ள தடை ஒரு ஆழமான சமூகப்
பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. உத்தியோபூர்வ தரவுகள் 1988ல் இருந்து 10 பில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கும் மேலான வெளிநாட்டு முதலீட்டு அனுமதிகளை காட்டிய போதிலும், அதில் ஐந்தில் ஒரு பகுதியைத்
தன்னும் 2000 ஆண்டில் எட்டியிருக்கவில்லை. 1996ல் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மூலமாக ஒரு தொகை
முதலீடுகள் பர்மாவினுள் ஊடுருவின. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஆசிய நாடுகளுடையதாக இருந்ததோடு
1997-98 வரையான பிராந்திய பொருளாதார நெருக்கடியை அடுத்து சரிந்துபோனது. 1995ல் இருந்து, 50 வெளிநாட்டுக்
கம்பனிகள் பர்மாவிலிருந்தும் வெளித்தள்ளப்பட்டன.
கடந்த தசாப்தங்களாக சர்வதேச பொருளாதார உதவிகள் மற்றும் மனிதாபிமான
உதவிகள் என்பன குறைவடைந்துள்ளன. பர்மா தனது கடனை அடைப்பதில் தோல்விகண்டதால் ஜப்பானிய கடன் நிவாரணம்
விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, 1990களின் நடுப்பகுதியில் மொத்த வருடாந்த வீழ்ச்சி 50 மில்லியன் அமெரிக்க
டொலர்களை அல்லது ஒரு ஆளுக்கு 1 டொலர் என்ற வீதத்தை எட்டியது. அயல் நாடுகளான கம்போடியா மற்றும்
லாவோசுடன் ஒப்பிடும் போது அவை முறையே ஒரு நபருக்கு 35 மில்லியன் டொலர்களாகவும் 68 மில்லியன் டொலர்களாகவும்
விளங்குகின்றன.
பர்மிய நாணயமான கியட்டின் (Kyat)
உத்தியோபூர்வ நாணயமாற்று விகதம் அமெரிக்க டொலருக்கு 6.9 ஆக இருந்தபோதிலும், கறுப்பு
சந்தைவீதம் டொலருக்கு கிட்டத்தட்ட 1.000 ஆக உள்ளது. இது நாணயத்தின் பெறமதியின் மிகவும் சரியான பிரதிபலிப்பாகும்.
எகோனமிஸ்ட் சஞ்சிகையில் அன்மையில் வெளியான ஒரு கட்டுரை பின்வருமாறு தெளிவுபடுத்தியது: "பணவீக்கம்
ஆண்டு வீதப்படி 50 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. அரசாங்கத்தின் அந்நிய செலாவணி வளம் 25 மில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கும் குறைவாக இருப்பதோடு, இது 6 வார காலத்துக்கான இறக்குமதி பெறுமதியாகும்; அநேகமான
பொருட்கள் குறைவாகவே விநியோகிக்கப்பட்டு வருவதோடு ரங்கூனில் நாளாந்த மின்வெட்டு சகஜமானதாவும் உள்ளது."
மார்ச் மாத பி.பி.சி. செய்தி, அரிசி, சமையல் எண்ணெய், முட்டை மற்றும் இறைச்சி
போன்ற அடிப்படை உணவுப்பொருட்களின் அனைத்து சந்தை விலைகளும் அதிகரித்துள்ளது என உள்ளூர் வாசிகள் முறைப்பாடு
செய்வதாக அறிவித்தது. அரிசி விலை ஆறுமாத காலத்துக்குள் 20 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, சமையல் எண்ணெய்
50 சதவீதம் உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எல்லாவகையான எரிபொருளும் குறைவாகவே விநியோகிக்கப்படுகின்றது.
பர்மிய பொருளியலாளர்கள் 5 பேர் கொண்ட சராசரி குடும்பம் ஒன்றின் ஜீவியத்துக்கு மாதாந்தம் 80,000 கியாட்
(110 டொலர்) தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளனர். இது ஆடம்பரப் பொருட்கள் தவிர்ந்த உணவு, மருந்து மற்றும்
போக்குவரத்து உட்பட்ட செலவுகளுக்கு மாத்திரமாகும். ஆசிரியர் அல்லது அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரது சராசரி
மாதாந்த சம்பளம் 13 டொலர்களுக்கும் குறைவாகும். நகரங்களில் வேலையின்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இராணுவம், ஆட்டம் கண்டு போயுள்ள நிலைமையை மீண்டும் நிலைநிறுத்த, 1988ல்
170,000 ஆக இருந்த தனது படை எண்ணிக்கையை 450,000 ஆக பரந்தளவில் அதிகரித்துக் கொண்டது.
ஐரோப்பாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிபுனர்கள் குழுவான, சர்வதேச நெருக்கடி குழு
(International Crisis Group-ICG),
பாதுகாப்புப் படை மிகவும சம்பளம் குறைந்த படையணிகளின் சம்பளத்தை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக 2000
டிசம்பரில் அறிவித்தது. "இன்னமும் எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறான ஒரு சம்பள அதிகரிப்பு நடவடிக்கை மிகவும்
கட்டாயமான சந்தர்ப்பங்களைத் தவிர அருந்தையாகவே இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையானது தனது படைகள்
குறைந்த பட்சம் சம்பள உயர்வு விடயத்திலாவது வெறுப்படைந்துள்ளனர் என்பதை இராணுவத் தலைமை உணர்ந்துகொண்டுள்ளது
என்பதையே புலப்படுத்துகிறது" எனவும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் இராணுவத்துக்கே ஒதுக்கப்படுகிறது.
அடிப்படை சேவைகளுக்கு சிறதளவே ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால ஐ.சி.ஜி அறிக்கையின்படி, சுகாதார
சேவைக்கான செலவு மொத்த தேசிய உற்பத்தி வீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது 1985முதல் 1998 வரை
5 வீதத்தால் குறைந்துள்ளதோடு, கல்விக்கான செலவு மூன்று வீதத்தால் குறைந்துள்ளது. அரசு தற்போது ஆண்டுக்கு
ஒருவருக்கு 60 அமெரிக்க சதம் என்ற வீதத்திலேயே கல்விக்காக செலவிடும் அதேவேளை, சுகாதார சேவைக்காக
20 அமெரிக்க சதங்களுக்கும் குறைவாகவே செலவிடுகின்றது. உலக சுகாதார அமைப்பு, 2000 ஆண்டில் பர்மாவை
சுகாதார சேவையில் மிகவும் பின்தங்கிய இரண்டாவது நாடாக வகைப்படுத்தியது -191 நாடுகளில் 190
வதுநாடாகும். இராணுவம் உள்நாட்டு கிளர்ச்சிகளோடுமோதும் எல்லைப் பிரதேசங்களில் சில புதிய பாடசாலைகள்
மற்றும் ஆஸ்பத்திரிகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற போதிலும், கட்டணங்கள் உயரும்போது சேவையில் குறிப்பிடக் கூடிய
சீர்கேடுகள் காணப்படும்.
1997ல் ஒரு அரசாங்க ஆய்வை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி செய்த மதிப்பீட்டின்படி
ஜனத்தொகையின் நான்கில் ஒரு பகுதியினர் அல்லது 13 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் அதேவேளை,
மேலும் 5 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் விளிம்பிலுள்ளனர். வீட்டுரிமையாளர்களில் ஏறத்தாள 40 வீதமானவர்கள்
மட்டுமே கலோரியை நுகர்கின்றார்கள் அல்லது சிபார்சு செய்யப்பட்ட சர்வதேச தரத்தில் உள்ளார்கள். 55 வீதமானவர்கள்
மாத்திரமே போதுமானளவு புரோட்டின் உட்கொள்கின்றனர். 1999ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்று
கருத்து வெளியிடுகையில்: "தன்னிச்சையான அவசர உணவருந்தல் அரிசித் தண்ணீரை உணவுக்காக விலைகொடுத்து
வாங்குதல் மற்றும் மில்லெட் போன்ற மட்டமான தானியவகையில் தங்கியிருத்தல் போன்ற வளர்ச்சிகண்டு வரும் அழுத்தங்கள்
பற்றிய பரந்த அறிக்கைகள் வெளியாகின்றன. முடிவு அநேக குடும்பங்களின் நுகர்வுநிலை வழமைக்கும் குறைவாகவும்,
தேவைக்குக் குறைவாகவும், மற்றும் பாரிய அழுத்தங்களுக்குள்ளாகி இருப்பதையுமே காட்டுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின்படி, பர்மியர்களின் ஆயுட்காலம் சராசரியாக
1990ல் 61.3 வயதிலிருந்து 1999ல் 56.0 வயதுவரை நான்கு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம்
வெளிவந்த ஐ.சி.ஜி. அறிக்கை குறிப்பிட்டதாவது: "சிசு மரணம், பிரசவ மரணம் மற்றும் சிறுவரிடையேயான
போஷக்கின்மை போன்றவை மிகவும் அதிகரித்துக் காணப்படுவதோடு, பிராந்தியத்திலுள்ள அயல் நாடுகளோடு ஒப்பிடுகையில்
பொருத்தமற்றதாகவும் உள்ளது. முக்கியமாக, இந்தப் பிரதேசங்களின் ஒவ்வொரு பகுதியிலும் கடந்த 15 ஆண்டுகளாக
மியன்மரின் போக்கில் ஒரு தேக்கநிலை அல்லது சீரழிந்தநிலை காணப்படுகின்றது. மலேரியா, எச்.ஐ.வி/எயிட்ஸ், கடுமையான
சுவாசப்பை தொற்று நோய்கள் மற்றும் பேதி போன்ற நோய்கள் கடந்த காலத்தில் மியன்மரில் இடம்பெற்ற திடீர்
மரணங்களுக்கு காரணமாகியுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி மலேரியாவால் மட்டும் வருடாந்தம் 30,000 பேர் மரணிக்கிறார்கள்."
எச்.ஐ.வி/எயிட்ஸ் வளர்ந்து வரும் பிரச்சினையாக விளங்குகிறது. பலவிதமான
மதிப்பீடுகள் இருந்தபோதிலும் ஆயிரக் கணக்கான சிறுவர்கள் உட்பட 600,000 க்கும் 700,000 இடைப்பட்டோர்
இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.சீ.ஜி. அறிக்கை குறிப்பிட்டதாவது: "தற்போது இந்த மட்டத்தில் அமைதியாக
இருந்து கொண்டுள்ள தொற்றுநோய்கள் மிக விரைவில் அவற்றின் முகத்தை வெளிக்காட்டத் தொடங்கும். எதிர்பாராதவிதமாக
நோய்வாய்ப்படுவது மற்றும் மரணிப்பது படிப்படியாக இரட்டிப்பாகி வருகின்றது. "15 வயதுக்குட்பட்ட ஏறத்தாள
43,000 பிள்ளைகள் எச்.ஐ.வி.யின் காரணமாக பெற்றோரைப் பிரிந்துள்ளதோடு ஒவ்வொரு வருடமும் எயிட்சால் புதிதாக
மரணிப்போரின் எண்ணிக்கை 50,000 ஆக உள்ளது. போதைப் பொருட்பாவனையும் அதிகரித்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி
நாட்டில் ஹெரோயின் உட்கொள்பவர்கள் 500,000 பேர் உள்ளனர்.
ä.T.C. (ICG) அறிக்கை
பர்மாவுக்கான மனிதாபிமான உதவிக்காக வாதிடுவதுடன் "சமூக சீரழிவானது தீவிரவாதத்துக்கு வழிவகுப்பதோடு ஒரு
அரசியல் வளர்ச்சியில்லாத நிலைமையில் ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும்" எனவும் எச்சரிக்கை செய்துள்ளது. நிச்சயமாக
பர்மிய வாசிகளில் பெரும்பான்மையானவர்களின் கொடுமையான நிலைமைகள் பற்றிய அக்கறையை விட அரசியல் ஸ்திரமின்மை
பற்றிய பீதியே இங்கு இருந்து கொண்டுள்ளது. இதுவே பெரும் வல்லரசுகளின் ஆதரவின்பேரில் சு கீயையும் ஜெனரல்களையும்
ஒரிடத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
Top of page
|