World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு

India-Pakistan cross-border barrages exact an appalling human toll

இந்திய-பாகிஸ்தான் எல்லை தாண்டிய குண்டு வீச்சுக்கள் திகைப்பூட்டும் மனிதப் பலிகளை எடுக்கின்றன

By Nanda Wickramasinghe
14 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தணிந்துவிட்டது என்று அமெரிக்க அதிகாரிகளும் சர்வதேச செய்தி ஊடகங்களும் கூறிய போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லையோரத்தில் தளர்வு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்திய பாரளுமன்றத்தின் மீது ஆயுதம் தரித்த காஷ்மீரி பிரிவினைவாதிகள் கடந்த டிசம்பரில் தாக்குதல் நடத்தியதை அடுத்து மிகப் பெருமளவிலான இராணுவ அணிதிரட்டல் செய்யப்பட்டதிலிருந்த பீரங்கி, மோட்டார் மற்றும் சிறிய துப்பாக்கிச்சூடு பரிமாற்றங்கள் தினசரி நிகழ்வுகளாகின. எல்லையின் இருபகுதியிலும் எண்ணற்ற மக்கள் இறந்தனர், பலபேர் காயப்படுத்தப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் அவர்களது வீடுகளையும் வயல்களையும் விட்டு தப்பி ஓடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இறுதியாக வந்த அறிக்கையின்படி புதன்கிழமை நடந்த எல்லை தாண்டிய குண்டு வீச்சின் விளைவாக குறைந்த பட்சம் ஆறுபேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நடத்திய மோட்டார் மற்றும் இயந்திர துப்பாக்கிச்சூட்டினால் இரு இராணுவ அதிகாரிகளும் ஒரு குடிமகனும் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் அறிவித்தனர். இந்திய மோட்டார் தாக்குதலினால் இரண்டு பெண்களும் ஒரு 10 வயது பையனும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த சம்பவங்கள் வழக்கமானவையாக கருதப்பட்டு ஒருசில வரிகளுக்கு மேல் அதிகமாக அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க் கிழமை பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலுள்ள கிராமங்களில் இந்திய பீரங்கிகளின் குண்டு வீச்சுக்களின் விளைவாக 5 பேர் இறந்தனர் மற்றும் நான்கு குடிமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என பாகிஸ்தான் செய்திப் பத்திரிகைகள் தெரிவித்தன. ஜூனில் 11 நாட்கள் பாகிஸ்தான் தரப்பில் உத்தியோகபூர்வமாக ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 91 ஆகும்.

அதேமாதிரியான ஒரு காட்சி இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் தோன்றுகிறது. ஜூன் 11ல் பாகிஸ்தானின் தாக்குதலினால் 3 குடிமக்கள் காயமடைந்தனர் என்றும் பூஞ்ச் விமானதளம் தாக்கப்பட்டதாகவும் இந்தியா கூறியது. ஜூன் 9ல் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் இறந்தார் பலர் காயமடைந்தனர். அவ்வாறான அறிக்கைகள் மாதக்கணக்காக நீடிக்கின்றன, நிஜமான இழப்புகளின் எண்ணிக்கை அநேகமாகக் குறைத்துக் காட்டப்படுகின்றது.

எல்லையின் இரு பக்கங்களிலும் ஏற்பட்டு வரும் இறப்பு எண்ணிக்கை, எவ்வாறாயினும் இலட்சக் கணக்கான ஏழை கிராம மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் இரக்கமற்ற யதார்த்தமாக இருக்கிறது. இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவத்தினர் புதைத்த நிலக்கண்ணி வெடிகளினால் பஞ்சாப்பின் பரந்த கோதுமைக் கிண்ணம் பயிர் செய்ய முடியாததாக ஆக்கப்பட்டது. கண்ணிவெடிகளின் மீது தவறுதலாக அடி எடுத்து வைத்த உள்ளூர் கிராம மக்களும் ஆடு மாடுகளும் கொல்லப்பட்டன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1971ல் ஏற்பட்ட போருக்குப் பிறகு நிலைமை இப்போது என்றுமில்லாத அளவு மோசமாக இருக்கிறது என்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் எல்லைப் பகுதிகளில் வாழும் கிராம மக்கள் ராய்யட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கூறினார்கள். "பெரும்பாலும் குடும்பத்தில் ஒரு அல்லது இரு உறுப்பினர்கள் அங்கு தங்கி இருந்து உடைமைகளையும் பார்த்துக் கொள்வார்கள், அதேவேளை பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுவார்கள்" என பால்கர் சிங் கூறினார். பெரும் எண்ணிக்கையில் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு வருவதை அடுத்து ஏற்பட்ட பீதியான நடமாட்டத்தின் விளைவாக கண்ணி வெடிகளினால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக வர்தோகா நகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கூறினார்.

எல்லையிலிருந்து வெறும் இருநூறு மீட்டர்கள் தூரத்திலுள்ள இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்முவிலுள்ள கர்க்வாலில் 2400 பேர் ஒவ்வொரு மாலையும் மாட்டு வண்டிகளில் ஏறி அருகிலுள்ள காட்டிலுள்ள ஒரு விடுதியில் இரவைக் கழிக்கின்றனர். ஒரு நிருபர் கூறியதன் படி, கிராம மக்கள் அரசாங்க எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு விடுதி கட்டடங்களுக்குள் புகுந்தனர். அங்கே அவர்கள், அவர்களது அழுக்கான, உடைந்துபோன குடிசைகளைவிட ஓரளவு பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தார்கள். "நமது எருமைகளுக்கு என்ன நடக்கும்? நமது வீடுகளுக்கு திரும்பவும் நம்மால் எப்போதாவது போக முடியுமா?" என அவர்கள் கேட்டனர்.

சிலர் இருட்டுக்குப் பிறகுதான் வீட்டை விட்டு செல்கின்றனர். அவர்கள் தமது சொந்த வழியில் பதுங்கு குழிகளை கட்டினார்கள், அங்கே அவர்கள் பகல்பொழுதை செலவிடுகின்றனர். இப்படியான "பதுங்கு குழிகள்" ஒரு புராதனமான பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு அடித்தளத்தில் அகலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மீட்டர்கள் ஆழம் கொண்ட இவை அநேகமாக நிலக் குழிகள் ஆகும்.

ஏனையோர் பீரங்கித் தாக்குதலின்போது மணிக்கணக்காக தாக்குப் பிடிக்கக் கூடிய புகலிடங்களை பயன்படுத்துவார்கள். அப்போதும்கூட, பதுங்கு குழிகள் வரம்புக்குட்பட்ட பாதுகாப்பைத்தான் வழங்குகின்றன. கர்க்வாலில் ஒரு மோட்டார் தாக்குதல் ஒரு குடும்பம் இருக்கும் வளாகத்துக்குள் வீழ்ந்தது, அதனால் தெறித்த குண்டுத் துகள்கள் ஒரு இளம்பெண்ணைக் கொன்றது.

பல்லாயிரக் கணக்கானவர்கள் எல்லைப் பகுதிகளிலிருந்து தப்பி ஓடினார்கள், அவர்கள் அநேகமாக தற்காலிக அகதி முகாம்களில் திணறவைக்கும் நிலைமைகளில் இருக்க வைக்கப்படுகிறார்கள் அல்லது திறந்த வெளியில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தின் சில பகுதிகளில் தற்போது பகல் வேளைகளில் வெப்ப அலை 50 டிகிரி செல்சியசை எட்டும் நிலைமைகளில்தான் இவ்வாறு நடக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து வெறும் ஐம்பது கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தியோலி என்ற இந்தியக் கிராமத்தில் 200 குடும்பங்களுக்குப் புகலிடம் வழங்கப்பட்டது, அவர்கள் எல்லையிலிருந்து 500 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள ஐபோவல் என்ற இடத்தில் அவர்களது வீடுகளை விட்டு வந்தனர். அவர்கள் உள்ளூரில் உள்ள பள்ளியில் நான்கு அல்லது ஐந்து அறைகளில் மற்றும் ஒரு சில கூடாரங்களில் நிரப்பப்பட்டனர். அவர்களது பயிர்கள் காய்ந்து போகின்றன. ஒருசிலர் அவர்களது ஆடு மாடுகளுக்கு தீனி போடுவதற்காக தினசரி திரும்பிச் செல்கின்றனர் ஏனென்றால் மிக அதிகமாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பகுதியில் அவற்றினை மேயவிட முடியாது.

திரத்ராம் என்ற ஒரு கிராமத்தவர் கூறியதாவது: "இந்த சண்டையை நிறுத்துவதற்கு வாய்ப்புக்கள் மிக அரிதாக உள்ளன. இப்போது எட்டு வருடங்களாக நாம் இதனுடன் வாழ்கிறோம். முன்னதாக அது இயந்திரத் துப்பாக்கிளைப் பயன்படுத்துவதாக இருந்தது. ஆனால் இப்போது மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இனிமேலும் நமது வீடுகளில் நாங்கள் வாழ முடியாது." ராம்லால் என்ற இன்னொருவர் கூறியதாவது: "இங்கே முகாம்களில் வாழ்வது கடினமானது. ஆனால் குறைந்தபட்சம் அது பாதுகாப்பானது. ஒவ்வொரு தடவையும் வெடிச்சத்தம் கேட்கும்போது, நாங்கள் சேற்றுக்குள் மூழ்கி ஒரு நாளைக்கு 25 தடவைகள் தவழ்ந்து செல்ல வேண்டியதில்லை."

ஜூன்11 காஷ்மீர் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை, அகதிகளுக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விமர்சித்தது: "வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் மட்டத்தைத் தாண்டிச் சென்றபோதும், நேற்று பிந்திய மாலைப் பொழுதில் ஜம்முவில் மழை அடித்தபோதிலும்கூட திறந்தவெளியில் பலர் இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்." அறைகள் கிடையாது. போவதற்கு இடமே இல்லை. சுவாவில் முதலாம் நம்பரில் (முகாமில்) எல்லையில் குடிபெயர்ந்தோர் குறைந்தபட்சம் 500 பேர் பாதுகாப்பான இடத்தை நாடினார்கள், கடந்த வாரம்தான் கூடாரங்களின் முதலாவது பிரிவு வந்து சேர்ந்தது, அதுகூட திறந்தவெளி வானத்தின் கீழ் 10 நாட்களுக்கு மேல் அவர்கள் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ள விடப்பட்ட பிறகுதான் வந்தது, இந்தச் சலுகை (கூடாரம்) கூட இல்லாமல் பாதிப்பேர் இருக்கின்றனர்..... பெரும்பாலானவர்கள் (அகதிகள்) விவசாயிகள், அவர்கள் வீடுகளில் கோணிப்பைகளில் தாராளமான அளவு கோதுமை அல்லது அரிசி சேமித்து வைத்துப் பழக்கப்பட்டவர்கள். அவர்கள் இப்போது அவர்களது சொற்ப மாத நிவாரணப் பொதிக்காக காத்திருக்கின்றனர், அது ஒரு ஆளுக்கு ஏழு கிலோகிராம் கோதுமை மாவு, இரண்டு கிலோகிராம் அரிசி மற்றும் 10 லீட்டர் மண்ணெண்ணெயை உள்ளடக்கியது. இந்த நிவாரணம் குடிபெயர்ந்தோருக்கு போதுமானதென்று நிர்வாகிகள் கூறியபோதிலும் இடம்பெயர்ந்தோர் கூறுவது மாறுபட்டதாக உள்ளது."

கோட்ட ஆணையாளர் கூறியபடி, ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் சுமார் 70,000 பேர் சமீபத்தில் இடம்பெயர்ந்தனர். அவர்கள் 91 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர், அவை பெரும்பாலும் அரசாங்கக் கட்டிடங்கள் ஆகும். உணவு மற்றும் மண்ணெண்ணெய் ரேஷன்களுடன் சேர்ந்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 200 (அல்லது வெறும் 4 அமெரிக்க டாலர்கள்) ஒரு மாதத்துக்குக் கிடைக்கிறது. பல முகாம்களில் போதுமான மின்சாரமோ தண்ணீரோ கிடையாது. குளியலறையிலிருந்து கழிப்பறைகள் வரை மின்சாரத்திலிருந்து தண்ணீர் வரை, கல்வியிலிருந்து சுகாதாரம் வரை, எதுவுமே இல்லாமல் நாம் இருக்கிறோம்" என்று ஒரு பெண் விளக்கினார்.

எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் உள்ள நிலைமையும் இதுபோலவே மோசமானதாக உள்ளது. எல்லை நகரான சக்கோதிலிருந்து ஜூன்13ல், லாஸ் ஏஞ்சலஸ் பத்திரிகை, பிரிகேடியர் இப்திகார் அலி கானின் கருத்துக் குறிப்புக்களை வெளியிட்டது. அவர் கூறினார்: "இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் இருந்தது போல் நிலைமை ஒவ்வொன்றுமே எளிதாக மாறக்கூடியாதாக இருக்கிறது." விட்டுவிட்டு நடக்கும் பீரங்கிக் குண்டு வீச்சுக்கள் அல்லது சிறிய ஆயுத சூடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவுமில்லை என்று அவர் கூறினார்.

மே18ல் சக்கோதி கடுமையான குண்டு வீச்சுக்களுக்கு உள்ளானது. இந்திய இராணுவம் அந்த நகருக்குள் 600லிருந்து 800 குண்டுகளை வெடித்துத் தாக்கும்படி அனுப்பியது என கான் கூறினார். பல சுற்றுத் தாக்குதல்கள் இராணுவ நிர்வாக மையத்தையும் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியையும் தாக்கின. பள்ளியில் ஒரு கட்டிடம் சேதமடைந்தது ஆனால் யாரும் கொல்லப்படவில்லை, அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் பணியாளர்களும் பதுங்கு குழிகளுக்குள் பின்வாங்கி சென்றனர். ஆனால் ஒரு உள்ளூர் பெண் நஜீன் பீபி வயலைக் கடந்து செல்ல முயற்சிக்கும்போது முதலாவது குண்டு வீச்சுக்குப் பலி ஆனார்.

ஜனநாயக உரிமைகள் இல்லாமை

இராணுவ திரட்டல்களின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்தின.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் பெரும்பான்மையின் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு இந்திய அரசாங்கம் பல பத்தாண்டுகளாக மிகவும் ஒடுக்குமுறை வழிமுறைகளை பயன்படுத்தியது. காஷ்மீரில் இந்திய ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் ஆயுதப்போராளிக் குழுக்களின் வளர்ச்சிக்குப் பிரதான பங்களிக்கும் காரணிகளாக இருந்தவை என்னவென்றால் ஜனநாயகமின்மையுடன் சேர்ந்து பரந்த அளவிலான வறுமை மற்றும் சேவைகள் இல்லாமை போன்றனவாகும்.

மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான சிறீநகரில் உள்ள நிலைமை பற்றி கடந்தவாரம் அசோசியேட்ட் பிரஸ் பின்வருமாறு கூறியது: "பத்தாயிரக் கணக்கான போலீஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கிருப்பது தொடர்ந்து தினசரி வாழ்க்கையில் பெரிய அளவிலும் சிறிய அளவிலும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது..... அங்கே பெயரளவிலான ஊரடங்குச்சட்டம் இல்லை, ஆனால் வீதியில் செல்லும் ஒருவர், இரவுவேளையில் போராளி என்று தவறுதலாக அடையாளம் காணப்பட்டு இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படும் ஆபத்து இருக்கிறது.

"பகல்வேளையில் ரோந்து செல்லும் போலீசாரும் இராணுவத்தினரும் அரிதாகத்தான் கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பார்கள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஒவ்வொரு வீதி மூலையிலும் மண்மூட்டைகளினாலான கெட்டியான பதுங்கு குழிகள் உள்ளன. பிரதான பாதையோரங்களில் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவதும் ஆவணங்களைப் பரிசோதிப்பதும் நிகழ்கிறது. இராணுவத்தினரும் அவர்களது குடும்பங்களும் குடியிருக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது."

ஒரு கல்லூரிப் பேராசிரியரான பாருக் ஷா கருத்து கூறுகையில்: "அது திணற வைக்கிறது. உங்களால் மூச்செடுக்க முடியாதிருப்பதுபோல் நீங்கள் உண்மையிலேயே உணருவீர்கள். உங்களால் ஒரு கணம் கூட பாதுகாப்பின்மை மற்றும் மோதல் என்ற உணர்விலிருந்து தப்பிக்க முடியாது. நீங்கள் சும்மா சாதாரண வேலை ஒன்றைச் செய்ய செல்லும் பொழுது கூட எதுவேண்டுமானாலும் நடக்கலாம்."

காஷ்மீரில் 1980களின் பின்பகுதியிலிருந்து ஆயுத மோதல் வெடித்ததிலிருந்து ஏற்பட்டுவந்த தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக மனநோய்கள் மிகப் பெருமளவில் அதிகரித்தன. நியூயோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரை இதனை விளக்கியது: "1990 சுமார் 1770 ஆண்களும் பெண்களும் சிறீநகரிலுள்ள மனநோய் மருத்துவமனையில் உதவி நாடினார்கள், அது மோசமான நிலையிலுள்ள மருத்துவமனை, அங்கே இயக்குநரின் அலுவலகத்தில் வெளியேயுள்ள வயர்களிலிருந்து பல்ப்புகள் தொங்குகின்றன. கடந்த வருடம் மருத்துவமனைப் பதிவுகளின்படி, உதவி நாடியவர்களின் எண்ணிக்கை 47,828 ஆகும்."

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, ஆயுதம் ஏந்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களுக்கு உதவினார்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கில் இந்திய பாதுகாப்புப் படைகளினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலர் விசாரணை இன்றி வருடக்கணக்காக காவலில் வைக்கப்பட்டனர். இந்தியப் போலீசாரும் இராணுவத்தினரும் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் உடனடியாக மரண தண்டனை வழங்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டி உள்ளன.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் பெயரில் அடல்பிகாரி வாஜ்பாயி தலைமையிலான இந்திய அரசாங்கம் சமீபத்தில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் (POTA) என்றழைக்கப்படும் ஒரு புதிய கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது, அது அமைப்புக்களை சட்டவிரோதமாக்குவதற்கும், வழக்கின்றி கைது செய்யவும் பரந்த அளவில் அதிகாரங்களை வழங்குகின்றது.

கடந்தவார இறுதியில் அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டின் (APHC) முக்கியமான தலைவர்களுள் ஒருவரான சயித் ஷா கிலானி பொடா ஷரத்துக்களின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கிழக்கிந்தியாவில் உள்ள ஒரு உயர்ந்த பாதுகாப்பான சிறைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஆயுதப் போராளிக் குழுக்களின் சார்பில் சட்ட விரோதமாகப் பணம் பெற்று வருகிறார் என்று எவ்வித ஆதாரமும் இன்றிக் குற்றம் சாட்டப்பட்டார். APHC என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சட்ட ரீதியான எதிர்க்கட்சிகளின் ஒரு குடை அமைப்பு ஆகும்.

பாகிஸ்தானில், அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஜெனரல் பெர்வெஸ் முஷாரப் தலைமையிலான இராணுவ அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. பல அமைப்புக்கள், அவற்றில் சில காஷ்மீரிலுள்ள இந்திய எதிர்ப்பு போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருபவை, தடை செய்யப்பட்டு அவற்றின் அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்த வருடத் தொடக்கத்திலிருந்து, நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

முஷாரப் மற்றும் வாஜ்பாயி இருவருமே அவர்களது நாடுகளில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அவர்களது ஆட்டம் கண்டுள்ள நிர்வாகங்களை தக்கவைக்கவும் தற்போதைய போருக்கான உந்தலைப் பயன்படுத்துகின்றனர். இஸ்லாமிய போராளிகளைக் கைது செய்வதற்கு ஜனநாயக விரோத நடவடிக்கைகள் உள்நோக்குடன் பயன்படுத்தப்படும் அதேவேளை, இந்தத் தலைவர்களில் யாருமே அவர்களது அரசியல் எதிராளிகளை நசுக்குவதற்கு இதேவழிகளைக் கையாள எந்தத் தயக்கமும் காட்டமாட்டார்கள். எல்லைப்புறக் கிராமங்களை தினசரி குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு உட்படுத்துவதன் மூலமாக மனித வாழ்கையை இழிவாகப் பார்ப்பது ஜனநாயக உரிமைகள் தொடர்பான அவர்களது அக்கறையின்மையை கண்ணாடிபோல் காட்டுகின்றது.

See Also :

சமாதான சைகைகள் காட்டப்பட்ட பொழுதும், இந்திய - பாகிஸ்தானிய யுத்த அபாயம் தொடர்ந்தும்் அதிகம்

இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் பதட்டம் மிக்க இராணுவ மோதல்நிலை தொடர்கிறது

இந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்