WSWS/Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு
US-Indian military ties: an incendiary factor in an
unstable region
அமெரிக்க-இந்திய இராணுவ உறவுகள்: ஸ்திரமில்லாத பிராந்தியத்தில் தூண்டிவிடும் ஒரு காரணி
By Aruna Wickramasinghe
10 June 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இந்தியாவும் பாக்கிஸ்தானும் போரின் விளிம்பில் நிற்கும்போது கூட, வாஷிங்டனானது
புதுதில்லியுடன் -இராணுவ பயிற்சி, உளவு மற்றும் நவீன இராணுவ தளவாடப் பொருட்கள் விற்பனை உட்பட- தளங்களில்
அதன் மூலோபாய பிணைப்புக்களை அதிகமாய் பலப்படுத்தி வருகிறது. இந்து பேரினவாத பாரதீய ஜனதாக் கட்சி
(பி.ஜே.பி) தலைமையிலான இந்திய அரசாங்கத்தை, "மூலோபாய பங்காளியாக" முன்னிலைப்படுத்தல் இந்திய
உபகண்டத்தில் உறவுகளை மேலும் ஆழமாக சீர்குலைத்துள்ளது.
சர்வதேச பத்திரிகைகளில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவும்
இந்தியாவும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலங்களில் கடந்த மாதம் கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தினர்.
இருவாரகால யுத்த விளையாட்டுக்கள், இந்திய நகரமான ஆக்ராவில் நடைபெற்றது மற்றும் மே 28 அன்று அது
முடிவுற்றது, "Balance Iroquois" என மறைமுகப்
பெயர் குறிப்பிடப்பட்ட இதில் இருநாடுகளிலுமிருந்து இராணுவ விமானங்களுடன், இந்திய துணைநிலை கொமாண்டோக்கள்
மற்றும் அமெரிக்க சிறப்புப் படைப் பிரிவுகள் ஆகியன பங்கேற்றன.
பயிற்சியின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அதன் அடிப்படை
இலக்கு காற்று வெளியில் தாக்குதல் பயிற்சி மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியனவாகும். அமெரிக்க தூதரக
பேச்சாளர் கோர்டன் டுகிட், "இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் என்றும் இடம் பெற்றிராத பெரிய அளவிலான
இராணுவப் பயற்சி மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் இராணுவ ஒத்துழைப்பினை எதிரொலிக்கிறது. இது நடைபெற்றுக்
கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இராணுவம் அளவிலான எமது உறவின் கட்டமைப்பில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது
மற்றும் இது தொடர்ச்சியாக வழக்கமாக நடைபெறும் பயிற்சியில் முதலாவதாக இருக்கும்" என்றார்.
"Balance Iroquois" -ன் மிகவும்
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அது எவ்வகையிலும் இடம் பெற்றதாகும். பாக்கிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில்
இந்தியா தாக்கத் தயார்நிலையில் உள்ளதுடன், பயிற்சி மேற்கொள்வதை ரத்துச்செய்யாத முடிவானது, பி.ஜே.பி
தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் போரிடுகிற நிலைக்கு தூண்ட மட்டுமே முடியும். விளைவுகளப் பற்றிக் கவலைப்படாமல்
புதுதில்லியுடனான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாஷிங்டனின் உறுதிப்பாடு பற்றிய தெளிவான குறிகாட்டலாக
அது இருந்தது.
இந்த ஆண்டின் இறுதியில் மேலும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
அக்டோபரில், அரபிக்கடலில் நடைபெறவிருக்கும் கூட்டு கடற்படை நடவடிக்கையில் முதல் தடவையாக (Cruiser-Destroyer
Group) தொலைதூர நாசகாரி குழுவினைச் சேர்ந்த மூன்று அல்லது
நான்கு கப்பல்கள் மற்றும் கடற்படை சார்ந்த உளவு (Maritime
Reconnaissance Aircraft) விமானங்கள் சம்பந்தப்பட
இருக்கின்றன. அலாஸ்காவில் அமெரிக்க பசிபிக் ஆணயகத்திலிருந்து அமெரிக்க சிறப்புப் படைப் பிரிவுகளுடன் சேர்ந்து
இந்திய படைவீரர்களும் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர். பயிற்சி மேற்கொள்ளும் இடம் கவனிக்கத்தக்கது - அலாஸ்காவில்
குளிர் நிறைந்த, மலை சார்ந்த பிரதேசமானது இந்தியாவின் இரு போட்டியாளர்களான பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுடனான
அதன் எல்லைப் பகுதிகளை ஒத்ததாகும்.
இந்தியாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் அமெரிக்க உறவுகள் குளிர் யுத்த காலத்தில்
இந்திய உபகண்டத்தில் நிலைகொண்டிருந்த உறவுகளில் கடும் விலகலைக் குறிக்கிறது. இந்தியா சோவியத் ஒன்றியத்துடன்
நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவைப் பராமரித்தது மற்றும் அங்கிருந்து பெரும் அளவு இராணுவ
தளவாடங்களைப் பெற்றது. தசாப்தகாலங்களாக, வாஷிங்டன் பாக்கிஸ்தானுடனான அதன் உறவையும் அடுத்தடுத்து
வந்த இராணுவ ஆட்சிக்குழுவையும் இந்தப் பிராந்தியத்தில் புதுதில்லிக்கும் மொஸ்கோவுக்கும் ஒரு எதிரிடையாகப்
பயன்படுத்தியது. 1980களில் சோவியத் ஒன்றியத்தை கீழறுப்பதற்கான வழிமுறையாக பில்லியன்கள் கணக்கான டாலர்கள்
செலவிற்கு ஏற்ப
சி.ஐ.ஏ பாக்கிஸ்தானுடனான அதன் உறவை ஆப்கானிஸ்தானில் கம்யூனிச எதிர்ப்பு
முஜாஹைதின் குழுக்களுக்கு பயறிசி, நிதி மற்றும் ஆயுதம் வழங்குவதற்கு ஒரு தளமாகப் பயன்படுத்தியது.
ஆனால் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடன், வாஷிங்டன் முந்தைய சோவியத்
மத்திய ஆசியாவில் உள்ள பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு சேர்மக்களத்தின் மீதான அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட
விழைய ஒட்டுமொத்த மூலோபாய சமநிலையும் இடம் பெயரத் தொடங்கியது. 1998ல் தொடரான போட்டி அணு
ஆயுத சோதனைகளை நடத்தியதை அடுத்து கிளிண்டன் நிர்வாகமானது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்
மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்த்து. ஆனால் 1999ல் காஷ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் இந்திய துருப்புக்களுக்கும்
பாக்கிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களை வாஷிங்டன் புதுதில்லியுடன் புதிய
உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக சுரண்டிக் கொண்டது.
கிளிண்டனால் அபிவிருத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொடர்புகள்
புஷ் நிர்வாகத்தின் கீழ் மேலும் ஊக்கம்பெற்றது, சிறப்பாக அமெரிக்காவில் செப்டம்பர் 11 பயங்கரவாதத்
தாக்குதல்களுக்குப் பின்னர் ஆகும். அமெரிக்கா அணு ஆயுத சோதனை தொடர்பாக எஞ்சி இருந்த பொருளாதாரத்
தடைகளை விலக்கியது மற்றும் இந்திய இராணுவத்துடனான அதன் உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை, குறிப்பாக ஆப்கானிஸ்தானிலும்
பாக்கிஸ்தானிலும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் மீதான உளவுத் தகவல் பரிமாற்றத்தை முடுக்கி விட்டது. அமெரிக்காவின்
"பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தம்" மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் ஆக்கிரமிப்பு ஆகியன, காஷ்மீரில் இந்திய
ஆட்சியை எதிர்ப்பவர்கள் உட்பட, அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களையும் இந்தியா "பயங்கரவாதிகள்"
என்று முத்திரை குத்துவதுடன் பிணைந்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இந்தியப் பிரதமர் மற்றும்
வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட விஜயம் உள்பட, சுமார் 50 உயர்மட்ட
பாதுகாப்பு மற்றும் அரச விஜயங்கள் இடம்பெற்றன. இந்தியாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
ரம்ஸ்பீல்ட்-ஆல் மற்றும் வாஷிங்டனுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸால் மேற்கொள்ளப்பட்ட
பதில் விஜயங்கள் கடந்த நவம்பரிலும் ஜனவரியிலும் முறையே இடம்பெற்றன. அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் இணைத்
தலைமையின் (US Joint Chiefs of Staff)
தலைவரான ஜெனரல் மையர்ஸ் மற்றும் அவருக்குமுன் பதவி வகித்தவரான ஜெனரல் ஹென்றி ஷெல்டன் மற்றும் பசிபிக்கில்
அமெரிக்கப் படைகளின் கொமாண்டர் அட்மிரல் டென்னிஸ் பிளேர் உட்பட அமெரிக்க இராணுவ உயர் மட்டத்தினர்
உட்பட - அனைவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்தனர்.
உயர்மட்ட உறவுகள்
அமெரிக்க-இந்திய இராணுவ உறவுகளின் ஆதாரக்கல், கடந்த ஆண்டு இராணுவ கொள்கைகளை
ஒழுங்குபடுத்துவதற்காக முந்தைய முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்புக் கொள்கை குழு (DPG)
ஆகும். தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலும் இருநாடுகளுக்கும் இடையில் வழிகாட்டும்
கூட்டு நிர்வாகக் குழுக்கள் கூட ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆக்ராவில் பயிற்சிபோல, டி.பி.ஜி ஆனது பாக்கிஸ்தானுடன்
தற்போதைய தாக்கத் தயார்நிலை முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது, மே14 அன்று காஷ்மீரில் இந்திய
இராணுவ தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் பதட்டங்களுக்கு இடையிலும் கூட அது செயல்பட்டு
வந்திருக்கிறது.
டி.பி.ஜி கூட்டத்திற்கு முன்னால், அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு செயல்திட்டம்
மீதான அதன் முனவைப்பிற்கு, இந்திய குழு ஒன்று கொலரோடா ஸ்பிரிங்ஸூக்கு வரவழைக்கப்பட்டது. ஒரு இந்திய
அதிகாரி திருப்தியுடன் குறிப்பிட்டவாறு: "சாதாரணமாக, வேறு எந்த நேரத்திலும், எல்லயில் பதட்டமிக்க சூழ்நிலை
டி.பி.ஜி கூட்டத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட்டிருக்கும். இந்த நெருக்கடியிலும் கூட அந்தக் கலந்துரையாடலை
முன்னுக்கு எடுத்துச்செல்ல எந்த அளவுக்கு நாம் வந்திருக்கிறோம் எனபதற்கு அது ஒரு அளவாகும்."
சம்பிரதாயபூர்வமான டி.பி.ஜி கூட்டம் வாஷிங்டனில் மே21-24 வரை இந்திய தரைப்படைத்
தளபதி மற்றும் முப்படை தலைமை அதிகாரிகளின் குழுவின் தலைவர் ஜெனரல் எஸ்.பத்மனாபன் வந்திருக்கையில்
இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வந்த கூட்டறிக்கையானது
இரு நாடுகளும் கடந்த காலத்தில் "புது போக்கினை" வரைந்திருந்தது என பெருமையுடன் கூறிக் கொண்டது, அது
"பாதுகாப்பில் ஒத்துழைப்பிலும் மற்றும் பாதுகாப்பு விஷயங்களிலும் விரைந்த வளர்ச்சியை இன்றியமையாததாக்குகிறது.
சில மாதங்களிலேயே அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புக்கள் உறவினை செயலாக்குவதற்கு பரந்த
நோக்கை செயல்வடிவம் கொடுத்திருக்கின்றன.
புதுதில்லி இராணுவ அளிப்புக்களுக்காக முன்னர் சோவியத் ஒன்றியத்தின் மீது, பின்னர்
ரஷ்யா மீது நம்பி இருந்தது, அதற்கு நேர் மாறாக இந்தியாவுக்கு அமெரிக்க ஆயுத விற்பனையை விரைந்து முடுக்கிவிட்டிருக்கிறது.
இந்திய இராணுவம் ஏப்ரலில் எட்டு
AN/TPQ-37 Firefighters, பீரங்கியைக் கண்டுபிடிக்கும் ராடார் அமைப்பு முறையை 146 மில்லியன்
டாலர்களுக்கு பெற்றது. குண்டை கண்டுபிடித்த சில நொடிகளில் மோட்டார், ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை
300 கிலோமீற்றர் வரையான தூரத்தில் AN/TPQ-37 -ஆல்
நுட்பமாகக் கண்டுபிடிக்க முடியும். அமெரிக்க இராணுவ பாதுகாப்பு
முகவாண்மை பேச்சாளர் மகிழ்வுடன் பேசினார்: "இந்தியாவிற்கு பிரதான ஆயுத அமைப்பு முறைகளை என்றுமில்லாத
வகையில் இந்த அளவு விற்றிருப்பதை நினைவு கூரக்கூடியவர் எம்மிடையே ஒருவரும் இல்லை."
அமெரிக்க பாதுகாப்பு துறை அமெரிக்க மூலோபாயத் திட்டமிடலில் இந்தியாவின் முக்கிய
பாத்திரத்தை கோடிட்டுக் காட்டுகிறது:" தெற்காசியாவில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான
சக்தியாக இருந்து வருகின்ற மற்றும் தொடர்ந்து இருக்கின்ற நாட்டின் பாதுகாப்பை முன்னேற்ற உதவுவதன் மூலம், இதன்
(ராடார் அமைப்பின்) விற்பனை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நலன்கள் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கு
பங்களிப்பு செய்யும்." "ஸ்திரத்தன்மை" மற்றும் "முன்னேற்றம்" இவற்றைக் கருத்தில் கொள்கையில், பீரங்கிகள்,
டாங்கிக்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றின் பின்பலத்துடன், எல்லை நெடுகிலும் பத்துலட்சக்
கணக்கான இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய துருப்புக்கள் உயர் விழிப்புடன் ஒருவருக்கொருவர் எதிராக
நிற்கையில் இந்த விற்பனை இடம்பெற்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
புஷ் நிர்வாகமானது ஏற்கனவே நீண்டகாலம் தாமதிக்கப்பட்ட இந்திய இலேசுரக போர்விமான
(LCA) செயல்திட்டத்துக்கான என்ஜின்களையும் போர்த்துறை
விமானக் கருவிகள் விற்பனையையும் அனுமதித்து விட்டது. மூத்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ ஆயுத அமைப்பு
முறைகளில் கூட்டு ஆய்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்திக்கான சாத்தியங்களை அகழ்ந்தெடுக்க அவர்களின் அமெரிக்க
எதிரணி சகாக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். மே13 அன்று அமெரிக்க-இந்திய கூட்டு
பாதுகாப்புத் தொழில்துறை கருத்தரங்கம் வாஷிங்டனில் நடைபெற்றது. இது இந்தியாவின் வாங்கல் மற்றும் ஆயுத கொள்வனவு
பற்றிய கொள்கைகள், இந்திய பாதுகாப்பு தளவாட சந்தையில் தனியார் துறை முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் மற்றும்
இராணுவ விற்பனையை துரிதப்படுத்த தொழில்நுட்பத்துறை மற்றும் ஏற்றுமதி உரிமங்கள் ஆகியவற்றை நெறிப்படுத்தல்
பற்றி கலந்துரையாடுவதற்காக நடைபெற்றது.
அமெரிக்க-இந்திய இராணுவ ஒத்துழைப்பு இந்திய துணைக் கண்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை,
மாறாக மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான கடல் எல்லைகளில் கடற்படை
ஒத்துழைப்புக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 2001 பிப்ரவரியில், இந்திய கடற்படையால்
பம்பாயில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கடற்படை மீளாய்வில் முதல் தடவையாக அமெரிக்க கடற்படை
கலந்து கொண்டது. கடந்த டிசம்பரில் இருநாடுகளும் சூயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா நீரிணை இவற்றுக்கு இடையிலான
கடலோர வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கான கடற்படை ஒத்துழைப்பு பற்றி உடன்பாட்டை செய்து கொண்டன.
மார்ச்சில், இரு நாட்டு கடற்படைகளும் மலாக்கா நீரிணையில் இணைந்த பயற்சி நடவடிக்கையை நடத்தின.
"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பதாகையின் கீழ் கூட்டு ரோந்துகள்
இடம்பெறும் அதேவேளை, உண்மையான நோக்கங்கள் மலாக்கா நீரிணை போன்ற முக்கிய கடற்பாதைகளின் மீது அமெரிக்கக்
கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்வதற்கானதாக இருக்கின்றன. இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு உட்பட
கணிசமான அளவு உலக வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கும். "தடை முனைகள்" எனப்படும், இந்த கடற் பிரதேசங்கள்
வாஷிங்டனுக்கு இந்தப் பிராந்தியத்தில் அதன் போட்டியாளர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தத்தைக்
கொடுக்கக் கூடிய சாதனங்களை வழங்குகின்றன.
மரபுவழி அல்லாத யுத்தம் மற்றும் பயங்கரவாதம் இவற்றுக்கான அமெரிக்க காங்கிரசின்
சிறப்புப் படையின் (US Congressional Task Force)
இயக்குநர் யொசேப் பொடான்ஸ்கி, மலாக்கா நீரிணையின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி அண்மையில்
சுட்டிக்காட்டிக் கூறியாதாவது, "மலாக்கா நீரிணையின் வழியாக அவர்களின் கடற்படைகளின் இயக்கத்தின் மீது வெறும்
கட்டுப்பாட்டைச் செய்வதன் வழியாக, பேரவாக் கொண்ட வல்லரசுகளின் பூகோள மூலோபாய வளர்ச்சி மற்றும்
விரிவாக்கம் கட்டுப்படுத்தப்பட முடியும் மற்றும் ஒழுங்கு படுத்தப்பட முடியும்."
பொடான்ஸ்கி அமெரிக்காவின் பிரதான இலக்கையும் கூட இனம்காட்டி, குறிப்பிடுவதாவது,
"பெய்ஜிங் விஷயத்தைப் பொறுத்தவரை, இந்த யதார்த்தம் அதிகரித்த அளவில் முக்கிய நலன்கொண்டதாக இருக்கிறது.
எந்த சீன கடற்படையும் இராணுவ பகுதியும் இந்திய பெருங்கடலிற்குள் வருவதற்கு -பெய்ஜிங்கின் பிரதான மூலோபாய
முன்னுரிமை- கட்டாயம் மலாக்கா நீரிணை வழியாக செல்லவேண்டும். பெய்ஜிங்கானது இந்தியப் பெருங்கடலில் அதன்
நுழைவை .... எதிர்பார்க்க்க் கூடிய எதிர் காலத்தில் அமெரிக்காவுடன் இராணுவ ரீதியாக பெரும் மோதலுக்கான
சாத்தியத்தை எதிர்பார்க்கும், மூலோபாய பெரும் வகை மாதிரியில், பூகோள வீதாச்சாரங்களின் மூலோபாய நுழைவின்
ஒரு பகுதியாக" கருதுகின்றது.
அவரது கருத்துக்கள் புஷ்ஷின் சீனா தொடர்பான வலுச்சண்டை நிலைப்பாட்டுடன்
பொருந்துகின்றன. 2000 தேர்தல் பிரச்சாரத்தின் போது, புஷ் பெய்ஜிங்கை "மூலோபாயப் போட்டியாளர்" என்று
அறிவித்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவ,
நேபாளத்திற்கு இராணுவ உதவி அளிக்க தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக பிலிப்பைன்சில் நெருக்கமான இராணுவ உறவுகளை
ஏற்படுத்த மற்றும் தைவான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஒரு சாக்குப்
போக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மலாக்கா நீரிணை மீதான கட்டுப்பாடு இந்த சுற்றி வளைப்பு மூலோபாயத்தில்
முக்கியமான அம்சமாகும் மற்றும் இந்தப் பயிற்சியில் இந்தியா ஒரு பங்காளராக தெரிவு செய்யப்பட்டது தற்செயலானது
அல்ல.
இதில் பங்கேற்பதற்கான புதுதில்லியின் விருப்பம் இந்து பேரினவாத பி.ஜே.பி-ன்
குறிக்கோள்கள் மற்றும் மிகவும் பரந்த அடிப்படையில் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதற்கான அரசியல்
நிறுவனத்தின் குறிக்கோள்கள் ஆகியவற்றுடன் கட்டுண்டிருக்கிறது. புதுதில்லியின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்
ஜஸ்ஜித் சிங், சீனாவை "பொருளாதார ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் இராணுவ
ரீதியாக எமது பிரதான மூலோபாய போட்டியாளர்" ஆக இருக்கும் என வெளிப்படையாக அறிவித்த பொழுது இந்த
உணர்வுகளுக்கு குரல் வடிவம் கொடுத்தார்.
அமெரிக்காவுடனான கூட்டுக்கு பி.ஜே.பி -ன் ஆதரவு 1962ம் ஆண்டு சீனாவுடன்
நடைபெற்ற யுத்தத்தை பின்னோக்கி நீட்டிப் பார்க்கிறது, அதில் இந்திய இராணுவம் படுதோல்வி அடைந்தது. இந்த
மோதலுக்குப் பின்னர், முன்னர் என்றுமிருந்திரா முதலாவது இந்திய-அமெரிக்க யுத்த விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
பி,ஜே.பி-ன் முன்னோடியான ஜனசங்க், அமெரிக்காவுடன் நிரந்தர இராணுவ உறவை ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு
விடுத்தது, அமெரிக்க ஆதரவு இருந்திருந்தால் இந்தியா சீனாவைத் தோற்கடித்திருக்கும் என்று அது வாதித்தது.
நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, ஆளும் செல்வந்தத்தட்டின் கணிசமான பகுதியினர் இந்த
துணைக் கண்டத்தில் இந்திய நலன்களை முன்னெடுக்கவும் மிகப் பரந்த அளவினதாக்கவும் வழிமுறைகளாக பி.ஜே.பி-ன்
நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். புதுதில்லியில் உள்ள இந்து பேரினவாத அரசாங்கம் மற்றும் விளைவைப் பற்றிக் கவலைப்படாமல்
இராணுவ சாகசங்களில் ஈடுபடுவதற்கான அதன் விருப்பை எடுத்துக்காட்டும் அமெரிக்க நிர்வாகம் இவற்றின் சேர்க்கையானது,
ஏற்கனவே ஸ்திரமில்லாத இப்பிராந்தியத்தில் வெடிக்கக்கூடிய ஒரு வெடிமருந்துக் கலவையாக இருக்கின்றது.
See Also :
இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில்
பதட்டம் மிக்க இராணுவ மோதல்நிலை தொடர்கிறது
இந்திய
துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்
|