World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Government by provocation: Bush administration escalates terror warnings

ஆத்திரமூட்டல் அரசாங்கம்: புஷ் நிர்வாகம் பயங்கரவாத எச்சரிக்கைகளை விஸ்தரிக்கின்றது

By the Editorial Board
24 May 2002

Back to screen version

புஷ் நிர்வாகம், கடந்த சில நாட்களாக, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு அல்லது பல மில்லியன் அமெரிக்கர்களின் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கக் கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கை செய்து வெளியிட்டுள்ள ஒரு தொடர் அறிக்கைகள், பெரும் அரசியல் ஆத்திரமூட்டலைத் தூண்டிவிட்டுள்ளன. ஒருவர் பின் ஒருவராக உயர் அதிகாரிகள் உயிரியல், இரசாயன அல்லது அணுவாயுதங்களாலான புதிய தாக்குதல்கள் நிச்சயமாக இடம்பெறும் எனவும், அரசாங்கம் அவற்றைத் தவிர்ப்பதற்கு சக்தியற்றிருப்பதாகவும் பிரகடனம் செய்து வந்தனர்.

இந்த செய்தி தவறாக எடுக்கப்படகூடியதல்ல: அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதறலாம் அல்லது விஷமூட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மொத்த ஜனத்தொகையும், உலக வர்த்தக மையத்தின் அழிவைப் போன்ற அல்லது அதைவிட மோசமான பெரும் அதிர்ச்சிகளை சகித்துக்கொள்ள நேரும் என குறிப்பிடப்பட்டது.

எந்தவொரு அடிப்படையும் இல்லாது வெளியிடப்படும் இத்தகைய எல்லாவிதமான பரந்த தூரதிருஷ்டிகளும் அரசாங்கத்தில் உள்ள "வாய்வீச்சாளர்களின்" தவறான சொற்பிரயோகங்கள் அல்ல. அவை உயர்மட்டத்தில் இருந்து பிரசவிக்கும் எச்சரிக்கைகளின் ஒரு தொடர்ச்சியாகும். மே 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை உப ஜனாதிபதி றிச்சர்ட் சென்னி முதலாவதாக எச்சரிக்கை செய்தபோது, செப்டம்பர் 11 விமானக் கடத்தல் குண்டுத்தாக்குதலை விட இரத்தக்களரி மிக்க இன்னுமொரு பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்காவை இலக்காகக் கொண்டுள்ளது "மிகவும் உறுதியானதாகும்" எனப் பிரகடனப்படுத்தினார். பல இணையத் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றிய சென்னி, இஸ்ரேலில் போன்று இங்கும் பொது இடங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான "நிச்சயமான சாத்தியக்கூறுகள்" இருப்பதாகவும் கூறினார்.

இவரைப் பின்தொடர்ந்த FBI அதிகாரி ரொபர்ட் முல்லர் (Robert Mueller), திங்கட்கிழமை வாஷிங்டனுக்கு அருகில் மாவட்ட சட்டத்தரணிகளுக்கு மத்தியில் உரையாற்றிய போது, இஸ்ரேலிய-பாலஸ்தீன பாணியிலான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் அமெரிக்காவிலும் இடம்பெறுவது "தவிர்க்க முடியாதது" எனக் குறிப்பிட்டார். முல்லர் மேலும் குறிப்பிடும் போது, "எங்களால் அதைத் தடுக்க முடியாது. நாங்கள் இவற்றோடு வாழவேண்டியிருக்கும்" என்றார்.

அடுத்த எச்சரிக்கை, செவ்வாயன்று புஷ்சின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்துக்கான தேசிய உயர் அதிகாரியும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிர்வாகியுமான டொம் றிஜ்ஜிடமிருந்து (Tom Ridge) வந்தது. முன்னாள் பென்சில்வேனிய ஆளுனரான இவர், அமெரிக்கா மீது இன்னுமொரு பயங்கரவாதத் தாக்குதல் "நடத்தப்படுமா என்பதை விட அது எப்போது என்பதே கேள்வியாகும்" என்றார்.

அரச செயலாளர் கொலின் பெளல் செவ்வாயன்று அரச திணைக்களத்தின் பயங்கரவாதம் சம்பந்தமான வருடாந்த அறிக்கையை வெளியிடும் போதும் இதே தொனியிலேயே பேசினார். ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றும் போது, "பயங்கரவாதிகள் வானலையியல், இரசாயன, உயிரியல் அல்லது அணுவாயுதம் போன்ற மனித அழிவை உண்டுபண்ணும் ஏதாவதொரு கருவியைக் கையிலெடுக்க சகல வழிகளிலும் முயற்சிக்கின்றார்கள்" எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரும்ஸ்வெல்ட் பெரும் ஆபத்துக்களை முன்னெச்சரிக்கை செய்யும் அறிக்கைகளை செவ்வாயன்று வெளியிட்டார். அவர் காங்கிரஸ் குழு கூட்டத்தில் அமெரிக்கா மீது அணுசக்தி உட்பட்ட மனிதப் பேரழிவுக்கான ஆயுதங்களை பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு தாக்குதலை எதிர்பார்க்குமாறு கூறினார். அவர் ஈராக், ஈரான், சிரியா, லிபியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் அணு, உயிரியல், மற்றும் இரசாயன ஆயுதங்களை அபிவிருத்தி செய்துவருவதாகவும் அவற்றை பயங்கரவாத இயக்கங்களுக்கு விநியோகிக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டார்.

 

"நான் தகவல்களை மாத்திரமே வெளியிடுகிறேன். இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம்", என ரும்ஸ்வெல்ட் மேலும் குறிப்பிட்டார்.

ரும்ஸ்வெல்டின் மொழி அவரது அத்தாட்சிகளில் இருந்து வெளிப்படும் விசித்திரமான கருத்துக்களையே சுட்டிக் காட்டுகின்றது. ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கம் பற்றி அவர் பேசும்போது, "அவர்கள் எம்மை ஆட்டங்காணச் செய்கின்றனர். எம்மை ஆட்டங் காணச்செய்வதோடு எம்மைப் பரீட்சிக்கின்றனர்," எனப் பிரகடனம் செய்தார். அவர், தனது வார்த்தைகளில் பீதியை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை கோடிட்டுக் காட்டுவதற்காக பின்வருமாறு குறிப்பிட்டார்: "தம்மைக் காத்துக் கொள்வதற்கு முயற்சிப்பவனை விட தாக்குதல்காரனின் தன்மை மிகவும் அபிவிருத்தியடைந்ததாக இருப்பதால் நாம் எச்சரிக்கைகள் அற்ற அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்," என்றார்.

புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளிடமிருந்து வரும் எச்சரிக்கைகளின் தாக்கத்தோடு இணைந்தவகையில், Brooklyn Bridge, சுதந்திரதேவியின் சிலை (Statue of Liberty) உட்பட, பயங்கரவாதத் தாக்குதல்களின் இலக்காக கருதப்படும் நியூயோக் நகரத்தின் முக்கிய இடங்களில் எப்.பீ.ஐ உசார் நிலையில் இருக்கின்றது. தமது எச்சரிக்கை ஒரு தெளிவற்றதும் உறுதிப்படுத்தப்படாததுமான அச்சுறுத்தல் என எப்.பீ.ஐ ஏற்றுகொண்ட போதிலும், அது நகர அதிகாரிகளுக்கு, செப்டம்பர் 11 சம்பவங்களை தொடர்ந்த உடனடி நிலைமைகள் வரை காணக்கிடைத்திருக்காத அசாதாரணமான மேலதிக நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. Brooklyn Bridge செவ்வாய், புதன் கிழமைகளில் பலமணி நேரம் மூடப்பட்டிருந்ததுடன், பிரதான பாலத்திலும் நகரத்திற்கூடாகச் செல்லும் சுரங்க வாயில்களிலும் திட்டமிட்டவகையிலான வாகனப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எப்.பீ.ஐ. நியூயோர்க் நகர மாடிமனை கட்டடங்களிலும் தாக்குதல் நடைபெறக் கூடுமென எச்சரித்துள்ளது.

உள்நோக்கம் எத்தகையதாக இருப்பினும், அரசாங்கத்தின் அறிக்கைகளதும் நடவடிக்கைகளதும் தாக்கங்கள் பொதுவில் அச்சமும் பீதியும் நிறைந்த மனநிலையை உருவாக்கிவிட்டுள்ளன. இந்த வழிமுறைகள் அதிகாரத்தில் இருப்பவர்களை கையாலாகாதவர்களாகவும் பயங்கர அரசியல் ஆத்திரமூட்டலாளர்களாகவும் முத்திரை குத்தியுள்ளன.

செப்டம்பர் 11ம் திகதி உத்தியோகபூர்வ கதை கேள்விக்கிடமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில், அரசாங்கம், இவ்வாறான பயங்கர முன்னெச்சரிக்கைகளை விடுப்பது தற்செயலானதல்ல: அதாவது, புஷ் நிர்வாகத்துக்கும் அமெரிக்க உளவுசேவைக்கும் தாக்குதல் பற்றிய முன் எச்சரிக்கைகள் எதுவும் கிடைக்காததால், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் போனது என்பதே அவர்களின் கதையாகும். கடந்த செப்டம்பர் சம்பவத்தை சூழ நிர்மாணிக்கப்பட்டுள்ள பொய்களும் தட்டிக்கழிப்புகளும் அம்பலத்துக்கு வந்துள்ளதோடு அவை, அன்று முதல் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சகலவிதமான நடவடிக்கைகளதும் நியாயத் தன்மையை இல்லாதொழிப்பதற்கான அச்சறுத்தலைக் கொண்டுள்ளன.

அமெரிக்கா, வெளிநாடுகள் மீதான யுத்தத் திட்டங்களுக்கும் ஏற்கனவே புஷ் நிர்வாகத்தால் உள்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளுக்கும் இணங்க, அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ள பொதுமக்களை தமது கொள்கையில் தீவிரமான மாற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக உலக வர்த்தக மையத்தின் அழிவை இறுகப் பற்றிக் கொண்டது. அதேபோல் இப்பொழுது, புதியதும் மிகவும் தீவிரமானதுமான நகர்வுகளை நியாயப்படுத்தும் அதேவேளை அரசாங்கம், தமது முன்னைய நடவடிக்கைகளை முழுமையான விசாரணைக்குட்படுத்துவற்கான வளர்ச்சி கண்டுவரும் கோரிக்கைகளை முன்கூட்டியே சிதைப்பதன் பேரில், கவலையும் குழப்பத்துடனும் கூடிய ஒரு பொது மனநிலையை தோற்றுவிக்கும் நோக்கில் இருந்து வருகின்றது.

ரும்ஸ்வெல்டினதும் அவரது கூட்டினரதும் வார்த்தைகளை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொள்வாராயின், அவர் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தினதும் தசாப்த காலத்துக்கும் மேலாக அது கையாண்டு வந்த கொள்கைகளதும் வங்குரோத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத் முகாமுக்கும் இடையிலான அரைநூற்றாண்டுகால குளிர்யுத்த மோதலின்போது ஆயிரக்கணக்கான அணுவாயுத-ஏவுகனைகள் அமெரிக்காவின் பிரதான நிலங்களை நோக்கியும் அங்கிருந்து எதிர்ப்பக்கமாகவும் குறிவைக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட, எந்தவொரு அமெரிக்க உயர்மட்ட உத்தியோகத்தரும் அமெரிக்க மக்கள் மீதான ஒரு அணுவாயுதத் தாக்குதல் தவிர்க்க முடியாதது என பகிரங்கமாக முன்னறிவித்தது கிடையாது.

ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், ராஜதந்திர உறவுகள், நேரடித் தொலைத் தொடர்புகள் போன்ற இயந்திர அமைப்பு உள்ளடங்கலாக ஒரு பரந்த அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அக்காலகட்டத்தில் அவ்வாறான ஒரு அழிவின் ஆபத்தைத் தவிர்ப்பதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆளும் கும்பல் உணர்ந்துகொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் எந்தவொரு அணுகுண்டுமே இங்கு போடப்படவில்லை.

ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு தசாப்தத்துக்கும் மேலான காலப்பகுதியில், அமெரிக்கா உலகின் ஏனைய நாடுகள் மீது தமது குறிக்கோளைத் திணிப்பதன் பேரில் தமது இராஜதந்திர நடவடிக்கைகளை கைவிட்டு, கொடுமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளின் மூலம் அதனது சவால் செய்ய முடியாத இராணுவ மேலாதிக்கத்தோடு மேலும் மேலும் அணிதிரண்டு வந்துள்ளது. அது முன்னைய ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் ஆரம்பம் முதல், ஈராக் சேர்பியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிராக மூன்று பெரும் யுத்தங்களை முன்னெடுத்ததோடு, உலகம் பூராகவும் பல சிறியளவிலான இராணுவ நடவடிக்களையும் முன்னெடுத்தது.

ஆனால் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமானது தற்போதைய புஷ் நிர்வாகத்தின் கீழ் கவனமின்மையானதும் வன்முறையானதுமான ஒரு புதிய மட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தற்போது முரண்பாடுகளை தடுக்கும் எல்லாவகையான அரசியல் வழிவகைகளையும் மறுத்துவருகிறது. அது தான் ''பயங்கரவாத'' அல்லது "குண்டர் அரசுகள்" (rogue states) எனக் கருதும் நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதை நிராகரிக்கின்றது. அது மத்திய கிழக்கு மற்றும் இந்திய உபண்டம் போன்ற மிகவும் ஸ்திரமற்ற பிராந்தியங்களுக்குள் தனது இராணுவத்தை திணித்து வருவதோடு, அதனது இராணுவ தலையீடூகள் பூகோளரீதியிலான பதட்ட நிலைமையை தோற்றுவிக்கும் விளிம்புக்கு வந்துள்ள போதிலும் கூட பின்வாங்க மறுக்கின்றது. மாறாக, அது புதியதும் விரைவில் தீப்பற்றக் கூடியதுமான தலையீடுகளுக்கு -மிகவும் விரைவில் ஈராக்குக்கு எதிராக- தயாராகி வருகிறது.

அமெரிக்கா உலகின் மிகவும் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் ஒரே சக்தியாக உருவெடுத்துள்ளது. அதனது கொடூரமான கொள்ளைக்காரத்தனமான கொள்கைகள், ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன்அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவிலும் கூட, பரந்த ஒடுக்கப்பட்ட வறிய மக்களிடையே முன்னெப்போதும் இருந்திராத மிகவும் உக்கிரமான எதிர்ப்பை உருவாக்கிவிட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அல்லாது, அமெரிக்கக் கூட்டுத்தாபன கும்பல்களது நலன்களை பேணுவதற்காக முன்னெடுக்கப்படும் இந்தக் கொள்கைகளே பயங்கரவாதத்தை தூண்டும் இந்த சமூக, அரசியல் நிலைமைகளுக்கு பொறுப்பாகும்.

ஒரு தசாப்த காலமாக யுத்தத்தை முன்னெடுத்து வந்துள்ள அதே வேளை அமெரிக்க இராணுவத்தில் பரந்த விரிவாக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு நிலையில், மிகவும் அழிவுகரமான பயங்கரவாதத் தாக்குதலை தவிர்க்க முடியாதுள்ளது எனக் கூறும் ரும்ஸ்வெல்டின் எச்சரிக்கைகள் உண்மையானதாக இருந்தால், அவரால் வகுக்கப்பட்ட இராணுவவாதக் கொள்கைகள், அமெரிக்க மக்களை திடீர் சாவுக்கும் பேரழிவுகொண்ட தலைவிதிக்கும் இரையாக்குவதை தெளிவான பெறுபேறாகக் கொண்டிருக்கும்.

அரசாங்கத்திலிருந்து ஊற்றெடுக்கும் இவ்வாறான எச்சரிக்கைகள், வெளிநாடுகளிலான மேலதிக இராணுவ நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குள்ளும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் என்பதை விமர்சனரீதியில் சிந்திக்கும் எவரும் புரிந்துகொள்ளலாம். இந்த ஆத்திரமூட்டல் அரசாங்கமானது ஊடகங்களின் பின்னணியாலும் ஜனநாயகக் கட்சியின் எந்தவொரு எதிரப்பின்மையாலும் சாத்தியமாகியுள்ளது. இது எந்தவகையிலும் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதல்ல. உண்மையில் புஷ் நிர்வாகம் மக்களின் பரந்த தட்டினருக்கு மத்தியில் ஒரு தேசாபிமான யுத்த உணர்வைத் தூண்டிவிட இலாயக்கற்றுப் போயுள்ளதால், அவநம்பிக்கையான வழிமுறைகளை அசாதாரணமான முறையில் முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறது. உழைக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள், ஆழம் கண்டுவரும் சமூகபொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கத்திடம் பதிலீடுகள் இல்லாத நிலைமையில் தமது தொழிலுக்கும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதையிட்டு மிகவும் கவலைகொண்டுள்ளனர்.

இதற்குப் பொறுப்புச் சொல்லுமாறு புஷ் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுப்பதோடு, தமது எச்சரிக்கைகள் பயமுறுத்தல்களின் உண்மைக் காரணிகளை அமெரிக்க மக்களின் முன் வைக்குமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். நிர்வாக வரப்பிரசாதங்கள் அல்லது யுத்தகால "தேசிய பாதுகாப்பு" தேவைகள் என்பன பிற்போக்கு கைநழுவல்களாகும். பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் அதனை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு அறிவிக்கப்படுமானால், அந்த மக்களுக்கு இந்த அச்சுறுத்தல்களுக்கான அடிப்படைக் காரணிகளை அறிந்துகொள்வதற்கான உரிமை உண்டு. அதற்கும் மேலாக, அரசாங்கம் அதிகரித்தளவிலான அதிகாரங்களை தானாகவே சுவீகரித்துக்கொள்ள இத்தகைய முன்னறிவித்தல்களை பயன்படுத்துமேயானால் -நிச்சயமாக அது அவ்வாறு செய்யும்- உண்மையில் அவ்வாறான நகர்வுகளின் அடிப்படையை தெரிந்துகொள்ளவும் மக்களுக்கு பூரண உரிமையுள்ளது. இங்கு அவர்களின் வாழ்க்கையும், அவர்களது ஜனநாயக உரிமைகளும் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

புஷ் நிர்வாகத்தின் பொய் மற்றும் ஆத்திரமூட்டல் வழிமுறைகள், மக்களின் அறிந்துகொள்ளும் உரிமைக்கும் மேலாக மிகவும் முக்கியமான பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது: அமெரிக்காவிலும் நிச்சயமாக உலகம் பூராகவும் உள்ள மக்களின் எதிர்காலம், ஒரு புதிய அரசியல் அடித்தளத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதிலேயே தங்கியிருக்கின்றது. அது வெறுமனே ஒரு அரசாங்கத்தை வெளியேற்றுவது சம்பந்தமான விடயமல்ல. உலக மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான ஜனநாயகமும் முற்போக்கான முன்நோக்கும் அவசியமாகியுள்ளது. அரசியல் ரீதியிலும் பண்புரீதியிலும் வங்குரோத்தடைந்துள்ள ஆளும் கும்பலால் யுத்தம், கொடுமை மற்றும் சீரழிவுக்குள் இழுத்துச் செல்லப்படும் மனித குலத்தை விடுவித்துக்கொள்வதற்காக உலகம் பூராகவும் உழைக்கும் மக்கள் சோசலிச அடித்தளத்தில் சமுதாயத்தை மீள நிர்மாணிக்க ஒரு புரட்சிகரமான வேலைத்திட்டத்தைச் சூழ ஐக்கியப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved