World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா
: இந்தியா
இந்திய அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம்: ஆதரவை மீளப்பெறுவதற்கான ஆற்றொணா முயற்சி By K. Ratnayake இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்குள்ளே வளர்ந்து வரும் நெருக்கடிக்கு பதிலாக, பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி ஜூலை தொடக்கத்தில் அவரது ஏழாவது அமைச்சரவை இலாக்காக்களின் மாற்றத்தைச் செய்தார். ஆனால் அரசாங்கம் எதிர்கொண்டுவரும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலிருந்து விலகி, புதிய அமைச்சரவை ஒழுங்குபடுத்தலானது அவற்றை உச்சநிலைக்கு கொண்டுபோகலாம். வாஜ்பாயி இந்து தீவிரவாதிகள் பலரை முக்கிய பதவிகளுக்கு உயர்த்தினார், உள்துறை அமைச்சர் லால்கிருஷ்ண அத்வானியை உதவிப் பிரதமர் ஆக நியமித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது, மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளே (NDA) பி.ஜே.பி-ன் நிலையையும் கூட பலப்படுத்தினார். இந்த மாற்றங்கள், கட்சியின் நலிந்துவரும் தேர்தல் ஆதரவைத் தூக்கி நிறுத்துவதற்கான வழிமுறைகளாக மிகவும் வகுப்புவாத அரசியலை வலியுறுத்தி வருகின்ற, பி.ஜேபிக்குள் உள்ள இந்து கடுங்கோட்பாளர்களை சாந்தப்படுத்துவதற்கு செய்யப்பட்டன. அதேவேளை, பிரதமர் சுதந்திர சந்தைப் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவு படுத்தும் முயற்சியில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த, ஜஸ்வந்த்சிங்கை நிதி அமைச்சராக நியமித்ததன் மூலம், பெரு முதலாளிகளது விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் தனியார்மயமாக்கல், கடுமையான தொழிற்சட்டங்கள், மானியங்களிலும் மற்றும் அரசாங்க செலவினங்களிலும் வெட்டுக்கள் உள்பட - பொருளாதாரச் சீர்திருத்தங்களின் கொள்கைகள் - முதல் இடத்தில், பரந்து விரிந்த அளவில் அரசாங்க எதிர்ப்பு குரோதத்தை உண்டு பண்ணியது. இலாக்கா மாற்றம் அமைச்சரவையில் 12 புதுமுகங்களைச் சேர்த்தது, அவர்களில் எட்டுபேர் பி.ஜே.பி-ல் இருந்து நியமிக்கப்பட்டவர்கள். இதன் விளைவாக, 23 கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பகுதியாக இருக்கும் பி.ஜே.பி, கபினெட் மட்டத்து அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் ஆகிய இரண்டும் உள்பட, மத்திய அமைச்சரவையில் 77 துறைகளில் 56-ஐ பி.ஜே.பி கொண்டிருக்கிறது. பி,ஜே.பி-ன் கூட்டாளிகளான பிராந்தியங்களைத் தளமாகக் கொண்ட, மொழி மற்றும் இனவாத உறவு கொண்ட சிறிய கட்சிகள், ஒரு வார்த்தை எதிர்ப்பும் இன்றி மாற்றங்களை ஏற்றுக் கொண்டன. பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக முன்னணியின் பெரும்பான்மைக்கு தீர்க்கமானதாக இருக்கும் மேற்கு வங்காளத்தை அடித்தளமாக்க் கொண்ட திரிணாமூல் காங்கிரஸூக்கு அமைச்சர் பதவி கிடையாது. அதன் தலைவர் மமதா பானர்ஜி இரயில்வே இலாகா தவிர எந்த பதவியையும் ஏற்க மறுத்தார் ஆனால் வாஜ்பாயி அவரது வேண்டுகோளை அலட்சியம் செய்து தற்போதைய இரயில்வே அமைச்சரையே பேணிக்கொண்டார். தேசியமாநாட்டுக் கட்சி - ஜம்மு காஷ்மீரைத் தளமாகக் கொண்ட கட்சி- ஏற்கனவே ஒருபக்கம் ஓரங்கட்டப்பட்டதாய் விடப்பட்டிருந்த்து. அதன் கட்சித் தலைவரான, ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கு மறைமுகமாக பெயர் குறிக்கப்பட்டிருந்தவர் ஆனால் வாய்ப்பைத் தவறவிட்டார். அவரது மகன் உமர் அப்துல்லா ஒப்பீட்டளவில் இளைய பதவியான வெளிவிவகாரத்துறையின் ராஜாங்க அமைச்சராக பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை மாநில நிர்வாகத்தின் கீழ் நடத்துவதைக் காட்டிலும் புதுதில்லியின் நேரடி ஆட்சியின் கீழ் நடத்துவதற்கான பி,ஜே,பி-ன் திட்டங்களை தேசிய காங்கிரஸ் எதிர்க்கிறது. பி.ஜே.பி ஆனது அதன் இந்து பேரினவாத நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்களை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்கும் என்ற புரிதலின் மீதாக தேசிய ஜனநாயக முன்னணி பங்காளர்கள் கூட்டணியில் இணைந்தனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் விரோத வகுப்புவாத வன்முறையை அரசாங்கம் கையாளும்முறை மீதாக பல தே.ஜ.கூ கட்சிகள் கூட்டணியை விட்டு விலகப் போவதாக அச்சுறுத்தின. அதனால்தான் அத்வானியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு இருந்திராதது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர் பி.ஜே.பி உறுப்பினரான, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேணினார். மோதியினது நிர்வாகம்தான் முஸ்லிம் விரோத இன ஒழிப்பைத் தூண்டிவிடுவதற்கு உதவியது. அத்வானி மட்டும் துணைப்பிரதமர் ஆக உயர்த்தப்பட்டது மட்டுமல்லாமல், இந்து கடுங்கோட்பாட்டாளர்கள் கூட பி.ஜே.பி நிறுவனத்தில் தங்களின் கரங்களைப் பலப்படுத்தினர். அத்வானியின் தேர்வான வெங்கையா நாயுடு, பலம்மிக்க பதவியான பி,ஜே.பி-ன் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றார். முன்னாள் சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி கட்சி பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டார். மேலும், அத்வானி இப்பொழுது பி.ஜே.பி தலைமையைச் சந்திப்பதற்கு கட்சியின் தலைமையகத்தில் இருவாரங்களுக்கு ஒரு முறை விஜயம் செய்வது -கட்சி எந்திரத்தின் மீது அவர் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு மேலும் கூடிய குறிகாட்டல் ஆகும். பி.ஜே.பி க்கு நெருங்கிய கூட்டாளியான, பாசிச சிவசேனை கட்சியிலிருந்து மனோகர் ஜோஷி மேமாதம் மக்களவைத் பாராளுமன்றத்தின் கீழவை) தலைவராக நியமனம் உட்பட ஏனைய குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன. பிப்ரவரியில் உத்திரப்பிரதேசத்தில் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, பி.ஜே.பி, இந்து தீவிரவாத பஜ்ரங் தளத்தின் தலைவரான விநய் கத்தியார் என்பவரை, மாநிலக் கட்சிக் கிளைக்குத் தலைமை தாங்க நியமித்தது. உத்திரப் பிரதேசம் இந்தியாவின் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் மற்றும் பி.ஜே.பி-ன் அரசியல் கோட்டையாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு பி.ஜே.பியானது மாநிலத் தேர்தல்களில் தொடரான மோசமான தோல்விகளால் பாதிக்கப்பட்டது. பிப்ரவரியில், அக்கட்சி உத்தராஞ்சல், பஞ்சாப் மற்றும் அசாம் அதேபோல உத்திரப்பிரதேசம் ஆகியனவற்றில் தோல்வியைத் தழுவியது. 2001 மேமாதம் முந்தைய சுற்றில், பி.ஜே.பி ஆனது கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் போட்டி இட்ட 823 இடங்களில் 13 இடங்களை மட்டுமே வென்றது. குஜராத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களில் பி.ஜே.பி படுதோல்வி அடைந்தது. அடுத்த 12 மாதங்களில், செப்டம்பரில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறவிருக்கும் தேர்தலுடன் தொடங்கி, பி.ஜே.பி இன்னொரு 12 மாநிலத் தேர்தல்களை எதிர் கொண்டிருக்கிறது. 2004ல், கட்சியானது தேசிய அளவிலான தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்யவேண்டி உள்ளது. அத்வானி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது அதன் தேர்தல் இழப்புக்களை ஈடு செய்வதற்கு அரசாங்கமானது -எதிராளியான பாக்கிஸ்தானிடம் இராணுவப் பதட்டங்களைப் பராமரித்துக் கொண்டுவரல் மற்றும் உள்நாட்டில் வகுப்புவாத விஷயங்களைத் தள்ளுதல் ஆகிய இரண்டின் மூலம் - வகுப்புவாத மற்றும் தேசியவாத உணர்வைத் தூண்டிவிட விரும்புகிறது என்பதற்கான தெளிவான அறிகுறி ஆகும். அவர் ஜூலை13 அன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில், கட்சியின் புதிய தலைவர் வெங்கையாநாயுடு 1980களில் "ஒரு வேறுபாடு கொண்ட" கட்சியாக பி.ஜே.பி இருந்த புகழை மீட்டமைப்பார் என்று அறிவித்தபொழுது, அத்வானி அவரது நோக்கங்கள் பற்றிய அறிவிப்பை வழங்கினார். துல்லியமாக இந்தக் காலகட்டத்தில்தான் குறிப்பாக அத்வானி முஸ்லிம் விரோத வகுப்புவாதத்தைத் தூண்டிவிடுவதில் முன்னணிப் பாத்திரம் ஆற்றினார். 1992ல் அவர் -இந்துக்கள் வணங்கும் இரு முக்கிய தளங்களான -சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் ரத யாத்திரை அல்லது மோட்டார் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம், டிசம்பர் 1992ல் அயோத்தியில் இந்து வெறியர் கும்பலால், 16ம் நூற்றாண்டு மசூதியான, பாபர் மசூதியை இடித்து அழிப்பதில் உச்சக்கட்டமாய் முடிந்தது- இந்தச் செயல் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட்டது. அத்வானி உயர்த்தப்பட்டமை இந்திய ஆளும் வட்டாரங்களில் ஓரளவு பதட்டத்துடன் வரவேற்கப்பட்டிருக்கிறது. பெரும் முதலாளிகள் வாஜ்பாயி அரசாங்கத்தை அதன் இந்து பேரினவாத நிகழ்ச்சி நிரல் காரணமாக ஆதரிக்கவில்லை மாறாக பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுத்துச்செல்லும் சாதனங்கள் என்ற வகையில்தான் ஆதரிக்கிறார்கள். ஜஸ்வந்த்சிங்கை நிதி அமைச்சராக நியமித்ததன் மூலம் வாஜ்பாயி, கார்ப்பொரேட் தலைவர்களுக்கு தனது அரசாங்கம் அதன் சந்தை சீர்திருத்த வேலைத்திட்டத்தை உக்கிரப்படுத்தும் என மீண்டும் உத்தரவாதப்படுத்துவதற்கு நாடிக்கொண்டிருக்கிறார். முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த சின்ஹா வாக்குக் கொடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தத் தவறியமைக்காக பெரும் முதலாளிகளால் "திரு. திருப்பி அனுப்பப்படுபவர்" ஆக தட்டி வைக்கப்பட்டார். பிசினஸ் வீக்லி பின்வருமாறு குறிப்பிட்டது: "சின்ஹா தொடரான நிர்வாகச் சீர்திருத்தங்களைத் திறந்து விட்டார், வரிக் கட்டமைப்பை இலகுவாக்கினார், அவரது 2001/02 வரவு-செலவுத் திட்டத்தில் தொழிற் சட்டங்களில் அதிக மாற்றங்களை அறிவித்தார். ஆனால், ஆயுத பேர ஊழல், பங்குச்சந்தை மோசடி ஊழல் நாட்டின் மிக்ப்பெரிய பரஸ்பர நிதி நிர்வாகத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பரந்த மக்கள் ஆதரவை இழந்து விடுவோமென அஞ்சி கடும் சீர்திருத்தக் கொள்கையிலிருந்து அரசாங்கம் பாதுகாக்க விழைகையில், அவரது வரவு -செலவுத் திட்ட கனவுகள் புளிப்பாக மாறின." பொருளாதார விமர்சகர்கள் சிங்கின் நியமனத்தை பொதுவாக வரவேற்றுள்ளனர். ஒருவர் அவரை "வரவேற்கும் மாற்றத்தை கொண்டுவரப்போகும் புதிய காற்று" என்று விவரித்தார் மற்றும் அவரை அவரது இராஜதந்திரத்தில் போல் அதே "கட்டாயப்படுத்தும் பாணியை" -பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் உட்புகாமல் கொள்கைக்காக வலிந்து ஊடாடும்தன்மை குறிப்புரைக்கப்படுகிறது- பொருளாதார நிலைகளில் பயன்படுத்துமாறு அவரை அழைத்தார். என்ன வரவிருக்கிறது என்பதற்கு அடையாளமாக, அமைச்சரவை இலாக்காக்களை மாற்றி அமைப்பதற்கு இருநாட்களுக்கு முன்னர் தொழிலாளர் பற்றிய தேசிய குழு ஆனது, "மேலும் நெகிழ்ச்சிமிக்க உழைப்பு சந்தையை" - அதாவது, முதலாளிகள் தொழிலாளர்களை மிகவும் எளிதாக வேலை நீக்கம் செய்ய மற்றும் நலன்களை வெட்ட வகை செய்வதை - பரிந்துரைத்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. சந்தைச் சீர்திருத்தத்திற்கான தேவைகள், அதிகமான அளவு நேரடி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான பொருளாதார அழுத்தங்களால் துண்டி விடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியானது அண்மையில் வளர்ந்து வரும் தற்போதைய கணக்குப் பற்றாக்குறையைப் பற்றி எச்சரித்தது மற்றும் குறுகிய காலத்தில் குறைந்த பட்சம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான தேவை பற்றியும் அது குறிப்பிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு சுமார் 4.8 பில்லியன் டாலர்கள் அளவில் உயர்ந்தது. பெரு முதலாளிகள் அரசாங்கத்தை, அரசு வங்கிகள் உட்பட, அதன் தனியார் மயமாக்கல் வேலைத்திட்டத்தை வேகப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களை மற்றும் வெளியீட்டுத் தொழிற் துறையின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கான நகர்வுகள் அங்கு இருக்கின்றன. இருப்பினும், அத்தகைய நடவடிக்கைகள் வேலையின்மையையும் வறுமையையும் அதிகரிக்க மட்டுமே வழிவகுக்கும் மற்றும் வாஜ்பாயி அரசாங்கத்தின்பால் வளர்ந்து வரும் அதிருப்தியைத் தூண்டவே செய்யும். அண்மைய இலாக்காக்கள் மாற்றமானது சுட்டிக்காட்டுகிறவாறு, பி.ஜே.பி ஆனது ஒரே ஒரு பதிலைக் கொண்டிருக்கிறது- அது, அதன் சொந்த நிலைச்சான்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதற்கான ஆற்றொணா முயற்சியில் வகுப்புவாதப் பதட்டங்களைத் தூண்டி விடுவதாகும். |