World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Socialist Equality Party public meeting in Britain:

The political lessons of the French presidential elections

பிரித்தானியாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டம்:

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் அரசியல் படிப்பினைகள்

17 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

(பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சி மே 12ம் திகதி மத்திய லண்டனில் "21ம் நூற்றாண்டின் சோசலிசத்திற்கான முன்நோக்கு" என்ற தலைப்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் அரசியல் படிப்பினைகள் சம்பந்தமாக நிகழ்த்திய பிரதான உரையை நாம் கீழே பிரசுரிக்கின்றோம்.)

*****

பிரான்சானது புரட்சிகர நடவடிக்கைகளின் முன்னோடி என்ற நீண்ட வரலாற்று மரபைக் கொண்டுள்ளது. 1791-1795 பிரெஞ்சு புரட்சியானது ஐரோப்பா கண்டத்தில் முதலாளித்துவ புரட்சிக்கான சகாப்தத்தை திறந்து வைத்தது. பிரான்ஸ் 1831இலும் 1948இலும் மீண்டும் 1968இலும் ஐரோப்பாவை அடித்துச் சென்ற புரட்சிகர எழுச்சிகளுக்கான அலையை தோற்றுவித்தது.

ஆயினும் பிரெஞ்சு மக்கள் தமது புரட்சிகர ஜீவநாடியோடும் நடவடிக்கைக்கான தமது தாகத்தோடும் பொருந்தாதிருந்த நிலைமையில் இத்தகைய போராட்டங்களின் தத்துவார்த்த அரசியல் படிப்பினைகள் அடிக்கடி எடுக்கப்பட்டதோடு வேறு இடங்களில் அமுல்படுத்தப்பட்டன. பிரான்சில் நடந்த சம்பவங்களின் அரசியல் படிப்பினைகள், எப்போதும் பிரமாண்டமான அனைத்துலக முக்கியத்துவத்தை நிரூபிப்பதாக பொதுவாக குறிப்பிட முடியும். பிரெஞ்சு புரட்சியின்றேல், மார்க்சினதும் ஏங்கல்சினதும் கற்பித்தல்களும், ஏன் ஹேகல் உடைய கற்பித்தலும் கூட நினைத்தற்கரியதாக இருந்திருக்கும். 1871ன் பாரிஸ் கம்யூன் இல்லாதிருப்பின் 1917 ரஷ்யாவில் ஒரு வெற்றிகரமான அக்டோபர் புரட்சி இடம்பெறாமல் இருந்திருக்கலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக பிரான்சை உலுக்கிய சம்பவங்களையிட்டு அவற்றுக்கு ஒப்பான ஒன்றைக் கூறமுடியும். இச்சம்பவங்களின் படிப்பினைகள் சரியான முறையில் உள்வாங்கப்பட்டு புரிந்துகொள்ளப்படுமானால், அவை பிரான்சில் மட்டுமன்றி உலகம் பூராவும் எதிர்கால போராட்டங்களுக்கு ஒரு உயர்ந்த அரசியல் மட்டத்திலான அடித்தளத்தை வழங்கும். அவை பிரான்சின் எல்லைகளையும் கடந்து ஒரு பரந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதுடன் அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துக்கான முக்கிய அரசியல் படிப்பினைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

பிரான்சின் அரசியல் நிகழ்வுகள் அடிக்கடி எரிமலையின் வெடிப்பை ஒத்திருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் வெளித்தோற்றம் மிகவும் அமைதியானதாக இருந்தது. பின் சடுதியாக பெரும் எரிமலையாக வெடித்தது. புவியியலாளர்கள், இத்தகைய எரிமலையின் பரிமாணமானது வெளியேறுவதற்கு வழியின்றி புறத்தோற்றத்துக்கு அடியில் நீண்டகாலமாக வளர்ச்சி கண்டுவந்த பதட்டநிலைமைகளின் பெறுபேறுகள் எனப் புரிந்து கொண்டுள்ளனர்.

2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மிகவும் சலிப்பானதாகவும், விசேட சம்பவங்களற்ற சந்தர்ப்பமாகவும் காணப்பட்டது. இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதியான ஜாக் சிராக்கும், வித்தியாசமான அரசியல் முகாம்களில் இருந்து வந்திருந்தபோதும் கடந்த ஐந்து வருடங்களாக கூட்டாகவும் இணக்கப்பாட்டுடனும் வேலை செய்த தற்போதைய பிரதமர் லியோனல் ஜோஸ்பனுக்கும் இடையிலானதாக இருக்கும் என எல்லோரும் கற்பனை செய்தார்கள் -எல்லா கருத்துக்கணிப்புகளும் இதை உறுதிப்படுத்தின. அவர்கள் இருவரதும் தேர்தல் வேலைத் திட்டங்கள் மிகவும் ஒத்ததாக அமைந்திருந்தன. தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் இவ்விரண்டிலும் எந்தவொரு வேறுபாட்டையுமே காணமுடியாதவர்களாக இருந்தனர்.

எவ்வாறாயினும் ஏப்பிரல் 21ம் திகதி மாலை வாக்குச் சாவடிகள் மூடப்படுவதற்கு சற்று முன்னதாக, தேசிய முன்னணி வேட்பாளரான ஜோன் மரி லூ பென் உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக ஒரு வதந்தி பரவியது. எல்லோரும் அவதானத்துடன் பார்த்தனர். இரவு 8 மணியளவில் வாக்குச் சாவடிகளில் இருந்து வெளியேறுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு -பொதுவில் சாதாரணமானவையாகவும் சரியானவையாகவும் கருதப்படுபவை- இந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது: ஜோன் மரி லூ பென் சோசலிச வேட்பாளரான லியோனல் ஜோஸ்பனை தோற்கடித்து, கோலிஸ்டான ஜாக் சிராக்குக்கு எதிராக இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடக் கூடியவராக இருந்தார். இடதுசாரிக் கன்னையின் வேட்பாளருக்கும், முதலாளித்துவ அமைப்பின் வலதுசாரி கன்னையின் வேட்பாளருக்கும் இடையிலான போட்டியில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வழமையான நடவடிக்கைக்கு மாறாக, தொழிலாளர்களால் யாரையும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் பெரு வர்த்தகர்களின் நேரடிப் பிரதிநிதிக்கும் ஒரு வெளிப்படையான பாசிஸ்ட்டுக்கும் இடையில் யாரையாவது ஒருவரை தெரிவு செய்யத்தள்ளப்பட்டார்கள்.

ஒரு சில மணித்தியாலங்களுக்குள், இந்த அரசியல் நிலைமைக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதியில் இறங்கினர். மறுநாள் லூ பென்னையும் அவரது பாசிச சிந்தனைகளையும் எதிர்த்து வந்த ஜனத் தொகையின் ஏனையப் பிரிவினரும் அவர்களுடன் இணைந்தனர். ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் வளர்ச்சி கண்டு நாடு பூராவும் விரிவடைந்தன. ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்களும் பின்னர் இலட்சக் கணக்காணக்கானவர்களும் மே தினத்தன்று இரண்டு மூன்று மில்லியன் மக்களும் வீதிக்கிறங்கினர்.

தேர்தல் முடிவுகள் ஆழமான அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன

தேர்தல் முடிவுகள் சம்பந்தமான ஆய்வானது, அவை இந்த எழுச்சிகளில் வேறூன்றியிருக்காத போதிலும் பரந்த அதிருப்தியின் உருவத்துக்கு தூண்டுகோலாக இருந்து வந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அது பிரெஞ்சு சமுதாயத்தின் துருவப்படுத்தலையும், தற்போதைய அரசியல் கட்டமைப்பினதும், அரசியல் அமைப்புகளதும் ஆழமான நெருக்கடியையும் வெளிப்படுத்துகின்றது.

சிராக், ஜோஸ்பன் ஆகிய இரு பிரதான வேட்பாளர்களும், வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் கால் பங்கினரது ஆதரவையே பெற்றுள்ளனர். 30 சதவீதமானோர் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்ட அதேவேளை, வாக்களிக்க சென்றவர்களுள் 20 சதவீதமானோர் தீவிர வலதுசாரிக்கும், 10 சதவீதமானோர் தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக்கொள்ளும் இடதுசாரி வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளனர். எஞ்சிய வாக்குகள் ஜோஸ்பன் அல்லது சிராக் முகாமைச் சார்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளன.

சிராக் முகாம் 1995ல் இறுதியாக நடந்த தேர்தலின் முதல் சுற்றுடன் ஒப்பிடுகையில் மொத்தம் 4 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளது. ஜோஸ்பன் முகாம் மொத்தமாக ஒன்றரை மில்லியன் வாக்குகளை இழந்துள்ளது. மரபுரீதியான வலதுசாரிகளதும் இடதுசாரிகளதும் வாக்குகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவானது, கடந்த 20 ஆண்டுகளாக பலவித கூட்டணிகள் மூலம் நாட்டை ஆட்சி செய்து வந்தவர்கள் சம்பந்தமாக ஆழமான அதிருப்தி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இது மக்களுக்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையிலான ஆழமான பிளவை சுட்டிக் காட்டுகிறது.

லூ பென் திறமையைப் பயன்படுத்தி தமது வெற்றியை சாதித்துக் கொள்வதற்காக இந்த பிளவை சுரண்டிக்கொண்டார் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. தன்னால் பெயர் குறிப்பிடப்பட்ட "அமைப்புக்கு" எதிராக போராடும் ஒரே ஒரு வேட்பாளராக தன்னை காட்டிக் கொள்ள அவர் பெரும் பிரயத்தனம் செய்துள்ளார்.

அவரது தேர்தல் அறிக்கை நாட்டின் ஒவ்வொரு அஞ்சல் பெட்டிக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இம்முறை அது அவரது மரபுக் கொள்கையான வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு, இனவாதம் போன்றவற்றிலிருந்து சற்றே விலகியிருந்து. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் மற்றும் சிறிய மக்களுக்கு அழைப்புவிடுக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டது. அவர் பிரெஞ்சு சமுதாயத்தின் சீரழிவுக்கும் அரசியல் கேடுகளுக்குமான குற்றச்சாட்டை மாஸ்ட்றிச் (Maastricht) உடன்படிக்கை மீதும் புரூசெல்ஸ் (Brussels) உடன்படிக்கை மீதும் யூரோ மீதும் கட்டியடிப்பதோடு, இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி பிரெஞ்சு இனம் தனிமைப்படுவது மட்டுமே எனவும் சிபார்சு செய்ய முயற்சிக்கின்றார்.

லூ பென் தம்மை வழமையாகவே ஆதரித்து வந்த நாட்டின் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள தேசிய முன்னணி கோட்டைகளில் இம்முறையும் தமது வெற்றியைப் பேணிக்கொண்டார். இந்தப் பிரதேசங்களில் வறுமை நிறைந்த சிறிய நகரங்களிலான சமூகப் பதட்ட நிலைமைகள் சில மக்கள் பகுதியினரை லூ பென்னினது வெளிநாட்டவருக்கு எதிரான கருத்துக்ளுக்கு ஆதரவாக திருப்பிக்கொள்ள உதவின. அவ்வாறே அவர் சமூகத்தில் மிகவும் பழமை பேணும் பகுதியினரையும் கவர்ந்திருந்தார். இவர்கள் கடந்த தேர்தலில் ஒரு வலதுசாரி வேட்பாளரான பிலிப் டு வில்லியே (Philippe de Villiers) க்கு வாக்களித்திருந்தனர். அத்துடன் அவர் வடக்கிலும், பாரிசின் சுற்றுப்புறங்களிலும் உள்ள முன்னைய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டைகளிலும் முதல் தடவையாக கணிசமானளவு வாக்குகளை பெற்றுக்கொண்டார். தொழிலாளர்களிடையே அவருக்கான ஆதரவு சராசரியை விட அதிகரித்ததாக இருந்ததோடு, வேலையற்றவர்களின் ஆதரவு அதிலும் சற்று கூடியதாக இருந்தது.

லூ பென்னுக்கு கிடைத்த வாக்குகள் பிரான்சில் ஒரு பாசிச வேலைத் திட்டத்துக்கு கிடைத்த பெரும் ஆதரவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அத்துடன் முசோலினி, ஹிட்லர் பாணியிலான பாசிச இயக்கத்தின் தோற்றத்தை அது சுட்டிக்காட்டவும் இல்லை. ஆனால் தொழிலாளர்களுக்கிடையே ஒரு பாசிச வாய்வீச்சாளனுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு கிடைத்திருப்பது பெரிதும் கவனத்திற்கு எடுக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

இந்த நிலைமைக்கான பிரதான பொறுப்பு சோசலிச கட்சியையும் கம்யூனிஸ்ட் கட்சியையுமே சாரும். பிரதானமாக கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சி முன்னெடுத்து வந்த வலதுசாரி கொள்கைகளே லூ பென்னுக்கு பெருமளவு ஆதரவு கிடைக்க காரணமாகியது. இதனால் ஏற்பட்ட வெறுப்பையும் அதிருப்தியையும் தேசிய முன்னணி சுரண்டிக் கொள்ள முடிந்தது.

ஜோஸ்பன் தலைமையிலான சோசலிசக் கட்சி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தம்மை மரபுவழி சமூக சீர்திருத்தக் கொள்கைகளின் பாதுகாவலனாக காட்டிக் கொண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகண்டது. ஜோஸ்பன், ஐரோப்பா பூராவும் பிரித்தானியாவில் டோனி பிளேயர் மற்றும் ஜேர்மனியில் ஹெகாட் ஷ்ரோடர் போன்ற மிகவும் வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிராக ஓரு இடதுசாரி பதிலீடாக முன்வைக்கப்பட்டார். அவரது கொள்கைகள் அவை முன்வைக்கப்பட்ட விதத்தில் மாத்திரமே ஐரோப்பாவின் மிகவும் வலதுசாரி அரசாங்கங்களின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டன. உள்ளடக்கத்தில் அல்ல. அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது கட்சி தம்மை "சோசலிஸ்ட்" எனக் கூறிக்கொண்டாலும் அதனது வேலைத் திட்டம்" "சோசலிசம்" அல்ல என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நிதி அமைப்பை நிர்மாணிக்கவும், ஐரோப்பாவின் தனி நாணயமாக யூரோவை நிறுவுவதற்கும் அவசியமான நிபந்தனைகளை சிருஷ்டிக்கும் பொருட்டு தொழில் மற்றும் சமூக சேவைகளை வெட்டித்தள்ளும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை ஜோஸ்பன் அரசாங்கம் பொறுப்பேற்றது. வாரத்தில் 35 மணித்தியால வேலையை அமுல்செய்வதற்கான சட்டம் அவரது வாக்காளர் மத்தியில் கணிசமானளவு ஆத்திரத்தை தூண்டிவிட்டது. ஜோஸ்பனுடைய ஆட்சிக் காலத்தில் பிரதான சமூக சீர்திருத்தங்களாக முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம் குறைந்த சம்பளம், தற்காலிக வேலைகளின் உருவாக்கம், வேலைத்தலங்களில் வேலை நேரத்தை மாற்றியமைக்கக்கூடிய நிலையை அறிமுகப்படுத்தல் போன்றவற்றுக்கு வழியமைத்தது.

ஜோஸ்பன் அரசாங்கம் ஆபிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் பால்கனிலும் அண்மையில் ஆப்கானிஸ்தானிலும் பிரான்சிய ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவளித்தது. அது முழு மத்திய கிழக்கையும் ஸ்திரமற்றதாக்கி ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான பொதுவான யுத்தத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு ஏகாதிபத்தியத் யுத்தமான ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் பங்குபற்ற ஏற்கனவே தயாராகியுள்ளது. அந்த வகையில் ஜோஸ்பன் முன்னர் அல்ஜீரியாவில் பராசூட் படையாளியும் சித்திரவதையாளனுமாக செயற்பட்ட லூ பென்னுடன் ஒரே வரிசையில் நின்றுகொண்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் வர்க்கத்துள் குடியேற்றவாதிகளுக்கு எதிரான நச்சுப் பேரினவாதத்தை அறிமுகப்படுத்தியதில் பிரதான பொறுப்பு வகிக்கின்றது. அதன் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான ரொபேட் ஹியூ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாளர்களுக்கு மத்தியில் குடியேற்றத் தொழிலாளர்களுக்கு எதிரான விரோதத்தையும் துவேசத்தையும் தூண்டிவிட்ட பாரீசின் புறநகரின் முதல் மேயராக விளங்கினார். இதன் மூலம் அவர் பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கோட்டைகளுக்குள் லூ பென்னுக்கு பாதையமைத்துக் கொடுத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் இந்த பழைய ஸ்ராலினிச அமைப்பின் வாக்குகளில் ஏற்பட்ட சரிவானது, தேர்தல் பெறுபேறுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியானது 1936ல் மக்கள் முன்னணிக்குள் நுழைந்து ஒரு பாரிய வேலை நிறுத்த அலையை தவிர்க்க உதவியதோடு, ஸ்பானிய புரட்சியை முறியடிக்கவும் உதவியது. அன்று முதல் அது தொழிலாளர் இயக்கத்துக்குள் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய தூணாக விளங்குகின்றது.

யுத்தத்துக்கு பிந்திய காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு உச்சகட்ட ஆதரவு கிடைத்தபோது, அது 1968 பொது வேலை நிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததோடு, இந்த வேலை நிறுத்தத்தால் பீதியடைந்து ஜேர்மனிக்கு ஓடிய டு கோலுக்கு (De Gaulle) மீண்டும் பிரான்சுக்கு திரும்பவும் வழியமைத்துக் கொடுத்தது.

இப்போது, ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டில் முதற்தடவையாக தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என கூறிக் கொள்ளும் வேட்பாளர்களான லூற் ஊவ்றியேர் (Lutte Ouvrière- தொழிலாளர் போராட்டம்) கட்சியின் வேட்பாளர் ஆர்லெட் லாகியேயும் (Arlette Laguiller) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (Ligue Communiste Révolutionnaire) வேட்பாளரான ஒலிவியே பெசன்சநோ (Olivier Besancenot) வும் ஸ்ராலினிச வேட்பாளரை விட அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளனர். 1995ல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்றுக்கொண்ட 2.6 மில்லியன் வாக்குகள் 2002ல் ஒரு மில்லியனுக்கும் குறைவாக வீழ்ச்சிகண்டுள்ளது.

3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற இந்தக் கட்சி அரச நிதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையான 5 சதவீதத்தை கூட எட்டத் தவறியதோடு, பிரச்சாரத்துக்காக 6.5 மில்லியன் யூரோக்களை செலவழித்து வங்குரோத்தடைந்துள்ளது. அறுபது எழுபது வயது கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதிய அங்கத்தவர்கள் உண்டியல் குலுக்கியவாறு நிதி சேகரிப்பது சகல ஆர்ப்பாட்டங்களிலும் காணப்படும் வழமையான காட்சியாகும்.

பிரான்சின் "தீவிர இடதுசாரிகள்" எனக் கருதப்படும் கட்சிகள் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமை இத்தேர்தலில் இன்னுமொறு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதிதீவிர இடதுசாரிகளுக்கு கிடைத்த பெருந்தொகையான வாக்குகளும், லூ பென் விரோத ஊர்வலங்களில் பங்குபற்றிய அதிகளவிலான மக்கள் தொகையும், ஒரு இடதுசாரி அரசியல் பதிலீட்டுக்கான தேடல் இருந்துகொண்டுள்ளது என்பதற்கான மிகச்சரியான சமிக்ஞைகளாகும்.

லாகியே, பெசன்சநோ மற்றும் பார்ட்டி டெ தறவையெர் (Parti des Travailleurs- தொழிலாளர் கட்சி PT) அமைப்பின் வேட்பாளர் டானியல் குளுக்ஸ்ரைன் (Daniel Gluckstein) மொத்தமாக 10 சதவீத வாக்குகளை பெற்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்த நான்கு வருடங்களாக ஜேர்மனியின் துணைப் பிரதமர் பதவியையும் வெளியுறவு அமைச்சர் பதவியையும் தம்வசம் கொண்டிருந்த ஜேர்மன் பசுமைக் கட்சி தனது வரலாற்றில் ஒரு போதும் இந்தளவு பெருந்தொகையான வாக்குகளைப் பெற்றது கிடையாது.

கடந்த தசாப்தம் பூராவும் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வந்த பைத்தியக்காரத்தனமான கம்யூனிச விரோத பிரச்சாரங்களை நோக்கும்போது பிரான்சினுள் சோசலிச இடதுகளுக்கு கிடைத்த பெறுபேறுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். ஸ்ரெஃபான் கூர்த்துவா (Stéphane Courtois) எழுதிய கம்யூனிசம் பற்றிய கறுப்பு புத்தகம் (Black Book on Communism) பிரான்சுவா பியூரெ (François Furet) எழுதிய "பிரமைகளின் முடிவு" (The End of Illusions) ஆகிய நூல்கள் பிரான்சிலேயே பிரசுரிக்கப்பட்டதாகும். இந்த நூல்களினூடாக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் பரந்தளவிலான புத்திஜீவிகள் அரசியல் புள்ளிகளிடையே எதிரொலித்தது. இவற்றின் குறிக்கோளானது, மார்க்சிசத்தின் ஸ்ராலினிச எதிரிகளான, ஸ்ராலின், மா ஓ, பொல் போட், சன்தரயோ லுமினோசே போன்ற இந்த அனைவராலும் மேற்கொள்ளப்பட்ட எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொதுவில் லெனிசத்தையும் ட்ரொஸ்கிசத்தையும் மற்றும் மார்க்சியத்தையும் குற்றம் சாட்டுவதாகும்.

தேர்தல் முடிவுகள் இது ஒரு சிறிதளவான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதைக் காட்டுகின்றன.

மொத்தத்தில், முதல் சுற்றுத் தேர்தல் முடிவுகள் இருமடங்கு நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன:

முதலாளித்துவ சமூகத்தினதும் அதன் அரசியல் ஸ்தாபனங்களினதும் நெருக்கடியானது, வாக்குகளின் தெளிவான துருவப்படுத்தல்கள் மூலமும், இக்கட்டமைப்பின் கட்சிகளில் இருந்தும், வேட்பாளர்களிடமும் இருந்து விலகிச் சென்றதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் தொழிலாளர் வர்க்கத்துக்கான அரசியல் முன்நோக்கு சம்பந்தமான நெருக்கடியானது, தொழிலாளர்களின் ஒரு பகுதியினரும் வேலையற்றவர்களில் ஒரு பகுதியினரும் தமது ஆபத்தான எதிரியான லூ பென்னுக்கு வாக்களித்ததில் இருந்தும் 12 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டதில் இருந்தும், அதேபோல் நாம் காணவுள்ளது போல், அதிதீவிர இடதுகளுக்கு கிடைத்துள்ள பெருந்தொகையான வாக்குகள் தோற்றுவித்துள்ள அரசியல் பொறுப்புக்களுக்கு முகம் கொடுக்கவும், நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு பாதையை வழங்குவற்கும் அவர்கள் இலாயக்கற்றுப் போயுள்ளதில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்பிரல் 21 தேர்தல் முடிவுகள் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடமையானது, மே 5ல் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்றில் வாக்களிப்பது எப்படி என சிபார்சு செய்வதுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது தெளிவானதாகும். மாறாக அது தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னோடி நடவடிக்கை எடுப்பதற்கும், தேர்தல் பெறுபேறுகளில் வெளிக்கொணரப்பட்ட சமூக நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான பாதையைக் காட்டுவதற்கும் ஒரு சுயாதீனமான கொள்கையை அபிவிருத்தி செய்வதுமாகும்.

சிராக்கிற்கு வாக்களிக்கக் கோரும் பிரச்சாரம்

முதலாளித்துவத்தின் முன்னணிப் பிரதிநிதிகள், தேர்தல் பெறுபேறுகளும், தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டங்களும் தமது தற்போதைய முழு அரசியல் அமைப்புக்கும் வளர்ச்சி கண்டுவரும் சவாலை வெளிப்படுத்தியுள்ளன என்பதையிட்டு மிகவும் அக்கறை கொண்டுள்ளனர்.

பாரிசில் இடம்பெற்ற மாபெரும் மே தின ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பிரெஞ்சு அரசியல் மற்றும் புத்திஜீவி வாழ்வை இரண்டறப் பிரதிபலிக்கும் ஒரு பிரதிநிதிகள் குழு கலந்துகொண்ட ஒரு பொதுக் கூட்டத்துக்கு நான் சமூகமளித்திருந்தேன். மரபுரீதியான குடியரசுவாத பத்திரிகையான மரியான் (Marianne) இதனை ஒழுங்கு செய்திருந்தது.

முதலாளித்துவ வலதுசாரிகளின் எல்லாப் பிரதான கட்சிகளும் ஒரு மண்டபத்துக்குள் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்தவர்களில் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயகத் தாராண்மைவாதக் கட்சியின் ஜோன்-பியர் ரஃபரன், பிரெஞ்சு ஜனநாயத்திற்கான ஐக்கியம் (Union pour la Démocratie Française) பிரான்சுவா பெய்ரூ, சிராக்கின் குடியரசுக்கான கூட்டு (Rassemblement Pour la République -RPR). அமைப்பின் ஒரு பிரதிநிதியும் அடங்குவர். இந்தக் கூட்டத்தில் அரசாங்கச் சார்பு இடதுசாரிகளின் பிரதான பிரதிநிதிகளும் இருந்தனர். அவர்களில் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்நாள் நிதியமைச்சருமான டொமினிக் ஸ்றவுஸ் கான், மற்றும் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நொயல் மமெயர், அதே போல் பிரஜைகள் இயக்கத்தின் பேச்சாளர் ஜோன்-பியர் செவென்மோ உம் அடங்குவர். அங்கு வருகைதந்திருந்த முன்னணி புத்திஜீவிகளில் -Alain Finkielkraut மற்றும் பேர்னா- ஹென்றி லெவி ஆகிய தத்துவாசிரியர்களும் முன்னர் எல்.சீ.ஆர். அமைப்பின் உறுப்பினராக இருந்து இப்பொழுது லு மொன்ட் (Le Monde) பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் எட்வி ஃபிலெனல் மற்றும் இறுதியாக தமது சிரேஷ்ட புத்திஜீவி பிரதிநிதியான டானியல் பென்சாயிட்டால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் எல்.சீ.ஆர் அமைப்பினரும் அங்கிருந்தனர்.

சிறிய அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் மேடையிலிருந்த அனைவரும் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்டமைப்புடன் வாக்காளர்கள் ஆழமாக விலகியிருப்பதையும், இது முழு அமைப்பினது நெருக்கடியை வெளிப்படுத்துவதாகவும் ஏற்றுக்கொண்டனர். இதை முதலாளித்துவ குடியரசின் அடித்தளத்துக்கு பங்கம் விளையாத வகையில் தீர்த்துக்கொள்வது எப்படி? என அனைவரும் யோசனைத் தெரிவித்தனர்.

அநேகமானவர்கள் 1958 சார்லஸ் டு கோலினால் உருவாக்கப்பட்ட 5ம் குடியரசுக்குப் பதிலாக ஆறாவது குடியரசு உருவாக்கப்பட வேண்டுமென கோரினர். சிலர் ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை உடனடியாக அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சிலர் மக்களின் கருத்தை கவனமாக அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும் என அழைப்புவிடுத்தனர். மேடையிலிருந்த ஒவ்வொருவரும் சிராக்குக்காக வாக்களிக்கும்படி கோரினார்கள் என்பதை கூறுவேண்டிய அவசியமில்லை. தத்துவஞானி லெவி, இது தயக்கத்துடன் செய்யப்பட வேண்டியதல்ல "உத்வேகத்துடன்" செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டங்கள் விரிவடைந்தது தான் தாமதம், சகல அரசாங்க இடதுசாரிக் கட்சிகளும் அதனை சிராக்குக்கு ஆதரவாகவும், மதிப்பிழந்த ஐந்தாம் குடியரசின் அமைப்புகளுக்கு ஆதரவாகவும் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டன. தொலைக்காட்சி நிலையங்களிலும் அச்சு ஊடகங்களிலும் எதிரொலிக்கும் இவர்களின் பிரச்சாரம் ஒரு அசாதாரணமானதாகும். காலையிலிருந்து நடு இரவு வரை, லூ பென் ஆட்சியேறாமல் தடுக்க ஒரே வழி சிராக்குக்கு வாக்களிப்பதே என மக்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துரைக்கப்பட்டது. பாசிசத்தை எதிர்ப்பதற்காக சிராக்குக்கு பெருமளவில் வாக்களித்து குடியரசுக்கான உங்களின் கீழ்ப்படிதலை வெளிப்படுத்திக் காட்டுங்கள் என மக்கள் வலியுறுத்தப்பட்டனர்.

பாசிசத்தின் ஆபத்து அதிகரித்தவகையில் பூதாகரப்படுத்தி காட்டப்பட்டது. ஜனாதிபதி என்ற வகையில் தமக்குள்ள அந்தஸ்த்தின் காரணமாக மாத்திரம் குற்றச்சாட்டுக்களில் இருந்து விலகியிருக்கும் மிக மோசமான குற்றவாளியான வலதுசாரி சிராக் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பெரிதும் புகழ்ந்துரைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டார்.

சிராக்குக்கு வாக்களிக்கக் கோரும் பதாகைகளை ஏந்திய வண்ணம் சோசலிச, கம்யூனிச மற்றும் பசுமைக் கட்சி அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் வெள்ளமென திரண்டனர். சிராக்கின் தேர்தல் சுவரொட்டிகள் சோசலிச கட்சியின் சின்னத்தையும் "எனது வாக்கு சிராக்குக்கே" என்ற வசனத்தையும் கொண்ட ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முன்நாள் மா ஓ வாதியை ஆசிரியராகக் கொண்ட இடதுசாரி தாராளவாத தினசரியான Libération பத்திரிகை மிக வெளிப்படையாக சிராக் பக்கம் சார்ந்திருந்தது. சிராக்கின் தேர்தல் பிரச்சாரங்கள் முழுவதையும் இடதுசாரிக் கட்சிகளே முன்னெடுத்து வந்தன. வலதுசாரி கட்சிகள் ஊர்வலங்களில் பக்குபற்றாததோடு பொதுவாக செயலற்று இருந்தன.

சிராக் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் தமது முகாமை சுத்தப்படுத்துவதற்காக இந்தத் தருணத்தைப் பயன்படுத்தினார். வலதுசாரி முகாம்களில் தனது எதிரிகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியில், அவர் ஜனாதிபதிக்கு பெரும்பான்மை பெற்றுத்தரும் சங்கம் என்ற ஒரு புதுக் கட்சியை (Union for a Presidential Majority) உருவாக்கினார். தாராண்மைவாத யூ.டி.எப். (UDF) அமைப்பின் தலைவரான பிரான்சுவா பெய்ரு, இது தனது அமைப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சதி என கண்டனம் செய்தார்.

சிராக், தமது குறிக்கோளை வெளிப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக தேசிய முன்னணியின் (லூ பென்னின் கட்சி) ஆதரவுடன் வெற்றிபெற்ற மூன்று பிரதேச தலைவர்களுடன் பகிரங்க மேடையில் தோன்றினார். இது வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்றில் அவர் தேசிய முன்னணியின் ஆதரவை நாடுகிறார் என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

அதிதீவிர இடதுசாரிகள் முழுமையாக சிராக் ஆதரவு பிரச்சாரத்துக்கு அடிபணிந்து போயுள்ளனர். இதை Ligue Communiste Révolutionnaire பகிரங்கமாகவே செய்தது. அலன் கிறிவினின் கட்சி "வீதிகளிலும் வாக்குச் சாவடிகளிலும் லூ பென்னுக்கு எதிராக போராட" அழைப்புவிடுத்தது. இது சிராக்குக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. கட்சி தலைவர்களும் இதையே பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பது தெளிவானதாகும். Parti des Travailleurs மற்றும் Lutte Ouvrière ஆகிய கட்சிகள் சிராக்குக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுப்பதில் தயக்கத்தைக் காட்டின. Parti des Travailleurs சற்றே காட்சியிலிருந்து மறைந்து கொண்டு தாம் யாரையும் சிபார்சு செய்யப்போவதில்லை எனக் கூறியது. Lutte Ouvrière சிராக்குக்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறியதுடன், ஒரு வார ஊசலாட்டத்தின் பின்னர் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக மாற்றுமாறு அது கோரியது. இது தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சுயாதீனமான திசையை வழங்குவதற்குப் பதிலாக தனிப்பட்ட விருப்பத்திற்கு மேலதிகமான எதுவும் இல்லை என்பதாகும்.

இந்த நிலைமைகளின் கீழ், சிராக்குக்கு வாக்களிக்கக் கோரும் பிராச்சாரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இரண்டாவது சுற்றுத் தேர்தல் முடிவுகள், முதல் சுற்று முடிவுகளை விட சிராக்குக்கு 10 வீதம் அதிகப்படியான வாக்குகளைக் கொண்டிருந்ததோடு, சிராக் 82 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அவருக்கு வாக்களித்திருந்தவர்களில் பலர், உண்மையில் அவரது வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அல்ல. எவ்வாறெனினும் பெரும்பான்மையான வாக்குகளால் சிராக் பெற்றுக்கொண்ட வெற்றியானது தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆபத்தான நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற வகையில் சிராக் தனது கைகளில் பெரும் அதிகாரங்களைக் கொண்டுள்ளார். அவர் உடனடியாக ஒரு வலதுசாரி அரசாங்கத்தை அமைத்துக்கொண்டுள்ளதோடு, அதற்கு ஜூன் மாதத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற அனுமதி அவசியமில்லை. அந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் அவர் ஜூனில் ஒரு வலதுசாரி அரசாங்கத்துக்கான பெரும்பான்மை பலத்தை பெறுவதை உறுதிப்படுத்துவதாகும்.

புதிய பிரதமரான ஜோன்-பியர் ரஃபரன், மரபுவழி மத்தியதர வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சமரசவாதியாக இருந்துகொண்டுள்ள அதேவேளை, சிராக் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி உள்நாட்டுப் பாதுகாப்புக்கான ஒரு விஷேட அமைச்சையும் நியமித்துள்ளார். இதன் தலைவராக கோலிச வலதுசாரியான நிக்கோலா சார்கோசி விளங்குகின்றார். சார்கோசி பதவியேற்ற முதல் நாளே நகரை அண்டிய பிரச்சனைமிகுந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். இதிலிருந்து தெரியவருவதாவது, வலதுசாரி வாக்காளர்களை தம்பக்கம் திருப்பிக் கொள்வதற்காக, தேர்தலுக்கு முன்னதாகவே சிறு குற்றவாளிகளுக்கு எதிராக விசேடமான பொலிஸ் நடவடிக்கையில் ஈடுபட அவர் தயாராகவுள்ளார் என்பதாகும்.

இத்தகைய வலதுசாரி அரசாங்கமானது, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக கொடூரமான தாக்குதல் தொடுப்பதோடு தேசிய மற்றும் சமூகக் கொள்கைகள் சம்பந்தமாக மிகவும் தெளிவான நகர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும். பெருமளவில் சிராக்குக்கு வாக்களிக்கும் தொழிலாள வர்க்கத்துக்கு இவ்வாறான அரசாங்கத்தின் சட்டரீதியான தன்மையை சவால் செய்வது மிகவும் சிரமமானதாக இருக்கும்.

ஜூன் மாதத்தில் சிராக்குக்கு வலதுசாரிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், இன்னும் 5 வருடகால கூட்டு வாழ்க்கையானது லூ பென்னுக்கு வெற்றியைக் பெற்றுக்கொடுத்த சூழ்நிலை நிலைமைகள் மேலும் உக்கிரமாவதையே பெறுபேறாகக் கொண்டிருக்கும். சமுதாயத்தின் அரசியல், சமூக சீரழிவானது தொடர்ச்சியாக உக்கிரமடைந்து உண்மையான பாசிச ஆபத்து உருவாவதற்கான நிலைமைகளைத் தோற்றுவிக்கும். சிராக்குக்கு ஆதரவளிக்கும் இயக்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தை ஆபத்தான முறையில் குழப்பத்துக்குள் ஆழ்த்தியுள்ள நிலைமையில் அவ்வாறான ஒரு ஆபத்துப் பற்றி எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. தொழிலாள வர்க்கத்துக்கான சுயாதீனமான மாற்றீட்டை கட்டியெழுப்பும் பணி முன்னொருபோதும் இல்லாத வகையில் மிகவும் அத்தியாவசியமாகியுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் தலையீடு

பிரான்சில் நிகழும் சம்பவங்களின் அரசியல் படிப்பினைகள் எல்லோருக்கும் எப்போதும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற குறிப்புடனேயே நான் எனது உரையை ஆரம்பித்தேன். இந்தப் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வது எப்படி? மிக முக்கிய பூர்வாங்க தேவையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் பொதுஜன ஊடகமான உலக சோசலிச வலைத்தளமும் பிரெஞ்சு தேர்தலில் தலையீடு செய்தமை விளங்குகின்றது.

கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் கருவி பிரமாண்டமான தகமையை கொண்டுள்ளது என்பதற்கு சாட்சித் தேவைப்படின், அதை எமது பிரெஞ்சு தலையீடு வழங்கும். எமக்கு பிரான்சில் ஒரு பிரிவு இல்லாதிருந்த போதிலும், எமது சக்திகள் வரையறுக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தலைப் புறக்கணிக்க கோரிய உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு அறிக்கையின் பிரதிகள் மே தின ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காக விநியோகிக்கப்பட்டன. நிச்சயமாக அந்த அறிக்கை மாத்திரமே ஒரு சுயாதீனமான அரசியல் தகவமைவை வழங்கியது. அத்தோடு ஒரு நிச்சயமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இந்தத் தாக்கமானது அந்தளவுக்கு தேர்தல் முடிவில் ஏற்படுத்தும் தாக்கமாக இருக்கவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில் குறைவானதாவே இருக்க முடியும். அது தொழிலாளர்களுக்கு கல்வியூட்டவும் அவர்களது புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்யவும் முக்கியமான அரசியல் படிப்பினைகளை பெறுவதற்கான நிலைமைகளை சிருஷ்டித்தது. மேலும் வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தை அடிபணியச் செய்யாமல் இருப்பதன் மூலம் மட்டுமே பாசிச ஆபத்துக்கு எதிராக போராட முடியும் என்பதை ஸ்தூலமான முறையில் எடுத்துக்காட்டியது. அது முழுமையாக ட்ரொட்ஸ்கிசத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் LCR, Lutte Ouvrière, PT ஆகிய கட்சிகளின் பிரச்சாரத்தை இந்த வழியில் பலவீனப்படுத்தியதுடன், அனைத்துலகக் குழுவின் பகுதியை பிரான்சில் கட்டியெழுப்புவதற்கான பாதையை தயார் செய்தது.

உலக சோசலிச வலைத்தளம் இரண்டாவது சுற்றுத் தேர்தலைப் புறக்கணிக்க கோரியது. LCR, Lutte Ouvrière, PT ஆகிய கட்சிகளுக்கு அனுப்பிய பகிரங்கக் கடிதத்தின் மூலம் நாம் இந்த அமைப்புகளை ஒரு புறக்கணிப்பிற்காக நடைமுறையில் பிரச்சாரம் செய்யத் தூண்டினோம்.

புறக்கணிப்பு, ஒரு செயற்பாடற்ற பகிஷ்கரிப்பு அல்லது வெற்று வாக்குச்சீட்டு போடுவது என்பவற்றில் இருந்து வேறுபட்டது. செயற்பாடற்ற பகிஷ்கரிப்பு அல்லது வெற்று வாக்குச் சீட்டு போடுவது தனிநபர் விரோதத்தை வெளிப்படுத்துவதை எடுத்துக்காட்டுகின்றது. அது வாக்குச் சாவடியிலும், வீட்டுக்குள்ளும் தனிப்பட்ட முறையில் செய்வதாகும். புறக்கணிப்பானது தேர்தலில் கணிசமானளவு வாக்குகளைப் பெற்ற கட்சிகளால் தீவிரமாக அமுல்செய்யப்படும் நிலைமையில் அது தொழிலாள வர்க்கத்தால் எடுக்கப்பட்ட சுயாதீன அரசியல் நிலைப்பாட்டின் ஓர் ஒழுங்குரீதியான வெளிப்பாடாக அமையும். நாம் Lutte Ouvrière அமைப்பின் ஆதரவாளருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியது போல் ஒரு செயலூக்கமான புறக்கணிப்பின் நோக்கமானது "தொழிலாளர் வர்க்கத்தை செயல் துடிப்புள்ள அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதாகும். "இடது" மற்றும் வலதுகளின் முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும், பாசிச பிற்போக்குக்கும் எதிரானவர்களின் தலைமையாக தொழிலாளர் வர்க்கத்தை வைப்பதாகும்.

அவ்வாறான ஒரு புறக்கணிப்பு, உண்மையான தேர்வுக்கு பதிலாக தொழிலாளர் வர்க்கம் பெரு வர்த்தகர்களின் வேட்பாளருக்கும், ஒரு வெளிப்படையான பாசிச வேட்பாளருக்கும் இடையில் யாராவது ஒருவைரைத் தேர்வு செய்யும் மோசடியான தேர்தலில் எந்தவொரு நியாயபூர்வமான தன்மையையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். அது தேர்தலுக்கு பின்னர் உருவாகும் அரசியல் போராட்டங்களுக்கான சிறந்த நிபந்தனைகளை தோற்றுவிக்கும். அது முதல் சுற்றில் லூ பென்னின் வெற்றியின் அதிர்ச்சியால் இயக்கத்தினுள் இழுக்கப்பட்டிருக்கும் மக்களை விசேடமாக இளைஞர்களை அரசியல் ரீதியில் கல்வியூட்ட சேவையாற்றும். சிராக்கிற்கு வாக்களிப்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதை பிரதிநிதித்துவம் செய்வதாக பிதற்றித் திரியும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனங்களின் பொய்களை ஊடுருவி நோக்க, தொழிலாளர்களை பயிற்றுவிக்கும்.

புறக்கணிப்பிற்கு எதிரான பிரதான ஆட்சேபம் எழுப்பப்பட்டது, அது இரண்டாவது சுற்றில் லூ பென்னின் வெற்றிக்கு வழியமைக்கும் என்பதாகும். நாம் இந்த ஆட்சேபத்துக்கு பகிரங்கக் கடிதத்தில் பதிலளித்துள்ளோம்:

"மே 5 தேர்தலை புறக்கணிப்பதானது லூ பென்னையும் அவரது பாசிச இயக்கத்தையும் வலிமைப்படுத்துமென சிலர் விவாதிக்கலாம். நாம் இந்தக் கூற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். அரசியல் என்பது எண் கணிதமல்ல, அத்துடன் லூ பென்னை எதிர்ப்பதற்காக சிராக்கை ஆதரிக்க வேண்டும் என விவாதிக்கக்கூடும். மாறாக இது, அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை பிரதிபலிப்பதாக கூறிக்கொள்ளும் லூ பென்னின் முற்றிலும் போலியான வாயடிப்புக்களை பலப்படுத்தும் அரசாங்க இடது மற்றும் அரசாங்க வலதுகளை ஐக்கியப்படுத்தும் சிராக் ஆதரவு உத்தியோகபூர்வ பிரச்சாரமாகவே அமையும்.

"மே 5க்கு எதிர்ப்பு மற்றும் பரந்த அளவிலான புறக்கணிப்பு ஆனது, சோசலிச இடதுகளால் கூர்மையாக முன்னெடுக்கப்படுவதும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் லு பென் மற்றும் சிராக் ஆகிய இருவருக்கும் எதிராக அணிதிரட்டுவதும், லு பென்னின் போலி நடிப்புக்களைத் இல்லாமல் செய்வதுடன், தற்போதுள்ள அரசியல் ஒழுங்கமைப்பை சவால் செய்யும் முற்போக்கான சமூக சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துக்காட்டும்.

நாம் லூ பென் வெற்றியீட்டினாலும் கூட அவர் பிரெஞ்சு மக்களை சர்வாதிகார எதேச்சதிகாரத்துக்குள் அடிபணியச் செய்ய இலாயக்கற்றவராகவே இருப்பார் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். உண்மையில், இடதுசாரி கட்சிகள் சமூக சீரழிவு நிலைமையில் தமக்கே உரிய அரசியல் பொறுப்புகள் சம்பந்தமான எந்தவொரு கலந்துரையாடலையும் தவிர்ப்பதற்காக லூ பென்னின் பலத்தை மொத்தமாக பூதாகாரப்படுத்திக் காட்டின.

பகிரங்க கடிதம் அனுப்பப்பட்ட மூன்று அமைப்புகளில் ஒன்று கூட இந்த புறக்கணிப்புக்கான கோரிக்கையை முன்னெடுப்பதற்கான சாதகமான பதிலை வழங்கவில்லை.

நாம் தனிப்பட்ட முறையில் அவர்களது அலுவலகங்களில் இக்கடிதங்களை கையளித்து ஒரு கலந்துரையாடலை வேண்டினோம். LCR எம்முடன் பேச தமக்கு நேரமில்லை எனக் கூறியது. PT யின் ஒரு நீண்ட கால அங்கத்தவர் அதன் தலைமைக் காரியாலயத்தில் வைத்து தனிப்பட்ட முறையில் எம்முடன் உரையாடினார். Lutte Ouvrière உலக சோசலிசவலைத் தள ஆதரவாளருக்கு ஒரு சிறிய குறிப்பை அனுப்பியிருந்து. ஆசிரியர் குழு அதன் ஆதரவாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடிதத்தை அதற்கான பதிலுடன் பிரசுரித்திருந்தது. இறுதியில் மே 5ம் திகதி இரண்டாம் சுற்று தேர்தலின் பின்னர் ஆர்லட் லாகியே பகிரங்கக் கடிதம் சம்பந்தமான தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ஒரு குறுகிய கால பேட்டியை எமக்கு வழங்கினார்.

இவை மட்டுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்புகளாக இருந்தபோதிலும், பகிரங்கக் கடிதத்தால் வெளிக்கொணரப்பட்ட கலந்துரையாடல்கள் முன்நோக்குப் பற்றிய மிகவும் முக்கியமான பிரச்சினையைத் தெளிவுபடுத்துவதற்கு ஆதாரமாக இருந்துள்ளது. அது உண்மையில் புரட்சிகர மார்க்சிச அனுகுமுறைக்கும் மத்தியவாத கொள்கைகளுக்கும் இடையில் ஒரு தெளிவான எல்லைக்கோட்டை வரைவதற்கு உதவியுள்ளது.

அதிதீவிர இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதம்

LO, LCR, PT என்பவற்றால் கடைப்பிடிக்கப்படும் அரசியல் கொள்கையானது மிகவும் சந்தர்ப்பவாத பண்பு கொண்டது. அவர்கள் அனைவரும் ஏதாவதொரு விதத்தில் சிராக்கிற்கு ஆதரவு கொடுக்கும் பிரச்சாரத்திற்கு அடிபணிந்து போயுள்ளனர். மார்க்சிச கட்சி நீரோட்டத்துக்கு எதிராக நீந்த முடியும் என்பதும், தற்போதுள்ள உணர்மை வடிவங்களுக்கு எதிராகப்போராட முடியும் என்பதும் அவர்களுக்கு முழுமையாக அப்பாற்பட்ட ஒன்றாகும்.

உலக சோசலிச வலைத் தளத்துடனான பேட்டியில் ஆர்லட் லாகியே சிறந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை பினவருமாறு வெளிப்படுத்தி இருந்தார்: "நாம் எப்பொழுதும் சக்திகளின் உறவுகளோடு பொருந்துவதாகவும், ஒரு நாட்டில் தொழிலாளர் வர்க்கம் செய்யவிருப்பது என்ன என்பதை கருத்தில் கொண்டும் அதற்குப் பொருத்தமான திட்டங்களை முன் வைப்போம்."

மார்க்சிஸ்டுகள் புறநிலை நிலைமைகளில் இருந்தும் அந்த நிலைமைகள் எத்தகைய பணியை தொழிலாளர் வர்க்கத்தின் மேல் சுமத்துகின்றது என்பதிலிருந்தும் ஆரம்பிக்கும் அதேவேளை இந்தப் பணிக்கு பொருத்தமான வகையில் தொழிலாளர் வர்க்கத்தின் நனவை அபிவிருத்தி செய்யவும் போராடுகின்றார்கள். ஆனால் எடுத்துக்காட்டான சந்தர்ப்பவாதியான லாகியே, அது தொழிலாளர் வர்க்கத்தின் நனவின் அகநிலை நனவு மட்டத்திலிருந்து தொடங்கி அதற்கு ஒத்துப்போகும் வகையில் தனது வேலைத் திட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.

உண்மையில் "தொழிலாளர் வர்க்கம் என்ன செய்யத் தயாராக இருக்கின்றது" என்பதை அறிய ஒரே ஒரு வழியே உள்ளது. உதாரணத்திற்கு அது ஒழுங்கு செய்யப்பட்ட புறக்கணிப்பை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றதா: அப்படியானால் அதற்காக பலமான பிரச்சாரம் செய்ய வேண்டும். சிராக் பிரமாண்டமான முறையில் செல்வாக்கு இழந்திருப்பதை கவனத்திற்கொள்ளும்போது இவ்வாறான ஒரு பிரச்சாரம் பிரதிபலிப்புகளை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை.

ஆனால் Lutte Ouvrière அமைப்பு தொழிலாளர் வர்க்கத்தின் நனவினதும், நடவடிக்கையினதும் மிகவும் உடனடியான வடிவத்துக்கு அடிபணிந்து போயுள்ளது. அவர்கள் ஒரு பாரிய அரசியல் இயக்கம் வெடித்தெழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆச்சரியமடைகின்றனர். அவர்களின் கருத்தின்படி, தொழிலாளர் வர்க்கத்தின் முன்னோடி நடவடிக்கைக்கு போதுமானளவு சாதகமாக "சக்திகளின் உறவு" எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை என்பதாகும். ட்ரொட்ஸ்கி குறிப்பாக பிரான்ஸ் பற்றி அவரது எழுத்துக்களில் பலதடவைகள் குறிப்பிட்டது போல், அகநிலை காரணிகளை கணக்கில் எடுக்காமல், சக்திகளின் உண்மையான உறவு பற்றி விளங்கிக்கொள்வது சாத்தியமானதல்ல. அதுதான் கட்சியினதும் தலைமையினதும் நடைமுறை பாத்திரமாகும்.

Lutte Ouvrière அமைப்புக்கு தொழிலாளர் வர்க்கத்தின் செயற்பாடுகளை தொழிற்சங்க போராட்டங்களின் பாணியில் மாத்திரமே திட்டமிட முடியும். அவர்கள் எந்தவொரு அரசியல் இயக்கம் பற்றியும் கண்மூடித்தனமாக உள்ளனர். லாகியே உடனான பேட்டியின்போது அவர்: "போராட்டங்களைப் பொறுத்தவரையில் இந்த சந்தர்ப்பத்தில் எமது நாட்டின் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது எந்தவகையிலும் சாத்தியமானதல்ல," என மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் குறிப்பிட்டார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டது பாரிய ஆர்ப்பாட்டங்களும் பிரதான அரசியல் எழுச்சிகளும் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னராகும்.

Lutte Ouvrière இன் அரசியல் சந்தர்ப்பவாதமும், அமைதிவாதமும் அவர்களது குறுகிய தேசிய கண்ணோட்டத்துடன் இணைந்துகொண்டுள்ளது. 1930களில் இருந்து வேரூன்றியுள்ள இந்த அமைப்பு, எப்போதுமே நான்காம் அகிலத்துடன் இணைவதை மறுத்து வந்துள்ளது. அது "நான்காம் அகிலத்தின் தலைமையின் சமூக சேர்க்கை, குட்டி முதலாளித்தவ பண்பை கொண்டதாகவும், ஒரு அனைத்லதுக அமைப்பில் சேர்வதிலும் பார்க்க பிரெஞ்சு தொழிலாளர்களுடன் நெருக்கமாக இருப்பது முக்கியமானது" என காரணம் கூறியது. இதன் அரசியல் உள்ளடக்கமானது சர்வதேச அரசியல் தகவமைவிலும் பார்க்க முழுச் சந்தர்ப்பவாத தேசிய தொழிற்சங்க சூழ்நிலையுடனான உறவு முக்கியமானது என்பதாகும்.

ஆர்லட் லாகியே இந்த முன்னோக்கின் ஒரு வடிவமாகும். 2000 ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் நிகழ்த்திய உரையொன்றை நான் வாசித்தேன். ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக நிகழ்த்திய முழு உரையிலும் அவர் அனைத்துலக சம்பவங்களில் ஒன்றையேனும் குறிப்பிடவில்லை. பிரெஞ்சு இராணுவம் பெரிதும் ஈடுபட்டுள்ள ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம், மத்திய கிழக்கு நெருக்கடி, பூகோளமயமாக்கம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற யாவற்றையும் தெரிவிப்பது, பிரயோசனமானது என அவர் கருதவில்லை. அது பிரான்சை வேறு ஒரு கண்டத்தின் உள்ள ஒரு தீவாக கருதுவதாகும்.

புரட்சிகர ஆர்லட் லாகியே பலவழிகளில் பிரான்சில் சந்திக்ககூடிய ஒரு மிகவும் பழமைவாதியாவார். அவர் தனது வாழ் நாள் பூராகவும் ஒரே தொடர் மாடியில் வசிக்கின்றார்; 40 வருடங்களாக ஒரே தொழிலையே செய்துவருவதோடு.... 30 வருடங்களாக ஒரே உரையையே நிகழ்த்துகிறார். அவருடைய எல்லா பேச்சுக்களும், ஆசிரியர் தலையங்கங்களும் ஒரே துதிப்பாடலாகவும், ஒரே ராகமாகவுமே இருக்கும்: "எஜமான்கள் உங்களை சுரண்டுகின்றார்கள், அரசாங்கம் உங்களை ஏமாற்றி எசமான்களை ஆதரிக்கின்றது." இதில் சிறந்த முன்னோடி நடவடிக்கை அல்லது அரசியல் தகவமைவைக் காணமுடியாது.

Lutte Ouvrière அமைப்பிலும் பார்க்க LCR வேறுபட்ட சமூக தகவமைவையும் அரசியல் கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது. அவர்கள் தொழிற்சங்க சமூகத் தட்டை அன்றி "இடது" அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். உதாரணமாக அவர்கள் முதலாளித்துவ ஸ்தாபனத்தின் இடது கன்னையாகும். கிறிவின் இன்றைய அரசியல் நெருக்கடியின் தூண்டலில் இருந்து மத்தியவாத முகாம் ஒன்றை அமைக்க முடியும் என எதிர்பார்க்கின்றார். இது சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சிகளில் உள்ள கொள்கை அதிருப்தியாளர்களையும், எதிர்ப்பு இயக்கங்களான அட்டாக் (ATTAC) சொன் பப்பியே (வதிவிட பத்திரங்களில்லாதவர்களின் அமைப்பு), AC Chomage மற்றம் LCR வேட்பாளருக்கு வாக்களித்த தீவிரவாத இளைஞர்களையும் உள்ளடக்கியதாக இருக்க முடியும்.

லூ பிகாரோ பத்திரிகையுடனான பேட்டியின் போது, கிறிவின் எஞ்சியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியை LCR உடன் இணைப்பதைப் பற்றி அக்கறை செலுத்தாமல் இருக்க முடியாது என சமிக்ஞை செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் சிதைவானது "புதிய பெண்ணிலைவாதிகள், சுற்றுசூழல் பாதுகாப்புவாதிகள், தீவிர இடதுசாரிகளை மட்டும் கொண்டிராத முதலாளித்துவ எதிரான கட்சி" ஆகியவையின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.

கிறிவின் இத்தாலியிலுள்ள Rifondazione Communista கட்சியை மாதிரியாகக் கொள்கின்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச சார்பு பிரிவிலிருந்து தோன்றிய இந்தக் கட்சி அன்மைய காங்கிரசில், பூகோளமயமாக்கலுக்கு எதிரான இயக்கம் அல்லது அட்டாக் போன்ற ஏனைய எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பழைய ஸ்ராலினிச கொள்கையை கண்டனம் செய்தது. நீண்டகாலமாக Rifondazione Communista இத்தாலியின் மத்திய இடது அரசாங்கம் பெர்லுஸ்கோனியின் வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தால் பிரதியீடு செய்யும் வரையும் அதன் இடதுசாரி போர்வையாக தீர்க்கமாகத் தொழிற்பட்டது. LCR உடைய சமசிந்தனையாளர்களான இத்தாலிய பப்லோவாதிகள், இந்தக் காலம் பூராவும் Rifondazione Communista அமைப்புக்குள் தலைமை பாத்திரத்தை வகித்தார்கள்.

கிறிவினின் எண்ணத்தில் இருக்கும் சக்திகளின் பெரும்பான்மையினர், சிராக்குக்கு வாக்களிப்பதற்காக மிகவும் ஊக்கத்துடன் செயற்பட்டனர். ஆகையால் LCR அத்தகைய வாக்களிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்பது வெளிப்படையானதாகும்: எதிர்ப்புத் தெரிவுக்குமானால் அது அநேக நண்பர்களை இழக்கச் செய்யும். அதே சமயம் சிராக்குக்கு வாக்களிக்கக்கோருவதில் திட்டவட்டமான அரசியல் அர்த்தம் இருக்கின்றது: அது பிரான்சிய குடியரசின் அரசியலமைப்பு கட்டமைப்பை தாம் மதிப்பதாக ஆளும் கும்பல்களுக்கு சமிக்ஞை செய்வதோடு தமது கட்டுப்பாட்டிலான ஒரு சமூக இயக்கத்தில் தமது மதிப்பிழந்துபோவதை அனுமதிக்கவும் மாட்டோம் என்பதாகும்.

கிறிவின் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்தியவாத இயக்கமானது, கடந்த ஐந்தாண்டுகளாக தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்தி வைத்து பிரெஞ்சு முதலாளித்துவத்துக்கு சேவையாற்றிய ஜோஸ்பனின் இடதுசாரி கூட்டை பதிலீடு செய்யும். அது முதலாளித்துவத்துக்கு எதிராக அமையாதது மாத்திரமன்றி, முதலாளித்துவ அமைப்புக்கு இறுதிப் பாதுகாப்பு வழங்கும் ஒன்றாகும்.

PT தேர்தலில் முதற் சுற்று வாக்களிப்பின் பின்னர் ஏற்பட்ட சம்பவங்களுக்கான அரசியல் பொறுப்பை ஏற்க மறுத்தது. கட்சி தலைமையகத்தில் நாங்கள் சந்தித்த மூத்த அங்கத்தவர், "நாம் எந்தவொரு சிபார்சையும் செய்யவில்லை," எனக் குறிப்பிட்டார். புறக்கணிப்பு பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன? என கேட்ட போது லாகியே கூறியது போல், "சக்திகளது உறவுகள்" அதை அனுமதிக்காது எனப் பதிலளித்தார்.

PT வேட்பாளரான டானியல் குளுக்ஸ்டைன் (Daniel Gluckstein) தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் "இந்த கஷ்டமான காலகட்டத்தில் தமது சொந்த அணிதிரள்வினூடாக ஒரு பதிலீட்டைத் தேடிக்கொள்வதற்கான தொழிலாளர் வர்க்கத்தின் இயலளபின் மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையை" வெளிப்படுத்தினார். அவரது ஆதரவாளர்கள் இதற்கு என்ன செய்யவேண்டும் எனக் கேட்டபோது, இந்தக் கட்சியின் தலைவர்: "நீங்களாகவே ஒரு பதிலைத் தேடிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு," எனப் பதிலளித்தார். இதுதான் நிலைமை என்றால், PT இருப்பதற்கு எந்த அவசியமும் கிடையாது.

இன்னுமொரு வசனத்தில் சொல்வதானால், குளுக்ஸ்டைன் தனது ஆதரவாளர்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்குள் தள்ளுகின்றார். அவர், "இதற்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களைப் போலவே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதானது, தொழிலாளர்களது உரிமைகளையும் வெற்றிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொழிலாளர்களையும் அவர்களின் அமைப்புகளையும் ஐக்கியப்படுத்தும் தொழிற்சங்க சம்மேளனங்களையே சார்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு கூறுவது பிரெஞ்சு தொழிலாளர்களில் எட்டு வீதமானவர்கள் மாத்திரமே தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஒரு நிலைமையிலும், தொழிற்சங்கங்கள் ஜோஸ்பனின் பலம்வாய்ந்த கையாட்களாக இருந்து வந்துள்ள ஒரு நிலைமையிலுமாகும்.

PT தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவாக சீரழிந்து போயுள்ளது. அது CGT யில் இருந்து வலதுசாரித்தனமாக பிரிந்து சென்று, தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் Force Ouvrière அமைப்புடன் செயற்படுகிறது. PT தற்கால சம்பவங்களுக்கு நேரடிப் பொறுப்பாளியாகும். ஜோஸ்பன் உட்பட்ட சோசலிசக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களை பயிற்றுவித்தது PT அமைப்பின் முன்னோடியான அனைத்துலக கம்யூனிஸ்ட் இயக்கமாகும் (International Communist Organisation -OCI).

தொகுத்து குறிப்பிட்டால், பிரான்சில் நடந்த சம்பவங்கள் எந்தவகையிலும் தனித்துவமானதல்ல. இவ்வாறான சமூக பதட்ட நிலைமைகளையும், மரபுவழி கட்சிகளதும், அரச ஸ்தாபனங்களதும் அரசியல் நெருக்கடிகளையும், ஐரோப்பாவின் சகல பகுதிகளிலும் வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. உலக சோசலிச வலைத் தளம் பிரான்சில் நடத்திய தலையீடு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் முன்னெடுத்து செல்லப்பட வேண்டியது எப்படி என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

Patrick Martin, Lutte Ouvrière இன் ஒரு ஆதரவாளருக்கு பதிலளித்தது போன்று, ஏனைய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று Lutte Ouvrière உடனான "எமது மிக முக்கியமான கருத்து வேறுபாடானது, நாங்கள் தொழிற்சங்க போராட்டம் போன்ற செயல்முறையான நடவடிக்கைகளின் எந்தவொரு விசேடமான வடிவத்தை விட, தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியூட்டுவதையும் அவர்களின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதையும் பிரதானமாகக் கொண்டுள்ளோம்''.

இந்த முக்கிய நோக்கத்துடனேயே நாம் இரண்டாம் சுற்று தேர்தலை புறக்கணிப்பிற்கான அழைப்பை விடுத்தோம். இது தேர்தலின் பின்னரும் தொடரும் ஒரு கலந்துரையாடலையும், தெளிவுபடுத்தல் போக்கையும் ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு துணிவும் உறுதியும் ஆழ்ந்த பொறுமையும் தேவை. தொழிலாளர் வர்க்கத்திற்கு மத்தியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது. ஆகையால் இத்தகைய கேள்விகள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு, விளக்கப்பட வேண்டும்.

நாம் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அனைத்துலக ரீதியில் அணிதிட்ட போராடுகின்றோம். பெரும் வங்கிகளாலும், கூட்டு ஸ்தாபனங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எமது பதில் ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளாகும். எமது போராட்டம் பிரெஞ்சு தீவிர இடதுகளின் சந்தர்ப்பவாதத்தை உடைத்தெறிந்து பரந்த மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பதில் எமக்கு பெரும் நம்பிக்கையுண்டு.

See Also :

பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவருடனான நேர்காணலும் டேவிட் வோல்ஷின் குறிப்புகளும்

Lutte Ouvrière தலைவர் ஆர்லட் லாகியேயுடன் ஒரு நேர்காணலும் பீட்டர் சுவார்ட்ஸால் வழங்கப்பட்ட குறிப்பும்

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் சிராக் 82 வீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்

பிரான்சில் மேதினம்: நவபாசிச லு பெனுக்கு எதிராக பதினைந்து இலட்சம் பேர் அணிவகுப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

Top of page