World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: ஆசியா :
இலங்கை
Months of delays in Scheduling Sri Lankan peace talks இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணையில் பல மாதகால தாமதம் By K. Ratnayake இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நாட்டின் அழிவுகரமான 19 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் மோதலைத் தவிர்ப்பதற்காக கடந்த செப்டம்பர் 22ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். ஆனால் உத்தியோகபூர்வ யுத்தநிறுத்தம் இருந்து கொண்டுள்ள அதேவேளை ஒரு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. பேச்சுவார்த்தைகள் முதலில் மே மாதம் தாய்லாந்தில் ஆரம்பிக்கப்படவிருந்தன. இந்த ஆரம்பம் ஜூன் வரை தாமதமாகியது. பின்னர் ஜூலை எனக் குறிப்பிடப்பட்ட போதிலும் இதுவரையும் எந்தவித அறிவித்தலும் கிடையாது. கொழும்பில், பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட்டில் இடம்பெறும் என்ற ஊகம் இருந்து கொண்டுள்ள போதிலும் அந்த முடிவுத் திகதியும் ஏனையவற்றைப் போலவே கடந்து செல்லலாம். பேச்சுவார்த்தைகளுக்கான வரம்புகளுக்கு உடன்படுவதில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பலவீனமானது, விடுதலைப் புலிகளுக்கோ அல்லது மிகவும் பரந்த ரீதியில் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கோ எந்தவொரு சலுகையையும் வழங்குவதை எதிர்க்கும் சிங்களப் பேரினவாத குழுக்களையிட்டு அது பீதிகொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றது. அரசாங்கத்தின் பேச்சாளரும் அரசியல்யாப்பு அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ், கடந்த வியாழக்கிழமை தமது வழமையான பத்திரிகையாளர் மாநாட்டின் போது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்கள் பற்றி எதையும் சுட்டிக் காட்டவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் "வேறுபாடுகள்" தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட போதிலும் அதைப் பற்றி விபரிக்கவில்லை. அவர் "இந்த நிகழ்ச்சித் திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும்" குறிப்பிட்டதோடு அங்கு "குறிப்பிட்ட சில விடயங்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடப்பட வேண்டியிருக்கும்" என மேலும் தெரிவித்தார். பெரு வர்த்தகர்களும், பெரும் வல்லரசுகளும் விக்கிரமசிங்க அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஒரு தீர்வை எட்டுமாறு நெருக்கி வருகின்றனர். பெரு வர்த்தகர்கள் ஆரம்பத்தில் தொழிலாள வர்க்கத்தை கூறுபோடவும், அனைத்துலக மூலதனத்தின் கோரிக்கையான பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதன் பேரிலும் யுத்தத்துக்கு ஆதரவளித்தன. இப்போது யுத்தம் மீள்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல்கள் வளங்களை வீழ்ச்சியடையச் செய்துள்ளதோடு அரசியல் ஸ்திரமற்ற நிலைமையையும் தோற்றுவித்துள்ளதுடன் சர்வதேச முதலீடுகளையும் இழக்கச் செய்துள்ளது. பெரு வர்த்தகர்களின் பலம் வாய்ந்த பகுதியினர் யுத்தத்துக்கு முடிவு தேடுகின்றனர். அதேபோல் அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் இந்த முரண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தை ஸ்திரமற்ற நிலைமைக்குள்ளாக்குவதில் செல்வாக்குச் செலுத்தும் ஆபத்து இருந்து கொண்டுள்ளதாக கருதுகின்றனர். ஆளும் வர்க்கம் யுத்தத்துக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், இராணுவம் மற்றும் அரச அதிகாரத்துவம், பெளத்த பிக்குகள் மற்றும் இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலாபமடைந்த வியாபாரிகள் போன்ற பிரிவுகளுக்கிடையிலிருந்தும் யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆதரவு பெறுவதன் பேரில் ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்கி விட்டது. விடுதலைப் புலிகள் மேற்குலக சக்திகளின்அழுத்தத்தின் பெறுபேறாக தீவின் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தனித் தமிழ் அரசுக்கான தமது கோரிக்கையை கைவிட்டது. ஆனால் அது ஒரு தொடர்ச்சியான முன்நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இவை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட சிங்களத் தீவிரவாத கட்சிகளதும் அமைப்புகளதும் பிரச்சாரத்தின் இலக்காக அமைந்துள்ளன. அவை விடுதலைப் புலிகள் மீதான அரசாங்கத்தின் தடையை நீக்குவதையும், வடக்குக் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதையும், அதேபோல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள ஏனைய திட்டங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளன. அரசாங்கமானது பேச்சுவார்த்தை மூலமான எந்தவொரு தீர்வையும் அறிவிப்பதில் நெருக்கடிகளை தோற்றுவித்த இத்தகைய விடயங்களால் ஸ்தம்பிதமடைந்துள்ளது. விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவது தமது சொந்தக் கட்சிக்குள் பிரிவுகளை ஏற்படுத்தக் கூடும் என பீதிகொண்டுள்ளார். அவரது பழமைவாத ஐக்கிய தேசியக்கட்சி, ஆளும் கூட்டரசாங்கத்தின் பிரதான கட்சியாகும். இப்போது யூ.என்.பி. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியைப் போன்று, சிங்களப் பேரினவாத சிந்தனைக்குள் விழுந்துள்ளது. குமாரதுங்கவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஒரு பிரிவினர் சிங்களத் தீவிரவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியுடன் (JVP) சேர்ந்து யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான ஒரு பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழு வடக்குக் கிழக்கில் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு இராணுவத்துக்கு அழைப்புவிடுப்பதோடு, சில இராணுவ முகாம்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதன் மூலம் "நாட்டின் பாதுகாப்பை அர்ப்பணித்துள்ளதாக" அரசாங்கத்தை விமர்சிக்கின்றது. ஜே.வி.பி. விடுதலைப் புலிகளை சட்டரீதியாக்குவதை எதிர்ப்பதோடு "பிரிவினைவாதிகளுக்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக" விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறது. குமாரதுங்கவும் பொதுஜன முன்னணியும் ஜே.வி.பி.யினரின் பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக அணைத்துக்கொள்ளாத போதிலும், அரசாங்கத்தைப் பற்றிய அவர்களின் விமர்சனங்கள் -புரிந்துணர்வு உடன்படிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு அதிகளவில் வாய்ப்பளித்துள்ளதாக- அதேவழியைப் பின்பற்றுவதாக உள்ளது. முன்நாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஜூன் 20ம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டில்" அரசாங்கம் குறிப்பிட்ட திகதிக்குள் பாதுகாப்புப் படைகளை வெளியேற்றுவது போன்ற சில விடயங்களில் கவலையீனமாக உடன்பட்டுள்ளதோடு" இப்போது மிகவும் கடுமையான சிக்கல்களில் இருந்துகொண்டுள்ளது என்றார். தடை நீக்கமும் ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதும், அதிகாரப் பரவலாக்கலின் "உள்ளடக்கத்தில்" பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்பட வேண்டிவை எனச் சுட்டிக்காட்டினார். இராணுவக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன இந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுத்த அரசாங்கம், முடிவுத் திகதியான மார்ச் 8ம் திகதி -புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னர்-பாடசாலைகளையும் மத ஸ்தானங்களையும் தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமாறு இராணுவத்துக்கு கட்டளையிடத் தவறிவிட்டது. கொழும்பு அரசாங்கம், பாதுகாப்புப்படை குறிப்பிடப்பட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டப்போதிலும், விடுதலைப் புலிகளும் தமிழ் கட்சிகளும் இது இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என சுட்டிக்காட்டி வருகின்றன. நோர்வே தலைமையிலான கண்கானிப்புக் குழுவின் தலைவரான ட்ரொன்ட் ஃபுருஹோவ்ட் (Trond Furuhovde) இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இடங்களின் பட்டியல் வளர்ச்சிகாண்பதாகவும், வெளியேறும் நடவடிக்கை "எதிர்காலத்திலும் நீண்டகாலத்துக்குத் தொடரும்" எனவும் குறிப்பிட்டார். ஃபுருஹோவ்டின் அறிக்கை வடக்கிலும் கிழக்கிலும் இராணுவக் கைப்பற்றல்கள் பரந்தளவில் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுகின்றது. முதலில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்குள் எந்தவொரு சலுகையையும் வழங்குவதை நிராகரித்த இராணுவம், பின்னர் இந்த இடங்கள் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்படவேண்டும் எனக் கோரியது. இராணுவம் கட்டிடங்களில் இருந்து வெளியேறினாலும்கூட, உள்ளூர் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. கடற்படை யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமாராட்சியில் ஊர்காவற்துறை தீவில் உள்ள சிவப்பிரகாசம் மத்திய கல்லூரியில் இருந்தும் வேலைனை மத்திய கல்லூரியில் இருந்தும் அண்மையில் வெளியேறியபோதும் அருகில் உள்ள வீடுகளை கைப்பற்றிக் கொண்டுள்ளதோடு சுற்றுப் பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தையும் தடைசெய்துள்ளது. கடந்த வாரம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக, அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் பன்னாமாவில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமை அப்புறப்படுத்துவதை ஒத்திவைத்துள்ளது. சிங்கள உள்ளூர் வாசிகள் எந்தவொரு நகர்வையும் கண்டனம் செய்ததாக ஒரு அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார். அரசாங்கமும் விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்குவதை நிராகரித்து வந்துள்ளது. விக்கிரமசிங்க முன்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும், அவர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வரையும் அதை அமுல் படுத்தமாட்டார். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக ஒரு இடைக்கால நிர்வாகசபையை ஸ்தாபிக்குமாறு கோரும் அதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தை கலந்துரையாட மறுத்து வருகிறது. இந்த முன்மொழிவுகள் நாட்டைப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக பலவித பேரினவாத குழுக்கள் பிரகடனப்படுத்தியுள்ளன. அண்மையில் இடம்பெற்ற பல சம்பவங்கள், பாதுகாப்புப் படை சிங்களத் தீவிரவாதக் குழுக்களோடு சேர்ந்து யுத்த நிறுத்தத்தை கவிழ்ப்பதற்காக தொழிற்படுவதற்கான சாத்தியங்களை தோற்றுவித்துள்ளது. ஜூன் 20ம் திகதி ஊர்காவற்துறை தீவின் சிறிய நகரமான வேலணையில் விடுதலைப் புலி அங்கத்தவர்களை தாக்குவதற்கு ஒரு குண்டர் படை நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் ஊள்ளூர் மக்கள் கூடியவுடன் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல்காரர்கள், கடற்படை சிப்பாய்களும், இலங்கைப் பாதுகாப்புப் படையினருடன் கூட்டாகத் தொழிற்படும் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி (EPDP) உறுப்பினர்களுமாகும் என உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த சம்பவங்களையடுத்து தமிழ் குழுக்கள் தாக்குதல்காரர்களை கைதுசெய்யக் கோரும் ஆர்ப்பாட்டங்களை யாழ்ப்பாணத்திலும் வேறு பல பிரதேசங்களிலும் ஒழுங்கு செய்திருந்தன. ஒரு அரசாங்க ஆணைக்குழு, தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த போதுமான சாட்சியங்கள் கிடையாது எனக் கூறி இராணுவத்தையும் கடற்படையையும் ஈ.பி.டீ.பி.யையும் காப்பாற்றியது. எவ்வாறெனினும் ஒவ்வொன்றும் ஒரு உள்ளர்த்தத்தைக் கொண்டது. முதலில் தீவுப்பகுதிகள் ஒருபாதுகாப்பு வலயம் என குறிப்பிட்ட கடற்படை, அப்பிரதேசங்களில் எந்தவொரு விடுதலைப்புலி அங்கத்தவரையும் அனுமதிப்பதை எதிர்த்தது. இராணுவத்தோடு கூட்டாகத் தொழிற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்குவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையால் தமது வரப்பிரசாத நிலைமைக்கு ஆபத்து ஏற்படும் என ஈ.பி.டி.பி. பீதிகொண்டுள்ளது. யார் பொறுப்பாளியாக இருந்தாலும், இந்த சம்பவங்கள் ஒரு அரசியல் தீர்வுகாணப்படமாட்டாது
என்பதை உறுதிப்படுத்தும் பலம்வாய்ந்த அவசியங்கள் இருந்துகொண்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. |