அமெரிக்க இராணுவத்துக்கு பாகிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முன்னுரிமையை முஷராப்
வழங்கியுள்ளார்
By Vilani Peiris and Sarath Kumara
9 May 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் பேர்வஸ் முஷராப், வாஷிங்கடனின் கடுமையான
அழுத்தத்தை அடுத்து, அல் கொய்தா மற்றும் தலிபான் சந்தேக நபர்களை பின் தொடர்வதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு
உள்நாட்டு இராணுவத்துடன் சேர்ந்து பாகிஸ்தானுக்குள் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பச்சை விளக்குகைக்
காட்டியுள்ளார்.
ஏப்பிரல் 26ம் திகதி ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள
தர்பா கேஹல் கிராமத்தின் மதப் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையானது இதனது
முதலாவது அம்சமாகும். பாகிஸ்தான் உத்தியோகத்தர்களின்படி, 24 அமெரிக்க விசேட படை சிப்பாய்களும் 200
துணைப்படை துருப்புக்களுடன் இணைந்து, எபெக் தாக்குதல் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் தலிபானின் முன்நாள் பழங்குடி
விவகார அமைச்சர் மெளலவி ஜலலுதின் ஹக்குனியால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையை அழிப்பதில் ஈடுபட்டனர். 5
பேர் தலிபான் அல்லது அல் கொய்தா "தொடர்புடைய சந்தேகநபர்களாக" தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில்
பஸ்துன் இனத்தவர்களோடு நெருங்கிய உறவுகொண்டுள்ள பழங்குடியினரின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. நூற்றுக் கணக்கானவர்கள்
அடங்கிய குழுவொன்று அரசாங்கக் காரியாலயத்துக்கு முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. ஒரு உள்ளூர் மதகுருவான
மெளலவி அப்துல் ஹவீஸ் அசோசியேடட் பிரசுக்கு விளக்கமளிக்கையில்: "எதிர்காலத்தில் இந்த வகையிலான
தேடுதல்களை தவிர்ப்பதற்காக, நாம் ஏனைய மூத்த பழங்குடியினரையும் மதகுருக்களையும் சந்திக்கவுள்ளோம். நாம்
அமெரிக்கப் படைகளுக்கு எமது பிரதேசத்தில் இயங்குவதற்கு அனுமதிக்கமாட்டோம்," என்றார்.
பென்டகன், பாகிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக
உறுதிப்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும், இந்தத் தேடுதல் நடவடிக்கை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்
டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பிராந்தியத்துக்கு வருகை தந்த சமகாலத்திலேயே இடம்பெற்றதோடு, அவர் வருகை தந்த
அடுத்தநாள், அமெரிக்கா அல் கொய்தா போராளிகளையும் தலிபான் போராளிகளையும் ஆப்கானிஸ்தான் ஊடாக வெளியேற
அனுமதிக்காது எனவும் குறிப்பிட்டார். தேடுதல் இடம்பெற்ற அடுத்த நாள், காபூலுக்கு வடக்கே பக்ராம் விமானத்தளத்தில்
வைத்து அமெரிக்க மற்றும் கூட்டுப்படைகளின் ஒரு குழுவுக்கு மத்தியில் உரையாற்றுகையில், தாம் ஆப்கானிஸ்தானை அமெரிக்க
இராணுவத்தின் "பரீட்சார்த்தக் களமாக" கருதுவதாக அவர் குறிப்பிட்டார். "ஆப்கானிஸ்தான் எனும் திரையரங்கு முதலாவதாக
இருந்து வருகின்ற போதிலும், அது இறுதியானதாக இருக்கப்போவதில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நிர்வாகம் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமெரிக்க இராணுவத்துக்கு பாகிஸ்தானில்
இயங்க அனுமதிக்க வேண்டும் என நெருக்கி வருகின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களுக்கான ஆணையாளர்
மேஜர் ஜெனரல் பிராங்க்லின் ஹெகன்பேர்க், பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் "சூடான பின்தொடரும் நடவடிக்கைகளுக்கான"
அங்கீகராத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். அவர் கிழக்கு
ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட ஒபரேசன் அனகொண்டா நடவடிக்கையை அடுத்து இந்த உரையை ஆற்றினார். இந்த
நடவடிக்கையின் போது அல் கொய்தா மற்றும் தலிபான் போராளிகள் என குற்றம்சாட்டப்பட்ட பொதுமக்கள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஹெகன் பெக்கின் முன்மொழிவுகள் ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தான் எல்லையில் பழங்குடியினரின்
பிரதேசங்களில் உடனடியான எதிர்ப்புக்களை தூண்டிவிட்டது. அங்கு எல்லைப் பிரதேசங்களில் ஆப்கான் பழங்குடியினருக்கு
மத்தியில் இறுக்கமான உறவுகள் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியங்கள் இதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்டளவு
சுயாட்சியையும் அனுபவித்து வந்தன. சமஷ்டி நிர்வாக பழங்குடி பிரதேசம் ஒரு மதிப்பீட்டின்படி ஐந்து பில்லியன்
மக்களை நிர்வகிப்பதற்காக அவர்களின் சொந்த பேரவைகள், நீதிமன்றங்கள் மற்றும் சட்டம் உட்பட ஏழு பழங்குடி முகவர்களையும்
உள்ளடக்கியிருந்தது. பாகிஸ்தான் துருப்புக்கள் லஞ்சம் மற்றும் மோசடிகளின் ஒரு கலவையின் ஊடாக இந்தப் பிரதேசத்துக்குள்
அனுமதிக்கப்பட்டது கடந்த டிசம்பரிலாகும்.
உள்ளூர் தலைவர்கள் எந்தவொரு அமெரிக்கத் துருப்பும் நுழைவதற்கு எதிராக எச்சரிக்கை
செய்தனர். ஒரு பழங்குடி தலைவரான ஷகிருல்லா ஜான்ஹோ சிக்ஹெல், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு
குறிப்பிடத்தக்களவு எதிர்ப்பைத் தூண்டிவிட்டிருந்ததாக நியுயோர்க் டைம்சுக்கு தெரிவித்திருந்தார். அவருடைய
ஆட்களில் சிலர் தலிபான் சார்பாக போராடுவதற்காக எல்லையைக் கடந்திருந்தனர். "நாங்கள் துரதிஷ்டவசமாக
அமெரிக்கர்களைப்போல பாரிய பலம் வாய்ந்ததுமான இராணுவத்துடன் போராடுவதற்கான உபகரணங்களையும்
வளங்களையும் கொண்டிருக்கவில்லை" என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில்: ரஷ்ய ஆட்சி அதிகாரத்தில்
இருந்தபோது, நாங்கள் அமெரிக்கர்களை விரும்பிய ஒரு காலம் இருந்தது. இப்போது நாங்கள் அமெரிக்கர்களை வெறுக்கின்றோம்"
என்றார்.
மெல்லிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ள முஷராப், பஸ்துன் பழங்குடிகளிடம்
இருந்து சக்திவாய்ந்த பின்னணியைப் பெறுவதுபற்றி அக்கறை கொண்டிருந்தார். அவர் தலிபான் அரசாங்கத்தை கைவிடுவதன்
மூலமும், ஆப்கானிஸ்தானிலான அமெரிக்கத் தாக்குதல்களை ஆதரிப்பதன் மூலமும் தமது சொந்த அடிப்படை அதிகாரத்தை
இராணுவத்தின் மீதும், இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் மத்தியிலும் ஏற்கனவே திணித்து வந்துள்ளார். அதேநேரம்
எவ்வாறெனினும் தமது அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் பின்னணியை வழங்கிய புஷ்
நிர்வாகத்தை அணிசேர்த்துக் கொள்வதில் முஷராப் தோல்விகண்டார்.
அமெரிக்கா மார்ச் மாதம் இஸ்லாமாபாத்தில் புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் நடந்த
கிரனேட் வீச்சுத் தாக்குதலை அடுத்து உக்கிரமாக செயற்படுமாறு முஷராப்பை வலியுறுத்தியது. இந்தத் தாக்குதலில்
இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடுகளுக்கான உதவிச்செயலாளர் கிரிஸ்டினா
ரொக்கா, இந்தியாவுக்கான தமது பயனத்தை நிறுத்தி முஷராப்பை சந்திப்பதற்காக உடனடியாக பாகிஸ்தானுக்குப்
பறந்தார். அதே வாரம் ஜெனரல் டொம் பிராங்க்சும் பாகிஸ்தான் தலைவரை சந்தித்தார்.
அடிப்படைவாதக் குழுக்களின் மூக்கணாங் கயிற்றை இறுக்குவதில், முஷராப்பின் நேர்மையை
கேள்விக்குறியாக்கிய அமெரிக்க ஊடகங்கள், இந்தக் கலந்துரையாடல்களின் பண்பை சுட்டிக் காட்டியிருந்தன. சில
கட்டுரைகள், தடுத்து வைக்கப்பட்டிருந்த லக்ஷார் இ தொய்பா, ஜய்ஸ் இ மொகமட் தலைவர்களையும் அவர்களின்
ஆதரவாளர்களையும் விடுதலை செய்ததையும், அதேபோல் இஸ்லாமிய மதப் பாடசாலைகளில் பாய்ந்து விழுவதற்கான
வாக்குறுதியை அமுல்படுத்த பாகிஸ்தான் தலைவர் தவறியதையும் சுட்டிக்காட்டியிருந்தன. அது உடனடியாக
ரொக்காவுடனும் பிராங்குடனுமான தமது கலந்துரையாடலில் முஷராப் மேலதிக சலுகைகளை வழங்கத்தள்ளப்பட்டார்
என்பதைத் தெளிவாக்கியது.
எப்.பி.ஐ/சீ.ஐ.ஏ. பாகிஸ்தானில் சுதந்திரமாகஇயங்குகின்றன
குறிப்பாக, பாகிஸ்தான் அதிகாரிகள் சந்தேக நபர்களை வேட்டையாடுவதற்காக
எப்.பீ.ஐ.க்கும் சீ.ஐ.ஏ.வுக்கும் சுதந்தரம் வழங்கியுள்ளனர். மார்ச்27 அன்று எப்.பீ.ஐ.யும் பாகிஸ்தான்
பாதுகாப்புப்படையும் பய்சலோபாத்தில் நடத்திய தேடுதலின் போது அல் கொய்தா வின் சிரேஷ்ட தலைவர் அபு சுபய்தாவையும்
ஏனையவர்களையும் கைது செய்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவனங்களையும் கணினி
தட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஆப்கான்- பாகிஸ்தான் எல்லையில் அல் கொய்தாவும் தலிபானும் மீள்குழுவாக்கத்தில்
ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்கள். இது ஆப்கானிஸ்தானின் மூன்று மாகாணங்களும் பாகிஸ்தானின் ஏழு பழங்குடி முகவர்களையும்
உள்ளடக்கிய பிராந்தியத்தில் ஒரு பரந்த துடைப்பை அனுமானமற்ற முறையில் மேற்கொள்வதாக அமைந்தது.
பாகிஸ்தானுக்குள்ளும் பொலிஸ் வலைவிரிப்புகள் தொடர்கின்றன. சுபைதா தடுத்துவைக்கப்பட்ட
அடுத்த நாள், லாகூர் நகரில் "நன்கு ஒளிந்திருக்கக் கூடிய ஒரு இடத்தில்" தேடுதல் நடத்திய பொலிசார் மேலும்
40 அல்குவேடா "சந்தேக நபர்களை" கைது செய்தனர். அசோசியேட்டட் பிரசின்படி சீ.ஐ.ஏ. மற்றும்
எப்.பீ.ஐ. ஏஜன்டுகளின் நேரடி தலையீட்டுடன் சுமார் 100 பேர்வரை சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விசேடமாக
சுபைதா கைதுசெய்யப்பட்டமையானது, "மீள்குழுவாக்கங்களை" தவிர்ப்பதன்பேரில் பாகிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உடன்பாடு காண்பதற்காக முஷராப் மீது நெருக்குவாரம் கொடுப்பதோடு இணந்துகொண்டுள்ளது.
ஏப்பிரல் 18ம் திகதி யூ.எஸ்,ஏ. டுடே பத்திரிகையில் வெளியான ஒரு
கட்டுரை, ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைக்கான உதவியை அதிகரிப்பது சம்பந்தமான
தகவல்களை வழங்கியிருந்தது. "நீதித் திணைக்கள குழுவொன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரிவுகளாக உள்ள படைகளை
ஒன்றுபடுத்தவும் பலப்படுத்தவும் 73 மில்லியன் டாலர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப்படை 28,000
மாகாண மற்றும் பழங்குடி பொலிசையும் 12,000 இராணுவக் துருப்புகளையும் உள்ளடக்கியுள்ளது" எனத் தெரிவித்தது.
அமெரிக்க உதவியாளர்கள் தமது அறிவித்தலில், எல்லாவிதமான தரை வாகனங்கள், ஹெலிகொப்டர்கள்,
வானொலி தொலைத்தொடர்பு உபகரணம், மற்றும் குற்றவியல் புலனாய்வு பயிற்சி, அதேபோல் "பூகோளநிலை உபகரணங்கள்
மற்றும் மென்னியல் ஆய்வு முறைகள், மென்னியல் கோளாறு உபகரணங்கள், தானியங்கிப் பதிவு வசதிகொண்ட இரகசிய
கமராக்கள், கையடக்கத் தொலைபேசி திசை தேடிகள், அழைப்புகளுக்கு குறுக்கே செல்லும் குரல் ஆய்வு உபகரணங்கள்"
உட்பட்ட சக்திவாய்ந்த மின்னியல் ஆராய்ச்சி உபகரணங்களையும் உள்ளடக்குமாறு சுட்டிக்காட்டினர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க இராணுவத்தினதும் சிவில் குழுக்களினதும் நடவடிக்கைகள்,
சுமார் 1,000 அமெரிக்க, பிரித்தானிய, அவுஸ்திரேலிய துருப்புக்களின் தலையீட்டுடன் ஆப்கானிஸ்தானில் தற்போதைய
பிரதான இராணுவ நடவடிக்கைகளின் தயாரிப்புகளின் பாகமாக இருந்து வந்துள்ளன. ஒரு அறிக்கையின்படி: ஆப்கானிஸ்தான்
பாகிட்டா மாகாணத்தில் தமது எல்லையை இழுத்து மூடுவதில் பாகிஸ்தான் ஏற்கனவே உசார்நிலையில் உள்ளது. இந்த
நடவடிக்கைக்கு கூட்டாக உதவுவதற்காக பாகிஸ்தான் பகுதியில் உள்ள பழங்குடிப் பிரதேசத்தில் அமெரிக்கத் தொலைத்தொடர்பு
மற்றும் புலனாய்வு மத்திய நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பென்டகன் உத்தியோகத்தர் வாஷிங்டன் போஸ்டுக்கு பதிலளிக்கையில்: "ஆப்கானிஸ்தான்-
பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல்களுக்கான திட்டமானது, மேற்குப் பாகிஸ்தானில் உள்ள
கிராமங்களையும் மலைத் தொடர்களையும் துடைத்துக் கட்டவதற்காகவும், ஓடுகாலி அல் கொய்தா, தலிபான்
போராளிகளை கழுவித் தள்ளுவதற்காகவும், அவர்களை அமெரிக்கப் படைகளும் கூட்டுப் படைகளும் காத்துக்
கொண்டிருக்கும் எல்லையை நோக்கி திருப்பி விடுவதற்காகவும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் மற்றும் அமெரிக்க விசேட
படைகளுக்கும் அழைப்பு விடுப்பதாகும்" என்றார்.
அமெரிக்கத் தலைமையிலான படைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகிக் கொல்லப்படுபவர்கள்
யார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அமெரிக்க உத்தியோகத்தர்களும் ஊடகங்களும் எந்தவித ஆதார சாட்சியங்கள்
இன்றியும் பாரபட்ச மற்றும் "அல் கொய்தா மற்றும் தலிபான் படைகளை" சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அவர்கள்
அமெரிக்கர்களின் வருகைக்கும் காபூலில் ஐக்கிய நாடுகள் சபையால் திணிக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் அதிகரித்தளவில்
எதிர்ப்புக் காட்டும் உள்ளூர் பஸ்துன் பழங்குடியினர் எனத் தெரியவருகின்றது. அவர்களது வெறுப்பு, பொதுமக்களை
கொண்டு வீடுகளை நாசம் செய்துவரும் அமெரிக்காவின் மாதக்கணக்கான குண்டுத் தாக்குதல்களாலும் இராணுவ நடவடிக்கைளாலும்
மேலும் அதிகரித்து வருகின்றது.
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கிழக்கு ஆப்கானிஸ்தானின் கார்டசில்
இருந்து எழுதும் ஒரு பத்திரிகையாளர் ஏப்பிரல் நடுப்பகுதியில் எழுதும்போது: "இது ஒரு பஸ்துன் நாடு. இங்குள்ள
பெரும்பாலான மக்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்களாக இருப்பதோடு, பஸ்துன் ஆதிக்கத் தலிபான்களை ஆதரிக்கின்றனர்.
அவர்களது பேட்டியைப் பொறுத்தவரையில், வடக்கில் இருந்துவந்த தஜிக்குகளின் இன எதிரிகளான பஸ்துன்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட
காபூலில் ஒரு இடைக்கால அரசாங்கத்தைத் திணித்த அமெரிக்கர்களை கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களாகவே கருதுகின்றனர்.
எதிரிகள் விரட்டியடிக்கப்பட்டு வரும் நிலைமையிலும் கூட, அமெரிக்கர்களும் அவர்களின் ஆப்கான் கூட்டாளிகளும், தலிபான்
மற்றும் அல் கொய்தா க்களின் மீள்குழுவாக்கத்தின் போது அவர்களை வளர்க்கவும் ஆயுதபாணிகளாக்கவும் அனுமதிக்கும்
ஒரு அனுதாப ஊற்றுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஷபானாமா அல்லது "இரவுக் கடிதங்கள்" எனக் கூறப்படும்
கையொப்பமற்ற துண்டுப் பிரசுரங்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் துருப்புக்களையும் அல்லது உதவி
தொழிலாளர்களையும் -விசேடமாக அமெரிக்கர்களை- கொல்வதற்கு அல்லது கடத்துவதற்கு ஆப்கானியர்களைத் தூண்டுகிறது.
வாஷிங்டன் போஸ்டில் ஏப்பிரல் 25ம் திகதி வெளியான ஒரு கட்டுரை, அமெரிக்கப் படைகள்,
15 பேர் அடங்கிய அல்லது சிறியகுழுக்கள், சிறிய ஆயுதங்களாலும் தொடர்ச்சியாகத் தொடுக்கும் றொக்கட் கிரனைட்
தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றன. "அடிக்கடி இடம்மாறும் அல் கொய்தா தாக்குதல்கள் கிராமப்புற
வீதிகளிலும் கோஸ்ட் போன்ற நகரங்களுக்கிடையிலும் நிற்கின்ற குழுக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இவை "திருப்பித்
தாக்குவதற்கு தீர்மானிக்க சிரமமானது" என அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். இடத்துக்கிடம் நடக்கும் தாக்குதல்கள்
விமானநிலையம் உட்பட காபூலைச் சுற்றியுள்ள இடங்களில் இடம்பெறுகின்றன. இவை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்
ரம்ஸ்பீல்டை பக்ரமுக்குத் திருப்பின.
கடந்த வார இறுதியில் வெளியான அசோசியேட்டட் பிரஸ் கட்டுரையொன்று,
பாகிஸ்தானுக்குள் பஸ்துன் பழங்குடிப் பகுதியில் ஒரு மதப்பாடசாலையில் ஏப்பிரல் 26ல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலானது
வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது. "மக்கள் மிகவும் ஆவேசத்தில் உள்ளார்கள்.
அவர்கள் முன்னர் மிரான்ஷாவில் கடையடைப்புச் செய்தார்கள். இங்கு அவர்களுக்கு அமெரிக்கர்கள் தேவையில்லை.
எதுவும் இடம்பெறலாம்," என உள்ளூர் பழங்குடி பாதுகாப்புப்படை அங்கத்தவர் ஒருவர் குறிப்பிட்டார். இன்னுமொறு
நகரத்தில், பலம்வாய்ந்த முறையில் ஆயுதபாணிகளாக்கப்பட்ட பழங்குடியினர் சனிக்கிழமையன்று மதத் தலைவர்களுக்கு செவிமடுப்பதற்காக
ஒன்று கூடினார்கள். "நாங்கள் எந்தவொரு அமெரிக்கனையோ அல்லது பாகிஸ்தான் சிப்பாய்களையோ எங்களது சமய
பாசறைகளுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம். அது எங்கள் மரபுக்கு எதிரானாதாகும். எங்களது மதத்துக்கும் எதிரானதாகும்"
என மொகமட் டின்டா தமது சபையோருக்குத் தெரிவித்தார்.
See Also :
கராச்சி குண்டு வெடிப்பு பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது
பாகிஸ்தானின்
வெட்கக்கேடான சர்வஜன வாக்கெடுப்பு முஷாரப்பை ஜனாதிபதியாக ஊர்ஜிதம் செய்கின்றது
போருக்கும் உள்நாட்டு கிளர்ச்சிக்கும் நடுவே
பாக்கிஸ்தானில் முஷாரப்
Top of page
|